அன்புள்ள பிரதாப் போத்தன்,

எனக்கு பத்து வயதிருக்கும்போதுதான் நீங்கள் நடித்த முதல் திரைப்படம் ‘ஆரவம்’ வெளியானது. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்த அதிசயப் படத்தைப் பார்த்தேன். ஆனால் தங்களது இரண்டாவது திரைப்படம் ‘தகரா’ வெளியான காலத்திலேயே பார்த்து விட்டேன். வயது வந்தவர்களுக்கு மட்டுமான அப்படத்தைப் பார்க்கும்போது எனக்குப் பதினோரு வயது! உங்களிடம் ஒருமுறை இதைச் சொன்னபோது ‘பதினைந்து வயது மட்டுமேயிருந்த அப்படத்தின் கதாநாயகிசுரேகாவுக்கே படம் பார்க்க அனுமதி கிடைத்திருக்காதே’ என்று அந்தப் பல்தெரியாச் சிரிப்பைச் சிரித்தீர்கள். அக்காலகட்டத்தின் ஓர் ஒழுக்க நடுக்கமாகவே மாறிய சுரேகாவின் காமக்கிளரச் சியூட்டும் காட்சிகளை விட நீங்கள் நடித்த மூளை வளர்ச்சி குன்றிய, அழுக்கனான கிராமத்து இளைஞன் தான் என்னைக் கவர்ந்தான் என்று உங்களிடம் சொன்ன போது ‘அது பொய்’ என்று சொல்லி மீண்டும் சிரித்தீர்கள்.

அப்பாத்திரத்தில் வந்தது நீங்களா என்று வியக்க வைக்குமளவில் இருந்தது, அதற்கு ஓரிரு மாதங்களில் வெளியான உங்களது முதல் தமிழ்ப்படம் ‘அழியாத கோலங்க’ளின் பாத்திரம். அவன் ஒரு நவநாகரீக இளைஞன். நீலவண்ண டெனிம் ஜீன்ஸ், பெல் பாட்டம் பேண்ட், தொங்கும் காலரும் பல பைகளும் கொண்ட கட்டம்போட்ட சட்டை என்று ஆடைகளில் அசத்தியதோடு அடக்கமான நடிப்பையும் வெளிப்படுத்தினீர்கள். அந்த அடர்ந்த முடியும் ஒயிலான கண்ணாடியும் உங்களுக்குத் தோற்றப் பொலிவை அளித்தது. எனது ஆதர்ச இசையமைப்பாளர் சலில் சவுதரியின் ‘பூ வண்ணம் போல நெஞ்சம்’ பாடலை நடித்து வெளிப்படுத்தியவர் நீங்கள் என்பது உங்கள் மீதான எனது அபிமானத்தை மேலும் வலுவாக்கியது.

நீங்கள் நடித்துப் பிரமாதப்படுத்திய பாடல்கள் ஒன்றா இரண்டா? அதுவும் அந்தக் கிட்டாரைக் கையில் வைத்துக்கொண்டு! மாமேதை மலேசியா வாசுதேவன் அலாதியான உணர்வாற்றலோடு பாடிய ‘கோடை காலக் காற்றே’ இளையராஜாவின் ஆகச்சிறந்த பாடல்களில் ஒன்றல்லவா? பன்னீர் புஷ்பங்கள் படத்தில் கையில் கிட்டாரோடு ஓடும் பேருந்தில் அமர்ந்து அப்பாடலை நீங்கள் பாடிய விதம் யாரால் மறக்க முடியும்? இன்னொரு கிட்டாரோடு மூடுபனியில் ஷோபாவைப் பார்த்து ‘என் இனிய பொன் நிலாவே’ என்று காதலித்தவரும் நீங்களே. ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ படத்தில் ‘ஏரியிலே எலந்த மரம்’ என்று பிள்ளைகளுக்கு கிட்டாரோடு பாட்டு சொல்லிக்கொடுத்த நீங்கள் ‘ஈரவிழிக் காவியங்கள்’ படத்தில் ராதிகா உதடசைத்த ஜென்ஸியின் குரலுக்கு இளையராஜாவின் குரலில் ‘என் கானம் இன்று அரங்கேறும்’ என்று கிட்டார் இசைத்து உருகினீர்கள். மதுமலர் படத்தில் கங்கை அமரன் இசையில் ‘வானமே மழை மேகமே’ என்று சுஹாஸினியோடு குதூகலாமாக கிட்டார் இல்லாமலேயே கொஞ்சினீர்கள்.

அகலமான சட்டவடிவம் கொண்ட பெரிய கண்ணாடி, அடர்ந்து நீண்ட முடி, மயங்கி ஒளிரும் கண்கள், வாய் முழுவதும் திறந்து சிரித்தாலும் பற்கள் தெரியாத குழந்தைச் சிரிப்பு, தனித்துவமான உடல் மொழியும் நடிப்புப் பாணியும் என உங்களுக்கென்று தனித்த ஓர் அடையாளத்தோடு திரைவலம் வந்தீர்கள். திரைத் துறையில் காலூன்றியதன் இரண்டாவது ஆண்டிலேயே தமிழிலும் மலையாளத்திலுமாக 12 படங்களில் கதாநாயகனாகவோ இணைக் காதாநாயகனாகவோ நடித்தீர்கள். தமிழிலும் மலையாளத்திலும் ஒரே வீச்சோடு சோபித்த நடிகர்கள் இன்றளவும் உங்களைப்போல் வேறு யாருமில்லை.

தமிழில் பாலு மகேந்திராவின் மூடுபனி, பாலசந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு, மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே எனும் அழியாப்புகழ் படங்களும் மலை யாளத்தில் பரதனின் சாமரம், லாரி போன்ற உன்னதமான படைப்புகளும் உங்களுக்குக் கிடைத்தன. சாமரத்தில் நவீன ஆடைகளில் மின்னிக்கொண்டு ஆசிரையையே காதலிக்கும் கல்லூரி மாணவனாக நடித்த நீங்கள் லாரி படத்தில் அழுக்கும் மசகும் படிந்து பீடி குடித்துத் திரியும் சரக்கு லாரி கிளீனராக முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில் அனாயாசமாக நடித்தீர்கள்.

ஒரு பிரபல நடிகரான பின்னர், முன்பு நாகேஷ் நாயகனாக நடித்து தமிழில் பெருவெற்றிபெற்ற ‘சர்வர் சுந்தரம்’ படத்தை ‘பப்பு’ எனும் தலைப்போடு உங்கள் பெரிய அண்ணன் ஹரி போத்தன் மலையாளத்தில் தயாரித்தபோது அதில் கதாநாயானாக நடித்தீர்கள். வணிக வெற்றிபெறவில்லை என்றாலும் கே ஜே ஜாய் இசையமைத்த அசாத்தியமான பாடல்களுக்காகவும் முன்மாதிரிகளற்ற உங்களது நடிப்பிற்காகவும் இன்றும் அப்படம் பேசப்படுகிறது.

மலையாள சினிமாவின் முதல் ஹிப்பி ஹீரோ என்று அறியப்பட்டீர்கள். அங்கே பரதன், பத்மராஜன், மோகன் போன்ற புது அலை இயக்குநர்களின் பிரிய நடிகராக இருந்தீர்கள். ஐ வி சசி போன்ற வணிக இயக்குநர்களோடும் சேர்ந்தியங்கினீர்கள். தமிழின் நவீன இயக்குநர்களாகயிருந்த பாலச்சந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா ஆகியோரின் படங்களில் மட்டுமல்லாது விசு, பி வாசு, ஆர் சுந்தரராஜன் போன்றவர்களுடனெல்லாம் பணியாற்றினீர்கள். தாசரி நாராயண ராவ், மதுசூதன் ராவ் போன்ற இயக்குநர்களுக்காக தெலுங்குப் படங்களிலும் நடித்தீர்கள்.

ஆண்டில் பத்திற்கும் மேல் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் காலத்தில் முதன்முதலாக ஒரு படத்தை எழுதி இயக்கினீர்கள். ஒரு கலைப்படத்தின் தன்மைகள் கொண்ட ‘மீண்டும் ஒரு காதல் கதை’ (1984). மனவளர்ச்சி குன்றிய ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலும் காமமும் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறப்பதில் முடிகிறது. பிரசவத்தில் தாய் இறந்து போகிறாள். குழந்தையை கதறி அழகும் அதன் தந்தையிடமிருந்து சமூகம் பிரித்துக் கொண்டுபோகிறது. இத்தகைய கதைக்களத்துடன் அமெரிக்காவில் ஐ ஆம் சாம் (2001) போன்ற படங்கள் வருவதற்குச்சில பதிற்றாண்டுகளுக்கு முன்பே அப்படத்தை எழுதி, இயக்கி நடித்தீர்கள். படம் வணிகத் தோல்வி என்றாலும் அதற்கு அரங்கேற்ற இயக்குநருக்கான தேசிய விருதை வென்றீர்கள்.

‘ரிதுபேதம்’தான் நீங்கள் இயக்கிய இரண்டாவது படம். கலைப்படங்களுக்கு நெருக்கமான ஒரு மலையாளப் படம். கதை, திரைக்கதை, வசனம் எம்டிவாசுதேவன் நாயர். நாயர்களின் நாட்டு வாழ்க்கையும் குடும்பச் சிக்கல்களும் அந்தரங்கங்களும் ஒரு கொலையில் முடியும் கதையைச் சொன்ன ரிதுபேதம் உங்களுக்கு சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது உள்படப் பல விருதுகளைத் தந்தது. வணிக ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது.

அடுத்து ‘டெய்சி’ எனும் மலையாளப் படத்தை எழுதி இயக்கினீர்கள். மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் பதின்பருவக் காதலை மையமாக்கிய அப்படத்தை நீங்கள் படித்த ஊட்டி லவ்டேல் பள்ளியில் படமாக்கினீர்கள். வணிகரீதியாகவும் கலைரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. முன்பு உங்களுடன் அழியாத கோலங்கள், வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம் படங்களில் நடித்த கமல்ஹாசன் இப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்தார்.

கமல்ஹாசனைப்பற்றிச் சொல்லும்போது ஒரு பிரதாப் போத்தனாக மாறத்தான் அவர் ஆசைப்பட்டார் என்றும் ஆனால் நீங்களோ ஒரு கமல்ஹாசனாக மாற ஆசைப்பட்டார் என்றும் சினிமா வட்டாரங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். செவ்விலக்கியங்கள் முதல் சமகால வெகுஜென இலக்கியங்கள் வரையிலான உங்களது பரந்த வாசிப்பு, உங்களது ஆங்கிலப் புலமை, நீங்கள் நடிக்கும் பாத்திரங்களின் மாறுபட்ட தன்மை, ஓர் இயக்குநராக உங்களுக்கு இருக்கும் ஆளுமை ஆகியவை தனக்கும் வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்பியபோது அவரது பெரும் புகழ், மக்கள் செல்வாக்கு, நடனம் மற்றும் சண்டைக் காட்சி ஆளுமை, பன்மொழித் திறன் ஆகியவை உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்பிநீர்களாம். குறிப்பாக பன்மொழித்திறன்.

உங்களது தாய்மொழியான மலையாளத்தையோ ஐந்து வயதிலிருந்தே நீங்கள் வாழ்ந்த தமிழ்நாட்டின் மொழியையோ திரைக்கு வெளியே உங்களால் சரிவரப் பயன்படுத்தவோ பேசவோ முடிந்ததில்லையே! ஆங்கிலம்தான் என்றைக்குமே உங்களது விருப்ப மொழியாக இருந்தது. உங்கள் திரைவசன உச்சரிப்பிலும் அன்றாடப் பேச்சுகளிலும் ஆங்கில வாடையே மேலோங்கியது. இதனால் துல்லியமான தமிழ், மலையாள உச்சரிப்புத் தேவைப்படும் பாத்திரங்களை நீங்கள் நடித்தபோது உங்களுக்காகக் குரல் கொடுக்க வேறு கலைஞர்களைக் கொண்டுவந்தார்கள். அதை ஒருபோதும் நீங்கள் ஏற்றுக்கொண்டதில்லை என்றாலும்.

கலையம்சம் கொண்ட படங்களை இயக்குவது குறைத்துவிட்டு பெரிய வணிக வெற்றிப் படங்களை நோக்கிப் பயணப்பட ஆரம்பித்தீர்கள். ஒரு நட்சத்திர நடிகராக வலம்வந்துகொண்டிருந்த சத்தியராஜை வைத்து ‘ஜீவா’ எனும் படத்தை இயக்கினீர்கள். முதல் படத்திற்கு பிறகு, தானே இயக்கிய எந்தப் படத்திலும் நடிக்காத நீங்கள் ஜீவா படத்தின் ஒரு பாடல் காட்சியில் மாயாஜாலக்காரனாகப் பாடியாடினீர்கள். அனல் பறக்கும் அடிதடிகள், மின்னல் வேகக் காரோட்டங்கள், துப்பாக்கிச் சூடுகள், கங்கை அமரனின் கலகலப்பான இசையில் ஆட்டம் பாட்டம், அமலாவின் அரைநிர்வாண நீச்சலுடைக் காட்சி, செவன்த் இயர் இட்ச் ஹாலிவுட் படத்தில் மர்லின் மன்றோவின் பாவாடை காற்றில் பறந்து முக்கால் நிர்வாணமாக நிற்கும் காட்சியின் தழுவல் சில்க் ஸ்மிதாவை வைத்து என ஒரே மசாலா தான் ஜீவா. சில்க் ஸ்மிதாவை இவ்வளவு கவர்ச்சியாகவும் அழகாகவும் காட்டிய இன்னொரு படம் இல்லை என்றே சொல்வேன். சுவையான அந்த மசாலாக் கலவையை மக்கள் வெற்றிபெறச் செய்தனர்.

அடுத்த ஆண்டு நேரடியாக ‘வெற்றிவிழா’விற்கு வந்து இறங்கினீர்கள். உங்கள் சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய வணிக வெற்றி அப்படம். கமல்ஹாசனின் படவரிசையிலும் அது ஒரு மாபெரும் வெற்றி. சலீம் கவுஸ் எனும் அதிசய நடிகரை அப்படத்தில் அறிமுகம் செய்தீர்கள். இளையராஜா இசையமைத்த பாடல்கள் வணிக சாதனை படைத்து அவரது முதல் ‘பிளேட்டினம் டிஸ்க்’ ஆக மாறியது. தொடர்ந்து ‘மை டியர் மார்த்தாண்டன்’ எனும் ஆடல் பாடல் படத்தை இயக்கினீர்கள். அதன் பாடல்களும் ஒளிப்பதிவும் கவனத்தை ஈர்த்தன. நீங்கள் இயக்கிய எல்லாப் படங்களிலும் ஒளிப்பதிவும் இசையும் தரமானவையாகவே இருந்தன. அதேபோல் வணிகப்படங்களையும் கலையம்சம் கொண்ட படங்களையும் ஒரே ஆளுமையோடு இயக்கிய உங்களைப்போன்ற இயக்குநர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் இந்தியாவில்?

தமிழைவிட அதிகமான சந்தை மதிப்பிருக்கும் தெலுங்கில் அப்போதைய உச்ச நட்சத்திரமான நாகார் ஜுனாவை வைத்து ‘சைதன்யா’ எனும் படத்தை எழுதி இயக்கினீர்கள். பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாஸ ராவை அதில் வசனமெழுத வைத்தீர்கள். இயக்குநரும் எழுத்தாளரும் நடிகருமாகயிருந்த கிரீஷ் கர்ணாடை அப்படத்தின் நடிகராக தெலுங்கில் அறிமுகம் செய்தீர்கள். பிற்பாடு சிறந்த ஒளிப்பதிவாளராக அறியப்பட்ட ராஜீவ் மேனனை அப்படம் வழியாக திரையுலகிற்குக் கொண்டுவந்தீர்கள். நெடுந்தூர கார் ஓட்டப் போட்டியை மையமாகக்கொண்ட சைதன்யா வணிக வெற்றி பெறவில்லை என்றாலும் பிற்பாடு வந்த பல தெலுங்கு மசாலாப் படங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. அதற்கடுத்து நீங்கள் இயக்கிய மகுடம், ஆத்மா எனும் தமிழ்ப் படங்களில் ஆத்மா இருக்கவில்லை என்று விமர்சித்தார்கள்.

நெப்போலியனைக் கதாநாயகனாக்கி 1993ல் நீங்கள் இயக்கிய ‘சீவலப்பேரி பாண்டி’ ஒரு மாபெரும் வணிக வெற்றியாக அமைந்தது. நீங்கள் இயக்கிய ஒரே கிராமத்துக் கதையும் இதுவே. இசையமைப்பாளர் ஆதித்யன். நான் பணியாற்றிக்கொண்டிருந்த இசை நிறுவனம்தான் அப்படத்தின் பாடல்களை வெளியிட்டது. ஒயிலா பாடும் பாட்டிலே, கெழக்கு செவக்கையிலே போன்ற பாடல்கள் புகழ் பெற்று எங்கள் நிறுவனத்திற்கு லாபத்தை ஈட்டித்தந்தது.

அடுத்து நீங்கள் இயக்கிய தமிழ் படம் லக்கி மேன். அது முன்பு பெரும் வணிக வெற்றி பெற்றிருந்த யமலீலா எனும் தெலுங்கு படத்தின் ரீ மேக். நீங்கள் இயக்கிய இந்த ஒரே ரீ மேக் படமும் தோல்வியைத் தழுவியது. அதன் பாடல்களையும் நாங்கள் தாம் வெளியிட்டோம். அக்காலத்தில் ஒருநாள் முதல் முறையாக எங்கள் அலுவலகத்தில் உங்களைச் சந்தித்தேன். எனது வேலைச் சூழல் காரணமாக ஒரு வெறும் கைக் குலுக்கலோடு அச்சந்திப்பு முடிந்து போனது.

பத்தாண்டுகள் இடைவேளைக்கு பின் மலையாளத்தில் மீண்டும் ஒரு படத்தை இயக்கினீர்கள். முக்கியப் பாத்திரங்களாக நடித்தவர்கள் சிவாஜி கணேசன் மற்றும் மோஹன்லால். சிவாஜி கணேசன் அதற்கு முன்பு இரண்டே மலையாளப் படங்களில் தான் நடித்திருந்தார். ஆனால் அந்த இரண்டுமே கிட்டத்தட்ட கௌரவ வேடங்கள். ஆகையால் சிவாஜி கணேசனை முழுநீள வேடத்தில் மலையாளப் படத்தில் நடிக்க வைத்ததன் பெருமை உங்களுக்கு மட்டுமே சேரும். ‘ஒரு யாத்ராமொழி’ எனும் அந்தப்படத்தில் இளையராஜாவின் இசையில் எம் எஸ் விசுவநாதன் ஒரு பாடலைப் பாடியிருந்தார். கலைரீதியான பாராட்டு களும் நல்ல வணிக வெற்றியும் பெற்ற அப்படம்தான் நீங்கள் இயக்கிய இறுதித் திரைப்படம். அப்போது உங்களுக்கு 45 வயது.

கேரளத்தின் திருவனந்தபுரம் பகுதியில் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தின் ஐந்து குழந்தைகளில் இளையவராகப் பிறந்த உங்களை வெறும் ஐந்து வயதிருக்கும்போதே ஊட்டியில் உள்ள லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் சேர்த்து விட்டார்கள். தாய் தந்தையினரின், குடும்பத்தினரின் அன்பு துளியளவும் கிடைக்காமல் 17 வயது வரைக்கும் அப்பள்ளியின் மாணவர் இல்லத்திலேயே வாழ்ந்தீர்கள். ஆண்டிற்கு ஓரிருமுறை வந்து செல்லும் விருந்தாளியாக மட்டுமே உங்கள் அப்பாவை அறிந்தீர்கள். உங்களது 15 வயதில் அவர் இறந்துபோனார். பல வழக்குகளில் சிக்கி உங்கள் குடும்பம் சொத்துகள் அனைத்தையும் இழந்தது. அதோடு கிட்டத்தட்ட ஓர் ஏழையாகவே மாறினீர்கள்.

குறைவான மதிப்பெண்களோடு பள்ளியிலிருந்து வெளியேறி சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தீர்கள். அங்கேயும் படிப்பில் நாட்டமில்லாமல் இலக்கிய வாசிப்பு, நாடக நடிப்பு எனக் காலத்தைக் கழித்தீர்கள். இதற்கிடையே ஒரு திரைப்படத் தயாரிப்பாள
ராக மாறியிருந்த உங்களை விட பன்னிரெண்டு வயதிற்கு மூத்த பெரியண்ணனிடம் திரைப்படங்களில் நடிக்க உதவும்படியாக மன்றாடியும் அவர் அதை மறுத்து விட்டார். மட்டுமல்லாது உங்களுக்கு யாருமே வாய்ப்பு தரக்கூடாது என்று மற்றவர்களிடமும் சொல்லி விட்டார். சொந்த அண்ணனால் “உனது மூஞ்சி முகரைக் கட்டைக்குத் திரை நடிப்பு கேட்குதா?” என்று நகையாடப்பட்ட நீங்கள் பிற்பாடு இந்தியாவின் மிக அழகான பத்து ஆண்களில் ஒருவராக டெபொனேர் இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்!

மெட்ராஸ் பிளேயர்ஸ் எனும் நாடகக் குழுவின் நாடகத்தில் உங்களை அடையாளம் கண்ட இயக்குநர் பரதன் உங்களுக்கு முதல் படவாய்ப்பினைத் தந்தார். அவருக்குபின்னால் பல நாள்கள் சுற்றித் திரிந்து ‘ஐஸ் வைத்து’ தான் இரண்டாவது படமான தகராவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றதாக நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். அதே காலத்தில் தமிழில் பாலு மகேந்திராவும் உங்களைக் கண்டுகொண்டார். அதன் வழியாக அழியாத கோலங்கள் நிகழ்ந்தது. அதன் பின்பு நடந்தது உங்களது திரையுலக வரலாறு.

இரண்டு திருமணங்கள் செய்தீர்கள். நடிகை ராதிகாவுடனான முதல் திருமணம் ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்தது. மணமுறிவுகள் சாதாரணம் அல்லாத அக்காலத்தில் ஒரு பெரும் செய்தியாகவே அது பேசப்பட்டது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அமலா சத்யநாத் என்பவரைத் திருமணம் செய்தீர்கள். அந்தத் திருமணமும் ஐந்து ஆண்டுகளில் முறிந்து போனது. அதில் மகள் கேயா பிறந்தார். மகள்தான் உங்களது சுகமும் செல்வமும் என்று சொல்லியிருந்தாலும் திருமண வாழ்க்கை, குடும்ப அமைப்பு போன்றவற்றில் நம்பிக்கை இல்லை, அதை வெற்றிகரமாக நடத்தும் திறமையும் இல்லை என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

வாசிப்பில், இசை கேட்பதில், ஓவியம் வரைவதில் ஆர்வமுடையவராக இருந்திருக்கிறீர்கள். விருந்துகளையும் கொண்டாட்டங்களையும் விரும்பினீர்கள். நேரடித்தன்மை உடையவராக, வெளிப்படையானவராக வாழ்ந்தீர்கள். புகழும் வெற்றியும் இருந்தபோதிலும் மன அழுத்தத்தின், உளச்சோர்வின், சுய கழிவிரக்கத்தின் அடியாழங்களுக்குப் பலமுறை சென்றிருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். கையின் ரத்தக் குழாய் அறுத்து இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றீர்கள். “ஒரு கோழை என்பதால் என்னால் தற்கொலையைச் சரியாகச் செய்யமுடியவில்லை, தற்கொலை செய்வதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும்” என்றுதானே இதைப்பற்றி நீங்கள் சொன்னீர்கள்!

கிட்டத்தட்ட பத்தாண்டுகாலம் திரைத்துறையை விட்டு முற்றிலுமாக விலகியிருந்த நீங்கள் விளம்பரப்படங்களை இயக்குதல், பயணங்கள், வாசிப்பு என வாழ்ந்தீர்கள். திரை நடிப்பை 35 வயதிலேயே நிறுத்திவிட்டிருந்த நீங்கள் 55 ஆவது வயதில் மீண்டும் திரைக்குத் திரும்பி அதன்பின் 55 படங்களில் நடித்தீர்கள். அதிகமாக மலையாளத்தில். எனது நண்பர் லிஜின் இயக்கிக்கொண்டிருக்கும் ‘ஹெர்’ எனும் மலையாளப் படத்தில்தான் இறுதியாக நடித்தீர்கள்.தமிழிலும் மலையாளத்திலும் மேலும் ஒவ்வொரு படத்தை இயக்கவேண்டும், ஓர் ஆங்கில நாவலையும் சுய சரிதையையும் எழுதவேண்டும் எனும் இறுதிக் கனவுகளோடு தூக்கத்திலேயே இறந்து விட்டீர்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்றதொரு ஜூலை மாலையில் நீங்கள் முகநூலில் பாடி வெளியிட்ட ‘எனது வழி’ எனும் ஆங்கிலப் பாடலில் இப்படிப் பாடினீர்கள்.

//முடிவு நெருங்கிவிட்டது
எனக்கு முன்னால் இறுதித் திரைச் சீலை
நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தேன்
நெடுஞ்சாலைகளில் வெகுதூரம் பயணித்தேன்
குறிப்பிடுமளவில் வருத்தங்கள் எவையுமில்லை
காதலித்தேன், சிரித்தேன், அழுதேன்
வலிகளை எதிர்கொண்டு நிமிர்ந்து நின்றேன்
நிறைவுகள் பல இருந்தன, இழப்புகளும்
கண்ணீர் தணியும் இந்நேரத்தில்
எல்லாமே வேடிக்கையாகத் தோன்றுகிறது
ஒருவனுக்கு எதுவெல்லாம் இருந்தும் என்ன பயன்,
அவன் தனது உணர்வுகளைப் பேச முடியவில்லையென்றால்?
உண்மைக்காகப் பல அடிகளை வாங்கியிருக்கிறேன்
ஆனால் அதையும் நான் எனது வழியிலேயே செய்தேன்
நிறைவோடு விடை பெறுகிறேன்….//
அன்பும் நன்றியும் மட்டுமே பிரதாப். பிரியாவிடை.

shaajichennai@gmail.com