மாமா சொன்னால் சொன்னபடி கரெக்டாக வந்துவிடுவார் என்று பாக்கியத்துக்குத் தெரியும். மேலும் சனிக்கிழமை இவ்வளவு நேரத்துக்கு வந்துவிட்டுத் திங்கள் காலை புறப்பட்டுப் போவது வாரா வாரம் உள்ளது தான். அதுவும் அத்தை இறந்த பிறகு மாமா இப்படி வருவது அனேகமாகத் தவறுகிறதே இல்லை.
எப்போதும் ரயிலில் வந்து மேலக்கடல் ஸ்டேஷனில் இறங்குவார். அந்த நேரத்துக்கு ஒரு மினி பஸ் வெளியே தயாராக இருக்கும். அதில் ஏறி சித்தர்பட்டி பீடிக் கம்பெனி பக்கம் நிறுத்தச் சொல்வார். அங்கே ஸ்டாப் கிடையாது. அவருக்கு டிரைவர் கண்டக்டர் பெயர் எல்லாம் தெரிந்திருக்கும். அதே போல அவர்களுக்கும் மாசானம் மாமாவை நன்றாகத் தெரியும். பெயரைச் சொல்லாமல் ‘மருமவனே’ என்பார். ’சாமிக்குப் பொறந்தவனே’ என்பார். பெயரைத் தவிர இப்படி எதையாவது சொல்லிக் கூப்பிடுவார்.
பாக்கியமும் கூட வந்த ஒரு தடவை, ‘அரைச் சலங்கை. அப்படியே லேசா காலை பிரேக்கில வைக்கச் சொல்லி விசில் அடி.. போதும். இறங்கிக் கிடுதோம்’ என்றார். அப்படி அவர் சொல்கிறவர் பெயர் தங்கப் பாண்டி என்று பாக்கியத்துக்குத் தெரியும். அரைச் சலங்கை என்று எல்லாம் அவருக்குப் பட்டப் பெயர் இருக்கும் என்பது பாக்கியத்திற்குச் சிரிப்பாய் வந்தது. தங்கப் பாண்டியைப் பார்த்துக்கொண்டே தான் இறங்கினாள். பனங்கிழங்குக் கட்டை சீட்டுக்கு அடியில் இருந்து எடுத்து தங்கப்பாண்டி தான் இறங்கும்போது கொடுத்தான்..’நல்ல விளைஞ்ச கிழங்கு’ என்று அவன் சொன்னதை பாக்கியம் லேசாக ஏறிட்டுப் பார்த்துக் கொண்டாள். மேலே உயர்த்தி வாங்கின இரண்டு கைகளைத் தணித்து உடம்பைச் சரிசெய்து நடக்க ஆரம்பித்தாள்.
பஜார்வழியாக அவர் நடக்க மாட்டார். போஸ்ட் ஆபீஸ் தெருவழியாக நடந்து வந்தால் ரொம்பப் பக்கம்..மேலும் அந்த தெருவில்தான் அவர் சீட்டுக் கட்டுகிற திலகா டீச்சர் வீடு இருக்கிறது. திலகா டீச்சர் வீட்டில் எங்கே பார்த்தாலும் பூனைகளாக அலைந்துகொண்டு இருக்கும். வாசலில் ஸ்கூட்டி நிற்கிறதைப் பார்த்தால் ஏதாவது சத்தம் கொடுத்து டீச்சரிடம் இரண்டு வார்த்தை பேசாமல் வரமாட்டார்.
மாமா இன்றைக்கு நடந்து வரவில்லை. செங்கமால் வைத்திருக்கும் தளவாயின் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து வந்து வாசலில் இறங்கினார். தளவாய் அவர் இறங்குகிறவரை பாக்கியத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். அப்படி அவன் பார்ப்பதை பாக்கியமும் கவனித்தாள். ’இந்தா இதைக் கொஞ்சம் வாங்கும்மா’ என்று அவர் சத்தம் கொடுத்ததும் . பாக்கியம் நடையை விட்டு இறங்கி அவர் கையில் இருந்து அந்தச் சின்னப் பலாப் பழத்தை வாங்கிக் கொண்டாள். எத்தனை தடவை பலாப்பழத்தைத் தொட்டாலும் உள்ளங்கையில் மேல் தோலின் முள் குத்துவது பாக்கியத்துக்குப் பிடித்துத் தான் இருக்கும். அது லேசாக உள்ளங்கைக்குள் இறங்கியும் இறங்காமலும் என்னவோ செய்யும். அடுப்படிக் காப்பாட்டுப் பலகையில் வைத்ததும் கையைப் பார்த்துக் கொள்வாள்..புள்ளிப் புள்ளியாய்ச் சிவந்து போயிருக்கும்.
பாக்கியம் கேட்காமலே பைக்கை உறும விட்டு, ‘இன்னைக்கு மினி பஸ்காரன் வரலை போல. ஆவாரங்குளம் விலக்குப் பக்கம் வேகு வேகுன்னு சித்தப்பா நடந்து வந்துக்கிட்டு இருக்கா. நான் தான் பார்த்துட்டு , ஏறுங்கன்னு கூட்டிக்கிட்டு வாரேன்.; என்று பாக்கியத்திடம் தளவாய் சொன்னான். அப்படிச் சொல்லும் நேரத்துக்கு என்று ஒரு சிரிப்பு உண்டே அது அவன் முகத்தில் இருந்தது. பாக்கியம் சேலை முந்தானையை இழுத்துவிட்டுச் செருகிக் கொண்டாள்’ ‘பிலாப் பழம் வாசம் தூக்குது சித்தப்பா’ என்று கியர் மாற்றும் காலோடு, சொல்லிக்கொண்டே தளவாய் வண்டியை நகர்த்தினான். பாக்கியத்துக்கு அப்படி அவன் சொன்னது பிடித்திருந்தது. குனிந்து சிரித்துக்கொண்டே நடையேறி வீட்டுக்குள் போனாள்.
செருப்பைக் கழற்றும்போது பாக்கியம் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தார். தளவாய் பலாப் பழத்தைப் பற்றி அப்படிச் சொன்னதுக்குத் தான் அவள் அப்படிச் சிரித்துக்கொண்டே போகிறாள் என்பதும் அவருக்குத் தெரியும். அப்படி எல்லாம் பேச்சுக்கொடுக்கிற பழக்கம் அவருக்கும் உண்டு. அப்படிப் பேசுகிற ஆம்பிளைகளைப் பெண்கள் எப்போதும் விரும்பத்தான் செய்கிறார்கள். அவருக்கு ஆச்சரியமாக இருக்கும். சங்கரசுப்பு அப்படி யாரிடமும் பேசிச் சிரித்து அவர் பார்த்ததது இல்லை. கல்யாணம் ஆன பிறகு மருமகள் பாக்கியத்திடம்கூட அவன் அப்படித்தான் இருக்கிறான். எத்தனை சந்தர்ப்பத்தை யோசித்துப் பார்த்தாலும், ஒரு தணிந்த கேலிக்குப் பிறகு, ஒரு இரட்டை அர்த்தச் சொல்லுக்குப் பிறகு பாக்கியம் இப்படிச் சிரித்துக்கொண்டு சங்கரசுப்பு தோளில் பொய்யாகத் தட்டிவிட்டபடி அடக்க முடியாமல் அடுத்த அறைக்கு அவசரமாக நகர்ந்து பார்த்ததே இல்லை.
அவருக்கு மகன் ஞாபகம் வந்தது. ‘ சங்கரன்கோவில் காண்ட்ராக்டு முடிஞ்சுதா, இன்னும் வேலை நடக்கா?’ என்று பாக்கியம் முதுகைப் பார்த்துக் கேட்டார். ‘இன்னும் பத்து நாள் ஆகுமாம். குருசாமி மேஸ்திரி ராத்திரியே வந்து பணத்தையும் எலுமிச்சம்பழம், சீனிக்கிழங்கு எல்லாத்தையும் கொடுத்திட்டுத் தகவல் சொல்லீட்டுப் போனாரு’ என்றாள்..அவள் குரலில் அலுப்புச் சலிப்பு இருக்கிறதா என்று யோசித்தார். ’இசக்கியப்பனும் அப்பதையே வந்து மட்டன் எடுத்துக் கொடுத்துட்டுப் போயிட்டான்’ என்று பாக்கியம் இன்னொன்றையும் சேர்த்துச் சொன்னாள்.
‘குருசாமி எனக்கு ஏழெட்டு வயதுதான் சின்னவன். அவனுக்கே வாரா வாரம் வீட்டு ஞாபகம் வந்திருது. ஆக்குதாளோ, பொங்குதாளோ. தட்டுக்கு முன்னால உக்காந்து எந்திரிச்சுக் கையை கழுவிட்டுப் போணும்னு அவனுக்குத் தோணுது. வெத்திலையும் போயிலையும் போட்டுக்கிட்டு டீக்கடையில குருசாமி நிக்கிறதப் பார்த்தா முகம் களையா இருக்கு. வீட்டில ராத் தங்கினா தான் அந்தக் களை வரும். சங்கரங்கோயில் அறுவது மைல் கூட இருக்காது. இவன் அங்கேயே உக்காந்திருக்கான். என்ன துபாயிலயா இருக்கான். முக்கா மணி நேரத்துக்கு ஒரு பஸ் இருக்கு. வந்துட்டுப் போனா என்ன? இங்கே என்ன கடுவாயா இருந்து முழுங்கீரப் போது? ”
அவர் யோசனையில் கடுவாயா முழுங்கீரப் போது? என்று வந்தது அவருக்குப் பிடித்திருந்தது’. அவருக்குக் கல்யாணம் ஆன சமயத்தில் மட்டும் அல்ல, இப்போது வரைக்கும் கூட அப்படித்தான் இருக்கிறார். பாய்ந்து மேலே விழுந்து பிடரியைக் கவ்வி வேட்டையாடி அப்படியே புதருக்கு இழுத்துக்கொண்டு போகிறது ஒரு புலி. அடிவயிற்று வெள்ளை தெரிய மல்லாந்து விழுகிறதன் கனத்தில் புழுதி கிளம்ப இன்னொரு புலியோடு புரள்கிற கடுவாய் உயரமும் தண்டியுமாக உருவம் பெருத்து உருமும் சத்தம் அவர் காதில் கேட்டது. அந்த இடத்தில் புலி வாசம் அடித்தது. தனிப் புலி இல்லை. இரண்டும் சேர்ந்து ஒரு புலியாகிக் கிடந்த நேரத்துக் காற்று கொண்டுவந்து நிரப்புவது அது. அவர் போய் உடம்பைக் கழுவிவிட்டு வந்து பாயில் படுக்கையில் அந்தோணி எழுந்திருந்து போகும் போது அங்கணக் குழியில் அந்த வாடை அடிக்கும்.
அவருக்கு அந்தோணி ஞாபகம் வந்துவிட்டது. மைனா வாய் போல உதட்டு ஓரம் எச்சில் நுரைத்துக் கொண்டே இருக்கும். பேசினாலும் சிரித்தாலும் அந்தோணி முகத்தில் அது மாறாது. அந்தோணியிடம் இன்னொன்றும் அவருக்குப் பிடிக்கும். அவள் ‘வாரும், போரும், வந்தாரு போனாரு என்கிறது போல ஒரு விதத்தில் பேசுவாள். கெட்ட வார்த்தை புழங்குவதில் தயக்கம் இராது. ‘ நீரு என்ன மயித்துக்கு இப்போ கொஞ்ச நாளா அந்தப் பட்டுநூல்காரி பின்னாலே அலையுதேரு. உமரு வீட்டம்மா இருக்கா. அந்தோணி நா இருக்கேன். போதாதா உமக்கு?அவ என்ன புதுசா எதையும் அச்சடிச்சா கொண்டாந்திருக்கா?’ என்று திட்டும் போது அவருக்கு அந்தோணி அப்படிப் பேசுவதிலேயே முறுக்கிக்கொண்டு வரும். வாய்விட்டு உள்ளே பார்த்துச் சத்தம் கொடுத்தார் ,‘அந்தோணி வந்துதா?’’
பாக்கியத்துக்கு எல்லாம் தெரியும். மாமா இங்கே வந்தால் மதியச் சாப்பாடு சாப்பிடுவார். படுத்த உடனே தூங்கிவிடுவார். சங்கரசுப்புவும் அவளும் புழங்கும் அறையில்தான் கட்டில் உண்டு. பீரோவைக் கூட அங்கே வடக்குச் சுவர் பக்கம் தான் நிறுத்தியிருக்கிறார்கள். ஏதாவது அவசரத்துக்கு பீரோவில் காசு டப்பாவில் இருந்து சில்லறை எடுக்கப் போகும் போது பார்ப்பாள், நெஞ்சில் இரண்டு கைகளையும் வைத்தபடி மாமா தூங்குவது அவளுக்குப் பிடிக்கும்.
ஒரு சமயம் வீட்டில் கிடந்த ஒரு பழைய தந்திப் பேப்பரில் பார்த்திருக்கிறாள். தைப் பூச மண்டபம் தொட்டு ஆற்றில் வெள்ளம் போவதைப் படம் பிடித்துப் போட்டிருந்தார்கள். அவளுக்கு அது வெள்ளம் மாதிரியே தெரியவில்லை. வளைவு, நெளிவு, நுங்கு, நுரை எதுவும் இல்லை. ரொம்ப அமைதியாக ஆறு இருந்தது. அதைக் கையால் தடவிக் கொடுத்தாள். கொஞ்ச நாள் அதைப் பத்திரமாக வைத்திருந்து ஒன்றிரண்டு முறை எடுத்துப் பார்த்திருக்கிறாள். மாமா படுத்திருப்பது அப்படித்தான். சங்கரசுப்பு எப்போது படுத்தாலும் இடது பக்கமாக ஒருச்சாய்ந்து படுத்திருப்பான். முகம் தெரியாது. கைவைத்த பனியனும் முதுகும்தான் தெரியும்.
சாயந்திரம் எழுந்திருந்து பாக்கியம் போட்டுத் தருகிற டீயைக் குடித்துவிட்டுச் சந்தைக்குப் புறப்பட்டுவிடுவார். சனிக்கிழமைச் சந்தையில் அந்தோணி நார்ப்பெட்டி, அழுக்குக் கூடை, விளக்கு மார், சிரட்டை. அகப்பை எல்லாம் விற்கிற கடை போட்டிருப்பாள். பக்கத்தில் அடுத்த கடை மண் அடுப்பு, சட்டி பானைக் கடை., சுவர் வரை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மண் பானை வாசனை மாசானத்துக்குப் பிடிக்கும்..அந்தக் கடைக்கும் அந்தோணி கடைக்கும் இடையில் உள்ள இடத்தில்தான் உட்கார்வார்.
சாதிக்காய்ப் பலகையில் கரடு முரடாக அந்தோணியே செய்த ஒரு முக்காலி இருக்கும். அதில் இருந்து அவளுடன் பேசிக்கொண்டே இருப்பார். சந்தையில் பருத்திப் பால் விற்பார்கள். அந்தோணிக்கு வாங்கிக் கொடுத்து அவரும் குடிப்பார். வீட்டுக்குத் திரும்பும்போது அந்தோணி கொடுத்துவிடும் பலாக்காய்ப் பொடி, பலாக்கொட்டை ஏதாவதைப் பையில் வாங்கிக் கொண்டு வந்து பாக்கியத்திடம் கொடுப்பார்.
பாக்கியத்தை அந்தோணி விசாரித்ததாகச் சொல்வார். அவர் முகம் அப்போது நன்றாக இருப்பதைப் பாக்கியம் கவனிப்பாள். ’வியாபாரம் நல்லா இருந்துதா/’ என்று ஒரு பேச்சுக்குக் கேட்பாள். ‘ நார்ப் பொட்டியும் சிரட்டை ஆப்பை வித்தும் என்ன மிஞ்சி விடும்?’ என்பார். அப்படிப் பேசிக் கொள்வதே இரண்டு பேருக்கும் போதுமானதாக இருக்கும். அந்தோணியைப் பற்றி அவர் அந்தரங்கமாகச் சொல்லிவிட்டதாகவும் பாக்கியம் கேட்டுக்கொண்டதாகவும் நினைத்துக் கொள்வார்கள்.
’நம்ம வீட்டுக்கு வந்து நாளாச்சு மாமா’ என்று சத்தம் கொடுத்தாள். ‘ஏன் என்ன விஷயம் மாமா?’ என்று பாக்கியம் மறுபடி உள்ளே இருந்து கேட்டாள். ‘சும்மாதான் கேட்டேன்’ என்றார். பாக்கியம் இப்படி உள்ளே இருந்தபடி ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லாமல் நேரில் வந்து சொன்னால் என்ன என்று தோன்றியது. அவர் சங்கரசுப்பு வருவதைப் பொருத்தும், வராததை உத்தேசித்தும் அவ்வப்போது சந்தையில் இருந்தாற் போல அந்தோணியுடன் அவள் வீட்டுக்குப் போய்விடுவார்.
அந்தோணி வீடு பொத்தையில் இருந்தது. அந்தோணி இப்படி அடுக்களைக்குள் இருந்துகொண்டு எல்லாம் பதில் சொல்ல மாட்டாள். ஒரு சொல் என்றாலும் இவர் முன்னால் வந்துதான் பேசுவாள். வீட்டுக்குள் நுழைந்து சேலை மாற்றும் சமயமாக இருந்தால் கூட, இவர் பேச்சுக் கொடுத்தால் , சேலையைக் களைந்து உடுமாத்துச் சேலைகட்டினபடியே நேரில் வந்து நின்றே அவள் பேசுவாள். சற்றுக் குட்டையான உருவமுடைய அந்தோணி அப்போது வேறு யாரோ போல் ஆகியிருப்பாள். ‘நீ வேற என்னமோ மாதிரி ஆயிட்டே இப்போ’ என்று சொல்வார், ‘உமக்கு மாத்திரம் இல்ல, ஆம்பிளைகளுக்குக் கிறுக்குப் பிடிச்சா அப்படித்தான் தோணும். வேறு மாதிரி ஆயிட்டா எனக்கு மூணு எண்ணம் ஏதாவது புதுசா முளைச்சிருமா? நாங் கொண்டு வந்ததை நீரு கொண்டு போனாப் போரும்’ என்பாள். சில சமயம் எல்லாவற்றையும் அவிழ்த்துப் போட்டுவிடுவாள் அப்படிச் சொல்லும்போது.
மாமா ஏன் வந்ததும் வராததுமாக அந்தோணியைத் தேடுகிறார் என்று பாக்கியத்துக்குப் புரியவில்லை.அவரும் போன இரண்டு வாரமும் வரவில்லை. இந்த சனிதான் வருகிறார். என்னமோ உடனே அவளுக்குத் தோன்றியது, ‘அந்தோணி செத்துக் கித்துப் போயிருப்பாளோ? உடல் சிலிர்த்தது. அப்படியே சுவரோடு சுவராய்க் கையை ஊன்றிக் கொண்டாள். ஆணியில் சாவியோடு சாவியாய்த் தொங்கும் அந்தோணியின் வீட்டுச் சாவியைப் பார்த்தாள். அரணாக் கயிறு போன்ற ஒரு சிவப்புப் பட்டுக் கயிற்றில் தொய்வாகத் தொங்கியது அந்தச் சின்னச் சாவி.
பாக்கியம் அந்தோணியோடு இரண்டு முறை வெளியே போயிருக்கிறாள். ஒரு தடவை குளம் பெருகி மருகால் போகிறது என்று கூப்பிட்டாள். அந்தோணி சைக்கிள் ஓட்டுவாள் என்று தெரியாது. ‘நீ சைக்கிள் ஓட்டுவாயா?’ என்று பாக்கியத்தைக் கேட்டாள். தெரியாது என்று சொன்னதும் வாடகை சைக்கிளின் பின்னால் பாக்கியத்தை உட்கார்த்தி வைத்து மிதித்துக்கொண்டு போனாள்.. தூரம் என்றாலும் ரோடு நல்ல இறக்கம்.கொஞ்ச நேரம் நிரம்பி இருந்த குளத்தைப் பார்த்துக் கொண்டே நின்றார்கள். அந்தோணி வந்து பாக்கியத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். ’எவ்வளவு உசரம் நீரு’ என்று சொல்லி மறுபடி அணைத்தாள். .இரண்டு பேரும் அர்ச்சுனங்குளம் மருகாலில் குளித்தார்கள்.
சிவன் கோவில் தெப்பக் குளத்துக்குப் போகலாம், ஏறிக்கொள் என்று அந்தோணி சொன்னாள். கோவில் பக்கம் சைக்கிளை அரசமரத்தில் சாத்திவைத்தாள். தெப்பக் குளம் நிரம்பிக் கிடந்தது. ஒரு கூட்டமாக நாரை வெள்ளை வெளேர் என்று குளத்தைச் சுற்றிச் சுழன்றுவிட்டுப் பறந்து போனது. ’நீ குளத்தில் இறங்க வேண்டாம். படியில் உட்கார்ந்திரு’ என்று பாக்கியத்திடம் அந்தோணி சொன்னாள். சேலையை தட்டுச் சுற்றாக வேறு ஒரு முறையில் கட்டி முந்தானைப் பகுதியை முறுக்கி உச்சிக்கொண்டை போல் போட்டுக் கொண்டாள். கிழக்கே பார்த்துக் கும்பிட்டாள்.
குளத்தில் சம்மணம் போட்டது போல உட்கார்ந்து அப்படியே தண்ணீரில் சாய்ந்தாள், மிதக்க ஆரம்பித்துவிட்டாள். அப்படியே மிதந்தபடி போய், நீராழி மண்டபத்தை மூன்று முறை சுற்றி, நான்கு பக்கங்களிலும் இருந்த படித்துறையைத் தொட்டுக் கும்பிட்டாள். பாக்கியம் பக்கம் வந்து சேர்ந்து மூன்று முறை தண்ணீரை அள்ளி மறுபடி தெப்பக் குளத்தில் விட்டாள். அவள் உச்சந்தலையைத் தொடுவது போல் ஒரு கிருஷ்ணப்பருந்து தணிந்து வந்து மேலே மறுபடி அசையாச் சிறகுடன் பறந்து போனது. சைக்கிள் கடையில் ஒப்படைத்துவிட்டு வீட்டுக்கு வரும் வரை பாக்கியத்திடம் ஒரு வார்த்தைகூட அந்தோணி பேசவில்லை.
இன்னொரு தடவை அந்தோணி வந்து’’ எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போ’ என்று கூப்பிட்டாள். நடந்துதான் போனார்கள். வழியில் பேச்சுக் கொடுத்து விசாரித்தவர்களிடம், ‘மீசைக்காரரு மருமக’ என்று சொன்னாள். போகிற வழியில் ஒரு கடசல் பட்டறை முன்பு வர்ணம் பூசின தொட்டில் கம்புகளாகக் காயவைத்திருந்தார்கள். நல்ல இறுகின சரிவான பாறையில் இரண்டு கிளிகள் மாறி மாறிச் சத்தம் போட்டுக் கொண்டு,இடம் மாறின.
ஒரு குரங்குக் குடும்பம் ஒவ்வொரு வீட்டுச் சுற்றுச் சுவராகத் தாண்டிப் போய்க்கொண்டு இருந்தது. அந்தோணி வீட்டுச் சுவரிலும் வால் நீளமாகத் தொங்க ஒன்று உட்கார்ந்திருந்தது. சாவியை பாக்கியத்திடம் கொடுத்து வீட்டைத் திறக்கச் சொன்னாள். குரங்கு வீசிவிட்டுப் போன மாங்கொட்டையை எடுத்துக் கண்ணில் ஒற்றி மடிச்சேலையில் வைத்துக்கொண்டாள்.
அந்தோணி வீடும் ஒரு தட்டு வீடுதான். பாதிக்கு மேல் நார்ப்பெட்டியும் கூடையும் தட்டு முட்டும் அடைத்தது போக ஒரு ட்ரங்குப் பெட்டி இருந்தது. அதன் பக்கவாட்டில் சுருட்டிவைத்த இரண்டு கோரம்பாய்கள்.
தரையோடு தரையாய் ஒரு உலைமூடியில் எண்ணெய் ஊற்றித் திரி போட்டு வைத்திருந்தாள். எள் கட்டின துணி முடிச்சு ஒன்று ஊறிப் போய் எண்ணெயில் கிடந்தது. ஒரு அனுமார் படமும் காளி படமும் இருந்தது. இரண்டு படத்திலும் ஒவ்வொரு செம்பருத்திப் பூ கொஞ்சம் கூட வாடாமல் அந்தந்த ஆணியில் பூத்திருப்பது போல இருந்தது. ,தெற்குச் சுவரில்
கம்பிக்கொடி கட்டியிருந்தாள். அதில் ஒரே ஒரு கட்டம் போட்ட கோ ஆப்டெக்ஸ் துண்டு. அதைப் பாக்கியத்
துக்குத் தெரியும். மாமா தோளில் அதைப் பார்த்திருக்கிறாள்.
ஒரு பாயை உதறி விரித்து, ‘கொஞ்சம் இரு. குழாயில் தண்ணி விடுதான். ரெண்டு குடம் பிடிச்சுட்டு வந்திருதேன்’ என்று பிளாஸ்டிக் குடங்களை எடுத்துக்கொண்டு போனாள். பாக்கியத்துக்கு அந்தப் பாயில் உட்கார்ந்திருக்க ஒருமாதிரி இருந்தது. மீசைக்காரர் மருமகள் என்று அந்தோணி சொன்னதை நினைத்துக் கொண்டாள். இந்த இடத்தில், இந்தப் பாயில் மாமாவும் அந்தோணியும் இருந்திருப்பார்கள் . பாக்கியம் சிறு சிறு திரடுகளாகப் பின்னப்பட்டிருந்த கோரையின் வழுவழுப்பைத் தடவிவிட்டாள்.
பாக்கியம் எழுந்திருந்து குழாயடி வரை போய் அந்தோணி , ஏற்கனவே பிடித்துவைத்திருந்த ஒரு குடத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். தன் வீட்டுக்குள் வருவது போல பாக்கியத்துக்கு இருந்தது. குடத்தை இறக்கிவைக்கும் போது இந்த வீட்டுக்குள் அவளும் அவளுடைய மாமாவும் மட்டும் இருப்பதாக நினைத்தாள். சங்கரசுப்பு ஞாபகம் அப்படி வராதது ஏன் என்று கூட அவள் யோசிக்கவில்லை.. அவள் மறுபடியும் மிகுந்த விருப்பமுடன் அந்தப் பாயில் உட்கார்ந்துகொண்டாள்..
அந்தோணி கொண்டுவந்த தண்ணீர்க் குடத்தின் கழுத்துக்குள் வெயில் அலம்பியது. கழுத்தடியை சேலையால் துடைத்தபடி, ‘ கடுஞ் சாயா குடிக்கீரா?’ என்று கேட்டாள், பாக்கியம் கையை மட்டும் வேண்டாம் என்பதன் சைகையில் அசைத்தாள். பாயில் இருந்த உருளை மாதிரி மடங்கலைச் சரிசெய்த படி அந்தோணி பாக்கியம் பக்கத்தில் உட்கார்ந்தாள். அந்தோணி பாயில் உட்கார்ந்த பிறகு லேசாக முகத்தைத் தூக்கி வைத்தபடி. நாசிக்குள் அவள் வலது புறம் மட்டும் அணிந்திருந்த மூக்குத்தித் திருகாணி தெரியும்படி சிரித்ததை பாக்கியம் பார்த்துக்கொண்டே இருந்தாள். அந்தோணியின் மடியில் பாக்கியம் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.
‘நல்லா இருக்கீரா?’ சிகையைக் கோதிவிட்டபடி அந்தோணி கேட்டாள். ‘நல்லா இருக்கேன்’ என்று பாக்கியம் மெதுவாகச் சொன்னாள். ‘ வாட்டம், வருத்தம் ஒன்றுமில்லையே?’ என்று அந்தோணி கேட்டாள். ‘ஒன்றுமில்லை’ என்று பாக்கியம் மீண்டும் மெதுவாகச் சொன்னாள். ரெண்டு பேரும் அப்படியே இருந்தார்கள். .அன்றைக்குத்தான் அந்தோணி அவள் வீட்டுப் பூட்டின் இன்னொரு சாவியை பாக்கியத்திடம் கொடுத்தாள். கருநீலமும் சிவப்பும் மஞ்சளுமாகப் பின்னப்பட்டிருந்த ஒரு சிறு பனை நார்ப் பெட்டியில் சாவியை இட்டிருந்தாள்..அதில் விரலி மஞ்சள் இரண்டு இருந்தது.பழசு இவ்வளவும் பாக்கியத்தைச் சுற்றி வனம் போல வளர்ந்துகிடந்தது. இடுப்பு உயரப் புல்லை வகிர்ந்துகொண்டு வெளியே வருவது போல மாமா முன் வந்து நின்றாள்.
‘மத்தியானச் சாப்பாட்டை முடிச்சிட்டு வேணும்னா, அந்தோணி வீட்டுக்கு ரெண்டு பேருமா போய்விட்டு வருவமா மாமா?’ பாக்கியம் கேட்டாள்.
‘நீ என்னத்துக்கு தாயி அவ்வளவு தூரம் பொத்தை வரைக்கும்?’ மாசானம் அப்படிக் கேட்டாலும் அதில் ஒரு சந்தோஷம் இருந்தது.
‘இல்லை. நானும் உங்க கூட வாரேன்’ பாக்கியம் அவர் முகத்தை பார்த்துச் சொன்னாள். சவரம் பண்ணாத முகத்தில் நரைத்த மீசையும் கன்னத்து மயிருமாக இருந்தார்.
‘இன்னைக்குச் சந்தைக்கு வரலையா? நல்லாத் தெரியுமா? சாரிச்சாச்சா?’
பாக்கியம் கேட்டதுக்கு ’வந்திருக்க மாட்டாண்ணு தோணீட்டு. தோணுனா சரியாத்தான் இருக்கும். எதுக்கும் போகிற பாதையில் வேணும்னா தேங்காய்க் கடைக்காரன் கிட்டே கேட்டுக்கிடுவோம்’ என்றார்.. அவர் முகத்தைப் பார்த்தால் இப்போதே செருப்பைப் போட்டுக்கொண்டு கிளம்பிவிடுவது போல இருந்தது.. வந்த நேரத்துச் சட்டையை அவர் இன்னும் கழற்றக் கூட இல்லை.
‘அப்புறம் வந்து கூட சமையலைப் பார்த்துக்கிடுதேன். இப்பமே போயிட்டு வந்திருவோம் மாமா. சேலையை மாத்தீட்டு வந்திருதேன் ’ பாக்கியம் முகம் கழுவப் புறவாசல் பக்கம் போனாள். சிமெண்ட் தொட்டியில் விளிம்பு வரை தண்ணீர் கிடந்தது. இரண்டு கைகளாலும் வாரி வாரி முகத்தைக் கழுவினாள்,
புறவாசல் கொடியில் ஒரு காக்கை மட்டும் உட்கார்ந்திருந்தது. காயப் போட்ட உருப்படி எதுவும் இல்லை. இந்தப் பக்கம் திரும்பியிருந்த காக்கை எதிர்ப்பக்கம் பார்த்து உட்கார்ந்து கூப்பிட்டது.
பாக்கியம் சேலைத் தலைப்பால் முகத்தை ஒத்தி ஒத்தி எடுத்தபடி ஓடுகாலில் சுவரோடு சுவராக நின்றிருந்த செம்பரத்தஞ் செடியைப் பார்த்தாள். நிறையப் பூத்திருந்தது. பாக்கியத்துக்கு அந்தோணி வீட்டுச் சாமி படத்துக்கு வைத்திருந்த செம்பரத்தாம் பூக்கள்
ஞாபகம் வந்தது. அவள் சரியாகத் துடைக்கப் படாத ஈரமான முகத்துடன் அந்தச் செம்பருத்தி மூட்டுக்குப் போனாள். அவள் முகத்தில் படுகிற உயரத்தில் இருந்த இரண்டு பூக்களை லேசாகத் தணித்து முகத்தோடு ஒத்திக்கொண்டாள். அதிலிருந்து ஏதோ வாசனை பெருகுவது போல் நாசி விரித்து ஆழமாக இழுத்துக் கண்களை மூடிக் கொண்டாள்.
எங்கே ரொம்ப நேரம் ஆளைக் காணோம் என்று புறவாசல் பக்கம் வந்தவர் அப்படியே வாசல் கதவுக்கு உட்பக்கம் நின்று பாக்கியத்தையே பார்த்துக்கொண்டுநின்றார்..
vannadasan@gmail.com