உலக சரித்திரத்தில், எந்த தேசத்திலும் எந்தக் கலைஞனுக்கும் நடந்திருக்க முடியாத பெருங் கொடுமை அது. ஒருவேளை, பாராகவனைத் தவிர இன்னொருவருக்கு அது நடந்திருக்குமானால் மிக நிச்சயமாக அந்நபரை அவரது மனைவியானவர் படுகொலை செய்திருப்பார். ஆகக் குறைந்த பட்சம், விவாகரத்தாவது செய்திருப்பார். சுற்றி வளைத்து என்ன ஆகப்போகிறது? சம்பவம் இவ்வாறாக அன்று நடந்தேறியது:-
குருவின் தலமான ஆலங்குடிக்குத் தனது மனைவி மகளுடன் பாராகவன் போய்ச் சேர்ந்தபோது நேரம் சரியாகப் பதினொன்றே கால். தரையில் கால் வைத்தால், பாதம் பப்படமாகிவிடும் அளவுக்கு வெயில். தவிரவும் கூட்டம், கசகசப்பு. சரி, குரு தன்னை மட்டும் சோதிப்பதில்லை; நாட்டில் நிறையப் பேர் சிக்கல் சிங்காரவேலர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று பாராகவன் சிறிது மகிழ்ச்சி கொண்ட தருணத்தில்தான்
அழைத்தவர், ஓர் இயக்குநர்.
‘குரு, வீட்ல இருக்கிங்களா?’ என்று ஆரம்பித்தார்.
குரு தன் வீட்டில் அடக்க ஒடுக்கமாக இருந்திருந்தால் அவன் ஏன் இப்படி வேகாத வெயிலில் நாலு மாவட்டம் தாண்டி வந்திருக்கப் போகிறான்? ஒன்றும் காட்டிக்கொள்ளாமல், ‘சொல்லுங்க’ என்றான். ‘ஒரு சின்னப் பிரச்னை. ——— இன்னிக்கு வரலை. போட்டிருந்த ஷெட்யூல்படி ஷூட் பண்ண முடியாது.’
‘அதுக்கு?’
‘ஒரே ஒரு சீன் மட்டும் புதுசா எழுதிக் குடுத் திங்கன்னா போதும். ஈவ்னிங் வரைக்கும் ஓடிரும்.’
ஒரு சீனானது மதியம் தொடங்கி, மாலை வரை ஓட வேண்டுமென்றால் குறைந்த பட்சம் அது அரைக் கிலோ எடை கொண்டதாக இருக்கவேண்டும். ஆலங்குடி அப்பனைத் தரிசித்துவிட்டுக் கும்பகோணம் ஓட்டல் அறைக்குத் திரும்பிய பிறகு எழுத ஆரம்பிப்பதென்றால் அதற்குள் மாலையில் பாதி வந்திருக்கும். என்ன செய்யலாம்?
‘கொஞ்சம் பாருங்க ப்ளீஸ். ஷூட்டிங் நிக்குதுன்னு தெரிஞ்சா ப்ரொட்யூசர் டென்சன் ஆயிருவாரு. ஒவ்வொரு பக்கமா அனுப்புங்க. நான் மேனேஜ் பண்ணிக்கறேன்.’
ஒவ்வொரு பக்கமாக அனுப்பினால் இயக்குநர் மேனேஜ் செய்து கொள்வார். ஆனால் மாலை வரை மேனேஜ் செய்யத் தேவையான ஆகக் குறைந்து முப்பது பக்கங்களை எழுதி முடிக்கும் வரை பாராகவனின் தர்ம பத்தினியை எப்படி மேனேஜ் செய்வது? வேறு ஏதாவது முன்னர் எழுதி எடுக்காதிருக்கும் காட்சி இருக்குமானால் அதை வைத்து சமாளிக்க முடியாதா என்று கேட்டுப் பார்த்தான். வழியில்லை என்று இயக்குநர் சொன்னார். கோயிலுக்கு வந்திருக்கிறேன் என்றும் சொன்னான். ஷூட்டிங் நிக்குது சார் என்று அவர் பதிலுக்குச் சொன்னார். இதை அந்தக் குறிப்பிட்ட நடிகையிடம் எடுத்துச் சொல்லிப் பேசிப் பார்க்கலாமே என்று சொல்ல நினைத்து, நிறுத்திக்கொண்டான். நாலு பைசாவுக்குப் பயனற்ற வெற்று உரையாடலாகத்தான் நீளும். அப்போதும் இறுதியில் அவன்தான் எழுதி அனுப்ப வேண்டியிருக்கும்.
எனவே வேறு வழியின்றி, தனது பத்தினி தெய் வத்தையே தாள் பணிந்தான். உலக வரலாற்றில் முதல் முறையாக அந்தச் சம்பவம் அன்று நடந்தது. ஆலங்குடி குரு பகவான் கோயில் வாசலில் ஒரு ஓரமாக, பிச்சைக்காரர்களுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் சமமாக உட்கார்ந்து, உணர்ச்சிகரமான ஒரு நீண்ட துவந்த யுத்தக் காட்சியை எழுதத் தொடங்கினான். கோயில் நடை சாத்தும் நேரம் நெருங்கியபோது அதே காட்சி அவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையே இன்னும் தத்ரூபமாக நடைபெற ஆரம்பித்தது.
ஒருவாறாக சமாளித்து எழுதி முடித்து அனுப்பி விட்டு கோயிலுக்குள் ஓடினான். ஆகச் சிறந்த சிவனடியார்கள்கூட அவ்வளவு பக்திப் பரவசம் பீறிட்டுக் கோயிலுக்குள் ஓட மாட்டார்கள். அன்றைக்கு மட்டும் அவன் கோயிலுக்குள்ளே செல்வதற்குள் நடை சாத்தியிருந்தால் அவன் கதை கந்தலாகியிருக்கும். சரி ஒழிகிறது, எல்லாம் குருவின் லீலை. குரு படுத்தும் பாடுகள் அனைத்தும் அவனது கோயில் வாசலில் எழுதிய காட்சியுடன் தீர்ந்துவிடும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.
அவன் நம்பிக்கை முற்றிலும் மோசம் போனது என்று சொல்லிவிட முடியாது. குரு சிறிது நல்லவரே ஆவார். அவரால் பாராகவனின் நோபல் பரிசு நாவலுக்குத் தான் உதவி செய்ய முடியவில்லையே தவிர வராத சம்பள பாக்கிகளில் ஒரு பகுதியை வரவழைத்துக் கொடுக்கவே செய்தார். அது அவனது உள்ளக் கொதிப்பில் குறிப்பிட்ட சதவீதத்தைத் தணித்தது. ஆனால் ஏக்கம் இல்லாமல் இல்லை. துக்கம் தீருவதாகவும் இல்லை. ஒரு நாவல். சந்தேகத்துக்கு இடமின்றி அது உலகத் தரமானது. இந்த உலகில் இன்னொருவனுக்கு நடந்திருக்கவே முடியாதது. முற்றிலும் சொந்த அனுபவம் சார்ந்தது. உட்கார்ந்து எழுத ஆரம்பித்தால் ஒரு வருடத்தில் எழுதி முடித்துவிட முடியும். ஆனால் ஒரு வருடம் சாப்பிடாமல் இருக்க முடியுமா?
ஒரு நாள் அவன் மனைவி நல்ல மூடில் இருந்தபோது கப்பென்று பிடித்துக்கொண்டு மேற்படி ஏக்கத்தைத் தகுந்த சொற்களில், சரியான தொனியில் வெளிப்படுத்தினான். அதாவது, வருமானம் முக்கியம். அந்தப் பொறுப்பும் கடமையும் அவனுக்கு இருக்கிறது. அதே சமயம் லட்சியம் என்ற ஒரு கிருமி புத்திக்குள் ஏறி உட்கார்ந்து ஆட்டிப் படைக்கிறது. அதை இறக்கி வைத்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும். ஒரு நோபல் பரிசு என்பது வெறும் இலக்கிய கௌரவம் மட்டுமல்ல. பதினொரு லட்சத்து நாற்பத்து ஐயாயிரம் அமெரிக்க டாலர்களை நிகர்த்த ஸ்வீடிஷ் கரன்சியை உள்ளடக்கியது. தவிரவும் பதினெட்டு காரட் தங்கத்தால் செய்த மெடல் ஒன்று கொடுப்பார்கள். அது தனியே சிலபல லட்சங்கள் மதிப்புக் கொண்டது. பாராகவன் படித்து வாங்க முடியாத ஒரு டிப்ளமோ சான்றிதழும் கிடைக்கும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் வாழ்வில் அதற்குப்பிறகு பத்திரிகை வேலை பார்த்தோ, சீரியல் எழுதியோ சீரழியவே அவசியம் இருக்காது. உலகம் முழுவதிலும் இருந்து பல்கலைக்கழகங்கள் கூப்பிட்டுக்கொண்டே இருக்கும். வாரம் ஒரு தேசத்துக்கு வருகை தரு பேராசிரியராகப் பறக்கலாம். (ப்றாண நாதி! மிக நிச்சயமாக உன்னை உடன் அழைத்துக்கொண்டுதான் செல்வேன்!) மாபெரும் சபைகளில் கால் வலிக்க வலிக்க நடந்து பழகலாம். காலக்கிரமத்தில் மண்டையைப் போட்டால் பிரதமர் முதல் முதல்வர் வரை வீடு தேடி வந்து அஞ்சலி செலுத்திவிட்டுப் போவார்கள். பாராகவன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார் என்று தொடங்கி தினத்தந்தியில் செய்திக் குறிப்பு வரும். உயிர்மை அட்டைப்படத்தில் ஒரு சிறிய போட்டோ வைத்து, உள்ளே மனுஷ்யப் புத்திரன் தலையங்கம் எழுதுவார்.
சரோஜ் நாராயண்சுவாமி செய்தி வாசிக்கும் தொனியில் பாராகவன் மேற்படி விவரங்களைத் தன் மனைவிக்குச் சொல்லிவிட்டு, ‘சரி வேலைய பாக்கப் போறேன்’ என்று எழுந்து சென்றான். அதாவது, ஒரு பெரும் ஏக்கம் இருக்கிறது. ஆனால் அதனை வெளிப் படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் எனக்குக் குடும்பம் முக்கியம். வருமானம் முக்கியம். லட்சியமெல்லாம் பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம்.
நியாயமாக நமது கதாநாயகன் சீரியலில் நடிக்கச் சென்றிருக்க வேண்டியவன். தவறி, எழுதப் போய் விட்டான். இருக்கட்டும். பிறகு நடந்ததைப் பாருங்கள்.
அவன் பேசிவிட்டுச் சென்ற பின்பு அவனது மனைவியானவள் நெடுநேரம் யோசித்தாள். நடுவே எட்டாம் நம்பர் வீட்டு அங்கிளாண்டி சிறிது நேரம் வந்து ஏதோ பேசிக்கொண்டிருந்ததைப் பாராகவன் தனது அறைக்குள் இருந்தவாறே கவனித்தான். அவன் உள்ளேதான் இருக்கிறானா என்று அங்கிள் கேட்டதும், தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிறான் என்று அவன் மனைவி பதில் சொன்னதும் காதில் விழுந்தது. எனவே அவன் தீவிரமாக எழுத ஆரம்பித்தான்.
சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பத்தினி தெய்வம் அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தது.
‘யோசிச்சேன். ஒண்ணு சொல்லவா?’
‘இரு. இந்த சீன முடிச்சிட்டு வந்திடுறேன்.’ ‘பரவால்ல. ஒரே நிமிஷம். சொல்லிட்டுப் போயிடுறேன்.’
‘சரி சொல்லு’ என்று அவன் லேப்டாப்பை மூடிவிட்டு நிமிர்ந்தான்.
‘உனக்கு எத்தன மாசமா சம்பளம் வரல?’
‘ஏன் கேக்கற? இப்ப ரெண்டு மாச பேமெண்ட் வந்திருச்சே.’
‘நான் அத கேக்கல. எத்தன மாசம் வராம இருந்தது?’
‘இருக்கும் ஒரு அஞ்சு மாசம்.’
‘அஞ்சு மாசமும் மூணு வேளை சாப்ட்டுகிட்டுத்தானே இருந்தோம்?’
‘அதனால?’
‘நாவலையே நினைச்சிக்கிட்டு எதுக்கு இத கட்டிக்கிட்டு அழறே? விட்டுட்டு அத எழுதித்தான் பாரேன்.’
பாராகவன் திகைத்துப் போனான். ‘நிஜமாவா சொல்ற’ என்று திரும்பத் திரும்பக் கேட்டு உறுதி செய்துகொண்டான்.
‘நானும் பாக்கறேன், கல்யாணம் ஆனதுலேருந்து இதையேதான் சொல்லிட்டிருக்க. ஒரு நாவல்தானே? எழுதினா நோபல் கன்ஃபர்மா வந்துடும் இல்ல?’
‘நோ டவுட்.’
‘நோபல் இல்லன்னா ஒரு ஞானபீடம், சாகித்ய அகடமியாவது தந்துருவாங்கல்ல?’
கலைமாமணியாவது வாங்கி அவள் காலடியில் சமர்ப்பித்தே தீருவது என்று அந்தக் கணம் வீரசபதம் செய்தான்.
‘அப்ப நோபல் வராதா?’
‘சேச்சே. சும்மா சொன்னேன். கண்டிப்பா நோபல் கிடைச்சிரும். ரொம்ப யுனிக் ப்ளாட். என்னைத் தவிர இன்னொருத்தனால எழுதவே முடியாத நாவல். முழுக்க முழுக்க சொந்த அனுபவம்.’
சில வினாடிகள் அமைதியாக யோசித்தாள். பிறகு, ‘சரி. அன்னிக்கு சொன்னதையே இப்பவும் சொல்றேன். கதைய எனக்கு சொல்லு. ஓகேன்னு தோணிச்சின்னா எஸ் சொல்லிடுவேன். அதுக்கப்பறம் நீ எழுதி முடிக்கற வரைக்கும் வீட்ட பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு. நிச்சயமா பைசா கேக்க மாட்டேன். எப்டியோ சமாளிச்சி குடும்பத்த நடத்தறேன். நீ கவலைப்பட வேண்டாம்.’
யாருக்குக் கிடைப்பாள் இப்படி ஒரு பெண்டாட்டி? பாராகவன் நியாயமாக அவள் காலில் விழுந்திருக்க வேண்டும். ஆனால் கவலையில் துவண்டு போனான்.
‘என்ன பதில் சொல்ல மாட்டேன்ற?’
‘இந்தக் கதைய மட்டும் கேக்காதயேன். எழுதிட்டு மொத்தமா கைல குடுத்துடுறேன்.’
‘அதெல்லாம் முடியாது. சொந்தக் கதைன்னுதானே சொன்ன? அப்ப சொல்றதுக்கு என்ன?’
சொன்னால் விவாகரத்து உறுதி என்பதை எப்படிச் சொல்ல முடியும்?