“பாஷை ஒரு அற்புதம் கடவுளே!”
– சுந்தர ராமசாமி, ரத்னாபாயின் ஆங்கிலம்
மனித இனம் உருவாகி சுமார் இருபது இருபத்தைந்து லட்சம் ஆண்டுகள் இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.(இரண்டு, இரண்டரை மில்லியன் ஆண்டுகள்). மனித இனமாக உருவாகிப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மனிதனும் மற்ற உயிரினங்கள் போலவே இந்த உலகில் சுற்றிக் கொண்டிருந்தான். இன்றைய காலகட்டத்தில் அவன் இந்த அளவுக்கு உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களையும் கட்டுப்படுத்தக்கூடியவனாகவும் அவனது மூதாதையர் நினைத்துக்கூடப் பார்த்திராத சாதனைகளைப் புரிந்ததற்கும் முக்கியமாக மூன்று புரட்சிகரமான காலகட்டங்களை சேப்பியன்ஸ் என்ற மிகப் புகழ்பெற்ற நூலை எழுதிய யுவால் ஹராரி கூறுகிறார்.
முதலாவது காலகட்டம் – சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சிந்தனைப் புரட்சி (Cognitive revolution).
இரண்டாவது காலகட்டம் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது.அது விவசாயப் புரட்சி.
மூன்றாவது காலகட்டம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அறிவியல் மற்றும் தொழிற்புரட்சி.
இதில் மிக முக்கியமான காலகட்டம், முதலாவது புரட்சி நடந்த காலகட்டம். மனிதன் விலங்கிலிருந்து மனிதனாக உருமாறியதற்கும், கலாச்சாரம் என்ற கோட்பாடுகள் தோன்றியதற்கும் , கலை இலக்கியம் அறிவியல் எனப் பல்வேறு பாதைகளில் சிந்தனைகள் முன்னேறியதற்கும் முக்கிய காரணம் மனிதனின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம்தான். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் சிந்தனை என்ற ஒன்று உருவானதே இக்காலகட்டத்தில்தான்.
சிந்தனை என்பதை மொழியிலிருந்து பிரிக்க முடியாது. மொழி இல்லாமல் சிந்திக்க முடியுமா? வலி, வேதனை, மகிழ்ச்சி , நிறைவு என உணர்வுகளை அனுபவித்தாலும் அதைப் பகிர மொழி தேவையாக இருக்கிறது. நன்மை, தீமை ஒழுக்கம், விடுதலை என எந்தக் கருத்தைச் சிந்தித்தாலும் மொழி தேவையாக இருக்கிறது, ஆக, மொழி எப்படி உருவானது எனப் பார்த்தால் சிந்தனை எப்படி உருவானது என்பது தெளிவாகும்.
மொழி ஏன் மனித இனத்துக்குத் தேவைப்பட்டது? பிற உயிரினங்கள் எல்லாவற்றையும்விட மனிதன் சமூக அமைப்பில் மிகவும் பின்னப்பட்டிருக்கிறான். கூட்டமாக வாழ்வதுதான் அவனுடைய மிகப்பெரிய வலிமை . தன்னைவிடப் பலமடங்கு எடை வாய்ந்த மேம்மத் (Mammoth) எனப்படும் யானை இனங்களை வேட்டையாட முடிந்தது. அந்த இனம் அழிந்ததற்குச் சுற்றுச்சூழல் மட்டுமின்றி மனிதனும் ஒரு முக்கிய காரணம். அதேபோல் யானைப் பறவை (elephant bird) என்று அழைக்கப்படும் பறவை. நமது புராணங்களில் கருடன் போன்றும் அரேபிய நாகரிகத்தில் சிந்துபாத் கதைகளில் வரும் ராட்சசப் பறவைகள் போன்றும் பல்வேறு தொன்மங்களும் வாய்மொழிக் கதைகளும் குறிப்பிடுவது இந்த யானைப் பறவையைப் பற்றி இருக்கலாம். அத்தனை ராட்சசப் பறவை இனம் மனிதனால் அழிக்கப்பட்டது. இத்தனைக்கும் பெரிய ஆயுதங்கள் ஏதும் இல்லாமலேயே இது நிகழ்த்தப்பட்டது.
இன்றைய விஞ்ஞான தொழிற்புரட்சிக் காலத்தில் மட்டுமல்ல, இந்த வசதிகள் எதுவுமே இல்லாத காலகட்டத்திலும் மனிதன் பிற உயிர்களை இந்த உலகிலிருந்தே துடைத்து அழித்திருக்கிறான், இத்தனை வலிமையை அவனுக்குத் தந்தது அவனது உடல் அல்ல. அவனது சிந்தனை. அதிலும் குறிப்பாகக் கூட்டமாகச் சேர்ந்து ஒரு சமூகமாகச் செயல்படும் ஆற்றல். ஒரு சமூகமாக மனிதன் இயங்க அவனுக்கு மிகவும் அவசியத் தேவை தொடர்பு கொள்வது. அதற்கு இன்றியமையாதது மொழி.
எல்லா உயிரினமும் ஏதோ ஒரு வகையில் இன்னொரு உயிரினத்துடன் தொடர்பு கொள்ளத்தான் செய்கிறது. எறும்பு, தேனீக்கள் தொடங்கி சிம்பன்ஸி வரை. சிறு உயிரினங்கள் ஒன்றுடன் ஒன்று ரசாயனங்கள் மூலமாகத் தொடர்பு கொள்கின்றன.
அதே போல் முகபாவங்கள், சைகைகள், உடல் அசைவுகள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் தொடர்பு கொள்ளும் முறையாக இருந்தது. பல்லைக் காட்டுவது, கையை ஆட்டுவது, வாலை ஆட்டுவது என ஒவ்வொரு சைகைக்கும் ஒவ்வொரு அர்த்தம். இன்றும்கூட நாம் எத்தனை மறைத்தாலும் நம் உடல்மொழி நம் உணர்வுகளைக் காட்டிவிடும். ஆகவேதான் பொய்யே சொல்ல முடியாத மொழி உடல்மொழி என்பார்கள்.
வெவ்வேறு விதமாக ஒலி எழுப்பித் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியதே ஆதி மொழியாக இருந்தது. இதில் சில ஆச்சரியமான ஆய்வுகள் நடந்திருக்கின்றன. வெர்வெட் (vervet)எனப்படும் ஒருவகைக் குரங்குகள் பாம்பு வந்தால் ஒரு மாதிரியாகவும் கழுகு வந்தால் வேறு மாதிரியாகவும் குரல் கொடுக்கின்றனவாம். இது ஒரு குரங்கு இன்னொரு குரங்கிற்குக் கொடுக்கும் செய்தி. பாம்பைக் கண்டு ஒலிக்கும் குரலைக் கேட்டால் குரங்குகள் கீழே பார்க்கின்றன. கழுகைப் பார்த்தால் எழுப்பும் குரலைக் கேட்டால் மேலே பார்க்கின்றன. இப்படிக் குரங்குகள் எழுப்பும் ஒலிகளை டேப்பில் பதிவு செய்து வைத்துக் கொண்டு ஒலித்தாலும் மற்ற குரங்குகள் அதற்கேற்றாற்போல் நடந்து கொள்கின்றன. பாம்புக்கான எச்சரிக்கை ஒலி என்றால் கீழே பார்க்கின்றன, கழுகானது என்றால் மேலே பார்க்கின்றன.
அதேபோல் கிளிகள்கூட ஒலி எழுப்பும். ஆனால் அது முழுமையான மொழி ஆகாது. ஏனெனில் அங்கு சிந்தனை என்பது இல்லை. குரங்குகள் எழுப்புவதும் சுற்றுச்சூழலில் நடப்பவற்றுக்கான எதிர்வினைதான். பாம்போ, கழுகோ இல்லாமல் அதைப் பற்றி மனதுக்குள் அக்குரங்குகள் நினைக்கப் போவதில்லை. தன்னுடைய சுற்றுச்சூழலில் இல்லாத ஒன்றைப் பற்றிச் சிந்திக்க மனிதனால் மட்டுமே முடியும். பொருட்களைப் பற்றி மட்டுமன்றி நன்மை, தீமை, அழகு, நாகரிகம் போன்ற கருத்துகளையும் பற்றிச் சிந்திக்க முடிந்தது.
மனிதனின் மொழி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. மிகச்சிக்கலான இலக்கணங்களுடன் விரிவடையத் தொடங்கியது. இவை எல்லாமே மனித மூளையில் ஏற்பட்ட மாறுதல்களால் விளைந்தவையே. மனித மூளையில் எப்படி முன்பகுதி நம்முடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதிலும் திட்டமிடுவதிலும் பங்கு வகிக்கின்றனவோ அது போல் மொழிக்கான பகுதிகளும் முக்கியமானவை.
தமிழ்நாட்டில் பிறந்த ஒரு குழந்தையைப் பிறந்த உடனேயே ஜெர்மனிக்குக் கொண்டு சென்று வளர்த்தால் மிக அழகாக ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ளும். மொழி அறிவு என்பது முழுக்க முழுக்க நமது சூழலைச் சார்ந்ததுதானே? இதில் மூளையின் பங்கு எத்தனை?
டார்ஜான் மாதிரி பிறந்ததிலிருந்தே காட்டிலேயே வசித்து வந்த ஒருவன் மீண்டும் நாட்டுக்கு வந்தால் அவனால் மொழியைக் கற்றுக் கொள்ள முடியுமா?
இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தொடர்ந்து அலசுவோம்.
(தொடரும்)
ramsych2@gmail.com