ஊசிவழியாக ஏறும் ரத்தம், மேலே தொங்கும் பையிலிருந்து குழாய்க்குள் மிகக் கெட்டியாகச் சொட்டிக்கொண்டிருந்தது. ஐந்தடுக்கு பஞ்சுத்
துணியைத் தாண்டி கால்கட்டிலிருந்து வெளியேறும் ரத்தமோ பையிலிருப்பதைவிட கறுப்பாகவும் நீர்த்ததுமாகத் தெரிந்தது. வேகமுமே அதிகம்தான். உடலின் பிற காயங்களிலும் திட்டுத்திட்டாக ரத்தப்படை. கையிருப்பு மேலும் நான்கு யூனிட்டுகள் இருந்தன. ஆக்ஸிஜன் சிலிண்டரை ஒரு காலால் மிதித்தவாக்கில் கிடுக்கியைக் கொண்டு லியோ அதன் நாசியைத் திருகிக்கொண்டிருந்தார்.
“எவ்வளோ நேரமாகும் ரீச்சாக?” கையுறையை மீறும் குருதியின் இளஞ்சூட்டைப் பொறுக்காமல் மெய்யப்பன் கேட்டான்.
“ஏன் சார்.. இன்னும் ரெண்டவராவும் எப்டியும்..” நிமிரவில்லை. சிலிண்டர் வேலையில் லியோ மும்முரமாக இருந்தார்.
“காமணிநேரத்துக்குள்ள இவ்வளோ சோக் ஆகுது.. ப்ச்..”
“போயிறலாம் சார்..” அவனது புலம்பலுக்கு கொஞ்சமும் ஈடுசெய்யாத குரலிலான பதில். மெய்யப்பன் காயம்பட்டிருந்தவரின் காலை இன்னும் கொஞ்சம் உயர்த்திக் கட்டினான். சீரமைப்பு பணிகள் நடக்கும் சாலையென்பதால் தொங்கும் கால் ஆம்புலன்ஸின் குலுக்கலுக்கேற்ப அங்குமிங்குமாக அல்லாடியது.
“இந்த ஆட்டு ஆட்டுனா போறதுக்குள்ள பீப்பி ஒக்காந்துரும்..” எரிச்சலுடன் முனகினான்.
துவாரத்தின் வழியாக முன்னாலிருந்த ஓட்டுநரிடம் லியோ ஏதோ கேட்டுவிட்டு உட்கார்ந்தார். “பத்து கிலோமீட்டருக்கு அந்தாண்டி ரோடு நல்லாயிரும்..”
அந்த நாள் இப்படி அமைந்திருக்கவேண்டா மென்றிருந்தது மெய்யப்பனுக்கு. கிழிந்த தேங்காய்நார் இருக்கை ஒருபக்கம் உறுத்த, டீஸல் புகைவேறு குமட்டிக்கொண்டு வந்தது. இருபது நிமிடங்கள் தாண்டியும் குலுக்கல் நீடிக்கவேசெய்தது. கால்கட்டிலும் ரத்தம் கெட்டிப்பட்டபாடில்லை.
“யாரு பாத்தா ஊண்ட.. போட்டோ எதும் இருக்கா
ப்ரதர் உங்கள்ட்ட..”
“கேமரா செல்லு இல்ல சார்..” பாக்கெட்டிலுருந்த சிறிய அலைபேசியை எடுத்துக்காட்டினார். “பிரச்சன
கேசுன்னு டக்குன்னு கூட்டமாயிருச்சு.. கலெக்டராபிஸ் ஆளுங்க அதுயிதுன்னு.. ஒடனே ஷிப்ட் பண்ணனும்னு எல்லாத்தையும் கடகடன்னு பண்ணியாச்சு..”
“கட்டு என்ன சும்மா நீங்களே சுத்துனீங்களா?”
“இல்ல சார்.. சுலைமான் சார் வந்துட்டாரு நியூஸ் வந்தோன்ன..”
மெய்யப்பனுக்கு அந்தப் பெயரைக் கேட்கவே வெறுப்பாயிருந்தது.
“சாரேதான் ஊண்டுவாஷ் குடுத்து ட்ரெஸ்ஸிங் போட்டாரு.”
“வைத்தியம் பாக்குறது அவரோட வேலதான?”
லியோ சற்று தடுமாறினார். சட்டென பேச்சு இப்படி வெட்டப்படுமென அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. மருத்துவமனை என்றில்லை; சுலைமான் மாவட்ட அளவில் மரியாதைக்குரிய மனிதர். மீனவச் சமுதாயத்திலும் அரசியல் நிர்வாக மட்டத்திலும் பக்கத்திலிருக்கும் நாகூர்வாசிகளிடம் மதரீதியிலான செல்வாக்கிலும். மருத்துவமனைக் கடைநிலை ஊழியர்வரை அத்தனை பேரிடமும் இணக்கமுண்டு. தாஜாசெய்து வேலை
வாங்கும் சாமர்த்தியக்காரர். சட்டென யோசிக்காமல் உதவும் மனசும் உண்டு. பண்பு கிடக்கட்டும்; ஓய்வுபெறும் விளிம்பிலிருப்பவரின் வயதுக்குக்கூடவா மரியாதை இல்லை? பணிக்கு சேர்ந்து பத்து நாள்கூட ஆகாத மெய்யப்பனின் பேச்சு லியோவுக்கு கசப்பாக இருந்தது. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
லியோவின் முகம் போனப்போக்கை மெய்யப்பன் கவனிக்காமலில்லை. அது கணநேர ஆசுவாசத்தைக்கூட அளித்தது. இன்னொரு வாய்ப்பு அப்படி கிடைத்தால் தேவலாமென்றிருந்தது. பின்புறக் கதவிலிருக்கும் கண்ணாடிவழியாக சாலையைப் பார்த்தவாறிருந்தான். லியோ கைகளைக் கட்டிக்கொண்டு சாய்ந்து உட்கார்ந்திருந்தார். படுக்கையிலிருந்த மனிதர் வலியில் அனத்துவதும் அழுவதும் சோர்வதுமாக இருந்தார். சாலை ஓரளவுக்கு சீராகிவிட்டதைப்போல தெரிந்தது.
காலை ஏழேமுக்காலுக்கு முதல் ஆளாகப் பதிவேட்டில் கையெழுத்திட்ட மெய்யப்பனுக்கு கொஞ்ச நேரத்திலேயே தலைமை மருத்துவர் சுலைமானிடமிருந்து அழைப்பு. அப்போதுவரை வேறு எவரும் பணிக்கு வந்திருக்கவில்லை. சீட்டு வாங்கிக்கொண்ட புறநோயாளிகள் வரிசைகட்டியிருந்தார்கள். காத்திருப்புக்கு குறைப்பட்டுக்கொள்ளும் முகங்களும் உடல்மொழிகளும் அவனுக்குப் பழகிப்போனவைதான். இருந்தாலும் தொடங்கிய வேலையை அப்படியே நிறுத்திவிட்டு, குடும்பக்கட்டுப்பாடு முகாமிற்காக வேதாரண்யத்திற்கு உடனே புறப்படுமாறு சொல்லப்பட்டபோது அங்கிருக்கும் அத்தனை கண்களும் அவனைக் குத்துவதாகத் தெரிந்தன. சுலைமானிடம் விளக்க முற்பட்டான். பலனில்லை.
வந்த நாளிலிருந்தே ஒன்றைக் குறிப்பிட்டுக் கவனித்திருக்கிறான். இப்படியான சில்லறை வேலைகளுக்கு இவனைத்தான் அவர் அனுப்பிவைக்கிறார். பத்து நாட்களுக்குள் ஒரு ரத்ததான முகாம், அழுகிக் கரையொதுங்கிய பிணத்திற்கு பெயரளவில் நடத்தப்பட்ட சவக்கூராய்வு, இன்றையதோடு சேர்த்து இரண்டு குடும்பக்கட்டுப்பாடு முகாம்கள். தனிப்பட்ட முறையில் அவருக்குத் தன்னை சுத்தமாகப் பிடிக்கவில்லையென அவனுக்குத் தோன்றியது அல்லது இருப்பதிலேயே இளையவன் என்பதால் இஷ்டத்திற்குப் பந்தாடுகிறார்.
சுலைமானுக்கு ஆகாத இன்னொரு மருத்துவரான மருதுபாண்டி வேறொரு கணக்கைச் சொன்னார், “நீங்க ப்ரைவேட் ப்ராக்டீஸ் ஆரம்பிக்கிறதுக்குள்ள இந்த ஊரவிட்டு ஒங்கள டிரான்ஸ்வர் வாங்கிட்டு ஓடவிட்ருவான் மனுஷன்.. அவனோட ஸ்பெஷாலிட்டி, ஆளு எவனையும் இங்க கால ஊன உடமாட்டான்.. பாய்ங்க ஏரியா சப்போட்டு வேற இருக்குல்ல..”. இவனுக்குமேகூட நாகை அத்தனை சுகப்படவில்லை. பணிமாறுதலுக்கு காசைத் தண்டம் அழவேண்டாமென்றுதான் இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டான்.
வேதாரண்யப் பேருந்து புறப்பட்டு அரைமணியாகியிருக்கவில்லை; சுலைமானிடமிருந்து மீண்டும் அழைப்பு. மெய்யப்பன் எடுக்கவில்லை. இரண்டாவது மூன்றாவது முறையென அழைப்புகள் தொடர்ந்தன.
“சார் போயிட்டுதான் சார் இருக்கேன்..” பேருந்தில் அத்தனை இரைச்சலில்லையெனினும் கூட்டத்திற்குள்ளிருந்து கத்துவதைப்போல பேசினான்.
“இல்லப்பா.. நீ எறங்கி ரிட்டனாயிடு.. சீக்கரமா வந்துரு இங்க..” எதிர்முனையின் அமளிகளுக்கு நடுவே சுலைமானின் பேச்சு அவதியும் பதற்றமுமாக இருந்தது.
மீனவர்கள் இருவர் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிலொருவரை உடனடியாக உயர்சிகிச்சைக்காக தஞ்சைக்குக் கொண்டு செல்லவேண்டுமெனவும் சுலைமானிடமிருந்து மொபைலை வாங்கிக்கொண்ட சூபரிண்டெண்டண்ட் விளக்கினார்.
“ரொம்ப சென்ஸிட்டிவ் இஷூயூஉ டாக்டர்.. மினிஸ்டர் கலெக்டரெல்லாம் இண்ட்ரஸ்ட்டட்.. சோ டாக்டர் யாராச்சும் கூட போகணும்..”
“வேற யார்ட்டயாச்சும் சொன்னா என்ன சார்.. ஃபர்ஸ்ட்டு போனடிச்சு ஃபேமிலி ப்ளானிங் கேம்ப்புக்கு போவச்சொன்னாரு.. இப்ப என்னடான்னா பாதியில எறங்கி வரச் சொல்றீங்க..”
]“சர்ஜன்றதால நீங்க போனா பெட்டரா இருக்கும்ன்னு.. சார் அதுக்காண்டிதான் ஒங்களுக்கு கால் பண்ணாரு..”
“என்ன ஆம்புலன்ஸ்லயேவா சார் ஆபரேஷன் பண்ணப்போறேன்.. கூட சும்மா ஒப்புக்கு போறதுக்கு யாரு போனா என்ன..”
‘அவன சீக்கிரம் வரசொல்லுங்க’ பக்கத்திலிருந்த சுலைமான் சத்தம்போட்டார். அதிலிருந்த ‘அவன’ மெய்யப்
பனுக்கு வெகுநேரத்திற்கு காதில் ஒலித்தவாறிருந்தது.
ஆம்புலன்ஸ் வேகம்பிடித்திருந்தது. மெய்யப்பனுக்கு வழியெதுவும் விளங்கவில்லை. லியோ
வும் கண்ணயர்ந்திருந்தார். மெய்யப்பன் காயம்பட்டிருந்தவரைப் பார்த்தான். கட்டுடலெனினும் எப்படியும் ஐம்பது வயதிருக்கும். பதிவேட்டையெடுத்து பெயரைப் பார்த்தான். ஜஸ்டின். வலது உள்ளங்கையிலும் இடப்பக்கத் தோளிலும் தொடையிலும் வெட்டுக்
காயங்கள். பாதங்களின் வெட்டுக்காகத்தான் தஞ்சாவூருக்கு கொண்டுசெல்லவேண்டுமென சொல்லப்பட்டது. முகாமுக்குப் போனவழியில் பாதியிலிறங்கி மீண்டும் மருத்துவமனைக்கு வந்தவனுக்கு ஆம்புலன்ஸ் தயாராக இருந்தது. கிட்டத்தட்ட இவனை உள்ளே
தள்ளி கதவை அடைக்கத்தான் அங்கே அவர்கள் காத்திருந்தார்கள்.
நோயறிக்கையை வாசித்தவன் ஓரிடத்தில் நிறுத்தி காயங்களை மீண்டும் பார்த்தான். ‘..மீன்பிடி படகிலிருந்தபோது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு..’. காயங்கள் தொழிற்முறை கொலைக்காரர்களின் தாக்குதலைப் போலிருந்தன. ‘ஃபிஷர்மேன்’ ‘அஸ்ஸால்ட்’ போன்ற வார்த்தைகளை வைத்து அவர்களுள் ஏதோ பிரிவுகளுக்கிடையிலான கைகலப்பு என்றுதான் முதலில் எண்ணியிருந்தான்.
கம்பியில் தொங்கவிடப்பட்டிருந்த கால் அவ்வுடலுக்கு சம்பந்தமில்லாத வஸ்துவாக வலுவில்லாமல் ஆடிக்கொண்டிருந்தது. ஜடப்பொருளைப்போல. அவ்வுடலேகூட ஒரு கணம் உயிரற்றதாகத் தெரிந்தது. மெய்யப்பன் அம்மனிதரை உலுக்கினான். கண்களைத் திறக்கச் சொன்னான். நாவை நீட்டச் சொல்லி சத்தம் போட்டான். மிகுந்த சோர்வுடன் அவரால் செய்ய முடிந்தது.
லியோ விழித்துக்கொண்டார்.
“நம்ம ஹாஸ்பிட்டல்ல எத்தன பேரு இவரோட வந்தவங்க அட்மிட்டாயிருக்காங்க..?” தாள்களை வாசித்த வாக்கிலேயே மெய்யப்பன் கேட்டான்.
“இவனத் தவுத்து இன்னும் ஒரு ஆளு.. ஒருத்தன கடல்லயே கொண்டு வீசீயிருக்கானுங்க.. இவனுவ ரெண்டு பேருதான் கரைக்கு வந்துசேந்தது..”
மெய்யப்பனுக்கு திடுக்கென்றிருந்தது. அதை வெளிக்காட்டக்கூடாதென்ற சுதாரிப்பையும் மீறி கேட்டான், “கொன்னு வீசிட்டாங்களா? பாடி வந்திருச்சா அதுவும்?”
“அதெல்லாம் கெடைக்காது.. கெடைக்கக் கூடாதுன்னுதான துண்டமா வெட்டிப்போடறது..”
லியோவின் பதிலிலிருந்த அலட்சியத் தொனி அருவருப்பாக இருந்தது. மேற்கொண்டு எதுவும் விசாரிக்கவே தோன்றவில்லை.
அவரே தொடர்ந்தார், “ரெண்டு நாளு நியூசு.. நாலு அறிக்க.. அவ்வளதான்..” வண்டிக் கண்ணாடியைச் சிரமப்பட்டு நகர்த்தி வெளியே துப்பினார் “அவ்வளதான்.. சாவுறவன் செத்துக்கிட்டே இருப்பான்.”
மெய்யப்பன் எம்.எல்.சி. பிரதியில் குறிப்பிடப்பட்டிருந்த காயங்களின் விபரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். ‘பாதத்தைக் கோடரியால் பிளந்தார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயுதங்கள் எவையுமே பாதுக்காப்புப் படையினர் பயன்படுத்துபவையாகத் தோன்றவில்லை.
“இந்தம்மா டெல்லிக்கு லெட்டரெழுதும்.. கலைஞர் எழுதி எம்ஜியார் எழுதி திரும்ப இந்தம்மா எழுதி.. எழுதி எழுதி மண்ணா போச்சு.. எழுதுன தாள எடைக்கி வித்த காச கொண்டி இந்தா இவனுகளுக்கு வாய்க்கரிசி போட்டிருக்கலாம்..”
மெய்யப்பன் லியோவை நிமிர்ந்து பார்த்தான். அவர் இவனிடம் பேசுவதைப் போலில்லாமல் புலம்பலாகப் சொல்லிக்கொண்டிருந்தார். கறுப்பான முகத்தில் பழுப்பேறிய கோல்டுஃரேம் கண்ணாடி, எண்ணெயில் வழித்த வெள்ளிக் கோரைமயிர்கள், மேலுதட்டின் விளிம்பில் தும்மினாலே பறந்துவிடும்போன்ற மீசை, வெள்ளைச் சட்டையின் பாக்கெட்டில் சிவப்பு அட்டையில் கதிரரிவாள் படம்.
“கம்யூனிஸ்ட்டா நீங்க..?” இவனுக்கும் ஏதோ அரசியல் பேசவேண்டும் என்றிருக்க, இதைக் கேட்டான்.
“இதுவா.. இங்க யூனியன் கார்டு.. கட்சில்லாம் இல்ல..” லியோ பாக்கெட்டைப் பார்த்தபடி சொன்னார்.
“இல்ல அதவெச்சு கேக்கல.. சும்மா நொட்ட சொல்லிட்டு இருக்கீங்களேன்னு சொன்னேன்..” வலதுக் கன்னத்தில் மட்டும் ஒரு புன்னகையிருந்தது.
“அட நடப்ப சொன்னா நொட்ட சொல்றனா..” தோற்றவனின் குரலில்தான் பேசினார். “முன்னூறு நானூறு பேரு இதுவரைக்கும் செத்திருக்கான்.. மூணு நாலு சீஎம் மாறியாச்சு.. மசுருக்கு புண்ணியமில்ல.. நொட்டங்கறீங்க..”
மெய்யப்பனுக்கு அந்த எண்ணிக்கை ஊதிப்பெருக்கப்பட்டதாகப் பட்டது. அதே புன்னகையுடன் மறுத்து தலையசைத்தான்.
லியோ தொடர்ந்தார், “நல்லா தொக்கான சரக்கு.. இதெல்லாம் இப்புடி இருக்கவரைக்குந்தான் வண்டியோடும் இதுங்களுக்கு.. இலங்க பிரச்சன, பாகிஸ்தான் பிரச்சன, பைப்படி பிரச்சன..” மறுமுறை வெளியே துப்பினார்.
“ஒங்களுக்கும் ஒக்காந்து வம்பு பேச இது நல்ல சரக்குதானே..” அந்தக் குரலில் இயல்பாகவே ஒரு துடுக்குத்தனம் இருந்தாலும், எதற்காக அவரிடம் விதண்டாவாதம் செய்கிறோமென அவனுக்கே கொஞ்சம் தயக்கமாகவுமிருந்தது.
“இங்க எல்லாவனும் செத்துட்டிருக்கான்னு சொல்றது நா வம்பு பேசுற மாதிரி இருக்கா ஒங்களுக்கு.. போச்சு போங்க..” லியோ முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
சுலைமானின் அடிவருடி என்பதற்கான விளக்கத்தை மேற்கொண்டு அவரிடம் காட்டவேண்டாமென்றிருந்தது. நோயறிக்கையை மடித்து நீட்டியவனிடம் அவரே அடுத்த கேள்வியைக் கேட்டார்.
“எப்டி வெட்னானுங்கன்னு வாசிச்சிங்களா?”
“கோடரின்னு போட்டிருந்துச்சு..”
“ம்ம்.. எவ்வளோ ஏத்தமசுரு பாருங்க.. வக்காளவோலிக..”
மெய்யப்பன் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை.
“ஆரம்பத்துல புலிங்கதான் ஒங்க ஆளுங்கள கொல்றானுகன்னானுக.. அப்பறம் தெரியாம புலிங்கன்னு நெனச்சு சுட்டுட்டோம்ன்னானுக.. புலிங்கள கொன்னுக்குவுச்சி அஞ்சு வருசமாச்சு.. இப்ப எவங்கொன்னானாம்.. கேக்க ஒரு பய நாதியில்லாத பயமக்கல்ல இங்க இருக்கவன்லாம்..” லியோ பேசிக்கொண்டே போனார்.
மெய்யப்பனுக்கு இதுகுறித்தெல்லாம் அதிகம் தெரியவில்லை. வெறுமனே தலையாட்டவும் மனமில்லை. “அவங்க கோஸ்ட்டல் லைன் பக்கமா போனதுக்காகவா.. பட் அதுன்னாலும் இப்படியா கொல்ற அளவுக்கா போறது..”
“அவனுங்க லைனா? எது லைனு.. யாரு போட்டா லைனு இவனுகளுக்கு.. சொல்லுங்க சார் எது சார் அவனுக லைனு?” முதன்முறையாக லியோ கோபத்துடன் பேசினார். அது தனக்கெதிரான குரலாக இல்லாமல் ஓர் அறச்சீற்றமாகவே மெய்யப்பனுக்குத் தெரிந்தது.
“கச்சத்தீவு அவனுக லைனா? எப்ப அவனுக லைனாச்சு அது..” லியோவிற்கு உஷ்ணம் தணியவில்லை.
மெய்யப்பன் அந்தப் பெயரை சிலமுறை செய்திகளில்மட்டும் கேட்டிருக்கிறான்.
“யாரு லேண்டு அது.. தெரியுமா ஒங்களுக்கு.. யாருதுன்னு சொல்லுங்க”
இப்படி தன்னிடம் அவர் எதிர்கேள்வி கேட்கும் சகஜநிலையை இத்தனை நேரம் உருவாக்கியிருக்க வேண்டாமென்று மெய்யப்பனுக்குப் பட்டது. மிகச்சாதாரண விஷயத்தைக் கவனிக்கப் போதுமான மிகச் சாதாரண உடல்மொழியை வருவித்தான். கேட்டவரின் வாய் பாதியாகத் திறந்தேயிருந்தது. இவனுக்கு எப்படியும் இதெல்லாம் தெரியாதென்ற முன்முடிவுடனும் அவரேதான் பதில் சொல்லவேண்டுமென்ற ஆயத்தத்துடனும் அவர் காத்திருப்பதைப் போலிருந்தது. இவனுக்குமே அந்த இடைவெளியை நீட்டிக்காமல் சட்டென அவர் சொல்லிவிட்டால் தேவலாமென்றிருந்தது.
“ராமநாதபுரம் ஜமீன் சொத்து சார் அது.. எதோ லேசுல அவனுக எடம்றீங்க..”
மெய்யப்பனுக்கு தான் மொத்தமாக அந்நியப்படுவது நிலைகொள்ளவிடாமல் செய்தது. அதேநேரம் அறியாமை வெட்டவெளிச்சமாகிவிடவேண்டாமென வாயைத் திறக்காமலிருந்தான். ஈடுகொடுத்துப் பேச ஏதுவாக ஒரு வார்த்தை சிக்கினால்கூட போது
மென்றிருந்தது.
“தீவ தூக்கி அப்புடியே அவனுகள்ட்ட கொடுத்தது தான் போச்சு.. எவ்வளோ பெரிய லாசு அது..” சொல்லி விட்டு லியோ கையை விரித்தார்.
“பொலிட்டிக்கல் பாலிஸின்னு ஒன்னு ஃப்ரேம் ஆயிடுச்சுல்ல.. நம்ம ஆளுங்க அந்தப் பக்கம் போகாமயிருந்தா என்ன..” உத்தேசமாக இப்படிச் சொல்லமுடிந்ததில் கொஞ்சம் மீண்டதைப் போலிருந்தது மெய்யப்பனுக்கு.
“பாலிஸியா.. முதுகுல குத்துனது சார் அது.. நேரு குடும்பம் குத்துனது.. அப்பாருக்கு அலட்சியம்.. மவ அராஜகம்.. கிள்ளுக்கீர எப்பவும் நாமதான அவய்ங்களுக்கு..”
“பழய கதெயெல்லாம் உடுங்க” தெரிந்த விஷயத்தை அலட்சியப்படுத்துவதைப்போல மிக இயல்பாகக் காட்டிக்கொண்டான். “அங்க போறதால யாருக்கு அடி இப்ப..” இந்தத் திசையிலேயே பேசுவது சமாளிக்கப் போதுமாகப் பட்டது.
லியோ இடவலமாகத் தலையசைத்தார்.
மெய்யப்பன் நிறுத்தவில்லை. “இப்பயென்ன அங்க மட்டுந்தான் மீன் இருக்கா இவங்களுக்கு.. தண்ணிக்குள்ள மீனுக்கென்ன பார்டரா இருக்கு.. தாண்டுனா சாவுற மாதிரி.. மனுசனுக்கு தெரியணும்ல.. கொல்றான்னு தெரிஞ்சுபோயி வம்படியா இவுங்களே வாங்கிட்டு வந்தா.. தேவயா இதெல்லாம்..” சுவாதீனமற்றுப் படுத்திருக்கும் ஜஸ்டினை ஒருமுறை பார்த்தான்.
லியோ விரக்திப் பெருமூச்செறிந்தார். “என்னத்த சொல்றது போங்க.. நம்பளயே காயடிச்சிட்டே இருக்கானுகன்னு சொல்லிட்டிருக்கன்..” இருக்கை நுனிக்கு வந்தார். ஆதாரப்பூர்வ ஆணித்தரமான விஷயங்களைப் பேசப்போவதைப் போல இடக்கையைத் தன் தொடையிலூன்றி வலக்கை வலுவாக ஆட்டிப் பேசினார், “பாகிஸ்தான் கடக்கரப்பக்கம் இது வரைக்கும் பாடர் தாண்டுனான்னு பிஷர்மென் எவனையாச்சும் ஒருத்தன அவன் கொன்னுருக்கானா? இந்த சிங்கலக் கூத்தியாமக்கதான் கொல பண்ணிட்டிருக்கான்.. எத்தன பொணம் வருசத்துக்கு.. கேக்க இங்க ஒர்த்தனுக்கும் சொரணயில்ல.. ரெண்டு வருசதுக்கு முந்தி கேரளாக்காரன் ரெண்டுபேர இத்தாலிக்காரன் சுட்டான்.. மன்மோகன நெருக்கி புடிச்சு மலையாளத்தானுக அவனுகள புடிச்சு உள்ளபோடல.. இங்க எழுதுறோம் நாம நுப்பது வருசமா.. லெட்டர் லெட்டரா..” சொல்லிக்கொண்டே வந்தவர் பேசுவதே பயனற்றது என்ற முகமொழியுடன் சற்று நிறுத்தினார். மெல்ல புன்னகத்தவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்வதைப் போல தொடர்ந்து, “கேட்டீங்க பாரு ஒரு கேள்வி.. அங்கதான் மீனு கெடைக்குதான்னு..” ‘ஹ்ம்’ என்ற வெற்றுச்சிரிப்புடன் முடித்தார். தனக்கு நிகரான ஒருவனுடன் தான் பேசிக்கொண்டிருக்கவில்லையென்ற சலிப்பாகத்தான் அது தெரிந்தது.
மெய்யப்பனுக்கு சுருக்கென அவ்விடத்தில் சூடேறியது. “ஒங்கள மாதிரி ஆளுங்களுக்கு எப்பயுமே பேஸ்லைன்ன்னு ஒன்னு கெடையவே கெடை
யாதுல்ல.. புரட்சி அதுஇதுன்னு எதாச்சும் வம்புபேசி இவுங்கள உசுப்பேத்தி அடிவாங்கி சாவ வைக்கிறது..”
லியோ கலகலவென சிரிக்க ஆரம்பித்தார். வெளிப்படையான கேலிப் பிரகடனம் போலிருந்தது அச்சிரிப்பு. மெய்யப்பனை எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு குறுக்கிய சிரிப்பு.
“பின்னயென்ன பண்றீங்க நீங்கல்லாம்.. இங்க ஒக்காந்துக்கிட்டு டீயும் வடையும் தின்னுக்கிட்டு ஜீனோசைடுங்குறது, தேவயில்லாம அடுத்தவன் நாட்டுல மூக்க உடுறது, ஈழத்த மீக்குறோம்றது, மீன் புடிக்கிறதுல ஏரியா ஈகோ.. ஒங்களால மாக்ஸிமம் ஒரு அன்ரெஸ்ட்ட க்ரியேட் பண்ணமுடியும்.. அவ்வளதான்..”
லியோவுக்கு அவ்வார்த்தை புரியவில்லையெனினும் தான் பேசியவற்றை ஒட்டுமொத்தமாக மலினப் படுத்தும் சாரத்தைப் புரிந்துகொண்டார். முகம் சற்று சினந்தெனினும் அவர் பதில்பேசவில்லை. மெய்யப்பனுக்கு அதுவே திருப்தியாக இருந்தது.
“சும்மா எதாச்சும் ஃப்ளட்டர் எப்பப் பாத்தாலும்..” அவரிடம் சொல்வதாக இல்லாமல் பொதுமையில் பேசினான். “லீடர் ஒருத்தரு ஒரு டெஸிஷன் எடுக்குறாங்கன்னா எல்லாவனையும் ஒக்காந்து திருப்திப்படுத்திட்டிருக்க முடியாது.. ஆயிரம் விஷயம் கன்ஸிடர் ஆகும் அதுல..”
லியோ கண்களை இறுக்கிமூடியபடி உட்கார்ந்திருந்தார். அவன் என்ன பேசினாலும் பதிலுரைப்பது வீண் என்ற நிலைக்கு அவர் வந்திருப்பதைப் போலிருந்தது. மெய்யப்பனும் நிறுத்தியிருந்தான்.
கண்களைத் திறந்தவர் தன்மையான குரலில் சொன்னார், “சார் டாக்டரானது நல்லதுதான்.. ஐயேஎஸ்கீது ஆயிருக்காம..”
மெய்யப்பனுக்கு பளாரெனக் கன்னத்தில் அறையப்பட்டதைப் போலிருந்தது. அந்தச் சிறு வாக்கியத்தின் அத்தனை சாத்தியமான அர்த்தங்களும் உள்ளுக்குள் அரிக்க ஆரம்பித்தன. அவனால் சட்டென வார்த்தைகளை சேகரிக்கமுடியவில்லை. எந்தவொரு அவசர எதிர்வினையும் தன்னை மேலும் பலவீனமாக்கக்கூடுமென சிரமப்பட்டு நிதானித்தான். அவருடைய முகத்தைக்கூடப் பார்க்கவில்லை.
ஜஸ்டின் மீண்டும் வலியில் முனக ஆரம்பித்தார். முனகல் மெல்ல வலுத்தது. ஒரு கட்டத்தில் தன் ஒட்டுமொத்த சக்தியையும் குவித்துக் கத்த ஆரம்பித்தார். காலைக் குறிப்பிட்டுக் காட்டி ஓலமிட்டார். போட்ட சத்தத்தில் ஓட்டுநரே சற்று வண்டிவேகத்தை நிதானித்தார். லியோ தன்போக்கில் ஊசியைத் தயார் செய்தபடி முன்னுக்கு குரல்கொடுத்தார் “நிறுத்தாத.. ஓட்டு ஓட்டு..”
“என்ன எடுக்குறீங்க..?” மெய்யப்பன் கேட்டான்
“கொஞ்சம் செடேஷன் போட்டுவுடுறேன்.. இன்னும் ஒரு மணிநேரம் ஆவும் எப்டியும்..” மருந்தை உறிஞ்சியபடி சொன்னார்.
“ஒங்க இஷ்டத்துக்கு லோட் பண்றிங்க.. நா சொன்னனா இப்ப..?”
“சரி போடல..” பாட்டிலிலிருந்து ஊசியை எடுக்காமல் அப்படியே கீழே வைத்துவிட்டு வெளியே வேடிக்கை பார்ப்பதைப்போல உட்கார்ந்துகொண்டார். மெய்யப்பன் கிட்டத்தட்ட பொறுமையிழந்திருந்தான்.
“ட்ரெஸ்ஸிங் லட்சணத்துலதான் அந்தாள் கத்துறான்.. இவ்வளோ டைட்டா எந்த முட்டாப்பயலாச்சும் போடுவானா..” இதற்கு லியோவின் முகரேகைகள் எப்படி நெளியுமென அவனால் ஊகிக்கமுடிந்தது. இன்னுமேகூட மோசமான வார்த்தையைப் பிரயோகித்திருக்கலாம் என்றிருந்தது. அவர் பக்கம் திரும்பாமல் ஜஸ்டினின் காலைத் தொங்கலிலிருந்து இறக்கினான்.
“பிரிக்கப் போறீங்களா.. சார் வேணாம்.. சொதசொதன்னு ப்ளீடிங்கு.. அரெஸ்ட் ஆவலேன்னா செரமம்..” லியோ நெருங்கிவந்தார்.
அவர் சொல்லிமுடிப்பதற்குள்ளேயே முதலடுக்கை அவன் கத்தரித்துவிட்டான்.
“வண்டிய செத்த நிறுத்த சொல்லுங்க..” வேலையில் முனைப்பாக இருந்தான். “இன்ஸ்ட்ருமெண்ட் செட்டா இருக்கு?”
“இல்ல சார். ட்ரெஸ்ஸிங்குக்கு காஸ்ரோலும் காம்ஜியுந்தான் எடுத்துவெச்சேன்..”
“ப்ச்..”
“சார்.. ரிஸ்க்கு.. ஊத்த ஆரம்பிச்சா கண்ட்ரோலே பண்ணமுடியாது..”
சட்டையே செய்யாமல் அடுத்தடுத்த அடுக்குகளை வெட்டி முன்னேறினான்.
“சூச்சர் மெட்டீரியல் என்ன இருக்கு..”
லியோ கொண்டுவந்திருந்த பெட்டியைத் துழாவினார். அச்செய்கையில் ஈடுபாடே தெரியவில்லை.
“காட்டன் த்ரெட்டாச்சும் இருக்கா..”
“அதெல்லாம் தாங்காது சார்.. வண்டிய வெரசா அழுத்த சொல்றேன்.. கொஞ்சம் செடேஷன் வெச்சா போதும் இவனுக்கு..”
“யோவ்.. ஒன்னால வாய மூடிட்டு நா சொல்றத மட்டும் தரமுடியுமா முடியாதா? சும்மா எல்லாந்தெரிஞ்ச மயிராட்டம்..” பின்பாதி முணக்கம்தானெனினும் அழுத்தமாகவும் சொல்லப்பட்டது.
லியோவுக்கு லேசாக உலுக்கியதைப் போலிருந்தது. மூன்றாவது மனிதன் மயக்கத்தில்தான் இருக்கிறானெனினும் ஒரு பெருந்திரலுக்கு முன் தான் அவமானப்படுத்தப்பட்டதைப்போல கூனிப்போனார்.
கடைசி அடுக்கைப் பிரித்தவன் காயத்தின் கோரத்தைப் பார்த்து நிஜமாகவே மிரண்டுபோனான். கிழிந்த தசை நொறுங்கிய எலும்புகளிலெல்லாம் ரத்தம் உறைந்துவிட்டாலும் இடையிடையே நான்கைந்து இடங்களிலிருந்து சரமாரியாக பீய்ச்சியடிக்க ஆரம்பித்தது. சட்டென கெண்டைக்காலைச் சுற்றி கட்டுத்துணியை இறுக்கிக்கட்டி மெல்ல ஒவ்வொரு இடமாகப் பார்த்து நூலைக் கொண்டு சேதமான ரத்தக்குழாய்களைக் கட்டிவிட்டான். ரத்தம் ஓரளவு மட்டுப்பட அதிக அழுத்தமில்லாத லேசான கட்டாகப் போட்டுக் காலை இறக்கிவைத்தான். நேரம் போகப் போக ஜஸ்டினின் கதறல் மெல்ல குறைந்தது. ஏதோவோர் உந்தலில் செய்த அந்தச் செயல் தனக்கு எதிராக அமைந்திருக்கவும் வாய்ப்புண்டு என்பது மெய்யப்பனுக்குத் தெரியும். செய்துமுடித்த பின்னரும் அகச்சூடு ஆறாமலிருந்தது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் மெய்யப்பனுக்கு அந்தப் பணியில் ஒத்தாசை செய்தார். முடித்துவிட்டுக் கீழே இறங்கி கையைக் கழுவிக்கொண்டிருந்தவர், மெய்யப்பனிடம் சொன்னார், “சுலைமான் சார் பக்காவான ஆளு சார்.. யார எந்த வேலைக்கு அனுப்பனும்னு கரெக்டா புடிப்பாரு.. மனுசன் சொன்னா சொன்னதுதான்.. சீஃப் டாக்டருன்னா அப்புடி இருக்கணும்.. சமரசமே கெடையாது..”
மெய்யப்பன் எதுவும் பேசாமல் கைகளைக் கழுவிக்கொண்டான். தடுமாறி ஏறிய சரிவில் மீண்டும் உருண்டு கீழேவிழுந்ததைப் போலிருந்தது. தன் முதுகுக்குப் பின்னால் லியோ சிரித்துக்கொண்டிருக்கக்கூடுமெனத் தோன்றியது. எந்தக் கண்ணையும் சந்திக்காமல் உள்ளே ஏறிக்கொண்டான். லியோ ஏறிக் கதவைச் சாத்துவதற்குள் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். அவனுக்கு எதிரில் அவனுடைய முகத்தைப் பரிகாசத்துடன் பார்த்துக்கொண்டு அவர் உட்கார்ந்திருக்கும் சித்திரம் மனதிற்குள் தெரிந்தது.
ஐந்தாறு கிலோமீட்டர் தாண்டியிருக்கும். தூங்குவதைப்போல பாவித்துக்கொண்டிருந்தவன் மெல்ல கண்திறந்தான். ஜஸ்டின் உறங்கியிருந்தார். கால்கட்டில் துளி கசிவு இருக்கவில்லை. முனகல் நின்றிருந்தது. உள்ளுக்குள்ளிருக்கும் நமைச்சலுக்கு அது சற்று ஆறுதலாக இருந்தது; கொஞ்சம் தெம்பும் கொடுத்தது. ஒரு கசப்பான சிரிப்பை எதிர்கொள்ள, கூடுமானவரை தன்னைத் திரட்டிக்கொண்டு விட்டான். லியோவின் பக்கம் மெல்ல பார்வையைத் திருப்பினான். எந்தவொரு அவமதிப்பையும் பொருட்படுத்தவேண்டியதில்லையெனத் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
லியோ அசையாமல் உட்கார்ந்திருந்தார். இவன் அவரைக் கவனித்துக்கொண்டிருப்பதற்கான மெல்லிய சலனம்கூட அம்முகத்தில் தெரியவில்லை. கோல்டு ஃபிரேமுக்குள் அகலவிரிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்த கண்கள் அப்படியே நீண்டநேரத்திற்கு இமைக்கப்படாமலிருந்தன.
premamayilan@gmail.com