‘‘டேய்…. ஒழுங்கு மரியாதையா புத்தகங்களத் திருப்பிக் கொடுத்துரு. ஒனக்கான கடைசி எச்சரிக்கை இது. ஒங்கப்பாட்ட சொல்லிட்டு லைப்ரரி ரூல்படி ஒம்மேல கடுமையான நடவடிக்கை எடுத்துருவேன்’’ என்னை எங்கே பார்த்தாலும் இப்படிச் சொல்லிப் பயமுறுத்துவார் மானிச் சேட்டன். அவரது கண்ணில் படாமல் ஒளிந்து ஒளிந்து சுற்றிக் கொண்டிருந்தேன். இருந்தும் சிலசமயம் அவர் முன்னால் வசமாகச் சிக்கி விடுவேன். எண்ணற்ற ‘கடைசி’ எச்சரிக்கைகள் கடந்த பின்னரும் அந்தப் புத்தகங்களை என்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. எப்படி முடியும்? அந்த விமலா ஒருத்திதானே இதற்கெல்லாம் காரணம்! அவளுக்கென்ன? நடவடிக்கைகள் வரப்போவது என்மேல்தானே!
செண்பகப் பாறை பொதுமக்கள் நூலகத்தின் பொறுப்பாளரும் நூலகரும்தான் மானிச்சேட்டன். அன்பான மனிதர். யாரிடமும் கோபப்படாதவர். ஆனால் அவரையே கடும் கோபத்திற்கு ஆளாக்கியது வெறும் பதினைந்து வயதிலிருந்த எனது சில செயல்பாடுகள்! அப்பாவின் பெயரில் நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துகொண்டிருந்த எனது வாசிப்பு ஆர்வத்தைப் பார்த்து என்னையும் நூலக உறுப்பினராக்கியவர் மானிச் சேட்டன். ஒரு தடவை ஒரு புத்தகம்தான் கிடைக்கும். ஆனால் எனது ஆர்வத் தொல்லை தாங்க முடியாமல் சிலபோது இரண்டு மூன்று புத்தகங்களை எடுக்க அனுமதிப்பார். புத்தகங்களும் வாசிப்பும் மட்டுமே வாழ்வின் ஒரே கனவாக இருந்த காலம் அது.
விக்டோர் யூகோ (Victor Hugo), அலெஹான்ட்ரே டூமா (Alexandre Dumas) போன்ற பிரஞ்சு எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகளைப் படித்து உலக இலக்கியங்களில் ஆர்வமுடையவனாக நான் மாறியிருந்தேன். ஒருநாள் நார்வே நாட்டு எழுத்தாளர் க்னூட் ஹாம்ஸுன் (Knut Hamsun) எழுதிய ‘விசப்பு’ (பசி) என்ற நாவலையும் மலையாள எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த எஸ்.கே. பொட்டெக்காட் எழுதிய விஷ கன்யக என்ற நாவலையும் எடுத்தேன். ‘ன்யூட்ட் ஹாம்ஸன்’ என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த அந்த எழுத்தாளரை அதன்முன் கேள்விப்பட்டிருக்கவில்லை. இருந்தும் மிகுந்த ஆர்வத்துடன் ‘பசி’யைப் படித்தேன். உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கைப் போராட்டத்தின் கதை அது.
‘‘தெளிந்த இந்த பகலில் எதாவது சாப்பிடக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கொஞ்சம் ஏதாவது போதும்… என்று வெளியே வந்த என்னை அழகான அந்த பகல் பொழுதின் துல்லியம் குதூகலப்படுத்தியது. கிழிந்த பையுடன் கசாப்பு கடையின் முன்னால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். இரவு உணவுக்கு ஒரு இறைச்சித் துண்டைத்தருமாறு அவள் கடைக்காரனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள். நான் அவளைக் கடந்து சென்றபோது அவள் தலை தூக்கி என்னைப் பார்த்தாள். அவளது கீழ் ஈற்றிலிருந்த ஒரே ஒரு பல் சீழ் மஞ்சள் நிறத்தில் விரல்போல் துருத்தி நின்றது. ஒரு பச்சை இறைச்சித்துண்டின் கனவு அவளது கண்களை ரத்தச் சிவப்பாக்கியது. எனது பசி மரத்துப் போய்விட்டது. நான் வாந்தியெடுக்கத் தொடங்கினேன்.”
இரண்டு புத்தகங்களையும் ஒரு வாரத்தில் படித்து முடித்து திருப்பிக் கொடுக்க நூலகம் சென்றுகொண்டிருந்தேன். காமாட்சி வயல் கடந்து பாட்டுபாறை வாய்க்காலைத் தாண்டும்போது விமலாவின் வீட்டின் முன்றிலை எட்டிப் பார்த்தேன். அவள் தென்படவில்லை. பிற்பகல் மூன்றுமணி கடந்த நேரம். வயல்புறங்களுக்கும் தோட்டங்களுக்கும் மேல் மினுமினுக்கும் சூரிய ஒளியைத் தவிர யாருமேயற்ற இடங்கள். வேகமாக நடந்தால் நாலு மணிக்குள்ளே நூலகத்தை அடையலாம். இதழ்களைப் படித்து, புத்தகங்களைத் தேடி எடுத்து இருளும் முன் வீடு திரும்பலாம்.
மெலிதான மேடுபள்ளங்களில் சாய்ந்துகிடக்கும் காரிக்கொம்பு பாறையைக் கடக்கும்போது சூ… சூ…. என ஒரு சத்தம் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தேன். மூச்சிரைக்க ஓடி வருகிறாள் விமலா. அவளுக்கு பதினான்கு வயதிருக்கும். அழகி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் கோதுமை நிறத்தில் துடிப்புடன் வளரும் பதின்பருவப் பெண்மையின் வனப்பும் வசீகரமும் அவளுக்`கிருந்தது. விமலாவும் நானும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு உயிர்கள். ஒருவர்மேல் ஒருவருக்குக் காதல் எதுவும் இருக்கவில்லை. நட்பும் இருக்கவில்லை. ஆனால் மோகம் இருந்தது. தூய்மையான பதின் பருவக் காமம்! யாருமற்ற கிராம வழிகளில் எங்கேயாவது அவ்வப்பொது நாங்கள் சந்தித்தோம். எதாவது ஒன்றை பேசினோம். அவள் பேசுவது எதுவுமே எனக்குப் புரியாது. நான் பேசுவது அவளுக்கும். ஓடி வந்து நின்ற விமலாவின் மூக்கு நுனியில் வியர்வைத் துளிகளாக சூரியன் மின்னியது. பாறைகளுக்கு மேல் பலகாலமாக மனிதர்கள் நடந்து வெளிர் பழுப்பு நிறத்தில் உருவான நடை பாதையில் நாங்கள் சேர்ந்து நடந்தோம். எனது கையிலிருந்து புத்தகங்களைப் பறித்து புரட்டிப் பார்த்தாள். “இதென்ன? எப்பப் பார்த்தாலும் நீ புத்தகம் படிச்சிட்டே இருக்கியே! இதெல்லாம் நீ எதுக்குப் படிக்கிறே? அப்டி என்ன இருக்கு இதுல? நீ வர்றதப் பாத்து வீட்டுக்குப் பின்னாடி நின்னிட்டிருந்தேன். அம்மாவோட கண்ணுலபடாமக் கிளம்பறதுக்குக் கொஞ்சம் நேரமாச்சு” அவள் நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தாள். யாராவது எங்களைப் பார்க்கிறார்களா என்று நான் நாலாபக்கமும் பார்த்தேன். பாறை இடுக்கில் நுரைந்து ஓடும் வாய்க்கால் நீரின் ஓசையும் பின்நேரப் பறவைகளின் ஒலிகளும் மட்டுமே அங்கு இருந்தன.
வாய்க்காலின் கரையில் பெரிய கரும்பச்சை இலைகளுடன் அடர்ந்து நின்ற மேட்டுக் காபி மரம் ஓர் இலைக் குடிலாக எனக்குத் தோன்றியது. வளர்ந்திறங்கிய கிளைகள் மண்ணைத் தொட்டு நிற்கின்றன. அதன் கீழே நுழைந்தால் யார் கண்ணுக்குமே தெரியாது. நாம் அங்கே புகுந்திடலாமா என்று அச்சத்துடன் விமலாவைக் கேட்டேன். ‘‘ச்சீ.. போ” என்று சொன்னவள் உடனே ‘காபிக் கீழே வச்சு நீ என்னை என்ன பண்ணப் போறே?’ என்றாள். அதோடு எல்லாக் கட்டுப்பாட்டையும் இழந்த நான் அவளைக் கட்டியணைத்து ஒரு முத்தம் கொடுத்தேன். ‘ச்சீ போடா’ என்று என்னைத் தள்ளிவிட்டாள். ‘சரி போறேன்’ என்று ஓடி வாய்க் காலைத் தாவிக் கடந்து திரும்பிப் பார்த்தேன். அதோ விமலாவும் ஓடி வருகிறாள்! வெளிச்சம் குறைவான காபி மரத்தடியில் தவழ்ந்து புகுந்தேன். கண நேரத்தில் விமலாவும் வந்து உள்ளே புகுந்தாள்.
கையிலிருந்த புத்தகங்களை ஒரு கல்லின்மேல் வைத்து அவசர அவசரமாக நான் விமலாவைக் கட்டியணைத்து என்னென்னமோ செய்யமுயன்றேன். ‘ச்சீ… உனக்கு வெட்கமே இல்லையா?’ என்றெல்லாம் கேட்டு அவள் ஒரே நேரத்தில் எதிர்ப்பையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தினாள்! இத்தகைய நேரங்களில் ஆணும் பெண்ணும் என்னென்ன செய்வார்கள் என்று புத்தகங்களில் படித்திருக்கிறேன். அதில் எதைச் செய்யலாம் என்று யோசித்தபடி நான் சில வீண் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென்று மரத் தின் பின்னருகில் தாமஸூட்டி வைத்தியரின் தோட்டப் பகுதியிலிருந்து ஓர் ஆணின் உரத்த இருமலொலி கேட்டது. எனது பாதி உயிர் ஆவியாகப் பறந்தது. இருமலொலி நெருங்கி வருகிறது! வேறு எதுவுமே யோசிக்காமல் நான் தவழ்ந்து வெளியேறித்திரும்பிப் பார்க்காமல் ஓடினேன்.
அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. மரத்தின்கீழிருந்து நான் இறங்கி ஓடுவதை யாராவது பார்த்திருப்பார்களா? அந்த இருமல்காரர் யார்? அவர் என்னையும் விமலாவையும் பார்த்திருப்பாரா? விமலாவுக்கு என்ன ஆயிருக்கும்? அவள் பிடிபட்டிருப்பாளா? ‘உன்னோட இருந்தவன் யாருடீ?’ என்ற கேள்விக்கு அவள் என் பெயரைச் சொல்லியிருப்பாளா? ஒரு வேளை அவள் சொல்லவில்லை என்றாலும் புத்தகங்களின்மேல் நூலகத்தின் முத்திரை இருக்கிறதே! நான்தான் என்று எளிதில் கண்டுபிடிப்பார்கள். நூலகப் புத்தகங்களைக் காட்டில் எறிந்து விட்டு தங்கம்மாவின் மகளுடன் காபி மரத்திற்குக் கீழே உல்லாசத்திற்கு ஒதுங்கிய வெட்கம் கெட்ட நாய்!
இல்லை… எதுவுமே நடந்திருக்காது. விமலா என்னை விடத் தைரியமானவள். அவள் தப்பித்திருப்பாள்.. காலையில் சென்று புத்தகங்களை எடுத்துவிடலாம் என்று உள்ளுக்குள்ளே எனக்கே ஆறுதல் சொல்லிக் கொண்டு தூங்க முயலும்போது திடீரென்று மழை விழத் தொடங்கியது. இரவு முழுவதும் ஓயாமல் பெய்த அந்தக் கனமழையில் எனது புத்தகக் காகிதங்கள் உதிர்ந்து கரைந்து ஒழுகிப்போவதை நினைத்து நான் நடுங்கினேன்.
விமலா சில சிறு குழந்தைகளுடன் சில்லி விளையாடிக் கொண்டிருந்தாள். முன்தினம் என்ன ஆயிற்று என்று கேட்டபோது யாருமே அவளைப் பார்க்கவில்லை என்று சொன்னாள். நான் ஓடிப்போன உடனே வேறு திசையில் வேகமாக ஓடி அவளும் வீடு வந்து சேர்ந்தாளாம். புத்தகங்களைப் பற்றிக் கேட்டபோது ‘எனக்கென்ன தெரியும்?’ என்றாள். பயந்து நடுங்கி தெறித்து ஓடியபோது நானே மறந்துவிட்ட அந்த புத்தகங்களை அவள் எப்படி நினைவு கூர்ந்திருப்பாள்! காபி மரத்தின் கீழ் கருகிப்போன இலைகள் நனைந்து மக்கி ஈரத்தில் பதுபதுத்துக் கிடந்தன. அங்கு புத்தகங்களின் தடயமே இல்லை! அந்தப் புத்தகங்கள் எங்கே போயின என்று இன்று வரைக்கும் எனக்குத் தெரியாது!
‘‘புத்தகமென்பது வலுவற்ற ஓர் உயிரினம். அதைக் காலப்பழக்கத்தின் பிடியிலிருந்தும் , வானிலையின் பிடிலிருந்தும் கொறித்துத் தின்னும் பூச்சிகளின் வாயிலிருந்தும், கவனமற்ற மனிதனின் எண்னெய்ப் பிசுக்கு படிந்த கைகளிலிருந்தும், அவனது மறதிகளிலி ருந்தும் காப்பாற்றுகிறவர் நூலகர்” என்று உம்பேர்தோ எகோ (Umberto Eco) சொல்லியிருப்பது மானிச் சேட்டனைப் பற்றியேதான் என்று நான் பிற்பாடு பலமுறை யோசித்ததுண்டு. இறுதியில் பொறுமை இழந்த அவர் நூலகத்திலிருந்து என்னை வெளியேற்றினார். அப்பாவிடமிருந்து புத்தகங்களின் விலையை வசூலித்தார். அப்பா வழக்கம்போல் என்னை வெளுத்து வாங்கினார். வயதுக் கோளாறினால் நடந்த அந்தத் தவறு புத்தகங்களுடனான எனது தொடர்பை சிலகாலத்திற்கு அறுத்துவிட்டது.
புத்தகம் படிப்பவர்கள் நூலகங்களை மட்டுமே நம்பி வாழ்ந்த காலம். புத்தகங்களை விலைக்கு வாங்கும் பழக்கம் யாருக்குமே இருக்கவில்லை. எனது நண்பர் நிவாசன் ஒரு பதிப்பகத்தின் ’வீட்டில் ஒரு நூலகம்’ திட்டத்தில் சேர்ந்து தவணை முறையில் பணம் செலுத்திப் புத்தகங்களைத் தபால் வழியாக வாங்கியதுதான் நான் அறிந்த முதல் இலக்கியப் புத்தகம் வாங்குதல். அப்புத்தகங்களை இரவல் வாங்கி நானும் படித்தேன். வீட்டையும் ஊரையும் விட்டு ஏதேதோ திசைகளில் பயணித்து ஒழுகிய எனது வாழ்க்கையில் போகுமிடமெல்லாம் எனக்குத் துணையாக இருந்தவை நூலகங்களும் புத்தகங்களும் மட்டுமே. புத்தகங்கள் இடையறாமல் மனிதனை, வாழ்க்கையை, இயற்கையைப் பேசுவதோடு மற்ற புத்தகங்களையும் பேசுகின்றன. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்திற்கு வழி வகுக்கிறது. ஒரு புத்தகமென்பது அதிலிருக்கும் வார்த்தைகள் மட்டுமல்ல. அவ்வார்த்தைகளுக்கு அப்பால் சென்று வாசகன் தனதுக்குள் இருக்கும் கற்பனை வளத்தைத் தொட்டு அறியும் பயண வழி அது. எழுத்தாளனுடன் அவன் நிகழ்த்தும் மௌனமான உரையாடல். காலங்கள் கடந்தோடினாலும் நினைவில் மிதந்து கொண்டேயிருக்கும் புத்தகங்களின் வாசனை. ஒருபோதும் மறக்கமுடியாத ஓர் அனுபவம் ஒரு நல்ல புத்தகம்.
புத்தகங்களை விலைகொடுத்து வாங்க ஆரம்பித்தபோது எனக்கு ஒன்று வெளிச்சமானது. நூலகங்களிலிருந்து எடுக்கும் புத்தகங்களையும் இரவல் வாங்கும் புத்தகங்களையும் நாம் கட்டாயம் படித்துவிடுவோம். விலைகொடுத்து வாங்கும் புத்தகங்கள் நம்மிடமே இருக்கின்றவை என்பதால் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாமே என்ற எண்ணம் தானாக வந்துவிடும். உடனடியாகப் படிக்கப்படாமல் அப்புத்தகங்கள் தள்ளி வைக்கப்படும். சிலசமயம் ஒருபோதும் படிக்கப்படாமல் அடுக்கத் தட்டுகளிலேயே அவை அமர்ந்திருக்கும். இங்கே ஒரு கேள்வி எழுகிறது. நம்மிடமிருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் வரிக்கு வரி நாம் படித்திருக்க வேண்டுமா? படிக்காத புத்தகங்களைச் சேர்த்துவைப்பதால் என்ன பயன்?
கடந்த 35 ஆண்டுகளில் ஒவ்வொன்றாகச் சேகரித்த ஐயாயிரத்திற்கும் மேலான ஆங்கில, தமிழ், மலையாளப் புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன. நான் அந்தப் புத்தகங்கங்களையெல்லாம் படித்திருக்கிறேனா? ஒருவர் ஒரு புத்தகத்தை வாங்குவதே அது தனக்குத் தேவையானது அல்லது அது உயர்வானது என்கின்ற எண்ணத்துடன்தான். புத்தகங்களை நேசிப்பவர்களும் தொடர்ந்து படிக்கும் பழக்கம் கொண்டவர்களும் மட்டும்தான் இடைவிடாமல் புத்தகங்களை வாங்குவார்கள். ஆனால் தங்களிடமிருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் அவர்கள் படித்திருக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வாங்கிப் பலகாலமாகிய ஒரு புத்தகத்தை படிக்கலாமென எடுக்கும்போது அந்தப்புத்தகம் ஏற்கனவே நன்கு பரிச்சயமானதாகத் தோன்றும் அனுபவம் எனக்குப் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. எப்போதாவது அதைப் புரட்டிப் பார்த்து மறந்திருக்கலாம். படித்த சில புத்தகங்களில் அதைப்பற்றியான குறிப்புகள் வந்திருக்கலாம். படித்த ஏதோ ஒரு நண்பர் அதைப்பற்றிச் சொல்லியிருக்கலாம்.
முழுமையாகப் படித்த புத்தகங்களைப் பற்றியே நம்மிடம் இருப்பது தோராயமான சில நினைவுகூரல்கள் தாம். முழுப்புத்தகத்தையும் நம்மால் ஒருபோதும் நினைவு கூர முடியாது. அனைத்தையும் நினவில் வைக்குமளவில் நினைவாற்றல் இருக்கும் ஒருசிலருக்கு ஒரு வேளை அது சாத்தியப்படலாம். அவர்கள் கணினி களைப் போன்றவர்கள். ஆனால் அது ஒரு தனித்திறனா கவோ சாதனையாகவோ நான் கருதவில்லை. பாகுபாடில்லாமல், பகுத்தறியாமல் படித்த அனைத்தையும் நினைவில் சேமித்து வைப்பதனால் யாருக்கு என்ன பயன்?
படித்தவை படிக்காதவை என்பதைக் கடந்து புத்தகங்கள் என்னிடமிருக்கும்போது நான் தனியனல்ல என்பதை உணர்கிறேன். என்றைக்காவது படிக்க முடியும் என்கின்ற கனவுடன் ஒவ்வொரு புத்தகத்தையும் வாங்குகிறேன். வாழ்க்கையில் வாசிப்பு மட்டுமே இருக்கும் ஒரு காலம் கனவில் எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ஒருபோதும் அது நடக் காது என்று அறிவேன் என்றபோதிலும்! என்னிடமிருக்கும் புத்தகங்களில் பலதையும் படிக்காமலேயே நான் இறந்து போகலாம். இருந்தும் கையில் பணமிருந்தால் மேலும் புத்தகங்களை வாங்குவேன். என்னிடம் இருக்கவேண்டும் என நினைக்கும் புத்தகங்களை யார் தந்தாலும் வாங்குவேன். எனது வீட்டின் நூலகத்தைப் பார்த்துப் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாமா ‘‘எங்களது பழைய வீட்டைவிட மிகப் பெரிய வீட்டில்தான் இப்போது இருக்கிறேன். ஆனால் வீடுமாறி வரும்போது, பத்து பைசாவுக்கு உதவாத இதையெல்லாம் வைக்கப் புதுவீட்டில் இடமில்லை என்று சொல்லி, நூற்றுக்கணக்கான எனது புத்தகங்களையு ம் நாற்பதாண்டுகாலம் நான் எழுதிய நாள் குறிப்புகளையும் தூக்கிப் போட்டார்கள் எனது மகன்கள். பழைய அட்டை விலைக்குக் கூட அதை வாங்க யாருமே முன்வரவில்லை” என்று வேதனையுடன் சொன்னார். அதைக் கேட்டபோது இனம் புரியாத ஒரு துயரத்தில் நானும் தடுமாறிப் போனேன். எனது வாழ்நாளின் மறுவிலையாக நான் வாங்கிய புத்தகங்கள் இடத்தை அடைக்கும் பழங்காலக் குப்பைகளாக மாறி ஒருநாள் வெளியே தூக்கி எறியப்படுமா?
நான் விமலாவை நினைக்கிறேன். ஒரு புத்தகத்தைக் கூட படிக்காத விமலா! பல காதல்களையும் பிரிவுகளையும் திருமணங்களையும் மணமுறிவுகளையும் பிரச வங்களையும் தாங்கி இளமையிலேயே கிழவியாகிப்போன விமலா இறந்துபோய் இப்போது பல ஆண்டுகள் ஆகின்றன. மழைநீரில் கரைந்து காணாமல்போன அந்தப் புத்தகங்களைப்போல்.