மின் மயானத்தின் புகைப்போக்கியிலிருந்து கரும்புழுப்பு நீர்போல பீறிட்டு வந்த புகை சிறுமேகமாகத் திரண்டு நகர்ந்தது.

மின் உலையின் இன்சினரேட்டர் அறை எனப்படும் எரியூட்டும் அறை யாரோ ஒருவரது உடலை பஸ்பமாக்கி விட்டிருந்தது. ஒரு கணமும் தாமதிக்காமல் அடுத்த உடல் தகனமேடைக்குக் கொண்டு வரப்பட்டது.

கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களைச் சுமந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ்களின் வரிசை விழிவீச்சின் எல்லையைக் கடந்தும் நீண்டிருந்தது. தகனத்துக்காக மணிக்கணக்காகக் காத்துக் கொண்டிருந்த உறவினர்கள் அரைப்பட்டினியில் கிடைத்த இடங்களிலெல்லாம் முழங்காலில் முகம்புதைத்து கவிழ்ந்திருந்தனர். மயானத்தின் தரையெங்கும் பிஸ்கெட் கவர்களும், குடிநீர் பாட்டில்களும் முளைத்துக் கிடந்தன. ஒரு உடலை எரிக்க பத்துமணிநேரமெல்லாம் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. வெளியே லாக்டவுனால் இறுகமூடப்பட்ட நகரம் வெறுப்புடன் முறைத்தது.

மந்திராசலம் பிபிஈ உடையில் எரியூட்டும் அறையிலிருந்து வெளியே வந்து மயானத்துக்குப் பின்புறம் சொன்றான். தலையை மூடியிருந்த பிளாஸ்டிக் கவரை அவிழ்த்து விட்டதும் காற்று வழுக்கை விழத் தொடங்கியிருந்த மண்டையிலும் மெலிந்து கருத்துப் போயிருந்த முகத்திலும் வருடிக்கொடுத்து ஆசுவாசமளித்தது.

ஒவ்வொரு தகனத்துக்குப் பின்பும் குளித்து விட்டுப் புதிய பிபிஈ உடையணிய வேண்டும். பழையதை எரித்துவிட வேண்டும். அதற்குள் அடுத்த உடலுக்குச் சடங்குகள் செய்யப்பட்டு எரியூட்டத் தயாராகிவிட்டிருக்கும். மணி நான்கு. இதுவரை எட்டு உடல்கள் எரிக்கப்பட்டிருந்தன. மந்திராசலத்துக்கு மனமும் உடலும் சோர்ந்து போய் எப்போது நேரம் கிடைத்தாலும் உட்கார்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது. ஒரு அரைமணிநேரம் தூங்கினால் கூட நன்றாகத்தானிருக்கும். ஆனால் இந்தப் பரபரப்பில் அப்படி நினைத்த நேரம் தூக்கம் வரமாட்டேனென்கிறது.

மந்திராசலம் மூன்றாவது தலைமுறையாக இங்கே வேலை செய்கிறான். எப்போதும் கைக்கும் வாய்க்குமான போராட்டம்தான் வாழ்க்கை என்றிருந்தாலும் கடந்த பத்துப் பதினைந்து நாட்களாகப் பைத்தியம் பிடித்தது போலிருக்கிறது.

இந்த மின்மயானத்தில் ஒரு நாளில் எட்டு உடல்கள் வரைக்கும் எரிக்க அனுமதி இருந்தது. ஆனால் கொரோனாவுக்கு முன்பு ஒருநாளும் எட்டு உடல்கள் எரிக்கப்பட்டதே இல்லை. நான்கு ஐந்து வந்தாலே அதிகம். இந்தக் கொரோனா இரண்டாவது அலை தொடங்கி சாவு எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்ததும் பனிரெண்டு உடல்களை எரிக்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது ஒரு நாளைக்கு பதினாறு உடல்கள் வரை தகனம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. தினமும் ஆறுமணிக்கு வேலைக்கு வந்து இரவு 12 மணிக்குத்தான் வீட்டுக்குப் போக முடிகிறது.

சித்திரவதையாக இருந்த இந்த உடை பழகிப் போய் அதை அணிந்திருக்கும் எண்ணமே இப்போதெல்லாம் இருப்பதில்லை. சில போது கையுறைகள் மட்டுமே அணிந்து உடல்களைக் கையாளுகிறார்கள். மாநகராட்சி ஊழியர்களே அப்படித்தான் ஆம்புலன்ஸில் வந்து இறங்குகிறார்கள். கொரோனா என்ற பீதியே இப்போது இருப்பதில்லை. ஒவ்வொரு உடலும் ஒரு எண். அவ்வளவுதான். உயிரற்ற உடல்களை எரிக்கும் உயிருள்ள இந்த உடல் தன் போக்கில் இயங்கிக் கொண்டே இருக்கிறது. கண்கள் சிவந்து உறக்கம் இழுக்கிறது. ஒரு சின்ன இடைவெளியில் முறைவைத்துக் கொண்டு தூங்க முயன்றால் தூக்கம் வர மறுக்கிறது. அதீத அயர்ச்சி உறங்க இன்னும் வசதியான சூழல் கேட்கிறது… . ஒரு சம்பவம் நேற்று நடந்ததா இன்று நடந்ததா இரவிலா பகலிலா என்பதே நினைவில் இருப்பதில்லை.

சிலபோது மந்திராசலத்துக்கு சிரிப்பாக இருக்கும். பெருந்தொற்று பிரிவின் துயரத்தை, மரணத்தின் கம்பீரத்தை, கௌரவத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டிருந்தது. ஊர்ப்பெரிசுகள் தகனத்துக்கு வரும் போது சடங்குகள் செய்ய வேண்டும் என்று ஆளாளுக்குப் பதறுவார்கள். காலமெல்லாம் சடங்கு சம்பிரதாயம் என்று வாழ்ந்த பெரிசு. அந்தஸ்து, ஆஸ்தி என்று பெருவாழ்வு வாழ்ந்த மனிதன். முறையாக அனுப்பி வைக்காவிட்டால் சபித்து விடும். திரும்ப வந்தாலும் வந்துவிடும் என்று சொந்தக்காரர்கள் பார்த்துப் பார்த்து சடங்கு செய்வார்கள். இப்போதோ…

“சரி, சட்டுபுட்டுன்னு வந்து சடங்கு செய்யுங்கப்பா” என்றால் உடலுக்கு அருகே வர எல்லோரும் பயந்து நடுங்குகிறார்கள். பெத்த பிள்ளை, கட்டிய மனைவி, மாமன், மச்சான், மருமகன், மாப்பிள்ளை எல்லோரும் பெரிசுக்கு செய்ய வேண்டியதை தொலைவில் இருந்து ரிமோட் கண்ட்ரோலிலேயே செய்து முடிக்க அலைபாய்கிறார்கள். சிலபோது மந்திராசலத்தையே கற்பூரம் பற்ற வைத்து தேங்காய் உடைக்கக் கெஞ்சிக் கேட்டுக் கொள்வார்கள்.

கடனே என்று மந்திரசலமோ அவனது உதவியாளர்களோ செய்து கொடுப்பார்கள். பெரிசு ராணுவ ஒழுங்குடன் கட்டிக் காத்து வந்த சாதி இன்சினரேட்டர் அறையில் அதனுடன் சேர்ந்து சாம்பலாகும்.

ஒருநாள் ஒரு முப்பது வயதுப் பெண்ணின் உடல் தகனத்துக்கு வந்திருந்தது. கணவனும் அண்ணனும் பக்கத்திலேயே வர மறுத்து விட்டார்கள். மந்திராசலம்தான் கொலுசு, மெட்டி, தாலி எல்லாவற்றையும் எடுத்து ஒரு பேப்பரில் பொட்டலம் கட்டி திட்டில் வைத்தான். அதன் மீது ஒரு துணியைப் போட்டு எடுத்துச் சென்றார்கள்.

போனவர்கள் போனவர்கள்தான். இருப்பவர்கள் குழந்தைகளுக்காகத் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமல்லவா? கணவனும், அண்ணனும் நடந்து கொண்ட முறையில் ஒரு நியாயம் இருந்தது. கொரோனா கால நியாயம்.

மந்திராசலம் உடையக் களைந்து குப்பைத் தொட்டியில் போட்டு தீ வைத்து விட்டு அருகே இருந்த பைப்பைத் திறந்து கீழே உட்கார்ந்து கொண்டான். உடல் முழுவதும் இருந்த கொதிப்பில் தலையில் விழும் நீர் கீழே முழங்காலுக்கு வர வர சூடாகிவிடுவது போன்ற உணர்ச்சி. நீர் வழிய வழிய தொடையிடுக்குகளிலும், வயிற்றிலுமிருந்த சூடு ஆவியாக வெளியேறியது.

தகனமேடையில் சடங்குகள் தொடங்கிவிட்டிருந்தன. ஆணா பெண்ணா கிழவனா குமரனா எதுவும் தெரியவில்லை. பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியில் இருந்து விலகி நிற்பது போல ஒரு நாற்பது வயது ஆள் சில கணங்களுக்கு முன்பு அடித்த மொட்டையுடன் நின்று கொண்டிருந்தான். என்னென்ன சடங்குகள் செய்வது, எதையெதை விடுவது என்று பல வண்ண முகக் கவசங்கள் அணிந்திருந்த உறவினர்கள் கிசுகிசுப்பு யோசனை நடத்திக் கொண்டிருந்தனர்.

‘‘காலைல இருந்து இங்கதானேடா கெடக்கறீங்க, முன்னமே யோசிச்சு முடிவு செஞ்சிருக்கலாமில்ல” மந்திராசலம் வாய்க்குள் திட்டி நொறுக்கினான். வெளியே திட்டினால் மயானத்தைப் பராமரிக்கும் காண்ட்ராக்டைப் பெற்றுள்ள ஹிமாலயா டிரஸ்ட் நடவடிக்கை எடுத்து விடும். ஆத்மா சாந்தி சமாதி வகையறா… என்று மயான ஊழியர்கள் இந்த ஆன்மீக டிரஸ்ட்டை கிண்டல் செய்வார்கள்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு மின்மயானங்களை தனியார் மயமாக்கி, தனியாரின் பராமரிப்பின்கீழ் விடும் கொள்கை செயல்படுத்தப்பட்டபோது ஹிமாலயா சாரிடபுள் டிரஸ்ட் இந்த மின்மயானத்தின் பராமரிப்பை மாநகராட்சியிடமிருந்து பெற்றது. நவீன உலகின் கடும் போட்டி தரும் ஸ்ட்ரெஸ், அதனால் ஏற்படும் உளநெருக்கடி, உடல் கோளாறுகள் ஆகியவற்றுக்கு ஆன்மீகத் தீர்வளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் ஹிமாலயா டிரஸ்ட். டெல்லி, மும்பை ஆகிய நகரங்களிலும் மயானங்களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

மந்திராசலம் போன்றவர்கள் மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்களாக இருந்தார்கள். இப்போது டிரஸ்ட்டின் ஊழியர்களாகிவிட்டார்கள். சங்கம் கிங்கம் எதற்கும் அனுமதி இல்லை. தமிழே தெரியாத டிரஸ்ட் நிர்வாகிகளுடன் எதையும் பேசவே முடிவதில்லை. என்னென்னமோ கட்டுப்பாடுகள் வேறு.

மரணம் பெருந்துயரைக் கொண்டுவரும். சிலபோது கொண்டாட்டமாகவும் இருக்கும். பெரிசுகள் கல்யாண சாவடையும்போது புதைகுழிக்குள் இறங்கி வலிக்காத கிண்டல் பேசுபவனுக்கு இறுதிச் சடங்குகளில் தனி மரியாதை இருக்கும். இந்த டிரஸ்ட் பெரிய ஹாலில் கிசுகிசுப்பாகப் பேச வைத்து, சோகமாக ஒரு பாட்டுப் போட்டு அடக்கத்தை முடித்துவிடுகிறது.

“கோழி மேல போர்வையைப் போட்ட மாதிரி ஆக்கிடறானுக” என்று மயான ஊழியர்கள் ரகசியமாகக் கிண்டல் செய்வார்கள். சரக்கடித்து டிரஸ்ட்டைக் கேலியும் கிண்டலும் பேசிக் கொண்டாடியதெல்லாம் பழைய காலம்.

உறவினர்கள் சடக்குகளைத் தொடங்கினார்கள். அவர்கள் காலை எட்டு மணிக்கு வந்தவர்கள். என்னென்ன செய்ய வேண்டும் என்று பேசி முடிவு செய்துதான் இருந்தார்கள். ஆனால் நேரம் ஆக ஆக முடிவு மாறிக் கொண்டே இருந்தது. பசியும், களைப்பும் சேர்ந்து ஒரு இறுதி முடிவைக் கொண்டு வந்திருந்தன.

மந்திராசலம் முன்னால் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் சாய்ந்தபடி அசிரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இவனுக கொஞ்சம் இழுத்தால் கூட நல்லதுதான் என்று அவனுக்குத் தோன்றியது. ரெஸ்ட் எடுக்கலாம். தூக்கம் வராவிட்டாலும் கண் மூடியிருந்தால் போதும், மண்டை குடைச்சல் கொஞ்சம் குறையும்.

யாரோ பின்னாலிருந்து அவன் தோட்களை உலுக்கினார்கள்.

“எந்திரிப்பா. பின்னால வா” வாட்ச்மேன் குரல் தூண்டு துண்டாக வந்தது. அசைவுகளிலும் விழிகளிலும் பதட்டம் தெரிந்தது. “சீக்கிரம் வா” மந்திரம் உச்சரிப்பது போல நீல முகக்கவசத்துக்குள்ளிருந்த உதடுகள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தன.

“என்னண்ணா?” மந்திராசலம் குழப்பத்துடன் கேட்டான்.

வாட்ச்மேன் அவன் முகத்துக்கு அருகே குனிந்தார்.
“அண்ணா என்ன?” மந்திராசலம் விலகிச் சிரித்தான். “பொணம் எரிக்கற எடத்துல முத்தமா கொடுக்கறீங்க?”

வாட்ச்மேன் ஜோக்கைக் கண்டு கொள்ளவில்லை.

“மந்திராசலம்… ”

“ம்.”

“சேம்பரில் இருந்து புகை வெளிய வருது. எங்கியோ லீக் ஆகுது”

மந்திராசலம் பதறிப் போய் துள்ளியெழுந்தான். பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது நடந்துவிட்டது. கடந்த சில நாட்களாகவே தகன மேடை தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதன் காரணமாக உடல்களை எரியூட்டும் அறைக்குள் தள்ளும் ஸ்டிரெச்சர்கள் உருகிவிடக்கூடும். அல்லது புகைபோக்கும் சிம்னிகளில் உள்ள ஓட்டைகள் பெரிதாகிவிடலாம், சிம்னி உடைந்து விடலாம் என்று அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். அப்படி ஏதாவது நடந்து விட்டால் அவனைத் தொலைத்து விடுவார்கள். மேனேஜரிடம் அடிக்கடி புலம்பியும் ஒன்றும் நடக்கவில்லை. அவரும் சேர்ந்து அரண்டு போனதுதான் மிச்சம்.

யாரையும் கலவரப்படுத்திவிடாமல் மந்திராசலம் பூனை போல வாட்ச்மேனோடு மயானக் கட்டடத்தின் பின்னால் சென்றான்.

ஐம்பது அடி உயரத்துக்கு பிரம்மாண்டமாக நின்றது புகையை வெளியேற்றும் பிரதான சிம்னி. கீழே மூன்றடி விட்டமும், மேலே செல்லச் செல்ல குறுகியும் காணப்பட்டது இரும்புத் தகடுகளாளான சிம்னி. முப்பது அடி வரை வெளிர் நீல நிறத்திலிருந்த சிம்னி தகடு அதற்கு மேல் துருப்பிடித்துப் போயிருந்தது. எரியூட்டும் அறையிலிருந்து இரண்டு குழாய்கள் வந்து சிம்னியுடன் இணைக்கப்பட்டிருந்தன.

இந்தக் குழாய்களில்தான் முதலில் ஓட்டை விழுந்து புகை வெளியே பரவியது. மந்திராசலமும் மற்ற ஊழியர்களும் அதை சாக்குகள் வைத்துக் கட்டி அடைத்து சரிக்கட்டினார்கள். உள்ளிருந்து வரும் குழாய்கள் சிம்னியுடன் இணையும் இடம் அட்டைக் கருப்பாக மாறியிருந்தது.

இப்போது மயான கட்டத்தின் பின்புறம் இருந்த ஜன்னல் வழியாகவும் புகை வந்து கொண்டிருந்தது. ஏற்கனவே ஓயாது உடல்களை எரித்ததில் சிம்னி கக்கிய புகையால் சுற்றுப்புறம் எங்கும் கரும்புகை மண்டலம் பரவியிருந்தது. இப்போது இந்த ஓட்டையிலிருந்து வரும் புகை அருகே இருக்கும் சாலையிலும் பரவியிருந்தது. தென்னை மரங்கள் புதர்கள் எல்லாம் புகைமண்டலத்தால் மூடப்பட்டிருந்தன. கரும்புகை அருகே இருந்த ஏரியின் நீர்ப்பரப்பின்மீது பனிப்படலம் போலத் தவழ்ந்து கொண்டிருந்தது.

ஏரிமேட்டின் மீது ஓரிருவர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். புகை வந்து கொண்டிருந்த ஜன்னல் எரியூட்டும் அறைக்கு நேர் பின்னால் உள்ள சுவற்றில் இருந்தது. இறுதிச் சடங்குக்கு வருபவர்களுக்கு அங்கே வர அனுமதி இல்லையென்பதால் கட்டடத்துக்கு உள்ளே இருப்பவர்களுக்கும், வெளியே காத்திருப்பவர்களுக்கும் இங்கே புகை வருவது தெரிய வாய்ப்பில்லை. ஆனால் இப்படி புகை வந்தால் சீக்கிரம் சுற்றுப்புறமெங்கும் செய்தி பரவிவிடும்.

மயானக் கூடத்துக்கு உள்ளேயே சிதையிலிருந்து வரும் குழாய்களில் ஓட்டை விழுந்து இருக்க வேண்டும் அல்லது எரியூட்டும் அறையிலேயே ஏதாவது விரிசல் விட்டிருக்க வேண்டும். இப்போது ஜன்னலை அடைத்தால் புகை முன் மண்டபத்துக்குள் வந்துவிடக் கூடும்… . புகையோடு நெருப்புப் பொறிகளும் சேர்ந்து வந்து மின்சார வயர்களைப் பாதித்து விட்டால்… .

பீதியில் மந்திராசலத்தின் உடல் நடுங்கியது.

உலையின் தரையும், பக்கச் சுவர்களும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

அதற்குள் ஓடி வந்த மேனேஜர் முகம் வெளுத்துப் போய் செல்லை எடுத்துக் கொண்டு தூரமாகப் போய்விட்டார்.

ஸ்வர்க்க கிருஹா அப்பார்மெண்ட்டின் நான்காவது தளம்.

காலை உணவுக்குப் பிறகான அமைதி ஸ்ரீப்ரிய தர்ஷினிக்கு மிகவும் பிடிக்கும். சஞ்சய் ஏசி அறையைச் சாத்திக் கொண்டு லேப்டாப்பில் மூழ்கிவிடுவான். லாக்டவுன் காரணமாக அவனுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம். பத்து மணிக்கு லாக் இன் செய்துவிட வேண்டும். வீடுமுழுக்கப் போர்வை போலப் போர்த்திருக்கும் நிசப்தமும் திரைச்சீலைகளினூடே கசிந்து வரும் மங்கிய ஒளியும் இதமான மனநிலையைக் கொடுக்கும்.

தர்ஷினி கண்ணாடி முன்னால் நின்று தன் உருவத்தை ஆராய்ந்தாள். புருவம் எடுக்க முடியாமல் அதன் இயல்பான அடர்த்தி தெரியத் தொடங்கியிருந்தது. லாக் டவுன் நேரத்தில் பியூட்டி பார்லருக்கு எங்கே போவது! இந்தப் புருவத்துடன் எப்படி அப்பார்ட்மெண்ட்காரர்கள் முன்னால் தோன்றுவது என்பதுதான் தர்ஷினிக்கு இப்போதிருக்கும் பெரிய கவலை. இப்படியொரு சூழல் அவளுக்கு வந்ததே இல்லை. சஞ்சய் வேறு வைல்ட் பியூட்டி என்று கிண்டல் பண்ணத் தொடங்கியிருந்தான்.

“கிண்டல் பண்ற நேரம் இதுக்கு உருப்படியா ஒரு வழி சொல்லாமில்ல?” தர்ஷினி முறைப்புடன் கேட்டாள்.

“நான் வேணா ஷேவிங் பண்ணி விடட்டுமா?” வாய் தவறிக் கேட்டு விட்டு அன்று சஞ்சய் வாங்கிய அடி…

“ஓ காட் நான் கல்யாணம் பண்ணியிருக்கறது பொண்ணா இல்லாட்டி ஏதாச்சும் பிசாசா? பிசாசு அடிச்சாத்தான் முதுகு இப்படி எரியும்பாங்க.” முதுகைத் தேய்த்துக் கொண்டே போனான் அவன்.

இதை நினைத்ததும் மெலிதாகச் சிரித்துக் கொண்டாள். “அந்த பயம் இருக்கட்டும்.”

வந்த வேகத்தில் சிரிப்பு மறைந்து ஓடிப் போய் எல்லா லைட்டையும் போட்டாள். புருவம் தவிர இன்னொரு கவலையும் தோன்றியிருந்தது. ஜா லைன் மறைந்து கழுத்தில் சதை பிடிக்கிறதோ என்ற சந்தேகம் வேறு அவளை வதைத்துக் கொண்டிருந்தது. தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி தொடங்கியிருந்தாள். இருந்தாலும்…

நான்கைந்து கோணத்தில் தன் உருவத்தைப் பார்த்த பின்புதான் அவளுக்குத் திருப்தி வந்தது. டிரஸ்ஸிங் டேபிள் அருகே வைக்கப் பட்டிருந்த வெயிட் மெஷினில் ஏறி நின்றாள். நேற்று இருந்த அதே 54.6. அப்பாடா.

ஹெட் போனை எடுத்துக் கொண்டு பால்கனிக்குக் கிளம்பினாள். இந்த வீட்டிலேயே அவளுக்குப் பிடித்த இடம் அதுதான். அப்பார்ட் மெண்ட் ஒரு ஏரிக் கரையிலிருந்தது. ஏரி குண்டு பல்ப் போன்ற வடிவத்திலிருக்கும். அப்பார்ட்மெண்ட் மதில் வரை குறுகியிருக்கும் ஏரி மதிலை ஒட்டி அகண்டு விரிந்திருக்கும். ஏரி விரியும் இடத்தில் இருப்பதால் அப்பார்ட்மெண்ட் இரண்டு புறமும் நீரால் சூழப்பட்டு தீவு போலிருந்தது. பால்கனியில் நின்று பார்த்தால் நேர் கீழே ஏரித்தண்ணீர் அலையடித்துக் கொண்டிர்க்கும். மிதக்கும் நான்குமாடிக் கப்பல் என்று தர்ஷினி நினைத்துக் கொள்வாள்.

பால்கனி வெயிலில் குளித்துக் கொண்டிருந்தது. கண்ணாடிக் கதவைத் திறந்தால் உள்ளே வெக்கை அடிக்கும். எனவே ஏரியைப் பார்த்தவண்ணம் வீட்டுக்கு உள்ளேயே கதவோரம் பிரம்பு நாற்கலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டாள்.

கண்ணாடியினூடாக ஓவியம் போலத் தெரிந்த ஏரியின் அழகையும், வீட்டின் குளுமையையும் அனுபவித்தவள் செல்லில் கௌஷிகி சக்ரவர்த்தியை இசைக்க விட்டாள். அமார் அபோனார் சே அபோன் ஜீ ஜோன்… கௌஷிகியின் மயக்கும் குரல் இனிய நறுமணம் போல மனம் முழுவதும் பரவியது.

மெஸ்மரைசிங்… தரிஷினி நினைத்துக் கொண்டாள்.

கௌஷிகி சக்ரபோர்த்தியின் குரல், எதிரே ஏரியில் பிரதிபலிக்கும் நீல மலைகள்… மலைகளின் மேல் தவழ்ந்து வரும் மேகங்கள்… ஏரியின் மறுபுறம் மோனத்தில் ஆழ்ந்திருக்கும் மரங்கள்… ஏரிக்கரையில் செக்கச் சிவந்த மலர்களால் நிறைந்திருக்கும் மேபிளவர் மரங்கள்… அவற்றுக்கு மேல் தலையுயர்த்தி நிற்கும் புகைப்போக்கி…

மெஸ்மரைசிங்…

வசதியாகச் சாய்ந்து கொண்டு பிரம்பு மோடாவின் மீது கால்களை வைத்துக் கொண்டாள். த்ரீ போர்த் பேண்ட். தனிக்குடித்தனம் தரும் வசதிகள். மாமியார் மாமனாரோடு இருக்கும் போது டீ ஷர்ட், த்ரீ ஃபோர்த் எல்லாம் போட்டுக் கொண்டு படுக்கையறைக்கு வெளியே வர முடியாது.

ஏதோ வாடையடித்தது. பக்கத்து வீட்டில் சமைக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைப்புடன் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.

பார்த்துப் பார்த்து வாங்கிய பிளாட். சுத்தம் என்றால் அப்படியொரு சுத்தம். ஸ்மார்ட் சிடி வேலை நடப்பதால் அருகே இருந்த குடிசைப் பகுதி வெளியேற்றப்பட்டு ஏரியைச் சுற்றி சைக்கிள் ஓட்ட டிராக்கும், வாக்கிங் போக நடை பாதையும், பூங்காக்களும் அமைக்கப்பட்டு வந்தன. ஏதோ ஐரோப்பிய நகரம் போல மாறிக் கொண்டிருந்தது ஊர். கடுமையான கட்டுப்பாடுகள் அப்பார்ட்மெண்ட்டில் இருந்தன. வெஜிடெரியனுக்கு மட்டுமே வீடுகளை விற்பனை செய்யவும், வாடகைக்குக் கொடுக்கவும் அனுமதி உண்டு.

பெரும்பாலும் குடியிருப்பவர்கள் லிபரல் சிந்தனை உள்ளவர்கள் என்றாலும் ஒரே பண்பாடு கொண்டவர்களாக இருப்பது வசதியாக இருக்கிறது, மற்றபடி இதில் உயர்வு தாழ்வு இல்லை என்று சொல்லிக் கொண்டார்கள். பிரியதர்ஷினிக்கும் இது பிடித்துத்தான் இருந்தது.

கருகும் வாடை மூக்கைத் துளைத்தது. தர்ஷினி திடுக்கிட்டு எழுந்து சமையலறைக்கு ஓடினாள். ஸ்டவ் அணைக்கப் பட்டிருந்தது. பிரிர்ஜ் வழக்கமான மெல்லிய அதிர்வுடன் இயங்கிக் கொண்டிருந்தது. இங்கே எதுவும் கருக வாய்ப்பில்லையே? எலி கிலி ஏதேனும் செத்துக் கிடக்கிறதா?

இல்லை. சாம்பல் வாடை, ஏதோ எரியும் வாடை… டயர் கருகுவது போன்ற வாடை… வீடு முழுவதும்…

கீழ் வீடுகளில் ஏதாவது தீப்பற்றிக் கொண்டதோ என்று தர்ஷினி சந்தேகிக்கத் தொடங்கிய கணத்தில் வெளியே வீலென்ற கூச்சல் எழுந்தது. சஞ்சய் கூட எழுந்து ஓடி வந்தான்.

அந்தத் தளத்தில் குடியிருப்பவர்கள் எல்லோரும் காரிடாரில் குவிந்திருந்தனர். ஒரே கூச்சல். யார் என்ன சொல்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

சரஸ்வதி அம்மாள் அய்யோ அய்யோ என்று கதறிக் கொண்டிருந்தாள். நரையோடிய தலைமுடி கலைந்து குலைந்து போயிருந்தது. பெரிய பொட்டு வழியும் வியர்வையால் கரைந்து கொண்டிருந்தது.

பக்கத்து பிளாட் காரர்கள் அம்மாளைப் பிடித்து முதுகையும் நெஞ்சையும் தடவி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்கள். முகக்கவசத்துக்கு வெளீயே தெரிந்த கண்களில் அப்பட்டமான பீதி உறைந்து கிடந்தது. தர்ஷினிக்கும் சஞ்சய்க்கும் என்ன நடக்கிறதென்றே பிடிபடவில்லை. அம்மாள் அலறுவதைப் பார்த்தால் ஏதோ கெட்ட செய்தி போலிருக்கிறது. எல்லோர் முகத்திலும் பயம். சிலர் வாயைப் பொத்திக் கொண்டு நம்ப முடியாத பாவனையைக் காட்டினர். எரியும் வாடைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் புரியவில்லை! தாங்கள் ஓட வேண்டுமா இல்லை இங்கேயே இருக்கலாமா? அதுவும் புரியவில்லை.

சஞ்சய் இருண்ட முகத்துடன் நின்று கொண்டிருந்த சுப்பிரமணியத்தை நெருங்கினான்.
“என்ன பிராப்ளம் சார்?”

“கிரிமெடோரியத்துல டே அண்ட் நைட் பாடி எரிக்கறாங்க. அந்த நாத்தம் அப்பார்ட் மெண்ட்டுக்குள்ள வருது”

“ஓ மை காட்” தூக்கி வீசப்பட்ட பூனைக்குட்டி போல சஞ்சய் நிலைகுலைந்து பின்வாங்கினான். நெஞ்சடைத்துக் கொள்ள கைகள் இலக்கில்லாமல் காற்றில் அலைந்து பின்பு நெஞ்சைப் பிடித்துக் கொண்டன. தர்ஷினி தாவி அவனை இறுகப் பிடித்துக் கொண்டு தொங்கினாள். அவளுக்கு உடல் கூசிச் சிலிர்த்தது. இப்படிக் கூட ஒரு பிரச்சினை வருமா? சரஸ்வதி அம்மாள் வீடுதான் தெற்குப் புறமாக கிரிமெட்டோரியம் ஓரம் இருக்கிறது. எனவே புகை அப்படியே அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து விட்டது.

உடலெல்லாம் ஏதோ அப்பிக் கொண்டது போல அருவெறுப்பு, பயம், பீதி… உடலும் மனமும் பிரட்ட அவர்கள் நின்று கொண்டிருக்கும் போதே… சுப்பிரமணியத்தின் மனைவி ஒரு சூட்கேசுடன் வெளியே வந்தார்.

“நாங்க கெளம்பறோம். இங்க இருக்க முடியாது.” சொல்லிக் கொண்டே இருவரும் லிஃப்ட் ரூம் நோக்கி நடக்கத் தொடகினர்.

தர்ஷினி எதோ நினைப்பில் பாய்ந்து ஓடி பால்கனி கதவைத் திறந்தாள். அவள் நினைத்தபடியே சேர், கிரில், அருகே இருந்த ஸ்டேண்ட் எல்லாவற்றின் மேலும் சாம்பல் துகள்கள் பொட்டுப் பொட்டாகப் படிந்திருந்தன. தொலைவில் தெரிந்த புகைப்போக்கி குப்குப்பென்று கரும்பழுப்புப் புகையைக் கக்கிக் கொண்டிருந்தது.

தர்ஷினிக்கு வயிற்றிலிருந்து குடல் பொங்கி வந்து தொண்டையில் அடைத்துக் கொள்ள படீரென்று கதைவைச் சாத்தினாள். ஒவ்வொரு அறையாக ஓடி எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் சாத்திவிட்டு வெளியே ஓடி வந்து மீண்டும் சஞ்சய்யின் தோளின்மீது தொற்றிக் கொண்டாள்.

“இந்த ஸ்மோக்கை பிரீத் பண்ணினா கோவிட் வருமா?” பயத்துடன் கேட்டாள்.

“தெரில, வராதுன்னு நினைக்கிறேன். ஆனாலும் பொணம் எரிக்கற புகையோட எப்படி இருக்கறது?”

“வெளியூர் எங்கையும் போயிட முடியாது. ஈ பாஸ் வாங்கணுமே.”

“ஒரு முட்டை வாசனை, வெறும் மசாலா வாசனைகூடத் தாங்க முடியாது சார். பொணம் எரிக்கற வாடை வருது. கெட்ட காலம்” யாரொ சொன்னார்கள். தடதடவென்று கதவுகள் சாத்தப் படும் ஓசை… கார்கள் பறந்தோடும் ஓசை…

“ஏதாச்சும் பண்ணி இதை நிறுத்துங்க” யாரோ போனில் யாரிடமோ கத்திக் கொண்டிருந்தார்கள்.

“செக்ரெட்டரி கூட இப்போதைக்கு ஏதுவும் பண்ணமுடியாதுன்னுட்டார். போயிரலாம் மேடம்”

“இதுக்குத்தான் அப்பவே சொன்னேன். மகள் வீட்டுக்குப் போயிடலாம்னு.”

“எல்லாப் பக்கமும் சண்டை போட்டு வெக்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே? இப்ப போய் நிக்க ஒரு இடம் இருக்கா?”

“எந்த இடமா இருந்தாலும் இப்ப எப்படிப் போகறது?”

உயிரோடு உலாவிய யாரோ ஒரு மனிதர் சாம்பல் வடிவில் இப்படி அழையாத விருந்தாளியாக அப்பார்ட்மெண்ட்டுக்கு விஜயம் செய்து…

ஹிமாலயா டிரஸ்ட்டின் தகவல் தொடர்பாளரான அஷ்வின் சர்மாவும், ஒரு வெள்ளைக்காரர் உட்பட சில காவி அணிந்த துறவிகளும் மாநகராட்சி கமிஷனர் அலுவலக கட்டடத்தில் இருந்து வெளியே வந்தனர். சாமியாருக்கும், நவ நாகரீகமான கம்பெனி சி ஈ ஓவுக்குள் இடையில் இருந்தது அஷ்வினின் தோற்றம். மீசை தாடி இரண்டையும் மழுங்கச் சிரைத்திருந்தார். மாசு மருவில்லாத செக்கச் சிவந்த முகம் மாலை வெயில் பட்டு மேலும் சிவந்து பளபளத்தது. காவி ஜிப்பா. வெளிர் நீல ஜீனஸ். பழுப்பு வுட்லேண்ட்ஸ் ஷூ. பின்னோக்கி வாரி விடப்பட்டிருந்த சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி. அவரது அசைவுகள் மிக இயல்பாகக் காற்றில் அலையும் இலை போலிருந்தன.

முன்னால் காத்திருந்த செய்தியாளர்கள் எழுந்து அவசரமாக எழுந்து வந்தனர். ஹிமாலயா டிரஸ்ட் சுடுகாட்டைப் பராமரிக்கும் வாய்ப்பைப் பெற்றதில் பலருக்கு அதிருப்தி இருந்ததால் பல செய்தியாளர்கள் ஆர்வத்துடன் அங்கே குவிந்திருந்தனர்.

ஒரு காதில் ஸ்டட்டும், அடர்ந்த தாடி மீசையும், பச்சை ஷார்ட்டும் காட்டன் பேண்ட்டும் அணிந்திருந்த ஒரு இளைஞன் பொதுவாக டிரஸ்ட் உறுப்பினர்கள் அனைவரையும் நோக்கி மைக்கை நீட்டினான்.

“மின் மயானத்தை மெய்ன்டெய்ன் பண்ணலேன்னா காண்ட்ராக்டை ரத்து செய்து விடுவதாக மாநகராட்சி சொல்லி இருக்கிறதே, அது பற்றியா பேச வந்துள்ளீர்கள்?”

“உங்களுக்கு எல்லாம் தெரிகிறது. வெல் இன்பார்ம்ட்” அஷ்வின் சிரித்தபடி பதிலளித்தார். மற்ற சாமியார்கள் அவரைப் பேசவிட்டுவிட்டு ஒதுங்கி நின்றனர். “உண்மைதான். மின் மயானத்தில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதை ஹிமாலயா டிரஸ்ட் தான் சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மாநகராட்சி எங்கள் மயான கண்ட்ராக்டை ரத்து செய்து விடும் என்று நோட்டிஸ் கொடுத்திருந்தது. அது பற்றிப் பேச வந்தேன்”

“என்ன முடிவு எட்டப்பட்டது?’

அஷ்வின் சற்றே நிதானித்து எல்லோரும் கேட்கிறார்களா என்று பார்த்தார். பின்பு மெல்லிய குரலில் தொடங்கினார், “எங்கள் டிரஸ்ட்டுக்கான பணம் எங்கள் நிறுவனத்திடம் இருந்தும், கொடையாளர்களிடம் இருந்தும் வருகிறது. அண்மையில் ஏற்பட்ட தேக்கம், தற்போதைய முடக்கம் ஆகியவற்றால் இப்போது இயக்குநர் குழுவைக் கூட்டி பணத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது. இது அசாதாரணமான சூழல்.”

‘‘அரசு உத்தரவின் காரணமாக மயானத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக உடல்களை எரிக்க வேண்டி வந்ததன் காரணமாகவே இந்தப் பழுது ஏற்பட்டுள்ளது. எனவே அரசு மயானத்தை சீர்படுத்தும் செலவில் ஒருபகுதியை ஏற்றுக் கொள்ளவேண்டும். மயானம் இருக்கும் இந்த அற்புதமான கட்டடத்தை நாங்கள் தான் கட்டினோம். இது பல்லாண்டுகளாக மக்களுக்கு மிக முக்கியமான சேவை ஆற்றி வருகிறது. எனவே வெளியேறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களுக்கு நேரமும் பண உதவியும், அரசிடமிருந்து பங்களிப்பும் கிடைக்கும் பட்சத்தில் இக்குறைகளை விரைவில் நிவர்த்தி செய்து மக்களுக்கும், காலமான ஆத்மாக்களுக்கும் இன்னும் மேம்பட்ட சேவைகளை வழங்க முடியும்.”

கருப்பு சட்டை அணிந்திருந்த செய்தியாளர் ஒருவர் “உங்களால் முடியவில்லை என்றால் யார் செய்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டியதுதானே” என்றார்.

“அதெப்படி முடியும்?” அஷ்வின் வெடுக்கென்று கேட்டார்.

‘‘ஒரு தற்காலிக பிரச்சினைக்காக நாங்கள் ஏற்றுக் கொண்ட கடமையில் இருந்து விலக முடியாது. நாம் எல்லோரும் சேர்ந்ததுதான் அரசு. இந்த அரசின் மீது எங்களுக்கும் உரிமை உண்டு. எங்களை நிர்பந்திக்கும் அரசை அதன் கடமையைச் செய்யச் சொல்லி நாங்களும் வலியுறுத்துவோம்”

“அப்படி என்ன கடமையை நீங்கள் செய்து இருக்கிறீர்கள்?’’ ஒரு செய்தியாளர் கேட்டார்.

“இந்தியாவில் இந்துக்களின் உடல் தகனம் என்பது மாலை வேளைகளில், அமைதி நிறைந்த ஆற்றங்கரைகளில், உடலும், உள்ளமும், பஞ்ச பூதங்களும் இரண்டறக் கலந்து நிற்க, ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்து உயிர்நீத்தவர்களை மறுவுலகுக்கு வழியனுப்பி வைப்பதாகும். பெருநகரங்களில் இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

அரசு அமைத்திருந்த இந்த வெறுமையான மயானத்தைக் கலையழகும், மனதுக்கு அமைதியளிக்கும் கட்டிட அமைப்பும், பாரம்பரிய பண்பாட்டுக் குறியீடுகளும் கொண்டதாக ஹிமாலையா டிரஸ்ட் மாற்றியமைத்தது.

இது ஒரு சாம்பல் வண்ண கியூபிஸ்ட் கட்டடமாகும். இது ஜெங்கா பிளாக்ஸ் விளையாட்டில் வருவது போல நேர்த்தியாக அடுக்கிக் கட்டப்பட்ட ஒரு கட்டடம். இது வாழ்வைக் கட்டியமைத்தல், உறவுகளைக் கட்டியமைத்தல், வணிகத்தைக் கட்டியமைத்தல், வெற்றியைக் கட்டியமைத்தல் என்று பல பொருட்கள் கொண்டது. மரணம் முடிவல்ல. அது வாழ்க்கையை நினைவூட்டுகிறது என்பதை இந்தக் கட்டடம் உணரச் செய்யும்.

இந்தியாவில் இறுதிச் சடங்குகளில் நிலப்பரப்பு மிக முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. இறுதிச் சடங்குகள் ஊருக்கு வெளியே நதிக்கரைகளில் நடக்கும். இப்போது அவை உள்ளரங்கங்களில் நடக்கின்றன. எனவே நாங்கள் இயற்கையான மரங்களடர்ந்த நிலப்பரப்பை இங்கே உருவாக்கத் திட்டமிட்டோம்.

மின்மயானம் பூந்தோட்டங்களையும், நந்தவனத்தையும் கொண்டதாக மாறியது. அது ஆற்றங்கரையோர செடி கொடிகளையும், நமது கோவில்களில் இருக்கும் நந்தவனங்களையும் நினைவுபடுத்துகிறது. இது பாரம்பரிய வழக்கப்படியான உடல் தகனத்தை நெரிசலான நகரத்தில் நிகழ்த்திக் காட்டுவதாகும்.

மக்கள் கூடி நின்று துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் மண்டபமே இந்த மயானத்தின் மையம். எரிக்கும் மேடை அல்ல”. என்றார் அஷ்வினுடன் வந்திருந்த வெள்ளைக்காரரான கிளேட் அடெலார்டு. அவரது பொன்னிற தலைமுடி பின்னால் சிறுகுடுமியாக முடியப்பட்டிருந்தது. காவி ஜிப்பாவும் வேட்டியும் அணிந்திருந்தார். தன்னை ஒரு கட்டடக் கலை நிபுணர் என்று தட்டுத் தடுமாறித் தமிழில் அறிமுகப்படுத்திக் கொண்டு ஆங்கிலத்தில் தொடந்தார்.

‘‘இந்த மயான அமைப்பு அண்டவெளியெங்கும் விரிந்து பரவி நின்று வாழ்வையையும், மரணத்தையும் கடந்த உணர்வலைகளைப் பரப்பி மனதை அதிரச் செய்யும் குறியீடுகளை சுவர்களில் அழுத்தமாகப் பதித்துள்ளது. மரணம் முடிவல்ல. ஆத்மா அழிவில்லாதது என்பதை இந்தக் குறியீடுகள் உணர்த்துகின்றன. இந்தக் கட்டட வடிவமைப்பானது யு.கே. ஆர்கிடெக்சுரல் ரெவியூ எடிட்டர் சாய்ஸ் அவார்டு பெற்றது. பல உலக கட்டடக் கலை ஏடுகளில் இந்த மயானம் இடம் பெற்றுள்ளது. மிக சிறந்த லைட்டிங், விண்ணையும் மண்ணையும் இணைக்கும் கதவுகள், விண்ணோக்கி நிமிர்ந்து பார்ப்பது போன்ற கூரை…

உடலை விட்டு தற்காலிகமாக விலகிச் செல்லும் ஆத்மாக்களுக்கு உரிய விதத்தில் விடை கொடுக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த மயானம் ஒரு கலைப் பொக்கிஷமாகும். ஹிமாலயா டிரஸ்ட் ஒரு போதும் இதை விட்டுக் கொடுக்காது’’

“ஒரு வேளை மயானப் பராமரிப்பை அரசு திரும்ப எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள்?”

அஷ்வின் திரும்பவும் மைக் அருகே வந்து ஒரு மெல்லிய புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

“கடல் கடந்து பரந்து விரிந்திருக்கும் இந்து சமூக மக்களிடம் செல்வோம். எங்களது பணி அவர்களுக்கானது என்பதைப் புரிய வைப்போம். ஒரு நாளைக்குப் பதினான்கு உடல்களை நாங்கள் எரித்தபோது உதவிக்கு வராத அரசு ஒரு நெருக்கடி ஏற்பட்டதும் வந்து எங்கள் உழைப்பைப் பிடுங்குவது சரியானதா என்று கேட்போம். எங்களுக்கு எதிராக நிற்கும் துணிச்சல் ஒருபோதும் அரசுக்கு வராது.”

‘‘மேன்மை தாங்கிய முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு,

மயானப் பணியாளர் சங்கம் செய்து கொள்ளும் விண்ணப்பம்.

கடந்த ஒரு மாதமாக கொரோனா இரண்டாவது அலை நமது மாநிலத்தில் உச்சத்தில் இருந்து வருவது தாங்கள் அறிந்ததே. மயானப் பணியாளர்கள் மூன்று மடங்கு வேலை செய்து வருகின்றனர்.

ஓய்வின்றி இயங்கியதன் காரணமாக மயானங்களின் கருவிகள் பழுதடைந்துள்ளன. இதனால் கசியும் புகை, வெப்பம் ஆகியவற்றின் காரணமாக மயானப் பணியாளர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிவருகின்றனர். மருத்துவச் செலவு பல மடங்கு ஆகியுள்ளது.

இவர்களுக்குக் கடந்த பல ஆண்டுகளாக சம்பள உயர்வு அளிக்கப்படவே இல்லை.

மயானங்களின் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சிகளின் ஊதிய உயர்வு கேட்டால் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள நிறுவனங்களை அணுகும்படி கூறுகின்றனர். நிறுவனங்களை அணுகினால் மாநகராட்சி, நகராட்சிகளை அணுகும்படி அறிவுறுத்துகின்றனர்.

கொரோனா காலத்தில் மயானப் பராமரிப்பைத் திரும்பவும் அரசு எடுத்துக் கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே தாங்கள் இதில் தலையிட்டு மயானப் பணியாளர்கள் சந்தித்து வரும் கொடுமைகளுக்கு ஒரு தீர்வு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.”

 

iramurugavel@gmail.com