டிசம்பருக்காக
காத்திருத்தல் ஒரு வரம்!

கிறிஸ்துமஸ் பூக்கும்
டிசம்பர் இரவொன்றில் தான்
வடக்கு நோக்கிப் பயணப்படும்
கனவொன்றைக் கண்டுகொண்டிருக்கிறேன்.

கிறிஸ்துமஸ் பூக்கும்
டிசம்பர் இரவொன்றில் தான்
மாரியும் ஜோவும் கடைசியாக
சந்தித்துக்கொண்ட அத்தியாயமொன்றைத்
தவறாமல் படித்துக்கொண்டிருக்கிறேன்.

கிறிஸ்துமஸ் பூக்கும்
டிசம்பர் இரவொன்றில் தான்
அந்த ஆண்டின் மகிழ்ச்சியையெல்லாம்
ஒரே கூட்டில்
தேனியைப் போல
சேமித்துக் கொண்டிருப்பேன்.

கிறிஸ்துமஸ் பூக்கும்
டிசம்பர் இரவொன்றில் தான்
அடுத்த ஆண்டுக்கான
அழகான கனவொன்றை
வரையத் துவங்கியிருப்பேன்.

கிறிஸ்துமஸ் பூக்கும் ஒவ்வொரு
டிசம்பர் இரவிலும்
எனக்கான தேவதை பொம்மையோடு
கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரென
சந்தேகமின்றி நம்புகிறேன்

ஆம்!
டிசம்பருக்காக காத்திருத்தல் ஒரு வரம்!

**

அவன் செல்ஃபிகளால் ஆனவன்

எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்
என்ன சாப்பிட்டாய்
என்ன உடுத்தியிருக்கிறாய்
எப்போது உன்னைப் பார்ப்பது
என எல்லாக் கேள்விகளுக்கும்
செல்ஃபிகளால் பதில் சொல்வான்.

அவ்வுயர்ந்த மலையின்
உச்சியிலிருந்து விழுந்தபின்னும்
அவன் கைகள்
முகத்தைத்தான் தேடியதாகச் சொன்னார்கள்…
**

பறத்தல்

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு
நமக்குள் சண்டைகளோ
மனவருத்தங்களோ
குழப்பங்களோ ஏதுமில்லை தான்.
ஆனாலும்
அடர்கானகத்தின் அமைதியொன்று
நெடுநாளாய் நம்முறவில்
மையம் கொண்டிருக்கிறது.
களைப்பு மிகுந்த ஒரு நாளில்
திடுமென இவ்வமைதியை உடைத்து
திரும்பிப்பார்க்காமல்
வெளியேற எத்தனிக்கிறேன்.
இறகுகளில் கணம் குறைய
இலகுவாகிறது பறத்தல்…

ndeepika98@gmail.com