குழந்தையின் இதயத்தைப் போன்றொரு பிஞ்சு அகல் விளக்கு
அதில்
குழந்தையின் மஞ்சள் நாவைப் போன்றொரு மெலிந்த சுடர்
அதைப்
பெரிய புயலொன்றை வைத்து ஊதி அணைக்கிறார்கள் யாரோ
குழந்தை மரணமுறுகிறது.
***
இந்த நாய்க்குட்டி ஏன் இவ்வளவு முன் கூட்டியே
வந்துவிட்டது?
ஒரு நாளானது திறக்கும் முன்பே
வயலில் கோதுமைகள் விதைக்கும் முன்பே
ரொட்டிக் கடைக்காரன் பிறக்கும் முன்பே
அவனின் தகப்பனும் தாயும் சந்தித்துக் கொள்ளும் முன்பே
பழமையான ரொட்டியின் வாசனையை நுகர்ந்தபடியே
வந்துவிட்டாய் நாய்க்குட்டியே
17 ஆண்டுகள் முன்பே சுட்டு அடுக்கப்பட்ட
உன் கற்பனை ரொட்டி
எவ்வளவு இறுக்கமானது தெரியுமா?
மேலும் 17 ஆண்டுகள் அதைக் கடித்துக் கொண்டிருப்பாய்
வாயெல்லாம் உன் சொந்தக் குருதி வழிய வழிய…
***
என் தொண்டைச் சளியே
உன் மார்பிலிருக்கும் குறுமிளகே…
(நரன்)

நரனின் கவிதைகள் குறித்து பேசும் எவரும் “மேஜிக்” என்கிற சொல்லை வந்தடைவதைக் கவனித்திருக்கிறேன். தமிழ்க் கவிதை பரப்பில் தென்படும் வினோத உயிரிகள் அவன் கவிதைகள். அதன் புதுமையின் நிமித்தம் தனித்துத் தெரிபவை.

கவிதையின் இயல்பே புதிதுதான். நமக்கு பிடித்துப் போன எல்லா கவிதைகளிலும் நாம் இதுவரை காணாத ஏதோ ஒரு புதிது உள்ளது. நாம் இங்கு காணப்போகும் கவிதைகளைப் புதுமை கூடியவை என்று வகைப்படுத்தலாம். சொல்லாலோ, பொருளாலோ, சொல்லும் உத்திகளாலோ இவை ஆயிரம் நல்ல கவிதைகளுக்கிடையிலும் தனித்துக் கண் சிமிட்டுபவை. சங்கத்து அவ்வை துவங்கி நவீனப் பாணன் என்று மெச்சப்படுகிற வெய்யில் கவிதைகள் வரை இந்தப் புதுமைப்பித்தின் சங்கிலி தொடர்ந்து வரக் காண்கிறோம்

அவ்வையின் புறநானூற்று பாடல் ஒன்று.. அதியமான் இறந்தபோது பாடிய கையறு நிலைப்பாடல்..

சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே
பெரிய கள் பெறினே
யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே…
…………………………
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளைஉரீஇ
இறப்போர் கையுளும் போகி
புரப்போர் புன்கண் பாவை சோர
அம்சொல் நுண் தேர்ச்சி புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அருநிறத்து இயங்கிய வேலே
ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ
இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று
ஈகுநரும் இல்லை………

அதியமானின் நெஞ்சை நோக்கி எறிந்த வேல் முதலில் பாணர்களின் உண்கலங்களைத் துளையிடுகிறது. பிறகு இரவலர்களின் கைகளை ஊடுருவுகிறது. பிறகு பாணனை நம்பி வாழும் அவன் சுற்றத்தார் கண் மயங்கிச் சோர, நுண்ணறிவு கொண்ட புலவர் நாவில் சென்று தைக்கிறது என்கிறது பாடல். அதியனை நோக்கி எறிந்த வேல் பலவாகி வெவ்வேறு இடங்களில் அவனை நம்பியிருந்த எல்லார் மேலும் விழுந்து தைத்தது என்று வாசிக்கலாம் அல்லது வேல் பாணர் கலங்களை உடைத்து, இரவலர் கைகளைக் கிழித்து, புலவர்கள் நாவைத் தைத்து இறுதியில் அதியமானின் நெஞ்சில் சென்று விழுந்தது என்று வாசிக்கலாம். எப்படி வாசித்தாலும் இப்பாடலின் அதிசயம் குறைந்துவிடவில்லை.

அணி என்றால் அலங்காரம். தண்டியலங்காரம் அணி இலக்கணம் பேசவே எழுந்த தனி நூலாகும். இலக்கணங்களில் அணி இலக்கணம் ஒரு சுவாரஸ்யமான பகுதி. அவை அழகோடும், புதுமையோடும் தொடர்புள்ளவை. ஆகவே அணி இலக்கணத்தோடு திகழும் பாடல்கள் நம் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்து விடுபவை. பள்ளியில் பயின்ற,. பிறிது மொழிதல் அணி”யில் திகழும். பீலி பெய் சாகாடும்..” எனத் துவங்கும் குறள் பிறிதை மொழிந்து, தான் நினைக்கும் கருத்தை வலியுறுத்தும் உத்திக்காகவே என்னை சட்டென ஈர்த்துக்கொண்ட ஒன்று. “தற்குறிப்பேற்ற அணி. குறித்து அறிந்த நாளில் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி விட்ட மகிழ்ச்சியில் திளைத்துக் கிடந்தேன்.. பாரி பாரி என்று பல ஏத்தி” என்கிற கபிலரின் பாடல் நம் எல்லோர் மனங்களிலும் மனப்பாடமாக இருக்க. வஞ்சப்புகழ்ச்சி அணி” யின் சுவாரஸ்யமே காரணம். இந்த அணிகளின் சாயைகள் இன்றைய கவிதை வரை ஏதேனும் ஒரு விதத்தில் தொடரவே செய்கின்றன. உவமை இல்லாமல் மொழியே இல்லை என்கிற அளவிற்கு உவமையணி நம் மொழியை ஆக்கிரமித்துள்ளதைப் பார்க்கிறோம். சமீபத்தில் வாசித்த என்.டி.ராஜ்குமாரின் ஒரு கவிதை..

“கரு நாகத்தின்
சுழி முனையில்
வல்லயத்தின் கூர்மையுடன்
மணிச்சதங்கை அதிர
உக்கிர தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது
அட்டகாசமான நம் காதல்.

இந்த உவமையழகை இனி மறக்க இயலுமா? காதல் நினைவு எழும் போதெல்லாம் இனி கருநாகத்து மணிச்சதங்கையும் கூடவே எழும் அல்லவா? அதியமானின் பரிசு எவ்வளவு நிச்சயமானது என்பதற்கு அவ்வை சொல்லும் உவமை. யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போல” என்பது. இனி யாரும் அதை யானையிடமிருந்து தட்டிப் பறித்துவிட முடியாதல்லவா? அவ்வளவு உறுதி! அவ்வளவு நம்பிக்கை! சங்க இலக்கியம் முழுக்கவே இது போன்ற உவமையழகுகள் நிரம்பியவை.

ஆதி மனிதனுக்குத் தன் அடிப்படைத் தேவைகளைப் பரிமாறிக் கொள்ள சைகையே போதுமானதாக இருந்திருக்கும்.. உன்னைப்புணர விரும்புகிறேன்” என்பதற்கு நிச்சயம் ஒரு சைகை இருந்திருக்கும்.. உன் மார்பில் தலைசாய்த்து துயில விரும்புகிறேன்” என்பதைச் சொல்ல சைகை உதவியிருக்காது என்று நினைக்கிறேன். அவன் மனம் வளர வளர அவனுக்கு சைகை பத்தாமல் போயிருக்கலாம். அவன் நிர்வாணத்திலிருந்து இலையாடைக்கு மாறினான். மொழியைக் கண்டறிந்தான். நாகரீகமடைந்தான். மொழி வழி சிந்தித்து இன்று எல்லா உயிர் குலங்களுக்கும் மேலானவனாகத் திகழ்கிறான். மொழியை இலையாடையின் குழந்தை என்று சொல்லலாம்.

சைகை போதாமல் மொழி வந்தது போல் புழங்குகிற மொழியின் போதாமையால்தான் அதில் புதுப்புது அழகுகள் முளைத்தெழுகின்றன. புதுப்புது சொற்கள் உருவாகின்றன. சாமானியனுக்கே சமயங்களில் மொழி போதாமல் போய்விடுகிறது எனும்போது மொழியில் வாழும் கவியின் நிலை கவலைக்கிடமாகி விடுகிறது. அவன் ஒன்றைச் சொல்ல விரும்புகிறான். அதைச் சரியாகச் சொல்ல முயல்கிறான். சரியாகச் சொன்ன பிறகும் அதில் ஏதோ நிறைவில்லை. சரியாகச் சொன்னது போதாமல் புதிதாகவும் சொல்லத் துடிக்கிறான். சொல்லச் சொல்ல சொன்னதெல்லாம் பழசாகி விடுகிறது. புதிய சொல்லிற்கு, புதிய அழகிற்கு அவன் ஏங்கிச் சாகிறான்.நெருப்பென்றால் வாய் வெந்துவிட வேண்டும் என்று புலம்புகிறான். அவ்வளவு பெரிய வானத்திலிருந்து புதிதாக ஏதேனும் இறங்கி வந்துவிடாதா என்று அண்ணாந்தபடியே நடந்து போய் லாரிக்குள் விழுகிறான்.

தற்குறிப்பேற்ற அணியில் ஒரு பாடல்.. புகழ் பெற்ற பாடல்தான்.. சிலப்பதிகாரத்தில் மதுரை நகருக்குள் கோவலனும் கண்ணகியும் நுழையும் காட்சி..

கருநெடுங் குவளையும், ஆம்பலும், கமலமும்
தையலும் கணவனும் தனித்து உறு துயரம்
ஐயம் இன்றி அறிந்தன போல,
பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி,
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க;
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங் கொடி,
‘வாரல்’ என்பன போல், மறித்துக் கை காட்ட;

இருவரும் ஒரு அகழியைக் கடந்து வருகிறார்கள். அதில் உள்ள மலர்களைச் சுற்றி வண்டினங்கள் இயல்பாக ரீங்கரிக்கின்றன. ஆனால் இருவரும் அடையப் போகும் துயரத்தை முன்பே அறிந்து வண்டின் வாயாலே மலர்கள் அழுகின்றன என்கிறார் இளங்கோவடிகள். அங்குள்ள மதில் மேல் ஒரு கொடி இயல்பாகப் பறக்கிறது. அக்கொடி இருவரையும் பார்த்து “வர வேண்டாம் … வர வேண்டாம்” என்று மறிப்பது போல் கைகாட்டிப் பறப்பதாகச் சொல்கிறார் அடிகள்.

இது போன்றே ஒரு கொடி கம்பராமாயணத்தில் வருகிறது. சீதையை முதன்முதலாக காணவரும் ராமனை மிதிலை நகரத்துக் கொடிகள்

“ஒல்லை வா”

என்று விரைந்து வரச்சொல்லி அழைக்கின்றனவாம்.

தமிழ்க்கவிதையை ஒரு காலத்தில் ஹைக்கூ என்கிற கொள்ளை நோய் தாக்கியது. வீதிக்கு நாலு பிணங்கள் விழுந்தன. புதைக்க இடமில்லாமல் ஒரே குழிக்குள் ஒன்பது பிணங்களைத் தள்ளி மூட வேண்டியிருந்தது. ஹைக்கூவை மூன்று வரி முரண் என்று தவறாகப் புரிந்து கொண்டதால் இங்கு அவை வாரி வாரி இறைக்கப்பட்டன. “ஹைக்கூ எழுதாதே, அது நம் சுதந்திரத்திற்குப் பிடித்த கேடு” என்பதை சில இளைஞர்களுக்கு உபதேசமாகவும் வழஙகியிருக்கிறேன். ஆனால் “ஹைக்கூ என்பது கவிஞனின் உச்சபட்ச சாத்தியத்தை கோரும் ஒரு வடிவம்” என்று சொல்லப்படுகிறது. ஒரு கவியாக கவிஞர்களின் அசட்டை குறித்தும் நான் அறிவேன் என்பதால் ‘‘இந்தக் கோணம் பொருட்படுத்தத்தக்க ஒன்றே. இந்த உச்சபட்ச சாத்தியம்” என்பதை நமது திருக்குறளில் பொருத்திப் பார்த்தால் அய்யன் தன் உயிரை ஈந்து செறிவேற்றிய பாடல்கள் என்று பலவற்றைச் சொல்லலாம். வார்த்தை விளையாட்டுகள், அணி விளையாட்டுகள் தவிர்த்து தன் வசம் உள்ள ஒண்ணே முக்கால் அடிக்குள் அய்யன் நிகழ்த்திய ஜாலங்கள் அநேகம்.. ‘‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி…” என்கிற பாராட்டு சத்தியமானது என்பதை நாம் பல பாடல்களில் காண முடியும்.

நடுகல் குறித்த வரலாற்றுச் செய்தி நாம் அனைவரும் அறிந்ததே.. படைச்செருக்கு அதிகாரத்தில் ஒரு குறள்… பேசப்போவது படைச்செருக்கைத்தான். ஆனால் அதில் காதலின் தேன் தடவி வைத்துள்ளார். அப்பாடல் ஒரு தலைவியின் கூற்று போல் அமைந்துள்ளது…

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன் நின்று கல்நின்றவர்.
என்னை. என். – தலைவன்)

முக்கியமான வரலாற்றுச் செய்தியை. கல் நின்றவர்” என்கிற இரண்டே இரண்டு சொல்லில் சொல்லிவிட்டுக் கடந்து விடுகிறார். நமக்கு விளங்கி விடுகிறது. விளங்குவது மட்டுமல்ல, தித்திக்கவும் செய்கிறது. படைச்செருக்கு அதிகாரத்தின்கீழ் வாசிக்காமல் தனியே வாசித்தாலும் விளங்குவதில் சிக்கல் ஒன்றுமிருப்பதில்லை.

காமத்துப்பாலில் “புலவி நுணுக்கம்” என்கிற முழு அதிகாரமும் காதல் உறவில் இன்றும் காணக்கிடைக்கும் ஒரு சுவாரஸ்யமான நாடகம்.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
யாரினும் உன்னைக் காதலிக்கிறேன் என்றேன். யாரை விட. யாரை விட? எனக்கேட்டு ஊடுகிறாள்.
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

இருளானது விளக்கு அணையும் கணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது போலே, தலைவன் தலைவியைவிட்டு நீங்கவெனக் காத்து நிற்கிறது பசலை.

விளக்கு அணைந்த மறுகணம் முழுஇருள் சூழ்ந்து கொள்வது போல, தலைவன் தலைவியை நீங்கிய மறுகணம் பசலை படர்ந்து நிறைந்து விடுகிறதாம். இந்தப் பாடலில் பசப்பு ஒரு பிசாசைப் போல கட்டிலின் மேலுள்ள விட்டத்தில் தருணம் பார்த்து, தயார் நிலையில் குந்தியுள்ள காட்சி ஒன்று விரிகிறதல்லவா?

தமிழ் இலக்கிய வரலாற்றில் நகை என்கிற சுவை தனிப்பாடல்களின் காலம் வரை அரிதாகவே காணக்கிடைக்கிறது. அப்படி அரிதான ஒரு நகை நந்திக்கலம்பகத்தில் உண்டு. தமிழ் இலக்கியங்களில் நகை தேடும் முயற்சியாக நான் எழுதிய ‘‘பழைய யானைக் கடை” நூலிற்காக ஒரு நாள் நள்ளிரவு இரண்டு மணி அளவில் இந்தப் பாடலைக் கண்டறிந்தேன். அதிகாலையில் வழக்கம் போல் எழுந்து வழக்கத்திற்கு மாறாக நடைப்பயிற்சியில். கி.மீ சேர்த்து நடந்தேன். ஒரு நாளைய உற்சாகத்தில் மிதக்கச் செய்த பாடல்…

ஈட்டுபுகழ் நந்திபாண நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவுங். காட்டில் வாழும்
பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி
நாய் என்றாள் நீ என்றேன் நான்.

தலைவனின் பரத்தமை தொடர்பாக ஊடலில் இருக்கிறாள் தலைவி. ஊடல் தீர்ப்பதற்காக ஒரு பாணனைத் தூது அனுப்புகிறான் தலைவன். அந்தப் பாணனை நோக்கிய தலைவியின் பாடல் இது…

நந்தியின் பாணா! நீ என் தங்கையான பரத்தையின் வீட்டில் இருந்தபடி விடிவளவும் பாடிய பாடல்களைக் கேட்டோம். அச்சத்தம் கேட்டு காட்டில் வாழும் பேய் என்றாள் அன்னை. பிறர் நரி என்றார். தோழி நாய் என்றாள். நீ என்றேன் நான்.

கலிங்கத்துப்பரணி வியக்கச் செய்யும் போர்க்களக் காட்சிகள் கொண்டது. பேய்களைக் குறித்த அச்சமுட்டும் வர்ணனைகளையும் பாலை நிலத்தின் பயங்கரச் சித்திரங்களையும் இதில் விரிவாகக் காணமுடிகிறது. இன்றைய தமிழ் சினிமாவின் சக்சஸ்ஃ பார்முலாவான திகிலும் காமெடியும் கலந்தவை என்று இதன் போர்க்களக் காட்சிகளைச் சொல்லலாம்.

செந்நெருப்பினை கதடு செய்து பார்
செய்த தொக்கும் அச்செந்தரைப் பரப்பு
அந்நெருப்பினில் புகை திரண்ட தொப்பு
அலது ஒப்புறா, அதனிடைப் புறா

செக்கச் சிவந்த நெருப்பைத் தகடாக்கி நிலத்தின் மேல் போர்த்தியது போல் கொதிக்கிறது பாலை நிலம். அந்த நெருப்பிலிருந்து புகை எழுவது போல எழுந்து பறக்கின்றனவாம் சில புறாக்கள்.

தீயின் வாயில் நீர் பெறினும் உண்பதோர்
சிந்தை கூர வாய் வெந்து வந்து
செந்நாயின் வாயில்நீர் தன்னை நீரென
நவ்வி நாவினால் நக்கி விக்கும்.

கொடிய வறட்சியால் தாகித்துக் கிடக்கும் மான்கள் உயிரச்சத்தையும் விடுத்து செந்நாயின் வாயிலிருந்து வழிகிற எச்சிலையும் தண்ணீராய் கருதி நக்கி விக்கும் நிலையில் கிடக்கிறது பாலை. தீயின் வாயில் நீர் இருந்தாலும் அதைப் பெற தயாராக இருக்குமாம் மான் கூட்டம்.

போர்க்களத்தில் இறந்து கிடக்கும் உடல்களைக் கொண்டு நிணக்கூழ் செய்து குடிக்கின்றன பேய்கள். அங்கு முறிந்து கிடக்கிற யானைத் தந்தத்தால் பல்லை விளக்கி, ஒரு யானையின் விலா எலும்பை உருவியெடுத்து அதில் நாக்கை வழித்து சுத்தம் செய்து கொள்கின்றன. இப்படியாகப் பேய்கள் அம்புகளால் நகம் திருத்தி, வெண்மூளை பூசி குளித்து முடித்து, படுவீரர் பற்களை அரிசியாக்கி, உணவு சமைத்து உண்பது வரை விரிவாகப் பேசப்பட்டுள்ளது. உண்டு முடித்த பின் வெற்றிலை போட வேண்டாமா?

பண்ணும் இவுளிச் செவிச்சுருளும்
பரட்டிற் பிளவும் படுகலிங்கர்
கண்ணின் மணியிற் சுண்ணாம்பும்
கலந்து மடித்துத் தின்னீரே!

குதிரையின் செவிச்சுருளை வெற்றிலையாக்கி, அதன் குளம்புத் துண்டங்களைப் பாக்காக்கி, ஒரு வீரனுடைய கண்ணின் மணியை சுண்ணாம்பாகத் தொட்டுக் கொண்டு வெற்றிலை இடுகின்றன பேய்கள்.

சித்தர் பாடல்களின் புதுமை என்பது அதன் அப்பட்டமான உண்மைதான். மனிதனின் இனிய கனவுகளைக் கலைக்கவல்ல பயங்கரமான உண்மைகளை, அவ்வளவு மூர்க்கமான மொழியில் நேர்கொள்ள நமக்குத் துணிவில்லை.ஆகவே அதுவரை அத்தன்மை ஏடேறவில்லை. உண்மை புதுமையாவது யோசிக்கையில் விந்தையாகத்தான் உள்ளது

மக்கள் பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர்
மாளும்போது கூடவவர் மாள்வதில்லையே…..
கானலை மான் நீரெனவே கண்டு செல்லல் போல்
காசினி வாழ்வினை மூடர் கண்டு களிப்பார்…
****
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்
இத்தை நீங்கள் இனிது என வேண்டா…
****
அருந்தின மலமாம். புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம்: வெறுப்பன உவப்பாம்
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை: அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்….
கம்பராமாயணத்தில் இருந்து ஒரு பாடல்…
மஞ்சினில் திகழ்தரும் மலையை, மாக்குரங்கு
எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே, நளன்
விஞ்சையில் தாங்கினான்; சடையன் வெண்ணையில்
தஞ்சம் என்றோர்களைத் தாங்கும் தன்மை போல்.

சீதையை மீட்க இலங்கை செல்ல வேண்டி வானர வீரர்கள் சேது சமைத்த காட்சியைச் சொல்லும் பாடல் இது. மேகம் தவழும் மலையைப் பிடுங்கி ஒரு குரங்கு ஏறிய அதை நளன் என்பவன் தான் கற்றுத்தேர்ந்த வித்தையாலே ஒரே ஆளாகத் தாங்கினான். எப்படி எனில் திருவெண்ணெய் நல்லூரில் சடையப்ப வள்ளல் தஞ்சம் என்று வருவோரை எப்படித் தாங்குவாரோ அப்படி.

இந்தப் பாடலின் கடைசி இரண்டு வரிகள் பட்டி, டிங்கரிங் செய்யப்பட்டவை. பேட்ச்ஒர்க் தெளிவாகத் தெரிகிறது. ஆயினும் கம்பனின் வாழ்வு, வறுமை போன்று நாம் அறிய நேரும் செய்திகளைக் கொண்டு இப்பாடலை ஆரத் தழுவிக்கொள்ளவே என் மனம் விரும்புகிறது. மேலும் இப்பாடலில் ஒரு இனிய காலக்குழப்பம் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி தன் கைகளுக்குள் காலத்தை வைத்து ஒரு குலுக்கி குலுக்கி எறிந்தது போல் உள்ளது இப்பாடல். நமது சாரதி வியத்தகு வழிகளில் பயணிக்கிறார். ராமேஸ்வரத்திலிருந்து ஒரே ஒரு “U TURN” போட்டால் போதும், திருவெண்ணெய்நல்லூர் வந்துவிடுகிறது.

இந்தப்பாடல் எழுதப்பட்ட நாளில் அப்படி என்னதான் நடந்திருக்கும்? கடன்காரன் கம்பன் வீட்டுச் சாமானங்களை வீதியில் தூக்கியெறிய அதிலொரு பாத்திரம் சடையன் காலில் பட்டு விழுமாறு, மிகச்சரியாக அவன் அங்கு தோன்றியிருப்பானா? அடியாழத்திற்குச் சென்றுவிட்ட அரிசிக்கலயத்தை கம்பன் மனைவி சுரண்டியெடுக்கும் ஒலியும், சடையன் கொடுத்தனுப்பிய நெல் மூட்டை கம்பனின் வீட்டில் விழுகிற ஒலியும் ஒரு சேர எழுந்திருக்குமா?

காளமேகப் புலவரின் பாடல்கள் அதிகமும் ஜனரஞ்சகத் தன்மை கொண்டவை. சொற்சிலம்பம் ஆடுபவை. வித விதமாக சிலேடை போடுவது, கொச்சை என்று அஞ்சப்படுபவற்றைத் துணிந்து கைக்கொள்வது, ‘செருப்பு’ எனத்துவங்கி ‘விளக்குமாறு’ என்று முடிப்பது போன்ற எளிய வித்தைகள், சொற்களைச் சேர்த்துப் பிரித்து அர்த்தங்களில் விளையாடுதல் என சமத்காரங்களில் தேர்ந்தவர் அவர். வசையை ஒரு சுவையாக முன் வைத்தவர். அதனால். ‘‘வசை பாட காளமேகம்” என்றே சிறப்பிக்கப்பட்டவர். அவரது மொழிப்புலமை வியக்கவைப்பது. அதில் சந்தேகமில்லை. ஆனால் இன்று கவிதை என்கிற அர்த்தத்தில் சொல்லப்படுகிற வஸ்துவுடன் அவரது உறவு குறைவே என்று படுகிறது. எனினும் கடவுள் என்கிற சூப்பர் பவருடன் அவர் தைரியமாக விளையாடிய விளையாட்டுகளைக் கவிதை என்று சுட்டலாம். காளமேகத்தை எங்கு வைப்பது என்பது எப்போதும் எனக்கு ஒரு தீராத தலைவலிதான்

முருகப் பெருமானின்சிறப்புகள் இவை…
அப்பன் இரந்துண்ணி; ஆத்தாள் மலை நீலி
ஒப்பரிய மாமன் உறி திருடி; சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன், ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணும் பெருமை இவை.
*****
வாதக்காலாம் தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம்
பேதப் பெருவயிறாம் பிள்ளை தனக்கு. ஓதக்கேள்
வந்தவினை தீர்க்க வகையறியார் வேளூரர்
எந்த வினை தீர்ப்பாரிவர்.

நடராஜன் வாதக்கால் நோயாளி ஆகிவிட்டார். பாற்கடல்வாசி நீரிழிவு நோயாளி ஆகிவிட்டார். விநாயகருக்கோ பெருத்த வயிறு. இப்படி தமக்கு வந்த வினைகளையே தீர்க்க இயலாத சிவபெருமான் நமது வினைகளை எப்படித் தீர்ப்பார? என்கிறார்.

இது போன்ற பாடல்கள்” நிந்தாஸ்துதி” என்று வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது நிந்தனையில் துதிப்பது.

புதியன விரும்பு.. ‘‘சோதிமிக்க நவகவிதை” என்று பேசிய பாரதியின் வசனக் கவிதைகளை நவீனக்கவிதையின் தோற்றுவாய்களில் ஒன்று எனலாம். இதன் உள்ளடக்கம் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், உருவம் நிச்சயம் பாரதியின் ஆங்கில வாசிப்பின் பாதிப்பில் அமைந்ததுதான்.இதன் யாப்புத் தளைகளற்ற சுதந்திரமான வசன வடிவமும், காட்சி சித்தரிப்புகளும் நவீனக் கவிதைகளின் குணாம்சங்கள்.

ஞாயிறே, இருளை என்ன செய்து விட்டாய்?
ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா?
கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்து
விட்டாயா?
இருள் நினக்குப் பகையா?
இருள் நின் உணவுப் பொருளா?
அது நின் காதலியா?
இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டு
இருந்ததா?
நின்னைக் கண்டவுடன் நின்னொளி தானுங் கொண்டு
நின்னைக் கலந்து விட்டதா?
நீங்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளா?
முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி
உங்கள் தாய் ஏவியிருக்கிறாளா?
உங்களுக்கு மரணமில்லையா? நீங்கள் அமுதமா?
உங்களைப் புகழ்கின்றேன்.
ஞாயிறே, உன்னைப் புகழ்கின்றேன்.

பூதலத்தில் எஞ்சியிருக்கும் ரம்மியங்களில் ஒன்று காதல். யுகயுகமாய் விடாது மணம்பரப்பி வரும் இதம். ஓருடல் ஈருயிர் என்றாகி வந்த பிணைப்பு. சுனையில் கொஞ்சமே இருக்கும் நீரைத், தன் பிணைமான் உண்டு தாகம் தீர்க்கட்டுமென்று ஆண்மான் வெறுமனே குடிப்பது போல் நடித்துக் கொண்டிருக்கும் காட்சியைக் காட்டுகிறது ஒரு சங்கப்பாடல். என்ன ஒரு உன்னதமான அன்பு! இன்றைய கவிஞர்களை சங்க இலக்கியம் படி… படி என்றால் படிப்பதில்லை. பாருங்கள்.. எல்லாப் புனிதங்களையும் பூட்ஸ் காலால் நசுக்குவதற்கென்றே பிறந்தது போல கவிதை எழுதுகிறார்கள். பெருந்தேவியின் 68ஆவது பிரிவு என்கிற கவிதை பிரசித்தி பெற்றது. அவரது லதாவும், கந்தசாமியும் தற்போது 1003ஆவது பிரிவில் இருப்பதாக நேற்றைய மாலை முரசில் ஒரு பிட் நியூஸ் படித்தேன். அவரது இன்னொரு கவிதை..

கலி முத்திவிட்டது
முன்பு போலெல்லாம்
காதலர்கள் இப்போதில்லை
குட்டி நீல ஆர்ட்டின்களை அவளைத் தவிர
வேறு யாருக்கும் அனுப்ப மாட்டேனென்று
உறுதியளிக்க அவன் தயாராக இல்லை.
அவனோடும் இன்னொருத்தனோடும் ஒரே சமயத்தில்
ஈர அரட்டையில் ஈடுபட மாட்டேனென்று
உத்தரவாதம் தர அவளும் தயாராக இல்லை.
அரட்டை என்றால் போதாதா? ஈரம் வரை போயாக வேண்டுமா?
அடுத்து கடிதவடிவில் ஒரு கவிதை. காதல் கவிதை… மன்னிக்கவும்… காதல்களின் கவிதை
கடிதங்கள்
அன்புள்ள செழியன்
நான் உன்னை நினைக்காத நாள் இல்லை
அன்புள்ள விக்கி
நீ அவளை முத்தமிடுவதைப் பார்த்துவிட்டேன்
அதற்குப் பிறகும் திரும்புவதற்குத் திராணியில்லை
………….
அன்புள்ள அஷோக்
உன்னைப் பிடித்திருக்கிறது
ஆனால், வேறு மாதிரி பிடிக்கவில்லை
………….
அன்புள்ள அன்வர்
உன்னோடு இரவு முழுக்கப் பேசிக்கொண்டே இருக்கலாம்
ஒரே படுக்கையில்
தனித்தனியாக
………….
அன்புள்ள ஜேம்ஸ்
நீ சற்று முன்பே அன்பைச் சொல்லி இருக்கக்கூடாதா
………….
அன்புள்ள மேரி
நாம் முத்தமிட்டுக் கொண்டது
உன் கணவனுக்குத் தெரியுமா
உன் உள்ளாடை ஒன்றை இன்னும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
இவை லீனா மணிமேகலையின் நீண்ட கவிதையில் சில பகுதிகள். இன்னொரு கவிதை இப்படி முடிகிறது..
நீ கண்ணனும் இல்லை
நான் ராதையும் இல்லை
நீ காத்தவராயன்
நான் இசக்கி
நமக்கெதற்கு காதல்
வா புணர்வோம்
அம்மணியீர்! செளந்தர்ய லாகிரியின் மீது பான்பராக் எச்சிலைத் துப்புவதை எப்போது நிறுத்தப் போகிறீர்?

கவிஞர் வெய்யில் தன் நேர்காணல் ஒன்றில் சொல்கிறார்..

“எது கவித்துவம்? எல்லோருக்கும் பொதுவான கவித்துவம் என்ற ஒன்று இருக்கிறதா என்ன? செவ்வியல், நவீனம், பின்நவீனத்துவம், எதிர்கவிதைப் போக்குகள் எனக் களம் மாற மாற கவித்துவத்திற்கான வியாக்கியானங்களும் வரையறைகளும் மாறும். 90களில் பெண்ணியக் கவிதைகளும் தலித்தியக் கவிதைகளும் முன்வைத்த அழகியல் மற்றும் கவித்துவம் குறித்த பார்வைகள் முற்றிலும் அதுவரையிலான பார்வைக்கு எதிரானவை இல்லையா? அப்படியானால் அவற்றில் கவித்துவம் இல்லையா? அத்வைதக் கருத்துகளை, வெற்றுத் தத்துவங்களை ஆன்மிகம் கமழ எழுதி உயர்கவிதை என்று சொல்ல ஒரு கூட்டமிருக்கிறது என்றால், வாழ்வின் ரத்தமும் சதையுமான நாற்றமும் குமட்டலுமான அனுபவத்தைக் கொஞ்சம் சத்தமாக… கொஞ்சம் கோபமாக எழுதி கவிதை என்று சொல்லும் ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்யும். கவித்துவம், கலாரசனை, கலாபூர்வம் போன்ற வார்த்தைகளை மீண்டும் நாம் உலைக்களத்தில் இட்டுப் பரிசீலிக்க வேண்டும். மேலும், எல்லா கவிதைகளும் எல்லாருக்குமானவையாக இருப்பதில்லை.”

நான் மிக உறுதியாக பன்றிகளுக்கு ரோஜாவைத் தின்னத் தர மாட்டேன்.ஆனால் அப்படித் தின்னத்தரும் ஒருவனை என்னால் புரிந்துகொள்ள இயலும். வெய்யிலின் வருகைப் பிறகு தமிழ்க்கவிதைக்குள் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. பிரச்சார கவிதைகளின் அருகில் நின்று பேசும்போதும் அதன் செயற்கைத்தனமோ, மொழி குறித்த அலட்சியமோ வெய்யிலிடம் இல்லை. ஆகவே பிரச்சாரக் கவிதைகளில் நிகழும் பயனின்மை நிகழ்வதில்லை. இந்தக் கவிதையை வாசிக்கையில் நம்முள் புழுதி எழவே செய்கிறது..

அதோ,
அதிகாரி வீட்டுக்குள்
பன்றிக்குடலை எறிந்துவிட்டு ஓடுகிற சிறுவன்
வரலாற்றில்
புழுதி கிளப்பப் போகிறான்!

சங்கக்கவிதைகளின் பரிட்சயமும், நாட்டார் கலைகளின்மீதான ஆர்வமும் சேர்ந்து வெய்யிலின் கவிதைகளுக்கு இன்னொரு வசீகரமான வடிவத்தை வழங்கியுள்ளன.

காதலென்பது
வேட்டைநாய் கவ்வி வரும் வகுளம்பூ
காதலென்பது
மலைக்குறவனின் வேட்டை இறைச்சியில்
உமணன் மகள் பூசிய உப்பு

கவிஞர் இசை முழுநீள சண்டைக்காட்சி ஒன்றைக் கவிதையாக்கி வைத்துள்ளார். அது அவரது ‘‘ஆட்டுதி அமுதே” என்கிற தொகுப்பில் ‘‘சுபம்” என்கிற தலைப்பில், 70 ஆம் பக்கத்தில், கடைசிக் கவிதையாக இடம் பெற்றுள்ளது. ஒரு கவி, தன் கட்டுரையில் தன்னுடைய கவிதையையே சிறப்பித்துக் கொள்வது மாண்பல்ல என்பதால் அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

கவிதைக்குள் புதுமையை முயலும்போது, அது புதுமையாகவும், கவிதையாகவும் இருக்க வேண்டியது அவசியம். சமயங்களில் புதுமை மட்டும் தனியே துருத்தி நிற்கும் ஆபத்துகளும் நேர்ந்து விடுகின்றன.

isaikarukkal@gmail.com