கூபா (ஆங்கிலத்தில் க்யூபா) நாட்டின் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிரான கொரில்லா யுத்தத்தின் உச்ச கட்டம் அது. அந்த யுத்தத்தில் ஃபிடல் கேஸ்ட்ரோவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் சே குவாரா. சியார்ரா மேஸ்த்ராவின் மலைப்பகுதியில் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது கே குவாராவுக்கு ஆஸ்த்மா தொந்தரவினால் உடல்நிலை மோசமாக, அவரைக் கவனித்துக்கொள்ள 45 வயதான  அகோஸ்ட்டா என்ற விவசாயி வருகிறார்.

தொடர்ச்சியாக சே குவாராவின் உடல்நிலை சீராகி வர, ஒருநாள் அந்த விவசாயி தனக்கான ஊதியத்தைக் கேட்கிறார். “ஐயா, நானொரு ஏழை விவசாயி. எனக்கு நீங்கள் கூலியாக கல்வி கற்றுத் தர முடியுமா?” என்று கேட்க, குவாரா சம்மதிக்கிறார். இப்படியாக, குவாராவின் முதல் மலைப்பகுதி மாணவராகிறார், அகோஸ்ட்டா. ஆனால், ராணுவத்தின் கையெறி குண்டு ஒன்று அவரது கற்றுக்கொள்ளும் ஆசையைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறது. குவாராவின் மடியில் உயிரை விடும் அகோஸ்ட்டா, இறப்பதற்கு முன்பாக குவாராவிடம் சொன்ன வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. சொல்லப்போனால், போராளிகளின் வாழ்க்கையைக் கட்டமைக்க, தொடர்ந்து போராட இதுபோன்றவைதான் உதவும்.

ஆனால், அகோஸ்ட்டா என்ன சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்பாக, குவாராவின் மனநிலை என்னவாக இருந்தது என்பதை அவரது நாட்குறிப்புகளில் இருந்து தெரிந்துகொள்வோம். மலைப்பகுதியில் நான் கழித்த மிக வருத்தமான 10 நாட்கள் இவைதான் என்று சொல்லும் அளவிற்கு போராட்டம் நீடித்தது. அகோஸ்ட்டாவின் மரணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ”சில மரணங்கள் மிகையான வலியைக் கொடுக்கும். இது அத்தகையதொரு மரணம்” என்று குறிப்பிடுகிறார் குவாரா.

தளபதி: ஆழ்ந்த வாசிப்பாளர், போராளி, அறுவை சிகிச்சை நிபுணர், பல் மருத்துவர் என்று பல அடையாளங்களைக் கொண்டிருந்தாலும் சே விரும்பியது எதைத் தெரியுமா? மேலே குறிப்பிட்ட எதையும் விட அவர் தன்னை ஒரு தளபதியாகவே அறிமுகப்
படுத்திக்கொண்டார்.

சியர்ரா மேஸ்த்ராவின் யுத்தத்தின்போது குணமடைந்த சே தனக்கான ஒரு படையை உருவாக்கி, அவர்களுக்குப் பயிற்சியளித்து முன்னின்று வழிநடத்திச் சென்றார். அந்த 75 பேர் கொண்ட குழுவின் தளபதியாகவே தனது அடையாளம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். எர்னஸ்ட்டோ குவாரா என்ற தனது இயற்பெயரை அதிகாரபூர்வ கையேட்டில் எப்படி சே என்று அடையாளப்படுத்தினாரோ, அவ்வாறே மருத்துவர் என்ற தனது தொழிலையுமே மாற்றி தளபதி என்று பொருள்படும்படியாக “கமாண்டர்” என்றே மாற்றிக்கொண்டார்.

சே-வின் வாழ்க்கை: புத்தகத்தின் பின்னே இருக்கும் கதை.

ஒரு காமிக்ஸ் கதையை உருவாக்குவதால், என்ன பாதிப்பு வந்துவிடும்?

அதைப் பற்றி காரசாரமான எதிர்மறை விமர்சனங்கள் வரலாம்.

அந்தப் புத்தகம் தடை செய்யப்படலாம்.

அந்த படைப்பாளிகளுக்கு அச்சுறுத்தல்கள் வரலாம்.

ஓவியர் அந்த நாட்டைவிட்டே ஓடிவிடலாம்.

படைப்பாளியின் குடும்பத்தினர் கடத்தப்படலாம்.

நெருங்கிய உறவினர்கள் கொல்லப்படலாம்.

அல்லது, படைப்பாளிகளே கொல்லப்படலாம்.

எதிர்ப்புக்கு ஆளாகும் ஒரு படைப்புக்கு, இதில் ஏதாவது ஒன்றிரண்டு நடக்கும். ஆனால், மேலே சொல்லப்
பட்ட எல்லாமும் ஒரே படைப்புக்கு நடக்குமா? அதுவும் ஒரு ‘‘சாதாரண” காமிக்ஸ் கதைக்கு? அப்படிப்பட்ட ஒரு “சாதாரண காமிக்ஸ்” கதைதான். எடர்நாட். அதை உருவாக்கிய படைப்பாளிதான் ஹெக்டோர்.

ஒரு படைப்பையும், அதை உருவாக்கிய படைப்பாளியையும் தனித்தனியே பிரித்து வைத்து, வாசிப்பதே சரியான முறை. ஆனால், ஒருசில படைப்புகளின் உண்மையான தாக்கத்தைப் புரிந்து கொள்ள, அந்தப் படைப்புகள் உருவாக்கப்பட்ட காலம், அங்கு நிலவிய அரசியல் சூழல், அந்தப் படைப்பாளியின் ஆளுமை ஆகியவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால்தான் அந்தப் படைப்பின் முழுமையான வீச்சை உணர முடியும். ஆகையால், இந்த கிராஃபிக் நாவலைப் பற்றி அலசும் முன்னர், அதை உருவாக்கிய மேதையைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

ஹெ ஜி. எனும் மேதை: அர்ஜெண்டினாவின் தலைநகரமான புவனெஸ் ஐரீஸில் ஜூலை 23, 1919ஆம் ஆண்டு பிறந்தவர்தான் ஹெக்டோர். ஜியாலஜியில் பட்டப்படிப்பு முடித்திருந்ததால், பிற்காலத்தில் இவரால் சயின்ஸ் பிக் ஷன் கதைகளை நம்பகத் தன்மையுடன் எழுத முடிந்தது. 1940களில் எழுத்துத் துறைக்குள் நுழைந்த ஹெக்டோர், பின்னர் காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களைப் படைக்க ஆரம்பித்தார். 1957இல் இவர் தனது சகோதரருடன் இணைந்து ஹோரா சேரொ என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்.

ஏற்கனவே, ‘‘த வெனிஸ் க்ரூப்” என்ற ஒரு மாபெரும் காமிக்ஸ் இயக்கத்தை தோற்றுவித்திருந்தார். அந்த க்ரூப்பில்தான் ஹ்யூகோ ப்ராட், டீனோ பட்டாக்ளியா, மரியோ ஃபாஸ்டிநெல்லி போன்ற உலகப்புகழ் பெற்ற காமிக்ஸ் படைப்பாளிகள் இருந்தார்கள். இவர்கள் அனைவருக்குமே ஆதர்சமாக, முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் ஹெக்டோர். அவருடைய நட்பு சார்ந்த சீரிய வழி நடத்துதலில், இந்தக் குழு உலகின் தலை சிறந்த பல படைப்புகளை உருவாக்கினார்கள்.

எடர்நாட் என்ற அந்த கிராஃபிக் நாவலைப் படைத்த ஹெக்டோர் ஹெர்மன் ஓய்ட்டர்ஹெல்ட் என்ற மாமேதையின் இன்னொரு படைப்புதான் இந்த சே குவாராவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் கிராஃபிக் நாவல். எப்படி அந்த எடர்நாட் கிராஃபிக் நாவலின் பின்னணியில் ஒரு சோகக்கதை இருந்ததோ, அதைப்போலவே இந்த கிராஃபிக் நாவலின் பின்னணியிலும் இன்னொரு சோகக்கதை இருக்கிறது.

1967இல் சே குவாரா கொல்லப்பட்ட போது, படைப்பாளி ஹெக்டோரின் அமைதி, எரிமலையாக வெடித்தது. சே குவாராவைப் பற்றி ஹெக்டோர் ஒரு கிராஃபிக் நாவலை உருவாக்கினார். 1968இல் அந்தப் புத்தகம் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், எங்கே அதைப் படித்து விட்டு கூபாவைப் போல அர்ஜெண்டினாவிலும் இன்னொரு புரட்சிக்கு அது வித்திட்டு விடுமோ? என்று அப்போதைய அரசாங்கம் பயந்தது. அதன் காரணமாக அதன் பதிப்பாளரான ஹோர்ஹே அல்வாரெஸ்சை மிரட்டத் தொடங்கியது. அரசாங்கத்தின் தொடர்ச்சியான இடை
யூறுகளால் தனது பதிப்பகத்தின் பெயரில் இதை வெளியிடாமல் இன்னொரு பதிப்பகத்தின் பெயரில் வெளியிட முயற்சிகளை மேற்கொண்டார் அல்வாரெஸ்.

ஆனால், அந்த முயற்சிகளுக்கும் தடைகள் உருவாக, 1968 அக்டோபரில் வெளியாக வேண்டிய இந்தப் புத்தகம் பல மாதங்கள் அச்சிடப்பட முடியாமல் தடைபட்டு நின்றது. அதனால், கதாசிரியர், ஓவியரின் பெயரைக் குறிப்பிடாமல் வெளியிடலாம் என்று அல்வாரெஸ் முன்வர, ஹெக்டோர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவழியாக 1969ஆம் ஆண்டில் சே-வின் வாழ்க்கை என்ற பெயரில் இந்த கிராஃபிக் நாவல் வெளியானது. பதிப்பாளர் அல்வாரெஸ், ஓவியர் அல்பெர்ட்டோ ப்ரெஸ்சியா ஆகியோரது பெயர்கள் இல்லாமல் வெளியான இந்தப் புத்தகத்தில் ஹெக்டோர் ஹெர்மன் ஓய்ட்டர்ஹெல்ட்டின் பெயர் மட்டும்தான் எழுத்தாளர் என்று அச்சிடப்பட்டிருந்தது. சொல்லப்போனால், அந்தப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த ஒரே பெயரும் அதுதான். பின்னர் அதுவே அரசாங்கத்தின் கோபப் பார்வைக்கு ஹெக்டோரை ஆளக்கியது.

புரட்சியின் மொத்த உருவமான சே குவாராவின் வாழ்க்கை வரலாறு காமிக்ஸ். கிராஃபிக் நாவல் வடிவில் வந்த, அர்ஜென்டினாவில் எங்கே போரட்டம் துவங்கிவிடுமோ என்று அஞ்சிய அரசாங்கம், அல்வாரெஸ்சின் பதிப்பத்தை முற்றுகையிட்டது. அந்தப் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் கைப்பற்றி எரித்து விட்டது. மேலும், எதிர்காலத்தில் எந்தப் பதிப்பும் வரக்கூடாது என்று அந்த கிராஃபிக் நாவலின் ஒரிஜினல் ஓவியங்களையும், ஸ்க்ரிப்டையும் தேடிப்பிடித்து அழித்து விட்டனர். அழிக்கப்படுவதற்கு முன்பாக அந்த சே குவாரா
வின் கிராஃபிக் நாவலை வாங்கிப் படித்தவர்கள், அதுதான் சே என்ற ஒரு மாபெரும் போராளியின் வாழ்க்கைக்
கான உண்மையான பதிவு என்று கொண்டாடினார்கள்.

ட்ட நிலையில் அச்சிடப்பட்ட பிரதிகளில் இருந்து மீட்டெடுப்பு செய்தது அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கிராஃபிக் நாவல் பதிப்பகமான ஃபன்டாகிராஃபிக்ஸ். இந்த ஆண்டு மார்ச் மாதம் இதை முதல்முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது. தரமான, அரிய புத்தகங்களை (மட்டுமே) வெளியிட்டு வரும் ஃபன்டாகிராஃபிக்ஸின் மணிமகுடத்தில் ஒரு வைரக்கல்லாகவே இந்த மீட்டெடுத்தலைச் சொல்லலாம். ஆக, உருவாக்கப்பட்டு 54 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக ஆங்கிலத்தில் உலக மக்களின் வாசிப்புக்கு முன்வைக்கப்படும் புத்தகம் என்றும் இதைச் சொல்லலாம்.

யார் இந்த சே குவாரா?

அமெரிக்காவின் டைம் பத்திரிகை கூபாவின் புரட்சியைப் பற்றி எழுதும்போது அந்தப் புரட்சியின் மூளை என்றுதான் சே குவாராவைக் குறிப்பிடுகிறார்கள். ஆழ்ந்த, தெளிவான சிந்தனை, வழிநடத்திச் செல்லும் திறன், நெருக்கடியிலும் அவர் காட்டும் நிதானம் என்று
பல திறமைகளைக் கொண்டிருந்தாலும் சே குவாராவைப் பற்றிய அடையாளம் இந்த கிராஃபிக் நாவல் இருக்கும் இரண்டு விஷயங்களைக் கொண்டே குறிப்பிடலாம்.

புரட்சியின் உச்சகட்டத்தின்போது சே குவாரா கூபா ராணுவத்தின் தலைமைத் தளபதியான கஸில்லாவை நேரில் சென்று சந்திக்கிறார். ராணுவ தளவாடங்கள், டாங்கிகள், குண்டுகளை வீசும் பஸூக்கா வகைத் துப்பாக்கிகள், நவீன ரக ஆயுதங்கள், வாகனங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக ஆயிரக்கணக்கிலான வீரர்கள் என்று கூபா ராணுவம் மிகுந்த பலம் கொண்டதாக இருந்தது. ஆனால், விடுதலைக்கான வேட்கையுடன் தன்னம்பிக்கையை மட்டுமே துணைகொண்டு கொரில்லா யுத்தமுறையில் போராடிவந்த புரட்சிப்படையின் தளபதி சே, கஸில்லாவைச் சந்திக்கச் சென்றது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

சேவை வரவேற்ற கஸில்லா, கிண்டலாக “என்ன, சரணடைய வந்திருக்கிறீர்களா? எங்கள் ஆயுதங்களின் எண்ணிக்கை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் அல்லவா?” என்று கேட்கிறார். ஆனால், சே குவாராவோ சற்றும் சளைக்காமல், ”உங்களிடம் வேண்டுமானால், ஆயுதங்கள் ஏராளமாக இருக்கலாம். ஆனால், அவற்றைப் பயன்படுத்த வீரர்கள் இன்னமும் இருக்கிறார்களா, என்ன? நான் வந்ததே உங்களைச் சரணடையச் சொல்லத்தான்” என்று சொல்லி ராணுவத் தலைமைத் தளபதியை ஆச்சரியப்படுத்தினார்.

சர்வாதிகாரி படிஸ்டா நாட்டைவிட்டே தப்பியோடிவிட, ஃபிடல் காஸ்ட்ரோ நாட்டின் அதிபர் ஆகிறார். அர்ஜெண்டினாவின் நாட்டுக்குடிமகனாக இருந்தாலும் சே குவாராவை கூபாவின் நாட்டுப் பிரஜையாக அறிவித்ததுடன் இல்லாமல், கூபாவின் தேசிய வங்கியின் இயக்குநராகவும் நியமிக்கிறார். ஐரோப்பிய நாட்டுப் பொருளாதார வல்லுநர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட வந்தபோது, மெஷின் கன் உடன் அமர்ந்து, சுருட்டு பிடித்துக்கொண்டு சே என்று மட்டும் கையெழுத்து போட்ட அந்த ஒரு நொடி எந்த ஒரு கமர்ஷியல் திரைப்படத்தின் உச்சகட்ட ஹீரோயிஸக் காட்சியாகவும் இந்தத் தலைமுறைக்குத் தெரியலாம்.

ஆனால், இதைத் திரைப்படக் காட்சிகளோடு ஒப்பிட்டு சே குவாரா என்ற அந்த மாபெரும் போராளியின் ஆளுமையை நாம் சிறுமைப்படுத்தி விடக்கூடாது. ஆஸ்த்மாவுடனான தனது போராட்டங்கள், புரட்சிக்கு இடையேயும் ஏகப்பட்ட புத்தகங்களைப் படித்தவர் குவாரா. பாப்லோ நெரூடா முதல் சீஸர் வல்லேயோ வரை பல ஆளுமைகளின் புத்தகங்களைப் படித்தவர். அவரது வீட்டில் மூவாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இருந்தது. குரானியில் சே என்றால், என்னுடைய. எனது என்று பொருள்படும். அதனால்தான் புரட்சியில் ஈடுபட்ட பிறகு சே என்று மட்டுமே கையெழுத்திட்டு வந்தார்.
கிராஃபிக் நாவல் உருவாக்கப்பட்டுள்ள பாணி

வழக்கமான காமிக்ஸ். கிராஃபிக் நாவல் பாணியில் இதைப் படைக்காமல், சொல்லப்போனால், 1960களில் மிகவும் புதியதாக இருந்த நான் லீனியர் பாணியில் இந்த கிராஃபிக் நாவல் உருவாக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக, ஒரு கிராஃபிக் நாவலின் கதை சொல்லும் பாணியை Sequential Art Syle என்று சொல்வார்கள். அதாவது, தொடர்ச்சியான ஓர் இயக்கத்தை (Movement) அடுத்தடுத்த ஓவியங்களில் வெளிக்கொணர்வதுதான் இதன் அர்த்தம். ஆனால், இந்த கிராஃபிக் நாவலில் எதுவுமே தொடர்ச்சியாக இல்லை. சொல்லப்போனால், பெரும்பாலான ஓவியக் கட்டங்கள் (திரைப்பட பாணியில் சொல்வதென்றால், Jump Cut) ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு அப்படியே மாறுகிறது.

அதுமட்டுமல்ல. டாகுமென்ட்ரி ஸ்டைலில் ஒரு சம்பவத்திற்குப் பிறகு இன்னொரு சம்பவம் என்று வரலாற்றை ஆவணப்படுத்துவதாகவும் இருக்கிறது. சே குவாராவின் டைரிக் குறிப்புகள், செய்திகள், என்று பலவற்றையும் கலந்த ஒரு கலவையாகவே இந்த கிராஃபிக் நாவல் இருக்கிறது. தன்னை முன்னிலைப்படுத்துதல் கதை சொல்லல் பாணியில் சே-வின் கதையை அவரே சொல்வதுபோல (1st Person Narrative) சில அத்தியாயங்களும், கதாசிரியர் சொல்வதைப்போல (3rd Person Narrative) அதற்கடுத்த அத்தியாயங்களும் இருக்கின்றன.

ஓவிய பாணி: ஏற்கனவே சொன்னதுபோல, இந்த கிராஃபிக் நாவல் வழக்கமான காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களுக்கான இலக்கணத்தை உடைத்து எழுதப்பட்டிருக்க, இதன் ஓவியர்களும் இந்தக் கட்டுடைப்பில் பங்கெடுத்து இதன் தரத்தை இன்னமும் ஒருபடி மேலே உயர்த்தி இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்வதென்றால், வழக்கமாக ஒருவரது வாழ்க்கை வரலாறு பற்றிய கிராஃபிக் நாவல் என்றாலே, ஓவியங்கள் அழகியல் ரசனையுடன் வரையப்பட்டு இருக்கும். ஆனால், இந்தப் படைப்பில் அழகியலுக்கு முக்கியத்துவம் தராமல், எப்படி கதை ஒரு புதுவிதமான பாணியில் சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைப்போலவே ஓவியங்களும் புதுவிதமான பாணியில் வரையப்பட்டு உள்ளது.

சேவின் டைரிக் குறிப்புகளை அவரே சொல்வது போல ஒரு பகுதியும், அவரது வாழ்க்கையைக் கதாசிரியர் சொல்வதுபோல வரலாற்று ஆவணப்பட பாணியில் இன்னொரு பகுதியும் இருக்கிறது. இந்த இரு பகுதிகளுமே அத்தியாயம் அத்தியாயமாக மாறி மாறி வரும்போது ஓவியத்தில் அதை வேறுபடுத்திக் காட்ட, இருவேறு ஓவிய பாணியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஓவியங்களில் நெகடிவ் ஸ்பேஸ் என்று சொல்லப்படும் அடர்த்தியை மிகவும் திறமையாகக் கையாண்டு, 1960களின் ஸ்டைலான Pen. Ink பாணியில் வடிவமைக்கப் பட்டு இருக்கும் இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பு ஓவியங்களில் இருக்கும் பின்னணி விவரங்கள்தான். உதாரணமாக, சே குவாராவின் மடியில் அகோஸ்ட்டா இறக்கும் அந்தக் காட்சியில் இவர்கள் இருவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி வரையப்பட்டிருக்கும். ஆனால், அதே சமயம் அது யுத்தம் நடக்கும் ஒரு மலைப்பகுதி என்பதையும் நமக்கு மிகவும் எளிமையாகப் புரியவைத்து இருப்பார்கள்.

ஏன் இந்த கிராஃபிக் நாவலைக் கொண்டாட வேண்டும்?

உலகின் தலைசிறந்த கிராஃபிக் நாவல்களுடன் ஒப்பிட்டு, இதை ஏன் நாம் கொண்டாட வேண்டும் என்பதற்கான காரணங்கள் பல இருக்கிறது. குறியீடுகள், உருவகங்கள், தொன்மங்கள், பிரதிக்குள் பிரதி என்று பல விஷயங்கள் இருந்தாலும் புத்தகத்தின் கடைசி மூன்று பக்கங்கள் ஏற்படுத்தும் தாக்கம்தான் இதன் தரத்தை விமர்சகர்களின் பார்வையில் உயர்த்துகிறது.

இந்த கிராஃபிக் நாவலின் கடைசி மூன்று பக்கங்களைப் புரட்டினால், அவை அந்தக் காலத்து ஃபிலிம் ரோலை மேலிருந்து கீழாகப் பிரிப்பது போல வடிவமைக்கப்பட்டு இருப்பதை உணரலாம். முதல் பக்கம் அகலமாகவும், அடுத்த பக்கத்தில் ஓவியப்பகுதி சற்றே குறுகலாகவும் கடைசி பக்கத்தில் ஓவியம் மிகவும் குறுகலாகவும் இருப்பதைக் காணலாம்.

முதல் பக்கத்தில் சே-வை அடைத்து வைத்திருக்கும் அறை மிகவும் விரிவாகக் காட்டப்பட்டு இருக்கும். அதன் பிறகான பக்கங்களில் அவரது முகம் மட்டுமே குறுகலாகி கடைசியில் பக்கம் முழுவதும் அடர்த்தியான கருப்பு நிறம் படர்ந்து ஒரே ஒரு வெள்ளைப்புள்ளி மட்டும் வரையப்பட்டு இருக்கும். அந்த வெள்ளைப்புள்ளி சே குவாரா என்ற போராளியின் உயிரைக் குடித்த துப்பாக்கியின் தோட்டாவாகும். ஆக, சே குவாரா என்ற அந்த வீரனின் மரணம் இப்படி வரையப்பட்டிருக்கும்.

ஆனால், அந்த முகத்தை மறுபடியும் பாருங்கள். அந்த முகத்தில், அந்தக் கண்களில் உயிர் இருக்கிறது. அந்தக் கண்கள் உங்களையே பார்க்கிறது. இந்த ஒரு கட்டத்தில்தான் எர்னஸ்ட்டோ குவாரா என்ற புரட்சியாளர் இறந்து சே குவாரா என்ற ஆளுமை உருவாகிறார். எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த ஆளுமைதான் நம்பிக்கையைக் கொடுக்கிறது.

கட்டுரையின் ஆரம்பத்தில் இறக்கும் தருணத்தில் அகோஸ்ட்டா என்ன சொன்னார் என்பதைச் சொல்லவே இல்லையே?

அகோஸ்ட்டா, சே குவாராவிடம் “இப்போது இல்லை.பிறகுதானே?” என்று சொல்கிறார். ஓர் ஏழை விவசாயிக்கு 45ஆவது வயதில் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிய அந்த சே குவாராதான் இளைஞர்களுக்கான நம்பிக்கை நட்சத்திரம்.

கதைகள் நீளும்…
prince.viswa@gmail.com