பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில் இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம் இருந்திருக்கிறது. நாளந்தா பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்று விளங்கிய பேராசிரியர் தர்மபாலர் இங்கேதான் பிறந்தார். திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரின் ஊர் காஞ்சிபுரம்.
நெசவுத்தொழிலில் தமிழகத்தின் தலைநகரம்.

நடராசன் – பங்காரு தம்பதியினருக்கு மகனாக அண்ணா இங்கே தான் பிறந்தார். சிற்றன்னை இராசாமணிதான் சீரும் சிறப்புமாக வளர்த்தார். மதப்பற்று மிகுந்த குடும்பத்தில்தான் உதித்தார், பின்னாளில் பகுத்தறிவுச் சுடராக விளங்கிய அண்ணா.

காஞ்சிபுரத்தில் தடுக்கி விழுந்தால் கோயில். எப்போதுமே யாத்ரிகர்கள் கூட்டம் நசநசவென்று இருக்கும். கூட்டமேயில்லாத கோயில்
தான் அண்ணாவின் சாய்ஸ். போனோமா வந்தோமா என்று இருப்பார். இதற்கெல்லாம் நேரத்தை செலவிடக் கூடாது என்பது அவர் எண்ணம். ஆளரவே இல்லாமல் புண்ணிய கோட்டீஸ்வரர் கோயில் என்று ஒன்றிருக்கும். அதற்குதான் அடிக்கடி செல்வார் அண்ணா. சிறுவயதில் அண்ணாவுக்குப் பிடித்த சாமி பிள்ளையார்.

விடலைப் பருவத்தில் விளையாட்டுகளில் அவ்வளவாக ஆர்வமில்லை. வீட்டுக்குள்ளேயே விளையாடும் கேரம்போர்டுதான் அதிகபட்சம் அண்ணாவைக் கவர்ந்த விளையாட்டு. பின்னாளில் சீட்டாட்டத்தில் கிட்டத்தட்ட சாம்பியனாகவே விளங்கினார். வாரத்துக்கு ஒருமுறை பள்ளியில் நடக்கும் விளையாட்டு வகுப்பில் கலந்து கொள்ள மாட்டார். டிரில் மாஸ்டரிடம் அதற்கு ஏதாவது சாக்கு சொல்ல வேண்டுமே?

காலில் கட்டு போட்டுக் கொண்டு சிவப்பு மையைக் கொஞ்சம் கொட்டிக் கொள்வார்.

“கால்லே அடிபட்டுடிச்சி சார்!” என்பார்.

வருடம் முழுக்கவா ஒரு பையனுக்குக் காலில் அடிபட்டுக் கொண்டே இருக்குமென்று ட்ரில் மாஸ்டர் கேட்டதே இல்லை. அந்தளவுக்கு சிறப்பாகக் காலை நொண்டி, நொண்டி நடப்பார்.

அண்ணா காஞ்சிபுரத்தில்தான் படித்தார் என்றாலும் வீட்டிலிருந்து பள்ளி வெகுதூரம். எனவே பள்ளிக்கு அருகிலிருந்த உறவினர் ஒருவர் வீட்டில் மதிய சாப்பாடு சாப்பிட்டுக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த வீட்டில் விசித்திரமான மாமியார் – மருமகள் இருந்தார்கள். மருமகள் எதையுமே மாமியாரிடம் கேட்டுதான் செய்ய வேண்டும். எனவே வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையுமே அலமாரியில் பூட்டி, சாவியைத் தன் இடுப்பில் செருகிக் கொள்வார் மாமியார்.

அண்ணா அங்கே சாப்பிடச் செல்லும்போது, “அத்தே! இன்னும் கொஞ்சம் உருளைப் பொரியல் கேட்குறான் அண்ணா” என்று மருமகள் கேட்டதுமே, அலமாரியில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் உருளைப் பொரியலை எடுத்துத் தருவாராம் மாமியார்.

அண்ணாவுக்கு இந்த மாமியார் – மருமகள் கூத்தை ரசிப்பது வாடிக்கையாகிப் போனது. சீரியஸாக நடந்த அந்நாடகமே, அண்ணாவின் நகைச்சுவையுணர்வுக்குப் பெரும் தீனி போட்டது. பின்னாளில் நாடகங்கள் எழுதும்போது இந்த மாமியார் – மருமகள் சம்பவங்களை நினைவுகூர்ந்து அதிலிருந்து சில வாகான விஷயங்களை எடுத்து நகைச்சுவைப் பொடி தூவினார்.

அந்தக் காலத்தில் சென்னையில் அடிக்கடி கண்காட்சிகள் நடக்கும். காஞ்சிபுரத்திலிருந்து ரயிலில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்காட்சியைப் பார்த்து ரசித்துவிட்டுச் செல்வார்கள்.

அம்மாதிரி ஒரு கண்காட்சிக்கு குடும்பத்தோடு வந்தபோது அண்ணாவுக்கு ஆறேழு வயதிருக்கும். கழுத்தில் தங்கச்சங்கிலி. கையில் தங்கக்காப்பு என்று ஜொலிஜொலித்துக் கொண்டிருந்தார் அண்ணா.

எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமான பொம்மைகள் பிளாட்ஃபாரத்தில் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. அதில் ஏதாவது வாங்கிக் கொள் என்று அம்மா சொன்னார்.

ஆனால்…

அங்கு இல்லாத பலூனைக் கேட்டு அடம் பிடித்தார் அண்ணா.

கையைக் காலை உதறிக்கொண்டு அண்ணா அழ அருகிலிருந்த சகபயணி ஒருவர், “அதோ, அங்கே பலூன் விற்கிறது. நான் வாங்கித் தருகிறேன் வா” என்று அண்ணாவைத் தூக்கிக் கொண்டு நடந்தார்.

கூடவந்த சகபயணிதானே எனப் பெற்றோரும் அனுமதித்தனர்.

ஆனால்…

அந்தப் பயணிக்கோ அண்ணாவின் சங்கிலி, காப்புமீது கண்.

காலியாக இருந்த ஒரு ரயில் பெட்டிக்கு அண்ணாவை அழைத்துச் சென்று நகைகளைக் கழட்ட முயன்றார்.

அண்ணா கத்திச் கூப்பாடு போட, அங்கே காவல் பணியில் இருந்த காவலர்கள் ஓடிவந்து திருடனை மடக்கிப் பிடித்தார்கள்.

குழந்தை அண்ணாவைக் குடும்பத்திடம் ஒப்படைத்தார்கள்.

”என்ன ஆச்சு?” என்று கேட்டபோது, “பலூன் கிடைக்கலை” என்று பதில் சொன்னார் அண்ணா.

பேச்சுக்காக உலகப்புகழ் பெற்ற அண்ணா, சிறுவயதில் கூச்சம் காரணமாக மவுனச்சாமியாராக இருந்திருக்கிறார். அவர் ஆறாவது வகுப்பு படிக்கும்போது திருக்கழுக்குன்றத்தில் ஒரு திருவிழா.

தாயாரோடு திருவிழாவுக்குப் போய் செம கும்மாளம் போட்டார் அண்ணா.

செங்கல்பட்டிலிருந்து ரயில் மூலமாக காஞ்சி புரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

ரயிலில் அமர்ந்ததுமே அண்ணா விம்மிக் கொண்டிருந்ததை அம்மா பார்த்தார்.

“ஏன் அழுவுறே?”

மவுனம். மேலும் விம்மல்.
”எதுக்குடா அழுவுறே. சொல்லித் தொலையேன்.”

ம்ஹும். மேலும் மேலும் விம்மல் அதிகமாகிறது.

“நாவப்பழம் சாப்பிட்டதுக்காக அடிச்சேன்னு அழுவுறீயா?”

இதற்கும் பதிலில்லை.

கோபப்பட்ட அம்மா, அண்ணாவின் கையைப்பிடித்து இழுத்து முதுகில் நாலு சாத்து சாத்த முயன்றார்.

கையைப் பிடித்ததுமே வீறிட்டு அழுதார் குழந்தை அண்ணா.

அம்மா உடனே அண்ணாவின் கையைப் பரிசோதித்தபோது அவரது விரல்களில் இருந்து ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.

ரயிலில் ஏறும்போது கதவிடுக்கில் கைவிரல்களை நசுக்கிக் கொண்டார் என்பதைப் புரிந்து கொண்டார்.

”ஏண்டா. ஊமைக்கொட்டான் மாதிரியிருக்கே? வாயைத் திறந்து சொல்லக்கூடாதா? நீயெல்லாம் எப்படிதான் பொழைக்கப் போறியோ?” என்று வருத்தப்பட்டார் அம்மா.

பின்னாளில் இந்திய நாடாளுமன்றத்தில் இடி முழக்கமாய் அண்ணாவின் குரல் ஒலிக்கும் என்பதை அந்தத் தாய் கற்பனைகூட செய்திருக்க முடியாது.

அந்தப் பருவத்திலேயே அண்ணாவுக்கு தெருக்கூத்து பார்ப்பதில் பெரும் ஆர்வம். அவர் உதாரணம் காட்டிப் பேசிய பல புராணக் கதைகளை முதன்
முதலாக தெருக்கூத்து மூலம்தான் அறிந்தார். சுதந்திரப் போராட்டக் காலம் என்பதால் நாட்டு நடப்பையெல்லாம் தெருக்கூத்துக் கலைஞர்கள் சூசகமாய் தங்கள் கூத்து மூலம் உணர்த்துவார்கள்.

காஞ்சிபுரத்தில் எங்கு தெருக்கூத்து நடந்தாலும் முதல் ஆளாகப் போய் அமர்வது அண்ணாதான்.

ஒருகட்டத்தில் தன் பள்ளி நண்பர்களோடு இணைந்து தானும் தெருக்கூத்து நடத்தத் திட்டமிட்டார். நண்பர் ஒருவரின் மாட்டுத் தொழுவத்தில் இதற்காக ஒத்திகை நடந்து கொண்டிருக்க, விஷயம் அறிந்த அண்ணாவின் பாட்டி சம்பவ இடத்துக்கு வந்து அண்ணா மீது தடியடி நடத்தினார். வீட்டினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் அண்ணாவுக்குத் தெருக்கூத்து மீது ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போனது. பின்னாளில் பெரும் பதவிகளை அவர் அலங்கரித்தபோதும், கார்ப்பயணங்களில் எங்கேனும் தெருக்கூத்து நடந்தால் பயணத்தை நிறுத்திவிட்டு தெருக்கூத்து பார்க்க அமர்ந்துவிடுவார். தெருக்கூத்து ஆர்வம் மட்டுமல்ல, அந்த வயதிலேயே பொடி போடும் பழக்கமும் அண்ணாவைத் தொற்றிக் கொண்டது.

அவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும்போது அடிக்கடி கால்சட்டை பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டிருப்பதை தேர்வு கண்காணிப்பாளர் பார்த்துவிட்டார். பிட்டு கிட்டு அடிக்கிறாரோ என்கிற சந்தேகத்தில் அருகில் வந்து பார்க்க, பொடிமட்டையை விரித்துக் காட்டியிருக்கிறார் அண்ணா.

”அப்பப்போ எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சுக்கிட்டா தான் எழுத்து ஓடும் சார். நீங்களும் ஒரு சிட்டிகை போடுறீங்களா?” என்று அண்ணா கேட்க, கண்காணிப்பாளர் தெறித்து விட்டாராம்.

அண்ணாவின் பள்ளிப் பருவக் காலத்தில் காஞ்சிபுரமெங்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டங்கள் நடக்கும். காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுகளைக் கேட்க அண்ணா ஆர்வத்தோடு செல்வார். உத்தமர் காந்திமீது பெருமதிப்பு அவருக்கு ஏற்பட இதுபோல சிறுவயதில் கேட்ட பேச்சுகளே காரணம்.

ஒரு போராட்டத்தின்போது காந்தி கைது செய்யப் பட்டு, எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். எனவே நாடெங்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர்.

காஞ்சிபுரத்தில் ஒவ்வொரு கடையாகச் சென்று, “காந்தியைக் கைது செய்துவிட்டார்கள். கடையை அடையுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள்.

அண்ணாவும் அவர்களோடு சென்று கொண்டிருந்தார். ஒரு கற்பூரக் கடையில் கடையை அடைக்கக் கேட்டபோது, “காந்தின்னா யாரு?” என்று அக்கடைக்காரர் கேட்டிருக்கிறார்.

அந்தக் கேள்வி அண்ணாவை உலுக்கியது.

மக்களை எட்டாத எந்தவொரு சபையலங்காரப் பிரச்சாரமுமே வீண்தான் என்கிற எண்ணம் அப்போது அவருக்கு ஏற்பட்டது. பின்னாளில் சமூக விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தி.மு.கழகத்தினர் முன்னெடுத்தபோது, கட்சியினருக்கு “மக்களிடம் செல்” என்று அண்ணா கட்டளையிட அந்த சிறுவயது சம்பவமே காரணம்.

அப்போதெல்லாம் காங்கிரஸ் மேடைகளில் நீதிக்கட்சியை காய்ச்சு காய்ச்சுவென்று காய்ச்சுவார்கள். அண்ணாவுக்கு நீதிக்கட்சி இப்படிதான் அறிமுகமாகிறது.

திருப்பதி உண்டியில் விழும் பணத்துக்கு முறையான கணக்கு வழக்கு இருக்க வேண்டும். அந்தப் பணம் மக்களின் கல்விக்காக செலவழிக்கப்பட வேண்டும் என்று அப்போது நீதிக்கட்சியினர் பேசிவந்தனர்.

இதை “நீதிக்கட்சியினர் திருப்பதி உண்டியல் காசை கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர்” என்று மடைமாற்றிப் பிரச்சாரம் செய்தார் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தி.

நீதிக்கட்சியினர் சொல்வதுதான் நியாயம் என்றுணர்ந்தார் அண்ணா. திராவிடம் அவரை ஆட்கொண்டது. அண்ணா, பேரறிஞர் அண்ணாவாக உருவாகத் தொடங்கினார்.

yuvakrishna@gmail.com