இலங்கை ஆட்சியாளர்கள் எப்போதும் தனிச்சிங்கள ஆட்சிக்கே தம்மை விலையாகக் கொடுப்பார்கள், கோட்டாவின் ஆட்சி தமிழர்களின் உயிரை விலையாகக் கொடுத்துப் பெறப்பட்ட ஆட்சி ஆகையால் இங்கே பங்குதாரர்கள் பலராகி கடைசியில் ஜனாதிபதி கோட்டா நாட்டை விட்டுத் தப்பியோடும் துர்ப்பாக்கிய நிலைக்கு வந்ததும் இல்லாமல் வரலாற்றில் முதல் தடவையாகப் பல அவப்பெயர்களைத் தன்னுள் சுமந்து வெளியேறி இருக்கிறார்.

இலங்கையில் அப்படி என்னதான் நடந்தது.

2009 ஆம் ஆண்டு இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வருகிறது. ஆனால் அந்த 30 ஆண்டுகளும் உள்நாட்டுப் போரை நடாத்தியதே இலங்கை அரசாங்கம்தான். ஒவ்வொரு ஐந்து வருட ஆட்சியிலும். ஆட்சியாளர்கள் இலங்கையின் யுத்தத்தை எதிர்கொண்டனர்,அந்த அந்த ஆட்சியாளர்களின் தந்திரோ பாயங்கள், உத்திகள் அவர்கள் உலக நாடுகளுடன் வைத்திருந்த உறவு முறை,தொடர்பாடல்கள், அயல்நாட்டில் இலங்கைமீதான செல்வாக்கு எனப் பலகாரணிகள் இலங்கையைப் பொருளாதாரரீதியில் நலிவுநிலைக்குத் தள்ளியதில்லை.

30 ஆண்டுகாலப் போர் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கையை அழித்து இப்போது அது கூஜாவுக்குள் இருந்த பூதமாக எழுந்து நிற்கிறது.

தமிழ் மக்களுக்கும் அவர்களது உரிமைகளுக்கும் இடம் இல்லை என்ற நிலைவந்தபோது இலங்கையில் இனங்களுக்கிடையிலான பெரும் போரும் அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டது. இது இப்போதுள்ள பொது ஜன பெரமுன முன்னணி அரசாங்கத்தின்கீழ் எப்போதும் இல்லாத அளவுக்கு உக்கிரம் கண்டதன் மூலம் தமிழ் சிங்கள தேசிய இனங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி பொருளாதார ரீதியில் கடை
நிலைக்குத் தள்ளியுள்ளது.

அந்தவகையில் இலங்கை அரசின் வருட செலவில் நூற்றுக்கு 25 சதவீதம் போருக்கு செலவிடப்பட்டது. அந்தத் தொகை 5000 கோடிக்கும் அதிகமாகும்.1995ஆம் ஆண்டு அரசாங்கம் சுகாதார செலவுகளுக்கு 1095 கோடி ரூபாவை அரச நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்தது. அதுபோல் நாட்டின் முக்கிய கல்விச் செலவுக்கு 1890 கோடி ரூபாயை ஒதுக்கியது. ஆனால் 1994 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 1995ஆம் ஆண்டில் பொது
ஜன பெரமுன முன்னணி அரசாங்கத்தின்கீழ் பாதுகாப்பு செலவு திடீரென 50 சதவீதத்தினால் அதிகரித்தது. இது சுகாதார, கல்வி சேவை செலவுடன் ஒப்பிடும்போது எந்தவித மாற்றமும் இல்லாமல் தனியே போருக்கான ஒதுக்கீடாக மட்டுமே இருந்தது.

1996ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் சுகாதாரத்துறைக்கும் கல்வித்துறைக்கும் ஒதுக்கப்பட்ட தொகையை விட, போருக்கு ஒதுக்கிய பணத் தொகை மேலும் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது. இது 1994ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 80 சதவீதத்தினால் அதிகரிப்பு செய்யப்பட்டது.இது மஹிந்த ராஜபக்ச இலங்கையில் ஆரம்பித்து வைத்த முதலாவது பொருளாதார நலிவுக்கான அடிஎடுப்பு.

இதனைவிட பயங்கரமான பொருளாதார நலிவை ஏற்படுத்தும் செயற்பாடு ஒன்றையும் மஹிந்த அரசாங்கம் அரங்கேயேற்றியது. அதுதான் ராணுவ பொலிஸ்படைகளின் எண்ணிக்கையை அதிகரித்தமை, அரசியல் லாபத்துக்காக அரச ஏஜெண்டுகளான உறுப்பினர்களினூடாக முன்னெடுக்கப்பட்ட அரச நியமனங்களும். இதற்கான கொடுப்பனவுகளுக்காக இலங்கை அரசப் பணம் இன்றுவரை நாட்டின் மொத்த தேசிய வருமானத்தின் முக்கால்வாசிப் பங்கை அப்படியே இல்லாமல் ஆக்கிக்கொண்டு இருக்கிறது.

1985-1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை ராணுவத்தின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கப்பட்டது. இது உலக நாடுகளின் போர் இடம்பெறும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 483 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

1985ஆம் ஆண்டில் 22,000 ஆக இருந்த இலங்கை ராணுவத்தின் எண்ணிக்கை இப்போது 150,000 வரை அதிகரித்துள்ளது. இந்த ராணுவ வீரர்கள் வெறுமனே மக்கள் போராட்டங்களைப் பார்க்கவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், தமிழ் மக்களிடம் அடாவடியாகப் பிடிக்கும் நிலங்களிலும் தங்கவைக்கப்பட்டு தேவை அற்ற ஒருதொகை பணத்தை உண்டு மகிழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

இந்தப் போக்குகள் இலங்கையின் அந்நிய செலாவணி மதிப்பை அடிமட்டத்துக்குக் கொண்டு வந்தது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை.

தற்போது உள்ள பொதுஜன பெரமுன அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி, ஆட்சியமைத்தபோது, அமெரிக்க டொலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக இருந்தது. ஆனால், இன்றைய தினத்தில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 358 ரூபா 63 சதமாக உள்ளது.

இதன் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளதுடன் வரலாறு காணாத நெருக்கடியயையும் ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை 450 ரூபாயாகும். இதன் காரணமாக, உள்நாட்டில் பெரும்பாலான பொருட்களின் விலைகளில் சடுதியான அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.

இத்தனை விடயங்களும் இலங்கை மக்களை அதிகோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றதன் விளைவே இன்று ஜனாதிபதி கோட்டபாய நாட்டைவிட்டு ஓடும் நிலைக்குத் தள்ளியது எனலாம், கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி இலங்கை அரசியலில் இருந்த கோட்டபாய வீட்டுக்குப் போவதற்கான GO HOME GOTA போராட்டத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. தனியே மக்கள் மட்டும் கோஷங்களை எழுப்பிக்கொண்டும், பதாகைகளை தாங்கி கொண்டும் வீதிக்கு வருகிறார்கள் எனவே அனைவரும் நினைத்தார்கள்.

ஆனால் இதற்குப் பின்னணியில் மாபெரும் பொருளாதார பலத்துடன் இருக்கும் நபர்களோ, அரசுகளோ இருந்தமை இன்றுவரை ரகசியம் என நினைத்தே பேசப்படுகிறது .குறிப்பாக மஹிந்த ராஜபக்ச, தம்பி கோட்டபாய ராஜபக்ச, அடுத்த தம்பியார் பஸில் ராஜபக்ச என சகோதரர்களுக்குள் எழுந்த அதிகார போட்டி மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவின் காய் நகர்த்தலில் இந்த ஆட்சிக்கலைப்புக்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

உலகளவில் இருக்கும் சிங்களமக்களினதும் தமிழீழ விடுதலை புலி எதிர்ப்பாளர்களினதும் ஆதரவை அதிகம் பெற்றவர் மஹிந்த ராஜபக்ச என்பது உண்மை. புலிகளை அழித்தார் என்றவகையில் தீவிரவாத எதிர்ப்பு நாடுகள் எப்போதும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதில் பின் நிற்கப்போவதில்லை. ஆனால் தம்பியாரான கோட்டபாய அண்ணன் மஹிந்தவின் கட்டுக்குள் இருந்து விலகுகிறார் எனத் தெரிந்ததும் புதிய ராஜதந்திர வழி பின்பற்றப்பட்டுள்ளது என்பதே தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம் என்பதுபோல கோட்டபாயவுக்கு மரத்தடியில்தான் இடக்கு முடக்கு ஆகியிருக்கிறது .தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்துவிட்டுத் தமையனை காப்பாற்றுவதற்காக வந்து பதவிக்கதிரையில் அமர்ந்த கோட்டபாய முற்றுமுழுதாக மஹிந்த ராஜபக்சவால் மட்டுமே இயக்கப்பட்டுக்கொண்டிருந்தார், தான் ஒரு ஜனாதிபதி என்பதை கோட்டபாய உணரவே கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்தது அவர் தன் சுயத்தை உணர்ந்து செயற்படத் தொடங்கும்போது இங்கே அனைத்தும் பூச்சிய நிலைக்கு வந்திருந்தது.

அதாவது நாள்தோறும் ஆறு மணி நேரங்கள் இலங்கை இருளில் மூழ்கும் அளவுக்கு மின்தடை பிறப்பிக்கப்பட்டது, எரிபொருள் உட்பட அத்தியா
வசியப் பொருள்கள் அனைத்தும் தலை சுற்றும் அளவுக்கு விலை அதிகரிப்பு செய்யப்பட்டது.எரிபொருளுக்கும். எரிவாயுவுக்கும் காத்திருக்கும் மக்கள் வரிசைகளை கிலோமீற்றர் கணக்கில் கணக்கிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவுகள் எழுந்தன. இவற்றைக் கட்டுப்படுத்தவும் தேவைகளை நிவர்த்திசெய்யவும் முடியாமலும் கோட்டபாய தள்ளாடினார். நாடு நாடாக உதவி கோரினார், ஏற்கனவே பட்ட கடனுக்காக அரைவாசி இலங்கை வளமும், நாடும் சீனாவிடம் அடகுவைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரால் அசையமுடியவில்லை, பதவிக்கு அடிபடும் மஹிந்த பேருக்குப் பிரதமர் கதிரையில் இருந்தாரே அன்றி இந்த இக்கட்டை நீக்க ஆலோசனை சொல்ல அவரால் முடியவும் இல்லை, அவர் அதை செய்யவும் இல்லை. இதனால் ராஜபக்ச குடும்பத்தின் தலைமையிலான அரசு பதவி விலகவேண்டும் என மக்கள் கொந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு போராட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

திரைமறைவில் நகர்த்தப்பட்டகாய்கள் இப்போது திரைக்குமுன் உருளவிடப்பட்டுள்ளன. இது நாட்டின் நிலைமையை இன்னமும் சீரழிவு செய்யலாம்,இது இடைக்கால அரசு என்ற மாயையை ஏற்படுத்தி மீண்டும் மஹிந்த குடும்பம் ஆட்சிக்குள் நுழைய வழிகோலப்பட்டுள்ளது. கோட்டாவால் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டகாரணத்தினால் நாட்டில் மீண்டும் ஒரு சர்ச்சை தலைதூக்கியது, இது உண்மையில் யார் இந்த அரசியலின் பின்புலம் என்பதை ஆழ்ந்து சிந்திக்கவைத்துள்ளது,காலிமுகத்திடலில் போராடுபவர்களை சந்தேகக் கண்ணூடு பார்க்கவைத்துள்ளது .மக்களின் வாக்குகள் பெறாத தோற்கடிக்கப்பட்ட ஒருவர் பிரதமராகி பின் ஜனாதிபதியாகி இன்று ஒரு அரசியல் சதிக்கும்பலைக் காப்பாற்றுகிறார் என்ற பார்வை ஒருபுறம் இருக்க,மஹிந்த கூட்டணியால் முன்மொழியப்பட்ட சபாநாயகர் தூக்கிவீசப்பட்டு, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் அழகப்பெரும களமிறக்கப்பட்டமை பெரும் சூழ்ச்சியைப் புரியவைத்துள்ளது, அடுத்த இலக்காக இருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாஸ திடீரென பொதுஜனபெரமுன கட்சிக்கு ஆதரவு வழங்குவதாகவும் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தமை எடுடா வண்டியை என மஹிந்த கூட்டணி தீவிரமாக களத்தில் இறக்கியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது .ஆகமொத்தத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது மஹிந்த கூட்டணி. யாரை யார் வீட்டுக்குப் போகசொன்னார்களோ அவர்களே வீட்டைக் கழுவி சுத்தம் செய்து மீண்டும் குடிபுகப்போகிறார்கள்.

இலங்கையையோ சிறுபான்மை மக்களையோ கருத்தில் எடுக்காத ஒரு பயங்கர இனவாதக் கும்பலிடம் ஆட்சி பொறுப்பு கைமாறிக்கொண்டே இருப்பதால் இலங்கை பொருளாதார,இனநல்லிணக்க ரீதியில் மீண்டுவர இன்னும் பல வருடங்கள் எடுக்கத்தான் போகிறது.

gpiousraja@gmail.com