‘ஹா!’ என்று ஒரு சத்தம்.
அதை எப்படிச் சொல்வது? அவ்வளவு பெரிய குரல் எப்படி வந்தது? சின்ன வயதில் இருந்து கத்திப் பழகி இருந்தால்தான் வரும். எங்கள் வீட்டில் யாருக்குமே அவ்வளவு பெரிய குரல் இல்லை. டைகர்கூட மெதுவாகத்தான் எதையும் சொல்லும். வீட்டுநாயாக வாழ விரும்பினால் அடக்கிதான் எதையும் சொல்ல வேண்டும் என்று அதற்குத் தெரியும். ஸ்காயும் ஆர்யாவும் உள்ளே ஓடிப்பதுங்கிவிட்டன. டைகர் மட்டும் கேட்கதவில் நின்று நாய் என்றால் குரைக்கும் என்பதைச் சொல்லிக்கொண்டிருந்தது.
எங்கள் வீடு மூலை வீடு. எதிர்வீடும் மூலை வீடுதான். எங்களைப் பிரிப்பது இரண்டு லிப்ட்டுகள். அப்படிப் பார்த்தால் தூரம்தான். ஸ்காயும் ஆர்யாவும் பிறர்களின் பயமின்றி வெளியே விளையாட லிப்ட் வரை இடம் உண்டு.
எனவே சத்தம் கேட்டுப் போலீசை நாங்கள் கூப்பிடவில்லை.
இரண்டு அதிகாரிகள் வாசலில் நின்றார்கள். உள்ளே இரண்டு பேர் போய்விட்டார்கள். நாலு போலீசை வரவழைக்கும் அளவுக்குச் சத்தம் போடுவதெல்லாம் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சில் வரக்கூடிய செய்தி. ரிப்போர்ட்டர் வரவில்லை. பிறகு வந்து என்ன நடந்தது என்று எங்களைத்தான் கேட்பார். அதனால் ஓரளவு சரியாகப் பார்த்து வைத்துக்கொண்டேன். டைகர் விடாமல் குரைத்தது. டைகரை எங்களுக்குத் தெரியும். அது போலீசுக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதால் குரைப்பதைத் தடுக்கவில்லை.
‘கெடக்குது வந்து சாப்பிடுடா!’ என்றார் அம்மா.
டா என்றுதான் சொல்வார். எனக்குக் கிடைத்தது பழைய தோசை சுடும் அம்மா. ரொட்டியில் பட்டர் தடவும் அம்மா என்றால் கொஞ்சம் மரியாதை தெரிந்திருக்கும். அதெல்லாம் அடுத்த பிறவியில் கிடைக்கலாம். நான் போன பிறவிக்கும் அடுத்த பிறவிக்கும் இடையே நடந்து போய் ‘ம்ம்மா! இப்ப என்ன அவசரம்? கொஞ்சம் இரு!’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அம்மா என்னவோ சொன்னார். சாப்பிட்டுவிட்டால் பாத்திரங்களைக் கழுவிவிடலாம், மோப் போடலாம், துணிகளைக் காயப்போடலாம் இப்படி நிறைய இருந்தது. எதுவும் சரியாகக் கேட்காதபடி டைகரிடம் வந்துவிட்டேன். டைகர் குரைப்பதை நிறுத்த முடியுமா என்று போலீஸ்கார்கள் கேட்பார்களோ என்று பார்த்தேன். பக்கத்து வீட்டில் அப்படித்தான் கேட்பார்கள். ஆனால் போலீஸ்கார்கள் கொஞ்சம் சீரியசான விஷயமாக இருந்தார்கள். அது அவர்களுடைய வேலை நேரம் என்பதால் இருக்கலாம். இதுவே அவர்கள் பக்கத்து வீடாக இருந்தால் நாயை நிறுத்தச் சொல்லி இருப்பார்கள்.
டைகரை உள்ளே அழைத்துச் சென்று ஸ்காயும் ஆர்யாவும் ஒளிந்திருக்கும் கட்டிலுக்கு அடியில் விட்டேன். ஆர்யா ஓடிவந்து என் காலில் முதுகைத் தேய்த்தது. அது நெஞ்சு படக்படக்கென்று என்று அடித்துக் கொண்டது. ‘என்னடா கண்ணு ஏசிப்புட்டாங்ய்களா?’ என்று எனக்கே கேட்காத மெல்லிய குரலில் கேட்டேன். அந்த அளவுக்குச் சத்தம் இருந்தால்தான் ஆர்யாவுக்குப் பிடிக்கும். டைகர்கூட ஆர்யாவும் ஸ்காயும் பக்கத்தில் இருக்கும்போது குரைக்காது. எதுக்கு வீட்டுக்குள் வம்பு என்றுதான். நாளைக்கு அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டி இருக்கும். அதிலும் பொதுவாக எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் டைகருக்கு ஆதரவாக யாரும் நிற்பதில்லை. நீதான் பெரியவன். கொஞ்சம் பார்த்து நடந்து கொள்ளக் கூடாதா என்றுதான் கேட்பார்கள். கடவுளின் கருணையால் டைகருக்கு நாம் சொல்வது புரியும். ஸ்காய்க்கும் ஆர்யாவுக்கும் என்ன புரியும் , என்ன புரியாது என்பது எங்களுக்கு இதுவரை புரிந்ததில்லை. ஆர்யா முதுகைத் தேய்த்து விட்டுப் போய்விட்டது. ஸ்காய் இருக்கும் இடம் தெரியவில்லை. எல்லாச் சந்தடிகளும் தீர்ந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் அது வெளியே வரும்.
நான் மீண்டும் ஆவலாக வாசலுக்கு வந்தேன். இதற்கெல்லாம் கூச்சப்பட்டால் முடியாது. பிறகு ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ரிப்போர்ட்டர் வந்து கேட்கும்போது ‘எதுவும் தெரியாது,வீட்டுக்குள் இருந்தோம்!’ என்று சொல்ல வேண்டி இருக்கும். அவர்களுக்கு எல்லாம் இத்தனை சொற்கள் எழுத வேண்டும் என்று பள்ளிக்கூடத்தில் இருப்பது போல் கணக்கு இருக்கும். அதனால் எதிர்வீட்டில் கேட்டோம்.அவர்கள் வீட்டுக்குள் இருந்துவிட்டதாகச் சொன்னார்கள் என்று செய்தியில் சில வார்த்தைகளச் சேர்த்துவிடக் கூடும். அது எடிட்டருக்குப் பிடிக்கும். வாசகர்களுக்கும் பிடிக்கும்.
என்னைவிட அவசரமாக டைகர் வந்து நின்றது. நாம் குரைப்பதால்தான் இவன் நைசாக அறைக்குள் கொண்டு சென்றான். மீண்டும் ஏதாவது சொன்னால் ரூமில் போட்டு அடைத்துவிடுவான். ராஸ்கல். என்று அதற்குப் புரிந்துவிட்டதால் பேசாமல் ஒய்ன் ஒய்ன் என்ற சிறு குரல் மட்டும் கொடுத்தபடி நின்றது.
எங்கள் வீட்டுக்கு இடது பக்கம் ஒன்றும் இல்லை. சிறு சுவர் உண்டு. அதைத் தாண்டினால் சாலையில் கிடக்கலாம். ஆனால் வலது பக்கம் இரண்டு வீடுகள் உண்டு. கேட்கதவைத் திறந்து வெளியே வந்தேன். இரண்டு வீடுகளுமே மூடிக்கிடந்தன. எதற்கு வம்பு என்றுதான். டைகர்கூட வெளியே வரவில்லை. அவ்வளவு தைரியம் எல்லாம் அந்த வகை நாய்க்கு நல்லதல்ல என்பதால்.
லிப்ட் போலீஸ் இருப்பது தெரியாமல் சிறு சத்தம் போட்டுத் திறந்தது. அப்பா வந்தார். எங்கே போயிருந்தார் ஞாயிற்றுக்கிழமை இவ்வளவு காலையில் என்று யோசிக்கத் தோன்றியது. அந்தப் பக்கம் போலீசை பார்த்தார். இந்தப் பக்கம் என்னைப் பார்த்தார். கைகளில் பைகளில் சான்மான்கள்.
என்னை நோக்கி வந்தார். சிறுமுறுவலோடு. எங்கள் வீட்டில் நான் ஒரே பிள்ளை. அதனால் ஒரு சிக்கல். பிள்ளைகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அப்பாவுக்குத் தெரியாது. என்னை ஒரு மாதிரியாக அவருக்குத் தெரிந்த வகையில் கையாண்டார். என்ன நடக்கிறது என்று கண்ணால் கேட்டார். அம்மாவிடமும் அப்படித்தான் கேட்பார். அப்பாவிடம் எப்போதுமே வாய் பேசுவதற்குமுன் கண் பேசும். அப்பா நிறையப் பேசிக் கொண்டிருந்தார் என்றும் தேசியச் சேவைக்குப் போன பிறகுதான் பேசுவதைக் குறைத்துவிட்டார் என்றும் பாட்டி சொல்வார். பாட்டி சொல்வதை எந்த அளவுக்கு நம்பலாம் என்று தெரியாது. பாட்டி அந்தக் காலத்து மனுஷி. பொய்யெல்லாம் சொல்வார். பொய் சொல்லலாம் என்று என்னிடமே சொல்லி இருக்கிறார்.
‘பொய் சொல்லக் கூடாதுன்னு யாரு சொன்னது?’
‘எப்படி பாட்டி?’
‘சமயத்துல பொய் சொல்லலாம். சொல்லணும்!’
‘தெரிஞ்சிருச்சுன்னா?’
‘தெரியாம சொன்னாதான் பொய்!’
‘தெரிஞ்சிட்டா?’
‘என்னடா இப்படி பயப்படற?’
பாட்டிக்கு ஆறு குழந்தைகள். அதனால் அவருக்குப் பயம் உடைந்துவிட்டது. பாட்டி யாருக்கும் எதற்கும் பயந்து நான் பார்த்ததே இல்லை. இப்போதுகூடப் பாட்டி இருந்தால் நேராகப் போய் அந்தப் போலீஸ் அதிகாரிகளிடமே என்ன நடக்கிறது என்று கேட்டு விடுவார். அவர்கள் வீட்டுக்குள் போய் நேராகப் பார்த்தாலும் பார்ப்பார். என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளாமல் விட மாட்டார். அதோடு பாட்டிக்கு ஹோக்கியன் வேறு தெரியும். எனவே அவரைப் பிரதமரேகூட அசைக்கக் கூடாது. பிரதமருக்கு மாண்டரின்தான் தெரியும். ஹாக்கியன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் பாட்டி மிரட்டி விடுவார்.
அதிகம் பேசினால் எனக்கு இந்திராணி ராஜாவைத் தெரியும் என்று பாட்டி சொல்லிவிடுவார். அதோடு இந்திராணி ராஜாவுக்கும் பாட்டியைத் தெரியும்.அவர் பாட்டியிடம் பவ்வியமாகப் பேசுவதை நானே பார்த்திருக்கிறேன். பாட்டி என்றால் வயதானவர். வயதானர்களிடம் பிரியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திராணி ராஜாவுக்கு அவருடைய அம்மாவோ, பாட்டியோ சொல்லி இருக்கலாம். அதோடு இந்திராணி ராஜாவுக்கு ஹாக்கியன் தெரிந்திருக்கலாம். அப்படி என்றால் பாட்டியை அசைக்க முடியாது.
அப்பா உள்ளே போய்விட்டார். ‘என்ன நடக்கிறது?’ என்று அம்மாவிடம் கேட்டு அதற்காக வேறு தனியாகப் பாட்டு வாங்கிக் கொண்டிருப்பார். பெண்களுக்குப் பயந்த சுபாவம் உள்ள ஆண்களைப் பிடிக்காது. அதிலும் அம்மா எம்ஜிஆர் படங்களைப் பார்த்து வளர்ந்தவர்.
நானும் டைகரும் இடத்தைவிட்டு அசையவில்லை. என்ன நடக்கிறது என்று இவ்வளவு பக்கத்தில் இருந்து கொண்டு தெரியாமல் இருப்பது ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சுக்கு அசிங்கம். நான் குனிந்து டைகரைப் பார்த்தேன். அவன் போலீஸ்காரர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நிமிர்ந்து என்னைப் பார்ப்பதற்குள் திரும்பிக் கொண்டேன்.
விசாரணை நடந்து கொண்டிருந்தது.
‘சாப்பிடலையா நீ இன்னும்?’ என்று அப்பா என்னிடம் வந்து மெல்லிய குரலில் கேட்டார்.
நான் குனிந்து டைகர் முகத்தைப் பார்த்தேன். டைகர் அப்பா முகத்தைப் பார்த்தது.
‘எனக்குப் பசிக்குது வாடா!’ என்று சொல்லிக் கொண்டே அப்பா உள்ளே போனார்.
எங்கள் வாழ்க்கை வரலாற்றில் எதிர்வீட்டுக்குப் போலீஸ் வந்திருப்பது இதுவே முதல் தடவை. அதைப் பற்றி அப்பா கொஞ்சம்கூட அக்கறை இல்லாமல் இருப்பதை யோசித்தேன். அப்பாவுக்குப் பசி தாங்கமுடியாது. பசி நேரத்தில் கோபம்கூடப்படுவார்.
அதற்குப் பாட்டி மகனைப் பற்றிப் பெருமையாக இப்படிச் சொன்னார்.
‘இனிப்புநீர்னா அப்படித்தான்!’
மேலும் சிலபேர் மின்தூக்கியில் வந்தபோது பரபரப்பு அதிகமானது. டைகர் உள்ளே ஓடிவிட்டு அப்புறம்பொறுக்க முடியாமல் கேட்வரை வந்து பார்த்தது.
எனக்குச் சிறிதுநேரம் வானம் வெள்ளை நிறமானது. ரிப்போர்ட்டர் வந்து அந்த வீட்டில் உள்ள ஆறு பேரின் வயதையும் கேட்டார். அழகான பெண்ணாகப் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவராக கண்ணில் கொஞ்சம் பயமும் கொஞ்சம் பொறுப்பும் எதையும் தவறவிட்டால் ஏசுவார்கள் என்ற கவலையும் இருந்தது. இருந்தார்.
ஒரு கணவன், ஒரு மனைவி, மனைவியின் வெளிநாட்டுத் தங்கைகள் இரண்டு, பிள்ளைகள் இருவர் என்று சொன்னேன். குத்துமதிப்பாக வயதுகளை வயது வாரியாகச் சொன்னேன். மனது வாரியாக அவர் போனால் போதும்என்று இருந்தது.
மரணம் ஏன் பலவிதத் தவிப்புகளைத் தருகிறது என்று யோசித்தேன்.
ரிப்போர்ட்டர் என்னைக் கைவிட்டதும் வீட்டுக்குள் வந்து கதவைச் சாத்திக்கொண்டேன். மூடப்பட்ட தட்டுக்குள் இரண்டு தோசைகளும், நேற்றைய கோழிக்குழம்பும், ஆறிய காபியும் அந்தப் பக்கம் அப்பாவும் இருந்ததால் ஆறுதல் சொல்வதற்காக ஸ்காய் ஆர்யாவைத் தேடிப்போனேன். தூங்கிக்கொண்டிருந்தனர். டைகர்கூட களைத்துப் படுத்திருந்தான்.
காலையில் ஒருமுறை குளித்துவிட்டேன் என்றாலும் மற்றொரு முறை குளிப்பதற்குப் போனபோது என் குளியல் அறையை அம்மா தேய்த்துக் கழுவிக்கொண்டிருந்தார்.
தோசையை எடுத்தபோது அப்பா வைப் பார்த்தேன்.
அவர் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் படித்துக்கொண்டிருந்தார். முகத்தில் ஆனந்தம் மேலோடியது.
‘ரெண்டு தடிமாடுகள்’ பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார் அம்மா. யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை.