சமீபத்தில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு மனநலம் தொடர்பான கருத்தரங்கிற்காகச் சென்றிருந்தேன். அங்கிருந்த மாணவர்களில் வெகு சிலரே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலான மாணவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மனநலத்துறை எப்படி மற்ற மருத்துவத் துறைகளை விட புறக்கணிக்கப்பட்டதாக இருக்கிறது, அதற்குக் காரணங்கள் என்ன?, தீர்வுகள் என்ன? என்ற வகையில் அமைந்த என்னுடைய பேச்சின் இடையில் சமூகநீதியையும் தொட்டுச் சென்றேன். அப்போது ஒரு மாணவன் எழுந்து “ஏன் தமிழ் நாட்டில் எல்லோரும் சமூக நீதியை பற்றி ஒரு மிகையான பிம்பத்தை உருவாக்குகிறீர்கள்?” எனக் கேட்டான். நான் பொறுமையாக சமூக நீதியையும், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் தேவையையும் சொல்ல முற்படும்போது அவன் ஆவேசமாக இடைமறித்து “எதற்குக் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு? அது மற்றவர்களுக்கு செய்யும் அநீதி இல்லையா” என்றான். அதை அநீதி என்று சொல்வதற்குக் காரணமாக அவன் என்னிடம் கேட்டது “எல்லோரும் சமம்தானே? அப்புறம் எதற்கு சிலருக்கு மட்டும் இட ஒதுக்கீடு?”
“எல்லோரும் சமம்தானே, அப்புறம் எதற்கு சிலருக்கு மட்டும் இடஒதுக்கீடு?” என்ற கேள்வி மேலோட்டமாகப் பார்க்கும்போது சற்று நியாயமாகத்தெரிந்தாலும் அது ஆபத்தான கேள்வி. ஏனென்றால் இங்கு எல்லோரும் சமமா? என்ற கேள்வி அதற்கு முன்பு வந்து நிற்கிறது. சில நாட்களுக்கு முன் தென் மாவட்டத்தைச் சார்ந்த ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, மாணவனுடன் உரையாடும் குரல் பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. மிகவும் பரபரப்பாக விவாதிக்கப் பட்ட அந்த பதிவில் அந்த ஆசிரியை மாணவனின் சாதியையும் மற்றவர்களின் சாதியையும் ஒப்பிட்டுப் பிரித்துப் பேசியபோது அந்த மாணவனும் ஆசிரியையிடம் இதே கேள்வியைத்தான் கேட்டான். “எல்லாரும் சமம்தானே டீச்சர்?” “எல்லோரும் சமம்தானே?” என்ற கேள்வியை வட இந்தியாவைச் சார்ந்த உயர்கல்வி பயிலும் ஒரு மாணவன் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகக் கேட்கும் போது, தென் மாவட்டம் ஒன்றின் அரசு பள்ளி மாணவன் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக, பிரிவினைகளுக்கு எதிராக வைத்த “எல்லாரும் சமம்தானே டீச்சர்?”
என்ற அதே கேள்வியைப் பதிலாக வைக்க முடியும். “எல்லாரும் சமம்தானே?” என்ற ஒரே கேள்வியின்\ இரண்டு முகங்களுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளும்போது எல்லோரும் சமமா என்ற கேள்விக்கான உண்மையான பதில் கிடைக்கும். “உண்மையில் எல்லோரும் சமமா இல்லையா?” மகாத்மா காந்தி ஒரு முறை “செய்யும் வேலையை வைத்து மனிதர்களைப் பிரிக்கக் கூடாது, அவரவர்களுடைய குலத்தொழிலை அவர்கள் செய்ய வேண்டும், என்ன வேலை செய்தாலும் அதில் இழிவு இல்லை. ஏனென்றால் எல்லாரும் சமம்தான்” என்ற பொருளில் ஒரு கருத்தைச் சொன்னபோது, பெரியார் ஒரு சிறுவனைக் கூப்பிட்டு வேதம் ஓதும் பிராமணணும், பிணம் எரிக்கும் தொழிலைச் செய்யும் ஒருவரும் ஒன்றா? இருவரும் சமமா?” என கேட்டபோது
“எப்படி இருவரும் ஒன்றாவர்கள்? உங்களுக்கு புத்தி பேதலித்துவிட்டதா?” என்று அந்த சிறுவன் கேட்ட அதே கேள்வியை பெரியார் மகாத்மாவை நோக்கி கேட்டதாக வரலாறுகள் உண்டு. கொஞ்சமாவது மூளை உடையவன் இருவரையும் ஒன்று என்று சொல்வானா?, இருவரும் சமமாகத்தான் இங்கு மதிக்கப்படுகிறார்கள் என்று சொல்வதற்கு உண்மையில் அசாத்திய துணிச்சல் வேண்டும். சாதிய வேறுபாடுகளால் பிளவுண்டு கிடக்கும் நமது சமூகத்தை, “அப்படியெல்லாம் இல்லை, இங்கு எல்லாரும் ஒரே அளவில் மதிக்கப்படுகிறார்கள்” என்று ஒரு பிரிவினர் தொடர்ச்சியாக சொல்லி வருவதற்கு உள்நோக்கங்கள் இருக்கின்றன. அதில் அவர்கள் இது நாள்வரை அனுபவித்த வந்து சலுகைகளைப் பாதுகாக்கும் நோக்கங்கள் இருக்கின்றன ஆனால் “எல்லாரையும் சமமாக நடத்த வேண்டும். அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் ஏனென்றால் மனிதர்கள் அனைவரும் சமமே!” என்று சமூகநீதி இயக்கங்கள் தொடர்ச்சியாக சொல்வதற்குக் காரணம் மனிதர்கள் இங்கு சமமாக நடத்தப்படவில்லையென்பதே!. காலம் காலமாக சிலருக்கு மட்டுமே சலுகைகள்
தொடர்ச்சியாக இங்கு கிடைத்து வந்திருக்கிறது, சாதியின் பெயரால் இந்த சலுகைகள் மறுக்கப்பட்ட, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட மனிதர்களுக்கு இழந்த உரிமைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கான திட்டங்களை இயற்றும்போது, அதற்கான முழுப் பயன்களை அவர்கள் பெறும் வரையில் இவ்வளவு நாள் சலுகைகளை அனுபவித்து வந்தவர்களை சற்று நேரம் ஒதுங்கியிருக்கத் தான் சொல்ல வேண்டும். இது அநீதி கிடையாது, இழந்தவர்களுக்கான உரிமைகளை திரும்பித்தருவதை எப்படி நாம் அநீதி என்று சொல்ல முடியும்? உண்மையில் இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியாகவே இதைப் பார்க்க முடியும். இதைத்தான் சமூகநீதி என்கிறோம். ஒரு சமூகமும் தனது கடந்து காலத் தவறுகளுக்காக,
ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக மனம் வருந்தி தனது தவறுகளுக்குப் பிரயோசிதமாக இழந்தவர்களிடம் அவர்கள் இழந்த சலுகைகளையும், உரிமைகளையும் திருப்பி வழங்குவதே சமூகநீதி. உண்மையில் அனைவரும் சமமானவர்களாக இந்த சமூகத்தில் மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கமே சமூகநீதியின் பின்னால் இருக்கிறது. சமமற்ற இடத்தில் சமத்துவத்தை நோக்கிய பாதையே சமூகநீதி.உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக எப்போதும் வைக்கப்படும் கேள்வி “இட ஒதுக்கீட்டின் விளைவாக திறமையானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், மெரிட்டின்
வழி வந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தீங்கிழைக்கிறது” என்பதுதான். உண்மையில் மெரிட் என்பது என்ன? நல்ல மதிப் பெண்கள் வாங்குவது என வைத்துக்கொள்வோம். நகர்ப் புறத்தில், மிகச்சிறந்த பள்ளியில், மிக ஊட்டச்சத்தான உணவை எடுத்துக்கொண்டு, மிக அதிகமான பயிற்சியைப் பெறும் மாணவன் வாங்கும் மதிப்பெண்ணையும், கிராமப் புறத்தில் அடிப்படைத் தேவைகளே பூர்த்தி செய்ய முடியாத ஒரு குடும்பத்தில் இருந்து, அரசுப்பள்ளியில் எந்தவித சிறப்பு பயிற்சியும் பெறாமல், படிப்பதற்கே நேரம் இல்லாமல் வீட்டு வேலைகளை முடித்து விட்டுப் படிக்கும் ஒரு மாணவி எடுக்கும் மதிப்பெண்ணையும் எப்படி ஒப்பிட முடியும்? அதிக மதிப்பெண் பெறுவது என்பதே சொகுசான வாழ்க்கையின் விளைவு தானே? (Merit is a product of luxury). சமமில்லாத மைதானத்தில் ஓட விட்டு நாம் எப்படி அவர்களை சமமாக மதிப்பிட முடியும்? ஒரு சாதியின் பெயரைச் சொல்லி அந்த சாதியை சேர்ந்த நீ, உனக்கும் கீழ் இருக்கும் சாதியை சேர்ந்தவர்களை ஒருபோதும் உனக்கு மேலே செல்ல அனுமதிக்கக்கூடாது என்று ஒரு ஆசிரியை சொல்லும்போது “எல்லாரும் சமம்தானே டீச்சர்?” என்று அந்த மாணவன் கேட்டதுதான் சமூக நீதியின் குரல். சாதியப் பிரிவினைகளைத் தாண்டி அனை வருக்குமான சமவாய்ப்பை உருவாக்கித் தருவதுதானே ஒரு முதிர்ச்சியான சமூகத்தின் வேலை? இந்த சாதியை சேர்ந்தவன் இதற்கு மேலே செல்லக்கூடாது என்ற சாதிய மேட்டிமைவாத மனப்பான்மையை நாம் சமத்துவம் என்ற ஒற்றைக் கோட்பாட்டின் வழியாகவே உடைக்க முடியும். ஐஐடி, எய்ம்ஸ் போன்ற நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி படிப்பு போன்ற உயரிய படிப்பை படிக்கும் மாணவர்கள்கூட தங்களின் உயர் சாதி பெருமிதங்களோடு இட ஒதுக்கீட்டிற்குப் பேசிக்கொண்டிருக்கும் சூழலில், கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவன் “எல்லோரும் சமம் தானே?” என்று அத்தனை முதிர்ச்சியோடு கேட்டதை நாம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். கல்வி என்பது உண்மையில் எங்கிருக்கிறது? எதை சொல்லித்தருகிறது? நமது மாணவர்களிடம் இந்த சிந்தனைகள் தோன்றியிருப்பதற்கு ஏதோ ஒரு வகையில் இங்கிருக்கும் திராவிட அரசியல் காரணமாக இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் இந்த ஒற்றை மாணவனின் குரலை நம்மால் பொதுமைப்படுத்த முடியுமா? கடந்த சில வருடங்களாக குறிப்பாக சமூக வலைதளங்கள் பெருகிய காலகட்டங்களில் மாணவர்களிடம் தோன்றியிருக்கும் சில அடிப்படைவாத சிந்தனைகளையும் நாம் புறந்தள்ள முடியாது. தங்களது சாதிக் குறியீடுகளை உடலில் வரைந்து கொண்டு, இன்னும் மீசையே முளைக்காத குழந்தைப் பருவ மாணவர்களெல்லாம் இல்லாத மீசையை முறுக்கும் தோரணைகளில் தங்களது சாதியப் பெருமிதங்களோடு வலைய வந்த காணொளிகளையும் நாம் இந்த நாட்களில் அதிகமாகக் காண்கிறோம். தங்களுக்கு கீழிருக்கும் சாதியினரை இழிவாக சித்தரித்தும் அவர்களின்மீதான வெறுப்பைக் காட்டும் விதமாகவும் கூர்மையான ஆயுதங்களைக் கையில் பிடித்துக்கொண்டு மிரட்டிக்கொண்டிருந்ததையும் நாம் பார்த்தோம். சிறு பெண்கள் கூடத் தங்களது சாதிப் பெருமைகளையும், சாதி ஆண்களின் கட்டமைக்கப்பட்ட ஆண்மைத்திறன்களையும் வெளிப்படையாகக் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டதையும் நாம் சமீப காலங்களில் கவனித்து வருகிறோம். பத்து, இருபது
வருடங்களுக்கு முன்பு சாதியை சொல்வதையே அவமானமாகக் கருதி வந்த தமிழ் மண்ணில் சாதியைப் பெருமிதமாக மாணவர்கள் சொல்லிக்கொள்வதும், அதைப் பட்டவர்த்தனமாக காட்டிக்கொள்வதும், அதை முன்னிட்டு இன்னொருதரப்பின் மீது வெறுப்பை உமிழ்வதும் உண்மையில் அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருக்கிறது. “எல்லோரும் சமம்தானே டீச்சர்?” என்ற கேள்விக்கு பெருமை கொள்ளும் வேலையில் சமீப காலங்களில் மாணவர்களின் மனதில் முளைத்திருக்கும் இந்த அடிப்படைவாத சாதிய மனநிலையை, சிந்தனைகளைக் கண்டு நாம் அச்சப்படவும் வேண்டும். பெயருக்குப் பின்னால் சாதி போடுவதை
அவமானமாக எண்ணிய ஒரு சமூகம், மாணவர்கள் தங்களது அடிப்படை அடையாளமாக சாதியைப்பறை சாற்றிக் கொள்ளுமளவிற்கு மாறிப்போனது எப்படி என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். உண்மையில் ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் மனது ஒரு வெள்ளைத்தாளைப் போல எந்தவித சிந்தனைகளும், எண்ணங்களும் இன்றியே பிறக்கின்றன, உளவியலில் இதை “டேபுலார் ரஸா” என அழைக்கிறோம். ஜான்லாக் போன்ற தத்துவியலாளர்கள் இந்த சமூகமே அந்த வெள்ளைத்தாளை நிரப்புகின்றன என்கிறார். குழந்தை
பிறந்த பிறகு அது வளரும் சூழலில் இருந்தே அதன் அனுபவங்களில் இருந்தே அந்த வெள்ளைத்தாள்களில் எழுதிக்கொள்கின்றன என்கிறார். குடும்பமும், சமூகமும் குழந்தைகளின் சிந்தனைப் போக்குகளை நிர்ணயிக்கின்றன என்பது ஓரளவு உண்மையே. சிக்மண்ட் ஃபிராய்ட் மனதின் வளர்ச்சி தொடர்பான தனது தத்துவத்தில் “குழந்தை பிறக்கும்போது ‘இட்’ என்ற சுய தேவைகளையும் மட்டும் பிரதானமான மன நிலையை மட்டும் பெற்றிருக்கிறது என்று அது வளர வளரவே ‘ஈகோ’ என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் மனநிலையை அடைகிறது என்கிறார். அதாவது ஈகோ என்ற மனதின் புதிய பரிணாமத்தைக் குழந்தைகள் அடையும்போது சுய தேவைகளை நிறைவேற்றுவதற்கான உந்துதல் இருந்தாலும் எதார்த்தத்தில் அது சாத்தியமா அல்லது அவசியமா என்பதையும் யோசிக்கத் தொடங்கி விடுகிறது என்கிறார். ஏழில் இருந்து எட்டு வயதிற்குள்ளாக இந்த ஈகோ என்ற மனதின் பரிணாமத்தை குழந்தைகள் பெற்றுவிடுவதாகச் சொல்லும் அவர் அது மட்டுமே போதுமானதல்ல என்கிறார். உண்மையில் “சூப்பர்
ஈகோ” என்ற நிலையை மனம் அடைந்தால் மட்டுமே மனிதனுக்கான பண்புகளுடன் அந்தக் குழந்தை வளரும் என்கிறார். அதாவது சூப்பர் ஈகோ என்பது தான் அறநெறிகளையும், வாழ்க்கை முறைகளையும், மானுடப் பண்புகளையும் கொண்ட மனநிலை. கிட்டத்தட்ட பதினெட்டில் இருந்து இருபது வயதிலேயே இந்த சூப்பர் ஈகோ முழுமையான வளர்ச்சியை எட்டும். அது வரை பெற்றோர்களும், கல்வி முறையும், சமூக அமைப்பும், மதக்கோட்பாடுகளுமே இந்த சூப்பர் ஈகோவிற்கான பணியைச் செய்ய வேண்டும் என்கிறார் சிக்மண்ட் ஃபிராய்ட். ஒரு வேளை பெற்றோர்களும், கல்வி முறையும், சமூக அடிப்படையில் மானுடத்திற்கு எதிரான, சமத்துவமற்ற சிந்தனைகளையும், பிரிவினைகளையும் கொண்டிருந்தால் அதில் வளரும் குழந்தை களுமே கூட மானுடத்திற்கு எதிரான சிந்தனைகளுடன் வளரத்தொடங்கும் என்கிறார். குழந்தைகளிடமும், மாணவர்களிடமும் சாதியப் பெருமிதங்களும், சக மனிதர்களின்மீதான சாதி ரீதியான பாகுபாடுகளும், வெறுப்பும் புதிதாகத் தோன்றும்போது அது அந்த சமூகம் நோய்மை அடைந்திருப்பதையே காட்டுகிறது. எல்லோரும் சமம்தானே என்று கேட்கும் மாணவனிடம் “நீ நல்ல பையன். சொன்னா புரிஞ்சிப்பன்னு நினைச்சேன். நீ என்ன இப்படிச் சொல்ற?” என்று கேட்கும் ஆசிரியர் நோய்மையடைந்திருக்கும் சமூகத்தின் ஒரு சிறு உதாரணம் மட்டுமே! அம்பேத்கர் சாதியை ஒரு ‘மனநிலை’ என்கிறார். உலகில் பல பிரிவினைகள் இருந்தாலும் சில அம்சங்களில் சாதி என்பது மற்ற பிரிவினைகளில் இருந்து வேறுபடுகிறது என்கிறார். பெரும்பாலான பிரிவினைகள் இரட்டை நிலையையே கொண்டிருக்கின்றன, வெள்ளையினம்-கருப்பினம், ஆண்-பெண், பணக்காரன் – ஏழை, முதலாளி- தொழிலாளி என அத்தனை பிரிவினைகளும் இந்த இரண்டடுக்கு பிரிவினைகளையே கொண்டிருக்கின்றன. ஆனால் சாதி அமைப்பு என்பது பல படிநிலைகளைக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பல மாடிக் கட்டிடங்களைப் போன்றது. ஆனால் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்திற்குச் செல்ல எந்த வழியும் விடாமல் ஒவ்வொரு தளமும் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கிறது, இதனால் பிறப்பில் இருந்து இறக்கும் வரை அதே படிநிலையில்தான் ஒருவர் இருந்தாக வேண்டும். பல படிநிலைகள் இருப்பதால் தாங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு தங்களுக்குக் கீழேயும் ஒருவர் இருக்கிறார் என்ற பலனின் காரணமாக தங்களுக்கு மேல் படிநிலையில் இருப்பவர்களைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. மேல் படிநிலையில் இருப்பவர்கள் இதன் காரணத்தால் மிக சுலபமாக தங்களது ஆதிக்கத்தை உறுதி செய்து கொள்கிறார்கள். தங்களுக்குக் கீழே ஒருவர் ஆதிக்கம் செலுத்து வதற்கு இருக்கும் காரணத்தினால் தங்களை உயர்வாக நினைத்துக்கொள்ளும் பலனை சாதி கொடுக்கிறது. இந்தப் பலன் மிக எளிதாக அவர்களின் கைக்கு வந்துவிடுகிறது. அதாவது பிறக்கும்போதே ஒருவருக்கு இந்த சாதகம் கிடைத்து
விடுகிறது. எந்த ஒரு உழைப்பும் இன்றி பிறப்பின் வழியாகக் கிடைக்கும் இந்த சாதகமான மனநிலையையாரும் அவ்வளவு சுலபமாக விட விரும்புவதில்லை. இதன் காரணத்தினால் சாதி இன்னமும் இந்த சமூகத்தில் அதே வீரியத்துடன் நிலைத்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட பிரிவினரைத் தவிர வேறு எந்தப் பிரிவினரும் தங்களது சாதியை மறைத்துக்கொள்ள நினைப்பதில்லை. “நான் மேல் சாதியைசார்ந்தவன். ஆனாலும் சாதிய மேட்டிமைத்தனத்தை எதிர்க்கிறேன்” என்று தனது சாதியை அடையாளப்படுத்திக்கொண்டே தான் சாதிக்கு எதிரான கருத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. சாதி இந்த சாதகமான மனநிலையைத்தான் ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறது. பொதுவாக வளரிளம் பருவம் என்பது நிலையற்ற பருவம். வளரிளம் பருவத்தில் ஏற்படும் சிந்தனைகளும், கொள்கைகளும் மாறிக்கொண்டேயிருப்பவை. அது அந்தந்த சூழல் மற்றும் மனநிலை சார்ந்தவை. குழந்தைப் பருவத்திலிருந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திடீரென ஏற்படும் மாற்றங்களின் விளைவாக இந்தப் பருவம் என்பது அத்தனை முதிர்ச்சியற்றதாகவும், நிலை யற்றதாகவும் இருக்கும். புதிதாக சுரக்கும் ஹார்மோன்களும் அதன் விளைவாகக் கிடைக்கும் ஆற்றலும் வளரிளம் பருவத்தினரின் உடலிலும், மனதிலும் புதிய உத்வேகங்களையும், நம்பிக்கைகளையும், கிளர்ச்சியையும் கொடுக்கும். இதன் விளைவாக மனதில் தோன்றுவதை அதன் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் உடனடியாகச் செய்யக்கூடிய உந்துதலுடனே இருப்பார்கள். உடனடி கிளர்ச்சியைத் தேடும் மனமும், ஆபத்துகளைப் பொருட்படுத்தாத குணமும் சேர்ந்து இந்தப் பருவத்தைச் சார்ந்தவர்களை எப்போதும் ஒருவித கொதிநிலையிலையே வைத்திருக்கும். உரசினால் பற்றிக்கொள்ளும் காய்ந்த மரத்தைப் போலவே எப்போதும் இருப்பார்கள். இரண்டு செயல்கள் இந்தப் பருவத்தில் பிரதானமானவை. ஒன்று, தன் அடையாளத்தைத் தேடுவது, நிறுவுவது, வெளிப்படுத்துவது. இரண்டாவது, எதிர்பாலின ஈர்ப்பும், கவனம் பெறுதலும். வளரிளம் பருவத்தின் பெரும்பாலான நடவடிக்கைகள் இந்த இரண்டு தேவைகளை அடிப்படையாகக் கொண்டே இருக்கும். ஒன்று சுய அடையாளத்தேடல். மற்றொன்று, எதிர்பாலின கவர்ச்சியும், கவனம் பெறுதலும். இந்த இரண்டு தேடலுக்கான ஆற்றலை மிகவும் எச்சரிக்கையாக முறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அது ஆபத்தான வலைகளில் வளரிளம் பருவத்தினரைச் சிக்க வைத்துவிடும். சுய அடையாளத் தேடல் என்பது வளரிளம் பருவத்தினரின் பிரதான பண்பு. “தான் யார்?” தன்னை எப்படி வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் இந்தப் பருவத்தில் தீராத கேள்வி. நல்லவனாக, பண்பானவனாக, கோபக்காரனாக, வன் முறையாளனாக, படிப்பாளியாக, உழைப்பாளியாக, நேர்மையானவனாக, வெற்றியாளனாக எனத் தன்னை விதவிதமாக அடையாளப் படுத்திக்கொள்வ தற்கான முனைப் பு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். தனது அடையாளம் பிறரால் மிக எளிதாகக் கவனம் கொள்ள கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் இந்தப் பருவத்தினர் உறுதியாக இருப்பார்கள்.
தன்னை ஒரு வெற்றியாளனாகக் காட்டிக்கொள்ள வேண்டுமானால் அந்த வெற்றிக்கு உழைக்க வேண்டும்,
வெற்றியைப் பெற வேண்டும். படிப்பாளியாகக் காட்ட வேண்டுமென்றால் அதற்குப் படிக்க வேண்டும். அது போல எந்த அடையாளத்தை நான் விரும்புகிறேனோ எது என்னை மற்றவர்களின் முன்னிலையில் உயர்த்திக் காட்டுகிறதோ அதை அடைவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும், அதற்கான உந்துதல்கள் வேண்டும். ஆனால் ஒரு அடையாளம் அப்படி எந்த ஒரு முயற்சியுமின்றி மிக சுலபமாகக் கிடைத்தால் என்னசெய்வார்கள்? அதை மிகுந்த சந்தோசத்துடன் எடுத்து அணிந்து கொள்வார்கள் இல்லையா? சாதி அப்படிப்பட்ட அடையாளத்தைதான் அவர்களுக்குக் கொடுக்கிறது. ‘உன் சாதி ஆண்ட சாதி’ என்று சொல்வதன் வழியாகக் கிடைக்கும் சாதகமான ஒரு அடையாளம் எந்த ஒரு முயற்சியுமின்றி மிக எளிதாகக் கிடைக்கும்போது அந்த அடையாளத்தை எந்தவித தயக்கமுமின்றி வெளிப்படுத்தவே முயல்வார்கள். அதுதான் பள்ளி மாணவர்களிடம் சமீப காலங்களில் நடந்து வருகிறது. உண்மையில் ஒரு சமூகம் சாதிய அடையாளத்தை இழிவான ஒன்றாக்க் கருதுமேயானால் அந்த அடையாளத்தை வளரிளம் பருவத்தினர் அணிந்து கொள்ளவும் தயங்குவார்கள். ஆனால் சாதிய மேட்டிமைவாதத்தைக் கொண்டாடும் சமூகத்தில் அதில் வளரும் வளரிளம் பருவத்தினர் அதை மிகப்பெருமையாக அணிந்து கொள்ளவே முற்படுவார்கள். இது அந்த வளரிளம் பருவத்தின் சிக்கல் அல்ல. மாறாக, சமூகம் சாதிய சமூகமாக மாறிக்கொண்டிருப்பதையும் அதன் உள்ளீடுகளில் நோய்மை படர்வதையுமே நாம் முதன்மையான பிரச்சினையாகக் கொள்ள வேண்டும்.
சமீபத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் ஒன்றிற்காக அழைக்கப்பட்டு சென்றிருந்தேன். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுடன் அங்கு உரையாடினேன். புதியவைகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம், தயக்கமற்ற கேள்விகள், தெளிவான பதில்கள், எதார்த்தமான அணுகு முறைகள் என அத்தனை புத்துணர்ச்சியோடு இருந்தார்கள். அவர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டேன்
“மனிதன் எப்போது விலங்குகளிலிருந்து மாறுபடுகிறான்?”
“ஆறாவது அறிவு”, “பேச்சாற்றல்”, “உணர்வுகளை வெளிப்படுத்துவது” எனப் பல பதில்களைச் சொல்லியபடியே இருந்தபோது ஒரு மாணவி பொறுமையாக எழுந்து சொன்னாள்:
“சக மனிதனிடம் உறவாடும் தன்மையை வைத்தே மனிதன் மனிதனாகிறான்” என்றாள். அவள் பதிலில் அத்தனை நிதானம், பொறுமை. இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல கேட்டேன்
“சார், விலங்குகள் தங்களது தேவைகளை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன, மற்றவர்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் மனிதன் தனது தேவைகளை விட சமூகத்தின் நலனையே பிரதானமாகக்கொண்டிருக்கிறான். அதற்குத் தனது தேவைகளையும், ஆசைகளையும்கூட அவன் விட்டுத்தரத் தயாராக இருக்கிறான். மற்ற விலங்குகள்இப்படி இருப்பதில்லை” என்றாள்.
சமூக விலங்காக மனி தன் பரிணாம வளர்ச்சியில் மற்ற விலங்குகளிடமிருந்து பிரிந்து நிற்பது இந்த சமூகப்பண்பை அடிப்படையாக வைத்தே! சிக்மண்ட் ஃபிராய்ட் சொல்வது போல சூப்பர் ஈகோதான் ஒரு விலங்கை மனிதனாக்கியிருக்கிறது. சமத்துவமான சிந்தனைகளும், மானுடப் பண்புகளும், அறநெறிகளுமே நம்மை மனிதனாக்கியிருக்கின்றன. ஆனால் இன்றைய வாழ்க்கை முறைகள் மனிதனின் அடிப்படையான பண்பிற்கே ஆபத்தாக வந்திருக்கின்றன. சுய தேவைகளைப் பிரதானமாக கொண்டிருப்பது, அடிப்படைவாதப் பிறப்பின் அடையாளங்களைத் தூக்கி சுமந்து கொண்டு அதை வைத்து மனிதர்களைப் பிரிப்பது, வெறுப்பு கொள்வது, அறநெறிகளை விட வன்முறைகளையே பிரதானமாகக் கொண்டிருப்பது, மனித உணர்வுகள் மதிப்பிழப்பது என மனிதனின் அடிப்படைப் பண்புகளில் இருந்தே கொஞ்சம் கொஞ்சம் விலகிக்கொண்டிருக்கிறோம். சக மனிதர்களிடம் மிகவும் விலகியிருக்கிறோம், ஆழமான உறவு என்பதும், எதிர்பார்ப்பில்லாத அன்பு என்பதும் மிகவும் அரிதாகியிருக்கின்றன. ஆரோக்கியமற்ற சமூகத்தில் வளரும் குழந்தைகளும் ஆரோக்கியமற்றுப் போவார்கள் என்பதை நாம் சமீப காலங்களில் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
மாணவர்களிடமும், இன்றைய இளைஞர்களிடம் உருவாகி வரும் இந்தப் புதிய சிந்தனைகளை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது. டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களும், சமூக வலைதளங்களும் இந்த ஆபத்தான போக்கை இன்னும் கூர்மையாக்கியிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இது சிவில் சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியைக் கொடுத்திருக்கிறது. இதை இன்னும் தீவிரமடைய விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. மாணவர்களிடம் புதிய அறிவியல் சிந்தனைகளை வளர்ப்பதும், அவர்களிடம் சிறு வயதில் இருந்தே மானுடப் பண்புகளையும், அற நெறிகளை போதிப்பதையும் தொடங்க வேண்டும். சாதி, மதம், மொழி, இன எந்த அடையாளத்திலும் பெருமைப்படுவதற்கு எதுவுமில்லை அது நம்மையும் மீறி நாம் பெற்றது என்ற தெளிவை அவர்களுக்கு சிறு வயதிலேயே உருவாக்க வேண்டும். சக மனிதனின்மீதான எந்த ஒரு பிரிவினைகளுமற்ற அன்பே அத்தனைக்கும் அடிப்படையானது என்பதை நமது பாடத்திட்டங்கள் நமது குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். “உன் சாதி பெருசுடா” என்று எந்தக் கொம்பன் வந்து சொன்னாலும் அவனை அலட்சியப்படுத்திவிட்டு பையைத் தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பும் பள்ளி மாணவர்களை நாம் இப்படித்தான் உருவாக்க முடியும், உருவாக்க வேண்டும்