அவரை ஒரு நாய் துரத்தியது. அவர் மிக வேகமாக ஓடினார். அவருடைய துரித கதிக்கேற்ப நாயின் வேகமும் அதிகரித்தது. அந்த நாய்க்கு அவர்மீது என்ன கோபம்? போன ஜென்மப் பகையா? இப்படியா குறிவைத்து நாய் துரத்தும்? அவர் அதை ஒன்றும் செய்ய வில்லயே? தெரு ஓரத்தில் ‘அறிதுயில்’ கொண்டிருந்ததை மதித்து, பவ்யத்துடன் விலகித்தானே நடந்தார்? அவரால் எப்படி அவ்வளவு வேகமாக ஓடமுடிந்தது? இந்த எண்ணம் அவரைத் தாக்கியதும், அவர் தூக்கம் கலைந்தது. கண்ணிமைகள் தாமாகவே திறந்து கொண்டன.
அவரால் எப்படி ஓடமுடிந்திருக்கும்? பல மாதங்கள் படுக்கையில் கிடந்த பிறகு இப்பொழுதுதான் அவரால் கொஞ்சம் உதவி இல்லாமல் நடக்க முடிகிறது.
அவருக்கு என்ன ஆயிற்று? அவர் மனைவி செல்லமும் இதைப் பற்றி அவரிடம் பேசுவதேயில்லை.
தான் கண்ட கனவை அவளிடம் சொல்லி, அவள் ரஸிப்பதைப் பார்க்க வேண்டும் போல் அவருக்குத் தோன்றியது. அவர் திரும்பிப் பார்த்தார்.
பக்கத்தில் படுத்திருந்தவள் எங்கே?
‘பாத்-ரூம்’ போயிருக்கிறாள் போலிருக்கிறது.
‘‘‘பாத்-ரூமி’லேருக்கியா?’’ என்று குரல் கொடுத்தார் அவர்.
அவள் ‘பாத்-ரூம்’ கதவருகே நின்று கொண்டிருந்தாள்.
‘‘ஏன், தூக்கம் வரலியா?” என்று கேட்டாள் அவள்.
‘‘வேடிக்கையான சொப்பனம்..” என்று கூறிவிட்டு அவர் நிறுத்தினார்.
‘‘‘சஸ்பென்ஸ்’ இல்லாமே உங்களுக்குப் பேச வராதே, என்ன
சொப்பனம் சொல்லுங்க..’’
‘‘நான் ரொம்ப வேகமா ஓடறமாதிரி ஒரு சொப்பனம்.. மாசக் கணக்கா படுக்கைலே கிடந்து, இப்பொத்தான் மெதுவா நடக்கிறவனுக்கு ஓடற மாதிரி சொப்பனம் வந்தா எப்படியிருக்கும் சொல்லு… சந்தோஷமா இருந்தது.’’
‘‘நான் ஓடறமாதிரி கண்டிருந்திருந்தீங்கன்னா பொருத்தமா இருந்திருக்கும்..நான் எப்போதும் உங்களை முந்திடுவேனே” என்று கூறிவிட்டு அவள் சிரித்தாள்.
“ஆமாம், நான் கொஞ்சம் மட்டுதான், உன்மாதிரி வேகம் எனக்குக் கிடையாது..” என்றார் அவர்.
“நோ! ‘ஸெல்ப் பிட்டி’ கூடாது. அது கிடக்கட்டம். ராத்ரி தூக்க மருந்து சாப்பிடலியா? தூங்காமெ இப்படிக் கொட்டம் அடிக்கறீங்க?” என்று அவள் செல்லமாகக் கடிந்து கொண்டாள்.
“‘பாத்-ரூம்’ போகணும்..’’ என்றார் அவர்.
“சரி, எழுந்திருங்க, பிடிச்சுக்கறேன்..”
“நோ. நான் மெதுவா எழுந்து போறேன்.. எத்தனை நாள்தான் நீ என்னைத் தாங்கப் போறே?”
அவர் கட்டிலிலிருந்து மெதுவாக இறங்கினார். அடி மேல் அடி வைத்து நிதானமாக நடந்தார்.
‘பாத்-ரூம்’ துப்புரவாக இருந்தது. அச்சுறுத்தும் தூய்மை என்று சொல்ல வேண்டும்.
இத்தகைய தூய்மை அவருக்கு ஆஸ்பத்திரியை நினைவூட்டியது.
பல நினைவுகள் அலைமோதின.
கார் விபத்தாகிப் பல மாதங்கள் நினைவில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்ததாகக் கூறுகிறார்கள்.
என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியாது.
நினைவு வந்தபோது பக்கத்தில் அவருடைய மகள் இருந்தாள்.
அறுவைச் சிகிச்சை நடந்தது என்றார்கள். பிறகு மகள் அவரை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.
அவர் பாத்-ரூமிலிருந்து திரும்பி வந்தபோது, செல்லத்தைக் காணவில்லை.
எங்கே போய்விட்டாள்? இப்படித்தான் அவரைத் தனியாக விட்டுவிட்டு அடிக்கடி போய்விடுகிறாள். அவளுக்கு அவருடன் இருந்து அலுத்து விட்டதோ? ஐம்பத்திரெண்டு வருஷங்கள் பார்த்த முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தால், ஏன் அலுப்பு வராது? ஆனால் அவருக்கு அலுப்பு வரவில்லையே!
சே! அப்படி நினைப்பதே தப்பு.. அவளில்லாவிட்டால் வாழ்க்கையில் என்ன செய்திருக்க முடியும்? வீட்டு நிர்வாகம் அவளுடையதுதானே?
அவர் கட்டிலில் படுத்தார். இடுப்புப் பிடித்துக் கொண்டுவிட்டது. இடுப்புக்கு ஆதரவாகச் சரீரத்தைச் சற்றுப் பக்கவாட்டத்தில் நீட்டினார்.
தண்ணீர் குடித்தால் தேவலை என்று தோன்றிற்று. எங்கே போய்விட்டாள் இவள்? “செல்லம், செல்லம்” என்று மெதுவாகக் கூப்பிட்டார்.
செல்லம் ‘பாத்-ரூம்’ கதவருகே நின்றுகொண்டிருந்தவள்,
“என்ன?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.
“நீ கட்டிலிலேல்லே உட்கார்ந்திருந்தே, ‘பாத்-ரூமு’க்கு எப்பொ போனே?” என்றார் அவர்.
“உங்களுக்குச் சின்னச் சின்ன விஷயங்கள்லாம் ஆச்சர்ய மாருக்கில்லே?” என்றாள் அவள் புன்னகையுடன்.
அவள் அவரிடம் தண்ணீர்த் தம்ளரை நீட்டினாள்.
“’டெலிபதியா?’ எனக்குத் தாகம்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டுக் கொண்டே கையிலிருந்த தண்ணீர்த் தம்ளரை வாயருகே கொண்டு போனார் அவர்.
“நான் உங்க நிழல். உங்களுக்கு எப்பப்பொ என்ன வேணும்னு எனக்குத் தெரியும்..”
அவருக்கு ஆஸ்பத்திரியில் நினைவு வந்த போது அவள் அங்கில்லை. ‘அம்மா எங்கே?’ என்ற போது, அவர் பெண் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தது இப்பொழுது அவர் நினைவுக்கு வந்தது. இரண்டாம் தடவை கேட்டபோது, அவர் மகள் சொன்னாள்: ‘உங்களுக்காகப் பிரார்த்தனை செய்ய அம்மா போயிருக்காங்க..’கலியுக சாவித்ரி!
இப்பொழுது அது அவர் நினைவுக்கு வந்தது.
“நீ எனக்காக வேண்டிக்கிட்டேன்னு உன் மக சொன்னா, என்னாலே உனக்கு அப்படி வேண்டிட்டிருக்க முடியுமா தெரியலே” என்றார் அவர்.
“ஏன் தெரியுமா? எனக்கு நம்பிக்கை இருக்கு, உங்களுக்கில்லே..” என்றாள் அவள்.
“எல்லாமே நம்பிக்கையைப் பொறுத்த விஷயந்தானா?’
“நிச்சயமா.. நான் இருக்கிறதா நீங்க நம்பறதும், நீங்க இருக்கிறதா நான் நம்பறதும், எல்லாமே நம்ம நம்பிக்கையைப் பொறுத்ததுதான்..”
“இது என்ன ‘லாஜிக்’?” என்று அவர் சிரித்துக் கொண்டே கேட்டார்.
“நம்பிக்கைக்கும் ‘லாஜிக்’குக்கும் சம்பந்தமேயில்லே. ‘லாஜிக்’கின் மரணம்தான் நம்பிக்கையின் ஜனனம்”
‘பொன்மொழி’ என்றார் அவர்.
அவள் சிரித்தாள்.
“எதுக்குச் சிரிக்கறே?”
“உங்களுடைய பிரச்னை என்னன்னா … “ என்று சொல்லிவிட்டு அவள் மேலே தொடராமல் நிறுத்தினாள்.
“சொல்லு..ஏன் நிறுத்திட்டே?”
“மத்தவங்களுக்குத்தான் உங்க முற்போக்கும் புண்ணாக்கும்.. உங்களுக்கில்லெ.”
“ஏன் அப்படிச் சொல்றே?”
“கல்யாணங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்ங்கிறது நம் காலத்திலே.. உங்க மக ப்ரியாவும், அவ புருஷன் வில்ஸனும், அவங்க கட்டிக்கிட்டது தப்புன்னு ஒத்தரையொத்தர் புரிஞ்சிட்டு, விலகிட்டாங்க.. இது ஏன் உங்களை இந்த அளவுக்குப் பாதிக்கணும்?” என்றாள் அவள்.
“எந்த அளவுக்கு?”
“செய்தி கேட்டவுடனே உள்ளுக்குள்ளேயே வெதும்பியிருக்கீங்க.. பிறகு காரை எடுத்திட்டுக் கண்மூடித்தனமா ஓட்டியிருக்கீங்க. டாக்டர் சொன்னாரே, பயங்கர ‘ஆக்ஸிடென்ட்’னு .. நீங்க உலகத்துக்குக்காட்ற முகம் வேறே.. உள்ளுக்குள்ளே வேறே.. நீங்க அடிப்படையா பார்க்கப் போனா, ஒரு ‘கன்ஸர்வெடிவ்’ பத்தாம் பசலி.”
அவர் அவளையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு சொன்னார்:” ‘கன்ஸர்வெடிவா’ இருந்தா, ப்ரியா கல்யாணம் முறிஞ்சு போச்சுங்கிறது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கணும்..இல்லியா? ஞாபகமிருக்கா உனக்கு? கல்யாணத்தின்போதே சொன்னேன், ’வேற வேற நிறம், மதம்,நாடு.. .பின்னாலே இதனாலே கலாசாரப் பிரச்னைகள் வரக்கூடாது, நிதானமா யோசிச்சு முடிவு செய்’னு.. காதலிச்சுக் கட்டிக் கிட்டாங்க.. இப்பொ என்ன ஆச்சு? ஆறு மாசத்துக் குள்ளாறவா கல்யாணம் முறியணும்? எனக்குப் பிரியமான பொண்ணு, கல்யாணமாகி ரொம்ப நாளுக்கப்புறம் பொறந்த பொண்ணு,செல்லமா வளர்த்தேன், மை காட்!” என்றார் அவர் மனச் சோர்வுடன்.
“மறுபடியும் ஆரம்பிச்சுட்டிங்களே, நான் இல்லே இப்பொ, நடந்ததை ஏத்துக்கிட்டு? நம்ம காலத்திலே இப்பொ இருக்கிற சமூகச் சூழ்நிலை மாதிரி இருந்திருந்தா எத்தனையோ கல்யாணம் அந்தக் காலத்திலும் முறிஞ்சிருக்கும்!’’ என்றாள்
செல்லம். ‘அப்படியா?’ என்பது போல் அவளைப் பார்த்தார் அவர்.
“நம்ம கல்யாணம், நாம இப்பொழுது நடந்திருந்தா?” என்றார் சில விநாடிகளுக்குப் பிறகு.
“என்னை இப்பொ இருக்கிற பெண்கள் மனநிலையிலே வச்சு என்னாலே பார்க்க முடியலியே..”
“ஒண்ணு மட்டும் நிச்சயம்…உன்னைப் பிரிஞ்சு என்னாலே இருந்திருக்க முடியாது” என்றார் அவர்.
“புரியுது..சரி, தூங்குங்க..காலையிலே பேசிக்கலாம்..”
“நீயும் படு.. எங்கேயும் எழுந்து போயிடாதே..”
அடுத்த நாள் காலையில், அவர் மகள் காபிக்கோப்பையுடன் அவர் படுக்கை அறைக்குள் வந்தாள். அவர் இன்னும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை.
அவரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள். பார்வையில், பரிதாபமும் தெரிந்தது, கவலையும் தெரிந்தது.
அவர் கட்டில் அருகிலிருந்த சிறிய மேஜையில் மருந்து பாட்டில்கள் இருந்தன.
அவள் ஒரு பாட்டிலிலிருந்து இரண்டு சிகப்பு நிற மாத்திரைகளை எடுத்தாள்.
“அப்பா?” என்று மெதுவாகக் கூப்பிட்டாள்.
அவர் கண்களைத் திறந்தார்.
“ மணி ஒன்பதாகப் போறது. நீங்க மருந்து சாப்பிடணும்..” என்றாள் அவள்.
“ பல் விளக்கிட்டு வந்துடறேன்…”
“அப்புறம் விளக்கிக்கலாம்.. எட்டு மணிக்கே நீங்க மருந்து சாப்பிட்டிருக்கணும்..”
அவர் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தார்.
“ஏதானும், நல்ல விஷயம் சொல்லப்போறீங்களாப்பா? ‘ஸ்மைல்’ பண்றீங்க?”
“ஆமாம், இட் ஈஸ் பன்னி’! ராத்திரி ஒரு சொப்பனம் வந்துது, ஒரு நாய் துரத்துது, நான் வேகமா ஓடறேன்!.. நடக்க முடியாம படுத்துக்கிட்டிருக்கிறவன் வேகமா ஓடினா எப்படி!உங்க அம்மாகிட்டே சொல்லிட்டிருந்தேன்.. ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம்.. அப்புறம்..” அவர் மேலே சொல்லாமல் நிறுத்தினார்.
“அப்புறம் என்னப்பா?”
அவர் சிறிது நேரம் பேசாமலிருந்தார்.
“சொல்லுங்கப்பா..”
“ உங்கம்மா சொல்றா.. நான் ‘கன்ஸர்வெடிவ்னு’,நீயும் வில்ஸனும் பிரிஞ்சதை என்னாலே தாங்கிக்க முடியலியாம்.. அதனால்தான், நான் காரை அவ்வளவு வேகமா ஓட்டி விபத்தாச்சாம். இன் ஷார்ட், நான் தற்கொலை பண்ணிக்கப் பார்த்தேங்கிறா! . வாட் நான்ஸென்ஸ்!’’
“இந்தாங்க மாத்திரையைச் சாப்பிடுங்க..”
அவர் மாத்திரையை விழுங்கினார்.
“குட்.. காபி குடியுங்க”
அவர் காபியைக் குடித்தார்.
“நான் ஒண்ணு உன்னைக் கேக்கலாமா?” என்றார்
அவர்.
“கேளுங்க..பதில் சொல்ல முடிஞ்சா சொல்றேன்..”
“நான் பல்லை விளக்கிட்டு வந்து கேக்கறேன்..ஓ.கே?”
“சரி, மெதுவா நடந்து போங்க.. டாக்டர் சொல்றாரு, நீங்க நடக்க ஆரம்பிக்கலாம்னு”.
அவர் ‘பாத்-ரூம்’ சென்று பல்லை விளக்கிவிட்டு வந்தார். காபியை நிதானமாக யோஜனையில் ஆழ்ந்தவாறு குடித்தார்.
“கேக்கப் போறேன்னீங்களே, என்னப்பா?”
“எனக்கும் உன் அம்மாவுக்கும் கல்யாணமாகி எத்தனை வருஷமாறது?”
“ஐம்பத்திரெண்டு வருஷம்..
“எதுக்குக் கேக்கறேன் புரிஞ்சுதா?”
“என்னாலே ஆறு மாசத்துக்கு மேலே என் புருஷனோட குப்பை கொட்ட முடியலே,அதுதானே?”
“என்ன இப்படி ‘க்ரூடா’ பேசறே?’’
“இப்பொ, எதுக்குப்பா அதைப் பத்திப் பேசணும்? அது முடிஞ்சு போன விஷயம். ‘டிவோர்ஸ்’னு கேட்டவுடனேயே அதிர்ச்சி அடைஞ்சுட்டீங்க, ஏன்
டிவோர்ஸ்’னு சொன்னா தாங்கிப்பீங்களா?”
“என்ன சொல்லு?”
“வில்ஸன் ‘பைசெக்ஸீவல்’. பெண் உறவுக்கு நானும், ஆண் உறவுக்கு அவனுடைய நெருங்கிய சிநேகிதனும்..! கல்யாணம் ஆனப்புறந்தான் எனக்குத் தெரிஞ்சது. தெரிஞ்சதும், எனக்கு இது பிடிக்கலேன்னு அவன்கிட்டே சொன்னேன்.அவனுக்கு அது பிடிச்சிருக்குன்னான். நான் வந்துட்டேன்.. அவ்வளவுதான் . .அவன் பேரிலே எனக்கிருக்கிற ஒரே கோபம், இதை அவன் கல்யாணத்துக்கு முன்னாலியே என்கிட்டே சொல்ல லேங்கிறதுதான்.. சொல்லியிருந்தான்னா, கல்யாணம் செய்து கொண்டிருக்க மாட்டேன்.. அவன் ‘பைசெக் ஸீவலா’ இருக்கிறது சரியா, தப்பாங்கிறது பிரச்னையேயில்லே..”
“அது பிரச்னையேயில்லையா?”
“ஆமாம்..அது சரியா, தப்பாங்கிறதைப் பத்திச் சொல்ல நான் யாரு? அது அவன் ‘சாய்ஸ்’. இதைப் பத்தி அவன் கல்யாணத்துக்கு முன்னாலியே என்கிட்டே விவாதிக்கலேங்கிறதுதான் என்னுடைய ஏமாற்றம்.. ஏன்னா, அது என்னுடைய‘சாய்ஸ்’ இல்லே, அவ்வளவு தான்..”
“இது உங்கம்மாவுக்குத் தெரியுமா?”
ப்ரியா பதில் சொல்லவில்லை.
“நான் உன் அம்மாகிட்டே சொல்லவா? ”
“கொஞ்சம் வெளியிலே போய் ஒரு சின்ன ரவுண்ட் போகலாமாப்பா?’’
“ஏன் அம்மாவுக்குத் தெரியக்கூடாதா நாம
இதைப் பத்திப் பேசறது?”
அவள் பதில் சொல்லவில்லை. வாசலை நோக்கி நடந்தாள்.
அவரும் அவளைத் தொடர்ந்தார்.
அவர்கள் வாசற்கதவைத் திறந்து கொண்டு வெளியிலே வந்தார்கள்.
பச்சைப் பசேலென்றிருந்த புல்வெளி மனத்துக்கு ரம்மியமாக இருந்தது.
“வீட்டைச்சுற்றி ஒரு ‘ரவுண்ட்’ நடந்தா போதும்” என்றாள் அவள் மகள்.
“நீ வர வேண்டாம்.. நான் உன் அம்மாவோட பேசிக் கிட்டு நடக்கிறேன்..அம்மாவை வரச் சொல்” என்றார்
அவர்.
அவள் பதில் கூறாமல் மேலே நடந்தாள்.
“நான் உன் அம்மாகிட்டே கொஞ்சம் பேசணும்” என்று சற்று உரக்கக் கூறினார் அவர்.
“அப்பா, ‘ப்ளீஸ்’..’’
“ ஏன் கோபப்படறே? நான் என்ன சொல்லிட்டேன்?”
“அப்பா, ‘ப்ளீஸ்’ நான் சொல்றதைக் கவனமா கேளுங்க.. அம்மா போய் மூணு வருஷமாறது. அம்மா போகலேன்னு நம்பணும்னு ஏன் இவ்வளவு பிடிவாதம்? உங்களையே நீங்க ஏமாத்திகிறதிலே உங்களுக்கு என்ன சந்தோஷம்? அம்மா போனது உங்களை ரொம்ப பாதிச்சிருக்கு. அப்புறம் இப்பொ என்னுடைய ‘டிவோர்ஸ்’. தற்கொலை செய்துக்க பாத்தீங்கன்னு அம்மா சொல்லலே.. உங்க மனச்சாட்சி உங்களுக்குச் சொல்லியிருக்கு. மூணு வருஷத்துக்கு முன்னாலே போன அம்மா, நீங்க ஆஸ்பத்திரிலேந்து வீட்டுக்கு வந்தவுடனே, திரும்பி வந்துட்டாங்க, அப்படித்தானே? ராத்திரி பூரா தனக்குத் தானே பேசிக்கிட்டிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாமயில்லெ.. நான் நாளைக்கு உங்களுக்கு ஒரு ‘சைக்காட்ரிஸ்ட்’ கிட்டே ஒரு ‘அப்பாய்மென்ட்’ ஃபிக்ஸ்’ செய்திருக்கேன்.. தயவு செய்து சொன்னபடி கேளுங்க..” என்றாள் ப்ரியா.
அவர் அவளை ஏற இறங்க உற்றுப் பார்த்தார்.
அவரும் அவர் மனைவியும் முதல்நாள் இரவு பேசிக்கொண்டிருந்தது அவர் நினைவுக்கு வந்தது.
‘நான் இருக்கிறதா நீங்க நான் நம்பறதும், நீங்க இருக்கறதா நான் நம்பறதும் எல்லாமே நம்ம நம்பிக்கையைப் பொறுத்ததுதான்..’
‘இது என்ன ‘லாஜிக்?’
‘‘லாஜிக்குக்கும் நம்பிக்கைக்கும் சம்பந்தமேயில்லே. ‘லாஜிக்’கின் மரணந்தான் நம்பிக்கையின் ஜனனம்..’
அவர் மகளின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
“இதோ பாரு, ‘சைக்யாட்ரிஸ்ட்’டும் வேணாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம், நானும் உன் அம்மாவும் சந்தோஷமா இருக்கோம். எங்களையும் பிரிக்காதே”என்றார் அவர்.