எந்தவொரு சமூகமும் முன்னேற்றமடைந்திட அடிப்படையாக விளங்குவது கல்வியும் மருத்துவமும்தான். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் ஒப்பீட்டுநிலையில் இன்றைக்குக் கல்வியிலும் மருத்துவத்திலும் முன்னிலை வகிக்கிற மாநிலமாக விளங்குகிறது. ஒரு மனிதனைச் சமூகத்துடன் இணைக்கிற கல்வியின் இடம், ஒப்பீட்டளவில் தனித்துவமானது. கல்வி என்ற சொல்லின் பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாயிரமாண்டு வரலாறு பொதிந்திருக்கிறது. தமிழ் மொழியைச் செவ்வியல் மொழி என்று கொண்டாடப்படுவதற்குக் காரணமாக விளங்குகிற சங்க இலக்கியப் பாடல்களில் பண்டைத் தமிழரின் கல்வியியல் சிந்தனைகள் பதிவாகியுள்ளன. பாணர் மரபும் புலவர் மரபும் அன்றைய காலகட்டத்தில் நிலவிய கல்விப் பரவலுக்குச் சான்றுகள். வேந்தர்கள், வணிகர்கள், மருத்துவர்கள் என்று சமூகத்தில் பல்வேறு பிரிவினரும் கல்வியில் சிறந்து விளங்கியதுடன் கவிஞர்களாகக் கவிதை எழுதியுள்ளனர். சங்க காலத்தில் 41 பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகள், தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. பக்தி இயக்கக் காலகட்டத்தில் காரைக்கால் அம்மையாரும் ஆண்டாளும் முதன்மையான பெண் கவிஞர்களாக விளங்கினர்.

கல்வி கற்றலில் ஆண், பெண் என்ற பேதம் இல்லாத நிலை நிலவியது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வியின் பயன்பாடும் பரவலும் இருந்ததை அறிய முடிகிறது. அதேவேளையில் வைதிக சநாதன நெறி, வருணக் கோட்பாடு அடிப்படையில் கல்வியைப் பார்ப்பனர்க்கு மட்டும் என வரையறுத்தது. அவைதிக சமயங்களான ஜைன சமயமும் பௌத்த சமயமும் மக்கள் எல்லோருக்கும் கல்வியைப் போதித்தன. ஜைன சமயத்தைச் சார்ந்தவரான அரையனார், ‘பழமொழி’ என்ற பதினெண் கீழ்க்கணக்கு அற நூலில் ஜைன சமயம் வலியுறுத்தும் நான்கு வகையான தானங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவை: உணவு தானம், கல்வி தானம், மருந்து தானம், அடைக்கல தானம். அந்த நான்கு தானங்களும் இன்றைய காலகட்டத்தில் வாழ்கிற மக்களுக்கும் அடிப்படையானவை. பிறப்பின் அடிப்படையில் உயர்சாதியினருக்கும் மட்டும் கல்வி என்று வலியுறுத்திய வைதிக சநாதனத்திற்கு எதிராகப் பிறப்பு, பால்ரீதியில் பேதம் பார்க்காமல் எல்லோருக்கும் கல்வியை அளித்த ஜைன சமயம், தமிழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அளவில் செயலாற்றியுள்ளது.

இடைக்காலத்தில் வைதிக சநாதனம் தமிழக மன்னர்களிடம் ஆதிக்கம் செலுத்தி, வருணாசிரமக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டது; பிறப்பின் அடிப்படையில் விளிம்புநிலையினருக்குக் கல்வி மறுக்கப்பட்டது. வருணாசிரமக் கோட்பாட்டின் அரசியல் மேலாதிக்கம் காரணமாகக் கல்வி என்றால் வேதக் கல்வி என்றும் அதுவும் பார்ப்பனர்களுக்கு மட்டும் என்ற வரையறை, நாயக்க மன்னர் ஆண்ட இடைக்காலத்திலும் நிலவியது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் ஓரளவு வசதியானவர்களின் பிள்ளைகள் மட்டும் சேர்ந்து எழுதப் படிக்க அறிந்தனர். பெண் குழந்தைக் கல்வி என்பது நடைமுறையில் இல்லை. சென்னை மாநகரில் 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு நிறுவிய சென்னைப் பல்கலைக்கழகம், தென்னிந்தியாவில் உயர் கல்விக்கு வழிவகுத்தது. பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினர் மட்டும்தான் ஆங்கிலேயர் நிறுவிய பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் பயின்று அரசாங்கத்தில் உயர் பதவியில் சேர்ந்து அதிகாரம் செலுத்தினர். 1912 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தாசில்தார், சிரஸ்தார், மாவட்ட முன்சீப், துணை ஆட்சியர், சார் நீதிபதி போன்ற உயர் பதவிகளில் 71% பார்ப்பனர்கள்தான். 1901 ஆண்டு ஆங்கிலேய அரசு எடுத்த கணக்கெடுப்பின்படி 1% மக்கள்தான் சென்னை மாகாணத்தில் கல்வி கற்றவர்கள் என்ற புள்ளிவிவரம், அன்றைய கல்விச் சூழலுக்கு எடுத்துக்காட்டு. இந்த நிலைமையை மாற்றியமைத்து சாதி, மதம், பால் வேறுபாடு இல்லாமல் எல்லோரும் கல்வி கற்றிடலாம் என்ற நிலையை உருவாக்கியதில் நீதிக் கட்சியின் பணிகள், தனித்துவமானவை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இன்றுவரையிலும் குழந்தைகளுக்குக் கல்வியையும் உணவையும் வழங்கிட முயன்ற/ முயலுகிற தமிழக ஆட்சியாளர்களின் பணிகள், தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பிரிட்டிஷாரின் காலனியாதிக்க ஆட்சியின்போது, ஆங்கிலேயக் கல்வியைக் கற்று, அரசாங்க உயர்பதவிகளில் பார்ப்பனர்கள் முதன்மை இடம் வகித்தனர். அதேவேளையில் ஆயிரமாண்டுகளாக மனு தரும சாஸ்திரம் என்ற பெயரில் பிறப்பு, பால் அடிப்படையில் ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் கற்பித்து, சமூக அடுக்கில் பார்ப்பனர் வகித்திருந்த உச்ச நிலை, காலனியாதிக்க ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களினால் மெல்ல ஆட்டங்கண்டது.

இந்தியாவில் பிரிட்டிஷ் காலனிய அரசின் திருத்தப்பட்ட சாசனச் சட்டம் (1833), 87 ஆ வது பிரிவின்படி ‘‘இந்தியாவில் வாழும் எந்தவொரு குடிமகனும் அவனது மதம், பிறப்பிடம், வம்சம், வர்ணம் என்னும் எந்தவொரு காரணத்தாலுமோ அன்றி அவையாவற்றானுமோ கம்பெனியில் வேலை மேற்கொள்வதைத் தடுக்கக்கூடாது” என்று வேலை வாய்ப்பைப் பொதுவாக்கியது. இந்தச் சட்டம் பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சாதியினர் பரம்பரைத் தொழிலை மட்டும் செய்ய வேண்டுமென்ற மனு தருமக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது. ஆயிரமாண்டுகளாக மன்னர்களைச் சார்ந்து பிரம்மதேயம் பெற்று, கிராமப்புற நில உற்பத்தியைக் கொள்ளையடித்ததுடன், வேதக் கல்வி மூலம் சமஸ்கிருத மொழியை முன்னிறுத்தி, அதிகாரத்தில் வீற்றிருந்த பார்ப்பனர்களின் சமூக உச்சநிலை, சிதலமடையத் தொடங்கியது. இன்னொருபுறம் பார்பபனர்கள், ஆங்கிலேயர் அமல்படுத்திய பெண்கள் உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தல், குழந்தைத் திருமணம் ஒழிப்பு போன்ற சமூகச் சீர்திருத்தங்கள், வருணாசிரம முறையை ஒழித்துவிடுமென்று கருதிப் பயந்தனர். வருணாசிரம முறையில் ஏற்பட்ட சீர்திருத்தங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாத பார்ப்பனர்கள்தான் தொடக்கத்தில் பிரிட்டிஷாரின் காலனிய அரசியலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர். இந்திய விடுதலைப் போராட்டப் பின்புலத்தில் உயர்சாதி இந்துக்களின் நலன்கள் பொதிந்திருப்பதன் வெளிப்பாடுதான் தீவிரவாதம், மிதவாதம் போன்ற பேச்சுகள்.

ஆங்கிலேயரைத் துப்பாக்கி புல்லட்கள், வெடிகுண்டுகள்மூலம் விரட்டிட முயன்ற வாஞ்சிநாதன் போன்ற பார்ப்பனர்கள், ஒருவகையில் வருணா
சிரமத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட முயன்றனர். ஆங்கிலேயக் கலெக்டரான ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் இருந்த காகிதத்தில், வருணாசிரமத்தின் வீழ்ச்சியைப் பொறுக்க முடியாமல்தான், ஆங்கிலேயனைக் கொலை செய்ததாக ஒப்புதல் தந்திருக்கிறார். ‘‘ஆங்கிலேய சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு அழியாத சநாதன தர்மத்தைக் காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்…” என்ற கடித வாசகம் முக்கியமானது.

வைதிக சநாதனம்தான் முதன்மையான எதிரி என்று அறிவித்து, திராவிட அரசியலை முன்னிறுத்திய நீதிக் கட்சியினர் திராவிட அரசியல், அன்றைய காலகட்டத்தின் தேவை. இன்றளவும் வேதம் ஓதுதல், ஆகம விதிகள் என்ற பெயரில் பார்ப்பனர் சாதிய அடுக்கில் உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் துணையாகக் கொண்டிருப்பது வருணாசிரமத்தின் செல்வாக்கு அன்றி வேறு என்ன? இன்றைக்குத் தமிழர்களின் அடையாள அரசியலை முன்னிறுத்தித் ‘திராவிட மாடல்’ என்று முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது பெருமிதத்துடன் அறிவிப்பது, வைதிக சநாதனத்தின் மேலாதிக்கத்தையும் அதிகாரத்தையும் அரசியல்ரீதியில் எதிர்ப்பதன் வெளிப்பாடுதான்.

அறிவு என்பது எழுத்துமூலம் மட்டும் உருவாவது என்ற பொதுப்புத்தி ஏற்புடையதல்ல. பண்டைத் தமிழர் கட்டடம், மருத்துவம், சிற்பம், வானியல், உணவு, கால்நடை வளர்ப்பு, மர வேலை எனப் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களுடைய மரபுரீதியிலான தொழில்நுட்ப அறிவு, வாய்மொழி மூலமாக அடுத்த தலைமுறைக்குப் பரவித் தொடர்ந்தது. ஆனால் பிரிட்டிஷார் இந்தியாவைக் காலனியாதிக்க நாடாக மாற்றி ஆண்டபோது ஐரோப்பியரின் மெய்காண் முறைமையானது, எழுதப் படிக்கத் தெரியாதவர்களை முட்டாள் எனக் கேவலமாகக் கருதியது. எழுத்தினை அறியாதவனால் அரிய திறமையுடையவனாக இருக்க முடியும் என்பது நடைமுறை உணர்த்தும் பாடமாகும். இத்தகைய அறிவினைத் தொகுக்கப்படாத அறிவு எனக் குறிப்பிட முடியும். பொதுவாக மரபு வழியில் முன்னோரிடமிருந்து கற்ற அறிவு என்பது செய்திறனாகவும் கல்வியாகவும் பரிணமிக்கின்றது.

பண்டைக்காலத்தில் ஜைனத் துறவியரின் இருப்பிடமான பள்ளிகளில் கல்வி கற்றிட வந்த மாணவர்களுக்காக ஜைனத் துறவியர், வீடுவீடாகச் சென்று அரிசியைத் தானமாகப் பெற்று மாணவர்களின் பசியாற உணவிட்டதை அறிய முடிகிறது. அந்த மரபின் தொடர்ச்சி, பின்னர் வழக்கொழிந்தது. ஆங்கிலேயர் ஆங்கிலேயக் கல்விமுறைக்கு முக்கியத்துவம் அளித்தாலும் மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. விளிம்புநிலையினரின் குழந்தைகள் கல்வி கற்றிட வாய்ப்பு இல்லாத சூழலில், தங்களுடைய தந்தையார் செய்த குலத்தொழிலைச் செய்திடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய வறுமை, பஞ்சம், பசி, சாதிய ஒடுக்குமுறை காரணமாக உழைக்கும் மக்கள் இலங்கை, மலேஷியா, மொரீஷியஸ், டச்சுக் கயானா, பர்மா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து அங்கு கடின உழைப்பில் ஈடுபட்டு மடிந்தனர். தமிழ்நாட்டில் பெரும்பான்மைத் தமிழர்கள் கல்வியறிவு இல்லாத சூழலில் வைதிக சநாதனத்தின் ஆதிக்கம் வலுவாக விளங்கியது. இத்தகைய சூழலில் 1920 ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய நீதிக் கட்சியின் ஆட்சியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. நீதிக் கட்சியின் கொள்கைகள், பின்னர் திராவிடர் கழகத்தின் செயல்முறைகளாக வடிவெடுத்தன. இன்றைக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள ‘திராவிட மாடல்’ என்ற கருத்தியலுக்குப் பின்னர் நீதிக் கட்சியின் கொள்கைகள் பொதிந்துள்ளன. பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பள்ளிகளில் நண்பகல் உணவு வழங்கிடும் திட்டம், நீதிக் கட்சியினர் கண்டறிந்த சமூக நலத்திட்டம் ஆகும்.

1920 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியில்தான் பள்ளிக்கூடத்தில் மதிய உணவுத் திட்டம் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற நேரடித் தேர்தலில் வெற்றி பெற்றுச் சென்னை நகரின் முதல் மேயரான சர். பிட்டி தியாகராயர், பள்ளிக்கூடத்தில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். சென்னை நகராட்சிக் குழுவின் அனுமதியுடன் முதற்கட்டமாக சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் இந்தத் திட்டம் ஓரப்பாளையம், மீர்சாகிப் பேட்டை, சேத்துப்பட்டு போன்ற இடங்களில் செயல்பட்ட பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ஒரு பெற்றோருக்கு ஏழெட்டுக் குழந்தைகள் சாதாரணமாக இருந்தன. போதிய உணவு இல்லாமல் சிறுவர்கள் ஏதாவது வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் நிலவியது. இந்நிலையில் பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றபோது, வீட்டில் தனித்திருந்த குழந்தைகளுக்குப் பள்ளியில் மதிய உணவு கிடைக்கும் என்ற காரணத்தினால் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இதனால் பள்ளிக்கு வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்தது. வறுமை காரணமாகப் பள்ளிக்குச் செல்ல முடியாமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டும் நீதிக் கட்சியினரால் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் பார்ப்பனச் சிறுவர்களுடன் பார்ப்பனர் அல்லாத சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதை உயர்சாதியினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “நிதிச்செலவு அதிகரிக்கிறது, நிதி நிலை அறிக்கையில் துண்டு விழுகிறது” என்று அன்று மாநகராட்சியில் முக்கிய நிர்வாகப் பொறுப்பில் இருந்த பார்ப்பனர்களான உயர் அலுவலர்கள், மதிய உணவுத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர். எனவே மதிய உணவுத் திட்டம் 1 ஏப்ரல் 1925 அன்று நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளியில் சேர்ந்து படித்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமானஅளவில் குறைந்தது. நண்பகல் உணவுத் திட்டத்தை நிறுத்தியது தொடர்பாக சென்னை நகராட்சியில் கடுமையான விவாதம் நடந்தது.

நீதிக்கட்சித் தலைவர்களின் கடுமையான முயற்சிகளின் விளைவாக ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளியில் மீண்டும் உணவு கிடைத்தது. நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் அறிமுகமான நண்பகல் உணவுத் திட்டத்தின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்தான் 1956 ஆம் ஆண்டில் முதலமைச்சர் கு.காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டமாகும். நீதிக்கட்சி அறிமுகப்படுத்திய சமூக நலத்திட்டத்தின் நீட்சிதான் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ள பள்ளி மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டித் திட்டம். அந்தத் திட்டத்தைத் திராவிட மாடல் என்று குறிப்பிடுவது பொருத்தமானது.

நீதிக் கட்சியின் தோற்றமும் செயல்பாடுகளும் தென்னிந்திய வரலாற்றில் முக்கியமாவை. சாதியரீதியில் தாழ்த்தப்பட்டவர்கள், விளிம்புநிலையினரின் முன்னேற்றத்திற்கான இயக்கம் தேவை என்ற நிலையில் உருவானதுதான் நீதிக் கட்சி. அன்றைய காலகட்டத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளால் பிளவுண்டிருந்த சமூகத்தில் உயர்சாதியினருக்கு மட்டுமே கல்வி, அரசு வேலை என்ற நிலை நிலவியது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான உயர்சாதியினர், வைதிக சநாதனம் ஆங்கிலேயக் காலனியாதிக்க அரசினால் சிதிலமாக்கப்படுவதை எதிர்த்தனர். அவர்கள் சாதியரீதியில் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையும் சமூக நீதியும் குறித்துச் சிந்திக்கத் தயாராக இல்லை. பொதுவாக உயர்சாதியினர் தனது சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வந்தனர். இந்தச் சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடிய வரலாற்றுப் பின்புலமுடையது நீதிக் கட்சி. 1912ஆம் ஆண்டு நடேச முதலியார் வழி நடத்த சென்னை ஐக்கியக் கழகம் தொடங்கப்பட்டது. இதுவே பின்னர் ” திராவிட சங்கம்” என பெயர் மாறியது.

1916ஆம் ஆண்டு நடேச முதலியார், டாக்டர் டி.எம். நாயர், பிட்டி தியாகராயர் கூடி அவ்வபோது விவாதம் நடத்தினர். பிறகு தங்களின் கொள்கைகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்திட பத்திரிகைகளைத் தொடங்கினர். தமிழ்ப் பத்திரிகைக்குத் ‘திராவிடம்’ எனவும், ஆங்கிலப் பத்திரிகைக்கு ‘ஜஸ்டிஸ்’ எனவும் பெயரிட்டனர். பிறகு, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் இணைக்கப்பட்டு, நீதிக் கட்சியாக மாறியது. பார்ப்பனர் அல்லாதவர்களுக்கான கொள்கை அறிக்கையை பிட்டி தியாகராயர் வெளியிட்டார். பார்ப்பனர் அல்லாதவர்கள் அதிக சதவீதம் இருந்தாலும் பார்ப்பனர்களுக்குத்தான் அரசு வேலைகள் கிடைப்பதாகவும், பிற சலுகைகள் கிடைப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குப் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கல்வியின்மூலம் பார்ப்பனர் அல்லாதவர்களின் சமூக நிலையை உயர்த்தி விடலாம் என்ற நோக்கம், நீதிக் கட்சித் தலைவர்களிடம் இருந்தது.

நீதிக் கட்சியினரின் தொடர்ச்சியான பிரச்சாரத்தி னால் பொதுமக்கள் நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்தனர். கல்வி என்பது உயர்சாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலையை மாற்றி அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்கூடம் சென்று படிக்கலாம் என்று சட்டம் இயற்றப்பட்டது, நீதிக்கட்சி ஆட்சியில்தான். பள்ளிக்கூடத்தில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அனைத்து மக்களாலும் செலுத்த முடியுமா என்று ஆலோசித்துக் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு வரும்போது உயர்சாதியினரால் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவார்களா என்று யோசித்த நீதிக் கட்சி, அந்தக் குழந்தைகள் எளிதில் வந்து செல்லும் இடங்களில் பள்ளிக்கூடங்களை நிறுவியது.

நீதிக் கட்சியின் ஆட்சியின்போது 1923ஆம் ஆண்டு தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி என்ற சட்டம் இயற்றப்பட்டது; 1921 முதல் 1928 வரை 19,095 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம் நீதிக்கட்சி கல்விக்கு அளித்த முக்கியத்துவம் புலனாகிறது. தமிழகத்தில் இன்றுவரை கல்லூரிகளில் வழங்கப்படும் உதவித் தொகைகளை அறிமுகம் செய்தது நீதிக்கட்சிதான். நீதிக் கட்சியின் போராட்டங்களுக்குப் பிறகு தமிழில் படித்துப் பட்டம் பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. பள்ளர், பறையர் என்று அழைக்கப்பட்டவர்கள் இனிமேல் ஆதி திராவிடர் என்றே அழைக்கப்படுவார்கள் என்று 1925ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாகப் பொதுப் பள்ளிகளில் இதற்கு முன்னர் வரை ஆதிதிராவிடர்கள் படிக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. அதை உடைத்தெறிந்து அனைவரும் பள்ளிக்கூடங்களில் படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியது நீதிக்கட்சி. இதனால் அந்த ஆண்டு பள்ளிகளில் ஆதிதிராவிடர்கள் பயில்வது கணிசமாக உயர்ந்தது. ஆதிதிராவிட சாதியைச் சேர்ந்த பிள்ளைகளைத் தனியாக வகுப்பறையில் வைத்துப் பாடம் சொல்லித்தர வேண்டும் என்று பல்வேறு பக்கங்களில் இருந்து நீதிக் கட்சிக்கு நெருக்கடி தரப்பட்டது. இருப்பினும் அதனை ஏற்காத நீதிக்கட்சி அனைவரும் ஒரே இடத்தில்தான் கல்வி பயில வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தது.

முதல்வர் காமராஜரின் மதிய உணவுத் திட்டம்

இந்தியாவில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜர் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பள்ளிக் கல்வித் துறையில் இன்று தமிழகம் அடைந்திருக்கும் முதன்மை இடத்துக்கு வித்திட்ட ஆட்சியாளர்களில் முதன்மையானவர், காமராஜர். மதிய உணவு, இலவசச் சீருடை, பள்ளிச் சீரமைப்பு இயக்கம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்களை காமராஜர் முன்னெடுத்தபோது, அவருடன் ஒன்பது ஆண்டுகள் உறுதுணையாக நின்று அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் அப்போதைய கல்வித் துறை இயக்குநரான நெ.து.சுந்தரவடிவேலு. அவர், ‘நினைவு அலைகள்’ என்ற தலைப்பில் எழுதிய தன்வரலாறு, மூன்று பகுதிகளாக 2,000-க்கும் கூடுதலான பக்கங்களில் வெளிவந்துள்ளது. அந்த நூலில் காமராஜரின் கல்விச் செயல்பாடுகள் பற்றியும் மதிய உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்திட பட்ட பாடுகளும் இடம் பெற்றுள்ளன.

சுந்தரவடிவேலு கல்வித்துறை இயக்குநராகப் பதவியேற்றுக்கொள்ளும் முன்பு தியாகராயர் இல்லத்தில் முதலமைச்சர் காமராஜரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது காமராஜர் அவரிடம் தாம் மேற்கொள்ளவிருக்கும் கல்வித் திட்டங்களுக்கான முன்னேற்பாடுகளைச் சொன்னார். ‘‘பள்ளி இறுதி வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும். மாணவர்களின் வீட்டுக்கு அருகில் பள்ளிகள் அமைய வேண்டும். தற்சமயம் இருக்கிற வாய்ப்புகளைக்கொண்டு அவற்றைச் செய்திட வேண்டும்.”

காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்னையிலிருந்து காரில் சென்றுகொண்டி ருந்தார். காரில் அவருடன் உதவியாளரும் இருந்தார். பகல் 11 மணி அளவில், கார் கோவில்பட்டி அருகே வரும்போது, வழியில் 12 வயதுச் சிறுவன் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட காமராஜர் டிரைவரிடம் காரை‘நிறுத்துப்பா’ என்று கூறினார். பின்னர் அந்தச் சிறுவன் அருகே சென்று ‘‘தம்பி, நீ படிக்க வேண்டிய வயதில் மாடு மேய்க்கிறாயே, பள்ளிக்கூடம் போக வேண்டியதுதானே” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன் “பள்ளிக்கூடம் போனால் கஞ்சி கிடைக்குமா?” என்று அவரிடம் கேட்டான். அந்தக் கேள்வி காமராஜரின் மனதைப் பாதித்தது. “அப்ப நீ படிப்பதற்குக் கஞ்சிதான் தடையா…? சரி, மதியவேளை கஞ்சி கொடுத்தால் நீ பள்ளிக்கூடம் போவாயா?” என்று கேட்டார். அதற்குச் சிறுவன் உற்சாகத்துடன் ‘‘ஓ போவேனே” என்று பதில் கூறினான். அந்தச் சம்பவம் கல்வியில் பெரிதும் அக்கறை கொண்டிருந்த காமராஜருக்கு ஏழை மாணவர்களைப் பள்ளியில் சேர்த்திட மதிய உணவுத் திட்டத்தைத் தமிழ்நாடு முழுக்க எப்படியாவது அமல்படுத்த வேண்டும் என்று யோசனைக்கு வழி வகுத்தது.

1955 மார்ச் 27 அன்று சென்னை பூங்கா நகரில் சென்னை ராஜ்ஜிய தொடக்கப்பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய நிர்வாகிகளின் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னை மாநகராட்சிக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்த அனுபவம் பற்றி சுந்தரவடிவேலுவிடம் உரையாடினார் காமராஜர். மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு போடுவதால் மாணவர்களின் வருகை அதிகமாகிறது என்ற தகவலைச் சொன்னார் சுந்தர
வடிவேலு. காமராஜரிடமிருந்து எழுந்த கேள்வி ‘இப்போதுள்ள நிலையில் எல்லா ஏழைப் பிள்ளைகளுக்கும் இலவச உணவு கொடுக்கத் தொடங்கினால் எவ்வளவு செலவாகும்?’ என்பதுதான். அந்தக் கூட்டத்திலேயே தனியார் பள்ளிகள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மாநிலம் முழுவதும் மதிய உணவு கொடுக்கும்வகையில் திட்டம் தீட்டுமாறு சுந்தர வடிவேலுக்கு ஆணையிட்டார். பயனுள்ள கல்வித் திட்டங்களை எப்படியாவது செயல்படுத்திவிட வேண்டும் என்பதுதான் காமராஜரின் கனவாக இருந்தது.

தமிழக அதிகாரிகள் மட்டுமல்ல, ஒன்றிய அரசின் அதிகாரிகளின் எதிப்புக்கும் இடையில்தான் மதிய உணவுத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது.அத்திட்டத்தைத் தள்ளிவைக்கும்படி ஒன்றிய அரசு அதிகாரிகள் சொன்னதை காமராஜர் ஏற்றுக்
கொள்ளவில்லை. ‘மதிய உணவுத் திட்டத்தில் மட்டும் கைவைக்காதீர்கள்’ என்று அத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுவந்தார். 1956-57 வரவு – செலவுத் திட்டத்தில் மதிய உணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வசதி படைத்தவர்களைக்கொண்டு பள்ளிகளில் அத்திட்டத்தை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுத்தார். ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்’ என்று பாடிய பாரதி பிறந்த ஊரான எட்டயபுரத்தில் அவர் படித்த பள்ளியில் 13.7.1956 அன்று மதிய உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. காமராஜர், எட்டயபுரத்தில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தபோது, எட்டாம் வகுப்பு வரை கட்டாயம் படிக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அரசமைப்பு நிர்ணய அவையில் அவரும் ஓர் உறுப்பினராக இருந்தவர். அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் ஒன்றான கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தியதில் அவர்தான் இந்தியாவின் முன்னோடி.

நிதி அமைச்சரின் ஒப்புதலைப் பெற முடியாமல் போகவே சட்டசபையில் இந்த விவாதத்தைத் தொடங்கினார், காமராஜர். அமைச்சர்களும் இத்திட்டத்தை குறித்து எதிர்மறைக் கருத்துகளையே பதிவு செய்தனர். தமிழகத்தின் தொடக்கப் பள்ளிகளில் மட்டும் 16 லட்சம் மாணவர்கள் பயின்றனர். அவர்களுக்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய் செலவாகும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் செலவுத் தொகை அதிகமாகும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும், மதிய உணவுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு விட்டால் அரசின் மற்ற திட்டங்களைச் செயல்படுத்த முடியாது என்று அனைவரும் கைவிடவே காமராஜர் சோர்வடைந்தார். ஆனால் மதிய உணவுத் திட்ட கனவு மட்டும் அவரைவிட்டுப் போகவே இல்லை. தமிழ்நாட்டில் பெற்றோர்கள் பெரும்பாலும் தங்களது குழந்தைகளுக்கு சாப்பாடு போட முடியாத இயலாமையில் பிள்ளைகளின் படிப்பையே நிறுத்தி விடுகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. பசிக் கொடுமையால் ஒரு தலைமுறை படிக்காமல் இருப்பது ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தடுத்து விடும் என்று உணர்ந்த காமராஜர் எப்படியாவது மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவினைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்.

காமராஜர், பொதுமக்களின் ஆதரவோடு இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற முடிவெடுத்தார். அதனால் பொது மக்களின் நிதி உதவியைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். 1955 இல் சென்னையில் ஆசிரியர் மாநாட்டில் உரை ஆற்றிய காமராஜர், மாணவர்களுக்கு உணவு வழங்கிடப் பிச்சை எடுக்கவும் தயாராக இருக்கிறேன். இத்திட்டத்திற்கு உதவுங்கள் என்று பேசினார். இந்தச் செய்தி செவி வழியாகக் கிராம மக்களைச் சென்று அடைந்தது. காமராஜரின் பேச்சினால் உற்சாகமடைந்த மக்கள் அவரைக் கருணை உள்ளம்கொண்ட தலைவராக அறிந்தனர்; தாங்களும் பங்கு பெற வேண்டும் என்று முடிவெடுத்தனர். நாகலாபுரம் கிராம மக்கள் மாணவர்களின் மதிய உணவு திட்டத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொடுத்து முதலில் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். அப்பொழுது தமிழக அரசின் நிதித் துறையில் இருந்து இத்திட்டத்திற்கு எந்த ஒதுக்கீடும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் பல கிராமங்களில் இருந்து உணவுப் பொருட்கள், நிதி உதவி என கிடைக்கப்பெற்று மதிய உணவுத் திட்டம் வெற்றிப் பாதையில் சென்றது. சுமார் 4,000 ஆயிரம் பள்ளிகளில் மக்களின் கொடை
யால் கிடைத்த பொருட்களைக்கொண்டு இலவசமாக மதிய உணவினை அளித்திட வழி வகுத்தார், காமராஜர். அப்பொழுது காமராஜர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது மக்கள் இத்திட்டத்திற்குப் பெருமளவு உதவி செய்கின்றனர் என்றாலும் அவர்களின் தலையிலேயே அனைத்துச் சுமைகளையும் வைக்கக்கூடாது. மக்களை மட்டுமே நம்பி இருந்தால் ஒருவேளை இத்திட்டம் தோல்வி அடையவும் வாய்ப்பு இருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார். மதிய உணவுத் திட்டத்திற்கு இனிமேல் 60% நிதி உதவியினை மாநில அரசு கொடுக்கும், 40 % நிதியை மக்கள் கொடுத்தால் போதுமானது என்று அறிவித்தார்.

தமிழக மாநில முதலமைச்சரான காமராசர் ஆட்சி பார்ப்பனரல்லாதாரருக்குக் கல்வியின் பொற்காலமாக விளங்கியது. ‘எல்லார்க்கும் கல்வி’, ‘எல்லாருக்கும் பதவியில் உரிய பங்கு’ என்பதில் காமராசர், பெரியாரைப் போல உறுதியாக இருந்தார். பெரியாரின் கருத்துகள் காமராசரின் கல்வித் திட்டங்களில் பொதிந்துள்ளன. அவருடைய ஆட்சிக்காலத்தில் 16,000 தொடக்கப் பள்ளிகள், 30,000 ஆகப் பெருகின. அவற்றில் படிப்போர்க்கு இலவசக் கல்வி, இலவச உணவு, இலவச சீருடை, இலவசப் பாட நூல்கள் உதவியோடு பதினைந்து லட்சம் குழந்தைகளுக்கு நண்பகல் உணவு பள்ளியில் அளிக்கப்பட்டது. இதனால் பள்ளிகளில் படிப்போர் எண்ணிக்கை ஏறத்தாழ 20 லட்சங்களிலிருந்து 48 லட்சங்களாகப் பெருகியது. புதிதாக 1,700-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளிகளில் 3.86 லட்சம் மாணவ மாணவியர் படித்தனர் என்ற நிலை மாறி 13 லட்சம் பேர் படிக்கும் நிலை, ஏறபட்டது.

‘தகுதி, திறமையைப் பாராமல், சாதி அடிப்படையில் இடங்களை ஒதுக்குவதால், தரம் குறைந்துவிடும்’ என்று, உயர் சாதியினர் கத்திக்கொண்டு இருப்பது, இன்றளவும் தொடர்கின்றது. காமராசர் முதலமைச்சராக இருந்தபோது தகுதி, திறமை பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டு ஆத்திரமடைந்தார். அவர் ‘‘எந்தத் தாழ்த்தப்பட்ட டாக்டர் தவறாக ஊசி போட்டதால், நோயாளி மாண்டுவிட்டார் என்று காட்டுங்கள். எந்தத் தாழ்த்தப்பட்ட பொறியியல் அதிகாரி கட்டிய முறையால் எந்தக் கட்டிடம் இடிந்து விழுந்து விட்டது என்று காட்டுங்கள் பார்க்கலாம். எல்லோருக்கும் அறிவு, திறமை இருக்கிறது; வாய்ப்புக் கிடைத்தால் திறமை வளர்கிறது” என்று நெற்றியடியாகப் பதில் அளித்தார்.

முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டம்

முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழகக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டில் மதிய உணவின் முக்கியத்துவத்தைத் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தின்மூலம் நன்கு அறிந்திருந்தார். அவர் சிறுவனாக இருந்தபோது பசியினால் வாடிய சூழலில், பக்கத்து வீட்டுப் பெண் கொடுத்த கொஞ்ச அரிசியைக்கொண்டு கஞ்சி காய்ச்சிக் குடித்துப் பசியைப் போக்கிக்கொண்ட தகவலை எம்.ஜி.ஆர். மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்
துள்ளார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளி மாணவர்களின் பசிக் கொடுமையைப் போக்கும்வகையில் சிறப்புத் திட்டம் தீட்ட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். அப்போது அவர் மனதில் உதித்ததுதான் சத்துணவுத் திட்டம்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, ஏழை மாணவர்களுக்குச் சத்தான காய்கறிகளைக் கொண்டு சுகாதாரமான முறையில் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார், எம்.ஜி.ஆர். அவர் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு சத்துணவுத் திட்டத்துக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டார். சுமார் 100 கோடி நிதி ஒதுக்கீட்டில் இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. அவருடைய அமைச்சரவையில் இருந்த பலரும் இத்திட்டத்தை வரவேற்கவில்லை. அரசுக்கு நிதிச்சுமையை அதிகரிக்கும் என்று கூறியவர்களின் ஆலோசனைகளைப் புறக்கணித்துத் திட்டத்தை அமல்படுத்தினார். ஊட்டச்சத்துக் குறைபாட்டால், பாதிக்கப்பட்ட 68 லட்சம் குழந்தைகளுக்காக 1982, ஜூலை 1 அன்று எம்.ஜி.ஆர். மேம்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தைத் சத்துணவுத் திட்டமாக மாற்றினார்.

எம்.ஜி.ஆர். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் சிறு வயதில் இருக்கும் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும் இத்திட்டம் பயன் அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனால் 2-5 வயதுடைய குழந்தைகளுக்கு நல வாழ்வு மையங்களில் சத்துணவு அளிக்கப்பட்டது.

முதல்வர் கலைஞர் ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவு

கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் மதிய உணவுத் திட்டத்தில் பல்வேறு விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டார். அவர், சத்துணவுத் திட்டத்தில் முதல்முறையாக மாதத்தில் இருமுறை முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். பருப்பு, காய்கறி மட்டுமே வழங்கப்பட்ட திட்டத்தில் முட்டை என்பது வரவேற்பைப் பெற்றது. பின்பு முட்டையை வாரம் ஒரு முறை என விரிவுபடுத்தினார், கலைஞர். 2008 ஆம் ஆண்டில் முட்டை சாப்பிடாத குழந்தைகளைக் கவனத்தில்கொண்டு வாழைப்பழம் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்திற்கு ரூ.1.40 கோடி கூடுதல் செலவு பிடிக்கும் என்றபோதிலும் கலைஞர் திறமையாகச் செயல்படுத்தினார். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது கர்ப்பிணிப் பெண்களுக்குச் சத்துணவு மாவு, மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்குச் சத்துணவு மாவு, வாரம் ஒரு முறை முட்டை, மதிய உணவு 100 கிராம் எடையுள்ள கீரை, காய்கறிகள் போன்றவை கலைஞரின் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காலைச் சிற்றுண்டித் திட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்த அரசாணை, வரலாற்றுச் சிறப்புடையது. காலை உணவுத் திட்டத்தின்மூலம் 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ரவா, சேமியா, அரிசி, கோதுமை ரவை உப்புமா, கிச்சடி, ரவா பொங்கல், வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், ரவா கேசரி, சேமியா கேசரி வழங்கப்படுகின்றன. அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி, கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் விளிம்புநிலையினரின் குழந்தைகளுடைய வாழ்க்கையில் நிச்சயம் ஒளியேற்றும். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை, வசதியற்ற குடும்பங்களில் இருந்து பள்ளிக்கூடம் வருகிற குழந்தைகளின்மீதான அவருடைய அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. ‘‘நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டபோதிலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சமூகநீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டம்தான் இந்தக் காலை உணவுத்திட்டம். வயிற்றுக்கு நிறைவும் – செவிக்கு அறிவும் ஊட்டுபவையாக பள்ளிச்சாலைகளை மாற்றும் முயற்சி இது. லட்சக்கணக்கான மாணவக் கண்மணிகளின் மனம் குளிர நான் காரணம் ஆகிறேன் என்பதே எனக்கு ஏற்பட்டுள்ள பெருமகிழ்ச்சி.

திராவிட இயக்கக் கொள்கைகளில் உணர்வுப்பூர்வ
மாகத் தோய்ந்துபோன எனக்கு, ஏழைக் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் ஒரு கனவுத் திட்டம்! முதலமைச்சராகப் பெருமிதம் தரும் திட்டம். மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள், மலைப்பகுதிகள் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதற்கட்டமாக இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்குச் சமைப்பதில் எடுத்துக்கொள்கிற சிரத்தையோடு, தங்கள் அன்பைக் கொட்டி, தூய்மையுடன் உணவைப்பரிமாற – களப்பணியாளர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திட்டம், தனது நோக்கத்தில் மகத்தான வெற்றி அடைவதை மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டி உறுதிப்படுத்த வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட கோடானுகோடி மக்களுக்குக் கல்வி வாய்ப்பை உருவாக்கித் தருவதும், கல்வியைப் பரவலாக்குவதன் மூலம் அதிகாரத்தில் அடித்தட்டு மக்களை அமர வைப்பதும் திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகள். அந்தக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைத் திராவிட இயக்கம் கண்டுள்ளது என்பது தமிழ்நாடு பெருமைப்படத்தக்க ஒன்று!” முதல்வரின் அறிக்கையில் நீதிக் கட்சித் தலைவர் பிட்டி தியாகராயரின் குரல் ஒலிப்பதை அவதானிக்க முடிகிறது.

திராவிட மாடல் உணவுத் திட்டத்தின் பலன்கள்

  •  பள்ளிக்கூட மாணவர்களுக்கு உணவு வழங்கிடும் திட்டம், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்கிறது.
  •  பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை, குறிப்பாகப் பெண் குழந்தைகளின் சேர்க்கையை உணவுத் திட்டம் அதிகரிக்கச் செய்கிறது,
  •  வகுப்பறையில் பசியுடன் வாடிடும் நிலையை உணவு வழங்கும் திட்டம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
  •  சமூகமயமாக்கல், சாதி, ஒடுக்கப்பட்ட சமூக வர்க்கம் போன்றவற்றில் உணவுத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  •  எல்லா மாணவர்களும் ஓரே இடத்தில் அமர்ந்து உணவு உண்ணுவதால் சாதிய ஏற்றத்தாழ்வும், பொருளாதார வேறுபாடுகளும் அகற்றப்பட்டுள்ளன.
  •  பள்ளியிலிருந்து குழந்தைகளின் இடை நிற்றல் விகிதம் குறைந்துளளது.
  •  பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்குச் சத்தான உணவு கிடைத்திட வழி செய்யப்பட்டுள்ளது.
  •  ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள பள்ளி மாணவ-மாணவியருக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரம் மேம்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிட்டி தியாகராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம், தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் பெரும் கல்விப் புரட்சியைச் செய்துள்ளது. இதனால் தமிழகத்தின் நான்கு தலைமுறைக்கும் கூடுதலான மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். பொதுவாக அரசு, ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வரும்போது இது மக்களிடம் வாக்குப் பெறுவதற்கான முயற்சி என்று சாதாரணமாகப் பலரும் விமர்சிப்பது வழக்கம். அதுபோல எளிதாகக் கடந்துவிட முடியாத திட்டம் எனில், அது தமிழகப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு அளிப்பதுதான். எந்த அரசியல் நோக்கமும் இன்றி, நீதிக் கட்சியினரால் எளிய மக்களின் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட பள்ளி மாணவர் உணவுத்திட்டம், பருண்மையான நோக்கமுடையது; வரலாற்றுச் சிறப்புடையது. அண்மையில் திராவிட மாடல் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள காலைச் சிற்றுண்டித் திட்டம், தமிழகக் கல்வி வரலாற்றில் அடுத்த கட்ட பாய்ச்சல்; குறிப்பிடத்தக்க நிகழ்வு. தமிழகத்தில் விளிம்புநிலையினர் பட்டினியுடன் வாடியபோது, ‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று சொன்ன வள்ளலார் வழியில் சென்ற தமிழக முதல்வர்களைத் தொடர்ந்து ஸ்டாலின் பயணிக்கிறார். பள்ளிக் குழந்தைகளுக்குக் காலைச் சிற்றுண்டித் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ள முதல்வர் ஸ்டாலினின் எண்ணம், தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடு. அது, திராவிட மாடலின் தொடர்ச்சி அன்றி வேறு என்ன?

murugesapandian2011@gmail.com