சம்பவங்கள் ஏறகுறைய இப்படித்தான் நடந்தேறின. அவன் எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த நடைபாதையில் நடந்து வந்தான். சனிக்கிழமை பிற்பகல் நேரம் அப்போதுதான் தொடங்கியிருந்தது. வெயில் அவன் முதுகுக்குப் பின்னால் இருந்தது. பச்சை நிறச் சாயம் பூசப்பட்டிருந்த கம்பிவேலியின் விளிம்புக்கு முன்னால் அவன் நின்றான். வேண்டாமே, என்று அவன் நினைத்தான், வேண்டாம், ஐயோ மறுபடியுமா, வேண்டவே வேண்டாம். அவளுக்கு என்ன வயது ஆகியிருக்கும்? ஏழு, அதிகம் போனால் எட்டு. இல்லை, வேண்டாம். எனக்கு இது வேண்டவே வேண்டாம்.

கம்பிவேலிக்குப் பின்னால் சரியாகப் பராமரிக்கப்படாத கொஞ்சம் புல்தரை, ஒரு அஸேலியா புதர், ஒரு கார்டினியா பூச்செடி. மொத்தமே அவ்வளவுதான். வேண்டுமென்றால். சில இம்பேசியன்ஸ் மற்றும் ஜெரேனியப் பூச்செடிகளின் எச்சங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். சிறுமி ஏதோ ஒரு மிருகத்தின் பொம் மையைக் கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். பொம்மையின் உடம்பில் நிறைய ரோமம் இருந்தது. வால் என்பது பெயருக்குக்கூட இல்லை. பொம்மையின் முகத்தில் கைக்கொள்ளாத அளவுக்கு மீசை. அவள் அதனோடு பேசிக் கொண்டிருந்தாள்.

அவன் அவளிடத்தில் பேசினான்.

‘‘ஹாய்.”

அவள் பதில் சொல்லவில்லை.

‘‘ஹாய்” என்று மறுபடியும் சொன்னான். “உன் பெயர் என்ன?”

‘‘பரிச்சயமில்லாதவர்களோடு பேசக் கூடாது என்று என் அம்மா சொல்லி இருக்கிறார்.”

‘‘அதனால்தான் உன் பெயரைக் கேட்கிறேன். பெயர் தெரிந்து கொண்டால் நம்மிருவருக்கும் இடையில் பரிச்சயம் ஏற்பட்டுவிடும் இல்லையா? நீ உன் பெயரைச் சொல். நான் என் பெயரைச் சொல்கிறேன்.”

ஆறு வயதுதான் இருக்கும் என்று அவன் நினைத்துக் கொண்டான். ஆறு வயதிற்கு மேல் இருக்காது, ஓ, நான் என்ன செய்யட்டும், அந்த வயதில் அவர்கள் மிருதுவானவர்களாக, நல்ல வழவழப்புள்ளவர்களாக, ஐயோ, வேண்டாம்.

‘‘நான் எதையும் உங்களிடம் சொல்ல மாட்டேன்.”

‘‘சரி, வேண்டாம். என்னிடம் எதையும் சொல்லாதே. உன் அம்மா வீட்டில் இருக்கிறார்களா?”

‘‘இல்லை, அம்மா. கடைக்குப் போயிருக்கிறார்.”

‘‘அப்படி என்றால் இப்போது வீட்டில் உன் அப்பாவோடு இருக்கிறாரா?”

ஆமாம் என்று அவள் சொல்லட்டும். வீட்டில் அப்பா இருக்கிறார் என்று அவள் சொல்லி விடட்டும். நான் போய் விடுவேன். நான் போய் விடுவேன்.

‘‘இல்லை.”

‘‘அப்படியென்றால் வீட்டில் உங்கள் வேலைக்காரி இருக்கிறாள், அப்படித்தானே?”

‘‘என்ன?”

‘‘உன் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரி.”

‘‘எங்கள் வீட்டில் வேலைக்காரி இல்லை.”

‘‘பின்பு யாரோடு இருக்கிறாய்? பாட்டி? சித்தி?”

மிருதுவானதும், வழவழப்பானதும் மாத்திரம் அல்ல. சிறுசு. எல்லாம் அவ்வளவு சிறியதாக இருக்கும்.

‘‘இல்லை.”

‘‘தனியாகத்தான் இருக்கிறாயா?”

“ஆமாம்.”

“இதோ பார். என்னிடம் மிட்டாய் இருக்கிறது. நீ தனியாக இருப்பதால் உன்னைச் சந்தோஷப்படுத்த நான் இதை உன்னிடம் கொடுக்கப் போகிறேன். இந்த மிட்டாய் வேண்டுமா? ஸ்ட்ராபெர்ரி மிட்டாய்.”

“சரி.”

“என்னிடம் ஒரு பொம்மையும் இருக்கிறது. பீங்கான் முகத்தோடு ரொம்ப அழகான பொம்மைப் பெண். குட்டிக் குட்டிக் காலணிகளோடு, தொப்பியோடு.”

“பொம்மையை எனக்குக் காட்டு.”

“இதோ என் கோட் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன். நீ அதைப் பார்க்க ஆசைப்படுகிறாயா?”

அவர்கள் கால்களுக்கு இடையில் இருப்பது சிரமம் ஏற்படுத்தும் அளவுக்கு அவ்வளவு சிறியதாக இருக்கும். காரியத்தைச் செய்ய முடியாத அளவுக்கு சிறியது. முதல் முயற்சியில் செய்ய முடியாது. அவர்கள் அழ ஆரம்பிப்பார்கள். நிலைமையை அது மேலும் மோசமாக்கும்.

‘‘ஆமாம்.”

“சரி, கம்பிக் கதவைத் திற. உனக்கு அதைக் காட்டுகிறேன்.”

“திறந்துதான் இருக்கிறது. அதற்குச் சாவி இல்லை. நான் உள்ளே மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர்கள் அப்படி பூட்டாமல் விட்டிருக்கிறார்கள்.”

“அப்படியா. நல்லதாய்ப் போயிற்று.”

கம்பிக் கதவைத் தள்ளி அவன் தோட்டத்துக்குள் நுழைந்தான். வேண்டாம், வேண்டாம். இது எப்படியாவது நடைபெறாமல் போய் விடும் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அது நடக்கும் என்று அவனுக்குத் தெரிந்து விட்டிருந்தது. தன் விரல்களுக்கு அடியில் அந்தச் சிறுமியின் உடலை அவனால் உணர முடிந்தது: பட்டு, சாத்தீன், இனிப்பு, கதகதப்பு. எனக்கு இது வேண்டாம் என்று அவன் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். இது எனக்கு மறுபடியும் நடக்க வேண்டாம். ஆனால் அவன் எப்போதோ தனிமையில் ஆழ்ந்து போக ஆரம்பித்திருந்தான் உலகத்தில் அந்தத் தோட்டத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாத தனிமையில் அவன் ஆழ்ந்திருந்தான். அவளை எங்கு அழைத்துச் செல்லலாம் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

“பொம்மையை எனக்குக் காட்டு.”

”இங்கே வா. நிமிடத்தில் காட்டுகிறேன். ஆனால் முதலில்
உன் கையை என்னிடம் கொடு. ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளலாம். அப்படிச் செய்தால்
தான் யாரும் நம்மைப் பார்க்க மாட்டார்கள். உன் அண்டை வீட்டுக்காரர்களில் யாராவது பார்த்து
விட்டால் பொறாமைப்படுவார்கள்.”

“அப்படியென்றால் வீட்டுக்குப் பின்னால் போய் விடுவோம்.”

“வீட்டுக்குப் பின்னாலா?”

கவனம், என்று அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். உனக்கு இந்த இடம் தெரியாது. கவனம். லூஸியின் தங்கையோடு நடந்தது இங்கும் நடந்துவிடப் போகிறது. அப்படி நடக்கக் கூடாது.

“வீட்டுக்குப் பின்னாலிருக்கும் மனையில் கட்டடம் கட்டப் போகிறார்கள். ஆனால் சனிக்கிழமை என்பதால் அங்கே யாரும் இருக்க மாட்டார்கள்.”

“அங்கே போக வீட்டுக்குள் நுழைந்து வெளியேற வேண்டுமா?”

“இல்லை. தேவையில்லை. இந்தப் பக்கமாக, வீட்டின் ஒரமாகப் போய் விடலாம். அங்கு போனவுடன் பொம்மையை எனக்குக் காட்டு.”

“ஆ, அங்கு மரங்களும் மற்ற பொருள்களும் இருக்கும் இல்லையா?

‘‘அதை எல்லாம் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு போகிறார்கள். அவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று என் அம்மா சொல்கிறார்.”

“உங்கள் அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அவர் சொல்வது எப்போதும் சரியாகத்தான் இருக்கும், இல்லையா?”

அம்மா. அந்த அம்மா ஏன் வராமல் இருக்கிறா? இல்லை, வேண்டாம். அவள் இப்போது வர வேண்டாம்.

“அது எனக்குத் தெரியாது. யாராவது எனக்கு மிட்டாய்களைத் தந்தால் அதை நான் வாங்கக் கூடாது என்று அவர் சொல்லியிருக்கிறார். எல்லா ஆண்களும் கெட்டவர்களாம். அவர்கள் எல்லோரும் பன்றிகள் என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.”

“ம், அப்படியும் சொல்ல முடியாது. பொதுவாக நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கி
றார்கள். ஏன், உன் அப்பா நல்லவர் இல்லையா, என்ன?”

“அப்பா எங்களோடு இல்லை. பொம்மையைக் காட்டு. அது நீல நிறச் சட்டை போட்டிருக்குமா?”

“என்ன? ஆமாமாம், நீலம்தான். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அதை வீட்டில் மறந்து
விட்டேன். ஆனால்…”

“நீயும் கெட்டவன்தான். பொம்மையைப் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது இல்லை என்கிறாய்.”

“இல்லை. அப்படி இல்லை. நான் எவ்வளவு நல்ல
வன் என்பதை நீ பார்க்கத்தானே போகிறாய். வா, இங்கே வா. அந்த மரத்துக்குப் பின்னால் போவோம். பொம்மையைவிட ஒரு சிறந்த விஷயத்தை உனக்குக் காட்டுகிறேன்.”

“பார்த்து வா. அங்கே ஒரு கிணறு இருக்கிறது. அதற்குள் ஒரு ஒட்டி இருப்பதாக சொல்கிறார்கள்.”

“தொட்டி,”

“ஆமாம். தொட்டி. ரொம்ப, ரொம்ப ஆழமான ஒட்டி. அதை சிமெண்டு, மண், கல் எல்லாம் கொட்டி மூடிவிடப் போவதாக திரு லாஸ் சொன்னார்.”

“திரு லாஸ்?”

“எங்கள் மேஸ்திரி. கிணற்றுக்கு அடியில் தண்ணீர் இருக்கிறது என்றும் சொன்னார். அதற்குள் தவளைகளும் இருக்குமாம். அதைச் சீக்கிரம் மூடிவிட்டால் நல்லது என்று அம்மா சொல்கிறாள். அதற்குள் எலிகளும், ஏள்களும் இருக்குமாம்.”

“தேள்கள். வா, நாம் அங்கு போவோம்.”

“கவனம். அந்தப் பக்கம்தான் கிணறு. பார்த்தாயா?”

“ம். தெரிகிறது. அது அவ்வளவு ஆழம் இல்லை என்று நினைக்கிறேன்.”

“ரொம்ப ரொம்ப ஆழம், உலகத்தின் அந்தப் பக்கம்வரை ஆழம்.”

“ஆமாம் குட்டி. அப்படித்தான். வா, போகலாம்.”

“பார். பார். எவ்வளவு ஆழமாக இருக்கிறது.”

“ஆமாம், ஆமாம். சரிதான். சரிதான். தெரிகிறது. ரொம்ம்ம்ம்ப ஆழம்தான்.”
கிணற்றின் விளிம்பில் குனிந்து அவன் கிணற்றின் ஆழத்தைப் பார்த்தான். அவன் இதயம், உடம்பு என்ற கிணற்றின் ஆழத்திற்குள் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்தது. அந்தச் சிறுமி அவனைத் தள்ளிவிட்டாள்: அவளது இரண்டு சின்னஞ்சிறு கைகளை அவனது இடுப்பில் வைத்து தனது பலத்தை எல்லாம் பயன்படுத்தித் தள்ளினாள். அவன் அலறியபடியே கிணற்றுக்குள் விழுந்தான். சிறுமி கிணற்றின் விளிம்பில் முழங்கால் போட்டு அமர்ந்து கிணற்றுக்குள் பார்த்தாள்.

“ஏள்கள் இருக்கிறதா?” என்று கேட்டாள்.

“சனியனே, என்னை இங்கே இருந்து வெளியே இழு.”

இல்லை, அவள் எப்படி அவனை வெளியே இழுப்பாள்? அவனை வெளியே இழுத்துவிட அந்தச் சிறுமியால் முடியாது என்று அவனுக்குத் தெரிந்தே இருந்தது. அவன் மேலே பார்த்தான். யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் சனிக்கிழமை பிற்பகல் வானத்தின் நீல நிறப் பின்னணியில் சிறுமியின் முகம் துல்லியமாக. மிகத் துல்லியமாக. கிணற்றுச்சுவர் விளிம்பின் அந்தப் பக்கத்தில் தெரிந்தது. மிருதுவான, வழவழப்பான ஒரு சிறுமியைத் தவிர வேறு யாருமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் சனிக்கிழமை பிற்பகல்.

அவன் மேலே பார்த்தான். எளிதாக. எளிதாக. ஆறு மீட்டர் உயரம் இருக்கும். ஓர் அறையின் உட்கூரையின் உயரத்தைவிட அதிகம். இங்கிருந்து அவன் எப்படி வெளியேறப் போகிறான்?

“போய் யாரையாவது தேடி அழைத்து வா. போ, சீக்கிரம்!”

சிறுமி நகரவில்லை.

“நான் சொல்வதைக் கேள், பாப்பா. போய் யாரையாவது தேடி அவர்களை அழைத்து வா. யாரையாவது. பக்கத்து வீட்டுக்காரர் அல்லது வீட்டின் முன்னாலிருக்கும் பத்திரிகை கடையிலிருந்து யாரையாவது.”

‘‘வீட்டுக்கு முன்னால் பத்திரிகை கடை எதுவும் இல்லை. ஒரு தெரு தள்ளி ஒன்று இருக்கிறது.”

“போ. போ, பாப்பா. போய் அந்தப் பத்திரிகை கடையில் இருக்கும் ஆளிடம் இங்கு ஒரு விபத்து நடந்திருக்கிறது என்று சொல். அவனை ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு இங்கு வரச் சொல். இல்லை, ஒரு ஏணியை எடுத்து வரச் சொல். இல்லை வேண்டாம், கயிறுதான் நல்லது. போ,போ.”

‘‘சரி,” என்றாள் சிறுமி, “ஆனால், அங்கே ஏள்கள் இருக்கிறதா?”

“இல்லை, இங்கே அப்படி எதுவும் இல்லை. போ, தங்கம். போய் அந்தப் பத்திரிகை கடைக்காரனைத் தேடி இங்கே கூட்டி வா. அவனிடம் கயிற்றை எடுத்துவரச் சொல். விபத்து நடந்திருப்பதால் ஒரு கயிற்றை எடுத்துவர வேண்டும் என்று சொல்.”

சிறுமியின் முகம் மறைந்ததும் அவன் உண்மையிலேயே தனிமையில் விடப்பட்டான். அங்கு துணைக்குத் தேள்கள்கூட இல்லை.
அவன் தனது கைகளைப் பார்த்துக் கொண்டான். பின்பு தன்னைச் சுற்றிப் பார்த்தான். எங்கும் இருட்டு. நல்ல இருட்டாக இருந்தது. அவன் சேற்றில் நின்று கொண்டிருந்ததையும், சேறு நல்ல ஈரமாகவும் எளிதில் வழுக்கிவிடக் கூடியதுமாகவும் இருந்ததையும் அவன் அணிந்திருந்த காலணிகள் முழுவதும் நனைந்து தண்ணீர் அவன் பாதங்களைக் குளிரச் செய்து கொண்டிருந்ததையும் அவன் உணர்ந்தான். மூக்கில் சளி ஒழுகும் அந்தச்சனியன் சீக்கிரமாய் வந்து விடட்டும். அந்தப் பத்திரிகை கடைக்காரன். அவனிடம் அவள் கயிற்றைப் பற்றி மறக்காமல் சொல்வாளா? அது இருக்கட்டும். அவன் இங்கு வரும்போது நான் அவனிடம் என்னவென்று சொல்வது? ஒரு விபத்து. எப்படி விழுந்தேன், எப்படி இந்தக் கிணற்றின் அடியில் மாட்டிக் கொண்டேன்? அடுத்த தெருவிலிருந்து இங்கு வந்தேன் என்று அவனிடம் சொல்வேன். அவசரமாகச் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் இங்கு யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டு இந்த வீட்டுக்குள் நுழைந்ததாகவும் அப்படி உள்ளே வந்த போது கிணற்றின் விளிம்பு தடுக்கி உள்ளே விழுந்து விட்டதாகவும் சொல்வேன். ஆமாம், அவனிடம் அப்படியே சொல்லிவிடலாம். மூக்கில் சளி ஒழுகும் அந்தச் சனியன் அவனிடம் வேறு எதையும் சொல்லாமலும் மிட்டாயைப் பற்றியோ பொம்மையைப் பற்றியோ எதையாவது பேசாமலும் இருக்க வேண்டும். ஐயோ, அப்பா புண்ணியவானே, சீக்கிரம் வந்து தொலையேன். அவள் ஏன் இப்படி காலம் கடத்துகிறாள். ஒன்றுக்கும் லாயக்கில்லாத சனியன்.

அவன் மீண்டும் மேலே பார்த்ததுதான் தவறாய்ப் போயிற்று. அவன்மீது விழுந்து அவனை உயிரோடு புதைக்கக் கூடிய கிணற்றின் வழவழப்பான கற்சுவர்களை நினைக்கும்போது அவனது தொண்டையில் அடைத்துக் கொண்டு வந்தது. அப்படி ஏன் நடக்கக் கூடாது. சுவர்தான் ஒரு நிலவறையைப்போல், சிறையைப் போல், ஒரு கல்லறையைப்போல். அந்தப் பெண், அந்தக் கேடுகெட்ட பிசாசு சீக்கிரம் வந்தால் தேவலை. இங்கே பாருங்கள் போலீஸ்காரரே… கால் சட்டையிலேயே மூத்திரம் கழிக்கும் அளவுக்குச் சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது. இங்கே யாரும் இல்லை. ஆனால் முதலில் ஒரு கயிறு வேண்டுமே, யாராவது, யாராவது பலசாலியான ஒருத்தர், கயிறை இழுக்கும் அளவுக்குப் பலமுள்ளவராக.

இரண்டு மணி நேரங்கள் கழிந்தன. வெளியே. மேலே கிணற்றுக்கு வெளியே. இருட்டத் தொடங்கியது. அவன் கிணற்றின் சுவர்களைத் தனது கைகளால் தேய்த்து ஆராய்ந்தான். சுவர் கற்களால் கட்டப்பட்டிருந்தது. அவனைச் சுற்றியும் நெருக்குவதுபோல் கரடுமுரடானவையாகவும் சீரான வடிவமில்லாதவையுமாகவும் அந்தக் கற்கள் இருந்தன. கால் வைத்து ஏறவோ விரல்களை நுழைத்துத் தன்னைத் தானே மேலிழுத்துக் கொள்ளவோ எவ்விதமான சிறு இடைவெளியும் இல்லாதபடியான கற்கள். தன்னைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்ட அந்தக் கேடுகெட்ட சிறுமி, எதற்கும் லாயக்கில்லாத மூக்குச் சளி ஒழுகும் சனியன், அந்த முட்டாள் குழந்தை பத்திரிகை கடைக்காரனை அழைத்து வராமல் எங்குதான் போய்த் தொலைந்தாள். இருட்டாகிக் கொண்டு வந்தது.

கத்து, என்று அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். நான் உரக்கக் குரலெடுத்துக் கத்தப் போகிறேன். யாருக்காவது நான் கத்துவது கேட்கும். அவன் நெடுநேரமாகக் கத்தினான். உதவி, உதவி என்றும் யாராவது என்னைக் காப்பாற்றுங்களேன் என்றும் மற்ற பல விஷயங்களையும் சொல்லி அவன் கத்தினான். அந்தச் சிறுமியையும் கூப்பிட்டுப் பார்த்தான். ஆனால் அவன் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை. அது சனிக்கிழமை. சனிக்கிழமை பிற்பகல். இல்லை, இல்லை. அப்படியெல்லாம் நடக்காது. மறுநாள்வரைக்கும் அவர்கள் என்னை இங்கே விட்டுவிட மாட்டார்கள். நாளை ஞாயிற்றுக்கிழமை. அப்போதும் இங்கே யாரும் வர மாட்டார்கள். அந்தப் பிசாசு திரும்ப வந்து யாரிடமாவது அவள் செய்த காரியத்தைச் சொன்னால் தான் உண்டு. அவள் அம்மாவிடம் சொன்னால் அவள் அம்மா நிச்சயமாக வந்து பார்ப்பாள். ஆனால் அந்தப் பெண் சொல்வதை அவள் அம்மா நம்பவில்லை என்றால்? பொய் சொல்லாதே செல்லம் என்று அவள் சொல்லிவிட்டால்; சிறுமி சொல்வதை நம்பாமல் இருவரும் உணவருந்திவிட்டு நான் இங்கேயே மாட்டிக் கொண்டிருக்கும்போதே இருவரும் தூங்கப் போய்விட்டால்?

‘‘மே-ஏ-ஏ-ஏ-டம்!” என்று அவன் கூவினான்.

“மே-ஏ-ஏ-ஏ-டம்! அம்-ம்-ம்-மா! உதவி, இங்கே-ஏ-ஏ-ஏ, இங்கே-ஏ-ஏ-ஏ வாருங்கள்!”

இரவு வானம் அவன் முன்பு எப்போதும் கண்டிராத வகையில் கறுப்பாகவும் நட்சத்திரங்கள் நிரம்பியதாகவும் இருந்தது. அத்தனை நட்சத்திரங்கள். அத்தனை அத்தனை நட்சத்திரங்கள். கடவுளே, யாராவது வரட்டும். அந்தப் பெண் அவள் மகள் சொல்வதை நம்பட்டும். தயவுசெய்து ஆண்டவரே, நான் இனிமேல் எப்போதும் எந்த ஒரு சிறுமியையும் தொட மாட்டேன், எப்போதும் சத்தியமாக, இனிமேல் எந்தச் சிறுமியையும் துன்புறுத்த மாட்டேன். எனக்கு அப்படி ஓர் எண்ணம் தோன்றினால் நான் வேசிகளைத் தேடிப் போவேன் நிச்சயமாக இனிமேல் எப்போதும் சிறுமிகளைத் தொட மாட்டேன். இல்லை. திங்கட்கிழமை கட்டுமானத்  தொழிலாளர்கள் இங்கு வரும்வரைக்கும் என்னால் இந்தக் கிணற்றில் இருக்க முடியாது. இல்லை, நான் நிச்சயம் செத்துவிடுவேன். சாவது பெரிய காரியம் அல்ல. ஆனால் இங்கு சாக மாட்டேன். இப்படி, இந்த இடத்தில்…தயவுசெய்து ஆண்டவரே. நான் சொல்வதைக் கொஞ்சம் காதுகொடுத்துக் கேளுங்கள், யாரையாவது இங்கு வரச் செய்யுங்கள்.

அவன் தொடர்ந்து கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். அவன் தொண்டை வறண்டு போகும்வரை நெடுநேரமாக அவன் கத்தினான். எச்சிலை விழுங்கி அவன் தொண்டையை ஈரமாக்கிக் கொண்டு மீண்டும் கத்த முயன்றான் ஆனால் அவனால் மேலும் கத்த முடியவில்லை. இரவு வானம் நட்சத்திரங்களோடு கறுப்பாகவே கிடந்தது. அதுதான் இறைவனின் சிம்மாசனம் என்று அவனுக்குச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் கடவுள், கடவுள்கூட அவன் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. அவன் தண்ணீரிலும் சேற்றிலும் வியர்வையிலும் முழுவதும் நனைந்திருந்தான். அவன் உடம்பு வலித்தது. அவனுக்குக் கழிவறைக்குச் செல்ல வேண்டும்போல் இருந்தது. கழிவறைக்கு, என்ன வேடிக்கை! அவன் சத்தமாகச் சிரித்தான். கழிவறை! ஆறு மீட்டர் ஆழமுள்ள ஒரு கிணற்றில் நின்றுகொண்டு இருக்கும்போது கழிவறைக்குப் போக வேண்டுமாம். கால்சட்டையைக் கீழிறக்கிக் குடலில் இருப்பதை வெளியே பிதுக்கித் தள்ள வேண்டுமாம். என்னை நம்புங்கள் போலீஸ்காரரே, பேழத்தான் வந்தேன். இந்த இடத்தில் யாரும் இல்லாததைப் பார்த்தேன். அவனது குடலை யாரோ பற்றி இழுப்பதுபோல் பேயாய் வலித்தது. குமட்டிக் கொண்டு வந்தது. அவனுக்குள் ஏதோ ஒன்று நகர்ந்து வெளியேற முயன்று கொண்டிருந்தது. அந்த அருவருப்பு, பயம், அது எல்லாமும்தான், சேறு கலந்த தண்ணீர், கிணற்றின் ஓரங்கள்.

‘‘அ-ம்-ம்-ம்-ம்-ம்-மணி!” அவளுக்கு அது கேட்கப் போவதில்லை என்று அவனுக்குத் தெரிந்தே இருந்தது.
அவள் மட்டுமல்ல. வேறு யாருக்கும் அவன் குரல் கேட்கப் போவதில்லை. அந்தச் சிறுமிக்கும்.
கிணற்றின் விளிம்புக்கு அப்பால் சிறுமி மீண்டும் தோன்றினாள்.

“வந்துவிட்டாயா,” என்று அவன் சொன்னான். “பத்திரிகை கடைக்காரனிடம் கயிறு கொண்டுவரச் சொன்னாயா?”

நட்சத்திரங்கள் நிறைந்திருந்த கறுப்பு. கறுப்பு வானத்திற்கு எதிராக நின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி நகரவில்லை. எதையும் பேசவும் இல்லை. ஆனால் அவள் மாறினாள். அவள் மாறினாள். நட்சத்திரங்கள் ஒரு கரண்டி சூப்பாகக் கீழிறங்கி வந்தன. அவை வந்து கிணற்று விளிம்பினில் குனிந்திருக்கும் வட்ட வடிவத்திலான அந்தச் சின்னஞ் சிறிய தலையின் மீது நட்சத்திரங்களின் சூப்பை வாரி இறைத்தன. திடீரென்று சிறுமி வானத்தைப்போல் பிரகாசம் நிறைந்தவளாக வெண்ணிறமாகவோ, வெள்ளி நிறமாகவோ மாறினாள்.. தேவதைகள். அவை தேவதைகள்தான். தேவன் தன் கூக்குரலைக் காது கொடுத்துக் கேட்கப் போகிறார் என்று அவன் அறிந்து கொண்டான். அவர்கள் அவனைக் காப்பாற்ற வரப் போகிறார்கள்.

“பிரச்சனையே இல்லை,” என்று அவன் கத்தினான். “கயிறு தேவையில்லை. அவர்கள் வருகிறார்கள்!” என்று கூச்சல் போட்டான். “என்னை இங்கிருந்து வெளியே இழுங்கள். அ-ம்-ம்-ம்-மணி! அ-ம்-ம்-மணி!”

அவன் விம்மி அழுதான். அவன் கால் சட்டையில் எரிச்சல் நிறைந்ததாக, சூடாக ஏதோ ஒன்றை உணர்ந்தான். அழுதான். கத்தினான். செத்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அவ்வளவு மோசமாக இல்லை. சாகக் கூடாது என்ற வெறியே அவனுக்கு மிகுந்த வேதனையைத் தருவதாக இருந்தது. சாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருப்பதும் அவனுக்கு மிகுந்த வேதனையைத் தந்தன.

“அம்மணி,” என்று குரல் கொடுத்தான். அவன் இப்போது குரல் உயர்த்திக் கத்திக் கொண்டிருக்க
வில்லை. “அம்மணி, வந்து என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள். உங்கள் பெண்ணை நான் ஒன்றும் செய்ய மாட்டேன், ஒன்றுமே செய்ய மாட்டேன். என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள், ஆண்டவரை வரச் சொல்லுங்கள். என்னைக் காப்பாற்றி வெளியே தூக்கிவிட அவருடைய தேவதைகளை அனுப்பச் சொல்லுங்கள். இங்கே தேள்கள் இல்லை என்பதால் அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தேள்கள் இல்லவே இல்லை. அம்மணி, வாருங்கள்.”

பிறகு எல்லாம் மௌனமாக இருந்தது. அந்த ஞாயிற்றுக்கிழமையும் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளையும் போலவே இருந்தது. சிறுமியும் அவள் அம்மாவும் எமிலியா பாட்டியின் வீட்டுக்குச் சென்று தாமதமாகவே வீடு திரும்பினார்கள். ஆனால் திங்கட்கிழமை விடுமுறை என்பதாலும் சிறுமி பாலர் பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை என்பதாலும் அவள் அம்மா இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆகவே அடுத்த நாள் அவர்கள் தாமதமாகத்தான் படுக்கையை விட்டு எழுந்தார்கள். வருடத்தின் அந்த நேரத்தில் எதிர்பார்க்கக் கூடியதைவிட அன்றைய காலை நேரம் மிகவும் குளிராகவே இருந்தது. மாலையில் கொஞ்சம் மழைகூட பெய்தது.

“மேடம், உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்திக் கொள்ளலாமா?” என்றார் திரு லாஸ்.

முன்பு சில முறைகள்கூட அவர் இப்படிக் கேட்டிருக்கிறார். அவளும் அவரைச் சமையலறைக்குள் அனுமதித்திருக்கிறாள். திரு லாஸ் நல்ல மனிதர். நல்ல ஆகிருதி, வெயிலில் கறுத்த தேகம், இனிமையான புன்னகை, எப்போதும் ஒரு பணிவு. வேலையாட்கள் இயந்திரத்தை இயக்கி மண் அள்ளும்போதோ ரம்பம் கொண்டு அறுக்கும்போதோ ஏற்படும் இரைச்சலுக்காக மன்னிப்புக் கேட்கக்கூட செய்திருக்கிறார்.

“அட, இதற்கென்ன திரு லாஸ். தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உள்ளே வாருங்கள். காபி அருந்துகிறீர்களா? இப்போதுதான் கலக்கினேன்.”

“நன்றி மேடம். கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் இன்ஜினியரோடு மாதே குடித்தோம். இப்போது நான் கம்பெனி அலுவலகத்தோடு ஒரு காரியத்தைக் குறித்துப் பேச வேண்டும். என்ன செய்வது என்று விசாரிக்க. கிணற்றின் அடியில் ஏதோ கிடக்கிறது. பார்த்தால் ஏதோ பெரிய பிராணியைப்போல் தெரிகிறது, நாயாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.”

‘‘ப்ச்சு. இந்தத் தொந்தரவு வேறா.”

“ஆமாம். அசையாமல் கிடக்கிறது. செத்துப் போயிருக்கும் என்று நினைக்கிறேன். அதை முதலில் வெளியில் எடுக்க வேண்டும். கிணற்றை இன்று அடைக்க முடிவு செய்திருந்தோம்.”

“சரி, அலுவலகத்தை அழைத்துப் பேசி விடுங்கள். என் மகளைக் காலையிலேயே பள்ளிக்குக் கொண்டு போய்விட்டேன். இப்போது நான் அலுவலகத்துக்குப் போக வேண்டும். நண்பகலில் வந்து பார்க்கிறேன்.”

”நன்றி, மேடம். தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும்.”

திரு லாஸ் நல்ல மனிதர். கிணற்றிலிருந்து நாயை அவர்கள் எடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் என்ன ஒன்று, மறுபடியும் மழை பெய்தது என்றால் காரியம் சிக்கலாகும். இந்தக் கிணறு எப்போதுமே ஒரு ஆபத்தாகவே இருந்திருக்கிறது.

writersithurajponraj@gmail.com