‘
‘அப்பா! டைனோசார்கள் இப்ப இருந்தால் எப்படி இருக்கும்?’- பல வருடங்களுக்கு முன் என் மகள் என்னிடம் கேட்ட கேள்வி.
அதற்கு நான் அளித்த பதில். தெருத்தெருவாக் கூட்டிட்டு போய் காசு கேட்கப் பழகியிருப்பார்கள் அல்லது சர்க்கஸில் கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்ட வைத்துக் கைதட்டல் வாங்க வைத்திருப்பார்கள்” என்றேன்.
நகைச்சுவையாகச் சொன்னாலும் அது உண்மைதான். ஐயாயிரம் கிலோ எடையுள்ள ஒரு யானை ஐம்பது கிலோ எடையுள்ள ஒரு பாகனுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பது ஏன்?. மூளைதான் காரணம் என்றால் மனிதனின் மூளையைவிட யானையின் மூளை மூன்று மடங்கு அதிக எடை. ஆனாலும் மனிதனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அது நடப் பதற்குக் காரணம் என்ன?
இதற்கான விடை தேடுவதற்கு முன் நாம் ஒரு சம்பவத்தைப் பற்றிப் பார்ப்போம். அறிவியலில் பல விஷயங்கள் serendipity என அழைக்கப்படும் தற்செயலான விபத்துகளால் கண்டறியப் பட்டிருக்கின்றன.
1925 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி கிருமிகளை ஆராய்ந்து கொண்டிருந்த போது அந்த ஆய்வுக்கூட டெஸ்ட்ட்யூப்களில் படிந்த பூஞ்சைக்காளான் அந்த கிருமிகளை அழித்திருப்பதைக் கண்டார். அந்தக் கிருமிகளை அழிக்கும் பென்சிலியம் வகை பூஞ்சைக் காளான்களிடமிருந்து கண்டறியப் பட்ட மருந்துதான் மருத்துவ உலகையே மாற்றிய முதல் ஆண்டிபயாட்டிக்கான பென்சிலின். அந்த விஞ்ஞானி அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்.
இன்னொரு கிளுகிளுப்பான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் இருதயத்தின் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யவேண்டிய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட மருந்து டேக் டைவர்ஷன் ஆகி வேறு இடத்தில் வேலை செய்ததால் பிரபலமாயிற்று. அந்த மருந்துதான் வயாகரா.
அதே போல் ஒரு தற்செயலான விபத்துதான் மனம்- மூளை தொடர்பில் பல அறியப்படாத உண்மைகளை அறிய வைத்தது.
1848 ஆம் அமெரிக்காவின் வெர்மாண்ட் மாநிலத்தில் ரயில்வே தண்டவாளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் ஃபீனியஸ் கேஜ் என்ற தொழிலாளி. எதிர்பாராமல் நடந்த வெடிவிபத்தில் ஒரு சிறு கடப்பாரை அவரது இடது கண்ணைத் துளைத்து மூளையையும் சிதைத்தது. இடது கண் வெளியே வந்துவிட்டது. அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர் பெயர் டாக்டர் ஹார்லோ. ஃபீனியஸ் கேஜ் பல நாட்கள் சுய நினைவின்றி இருந்தார். பின் அவர் பிழைத்துவிட்டார். அதன்பின் 12 வருடங்கள் இருந்தார். இடது கண்ண பார்வை போனதைத் தவிர அவருக்கு வேறு எந்த உடல் உபாதையும் ஏற்படவில்லை. ஆனால் அவரது நடவடிக்கைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்பட்டது. அந்த விபத்துக்கு முன்பு வரை மிகவும் பொறுப்பானவராகவும் கீழ்ப்படிதலுள்ளவராகவும் இருந்த ஃபீனியஸ் கேஜ் அடிக்கடி சண்டை பிடிப்பவராகவும், முன்கோபியாகவும் மாறிவிட்டார். மிகுந்த கூச்ச சுபாவியாக இருந்த அவர் கூச்சமே இல்லாமல் பேச, நடந்து கொள்ள ஆரம்பித்தார். அவரது மரணத்துக்குப் பின் அவரது மண்டை ஓடு, மூளையை ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் அவருடைய மூளையின் முன்பகுதி பாதிக்கப் பட்டிருந்தது என்பதைக் கண்டறிந்தனர். Frontal Lobe என்றழைக்கப்படுகிறது இந்தப் பகுதி.
மிருகங்களை விட மனிதனுக்கு மூளையின் அளவு குறைவாக இருந்தாலும் உடல் எடையை ஒப்பிடும்போது மனித மூளையின் எடை அதிகமாக இருப்பதாகக் கருதினர். அதாவது மூளை எடை உடல் எடையில் ரெண்டரை சதவிகிதம் இருக்கிறது. அதுவே யானையின் மூளை அதன் உடல் எடையை ஒப்பிடும்போது 0.1 சதவிகிதமே இருக்கிறது. உடல் எடைக்கும் மூளை எடைக்கும் உள்ள விகிதாச்சாரத்தை இன்னும் ஏராளமான மிருகங்களுடன் கணக்குப் போட்டு Encephalization Quotient( EQ)என அழைத்தனர். மனிதர்களுக்குத்தன் இந்த EQ அதிகம். மனிதர்களுக்கு இந்த விகிதாச்சாரத்தின் மதிப்பு. என்கின்றனர். மனிதர்களின் மூளை அதே அளவு எடையுள்ள இன்னொரு மிருகத்தின் மூளையின் எடையைவிட ஆறு மடங்கு அதிகம். அதனால்தான் மனிதனால் புலியைக் கூண்டில் அடைத்து வைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்தோடு சிப்ஸ் பாப்கார்ன் சாப்பிட்டவாறு வேடிக்கை பார்க்க முடிகிறது.
ஆனால் வெறும் மூளை எடையோ, உடல் எடை/ மூளை எடை விகிதாச்சாரம் மட்டுமே முக்கியம் இல்லை. சில வகை எலிகளுக்கும் இந்த விகிதாச்சாரம் மனிதனைவிட அதிகமாக இருக்கிறது. அப்படிப் பார்த்தால் எலிப்பொறியில் ‘‘சாரி! எனக்கும் EQ அதிகம்!” எனத் துண்டுசீட்டு வைத்துவிட்டு எலிகள் தப்பித்திருக்குமே. மசால்வடைக்காக மரணமடையாதே?
பின்னர்தான் ஃபீனியஸ் கேஜின் விபத்துக்குப் பின்னர் நடந்த பல ஆராய்ச்சிகளின் முடிவில் மூளையின் முன்பகுதிதான் மனிதனின் தனிச்சிறப்புக்குக் காரணம் எனக் கண்டறிந்தனர். உயிரினங்களிலேயே மனித மூளையின் முன்பகுதிதான் மிகப்பெரியதும் சிக்கலானதானதும் ஆகும்.
உயிரினங்களின் மூளையில் மூன்று அடுக்கிலான செயல்பாடுகள் அமைந்துள்ளன
1. உடலியக்கம், இருதயம், சுவாசம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அடிப்படையான நரம்புகளின் கட்டமைப்பு- இதை Reptilian brain என்கிறார்கள். வெறும் அடிப்படையான தேவைகளை மட்டுமே நிறைவேற்றக்கூடிய பகுதி இது. உயிர்களின் பரிணாம அடுக்கில் கீழ்நிலையில் இருக்கும் பூச்சிகள் போன்ற உயிரினங்களுக்கு இந்த அளவே மூளை இருக்கும். உணர்ச்சிகள், நினைவுகள் போன்றவற்றுக்கு இடமில்லை. மனித மூளையிலும் இந்தப் பணிகளைச் செய்யும் பகுதி மூளையின் கீழ்பகுதியில் தனியாக இருக்கிறது. தண்டுவடமும் மூளையும் சந்திக்கும் இடம், Brain Stem என அழைக்கப்படும் மூளையின் தண்டு. இப்பகுதி அடிப்படை செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது, உயிரினத்தின் கட்டுப்பாடு இல்லாமல் தன்னிச்சையாக இயங்கக்கூடியது (Autonomic)
2. அடுத்ததாக உணர்வுகள், நினைவுத்திறன் போன்ற செயல்பாடுகளைச் செய்யும் பகுதி. Mammalian Brain என அழைக்கப்படும் இப்பகுதி பிற உயிரினங்களுக்கும் இருக்கும். கோபம், பாசம், தாய்மை, மகிழ்ச்சி போன்ற உணர்வு நிலைகள் ஏற்படக் காரணமான பகுதிகள் இவை, அதே போல் நினைவுத்திறனும் இந்தப் பகுதியில்தான் இயங்குகிறது. மனிதர்களுக்கும் உணர்ச்சிகள், நினைவுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் லிம்பிக் சிஸ்டம் (limbic system )எனப்படும் பகுதி இச்செயல்களைச் செய்கின்றது. பசி, பாலுணர்வு, பயம் என எல்லா உணர்வுகளும் இங்கு எழுகின்றன, இது மட்டுமே இருந்தால் வெறும் விலங்குதான்.
3. மூளையின் முன்பகுதியான Frontal lobe (ஃப்ராண்டல் லோப்). கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்றையும் ஆராய்ந்து நமது நடவடிக்கைகளை அதற்குத் தக்கவாறு தயார் செய்யும் பகுதி இது. அடுத்தவர்களையும் சமூகத்தையும் சூழலையும் ஆராயும் பகுதியும் இதுதான். மனிதன் தன்னைத்தானே கட்டுப் படுத்திக் கொள்ள உதவும் பகுதி சுருக்கமாகச் சொன்னால் மனிதனை மனிதன் ஆக்குகிறது. இந்தப் பகுதி பாதிப்படைந்தால் காரனமற்ற கோபம், வன்முறை போன்றவற்றில் இறங்கிவிடுவான். ஃபீனியஸ் கேஜ் போல். ஒரு திரைப்
படத்தில் ஆட்டோ ஓட்டுனராக வரும் வடிவேலு காலை எழுந்ததும் தாய் தந்தையை வணங்கிப் பூஜித்துவிட்டுச் செல்வார். ஆனால் மாலை ஆனதும் மது உள்ளே சென்றதும் அவர்களைத் தாறுமாறாக ஏசத் தொடங்குவார். காரணம், மது இப்பகுதியைப் பாதிப்பதால்தான்.
நமக்கு உடனடியாகத் தோன்றும் உந்துதல்களைக் கட்டுப்படுத்திக் கொள்வது இப்பகுதியால்தான். ஒரு ஹோட்டலில் உங்களுக்குப் பக்கத்து டேபிளில் சுவையான உணவை வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் ஒருவர். அது உங்களைத் தூண்டினாலும் நீங்கள் அவரது பிளேட்டில் கைவைக்க மாட்டீர்கள். காரணம், உங்கள் மூளையின் இப்பகுதி உங்களைக் கட்டுப்
படுத்துகிறது. காரணமின்றித் திட்டும் மேலதிகாரி மூக்கில் குத்த வேண்டும் என்ற உந்து தலைக் கட்டுப்படுத்துவதும் இதே பகுதிதான். காமத்துக்கும் அப்படியே.
இந்தப் பகுதி மட்டும்தான் மனித மூளையில், மனதைக் கட்டுப்படுத்தும் முக்கிய பகுதியா? எண்ணங்ககள் இங்குதான் உரு
வாகிறதா? நிச்சயமாக இல்லை. இப்பகுதி நமது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் செயல்களையும் கட்டுப்படுத்தும் ஸ்டீயரிங்க் மற்றும் பிரேக் போன்றதுதான்.
அப்படியானால் மனம் என்பது எண்ணங்களால் ஆனதுதானே? அந்த எண்ணங்கள் எங்கு உருவாகின்றன??
(தொடரும்)
ramsych2@gmail.com