பாட்ரீட்சியா காவால்லி இத்தாலியக் கவிஞர். 1947இல் பிறந்தவர். தனது தலைமுறையைச் சேர்ந்த இத்தாலியக்கவிஞர்களில் மிக முக்கியமானவராகக் கொண்டாடப்படுகிறார். அவருடைய கவிதைகள் நிகழ் தருணத்தின் தீவிரத்தையும் எண்ணிறந்த சாத்தியங்களையும் புதுமையான படிமச் சேர்க்கைகளின் வழியாகச் சித்தரிப்பவை. காவால்லி ஷேக்ஸ்பியரையும் பிரெஞ்சு நாடக ஆசிரியர் மோலியரையும் இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்.
1
ஆனால் முதலில் நாம் நம்மை உருவாக்கும்
இந்தக் கடுமையான கஞ்சத்தனத்திலிருந்து
நம்மையே விடுவித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
காபியிடத்தின் மூலையில்
உள்ள ஒரு நாற்காலியில்
ஒரு குமாஸ்தாவின் ஆர்வத்தோடு
எனக்கு எதிரே இருக்கும்
நீலச்சுடர் தெறிக்கும் கண்கள்,
சாகசங்களிலும், ஆபத்தான
காரியங்களை செய்வதிலும்
பரிச்சயம் மிகுந்த கண்கள்,
என்னைக் குறிவைத்து
என் முகத்தில் சிவப்பேறச் செய்ய
முனையும்
அந்தத் துல்லியமான தருணத்தை
எதிர்பார்த்துக் காத்திருக்கும்படி
என்னை அமர வைத்திருக்கும்
இந்தக் கஞ்சத்தனத்திலிருந்து.
ஆனால் அந்தக் கண்களுக்கு
என் முகத்தின் சிவப்பு
என்னவோ கிடைக்கத்தான் போகிறது.
2
பின்னால் நின்றபடியே, தூரத்திலிருந்து,
கடந்து போகும் நேரத்தில்.
டாக்ஸி மீட்டர் ஓடிக் கொண்டிருக்க,
நான்
அவளைப் பார்த்துக் கொண்டிருப்பேன்,
அவள் தலை மயிரைப் பார்ப்பேன்,
என் கண்களுக்கு என்ன தெரியும்
என்று நினைக்கிறீர்கள்?
என் பிடிவாதம் மிக்க நாடக அரங்கம்,
இழுத்து மூடவே மூடாத திரைச்சீலை,
எனது எப்போதும் திறந்திருக்கும் நாடக அரங்கம்…
நிகழ்ச்சி தொடங்கியவுடன்
கிளம்பிவிடுவதுதான் நல்லது.
3
நீ எப்போதும் இப்படித்தான்
சொர்க்கத்தின் சந்தேகத்தைப் பரப்பும் விதமாக
வந்து சேர்கிறாய்.
சன்னலைத் திறப்பதற்கு முன்னால்
அறைக்குள் அலையும்
தீவிரம் குறைந்த மென்மையான வெளிச்சத்தாலும்
காற்றில் மிதக்கும் தூசுப் பந்துகளாலும்
பாடும் பறவைகளில் ஓயாத பாடலாலுமே
உன்னை அறிந்து கொள்கிறேன்.
அப்படியே பறவைகள் கத்தித் தொலையவில்லை
என்றாலும் வேறேதேனும் வழியில் உன்னை அறிந்திருப்பேன்
நீதான் உனது வித்தைகளை
எல்லா இடத்திலும் செல்லும்படி வைத்திருக்கிறாயே;
நீ உள்ளே வந்து நிற்கும்போது
நான் என் புலன்களை உன்னிடத்தில்
முற்றாக ஒப்படைத்து விடுகிறேன்.
மீண்டும் பரிச்சயமில்லாத வீடுகளில்
வசிக்கத் தொடங்குகிறேன்
நடைபெறாத சம்பவங்களைப் பற்றிய
ஏக்கத்தை உணர்ந்து கொள்கிறேன்.
உன் சுழல்வட்டப் பாதைகளைத் தாண்டி
என் முதுகில்
கண்டங்களையும் பருவகாலங்களையும்
தொங்க விடுகிறாய்
நான்
கோடைகாலத்தின் சுழல்கள்
ஆரம்பிக்கும்வரை
விமானங்கள் புறப்படும்
ஓடுபாதைத் தாழ்வாரமாகவும்
கூச்சல்களும், உருநிழற்படிமங்களும்
நிறைந்த சுவருமாகிறேன்
4
எனது கவிதைகள்
நிச்சயமாக உலகத்தை
மாற்றப் போவதில்லை
என்று யாரோ என்னிடம் சொன்னார்கள்.
ஆமாம், நானும்
அதைத்தான் சொல்கிறேன்
நிச்சயமாக எனது கவிதைகள்
உலத்தை மாற்றப் போவதில்லை.
5
ஜலதோஷத்தைப் போலவே
காதலும் திடீரென்று
மீண்டும் தொற்றிக் கொள்கிறது.
ஆனால் அது ஜலதோஷமல்ல.
இது தலையிலிருந்து சிந்தனையை உருவி
இதயத்துக்குள் அதனைத் தேனாக மாற்றும்
தலைவலி.
ஒருவேளை உயரத்திலிருந்து என்மீது
கொட்டி எனது உடம்பை
வெதுவெதுப்பான திரவமாக மாற்றும்
சூப்பாகக்கூட அது இருந்திருக்கக் கூடும்:
மிக தூரத்திலிருக்கும்
வேறொரு மையத்தை நோக்கி
மொத்தமும் நகர்த்தப்படும்
திரவமாக மாறியிருக்கும்
என் உடம்பை.
6
நேற்று என்னையே ஒரு மரமாகக்
கற்பனை செய்து கொண்டிருந்தது
எவ்வளவு இனிமையாக இருந்தது!
கிட்டத்தட்ட ஒரே இடத்தில் அசையாமல்
சர்வ அதிகாரங்களையும் உள்ளடக்கியவளாக
அவசரமே இல்லாத சுதந்திரத்தோடு
வளர்ந்து வந்தேன்.
தென்றலையும் வாடையையும் சமமாக
ஏற்றுக் கொண்டேன்.
மெல்லிய தீண்டல்கள் பலத்த அடிகள்
என்று மாறி மாறி வந்தாலும்கூட
அவற்றுக்கிடையில் எந்தவிதமான
வேற்றுமையையும் நான் காணவில்லை.
எனக்கு நானே எந்த விதத்திலும்
மகிழ்ச்சியாகவோ துன்பமாகவோ
இருக்கவில்லை.
என் மையத்திலிருந்து என்னையே
பெயர்த்தெடுக்க முடியாதவளாய் நின்றிருந்தேன்,
முடிவுகள் இல்லாமல்,
நகர்வுகள் இல்லாமல்.
நான் அசைந்தால் அது காற்றினால்
நடந்தேறிய ஒன்றாகவே இருந்தது.
7
இல்லை, காதல் என்பது
நிச்சயமாக ஓர் உணர்ச்சியல்ல,
நாம் எப்படிக் கற்றுக் கொள்கிறோம்
என்ற ரகசியத்தைக் குறித்த இடையறாத
விசாரணை, அது.
நான் உன் முகத்தை வாங்கி
அதை இறுகப் பிடித்துக் கொள்கிறேன்
ஆனால் அடுத்த நொடியே
அதைத் தொலைத்து, அதனை
மீண்டும் திரும்பப் பெறுகிறேன்.
கூட்டியும் கழித்தும், அதில்
ஏற்படும் ஒவ்வொரு சிறிய மாற்றத்தையும்
பதிவு செய்து கொள்கிறேன்:
எப்போது வேண்டுமானாலும்
விழுந்து விடலாம் என்பதைப்போல்
அந்தரத்தில் கட்டிய கயிற்றில்
நடக்கும் ஓர் எண்ணமாக –
ஆனால் காதல்
எதையும் விழுந்து விடாமல்
இறுகப் பிடித்துக் கொள்வதில்லை.
8
இம்முறையும் நான் சன்னல்களின் பின்னாலிருந்து
ஒரு கூரைக்கும் அடுத்த கூரைக்கும் இடையிலுள்ள
இடைவெளியில் கண்ணுக்குத் தோன்றி
மிகப் பெரிய விளக்கத்தைத் தருவதுபோல்
ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லியும்
தூரங்களின் அனுமானத்தையும் சேர்த்து, பார்வையை
எல்லா எல்லைகளையும் தாண்டி அழைத்துச் சென்றும்
எடைகளே இல்லாத நகர்வின் ஈர்ப்புள்ள கிளர்ச்சியாகவும்
பயமுறுத்தலாகவும் இருக்கும்
இந்த நீலத்தை
மீண்டும் வெளிச்சத்தை
லஞ்சமாய்க் கொடுத்து
என்னை மறுபடியும் ஏமாற்ற
அனுமதிக்கப் போவதில்லை.
9
உன் மூக்கு
முழுவதும் அடைத்திருந்தால்
எனக்கென்ன?
நான் வீட்டைச் சுத்தம்
செய்ய வேண்டும்.
writersithurajponraj@gmail.com