‘உண்மையான கலைகள் யாவும் உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிட வந்த கருவிகள் தாம். மனிதனது அகவுணர்ச்சியை விளங்கச் செய்கிற அளவைப் பொறுத்தே கலைகளின் புறத் தோற்றங்களுக்கு மதிப்புண்டு. உயிர் ஊட்டும் கலையும் உண்டு. கொல்லும் கலையும் உண்டு. இன்றியமையாத தேவையை அடிப்படையாகக் கொண்டிராத கலைகளைப் பற்றி நாம் கண்காணிப்பாகவே இருக்கவேண்டும்.
– அண்ணல் காந்தியடிகள்
அஹிம்சையை வலியுறுத்தியவரான காந்தியின் வாழ்நாட்களில்தான் இரண்டு உலகப் போர்களும் நடந்தேறின என்று மேடையில் பேசினால் கேட்போர் ஒருவேளை ஆர்ப்பரிக்கலாம். ஆனால், சினிமாவைத் தீமை என்று வர்ணித்த காந்தி, இந்திய மொழிகளில் வெளியான முதல் மௌனப்படம் மற்றும் முதல் பேசும்படம் ஆகியவை வெளிவருவதற்கும் முன்பே சலனப்படத்தில் தோன்றிவிட்டார், பேசிவிட்டார் என்பது வர்ணனைகளற்ற உண்மைத் தகவல்கள்.
1911இன் இறுதியில் துவங்கி 1912 ஆம் ஆண்டின் துவக்கமான நாட்களில் கோபால கிருஷ்ண கோகலே தென்னாப்பிரிக்கா சென்றிருந்தபோது சலனப்படம் பிடிக்கப்பட்டது. அதில் காந்தியும் உடனிருந்தார். 1913 ஆம் ஆண்டில் தாதா சாஹேப் ஃபால்கே உருவாக்கிய ராஜா ஹரிஸ்சந்திராதான் முதல் இந்திய சினிமா.
அதுபோலவே, இந்திய மொழிகளில் வெளியான முதல் பேசும்படம் ‘ஆலம் ஆரா’. காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தின்போது போர்சாத் என்னும் ஊரில் கதரைப் பற்றி பேசியதை ஒரு அமெரிக்கர் ஒலி/ஒளிப்பதிவு செய்து செய்திப் படமாக்கினார். 1930இல் காந்தியடிகளின் முதலாவது படப்பேச்சாக அந்த செய்திப்படம் அமைந்தது என்று ஏ.கே.செட்டியார் எழுதியுள்ளார். செட்டியார் குறிப்பிடும் அந்த சலனப்படக் காட்சி இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், பதிவிட்டவர்கள் 30.4.1931 என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், காந்தியைப் பற்றி அந்தப் பதிவில் தந்துள்ள காலவரிசையும் தவறாகவே உள்ளன. உப்பு யாத்திரையின்போது பேசியது என்ற குறிப்பின்படி பார்த்தால், செட்டியார் சொல்கிற ஆண்டான 1930தான் சரி. இந்தியாவின் முதல் பேசும்படமான ஆலம் ஆரா 14.3.1931இல் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடகங்களையும், இசையையும் வரவேற்ற அவர் சினிமாவை வெறுத்தார். இத்தனைக்கும் அவர் காலத்தில் பெரும்பாலும் நாடகங்களே திரைப்படங்களாக்கப்பட்டன. ஆனால், சினிமா தொழில்நுட்பத்தை அவர் தீமை என்றார். சினிமா பண விரயம் மற்றும் நேர விரயத்திற்கானது என்றார். சூது மற்றும் தீய பழக்கங்களுக்கு வழிவகுக்கும் என்றார்.
அந்நாட்களில் உலகப்புகழ் பெற்றிருந்த நடிகர் சார்லிசாப்ளின். அவரை அறியாதவராகவே காந்தி இருந்தார். இரண்டாவது வட்ட மேசை மாநாட்டின்போது, அதுவரை சினிமாவே பார்க்காத காந்தியும் சாப்ளினும், இங்கிலாந்தில் 22.9.1931 அன்று நேரில் சந்தித்தனர். சாப்ளினை சந்திப்பதையும் அவர் தவிர்க்கவே விரும்பினார்.
சினிமா வழி கல்வி புகட்டும் வாய்ப்பையும் அவர் ஏற்க மறுத்தார். திரையரங்கு உள்ளிட்ட கொட்டகைகளின் உள்ளே அடைந்து கிடப்பதை அவர், தவிப்பாக மூச்சுத் திணறலாக குறிப்பிட்டிருக்கிறார். சிறுவயதில் அவ்வாறான ஒரு கொட்டகையினுள் அவர் தவித்ததை நினைவு கூர்ந்தார். (ஒருவேளை, காந்தி Clautrophobic ஆக இருந்திருப்பாரோ?, என்னைப் போல) எல்லா திரையரங்குகளையும் நூற்பு ஆலைகளாகவும், கைவினைப் பொருட்களுக்கான ஆலைகளாகவும் மாற்றிவிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். சினிமா பண்பாட்டுச் சீரழிவை செய்கிறது என்றார். செய்தித்தாள்களில் இடம்பெற்ற சினிமா விளம்பரங்களில் காணப்பட்ட ஆபாசங்களை சுட்டிக் காட்டிப் பேசினார்.
‘ஒருவேளை நான் இந் நாட்டின் முதன்மை அமைச்சரானால் முதலில் செய்ய விரும்புவது சினிமா கொட்டகைகளை மூடுவது. விதிவிலக்காக கல்விக்கான படங்களையும், நாட்டின் இயற்கை அழகை எடுத்துச் சொல்லும் படங்களையும் ஒருவேளை அனுமதிக்கலாம்.ஆயினும், கிராமஃபோன் தட்டுக்கள் விற்பனையைத் தடுத்து நிறுத்துவேன். அதாவது வாழ்வினைக் கொல்லும் இம் மாதிரியான நடவடிக்கைகளின்மீது கடும்வரிச்சுமையை அளிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துவேன்’ என்றார் காந்தி. பேசும்படங்களுக்கும் முன்பிருந்தே கிராமஃபோன் பயன்பாட்டில் இருந்தது. கிராமஃபோன் பாடல்கள் உள்ளிட்டவைகளில் காந்தியும், காந்தியமும்தான் முக்கியமான பாடுபொருட்கள்.
3-5-1942 ஆம் தேதியிட்ட ‘ஹரிஜன்’ இதழில் வெளியான பேட்டியில் காந்தி, தான் இதுவரை வானொலியைக் கேட்டதில்லை. சினிமா பார்த்ததில்லை என்று சொல்லியிருக்கிறார். அதுபற்றிக் கேட்டதற்கு, சினிமாவை தீயது என்று வர்ணித்தார். வானொலியைப் பற்றித் தனக்குத் தெரியாது என்றார்.
தனக்குத் தெரியாதவைகளைப் பற்றி காந்தி எப்படிக் கருத்து சொல்ல முடியும் என்ற கேள்வி அன்று எழாமல் இல்லை. இருப்புப் பாதைகள், மருத்துவமனைகளைக்கூட அவர் சிறந்த முறையில் தேவையான தீமைகளே என்றார். நாட்டின் அற ஒழுக்க நிலையில் ஓர் அங்குலத்தைக் கூட அவை கூட்டவில்லை என்றார்.
காந்தி முதன்முதலில் பார்த்தது Mission To Moscow என்ற ஹாலிவுட் படம், 1943இல் வெளியானது. காந்தி அப்படத்தை ரசிக்கவில்லை. சினிமாவைப் பார்க்காமலேயே சினிமாவை வெறுத்து கருத்துரைத்துக் கொண்டிருந்த காந்தி தன்னுடைய 74 வயதில் 2.6.1944 அன்று ராம ராஜ்யா எனும் இந்தி மொழிப் படத்தைப் பார்த்தார். அதுவும் முழுமையாக அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளிலிருந்து சுமார் 40 நிமிடங்கள் வரை மட்டுமே பார்க்க ஒப்புக் கொண்டார். எனினும், ஒன்றரை மணிநேரம் படம் பார்த்தார். காந்தி அப்படத்தை விரும்பினாரா? படத்தயாரிப்பாளர் விஜய் பட் தரும் குறிப்பின்படி படம் முடிந்த பிறகு காந்தியின் முகம் மலர்ந்திருந்தது. ராம் ராஜ்யா படத்தை ஏவி மெய்யப்ப செட்டியார் தமிழில் ஒலிபெயர்த்து பின்னர் வெளியிட்டார்.
‘தவறான காரியத்திற்கு உபயோகப்பட்டு விடக்கூடிய எந்தக் கருவியையும் நீதி முறைப்படி தீமையானதாக நாம் கருதிவிட வேண்டும்’ என்பது காந்திய வழியில் வந்த பேராசிரியர் டெலிஸ்லி பர்னஸ் என்பவரின் கருத்து. ‘பேராசை இருக்குமிடத்தில் அன்பு இருக்கும்படி செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொன்னவரும் காந்திதான். இன்றியமையாத தேவையை அடிப்படையாகக் கொண்டிராத கலைகளைப் பற்றி நாம் கண்காணிப்பாகவே இருக்கவேண்டும்’ என்ற அவரது மேற்கோளை மீண்டும் இங்கே பொருத்திப் பார்க்கலாம்.
காந்தி 1915இல் தென்னாப்பிரிக்கவிலிருந்து இந்தியா திரும்பினார். 5 ஆண்டுகளில் பெரும் தலைவராக தலையெடுத்தார். அதன் பிறகு வந்த மௌனப் படங்களிலிருந்தே காந்தியின் தாக்கம் நிகழத்துவங்கிவிட்டது. பின்னர் வந்த பேசும்படங்களிலும் காந்தியக் கொள்கைகள் கருப்பொருளாயின.
1921-இல் வெளியான ‘பக்த விதுரா’ என்னும் இந்திப் படத்தில் விதுரர் பாத்திரம் காந்தியைக் குறியீடு செய்யும் விதத்தில் அமைக்கப்
பட்டிருந்தது என்கிற காரணம் காட்டி பிரிட்டிஷ் அரசு கராச்சி மற்றும் மதராஸ் மாகாணங்களில் அப் படத்தை தடை செய்தது. அந்தப் படத்தில் விதுரர் கதராடையும், காந்தி குல்லாவும் அணிந்திருந்தார். முதன்முதலில் தடை செய்யப்பட்ட படம் என்பதாக பக்த விதுரா வரலாற்றிலும் இடம் பெற்றுவிட்டது.
புராணக் கதைகளையே எடுத்துக் கொண்டிருந்த சினிமா முதன்முதலாக சமூகப் பிரச்சினையைக் கையாளத் தொடங்கிய
போதே காந்தியின் கொள்கைகள் கருப்பொருட்களாகத் துவங்கின. 20களில் வெளியான ‘டூ அன்டச்சபிள்ஸ்’ புனா யுனைடெட் பிக்சர் சிண்டிகேட் நிறுவனத் தயாரிப்பு. இது காந்திஜியின் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட கதை. பிராமண இளைஞன் ஒருவன் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணம் புரியும் காட்சி இதில் தைரியமாக சொல்லப்பட்டிருக்கிறது என்று ‘நமது சினிமா’ நூலில் குறிப்பிட்டுள்ளார் சிவன்.
இதே காலகட்டத்தில் காந்தி கதர் கண்காட்சியை திறந்து வைத்த நிகழ்வைப் படமாக்கித் திரையிட்டுள்ளனர்.அதனுடன் இணைப்பாக பிரபல நடிகை சுலோச்சனாவின் நடனம் சேர்த்துக் காண்பிக்கப்பட்டுள்ளது. (எதற்கு எது வலு சேர்க்கும் என்பது பார்வையாளர்களைப் பொருத்தது). அயல் நாட்டவரும், யூதருமான சுலோச்சனா (சினிமாவுக்கான புனைப்பெயர்) கதர் மற்றும் கைத்தறி ஆடைகளுக்கு ஆதரவளித்தவர்.
ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்ட காந்தி 1930களின் துவக்கத்தில் நிர்மாணத்திட்டங்களை வகுத்தார். முழுமையான, முறையான தன்னாட்சி செய்வதற்கு வேண்டிய ஆற்றலைப் பெற வேண்டுமானால், இன்னின்ன விஷயங்களில் முன்னேற்றம் பெறவேண்டும் என்று 18
அம்சங்களைப் பட்டியலிட்டார். அவை மட்டுமேதானா எனில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
பிற்காலத்தில் மேலும் சிலவற்றையும் சேர்த்தார். அவர் குறிப்பிட்ட அம்சங்களில் கவனம் செலுத்திய கருப்பொருள்களையும், காட்சிகளையும் கொண்ட திரைப்படங்கள் நிறைய வரலாயின. எனவே, அந்தப் பட்டியலை ஒருமுறை பார்த்துவிடலாம்.1.சமூக ஒற்றுமை 2.தீண்டாமை ஒழிப்பு 3.கதர் 4.மதுவிலக்கு 5.கிராம கைத்தொழில்கள் 6.ஆதாரக் கல்வி 7.கிராமத் துப்புரவு 8.பிற்பட்ட மக்களுக்கு சேவை 9.மாதர் முன்னேற்றம் 10.சுகாதாரம், துப்புரவு ஆகியவற்றில் பயிற்சி 11.ஆட்சிமொழி வளர்ப்பு 12.தாய்மொழிப் பற்று 13.பொருளாதார சமத்துவம் 14.விவசாயி நலன் 15.தொழிலாளர் நலன் 16.மாணவர் நலன் 17.இயற்கை வைத்தியம் 18.குஷ்டரோக நிவாரணப் பணிகள் ஆகியன அவையாகும். இவற்றில் சிலவற்றைத் தவிர மற்றவைகட்கும் நாடு விடுதலை அடைவதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்றே பலரும் எண்ணக்கூடும். காந்தியே அப்படியானதொரு விமர்சனத்தை எழுப்பி விடையும் அளித்தார்.
எனவேதான் மேற்கண்ட நிர்மாணத் திட்டங்களை உள்ளடக்கி ‘சுதந்திரப் போரில் தமிழ் சினிமா’ என்று சினிமாவை ஒரு போர் வீரனாக்கி சான்றுகளுடன் அறந்தை நாராயணன் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். அதில் பேசும்படங்களின் காலவரிசையில் காந்தியம் இடம்பெற்ற விவரங்களை சான்றுகளுடன் விவரித்துள்ளார். 1931இல் வெளியான தென்னிந்தியாவின் முதல் பேசும்படமான காளிதாஸிலேயே கதராடையை ஆதரித்தும் காந்தியைப் போற்றியும் டி.பி.ராஜலக்ஷ்மி ஆடிப்பாடினார். 1931 துவங்கி 47 ஆம் ஆண்டு விடுதலை வரை வெளியான பேசும்படங்களை ஆராய்ந்து வரிசைப்படுத்தி எழுதியுள்ளார்.
இதுபோலவே வங்க மொழியிலும், ஹிந்தி மொழியிலும் அவற்றின் பங்கை எடுத்துரைக்கும் வண்ணம் புத்தகங்கள் வந்திருக்கும். இந்தி மொழிப் படங்களின் விவரங்களைக் கொண்ட மேலும் விரிவான புத்தகம் ஒன்று நரேந்திர கௌஷிக் என்பவரால் சிறப்பாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதன் தலைப்பு ‘Mahatma Gandhi In Cinema’. அதன் மாதிரிப் பக்கங்களை மட்டுமே இதுவரை பார்க்க முடிந்தது.அதிலிருந்த சில தகவல்கள் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ராஜாஜி அவர்களால் மதுவிலக்கு ஒன்றையே இலக்காகக் கொண்டு செயல்பட்ட ‘விமோசனம்’ என்ற இதழ் அன்று அறந்தை நாராயணனுக்குக் கிடைக்கவில்லை. இன்று சில இதழ்கள் கிடைக்கிறது. அதுபோலவே, ’விமோசனம்’ என்ற திரைப்படத்தின் பாட்டு புத்தகத்தின் சில பக்கங்கள் அவருக்குக் கிடைக்காமல் போனதால் சில விவரங்களை அளித்திருக்கவில்லை. அவையும் இன்று கிடைக்கின்றன.
காந்திக்கும் வெள்ளித்திரைக்கும் உள்ள உறவு, விலகலைப் பற்றி பார்க்கும்போது குறிப்பிடத்தகுந்த ஒன்று ஏ.கே.செட்டியார் அவர்களால் வெளியிடப்பட்ட காந்தியடிகளின் ஆவணப்படம். ‘‘மகாத்மா காந்தி – அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்’’ என்பது படத்தின் பெயர். 12 ரீல்கள் நீளம் கொண்டது. அந்தப் படத்திற்கான ஆவணங்களை கண்டங்கள் சுற்றி, அரும்பாடுபட்டு தேடித் தொகுத்தது பற்றி விரிவாக ‘அண்ணல் அடிச்சுவட்டில்’என்ற நூலில் எழுதியிருக்கிறார். ஆ.இரா.வேங்கடாசலபதியைப் பதிப்பாசிரியராகக் கொண்ட நூல் காலச்சுவடு வெளியீடு. இன்று ஒரு சிறந்த ஆவணமாகத் திகழும் இந்த நூல் வாசிக்க வேண்டிய சிறந்த ஒரு புத்தகம்.
2.8.1940-இல் காந்தி படம் சென்னையில் ராக்ஸி திரையரங்கில் திரையிடப்பட்டது. தெலுங்கு விளக்கவுரைகளுடன் கூடிய படமும் சில மாதங்களில் வெளிவந்தது. அரசியல் கொந்தளிப்பின் காரணமாகவும், அரசாங்கம் படத்தைப் பறிமுதல் செய்யக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவும் பொதுமக்களுக்குத் திரையிடுவதை நிறுத்திவிட்டோம் என்று எழுதியுள்ளார் ஏ.கே.செட்டியார். இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தியாவெங்கும் திரையிட்டது போலவே வெளிநாடுகளிலும் திரையிட்டிருக்கிறார். 1950களில் ஃபிஜித் தீவுகளில் காந்தி ஆவணப் படத்தை திரையிடும் ஏற்பாடு குறித்த அவர் கைப்பட எழுதிய கடிதங்களையும் காணமுடிகிறது.
காந்தியை முழுமையாகப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. எனினும் எல்லோரும் காந்தியை ஏற்றுக் கொண்டனர்.சமூகத்தில் காந்தி எவ்வளவு தாக்கம் செலுத்தினார் என்பதை நாம் அறிவோம். அவர் சொன்னார் என்பதற்காகப் பதவி, பணி, பட்டங்கள், சொத்துக்களை மட்டுமல்ல, உயிரையும் கொடுத்தனர். சினிமாவின்மீதான காந்தியின் வெறுப்பும் அறிவுறுத்தலும் அவர் வாழ்ந்த காலத்தில் சினிமாவை எந்த அளவுக்கு தாக்கியிருக்கும் என்பதையும் நாம் உணர முடியும்.
muthuvelsa@gmail.com