மும்பை ரெட்லைட் ஏரியாவில் ஒரு மாளிகை. அந்த நகரத்தின் மிகப் பெரிய ரவுடிகளில் ஒருவன் அங்கு வருகிறான். அவன் பெயர் சஸ்யா.
அவனும் அவனுடைய நண்பனும் தங்களுக்குத் தேவையான பெண்களை நிற்க வைத்துத் தேர்வு செய்கிறார்கள். சஸ்யா தனக்குத் தேவையான ஒருத்தியைத் தேர்வு செய்தபிறகு மற்றொருத்தியை அவன் நண்பன் தேர்வு செய்கிறான். நண்பன் தேர்வு செய்தவள் பெயர் பூமிகா பர்தேசி. பூமிகா சொல்லும்படியான அழகானவள் இல்லை. ஆனாலும் சஸ்யாவோடு வந்திருக்கும் நண்பனைப் பார்த்து, “நான் இவன்கூட எல்லாம் போகமாட்டேன்” என்கிறாள். “ஏய், வேணுமா இல்லையான்னு நான்தான் முடிவு செய்யணும்” என்கிறான் அவன். “அவள் part time-மாக விபச்சாரம் செய்பவள். ஒருத்தன வேணுமா வேணாமா என்பதைத் தேர்வு செய்ய அவளுக்கும் உரிமை இருக்கு” என்கிறார்கள் அந்தத் தொழிலை நடத்துபவர்கள். ”கொஞ்சம்கூட attraction-னே இல்லாம இருக்குறா..! இவளுக்கு சாய்ஸ் வேறயா?” என மிரட்டுகிறான் நண்பன்.

சஸ்யா அவளிடம், “ஏய், இங்க செக்ஸ் வைச்சிக்கிறதுக்குத் தான வந்திருக்க. பணம் வாங்குறல்ல அப்புறம் என்ன?” என்கிறான். “நீ சொல்ற மாதிரி நான் செக்ஸ் வைச்சிக்கிறதுக்குப் பணம் வாங்குறேன். ஆனா நீயெல்லாம் பணம்குடுத்தாதான் முடியும்!” என்கிறாள். அந்த இடம் கொஞ்சம் கலவரமாக மாறுகிறது.நண்பன் அவளை அடிக்கப் போகிறான். நண்பனை சமாதானப்படுத்திவிட்டு அவளிடம் சஸ்யா காமம் கலந்து பேசுகிறான்.

“உன் தொடைக்கு நடுவுல தேள் இருக்கு…! அதுதான் உன் வாய்வழியா விஷமா வருது. இந்த தேள கசக்கணும்…! கதற கதற…!” என்கிறான் சஸ்யா

“அந்த தேளோட விஷம் மோசமானது. அது கொட்டுனா நீ தாங்க மாட்டே…!” என்கிறாள் பூமிகா (பூமிகா பர்தேசி)

”என்ன டெஸ்ட் பண்றியா…?” – சஸ்யா

”தாங்குவியா… வா என்னோட பெர்சனல் ரூமுக்குப் போவோம். கவலப்படாத பெர்சனல் ரூமு’க்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் வாங்க மாட்டேன்…?” – பூமிகா

“எக்ஸ்ட்ரா வாங்கப் போறது நான்தான்” – சஸ்யா

“அப்பிடின்னா நான் உனக்குப் பணம் குடுக்குறேன்” – பூமிகா.

மிகப் பெரிய ரவுடியை வார்த்தைகளால் புரட்டி எடுக்கிறாள் பூமிகா. இப்படியாகப் போகும் காட்சிகளின் இறுதியில் வரும் ட்விஸ்டையும் டர்னையும் இந்தக் கட்டுரையில் படித்தால் போதாது. பார்க்க வேண்டும். ஒருநாள் தற்செயலாக யூ டியூப்பில் இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் ‘யாருடா இத எடுத்தது?’ என்று தேட ஆரம்பித்தேன். எழுத்து உருவாக்கம் இம்தியாஸ் அலி என்பது தெரிந்தது. இம்தியாஸ் அலி நிறைய நல்ல படங்களைக் கொடுத்திருக்கிறார். அதில் ஒன்று 2014-இல் வந்த ஹைவே. ஆலியா பட்டின் நடிப்பில், நூரன் சகோதரிகளின் குரலில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘படாக்க குடி (Patakha Guddi)’ பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? கேட்கவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையில் பாதியைத் தேவையில்லாமல் இழந்துவிட்டீர்கள் என்பேன்.

தமிழில் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற படத்தில் நடித்த அதிதி போஹன்கர் இந்தத் தொடரின் பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘அப்பிடியா? யார் அது’ எனக் கேட்கிறோம் இல்லையா…? உண்மையில் அதிதி போஹன்கரைப் போலயாராலும் கண்டுகொள்ளப்படாமல் வாழும் கோடான கோடிப் பெண்களின் அடிமன ஆசைதான் அவள். அவள் முதல் சீசனில் தனித்துவமான ஈர்ப்பைத் தந்திருந்தாள். இரண்டாவது சீசன் எப்போது வரும் என்று காத்திருந்தேன். சென்ற ஜூன் மாதம் (17 ஜூன் 2022) இரண்டாவது சீசன் வருவதாகச் சொன்னார்கள். உடனடியாகப் பார்க்க முடியாத அளவிற்குச் சில வேலைகள் குறுக்கிட்டதால் சற்றுத் தாமதமாகத்தான் பார்த்தேன். இரண்டு சீசன்களில் அவளின் கதை இதுதான்:

அவள் பெயர் பூமிகா பரதேசி. வயது 29. ஏழு வருடமாக மும்பையின் காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றுகிறாள். அவள் சிறுமியாக இருந்தபோது மோசமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. யாரோ ஒருவன் பலாத்காரம் செய்ய முயன்று அதில் பயந்து மரத்துப்போன உணர்வோடு வளர்கிறாள். திருமணம் நடந்தபிறகு கணவன் எவ்வளவோ முயன்றும் அவளால் உணர்வை வரவழைக்கமுடியவில்லை. அதனால் விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. ஆண் காவலர்கள் இவள் பெண் என்றுகூட கருதாமல் கொச்சை கொச்சையாகப் பேசுகிறார்கள். “ஏய் பொம்பள இருக்குறப்போ இப்படி பேசாதீங்கப்பா” எனச் சொல்லும்போதுகூட, சக கான்ஸ்டபிள் ஒருவன், “பூமிய யாரு பொம்பளைன்னு சொன்னது…” என்கிறான். சம்பளம் வந்தால் போதும் என வாழ்ந்து வருகிறாள். இதில் ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? யார் என்ன பேசினால்தான் அவளுக்கென்ன…? “In real life, she comes across as manly. I mean there is nothing feminine or femalely attractive about her” என்றுதான் அவளை அறிமுகப்படுத்துகிறார் ACP ஃபெர்னாண்டஸ்.

இப்படியாக உப்புசப்பு இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒருநாள், Assistant Commissioner of Police (ACP) ஜேசன் ஃபெர்னாண்டஸ் “Undercover operation” ஒன்றிற்கு அவளைத் தேர்ந்தெடுக்கிறார். “How I do it sir?” எனத் தயங்குகிறாள். அவளுடைய குடும்பப் பின்னணி ஒருநாள் இல்லை என்றால் ஒருநாள் அவளை எந்த நிலைக்கும் தள்ளிவிடும் என்பதை ஃபெர்னாண்டஸ் யூகித்தே வைத்திருக்கிறார். முதலில் சஸ்யா என்னும் போதைப்பொருள் கடத்தல்காரனைப் பிடிக்க பூமிகா பரதேசியைத் தயார்படுத்துகிறார்கள்.

சஸ்யாவினுடைய வீக்னஸ் பெண்கள். அடிக்கடி மும்பை ரெட்லைட் ஏரியாவுக்கு வருகிறான். அவனைப் பிடிப்பது யாருக்கும் தெரியாத அளவுக்கு இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். ஒரு விலைமகள் போல பூமிகாவைத் தயார்படுத்துகிறார்கள். slut, ass, dick, puzzy, boobs, fuck me போன்ற வார்த்தைகளைக் கேட்கும்போது இயல்பாக இருக்கக் கற்றுத்தருகிறார்கள். எந்த ஒரு ஆணையும் Taunt பண்ணிப் பேசினால் அவனை வலையில் வீழ்த்திவிடலாம் என்ற தொழில் நுணுக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அவளை முடிந்தவரை அழகாக்குகிறார்கள். சஸ்யாவைப் பிடிக்கும் ஆபரேசனில் சில குறைபாடுகள் இருந்தாலும் வெற்றிபெறுகிறார்கள்.

சஸ்யாவைப் பிடிக்க உயிரைக் கொடுத்து முன் நின்றவள் பூமிகா. ஆனால் வெற்றி பெற்றவுடன் கமிஷனர், “வெல்டன் ஃபெர்னாண்டஸ், இவகிட்ட அப்பிடி என்ன பாத்தீங்கன்னு தெரியல. ஆனா நல்லபடியா முடிஞ்சது” என ACP ஃபெர்னாண்டஸைப் பாராட்டுகிறார்கள். “I think we got lucky sir” என்று ஃபெர்னாண்டஸ் பதில் சொல்கிறார். பூமிகா போன்ற அவள்களுக்கே உரிய துயரம் இதுதான். சாதிப்பவர்கள் எல்லாம் அழகாக இருக்க வேண்டும் என்ற அளவுகோலை இந்த உலகம் வைத்திருக்கிறது. பூமிகா தன் வாழ்க்கையில் முதல் முறையாக மிகப் பெரிய சாதனை செய்திருக்கிறாள். அதையும் அதிர்ஷ்டம் என்கிறார்கள்.

இனி இந்த விளையாட்டை விளையாடிப் பார்ப்போம் என இறங்குகிறாள் அவள். கண்ணாடி முன் நின்று தன் முன் அழகையும் பின் அழகையும் பார்த்துக்கொள்கிறாள். மார்பை விறைத்து நிறுத்தித் தொட்டுப்பார் என அழைத்தால் ஆண்கள் மிரண்டு ஓடுகிறார்கள். கிறங்க கிறங்க மேக்கப் போட்டு நின்று, “எனக்குப் பத்துக்கு என்ன ரேட்டிங்க குடுப்ப” எனக் கேட்கிறாள். ஒரு இளைஞன் ஐந்து என்கிறான். “அப்ப என்ன கடைசிவரைக்கும் பாத்துக்கிட்டே இரு” என தண்டனை கொடுக்கிறாள். ஆண்களிடம் கருத்து கேட்டால் தன்னம்பிக்கை குறையும். Desperate- ஆ இயங்கும்
போதுதான் வெற்றி கிடைக்கும் என்பதைக் கண்டுபிடிக்கிறாள். விபசாரியாகப் பிராக்டீஸ் செய்தது அவளுக்கு ஒரு விடுதலை உணர்வைக் கொடுக்கிறது. ஆண்களைக் கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பேசுகிறாள். என்ன ஆச்சர்யம்…! சொல்லி வைத்ததுபோல எல்லா ஆண்களும் வெட்கப்படுகிறார்கள்; பயப்படுகிறார்கள்; தங்கள் வீறாப்பை வாய் ஜம்பமாக வெளிப்படுத்துகிறார்கள்.

பல ஆண்டுகளாகப் போலீஸிற்குத் தண்ணி காட்டும் நாயக் என்ற போதைப்பொருள் மாஃபியா தலைவனைப் பிடிக்க மீண்டும் Undercover Agent-ஆகப் பூமிகாவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நாயக் சாதாரணமான ஆள் இல்லை. கொஞ்சம் சந்தேகம் என்றாலும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிடுவான். அவனை அணுகுவதற்கும் ஒரே வழி விபச்சாரி வேடத்தில் போக வேண்டும். நாயக் வெறும் மாஃபியா தலைவன் மட்டுமில்லை. மிகப்பெரிய புத்திசாலி. வெளி உலகிற்கு அப்படி ஒருவன் இருக்கிறானா இல்லையா என்பதே தெரியாது. பலருக்கு நாயக் என்பது ஒரு கட்டுக்கதை.

இதுவரை பயத்தைத் தவிர வேறு அறியாத பூமிகா இப்போது பயத்தை எதிர்கொள்ளத் தயாராகி நாயக்கிடம் போகிறாள். “நாயக்க மீட் பண்றது இன்னிக்கோட முடிஞ்சிடாம பாத்துக்கோ” என்பதுதான் அவளுக்குக் கொடுக்கப்படுகிற முதல் assignment. ஒரு விபச்சாரியாக அவள் உடலைக் கொடுக்காமல் Girlfriend Sex என்ற ஒன்றை அவனுக்கு அறிமுகப்படுத்துகிறாள். உடலோடு அன்பையும் தருவதற்கு Girlfriend Sex என்று பெயர். நாயக் பேசுவதே அரிதானது; சிரிப்பது அதிசயம்; உறங்குவதே இல்லை; கண்களை மூடினாலும் மூளை அதன் ஓட்டத்தை நிறுத்தாது என எச்சரிக்கையாக இருக்கிறான். ஆனால் பூமிகாவிடம் இருக்கும்போது மட்டும் தன்னை முழுவதுமாக ஒப்படைக்கிறான். “ஆபத்தே இல்லாத குடும்பத்துக்குதான் ஆசைப்பட்டேன். அது கிடைக்கல. இப்ப ஆபத்தே போதை ஆயிருச்சு. நான் ஆசப்படுறதெல்லாம் ரொம்ப ஈசியா இருக்குறது. Normal இருக்குறதுதான். ஆனா நார்ம-லா இருக்குறது எதுவும் எனக்கு ஈஸியா கிடைக்கிறது இல்ல” என அவன் பூமிகாவிடம் வருத்தப்படுகிறான். நாயக்கிற்குள் இருக்கும் குழந்தையும், பூமிகாவிற்குள் இருக்கும் குழந்தையும் நண்பர்களாகிறார்கள். இருவரும் இணைந்து இருக்கும்போது அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். “இன்னிக்கோட முடியாம பாத்துக்கோ” என்று அனுப்பினால், என்றைக்குமே பிரிய முடியாத அளவிற்கு நாயக்கை மாற்றி விடுகிறாள்.

ஆனாலும் பூமிகா, வெறுமனே Undercover Agent- ஆக இல்லாமல் தனக்கே உரிய வழியில் double game ஆடுகிறாள். “உண்மைய சொல்றப்போ கொஞ்சம் பொய்யையும் சேரு. தப்பான இன்ஃபர்மேசன் குடுக்குறதுக்கு நாம சொன்ன அந்த உண்மையான மெசேஜ் உதவும்” என்று நாயக் சொல்லிக் கொடுத்ததை அவனிடமே apply பண்ணுகிறாள். இன்னொரு பக்கம் போலீஸிடம் நாயக் ஒருத்தன் இல்லை, அது ஒரு சிண்டிகேட் என நம்ப வைக்கிறாள். ஒரே நேரத்தில் இரண்டு கிரவுண்டில் அடித்து ஆடிய பூமிகாவின் அதிரடி ஆட்டம் எப்படி முடிந்தது என்பதை வெப் சீரீஸ் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

அவள் என்ற இந்தத் தொடரில் நிறைய குறைகள் இருக்கின்றன. குறிப்பாக, இண்டலீஜெண்ட் போலீஸை ஒரு கட்டத்திற்குமேல் கேணத்தனமாகக் காட்டியிருப்பார்கள். சில இடங்களில் பயங்கரமாகப் போர் அடிக்கவும் செய்யும். இவையெல்லாம் பொறுத்துக் கொள்ளவேண்டிய பகுதிகள். வெப் சீரீஸ் என்பது ஆற்று மணலில் பாம்புபோல நீளமாக மணல்குவித்து ஒரு பொருளை ஒளித்து வைத்து விளையாடும் விளையாட்டு போன்றது. எப்போதும் காய் இருக்கும் இடத்தில் மிகச் சரியாகக் கைவைத்து அணைக்கமாட்டோம். எப்போதாவது ஒளித்துவைத்த காய் நம் கையில் மாட்டும். அந்த தருணம் எப்படி சொல்லமுடியாத மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அதுபோல சில காட்சிகள் நம்மை அசரடிக்கும்.

அவள் தொடரில் அப்படி நம்மை அசரடிப்பது நாயக் என்ற பாத்திரம் (நடிப்பு- கிஷோர்). அவன் சிறுவனாக இருக்கும்போது அவனுடைய அம்மாவும், சித்தப்பாவும் (சின்னன்னா) உறவுகொள்வதை மறைந்து நின்று படம்பிடித்து, அதைப் பார்த்து ரசிக்கிறான். அவனுக்கு அப்பாவைவிட சித்தப்பாவைப் பிடிக்கிறது. தான் சின்னன்னாவின் மகன்தானோ என்று நினைக்கிறான். சித்தப்பா அவனுக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறார். அதில் ஒன்று கழுத்தில் கத்தியை வைத்து அறுத்துக் கொலை செய்வது. என்ன பிரச்சனையோ சித்தப்பாவின் ஆட்கள் எல்லாம் ஒருநாள் புகுந்து நாயக்கின் வீட்டில் இருக்கும் அனைவரையும் கொன்று குவிக்கிறார்கள். அதுவரை நெருக்கமாக இருந்த நாயக்கின் அம்மாவைக்கூட சித்தப்பா கழுத்தை அறுத்துக் கொல்கிறார். பதிலுக்கு நாயக்கின் உறவினர்கள் எல்லாம் சேர்ந்து சித்தப்பாவின் ஊரைக் கொளுத்திவிடுகிறார்கள். சிலர் பிடிபடுகிறார்கள். அதில் சித்தப்பாவும் ஒருவர்.

என்ன செய்திருந்தாலும் அவனுக்குச் சித்தப்பா என்பவர் உயிர். ஆனால் இன்று அவரையே கொல்லவேண்டிய நிலை வந்துவிடுகிறது. அவரைக் கட்டிப் பிடிக்கிறான். அவர் சொல்லிக் கொடுத்ததுபோல அவருடைய கழுத்தில் கத்தியை வைத்து அறுத்துக் கொலை செய்கிறான். “யார்மேல நான் ரொம்ப அன்பு வச்சிருந்தேனோ அவர என்னால கொல்ல முடிஞ்சது. ரொம்ப powerful-லா feel பண்ணேன். யார நாம வெறுக்குறமோ அவங்கள கொல்றது சுலபம். அத easy-யா யார் வேணாலும் பண்ணலாம். ஆனா யார்மேல அன்பு வச்சிருக்கமோ அவங்கள கொல்றப்போதான் real power கிடைக்கும்” என்று இந்த சம்பவத்தைப் பின்னொரு நாளில் பூமிகாவோடு பகிர்ந்துகொள்கிறான்.

அன்புடையவர்களையே கொல்கிறபோது எதிரி மிக அற்பமானவனாகப் போய்விடுகிறான். கொலை எப்படி அற்ப உணர்வாக மாறவேண்டுமோ அதுபோல காதலையும் இயல்பாகத்தான் பார்க்க வேண்டும். அதில் குரோதம் துளி அளவுகூட இருக்கக்கூடாது என்பதும் நாயக்கின் கொள்கை. பூமிகாவை ஒரு விலைமகளாக அழைத்து வருகிறான். அவனுக்கென்று யாரோ ஒருத்தி இருக்கிறாள் என்ற உணர்வைத் தருவதால் பூமிகாவைப் பிடித்துப் போகிறது. மெல்ல அது காதலாகவும் மாறுகிறது.

நாயக்கோடு காதலாக இருக்கும் பூமிகா, அமேய் என்ற ஒருவன்மேலும் ஈர்ப்பு கொள்கிறாள். விலைமாதர்களைக் கீழ்த்தரமாக நடத்தும் ஆண்கள் உலகத்தில் அமேய் கண்ணியமானவனாக இருக்கிறான். அதனால் அவனை பூமிகாவுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. ஒரு பக்கம் நாயக்கோடு உறவு வைத்துக்கொண்டாலும், இன்னொரு பக்கம் அவள் விரும்பிய நேரத்தில் அமேயோடும் உறவு கொள்கிறாள். இந்த உலகத்தில் நடக்கும் சகலத்தையும் படம் பிடித்துக் கவனிப்பவன் நாயக். பூமிகா அமேயோடு இருக்கும் அந்த வீடியோவையும் பார்க்கிறான். ஒரு நாள் நாயக் பூமிகாவோடு நெருக்கமாக இருக்கும்போது அந்த வீடியோவை அவளுக்கே போட்டுக் காட்டுகிறான். அதைப் பார்த்துவிட்டு பூமிகா, “sorry” என்கிறாள். “எதுக்கு” எனக் கேட்கிறான் நாயக். “உனக்கு இது பிடிக்காதுல்ல” என்கிறாள் பூமிகா. “ஒருவேளை எனக்குப் பிடிச்சிருந்தா…?” என்கிறான் நாயக். “உனக்கு என்மேல கோபம் இல்லையா?” எனக் கேட்கிறாள் பூமிகா. “எனக்கு உன்மேல கோபம் இல்லை. ஆனா அதுதான் உனக்கு நெருடலா இருக்கா…?” எனக் கேட்கிறான் நாயக். “இல்லை… இப்பதான் ரொம்ப Free-யா feel பண்றேன்” என்கிறாள் பூமிகா.

“Free-யா feel பண்றது ரொம்ப முக்கியம் பூமி… எதையும் யோசிக்கக் கூடாது. எங்க சித்தப்பாவுக்கு (சின்னன்னா) எங்கம்மாவோட affair இருந்துச்சு. ஆனா அவங்க freeயா இல்ல. ரகசியமா சந்திச்சாங்க. பயந்தாங்க. நான் பல தடவ யோசிச்சிருக்கேன். ஒரு பொண்ணோ பையனோ ஒருத்தர்கூடதான் படுக்கணும்னு அவசியமா என்ன? இது என்ன பெரிய விசயமா? இந்தக் கட்டுப்பாடு இல்லன்னா பல இடத்துல பல பிரச்சனைகள் இருக்காதுல்ல. ஃபோர்ஸ் பண்ணுனா அந்த இடத்துல ட்ரஸ்ட் இருக்காது. ஆணோ பெண்ணோ அவங்க மனசு ஒண்ணா இணையணும். உடம்பு ஒரு பெரிய விஷயமே இல்லை. இப்ப நீ இங்க இருக்க. என்கூட complete-டா இருக்க? free-யா…! அதுதான் எனக்குத் தேவை. மத்தத பத்தி எனக்குக் கவலை இல்லை…!” என்கிறான்.

அன்புடையவர்களைக் கொலை செய்து வலிமையாவதைப் போல அன்புடையவர்களின் இன்னொரு காதலை அங்கீகரித்து வலிமையாவது நாயக் போன்றவர்களுக்குக்கூட கடினமாக இருக்கிறது. பூமிகாவுக்கு நாயக் ஒரு அஸைன்மெண்ட் கொடுக்கிறான். அதன்படி அவள் விரும்பும் அமேய் என்பவனைக் கொல்ல வேண்டும் என்கிறான். “அவன நீ விரும்புறீல்ல… feel பண்றல்ல… அப்ப அவன முடிச்சிரு. எப்படியும் முடிய வேண்டிய கததான். அவனுக்கு உன்மேல சந்தேகம் இருக்கு. நீ என்ன செய்யிறன்னு. அதோட அவன் பலகீனமானவன். அதே நேரத்துல அவன் உன்ன காதலிக்கிறான். அது வேஸ்ட்டாகக் கூடாதில்ல. கண்டிப்பா இது உன்ன ஸ்ட்ராங்கா மாத்தும். உனக்கு அந்தப் பவர் கிடைக்கும். நீ ஒரு நேச்சுரல்” என அவளுக்கு வழிகாட்டுகிறான்.

“புழு பூச்சி புல்ல தின்னும். சின்ன ஜந்துக்கள் புழு பூச்சிய தின்னும். பெரிய ஜந்துக்கள் சின்ன ஜந்துக்கள வேட்டையாடித் தின்னும்” என இந்த சீரீஸில் ஓர் இடத்தில் வசனம் வரும். உலகம் நியாயங்களால் மட்டும் ஆனதில்லை. அநியாயங்களாலும் ஆனது. கொல்வது அநியாய உலகின் அவசியமான தகுதியாகிவிடுகிறது. இன்னொரு தகுதி துரோகம் செய்தல். பூமிகா ஆடும் டபுள் கேம் வாழ்க்கையில் ஒருமுறை நாயக்கிடம் கையும் களவுமாகப் பிடிபட்டுவிடுகிறாள். அப்போது நாயக், “ஒருநாள்ல உனக்கு எப்பிடி என்மேல அவ்ளோ நம்பிக்கை வந்துச்சு…?” என்று கேட்பான். நீண்ட மௌனத்திற்குப் பிறகு, “இதுக்கு நான் பதில் சொல்லமாட்டேன் நாயக். நீ ஸ்மார்ட், புத்திசாலி… உனக்கு எல்லாம் தெரியும்… ஆனா நீ ஒரு பொம்பள இல்ல” என்பாள் பூமிகா. இந்தக் கதையில் இருக்கும் அழகே அவள் செய்யும் துரோகங்கள்தான். அவள் யாருக்குத் துரோகம் செய்கிறாள், போலீஸுக்கா, நாயக் என்பவனுக்கா…? இல்லை தங்கைக்கா…? சமூகத்திற்கா…? இல்லை அவளுக்கே துரோகம் செய்துகொள்கிறாளா…? சொல்வது கடினம். கதையின் தொடக்கத்தில் ஃபெர்னாண்டஸ் கேட்பார், “இங்க இருக்குறதுல யாரப் பாத்து நீ ரொம்ப பயப்படுற” என்பார். அவள் சொல்வாள், “என்ன பாத்துதான் சார்” என்பாள். ஆனால் அவளைப் பார்த்து எல்லோரும் பயப்படும்படி செய்துவிடுகிறாள்

வெப் சீரீஸ் வந்த பிறகு இளைஞர்களின் வாழ்வியல் கோட்பாடுகள் நிறைய மாறியிருக்கின்றன. ஆண் பெண் உறவில் புதிய பார்வைகளைப் முன்வைக்கிறார்கள். எதற்கும் தயாராக இருக்க ஆயத்தப்படுத்திக் கொள்கிறார்கள். எளிய வாழ்க்கையைத் துறக்கிறார்கள். வசதியான வாழ்க்கைக்கு எதையும் செய்ய தயாராகியிருக்கிறார்கள். பூமிகா கதையின் இறுதியில் மிகப்பெரிய போதைப்பொருள் மாஃபியா கூட்டத்தின் தலைவியாக மாறியிருப்பாள். அது ஆபத்தான வேலைதான். ஆனால் அந்த வேலை ஒரு குடும்பத்துப் பெண் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் ஆபத்தைவிட குறைவானதாக இருக்கிறது. “ஒரு வேலைக்கு யார வேணா choose பண்ண முடியும். ஆனா என்னாலதான் அத சாதிக்க முடியும்” என்ற தைரியத்தைக் கொடுக்கிறது. எல்லாவற்றையும்விட பணத்தைக் கொடுக்கிறது

ஃபெர்னாண்டஸ் பூமிகாவிடம், “உன்னோட அழகான, அமைதியான, நிம்மதியான மிடில்கிளாஸ் வாழ்க்கைய நான் கெடுத்துட்டேன்ல” எனக் கடைசியில் வருத்தப்படுவார். “வாழ்க்கையில பணம் புகழ் எல்லாத்தையும் பாத்துட்டேன். ஆனால் நிம்மதிய பாக்கல” என்ற ரஜினியின் புளிச்ச ஏப்பம் போல இந்த வருத்தம் மிகப் பழையது. “இதுதான் என்னோட வாழ்க்கை. இந்த வாழ்க்கையில எனக்கு ஒரு மரியாதை இருக்கு. அது என்னோட சிம்பிள் மிடில் கிளாஸ் வாழ்க்கையில கிடைச்சதே இல்ல” என்கிறாள் அவள். பணமும் மரியாதையும் கிடைப்பதற்கான வழியைச் சொல்லிக் கொடுக்காத எந்தத் தத்துவமும் பழசாகிவிடும், தெரிந்துகொள்ளுங்கள்!

sankarthirukkural@gmail.com