ராஜேஷ்குமாரைக் காதலிப்பது வர வர போரடிப்பதாக ராகினிக்குத் தோன்றியது. ‘பார்க்கிறோம். பின்னால் அலைகிறான். படபடப்பு ஏற்படுகிறது. காதல் வந்துவிடுகிறது. பின்னால் பழகும்போது மடையன் என்று தெரிகிறது. உடனே விட்டு விலக முடியாது. பெண்களே இப்படித்தான் ஏமாற்றுக்காரிகள் என்று சொல்லிவிடுவார்கள். பிறகு ஏதேதோ காரணங்கள் சொல்லி அவனிடமிருந்து விலகவேண்டியிருக்கிறது. ஆனால் அவன் விலகமாட்டான். ஏமாற்றிவிட்டாய் என்று கத்தியால் குத்துவான். ஆசிட்டை முகத்தில் ஊற்றுவான். சிலர் தாடி வளர்த்துக்கொண்டு மது குடித்து துக்கத்தை இன்பம் போல் அனுபவிப்பார்கள்.
ஆனால் வீட்டிற்கு இந்தக் காதல் விஷயம் தெரியாது. வீட்டில் விருப்பப்படவில்லை என்று அவனிடம் சொல்லியாயிற்று. செல்போனை எந்நேரமும் அணைத்து வைக்க முடியுமா. போனை எடுத்தால் கொஞ்சிப் பேசுகிறான் அல்லது அதட்டலாகப் பேசுகிறான். பெரிய சிக்கலாக இருக்கிறது. இந்த மடையனோடு திருமணமாகி வாழ்க்கை நடத்துவதற்குத் தற்கொலை செய்துகொள்ளலாம்.
அவனை நேரில் சந்திக்காமல் தவிர்த்துக்கொண்டே இருக்கிறாள். அவன். ராஜேஷ்குமார். போன் பண்ணிக்கொண்டே இருக்கிறான். ராகினி எடுப்பதில்லை. வேறு எண்ணிலிருந்து அழைக்கிறான். புது எண் என்பதால் பெரும்பாலும் எடுப்பதில்லை. சில நேரங்களில் எடுப்பாள். அவன் குரல் என்றால் போனைத் துண்டித்துவிடுவாள்.
அவனுக்கும் ராகினி தன்னை விட்டு விலகிவிட்டாள் என்று தெரிந்துவிட்டது. ‘நான் மனதாரக் காதலித்தேன். எனக்குள்ளே அவள் எந்நேரமும் இருந்துகொண்டேயிருக்கிறாள். எதனால் இப்படி விலகுகிறாள். வேறு வசதியான, அழகான பையன் கிடைத்துவிட்டானா அல்லது இரு வீட்டார்கள் சம்மதத்துடன் இந்தக் காதல் நினைவேறாது என்று நினைத்துவிட்டாளா’ என்று நினைத்து நண்பனிடம் யோசனை கேட்டான். அவன், ‘பெண்களே இப்படித்தான். நம்பவைத்து ஏமாற்றிவிடுவார்கள். நாம்தான் பைத்தியமாய் அலையவேண்டும்’ என்று சொல்லிவிட்டான்.
ராகினிக்கு அவனை எப்படியாவது முழுவதுமாகத் துண்டித்துவிடவேண்டும். ‘எனக்கு போன் பண்ணவே கூடாது. அதற்கு என்ன செய்வது’ என்று பல நாட்களாக யோசித்துக்கொண்டேயிருந்தாள். ஒன்றும் புலப்படவில்லை. அவனை நேரில் சந்தித்து, ‘நாம் பழகியவரையில், நாம் இருவரும் சேர்ந்து வாழ்வது துயரமாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. நம் இருவருக்கும் பொருத்தமில்லை. இதை நான் தாமதமாக அறிந்து உன்னிடம் சொல்வது என் தவறுதான். என்ன செய்வது, கொஞ்ச நாட்களிலேயே ஒருவரைக் கணித்து
விட முடியவில்லை. இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது. எனக்கு நீ பொருத்தமில்லை. நாம் கௌரவமாக விலகிக் கொள்வோம். எனக்குத் தொந்தரவு தராமல் இருப்பதாக எனக்கு வாக்குத் தரவேண்டும்.’. இப்படிப் பேசிவிடலாமா என்று நினைத்தாள்.
இதைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் அறிவாளியாக அவன் இல்லை என்பதை அவள் அறிவாள். மேலும் இப்படிச் சொல்லும்போது அவன் கத்தியால் குத்திவிடுவானோ என்றும் தோன்றியது. போனிலேயே நினைத்ததைப் பேசிவிடுவோம் என்று ராகினிக்குத் தோன்றியது.
ஒருநாள் வீட்டில் அறையில் கதவை அடைத்துக்கொண்டு என்ன பேசுவது என்று யோசித்து, அவனை போனில் அழைத்து, ‘என்னை மறந்துவிடு. எனக்கு நீ பொருத்தி வரமாட்டாய். என்னை மன்னித்துக்கொள். என் வழியில் வராதே’ என்று சொல்லிவிடலாம் என்று நினைத்துக்கொண்டாள்.
‘அவன், நான் ஏன் பொருந்தி வரமாட்டேன் என்பதற்குக் காரணம் சொல்’ என்று கேட்பான். அப்போது நான் என்ன சொல்வது. ’நீ ஒரு மடையன். அதனால் எனக்குப் பொருந்தி வரமாட்டாய் என்று சொல்வதா.’ ஒரே குழப்பமாக இருந்தது.
பலவிதமாக யோசித்து, பின் ராஜேஷ்குமாருக்குப் போன் பண்ணினாள். மறுமுனையில் அவன் எடுத்ததை அறிந்தாள். பிறகு அவன் ராகினியின் பெயரைச் சொல்லி அழுவதைக் கேட்டாள். அழுகை குறைந்ததும் போனை வைத்துவிட்டாள்.
பிறகு மீண்டும் போன் பண்ணினாள். ராஜேஷ்குமார் எடுத்தான். “ராகினி” என்றான். “ராஜேஷ், நான் சொல்
வதைக் கேள். நம் காதல் விவகாரம் என் அப்பாவிற்குத் தெரிந்துவிட்டது. என்னை விளக்குமாற்றால் அடித்துவிட்டார். அவருடைய நண்பர் ஒருவர் டி.எஸ்.பி.யாக இருக்கிறார். அவரிடம் இந்த விஷயத்தைச் சொல்லி உன்னை என்னிடமிருந்து விலக வைப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி கூறியிருக்கிறார். அந்த டி.எஸ்.பி. உன்னைக் கஞ்சா கேஸில் வெளியே வரமுடியாமல் ஜெயிலில் போட்டு மிரட்டி என்னை மறந்துவிடச் செய்வதாகக் கூறிக்கொண்டிருக்கிறார். என்னை அவருக்குக்கீழ் வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டரின் மகனுக்குத் திருமணம் செய்துவைப்பதாகவும் கூறியிருக்கிறார். இதுதான் நிலைமை. பெரிய சிக்கலில் நீ மாட்டிக்கொள்வாய். என்னாலும் அடி வாங்கி அப்பாவின் புறக்கணிப்பில் இருக்க முடியாது. மனதைக் கல்லாக்கிக்கொண்டு முடிவு செய்வோம். நான் உன்னை மறந்துவிடுகிறேன். நீ என்னை மறந்துவிடு. அதுதான் நம் இருவருக்கும் நல்லது.” என்று சோகமான கம்மிய குரலில் கூறினாள். ராஜேஷிடமிருந்து பதில் இல்லை. சிறிது நேரத்தில் பேசினான். “என்னால் ஜெயிலுக்குப் போகமுடியாது. நான் உன்னை மறந்துவிடுகிறேன். நீயும் என்னை மறந்துவிடு. பெரிய சிக்கல்களை என் குடும்பம் தாங்காது. குட் பை” என்றான். ராகினியும் “குட் பை” என்றாள்.
அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தாள். சிரித்த முகத்துடன் ஆடிக்கொண்டே வந்தாள். “அம்மா, நான் இன்று சந்தோஷமாக இருக்கிறேன். ஏதாவது இனிப்பு செய்” என்றாள்.
முறிந்த காதல்
“நம் இருவரின் காதலும் அறிவுஜீவிக் காதல். இதில் உடல் இச்சைக்கு இடமில்லை என்றுதான் நினைக்கிறேன். இதுவரை நாம் முத்தமிட்டுக்கொண்டதில்லை. கட்டிப்பிடித்துக்கொண்டதில்லை” என்றான் ரவீந்திரன்.
சாந்தி ஒன்றும் பேசவில்லை. ‘கல்யாணமே வேண்டாம் என்று நினைக்கிறானா அல்லது கல்யாணத்
துக்கப்புறமும் இப்படி அறிவாகப் பேசிக்கொண்டே இருக்கப்போகிறானா அல்லது அவனால் உடல் ரீதியாக செயல்பட முடியாதா’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘கல்யாணத்துக்குப் பிறகும் இப்படித்தானா’ எனக் கேட்டுவிடலாமா என்று சாந்திக்குத் தோன்றியது. அப்படிக்கேட்டால் அவன் தன்னைப்பற்றி உடல் இச்சைக்கான ஆசை உள்ளவள் என்று நினைத்துக்கொள்வானோ என்று தோன்றி அமைதியாக இருந்தாள்.
இது சம்பந்தமாக தன் தோழியிடம் பேசினாள். “நீங்கள் என்ன பேசிக்கொள்வீர்கள்” என்று தோழி கேட்டாள்.
“நான் பேசுவதில்லை. அவன் பேசுவதை நான் கேட்டுக்
கொண்டிருப்பேன்”
“அவன் என்ன பேசுவான்.”
“ஜேம்ஸ் பிரின்ஸ், ஜார்ஜ் பிரடரிக் ஜோன்ஸ் கோட்பாடுகளையும் அவர்களின் சிந்தனைகளையும் சொல்வான். எனக்கு ஒன்றும் புரியாது. சிரித்துக்கொண்டே தலையாட்டிக்கொண்டிருப்பேன்.”
“தலையாட்டிக்கொண்டிருப்பதற்கா உன்னைக் காதலிக்கிறான்.”
“எப்படியோ காதல் வந்துவிட்டது. எப்படி வந்தது என்று தெரியவில்லை.”
“இது காதலா. ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டு, ஜோக் சொல்லிக்கொண்டு, ஆண் பெண் ஈர்ப்புக்குத் தொடர்பான விஷயங்களைப் பேசிக்
கொண்டு… இப்படியெல்லாம் பேசிக்கொள்ள மாட்டீர்களா?.”
“மாட்டோம். நீ நன்றாகப் பேசுகிறாய் என்று நான் சொல்வேன். நீ நன்றாகக் கேட்டுக்கொண்டிருக்கிறாய் என்று அவன் சொல்லுவான். இப்படி ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொள்வோம். சில நேரம் அவன் சொன்ன கருத்து சரியானதுதான் என்று உரையாடுவேன். அது அவனுக்குப் பிடிக்கும். சில நேரங்களில் அவன் பார்த்த உலக சினிமாவைப் பற்றிக் கூறுவான். நான் படம் பார்க்கவில்லை என்றாலும் அவன் கூறியதை வைத்து அவன்கூட உரையாடுவேன்.”
“இதுக்குப் பேரு காதலா. குப்பையிலே கொண்டு போயி போடு. நீ அடுத்த தடவை சந்திக்கும்போது அவன் கைகளை உன் கைகளோடு கோர்த்துக்கொள். அவன் கன்னத்தில் முத்தம் கொடு. அவன் அதைப் புறக்கணித்தாலோ அல்லது ஜடம் மாதிரி இருந்தாலோ உன் காதலை முறித்துக்கொள். முட்டாள் பெண்ணாக இருக்காதே.”
“சரி, அப்படியே செய்து பார்க்கிறேன்” என்றாள் சாந்தி.
அடுத்த தடவை சந்திக்கும்போது அவன் ஜேம்ஸ் பிரின்ஸ், ஜார்ஜ் பிரடரிக் ஜோன்ஸ் தியரிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் கைகளை எடுத்து, அவன் விரல்களோடு தன் விரல்களைப் பிணைத்து இறுக்கினாள். பேசிக்கொண்டிருந்த தியரிகள் சரியாக வராமல் அவன் வாய் குழறியது. அவள், அவனைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். அவன் அவளை இறுக்கிக்கொண்டு உதட்டில் முத்தமிட்டான். அவன் கைவிரல்கள் அவள் உடலைத் தடவின. சற்றுநேரத்தில் இருவரும் விடுவித்துக்கொண்டார்கள்.
ஜார்ஜ் பிரடரிக் ஜோன்ஸ் ஆண் பெண் ஈர்ப்பு உளவியல் பற்றிக் கூறியதை ரவீந்திரன் பேச ஆரம்பித்தான். இருவர் உடலும் தழுவிக்கொண்டதில் சாந்தியின் முகம் சிவந்திருந்தது.
அடுத்த தடவை தன் தோழியைச் சந்திக்கும்போது நடந்ததை சாந்தி சொன்னாள்.
“அவனைக் கவர்ந்த அந்த இரு சிந்தனையாளர்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்” என்று தோழி கேட்டாள்.
“ஜார்ஜ் பிரடரிக் ஜோன்ஸ் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். ஜேம்ஸ் பிரின்ஸ் சிலி நாட்டைச் சேர்ந்தவர்.”
“அவனை இரண்டு நாட்டிற்கும் சென்று அங்கு குடியிருக்கச் சொல். அவன் உனக்குச் சரியாக வரமாட்டான். என்ன செய்வாயோ. இந்தக் காதலை முறித்துவிடு.”
சாந்திக்கும் அவள் சொல்வதுதான் சரி என்று தோன்றியது. பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி இருவருக்கும் இடையிலான காதலை முறித்துவிட்டாள். இருவரும் போனில்கூட பேசிக்கொள்வதில்லை.
ஜார்ஜ் பிரடரிக் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்ஸ் இருவருடைய கோட்பாடுகளைப் பேசுவதற்காக ஒரு காதலியைத் தேடி ரவீந்திரன் அலைந்து
கொண்டிருக்கிறான்.
sureshkumaraindrajith@gmail.com