தமிழகம் கல்வித் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக இருப்பது மகிழ்ச்சியான செய்தி தான். எண்ணிக்கையிலே கூடுதலாக மக்களிடம் கல்வி சேர்ந்து இருக்கிறது என்ற அளவிலே இது பெருமை கொள்ளத்தக்க விஷயமும் ஆகும். ஆனால் இந்தக் கல்வியின் தரம் எப்படிப்பட்டதாக இருக்கிறது, இதை எதைக் கொண்டு அளவீடு செய்கிறார்கள் என்பதையும்
நாம் உற்று நோக்க வேண்டி உள்ளது. எண்ணிக்கைக ளின்(quantitiy) அடிப்படையிலேயே இந்தத் தர நிர்ணயம் செய்யப்படுகின்றது. தரத்தின் அடிப்படையில் அல்ல.
பள்ளிக்கல்வியோ அல்லது உயர்கல்வியோ, பொதுவாக கல்வியின் நோக்கம் குறித்து அனைவரும் அறிவோம். அது சரியான ஆரோக்கியமான ஆளுமை வளர்ச்சி என்பது ஆகும். ஆளுமை வளர்ச்சி என்று கூறும்போது சரியான புரிதலும் செயல் திட்டங்களுக்கான திறமையும் கொண்ட ஒரு தன்மையை அது குறிக்கும். சமூகப் பொருளாதார,அரசியல், வரலாற்றுப் புரிதல்கள் கொண்ட பார்வையும், மானுட மேம்பாட்டிற்கான அக்கறையும் கொண்ட ஒரு செயல் திறன் அது. இந்தத் திறனுக்கு உறுதுணையாக நிற்பது ஒருபுறம் அறிவியல் பார்வையும், மறுபுறம் சக மனிதர்களிடம் சரியான முறையில் உறவு கொள்வதுமாகும்.
இப்படிப்பட்ட திறனை வளர்ப்பது என்பது எப்படிப்பட்ட கல்வித் திட்டத்தினால் சாத்தியமாகும் என்பதே உலகெங்கிலும் முன்வைக்கப்படும் சவாலாகும். இதற்கான பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் ஆரோக்கியமான கல்வியை உருவாக்குவதற்குத் தடையாகப் பல வலுவான காரணிகள் உண்டாகிக் கொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட காரணிகள் கல்வியின் நோக்கத்தை தங்கள் நலத்திற்காகவே வடிவமைக்கின்றன. பன்னாட்டு மூலதனக் கம்பெனிகளுக்கான கூலி ஆட்களை உருவாக்குவது மட்டுமே இங்கு கல்வியின் நோக்கமாக முழுக்க முழுக்க மாறி இருப்பது எந்த விதத்தில் ஜனநாயகத்திற்கு அர்த்தம் கூட்டும் என்று தெரியவில்லை.
சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு இப்பொழுது உள்ளது போன்ற ஒரு மன அழுத்தம் இருந்திருக்கவில்லை என்பதையும் உற்று கவனிக்க வேண்டும். அவர்களுக்கான சவால்கள் என்பதும் தர மதிப்பீட்டு அளவிலேயே மட்டுமே இருந்ததில்லை. அன்றைய பெற்றோரின் மன நிலையும் தங்கள் பிள்ளைகள் கல்வி பயில்வது என்பது சம்பாதிப் பதற்காக மட்டுமென்று இருக்கவில்லை. உயர் பண்புகளை அவர்கள் பெறுவார்கள் என நம்பினார்கள். ஆனால் இன்று பிள்ளைகள் பெரும் வருமானத்தை ஈட்டுவதே அவர்கள் வாழ்க்கையின் உயரிய இலக்காக பெற்றோரும் கருதும் நிலை உள்ளது.
தேர்வு என்னும் சிலுவைகள்
புற நெருக்கடிகள் ஒருபுறம் இருக்கையில், இன்று நிலவும் கல்விச் செயல் திட்டங்களை கவனித்தால் முதலில் மாற்றம் நிகழவேண்டிய அம்சம் தேர்வு முறைகளில்தான் என்பது புரியும். ஃபர்ஸ்ட் கிளாஸ் எனும் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்தாலே சிறப்பானதாக கருத்தப்பட்ட காலம் அது. அதிலிருந்து தான் “ஃபர்ஸ்ட் கிளாஸ்” என்ற சொல்லாடல் எல்லா தளங்களிலும் பயன் படுத்தப்பட்டது. ஆனால் இன்று அப்படி இல்லை. 90% மார்க் வாங்கியும் கல்வியில் தோல்வி அடைந்து விட்டதாக நினைக்கக்கூடிய மனநிலைதான் இன்று மாணவ மாணவியரிடம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படியே சதம் அடிக்கும் மாணவர்கள்கூட கல்லூரிப் படிப்பில் தள்ளாடுவதைக் காணமுடிகின்றது. உலகமயம் பீடித்த நாளிலிருந்து இந்த நிலை தொடங்கிவிட்டது.
அவைதான் தனியார் பயிற்சி மையங்களை நோக்கி மாணவர்களைத் தள்ளுகின்றது. மாணவர்கள் கல்விச் சிலுவையை சுமந்தபடி காலை விழித்தது முதல் இரவு தூங்கும் வரை சுமக்கின்றனர். தவிர மேய்ப்பர்களின் பிடியிலிருந்து விடுபடமுடிவதில்லை.
மாணவர்களின் புரிதல் திறனை அளவீடு செய்யவே தேர்வுகள். அப்படிப் புரிதல் குறைவாக உள்ள மாணவர்
கள் எப்படி அந்தப் பாடத்தில் எப்படி தேர்ச்சி அடைவது என்பதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றனவே தவிர, அவர்களுக்கு அப்பாடங்களில் எப்படி சரியான புரிதல்களை உருவாக்குவது என்பதற்கான திட்டங்கள் மிகவும் குறைவே. அடிப்படை புரிதல்கள் பற்றிய தேர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும். ஆனால் மனப்பாடத் திறனை அளவீடு செய்யும் புற நிலை தேர்வு முறையை பிரம்மாண்டமாக திணித்துவிட்டோம்.
இந்த நிலையில் பல பரிசோதனை முயற்சிகளை மிகவும் தாராளமான சூழலில், தேர்வுகளைத் தவிர்த்து, அழுத்தமற்ற சூழலில் மேற்கொண்டு இலகுவாக முழுமைக் கல்வியைக் கற்றுத் தருவதாக சில பள்ளிகள் பறை சாற்றிக் கொண்டு லட்சக்கணக்கான பணத்தை கல்விக் கட்டணமாகக் கொள்ளை அடிக்கின்றன.
சுயம் அழிக்கும் கல்வி செயல்பாடுகள்
இன்றைய பள்ளிக் கல்வி என்பது எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்கி வருகிறது என்பதை உற்று நோக்கினால் அது உள்ளீடற்ற சில திறன்களை மட்டும் கொண்ட மாணவர்களை உருவாக்குவதை சாதாரணர்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். மாணவரின் சுயம் என்பது அழிக்கப்பட்டு எல்லோரும் ஓரே வகை ஒற்றைப் பரிமாணம் கொண்ட ரோபோக்களாக ஆக்கப்பட்டுவருகின்றனர். அப்படிப்பட்ட நிகழ்வின் தன்மைகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால் முதலில் பாதிக்கப்படுவது மொழி அறிவு தான்.
ஆங்கிலக் கல்வியின் மோகம் இன்று நிரந்தரமாக செயல்படும் சக்தியாக உருப் பெற்றுவிட்டது. இந்த நிலையில் ஆங்கில வழி கல்வி பயிலும் லட்சக்கணக் கான மாணவர்கள் தமிழில் எழுதுவது என்பது கூட இயலாதவர்களாக ஆகிவிட்டார்கள். தமிழில் பண்பாட்டு மேன்மைகளை விளக்கி அதன் மூலம் அறக்கோட்பாடுகளை வலியுறுத்தும்,மனதிற்குள் விதைகளாக ஊன்றும் படைப்புகள் இவர்களால் அறிந்து கொள்
ளப்படுவதே இல்லை. இனி அது சாத்தியமும் இல்லை.
நவீன இலக்கியப் படைப்புகள் என்பது முற்றிலுமாக இவர்களை விட்டுத் தொலைதூரத்திலே இருக்கின்ற விஷயம்தான். சிறு பகுதியினர் மட்டும் தங்களுடைய சுய ஆர்வத்தால் தேடிப்பிடித்துப் படிப்பது என்பதும், தமிழ் மொழித் திறனை வளர்த்துக் கொள்வது என்பதும் கணக்கில் வராது. இந்த மொழி மெல்ல மெல்ல வரும் தலைமுறைக்குப் படிப்பதற்கோ, அறிந்து கொள்வதற்கோ ஏற்ற மொழியாக இல்லாமல் போகும். இந்த நிலை நீடித்தால் உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களை அடுத்த தலைமுறையினர் வாசிப்பார்களா என்பது சந்தேகமே. ஒருவேளை ஒலி புத்தகங்களாகக் கேட்கலாம்.
அப்படியாயின் ஆங்கிலத்தில் புலமை பெற்று விடுவார்களா என்று கேட்டால் அதிலும் இல்லை என்ற பதிலைத்தான் நாம் சொல்ல முடியும். சமூக ஊடகங்களினால் சிதைக்கப்பட்ட ஆங்கில சொற்கள் தொடர்புக்கான மொழியாக மட்டும் மாறி வருகிறது. ஓரளவிற்கு ஆங்கிலத்தில் பேச எழுத வந்தாலும் தங்கள் ஆளுமைகளை செதுக்கிக் கொள்ளும் ஆங்கில அறிவும், ஆங்கிலப் படைப்புகள் குறித்த தெளிவும் இங்கு ஏதும் வளர்க்கப் படுவதில்லை என்பதை வெளிப்படையாகக் கூறலாம்.ஏதோ தொடர்புக்காக மட்டுமே மொழி என்ற அளவிலே மொழி குறித்த புரிதலும் உறுதி செய்யப்பட்ட வருகிறது என்ற ஆபத்தான அவல நிலையை நாம் புரிந்து கொள்வது அவசியம்.
கல்வி பரப்பு முழுவதையும் ஆக்கிரமிக்கும் தனியார் நிறுவனங்கள்
தனியார் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. கல்வி நல்லதொரு வணிக சரக்காக ஆகிப்போய் வெகுகாலம் ஆகிவிட்டது. மாணவர்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுத்து மதிப்பெண்களை அதிக அளவில் பெற வைக்கும் கெடுபுடியான பள்ளிகளை நல்ல பள்ளிகளாக பெற்றோர்கள் அங்கீகரிக்கும் போக்குதான் உருவாகியுள்ளது. கல்வி என்னும் ஓட்டப் பந்தயத்தில் எட்ட வேண்டிய இலக்கு அனைத்து தாள்களிலும் 100 மதிப்பெண்கள் என்றாகிப் போனது. அப்படியே 100 மதிப்பெண்கள் பெற்றாலும் போட்டித் தேர்வுகளில்,நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றால் தான் வெற்றி என்று சொல்லப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வு வெற்றிக் கனியைப் பெறுவதற்காகப் பள்ளிக்கு நுழைந்த நாளிலிருந்து குழந்தைகள் தயார் செய்யப்படுகின்றனர். இதில் தோல்வி அடையும் மாணவர்கள் சிலர் தோல்வியைத் தாங்குகின்ற மனநிலையைப் பெறாத காரணத்தினாலும் புறச்சூழல் அச்சத்தாலும் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நிலை உன்னிப்பாக கவனிக்கத்தக்கதாகும். உளவியல் ஆறுதல்களும், தற்காலிக வழிகாட்டுதல்களும் எந்த விதத்திலும் பெரிய அளவில் இப்போது பிரச்சினைக்கு தீர்வாகாது. கல்வி திட்டத்திலேயே இதற்கான தீர்வுகள் விதைக்கப்பட வேண்டும். திறனோடு செயல் படுத்தப்பட வேண்டும். வாழ்க்கை கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.
அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் எவ்வளவு வேறுபாடுகள் என்பதை நிதானமாக யோசித்துப் பார்த்தால் நிதர்சனமாக உண்மைகள் தெரியும். சமீப காலங்களாகத்தான் அரசுப் பள்ளிகள் குறித்த அக்கறையும், அவைகளைப் பாதுகாக்க வேண்டிய தேவையையும் சிவில் சமூகம் சமூக ஊடங்களில் வலியுறுத்தத் தொடங்கி இருக்கிறது. இப்பள்ளிகளில் படித்து மேம்பட்ட பெரும்பான்மையினர் யாரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க விரும்புவதில்லை.இதற்கு அவர்களைக் குறை சொல்வதால் பயனில்லை.
தனியார் பள்ளிகள் ஏற்படுத்தியுள்ள பலத்த நம்பிக்கை இதற்குக் காரணம். தனியார் பள்ளிகளில் உண்டாக்கப்பட்டுள்ள வசதிகளும் வகுப்பறைத் தன்மைகளும் நிச்சயமாக ஈர்க்கத்தான் செய்கின்றன. அவர்கள் தொடர்ந்து மாணவர்களைக் கண்காணிப்பதற்காக ஏற்படுத்தி உள்ள பல முறைகள் பெற்றோர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகின்றன. அதிகப் பணம் கொடுத்தால்தான் தரமான பொருள் கிடைக்கும் என்ற நுகர்விய உலகில் பெற்றோர்களும் இரையாகிப் போவது என்பது தவிர்க்க இயலாதது.
தனியார் பள்ளிகள் தாங்கள் தர மேம்பாட்டில் மிக்க அக்கறை கொண்டவர்களாகப் பறைசாற்றிக் கொண்டாலும் அவர்களுடைய குறிக்கோள் என்பது அளவுக்கு அதிகமான லாபம் ஈட்டுவது என்பதே என்பது மறுக்க முடியாத உண்மை. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே ஒரு வகுப்பில் இருப்பார்கள் என்று விளக்கும் இப்பள்ளிகள் ஒரே வகுப்பிற்கு எண்ணிலடங்கா பிரிவுகளையும் உண்டாக்கி மாணவர்களை சேர்த்து வசூலைக் கூட்டுகின்றன. ஒன்றாம் வகுப்பு படிக்க ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்றால் இந்தக் கல்வி வணிகம் எப்படி வெறிகொண்டு ஆடுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். குழந்தை பிறந்த உடனே பள்ளியில் சேர்ப்பதற்குப் பதிவு செய்து வைக்கும் அவல நிலை எந்த நாட்டிற்கும் நல்லதல்ல.
பச்சை மழலைகளைக் கொட்டடியில் அடைத்து முன் மழலைக் கல்வி என்ற பெயரில் சித்திரவதை செய்வது என்பது இன்றைய கல்வியின் தரத்தில் தொடக்கப் புள்ளியாகும். அதற்குப் பெற்றோர் முண்டியடிப்பதும் அவலம்தானே. எத்தனை தனியார் கல்வி நிறுவனங்கள் பலவித கல்வி முகங்களுடன் உண்டாகிப் பல விதங்களில் கல்விக்குப் பாதிப்பை உண்டாக்கி வருகின்றன என்பதை சாதாரண மக்கள் நன்கு அறிவர்.
உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் எல்லாமே தொழிற் கல்வி நிறுவனங்கள். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் இவர்களுக்கு எவ்வளவு ஆர்வம்? முன்பு நாட்டில் தம் பகுதி மக்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கி அவர்களை மேம்படச்செய்யவேண்டும் என்ற உயரிய நோக்குடன் உருவாக்கப்பட்ட கொடையாளர் கல்வி ஸ்தாபனங்கள் எல்லாமே சுயநிதி பிரிவுகளில் தங்கள் அக்கறையை செலுத்தி, உள்ள கட்டமைப்பு
களைக் கொண்டு எப்படிப் பெரும் பணத்தை உருவாக்குவது என்ற வேலையில் மும்முரமாக இறங்கிவிட்டன. இதற்கு இவைகளுக்கு மிகவும் உதவுவது தன்னாட்சி அந்தஸ்து. தமிழகத்தில்தான் அதிக தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளன.
இதில் எத்தனை நிறுவனங்கள் தகுதியான ஆசிரியர்களை நியமித்துள்ளன என்பது கேள்விக்குறியே! தகுதிச் சான்று வாழங்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் என்ன செய்துள்ளன என்பது பற்றியும் கவலை யாருக்கும் இல்லை. பல்கலைகள் சுய நிதி உயர் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தமட்டில், விதி முறைகளை வலியுறுத்துவதில்லை. அதாவது கண்டுகொள்வதில்லை. பல்கலைகளை இதற்காக வலியுறுத்தும் ஜனநாயக வழி முறைகளும் வலுவாக அடைக்கப்பட்டுவிட்டன. செனட், சிண்டிகேட் போன்ற அமைப்புகளில் ஆசிரியர் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் வழிகள் மூடப்பட்டுவிட்டன.
அதென்ன… அரசுக் கல்லூரிகளில் புதிய கல்வி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதே இல்லை? ஏன் கணினி அறிவியல், மைக்ரோ பயாலஜி, தகவல் தொழில்நுட்பம், பயோ கெமிஸ்ட்ரி போன்ற பல பட்டப் படிப்புகள் நடத்த தனியார் சுய நிதி கல்லூரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகின்றன. புதுப்புதுப் பெயர்களில பட்டப் படிப்புகளை அறிமுகம் செய்து, அதற்கான உள்கட்டமைப்புகளும், தகுதி வாய்ந்த
ஆசிரியர்களும் இல்லாமலேயே பணம் சம்பாதிக்கும் சுயநிதி நிறுவனங்களை உயர்கல்வி நிர்வாகங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று தெரியவில்லை. தற்போது தமிழக கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்கலைக்கழக மான்யக்குழு பரிந்துரைத்துள்ள கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்களே கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிய முடியும் என்பது வரவேற்கத் தக்க விஷயம்தான். ஆனால் இதுவரை இந்த விதியை மீறிய நிறுவனங்களை யார் தட்டிக் கேட்பது?
சுயநிதிக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் கல்வித் தகுதிக்குப் பல்கலைக்கழக மான்யக்குழுவை சுட்டும் அரசு அவர்களுக்கான பணிச்சுமை மற்றும் வழங்கப்படவேண்டிய குறைந்த பட்ச ஊதியமான ஐம்பதாயிரம் ரூபாய் குறித்தும் வலியுறுத்தவேண்டும். கொத்தடிமைகள் போல படித்த பல்லாயிரம் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அவர்களின் அவல நிலைகளைப் போக்காமல் நாம் கல்வியில் உயர்ந்து விட்டோம் என்று சொல்வது முறையாகுமா? இந்த நிலையில் உள்ள ஆசிரியர் எம்மாதிரியான மாணவர்களை உருவாக்குவார்.
அரசின் முன் உள்ள சவால்கள்
கல்விப் பரப்பில் கவலை கொள்ள அதன் காரண
மாக அக்கறை கொள்ள நிர்பந்திக்கும் விடயங்கள் பல உள்ளன. எதேதோ ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அரசியல் முக்கியஸ்தர்கள் கூட தண்டனையை எதிர் நோக்கும் வேளையில், கல்விப் பரப்பை நாசப்படுத்திய ஊழல்கள் எதுவும் வெளிவராதது ஆச்சரியத்தையே அளிக்கின்றது.
கல்லூரி, பேராசிரியர்கள் பணி நியமனத்தில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உலக மகா லஞ்ச ராக்கெட் குறித்த விசாரணையும், தண்டனையும் வழங்குவது அவசியமல்லவா? சில பத்தாண்டுகளுக்கு முன் கடுமையாக அமல்படுத்தப்பட்ட விதிகள் காற்றில் பறப்பது ஏன்? அரசு என்ற ஒன்றைப் பற்றி எந்த அச்சமும் இல்லாமல் விதிமீறல்களையே நிர்வாக முறைகளாகக் கொள்ளும் தனியார் கல்வி நிறுவனங்களை என்ன செய்யப்போகின்றோம்?
கல்வியை அரசுடைமை ஆக்கியே தீர்வேண்டும் என்பது அவசியம் என்றாலும் அதற்குமுன், உள்ள விதி கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்தினாலே போதும். யார் வேண்டுமானாலும் வெறும் பணம் சம்பாதிக்க கல்லூரிகள் தொடங்குவது கட்டுப்படுத்தப்படும்.
பலகலைக்கழகங்களுக்கான நிதி சுமைகளை அவர்கள் மீதே சுமத்தும் போது அந்த சுமை இறக்கி வைக்கப்படுவது மாணவர்கள் மீதுதான். இன்று ஆராய்ச்சி படிப்பிற்குப் பல லட்சங்கள் செலவு செய்யும் நெருக்கடி உண்டாகி விட்டது. எத்தனையோ ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி என்னென்னவோ திட்டங்களுக்கெல்லாம் செலவு செய்யத் தயாராக இருக்கின்ற அரசு வருங்காலம் சிறப்பானதொரு சமுதாயத்தை பெற வேண்டும் என்பதற்காக இன்று கல்விக்காகப் பெரும் தொகையை செலவிடுவது என்பது ஒரு வரலாற்றுக் கடமையாக இருக்கும். சிவில் சமூகமும், முன்னாள் மாணவர்கள் சமூகமும் கல்விக்கான நிதித் திரட்டலில் கண்டிப்பாகப் பங்களிப்பார்கள்.
குறைகளைப் பட்டியலிட அல்ல இந்தக் கட்டுரை. யாரிடமும் குறை காணவும் அல்ல. குறைகளை புரிந்துகொள்ள, நினைவு படுத்திக்கொள்ள, அதன் மூலம் தீர்வுகளுக்கான திட்டமிடலை மேற்கொள்ள அக்கறையுடன் எழுதப்படுவதுதான் இக்கட்டுரை.
சரி என்ன செய்யலாம்?
இப்பொழுது உள்ள பாடச் சுமைகளை ஐம்பது சதவீதத்திற்கு வெட்டித் தள்ள வேண்டும்.
பாடங்கள் சுவாரஸ்யமான மொழி நடையில் எழுதப்படவேண்டும். இதற்குப் பாட வல்லுனருடன் தகுதியான எழுத்தாளர்களை இணைத்து, மூலக்கதை, திரைக் கதை என்பதுபோல எழுத வைக்கலாம், தரமான ஓவியர்களையும், புகைப்படக் கலைஞர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாடங்கள் என்பது ஒட்டு மொத்தமாக ஒரே மாதிரி இருக்க வேண்டுமா என்பது யோசிக்கத்தக்கது. சில பாடங்கள் அந்தந்தப் பகுதிகளின் பண்பாடு, வரலாறு, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றைக் கொண்டதாக அமைக்கப்பட்டு அவையும் ஒரு களப்பயிற்சியுடன் இணைக்கப்பட்டதாக ஆக்கப்படுவது அவசியம். தங்கள் பகுதியைப் பற்றிய எந்தவித வரலாற்று அறிவும் மாணவர்களுக்கு முறையாக சொல்லித் தரப்படுவதில்லை. சில தலைவர்கள் பற்றி மட்டும் சில அமைப்புகள் கொண்டாடும் விழாக்களின் மூலம் அரைகுறையாக அறியமுடிகின்றது. மேலும் வகுப்பிற்கு ஏற்ற எளிய வகைப் பாடங்கள் இருக்கவேண்டும்.
விளையாட்டிற்கும், ஆசிரியர் மாணவர் உரையாடலுக்கும், சமூக நிலை குறித்த புரிதல்களை உண்டாக்குவதற்கும், தத்துவார்த்தப் புரிதல்களுக்கும் கண்டிப்பாக ரெகுலர் கல்வித் திட்டத்தில் ஒரு இடத்தை உருவாக்கித்தான் ஆக வேண்டும்.
பள்ளிகளில் நூலகங்கள் விஸ்தரிக்கப்பட வேண்டும். அவை மாணவ மாணவியர் தொடர்ந்து பயன்படுத்தும் சிந்தனைக் கூடமாக மாற்றப்பட வேண்டும். பள்ளிகளில் நூலகர் என்ற பதவி உருவாக்கப்பட்டே ஆக வேண்டும்.
பல அறிஞர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் என்று பல துறைத் திறனாளிகள் பள்ளிகளுக்குத் தொடர்ந்து
விஜயம் செய்து மாணவர்களிடம் சில நாட்கள் தங்கி உரையாடத் திட்டமிட வேண்டும்.
வகுப்பறைகளுக்கு உள்ளே மட்டுமே கல்வியைப் பாடத்திட்டத்தின் மூலம் மனப்பாடத்தின் மூலம் மேம்படச் செய்து விட முடியாது.
மாணவர்கள் குழுக்களாகத் தொடர்ந்து வாழ்க்கையின் சவால்கள் மிகுந்த விடயங்களை எதிர்கொள்ள பழக்க வேண்டும்.
ஆசிரியர்களுடன் மனம் திறந்த உரையாடலுக்கான நேரம் வகுக்கப்பட வேண்டும்.
பள்ளிக்கு வெளியே உள்ள சமூகத்துடன் மாணவர்கள் தொடர்பு கொண்டு எதார்த்தமான வாழ்க்கைப்பிரச்சனைகளையும் அறிந்துகொள்ள வகை செய்யப்பட வேண்டும்.
நிறைய வாசிப்புக் குழுக்கள் ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரிகளிலும் தொடர்ந்து செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொடர் ஓட்டமாக பல நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும்.
உடல் ஆரோக்கியம், மனநலன் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் குறித்த அக்கறை மற்றும் சமூக நீதி குறித்த விழிப்பையும் விதைக்க வேண்டும்.
வாழ்க்கையின் வெற்றி தோல்வி என்பது நொடிக்கு நொடி மாறக்கூடியது என்பதையும் வாழ்க்கை மிகப் பெரிதானது; பல வழிகள் நம் செயல்பாட்டிற்காக காத்திருக்கின்றன என்ற புரிதலையும், நம்பிக்கையையும் ஆழமாக உண்டாக்க வேண்டும். இதற்கான செயல்முறை திட்டங்கள் வல்லுனர்களைக் கொண்டு மிகவும் கவனத்துடன் உருவாக்கப்படவேண்டும்.
எழுதுவது என்பதை, பார்த்து எழுதுவதாக அல்லாமல் மாணவர்கள் சுயமாக யோசித்து வாக்கியங்களை, கருத்துக்களை எழுதுவதற்கு களம் உருவாக்க வேண்டும்.
மதிப்பெண்களுக்கான முக்கியத்துவம் இல்லாமல் ஆக்க வேண்டும்.
பெற்றோர் ஆசிரியர் உரையாடல்கள் சிறு சிறு குழுக்களாகத் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
பெற்றோர்களுக்கு கல்வி குறித்த புரிதலை ஆசிரியர்கள் உண்டாக்க வேண்டும்.
பாலின சமத்துவப் புரிதல் பற்றிய செயல் முறைக் கல்வி வழங்கப்படுவேண்டும்.
உலகிற்கே வழிகாட்டக்கூடிய மகான்கள் நிறைந்த நாட்டில் அவர்கள் எவரைப் பற்றியும் புரிந்து கொள்வது இனி அவசியம் இல்லை என்ற மனநிலை ஏற்பட்டு வருவதைக் கவனிக்க முடிகிறது. இது தவிர்க்கப்படவேண்டும்.
திருக்குறள் என்பதும்,அறநூல்கள் என்பனவும் தீண்டத்தகாதவையாக ஆகிவிட்டது உண்மை. அறம் சார்ந்த கல்வியே நாட்டை செழுமைப்படுத்தும். இதையெல்லாம் செய்வதற்கு ஆசிரியர்களுக்கு சரியான ஒரு புரிதல் தேவை. சரியான புரிதல்கள் அவர்களுக்கு உண்டாக்குவதற்கு அவர்களுக்கு நல்லதொரு கல்வி சூழல் அவசியம் தேவை.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் வகுப்பறையில் அடைக்கப்படுவதினால் ஏற்படும் மன அழுத்தம் அவர்களை மேய்ப்பதிலேயே அவர்கள் கவனத்தை செலவிட வைக்கிறது. மேலும் வருங்காலத் தலைமுறையை உருவாக்கும் சிற்பிகள் நாம் என்ற நம்பிக்கை மிகக்குறைவான அளவிலான ஆசிரியர்களுக்குத்தான் இருக்கின்றது. அதற்கான ஊக்கப்படுத்துதலும் பயிற்சி வழங்குவதிலும் புதிய முறைகளை ஆசிரியர்கள் கண்டுபிடித்து அவற்றைச் செயல்படுத்த திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களும் தங்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தைப் பொறுப்புடன் கையாளும் தன்மை பெற்றவர்களாக இருத்தல் அவசியமாகிறது. தனியார் பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியைச் செய்து வருகிறார்கள். மேலும் நிரந்தரம் இல்லா பணியை ஆசிரியர்களுக்கு வழங்குவதால் எதிர்கால வாழ்க்கையின் அச்சம் அவர்களை நல்ல முறையில் பயிற்றுவிக்க உதவாது. ஆசிரியர்கள் அச்சமின்றி சுதந்திரமாக அதே சமயம் ஆரோக்கியமாக சிந்தித்து வருங்கால இளைஞர்களை உருவாக்கும் பணியை செய்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
பயிற்றுவிக்கும் முறைகளில் வகுப்பறைக்கு இணையாகப் புற வெளிகள் அடையாளம் காணப்படவேண்டும். வெறும் இணையத் தகவல்கள் மட்டும் சரியான பார்வையைக் கொடுக்காது. மாணவர்களின் பங்கேற்பு நிகழ்வுகள் மிகவும் அவசியம். அது அவர்களுக்கு சுதந்திரத்தை மட்டுமல்ல, பொறுப்புணர்வையும் அதிகரிக்க வைக்கும்.
மலைவாழ் மக்கள் மற்றும் பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அமைக்கப்பட்ட பள்ளிகளின் மேம்பாடு என்பது சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டிய பகுதியாகும்.
இங்கு பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மட்டுமல்ல, கட்டமைப்பு போதாமை மட்டுமல்ல, 11-12 ஆம்
வகுப்புகளில் அறிவியல் பாடத் திட்டங்கள்கூட வழங்கப்படுவதில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
பள்ளிக் கல்வியிலே ஒரு பெரும் பிரிவினை உண்டாகி வருவதை வலுவான சட்டங்கள் கொண்டு தடுத்தே ஆக வேண்டும்.
மிகவும் வசதியான மாணவர்கள் படிப்பதற்கான சர்வதேச அளவிலான பள்ளிகளின் எண்ணிக்கை கூடுகின்றது. உயர்த்தட்டு மாணவர்கள், கீழ்த்தட்டு மாணவர்கள் என்ற பாகுபாடு அதிகரிக்கிறது.
ஆசிரியர்கள் அங்கொன்று இங்கொன்றுமாக செய்யும் தவறுகள் லட்சக்கணக்கில் பணிபுரியும் ஆசிரியர் இனத்தின் மீதே மக்களுக்கு அவநம்பிக்கையை ஊட்டுகின்றன. இவை சட்டத்தினால் மட்டும் தீர்க்க முடியாது. ஆரோக்கியமான கல்விச் சூழல் மூலம்தான் தீர்க்க முடியும். ஆண் பெண் உறவுகள் குறித்த ஆழமான புரிதல்கள் செயல் தளத்திலே சாத்தியமாக்கப்பட வேண்டும்.
கள ஆய்வுகளும், களச் செயல்பாடுகளும் தேசிய நலத்திட்டத்தின் செயல்பாடுகளாக அல்லாமல், ரெகுலர் பாடத் திட்டத்தின் அம்சமாக ஆக்கப்பட வேண்டும்.
மாணவர் வாழும் சூழலைப் பற்றிப் புரிந்துகொள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்வது உயர்கல்வி வரை கட்டாயமாக்கப்படவேண்டும்.
கல்லூரிகள் தங்களைச் சுற்றி குறைந்த பட்சம் ஐந்து கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஆரோக்கியமான தாக்கத்தை உண்டாக்கவேண்டும். அதற்கான பல கள செயல்பாடுகள் அப்பகுதி மக்களுடன் இணைந்து செயல்படுத்தப்படவேண்டும். இது சாத்தியம். மாணவர்களைப் பலவித உரையாடல்களில் பங்கு பெறவைக்கவேண்டும்.
மாணவர் அமைப்புகளை ஸ்திரப்படுத்தி, ஜனநாயகப் பண்புகளை பங்கேற்பின் மூலம் பயிற்று வைக்க வேண்
டும். கல்வி குறித்து முடிவுகள் எடுக்கும் குழுக்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்பை உறுதி செய்யவேண்டும். இங்கு எல்லாமோ மேலிருந்துதான் கீழே திணிக்கப்படுகின்றது.
ஆசிரியர்கள் அதிகாரிகள் அல்ல. வழிகாட்டிகள் என்ற உணர்வைப் பெற அவர்களுக்குப் தொடர் பயிற்சிகள் அவசியம்.
தொழில்நுட்பங்களை, டிஜிட்டல் ஊடகங்களைக் கையாள பயிற்றுவிக்கும் அதே நேரத்தில் அவற்றின் அடிமைகளாக நாம் மாறிவிடக்கூடாது என்ற உறுதியான மனநிலையை ஏற்படுத்தும் புரிதல்களை உண்டாக்க வேண்டும்.
இச்சமூகத்தில் சாதி மத பேதமற்ற நிலை உருவாக்குவது தங்களின் கடமையாக மாணவர்கள் அடிமனதி
லேயே உணரப்பட வேண்டும். அதற்கான செயல்முறை வகுப்புகள் மிகவும் அவசியம்.
இதெல்லாம் கனவுகள் அல்ல, நிஜமாக்க முடியும் முன்வைப்புகள்.
கல்விப் பரப்பை நாம் சரி செய்துவிட்டால் தமிழகத்தின் எதிர்காலம் மிக மிக அருமையான ஒன்றாக உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மாறும். ஆனால் இது கூவத்திலே தூர் வாரும் வேலை போன்றது என்று அதை அதன் போக்கிலேயே விட்டு விடுவோம். மேம்போக்கான சில மேற்பார்வைகளை மேற்கொண்டு தற்காலிக சிகிச்சை முறைகளை மட்டும்தான் மேற்கொள்ளமுடியும் என்ற எண்ணம் கல்வியாளர்கள் மத்தியிலும் உருவாகி வருவதை நான் காண்கின்றேன்.
ஆனால் எதுவும் செய்ய முடியாது என்று கல்வியைப் பொறுத்தவரை நிச்சயமாக கிடையாது. அரசியல் உறுதி இருக்குமானால் கல்வித் திட்டங்களையும் செயல்பாடுகளையும் அரசு செம்மையாக்க முடியும். ஆனால் பல நெருக்கடிகளுக்கு இடையே அரசியல் ஆளுமைகள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கல்வி குறித்த அக்கறையைப் பட்டியலின் கடைசியிலேயே வைத்திருக்க வேண்டியது என்பது அவர்களைப் பொறுத்தவரை தவிர்க்க முடியாத நிலையாக மாறிவிட்டது.
கல்விக் கூடங்களில்தான் நாட்டின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகின்றது என்று பேராசிரியர் கோத்தாரி சொன்னது முழுதும் உண்மை.
இப்போது முடியாது என்றால் எப்போதும் முடியாது.
murali_phil@hotmail.com