ஆகா என்றொரு அசைவு

சரியாக அதைச் சொல்லணும் எனில்
ஆகா என்றுதான் சொல்ல முடியும்
இந்த பத்து பருடத்தில்
திருப்பூரில் நான் கண்ட முதல் அசைவு போல இருந்தது அது
வளர்மதி ஸ்டாப்
பாலம் கடக்கும்போது
சரியாக பின்னாலிருந்து அவளைத் தொட்டான் அவன்
மீனை நீர் தொடுவதுமாதிரி
ஒரு கணம் திரும்பி
தலையை இருகைகளாலும் தாங்கி அதிசயித்தாள்
இந்த நகரத்தில் இப்போதைக்கு அவள்தான் அழகு என மலர்ந்தாள்
எனக்கு அதைக் கண்டதும்
‘ஆகா’ என்றிருந்தது
இந்த ஆகா இல்லாமல்தானே
இதெல்லாம் சீரழிந்தது
இந்த ஆகாவுக்காகத்தானே
கனவுகள் துடித்தன
இந்த ஆகா இல்லாமல்தானே
உடல்கள் உடல்களாக மட்டுமே
அறை திரும்பின தனித்திருந்தன

அவர்களுக்குள் என்ன என்று கூட
எனக்குத் தெரியாது
இப்போது சொற்களுக்குள் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்
ஆனால்
அவளுடைய இன்றைய அற்புதம் அவன்தான்
இந்த நகரத்தின்
இன்றைய அசைவு அந்த ‘ஆகா ‘ தான்

கே.என்.பி.சுப்பிரமணியன் நகர்
திருப்பூர் 641 608

கே.என்.பி. சுப்பிரமணியன் நகரில்தான்
பத்துவருடமாக என் உடல் சுற்றிக்கொண்டிருக்கிறது
என் மூதாதையர்கள்
போர்களில்லாமலே
அகதிகளானவர்கள்
தற்செயலாகவோ
வரலாறாகவோ
எப்போதும் ஒரு வறுமை
என் நினைவின் நாளிருந்தே எரிகிறது
நூறு தெருக்களுள்ள இந்த நகரில்
இந்தப் பத்தாவது வருடத்தில்
ஏழாவதாக மாறிய
மூன்றாவது மாடி வீட்டில் வசிக்கிறோம்
கே.என் .பி .சுப்பிரமணியன் நகரில்
மரங்களே இல்லை
இந்த நகரத்திலும்
மரங்களே இல்லை
மஞ்சள் அரளி மரங்கள் மட்டுமே உண்டு
அவைகளில் பெரிதாக நிழல்களில்லை
ஆனால் எல்லா மாலையிலும்
இந்தத் திருப்பூரில்
தான்மட்டும்தான்
ஒரே அழகென
ஒரே மலரென பொலிவு காட்டும்
கே.என்.பி .சுப்பிரமணியன் தெருவில்
பத்தாண்டுகளாக சுற்றிக்கொண்டிருக்கும்
என்னுடலில்
இதுவரை
போயும் போயும் இந்த மஞ்சள் அரளியில்
ஒரு அரளிகூட கனவாக வந்ததில்லை

செத்தபிறகு பேயாகத் தலைகீழாகத் தொங்க
அத்தனை வலுவான கிளைகளுமில்லை இந்த மலர் மரத்தில்
எத்தனை பத்துவருடங்களாக
எத்தனை உடல்கள் இப்படி அலையணுமோ

 

sathishkumarsv663@gmail.com