பூட்டியிருந்த வீட்டில் முப்பதைந்து பவுன் நகை திருட்டு போனதைக் குறித்து நேரில் ஆய்வு செய்ய சப்-இன்ஸ்பெக்டரும் சில போலீஸாரும் போகிறார்கள். களவு போன இடத்தைக் கண்களால் அலசி ஆராய்கிறார்கள். அக்கம் பக்கத்தில் விசாரிக்கிறார்கள். திரும்பி வரும்போது ஜீப்பில் இருக்கும் போலீஸார் தங்களுக்குள் இப்படிப் பேசி வருகிறார்கள்:
“முன்னாடி வாசல் கேட்ட உடைக்கல. கண்டிப்பா ரவி கேங்க் கிடையாது. தாழ்ப்பாள அறுத்துருப்பாங்கலான்னு பாத்தா..? தாழ்ப்பாள தொடக்கூட கிடையாது. சைட்ல சுவர மட்டும் உடைக்க ட்ரை பண்ணிருக்காங்க. பின்னால கதவு இருக்குன்னு தெரிஞ்சுதான் வந்திருக்காங்க. அப்ப மணி டீமும் இல்ல. ஜன்னல் கம்பிய உடைக்கல. அப்ப முருகன் கேங்கும் இல்லை. ‘பாவாடைய காணோம்’னு அந்தம்மா சொல்லுச்சு. ஒருவேள ‘பாவாடை ரமேஷா இருக்கலாமா?’ இல்ல, பாவாடை ரமேஷா இருந்தா ப்ராவ எடுத்துருக்க மாட்டான். இங்க ப்ராவையும் காணாமே!?”
திருச்சியிலிருந்து இருப்பதைந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் வேம்பூர் போலீஸ் ஸ்டேசனைச் சுற்றிய பகுதியில் ரவி, மணி, முருகன் பாவாடை ரமேஷ், ப்ரா திருடன் என இப்படியான குற்றவாளிகள்தான் இருப் பார்கள். திருட்டு, அடிதடி, வெட்டுக்குத்து, பங்காளிக் கொலை, ஜாதிக் கொலை, கௌரவக் கொலை என இப்படித்தான் குற்றங்கள் இருக்கும். ஒரு திருடன் நகையையோ, பணத்தையோ திருடும்போது பாவாடையையோ அல்லது ப்ராவையோ சேர்த்துத் திருடித் தன் வருகையை உணர்த்திவிட்டுச் செல்லும்போது, அவனைப் பிடிப்பதற்குப் போலீஸாருக்குப் பெரிய மெனக் கெடல் தேவைப்படாது. ஆனால் அதே ஊரில் எந்தத் தடயமும் இல்லாமல் எட்டுத் தொடர் கொலைகள் நடக்கின்றன என்றால் அதைப் போலீஸார் கண்டு பிடிப்பதற்கு நிறைய சிரமப்பட வேண்டும். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத எளிமையான சப்-இன்ஸ் பெக்டர் எட்டுக் கொலைகள் செய்தவனை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதை விலங்கு வெப் சீரீஸ் எதார்த்த மாகச் சொல்கிறது.
பொதுவாகத் தொடர் கொலைகள் என்றால் அது ஆல்பர்ட் ஹிட்ச்காக் படங்கள் போன்று சஸ்பீசியஸான நகரத்தில் மட்டுமே நடக்கும் என்றும், அதைக் கண்டு பிடிக்க வரும் புலனாய்வு அதிகாரி ஷெர்லாக் ஹோம் அளவிற்கு அதிபயங்கர புத்திசாலியாக இருப்பார் என்றும் காட்டுவது சினிமா வழக்கம். அதே போல போலீஸ் என்றால் “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்றா… பாக்குறியா.. பாக்குறியா?” எனப் புடைத்து நிற்பது போலத்தான் தமிழ் சினிமாவில் காட்டுவார்கள். மாறாக, கி.ரா.வின் கிடை குறுநாவலில் வருவது போல எளிய மனிதர்கள், அவர்கள் செய்யும் எளிய குற்றங்கள், அவற்றைத் துப்புத்துலக்கும் திம்ம நாயக்கர் போன்ற எளிய புத்திசாலிகள், மண் மணக்கும் காட்சிகள் ஆகியவற்றைக் கலந்துதரும் புலனாய்வுக் கதைகளைத் தமிழ்த் திரைப்படங்களில் இதுவரை பார்த்திருக்க மாட்டோம். அந்தக் குறையைப் போக்குவதுபோல விலங்கு வெப் சீரீஸ் வந்திருக்கிறது. இந்தத் தொடரின் கதை இதுதான்:
செங்குட்டுவன் என்பவர் காணாமல் போய் விட்டதாக அவருடைய தம்பி வேம்பூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கிறார். செங்குட்டுவன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். மனைவி தாழ்த்தப்பட்டவர் என்றாலும் அவர் எம்.எல்.ஏ.வின் தங்கை. ஆனால், எம்.எல்.ஏ.வின் தங்கை என்றாலும் அவருக்குத் தனித்தட்டில்தான் சோறு போடுகிறார் செங்குட்டுவனின் மாமன் சுந்தரச் சோழன். இதனால் தனிக் குடித்தனம் போன செங்குட்டுவன், தன் மனைவியை இன்னும் வசதியாக வைத்துக்கொள்ள சொத்தில் தனக்கு இருக்கும் பங்கைக் கேட்கிறார். சுந்தரச் சோழன் தர மறுக்கிறார். இதனால் இருவருக்கும் சண்டை நடக்கிறது. செங்குட்டுவன் அரிவாளால் சுந்தரச் சோழனை வெட்டி விடுகிறார். அதில் அவர் சிறு காயம் அடைகிறார். பதிலுக்குச் சுந்தரச் சோழன், “டேய், உன்னை ஒரு வாரத்துல கொல்லாம விட மாட்டேன்” என்கிறார். சொல்லி வைத்ததுபோல அடுத்த வாரத்தில் இருந்து செங்குட்டுவன் காணாமல் போய்விடுகிறார். அக்கம்பக்கம் சாட்சியமும் சுந்தரச் சோழனுக்கு எதிராக இருக்கிறது.
இதற்கிடையில் வேம்பூருக்கு அருகில் உள்ள ஓலையூர் காட்டில் அழுகிய நிலையில் ஒரு பிணம் இருப்பதாகச் சொல்கிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் இளம்பரிதி என்பவரும், ஒரு ஏட்டுவும் அங்கு சென்று பார்க்கிறார்கள். அங்கு இருக்கும் பிணத்தையும் சுற்றுப்பகுதியையும் சப்-இன்ஸ்பெக்டர் ஆராய்ந்து பார்க்கிறார். ஒருவனை ஓரிடத்தில் கொன்று, இன்னொரு இடத்திற்கு இழுத்து வந்து போட்டிருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரிகிறது. மேலும், கழுத்தைத் துண்டாக வெட்டிவிட்டு ஓடியிருக்கிறார்கள். செங்குட்டுவனின் தம்பி பிணத்தைப் பார்த்துவிட்டு, “அது செங்குட்டுவன் இல்லை” என்கிறார். மருத்துவர் வருகிறார். இந்தப் பிணம் கொன்று மண்ணில் புதைக்கப்பட்டு, மீண்டும் வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார். ‘கொன்று புதைத்துவிட்டு ஏன் எடுக்க வேண்டும்’ என்ற சந்தேகம் சப்-இன்ஸ்பெக்டர் இளம் பரிதிக்கு வருகிறது. வேடிக்கை பார்க்கும் மக்களைத் துரத்திவிட்டு, இன்ஸ்பெக்டரை வழியனுப்பிவிட்டு மீண்டும் வந்து பார்க்கும்போது, அங்கு பிணத்தின் தலை காணாமல் போயிருக்கிறது. தலையோடு பிணம் இருந்ததை ஊர்மக்கள் பார்த்துவிட்டார்கள். போட்டோ எடுத்துவிட்டார்கள். மருத்துவர் ஆய்வும் செய்து விட்டார். அதன்பிறகுதான் தலை காணாமல் போயிருக்கிறது. பிணத்தின் தலை கிடைக்காவிட்டால் சப்-இன்ஸ் பெக்டரின் வேலைக்கு ஆபத்தாகிவிடும். “எப்பிடியாச்சும் தலைய கண்டுபிடிச்சிரு. இல்லைன்னா உன்ன எவனாலயும் காப்பாத்த முடியாது” என எச்சரிக்கை செய்துவிட்டு ஒரு வாரம் அவகாசம் வழங்குகிறார் உயரதிகாரி. எப்பாடுபட்டாவாது பிணத்தின் தலையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆளாகிறார்.
அடுத்த நாள், அந்தக் காட்டில் வேட்டையாடிகள் இரவில் பயன்படுத்தும்ஹெட்லாம்ப் கிடைக்கிறது. அதுபோன்ற ஹெட்லாம்ப்களைப் பக்கத்தில் இருக்கும் ஓலையூ ர்க்காரர்கள் பயன் படுத்துவார்கள் எனத் தெரிந்துகொண்டு, அங்கு போய் புலன் விசாரணை செய்கிறார்கள். எதிர்பாராதவிதமாக அந்த ஊரில் புதைத்து வைக்கப்பட்ட செங்குட்டுவனின் பிணம் கிடைக்கிறது. கொன்றது செங்குட்டுவனின் மாமன் சுந்தரச் சோழன்தான் எனச் சந்தேகப்பட்டு அவரையும்,அவரோடு போனில் பேசிய புரஃபஸர் ஒருவரையும் அடித்து உண்மையைச் சொல்லும்படி கேட்கிறார்கள். ஆனால் செங்குட்டுவனை அவர்கள் கொலை செய்ய வில்லை என்பது மிகவும் தாமதமாகத்தான் தெரிகிறது. செங்குட்டுவனின் போனில் பேசியவர்கள் வேறு யார் யார் எனத் தேடுகிறார்கள். அதில் முருகன் என்பவர் கிடைக்கிறார். அவரை அடித்து விசாரிக்கிறார்கள். அவர்மூலம் அவருடைய மாப்பிள்ளை பாண்டி என்பவனைப் பிடிக்கிறார்கள். அவன் தன்னுடைய சிம்மைக் கழற்றி கிச்சாதான் அவன் போனில் போட்டுப் பேசினான் என்கிறான்.
கிச்சா என்பவன் அந்த போலீஸ் ஸ்டேசனில் எடுபிடிவேலை செய்யும் சாதாரண ஆள். ஒரு கம்ப்ளைண்ட் கொடுப்பதற்காகப் போலீஸ் ஸ்டேசன் வந்தவன், அப்படியே, அந்த ஸ்டேசனிலேயே மூன்று வருடமாக எடுபிடி வேலைகள் செய்து வருகிறான். செங்குட்டு வனுடைய செல் அவனுக்கு எப்படிக் கிடைத்தது என விசாரிக்கிறார்கள். “என் மகள் டி.வி. விளம்பரத்தைப் பார்த்து செல்போன் வேண்டுமென்று கேட்டாள். ஒயின் ஷாப்பில் குடிக்கும்போது பழக்கமான செங்குட்டுவனிடம் வாங்கினேன்” என்கிறான். ஆரம்பத்தில் கிச்சாவை அதிகமாகச் சந்தேகப்படாமல் விட்டுவிடுகிறார்கள். ஆனால் அந்த வழக்கு சுற்றிச் சுற்றிக் கிச்சா என்பவனிடம் தான் வந்து நிற்கிறது. இனி அவனுக்கு இரக்கம் காட்டக்கூடாது என நினைத்து அடித்துத் துவைத்து எடுக்கிறார்கள். கடைசியாக, “தன் மனைவியிடம் தவறாக நடந்துகொண்டதற்காக செங்குட்டுவனை நான்தான் கொன்றேன்” என்கிறான்.
ஒருவழியாக செங்குட்டுவன் கொலைக் கேஸில் குற்றவாளி கிடைத்துவிட்டான் என ஆறுதல் அடைகிறார்கள். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் இளம்பரிதிக்கு அத்தோடு அவன்மீது சந்தேகம் தீரவில்லை. மேலும் விசாரிக்கிறார். ஆனால் அந்த விசாரணை அடித்துத் துன்புறுத்துவதாக இல்லை. கொஞ்சம் இரக்கத்தோடு, அதே நேரத்தில் அவன் பயம் கொள்ளும்படி விசாரணை நடத்துகிறார். அவருடைய மென்மையான அணுகுமுறையினால் அடுத்து அடுத்து சிவசங்கு, முருகேசன், சங்கிலிபாண்டி, பெரியமாரி, வீரையன், மகேந்திரன், மகாராஜன், செங்குட்டுவன் என எட்டுப்பேரையும் கொன்றதாக ஒப்புக்கொள்கிறான். ஒரு போலீஸ் ஸ்டேசனில் தங்களோடு சகஜமாக இருந்த எடுபிடி ஆள் இத்தனை கொலைகள் செய்தானா!? என எல்லோரும் ஆச்சர்யம் அடைகிறார்கள்.
இத்தனை தெரிந்த போதும் சப்-இன்ஸ் பெக்டர் இளம்பரிதிக்கு அவருடைய பிரச்சனை தீர வில்லை. காட்டில் இருந்த பிணத்தின் தலையை எடுத்தது யார் எனத் தெரியாமல் தவிக்கிறார். ஒருநாள், பிணத்தின் தலை தொலைந்துபோனது எல்லோருக்கும் தெரிய வருகிறது. “பிணத்தின் தலையைத் தொலைத்த சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்” எனப் பேப்பரில் செய்தியும் வந்துவிடுகிறது. சஸ்பெண்ட் ஆன இளம்பரிதி தலையைக் கண்டுபிடித்தாரா? அவருக்கு மீண்டும் வேலை கிடைத்ததா? என்பதை சீரீஸ் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
உலக அளவில் வெப் சீரீஸ் என்பதற்கேற்ற வடிவம் ஒன்று உருவாக்கப்பட்டுவிட்டது. அதன்படி டீடெயிலிங்க் என்பது வெப் சீரீஸின் முக்கியமான கூறாகப் பார்க்கப்படுகிறது. சினிமாவில் மேலோட்டமாகச் சொல்லிவிட்டுப் போகும் விசயங்களைத் தெளிவாக விபரமாக அழகாகச் சொல்லுவதற்கு வெப் சீரீஸில் அதிகமான இடம் இருக்கிறது. சினிமாவில் நடித்த அதே நடிகர்கள் அதே முகபாவத்தோடு இனிமேல் வெப் சீரிஸில் தொடர்வது கடினம். நடிகர்கள் வெப் தொடருக்கான நடிப்புக்குத் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது வெப் சீரீஸுக்கு என்றே புதிய நடிகர்களை உருவாக்க வேண்டும். கதைப்பின்னல், வசனம், காட்சியமைப்புகள் எல்லாம் ஒரு எபிசோட் முடிந்தவுடன் அடுத்த எபிசோட்டைப் பார்க்கத் தூண்டும்படி இருக்க வேண்டும். வெப் சீரீஸின் முதலில் வரும் சில நிமிடங்களும், இறுதியில் வரும் சில நிமிடங்களும் மிக முக்கியமானவை. அதில் சுண்டி இழுக்காவிட்டால் ரசிகர்கள் அடுத்த எபிசோட்டைப் பார்ப்பது கடினம். இதுவரை வந்த தமிழ் சீரீஸ்களைவிட, விலங்கு என்னும் இந்த வெப் சீரீஸில், மேற்கூறிய தகுதிகள் பல, நன்கு வெளிப்பட்டிருக்கிறது என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
ஒரு சிறிய நகரத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேசனை அப்படியே கண்முன் நிறுத்துவதிலேயே டீடெயிலிங்க்காக
எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. முனிஷ்காந்த் (இராமதாஸ்) வழியாகச் செல்லும் கேமரா ஒட்டுமொத்த போலீஸ் ஸ்டேசனையும் படம்பிடித்துக் காட்டும் அந்த சிங்கில் ஷாட்டிலும்; “ஒரு 174 (சந்தேகப்படும்படியான மரணத்திற்குரிய குற்றவியல் சட்டவிதி எண்) சார். Unidentified body, Almost decomposed, தல வேற துண்டா இருக்கு. Spot PM (post mortem) தான் சார் பண்ணனும்” போன்ற வசனத்திலும்,; CDR – Case Details Report, Crime Report, GD (General Diary), Court தபால் போன்று ஆங்காங்கே உதிர்க்கும் police slang-களிலும் போலீஸ் தொடர்பான கதைக்கு எவ்வளவு ஆய்வு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
விமல், பாலசரவணன், இனியா தவிர மற்றவர்கள் எல்லாம் அநேகமாகப் புதுமுகங்கள். ஆனால் அவர்கள் நடிக்கிறார்கள் என்பதையே மறந்து பார்க்கும் அளவிற்கு நடித்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. குறிப்பாக, கிச்சாவாக வரும் ரவி (புதுமுகம்) என்பவரின் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. “சார், நான் செய்யல சார்… சொல்லுங்க சார்” எனக் கெஞ்சல் குரலில் அவர் வெளிப்படுத்தும் பச்சாதாபமும்; எடுபிடி ஆளாக அவர் காட்டும் பணிவும், ஒரு பீடியைக் குடித்து அவர் காட்டும் கம்பீரமும் எனக் குரலிலும், முகபாவத்திலும், நடிப்பிலும் எல்லோரையும் கவர்கிறார். கிச்சா என்ற கேரக்டரின் உளவியல் குறித்துத் தனிக் கட்டுரையே எழுதலாம். வெப் சீரீஸின் பெருக்கத்தால் இதுபோன்ற திறமையான நடிகர்கள் பலர் இனிமேல் வருவார்கள்.
விமல் தன்னைக் கதையின் ஹீரோ என நினைக்காமல் கதையில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்று நினைத்து நடித்திருப்பது மிகச் சிறப்பு. ஹீரோயிசம் செய்வதற்கு நிறைய வாய்ப்பு இருந்தும் அதைத் தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் பாலசரவணனுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார். இதுவரை சிரிப்பு நடிகராகவே பார்த்துப் பழகிய பாலசரவணன் இந்தத் தொடரில்
முறுக்கி நிற்கும் முரட்டுப் போலீஸாக நடித்திருக்கிறார். கன கச்சிதமான ஆடைக்குள் தன்னைப் பொருத்திக்கொண்டதுபோல, கருப்பு என்றகேரக்டருக்குள் பாலசரவணன் தன்னை அழகாகப் பொருந்தியிருக்கிறார். அவருக்கேகூட அவர் நினைத்துப் பார்க்காத மாற்றமாக இருக்கும். இனியாவும் அழகான மனைவியாக, கிடைத்த இடங்களில் நன்றாக நடித்திருக்கிறார்.
தமிழில் வெப் சீரீஸ் என்பது குறைந்த செலவில் எடுக்கப்படும் சினிமா என்றே நினைக்கப்படுகிறது. உலக அளவிலும், இந்தியிலும் வெப் சீரீஸின் தரம் எங்கேயோ இருக்க, தமிழில் வெப் சீரீஸின் தரம் மிகப் பின்தங்கி இருப்பதற்கு முதல் காரணம் பணம். சினிமாவுக்கு நூறு கோடி கொடுப்பவர்கள் வெப் சீரீஸுக்கு ஒரு கோடி கொடுக்க யோசிக்கிறார்கள். இதுபோன்ற புறச்சூழலில் டெக்னீசியன்கள் குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த கலையார்வத்தை வெளிப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் கேமராமேன் தினேஷ் புருஷோத்தமன் தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். போலீஸ் ஸ்டேசனைக் காட்டும்போதெல்லாம் சிங்கில் ஷாட்டில் எடுத்திருப்பதால் போலீஸ் ஸ்டேசனே லைவ்வாக இருப்பது போல நமக்குத் தோன்றுகிறது. சில காட்சிகள் கவித்துவமாக இருக்கின்றன. குறிப்பாக, போலீஸ் ஸ்டேசனிலிருந்து போலீஸார் எல்லாம் மொத்தமாக வரும் காட்சியும், எல்லோருக்கும் முன்னால் கிச்சா கம்பீரமாகப் போக, பயந்துகொண்டே போலீஸார் எல்லோரும் பின்னால் வரும் காட்சியும், அப்போது ஒலிக்கும் பின்னணி இசையும் மிக அருமை.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இதற்கு முன் புரூஸ்லீ என்ற படத்தைக் கொடுத்தவர். அந்தப் படம் பேசக்கூடிய அளவிற்கு அவருக்கு அமையவில்லை. ஒரு தோல்விக்குப் பின் கம்பீரமாக எழுந்து நின்றிருக்கிறார். அவர் வாழ்ந்த நிலத்தைத் திரையில் கொண்டுவர நிறைய முயற்சி எடுத்திருக்கிறார். அவருக்குள் இருக்கும்
நாட்டுப்புறக் கூறு கருப்பு என்ற கடவுளாகப் பல இடங்களில் வெளிப்படுகிறது. போலீஸார் திருடனைப் பிடித்துவிட்டால் கருப்பனுக்குக் கிடா வெட்டுவதாக வேண்டுகிறார்கள். குற்றவாளிகளை ஈவு இரக்கமின்றி அடிக்கும் போலீஸின் பெயரும் கருப்பு. புதையலுக்காக ஆசைப்பட்டு பலர் சாகிறார்கள். சாகுமுன் அவர்கள், “கருப்பா, புதையல் எங்க இருக்கு… கருப்பா, புதையல் எங்க இருக்கு” என்று கருப்பன் பெயரைச் சொல்லிக் கொண்டே சாகிறார்கள்.
ஒரு போலீஸ் ஸ்டேசனைச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். அங்குள்ள போலீஸார் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. அவர்கள் போலீஸார் அவ்வளவுதான். ஒரு திருடனைக் கண்டுபிடித்துவிட்டால் அவனை வைத்தே கிடாவை வெட்டுகிறார்கள். அவன் போதும் போதும் என்று கூறும் அளவிற்குக் கறிச்சோற்றைச் சாப்பிட வைக்கிறார்கள். அன்று இரவு போலீஸ் ஸ்டேசனுக்குள் இருக்கும் வதைகூடத்திற்குள் தள்ளி அடித்து நொறுக்கிறார்கள். விசாரணையில் போலீஸார் அடிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஜெய்பீமிலும் போலீஸார் அடிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்தக் காட்சிகள் எல்லாம் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அடிவாங்கும் கோணத்தில் இருப்பதால், இரக்க உணர்வைத் தரும். ஆனால் இந்த சீரீஸில் போலீஸார் குற்றவாளிகளை அடிக்கும் காட்சிகள் எல்லாம் போலீஸ் அடிக்கும் கோணத்தில் இருக்கும். குறிப்பாகத் தண்ணீரில் சாக்கை முக்கிக் காலில் சுற்றி வைத்து கம்பியால் கால் எலும்பை உடைப்பதும். உடைத்த பின் wall jump எனக் கம்ப்ளைண்டில் எழுதுவதும் போகிற போக்கில் நடக்கும்.
பிள்ளைகள் சிலர், ‘லாக்கப்பின்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்கள்’ எனக் கைகளில் மாவுக் கட்டு போட்டு, செய்திகளில் வருவதைப் பார்த்திருப்போம். அவர்கள் இப்படித்தான் பாத்ரூமில் வழுக்கி விழுகிறார்கள் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது. சுந்தரச் சோழனும் புரஃபஸரும் போலீஸாரின் அடியைத் தாங்க
முடியாமல் கொலையை நாங்கள்தான் செய்தோம் என ஒப்புக்கொண்டுவிட்டு, “அடி தாங்க முடியல. இங்க கொல பண்ணோம்னு சொல்லிட்டு கோர்ட்ல கொல செய்யலன்னு சொல்லச் சொன்னாங்க” எனப் போலீஸாரிடம் சொல்வது நடைமுறை எதார்த்தம். வசனங்கள் பல அருமையாக இருக்கின்றன. ஓரிடத்தில் பிணத்தின் தலை தொலைந்துபோகும். வெளியில் தெரியாமல் இருப்பதற்காக டாக்டருக்கு லஞ்சம் கொடுப்பார்கள். வெறும் வாளியில் பிணத்தின் தலை இருப்பதுபோல அவரிடம் கொடுத்து அனுப்புவார்கள். அதைக் கொடுக்கும்போது இன்ஸ்பெக்டரிடம், “இதுல தொட எலும்பு இருக்கு. அதுல தலை இருக்கு, இவருக்குக் கவர் குடுத்தாச்சு” என்பார் கருப்பு. அந்த இடத்தில் அந்த வசனம் அவ்வளவு அழகாக இருக்கும்.
சிறிய நகரத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேசன் என்றால் அது ஜாதியிலிருந்து தப்பாது என்பது இயல்புதானே. போலீஸ் குற்றவாளிகளிடம் ஜாதி பார்ப்பதும், குற்றவாளிகள் போலீஸை ஜாதியை வைத்து எடைபோடுவதும் வழக்கம். “சாதி சண்டையில உன் பேரு இருக்கு” என சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்துக் குற்றம் சாட்டுவதும், இன்ஸ்பெக்டர் ‘‘அவுங்க ஆளுதான, பரிதியே பாக்கட்டும்” எனக் குற்ற விசாரணையை இன்ஸ்பெக்டரிடம் கொடுக்காமல் சப்-இன்ஸ்பெக்டரின் கையில் கொடுப்பதும், “செங்குட்டுவன் தாய்மாமன் சுந்தரச் சோழன் கம்யூனிட்டி பார்க்குற ஆள். செங்குட்டுவன் கம்யூனிட்டி பாக்குற ஆள் இல்ல. எம்.எல்.ஏ. தங்கைக்குத் தனித் தட்டில் சோறு போட்டிருக்கிறார்கள்” என்று ஜாதியைத் தொடக்கப் புள்ளியாக வைத்துக் குற்ற விசாரணையை ஆரம்பிப்பதும் எனத் தமிழகத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் ஜாதியப் பார்வைகளை இயக்குநர் ஓரளவு காட்டுகிறார்.
ஓரிடத்தில் இறந்துபோன ஒருவன் ரோஸ் கலர் கயிறு கட்டியிருக்கிறான், “அவன் எங்க ஆளு” என அந்த ஜாதி ஆட்கள் லாரியில் வருவதும், அவன் பச்சைக் கலர் கயிறு கட்டியிருக்கிறான், “அவன் எங்க ஆளு” என இன்னொரு ஜாதி ஆட்கள் லாரி நிறைய வருவதும் அழகான Satire. ஆனால் இறந்து டி-கம்போஸ் ஆன பாடியில் கயிறு மட்டும் நிறம் மாறாமல் இருக்குமா? லாஜிக்கை மீறி யோசித்திருக்கிறார்கள். இப்படிச் சின்ன விசயங்களில் மட்டுமல்லாது கதையின் முக்கியமான இடத்திலும் லாஜிக் பார்க்காமல் போய்க்கொண்டே இருக்கிறார்கள். எட்டுத் தொடர் கொலைகள் செய்தவன், போலீஸ் ஸ்டேசனில் சாதாரணமாக எடுபிடி செய்துகொண்டிருக்கும் ஓர் ஆள் என்பதுவரை சரி. அவன் ஏன் அப்படிச் செய்தான் என ரிவீல் பண்ணுமிடத்தில் மனைவியைப் பயன்படுத்தி பத்து
இருபது பேரிடம் மிரட்டிப் பணம் பறித்தான் என வரும் காட்சிகளும், புதையல் என்று ஏமாற்றி எட்டுப்பேரைக் கொன்றதாகச் சொல்வதும் லாஜிக் இல்லாத விசயங்கள். ஆனாலும் ஒவ்வொரு கொலையையும் செய்ததை கிச்சா ஒப்புக்கொள்ளும்போது சப்-இன்ஸ்பெக்டர் உள்பட போலீஸ் ஸ்டேசனே அதிர்வது லாஜிக் மறந்து ரசிக்க முடிகிற சுவையான காட்சிகள்.
இப்படி நிறைய நல்ல விசயங்கள் இருந்தாலும், இந்த சீரீஸ் நிறைவான தொடராக மனத்தில் பதியாமல் கடந்து போகிறது. அதற்கு என்ன காரணம்? தமிழ் வெப் தொடர்களில் கெட்ட வார்த்தைகளைத் அப்படியே சொல்கிறார்கள். கூடிய விரைவில் நிர்வாணக் காட்சிகளை வைத்துவிடுவார்கள். இதனாலெல்லாம் நாம் சர்வதேச தரத்தை அடைந்துவிட முடியாது. வெப் சீரீஸுக்குள் நாம் என்ன அரசியல் நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பது முக்கியம். அயல்நாட்டு வெப் தொடர்களில் மக்கள் சார்ந்த இடதுசாரி அரசியலைத் தங்கள் கதைகளுக்குள் அழகாகப் பொதித்து வைக்கிறார்கள். இந்தி சீரீஸ்களில் வலதுசாரி அரசியலை அப்பட்டமாக ஆதரிக்கிறார்கள். ஆனால் தமிழ் சீரீஸ்களில் மட்டும் அரசியல் பார்வையே இல்லாமல் கடந்து போகிறார்கள். அதனால்தான், இந்த சீரீஸ் ஒரு போலீஸ் ஸ்டேசன், எட்டுக் கொலை என்பதைத் தாண்டிப் போகமுடியாமல் திண்டாடுகிறது. நடிகர் பார்த்திபன் ஒரு படத்தில், அரசியல் காரணம் என்னவென்றே சொல்லாமல், தியேட்டரில் வெடிகுண்டு வைத்த கதையைக் காட்டியதுபோல நோக்கமே இல்லாமல் கொலை செய்யும் கதையாக இந்த வெப் சீரீஸ் முடிந்து போகிறது. விலங்கு இதுவரை தமிழில் வந்த வெப் தொடர்களில் ஓரளவு தரமான வெப் தொடர்தான். ஆனால் நிறைவான வெப் தொடரின் வருகைக்காகத் தமிழ் நிலம் இன்னமும் காத்துக்கொண்டுதான் இருக்கிறது!