அக்கா நம்பரைத்தான் கூப்பிட்டாள்.

‘என்ன செல்வி. எப்படியிருக்கே?’ என்று அம்மாதான் எடுத்தாள்.

‘ஓம் புள்ளை போன் பண்ணுனாலும் பண்ணுவா. நீ சும்மா எடுத்துப் பேசு. பேசாம இருந்துராதெ. அவளைத் தவிர என்னை வேற எவனும் போனில கூப்பிட மாட்டான், நீ யோசிக்காண்டாம். நான் துணியை முக்கி வச்சுட்டுக் குளிச்சிட்டு வந்திருதேன். நேரம் ஆயிட்டுண்ணா நான் அப்புறம் பேசிக்கிடுதேன்னு சொல்லீட்டுப் போயிருக்கா’ என்று நீளமாக அம்மா ஒரு அடுத்த வரியைச் சொன்னாள். அம்மா சில சமயம் ஒன்றுமே பேச மாட்டாள். சில சமயங்களில் இப்படி ஒன்று விடாமல் சொல்லுவாள்.

அம்மாவுக்கு எதிராளி சொல்கிற பதில் அவசியமில்லை. செல்வி தான் எப்படி இருக்கிறேன் என்று பதில் சொல்லவே இன்னும் இல்லை. அம்மாவுடன் பேசும் போது பதிலற்றவளாகத் தன்னை வைத்துக்கொள்ள செல்வி ஏற்கனவே பழகியிருந்தாள். மலர் அக்கா கூட, ‘யம்மா, நான் என்ன சொல்லுதேன்னு ஒரு நிமிஷம் கேட்டுட்டு அப்புறம் நீ பேசேன்’ என்று அம்மாவிடம் சொல்வாள். செல்விக்கு முதலில் இருந்தே அந்தப் பழக்கம் வரவில்லை. அவளும் சரி தேவராஜும் சரி, மழை பெய்வதைப் பார்த்துக் கொண்டு நிற்பது போல அம்மா பேசுவதைக் குறுக்கே பேசாமல் கேட்டுக்கொள்வார்கள்.

செல்விக்கு ‘தம்பி என்ன பண்ணுதான். வீட்டில இருக்கானா, வேல் முருகன் வீட்டுக்குப் போயிருக்கானா?’ என்று கேட்கத் தோன்றியது. ‘தேவா இருக்கானா?’ என்று அவள் கேட்டதை அம்மா காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

தேவராஜும் வேல் முருகனும் கதிரேசன் ஆசாரி பட்டறையில் தான் மூன்று வருடங்களாக வேலைக்குப் போகிறார்கள். அல்போன்ஸ் காண்ட்ராக்டர் சம்பந்தப்பட்ட தச்சு வேலை பூராவும் கதிரேசன் பட்டறைக்குத் தான் வரும். அதனால் தேவராஜுக்கு நிரந்தரமான வேலை அங்கேதான். ஒரு நாள் கூடச் சும்மா வீட்டில் இருந்தது இல்லை.

முதலில் தேவராஜ் வைத்திருந்த டி.வி.எஸ் 50 ஐ மலர் அக்கா தான் இப்போது மதுரம் ஆஸ்பத்திரி லேபுக்குப்
போகும் போது எடுத்துப் போகிறாள். வேல் முருகன் தேவா இரண்டு பேருமே இப்போது ஸ்ப்லெண்டர் வாங்கிவிட்டார்கள். வாரத் தவணை. சனிக்கிழமைக்கு சனிக்கிழமை சம்பளம் போடும்போது கையோடு கட்டி வருவதால் பெரிய சிரமம் இல்லை..

செல்வி வேலைக்குச் சேர்ந்து இரண்டு வாரம் தான் ஆகிறது. இதற்கு முந்திய வெள்ளிக்கிழமைக்குப் பிறகு ஒரு சனி ஞாயிறு. இன்றைக்கு இன்னொரு ஞாயிறு. அம்மா போன தடவை பேசும் போதும் இதையே தான் சொன்னாள். இப்போதும் சொல்கிறாள், ‘எட்டு நாளைக்கு ஒருக்க வாரா வாரம் மறந்திராமல் தலைக்கு எண்ணெய் வச்சுத் தேய்ச்சுக் குளிச்சிரு.. “செல்விக்கு சிரிப்பு வரும். அதென்னம்மா எட்டு நாள் கணக்கு. வாரத்துக்கு ஏழுநாள் தானே” என்று கேட்டால், அதற்கு அம்மா பதில் சொல்லமாட்டாள். @ஏன் ஏழு நாளாப் போச்சு. வேணும்னா உன் பஞ்சாங்கத்தில தினசரி கூட ஞாயித்துக்கிழமைன்னு வச்சுக்கிடேன்.’ என்று கொஞ்சநேரம் அமைதியாக இருப்பாள். அதற்குள் அடுப்படியில் ஏதோ பாத்திரத்தை தட்டை வைக்கிற மாதிரி சத்தம் கேட்கும். பானையில் இருந்து தண்ணீர் கோதிக் குடித்திருப்பாள்.

‘சொன்னபடி கேளு. இல்லாவிட்டால் என்னை மாதிரிசங்கடப் படவேண்டியது இருக்கும்’ பக்கத்தில் யாரோ நின்று அவள் பட்ட சங்கடத்தைக் கேட்டுவிடுவார்கள் என்பது போல குரலைத் தணிவாக வைத்துக் கொள்வாள். இதைச் சொல்லும் போது அம்மா தன் சேலை
யைத் தனது உடலின் இடது பக்கத்தை மூடிக் கைக்கு அடியில் செருகி இருக்கலாம் என்று தோன்றியது.

அம்மாவுக்கு நான்கைந்து மாதங்களுக்கு முன் உடம்பில் ஏதோ தொந்தரவு இருந்திருக்கிறது. தனியாகத் தனியாகப் போய் உட்கார்ந்து கொண்டிருந்தாள். சமைப்பதற்குத் தம்பியை ஞாயிற்றுக்கிழமை ’கூனன் கடை’யில் மட்டன் எடுத்துவரச் சொல்வாள். இப்போது சொல்லவில்லை. தேவராஜ் வேலை முடிந்து வந்து முகம் கால் கழுவி, ‘இன்றைக்கு என்ன நடந்தது’ என்ற விபரம் எல்லாம் பேசினபடி அவனுக்குச் சாப்பாடுபண்ணுகிற வழக்கம் உடையவள் ‘ஒன்றும் சொல்லாமல் சாமி கும்பிட்டுவிட்டுப் படுத்தாள். ஒரு நாள் காலையில் இன்னும் எழுந்திருக்காத மலர் அக்காவின் தலை மாட்டில் போய் உட்கார்ந்துகொண்டு அழ ஆரம்பித்தாள்.

‘ அலங்காரத்துக்கு வந்த மாதிரி எனக்கும் என்னமோ வந்துட்டுது. உங்க அப்பா மாதிரி நானும் மூணு பேரையும் நடுத்தெருவுல விட்டுட்டுப் போயிருவம் போல’ என்று அழுதாள். அலங்காரம் என்பது அம்மாவின் அக்கா. அலங்காரம் பெரியம்மைக்கு இன்னது என்று தெரியும்போது முத்திப் போயிருந்தது. ஒரு பக்கத்தை எடுத்த பிறகும் குணமாகவில்லை. அதன் பிறகு ஏழெட்டு மாதத்தில் தவறிப் போனாள்.

அம்மாவுக்கும் அப்படி இடது கக்கம் வரை வலி இருந்திருக்கிறது. ஏதோ ஒருத்தருக்கும் தெரியாமல் அரைத்துப் பற்று எல்லாம் போட்டிருப்பாள் போல. அம்மாவின் மேலத் தெரு சினேகிதியிடம் கூட ‘பொன்னுக்குட்டி, உன் கிட்ட சங்கரன் கோவில் புத்து மண் இருக்கா? நீ அடிக்கடி தவசுக்குப் போயிட்டு வருவியே’ என்று கேட்டுப் பார்த்திருக்கிறாள். போகப் போக பொறுக்க முடியாமல் ஆகியிருக்கிறது. ராத்திரி பூராவும் தூங்கவில்லை போல.

‘அதெல்லாம் ஒண்ணும் இருக்காது’ என்றுதான் மலர் சொன்னாள். ஆனால் அன்றைக்கே அக்காவின் ஆஸ்பத்திரியில் நர்ஸாக இருக்கும் பியூலாக்காவைக் கூட்டி வந்து விட்டாள். பியூலாக்கா அம்மாவிடம் எத்தனை நாளாக இப்படி இருக்கிறது. என்ன செய்கிறது? இப்படி இப்படி இருக்கிறதா என்று எல்லாம் கேட்டாள். செல்வியும் கூட இருந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தாள்.

அப்புறம் மலர் அக்காவும் பியூலாவும் புறவாசலுக்குப் போய் நின்று பேசிக் கொண்டார்கள். அது முருங்கை இலை அதிகமாக உதிர்கிற காலமாக இருந்தது. சிமெண்ட் தண்ணீர்த்தொட்டியில் பழுத்த இலைகள் அதற்கென உண்டாக்கிக்கொண்ட வட்டத்தில் நகர்ந்தன. பியூலாக்கா குனிந்து சுட்டுவிரலில் ஒரு இலையை அப்பி எடுத்து, அதைப் பார்த்தபடியே பேசினாள்.

அம்மாவிடம் வந்து, ‘‘நீங்க சொல்லுததைப் பார்த்தா உங்களுக்கு ஒண்ணும் இல்லைன்னு தான் தெரியுது. எதுக்கும் லேசா ஒரு டெஸ்ட் பண்ணிப் பார்த்துருவமா?’’ என்று பியூலாக்கா அம்மா கையை எடுத்துக் கொண்டாள். கையை தொட்டுக் கொஞ்ச நேரம் அப்படியே வைத்திருந்தால் அம்மா உடம்பு இந்தக் கையை ஒப்புக் கொள்ளும். அப்புறம் மேல் கை, கழுத்துப் பக்கம் நெஞ்சுப் பக்கம் என்று பையப் பைய மற்ற இடங்களைத் தொட அனுமதிக்கும் என்று நர்ஸக்கா நினைத்திருக்கலாம். அது அம்மாவிடம் பலிக்கவில்லை. அம்மா தன் கைகளை அதிக நேரம் தொட அனுமதிக்கவில்லை. நைசாக உருவிக் கொண்டாள். அதில் ஒரு மறுப்பு இருந்தது. அம்மாவின் குணம் ஒரு வார்த்தை பேசாமல் மறுப்புத் தெரிவிப்பது என்று எங்களுக்குத் தெரியும்.

‘பியூலா வேண்டாம்னா நான் டெஸ்ட் பண்ணிப் பார்க்கட்டுமா?’ என்று மலர் அக்கா கேட்டாள். அவளுடைய பருத்த கண்கள் ஈரப் பளபளப்பில் நிரம்பியிருந்தன. கடிகாரத்தை உட்பக்கமாகத் திருப்பிக்கட்டியிருந்த கையால் அவள் அம்மாவின் தலையைக் கோதிவிட்டாள். அம்மா உடனே ‘வேண்டாம்’ என்று பதில் சொன்னாள். ‘ நீங்க ரெண்டு பேரும் வரும்போதே பேசி வச்சுக்கிட்டு வந்திருப்பீங்க. ஒண்ணுமில்லை, அது இதுண்ணு எல்லாத்தையும் பண்ணீட்டுக் கடைசியில என்னை ஆஸ்பத்திரியில கொண்டு போய்த் தள்ளீருவீங்க’ என்று அழுதாள்.

‘சரி மலர் அம்மா. வேண்டாம், பார்த்துக்கலாம்’ என்று பியூலாக்கா அம்மாவின் தோளைத் தட்டிக் கொடுத்தாள். அதே போல செல்வி முதுகையும் பியூலாக்கா தட்டிக் கொடுத்து, ‘போயி எல்லாத்துக்கும் டீ போட்டு எடுத்துக்கிட்டு வா செல்வம்’ என்றாள். செல்வி என்பதைப் போன தடவை வந்திருக்கும் போதும் செல்வம் என்றுதான் அவள் கூப்பிட்டாள். செல்விக்கு அது பிடித்திருந்தது. அம்மா ‘ எனக்கு வேண்டாம். சேர்த்துப் போட்டுராதே’ என்றாள்.

சரியாக தேயிலை கொதிக்கிற வாசத்துக்கு இடையில் பியூலாக்கா அடுப்படிக்கு வந்து செல்வியின் தோளைத் தொட்டாள். ‘குட்டி நீதான் வீட்டில இருக்கே. அம்மா எப்போ எப்படி இருப்பா என்கிற மூட் உனக்குத்தான் தெரியும். கொஞ்சம் கொஞ்சமாப் பேச்சுக்கொடுத்து அம்மாவை டெஸ்ட் பண்ண ட்ரை பண்ணு’ என்றாள்.

என்ன என்ன எப்படிச் செய்து பார்க்கவேண்டும். என்ன செய்யும்போது எதை எல்லாம் கவனிக்க வேண்டும். எது எது எப்படி இருக்கும் என்று பியூலாக்கா அவளுடைய இடது கையை உயர்த்தி வலதுகையால் எந்த இடத்தில் இருந்து எப்படித் தடவிப் பார்க்கவேண்டும் என்று செய்துகாட்டினாள். செல்வி கையைப் பிடித்து பியூலாக்கா தன்னுடைய திரேகத்தில் வைத்துக் கொண்டு கூடச் சிலவற்றைச் சொன்னாள்.

எல்லோருமாக உட்கார்ந்து டீ குடித்த பிறகு பியூலாக்கா அம்மாவுக்காக ஒரு பிரார்த்தனை செய்தாள். அம்மா சிலுவை போட்டுக்கொள்ள மாட்டாள் என்று தான் நினைத்தார்கள். ஆனால் நிதானமாகப் போட்டுக்கொண்டாள். சிலுவை போட்ட கைவிரல்களை உதட்டோரம் வைத்து முத்திக்கொள்ளவும் அவளுக்கு மனமிருந்தது. புறப்படும் போது ‘ இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை. நீ அடிக்கொருக்க வந்துட்டுப் போ’ என்று பியூலாவிடம் சொன்னாள். மூன்று பேரும் டீ குடித்த டம்ளர்கள் ஒன்றுக்குள் ஒன்றாக அம்மா கையில் இருந்தன.

கடைசியில் செல்வி சொன்னதற்கு அம்மா ஒப்புக் கொண்டாள். யாரும் வரப் போவதில்லை என்றாலும் கொஞ்சம் எப்போதும் இருட்டாக இருக்கும் அடுக்களையில் வைத்துச் சோதித்துக்கொள்வதே அவள் விருப்பமாக இருந்தது. குளிக்கிற அறையில் கொஞ்சம் கூடுதல் வெளிச்சம் இருக்குமே என்று செல்வி சொன்னதற்கு ‘ வெளிச்சம் என்ன பண்ணப் போது, இனிமே இருட்டு என்ன பண்ணப் போது என்னை’ என்றாள். சேலை முந்தானையை இடுப்பிலேயே சுற்றிக் கொண்டாள். அதற்குப் பிறகு ஒரு வாதாம் மரமாக தன்னை மாற்றிக் கொண்டாள். ரவிக்கையை அகற்றுவதற்கு முன் ‘ வாதா மரம் காய்க்கிற தினுசு வேற. பலா மரம் காய்க்கிற தினுசு வேற’ என்று எதற்காகச் சொன்னாள் என்று தெரியவில்லை.

அதற்கப்புறம் செல்வி சொல்கிற மாதிரி எல்லாம் தன்னை வைத்துக் கொண்டாள். திருப்பிக் காட்டினாள். கையை உயர்த்தினாள். கையை நகர்த்தினபடியே செல்வி பியூலாக்கா சொன்ன அத்தனை கேள்விகளையும் கேட்டபோது பதில் சொன்னாள். செல்விக்கு அம்மாவின் நெஞ்சின் மேல் அப்படியே சாய்ந்துகொள்ளவேண்டும் போல இருந்தது. அம்மாவுக்கும் அப்படி எல்லாம் ஏதாவது தோன்றும் தானே. ‘மலர் கூட இல்லை. ராஜு கூட இல்லை. நீதான் மூணு வயசு வரை எங்கிட்டே தாய்ப்பால் குடிச்சே. வருதோ வரலையோ சப்பிக்கிட்டு அங்கேயே கிடப்பே’ என்று செல்வியின் மணிக்கட்டைப் பிடித்து அழுத்தினாள்.

‘அங்கேயே கிடப்பே’ என்று அம்மா சொன்னது செல்விக்கு ஒட்டுதலாக இருந்தது. ‘கையை எல்லாம் நல்லாத் தேய்ச்சுக் கழுவிக்கோ’ என்று பல்லில் சேலையைக் கடித்துக் கொசுவம் வைத்துக்கொண்டே அம்மா சொல்வது கேட்டது.. ‘மாட்டேன்’ என்று செல்வி சொன்னாள். ‘சீ..மூதி’ என்று வந்த அம்மாவின் சத்தத்தில் ஒரு சந்தோஷம் இருந்தது.

‘இந்தா, அக்கா கிட்டே பேசு. அக்கா குளிச்சிட்டு வந்துட்டா’ என்று அம்மா செல்வியிடம் சொல்லும்போதே போன் கை மாறி மலர் குரலுக்குப் போயிருந்தது. சாதாரணமாகவே மலர் அக்கா சந்தோஷமாக இருப்பாள். குளித்த பின் கூடுதலாக ஒரு ஈரம் சேர்ந்திருக்கும் இல்லையா. அதுவுமாக ‘அவள் என்ன புள்ளே. பால் குடிக்கதுக்கு அம்மையைத் தேடீட்டுதோ?’ என்று ஆரம்பித்தாள்.. ‘ஏன், நீ தான் பக்கத்திலேயே இருக்கியே. வேணும்கிற நேரத்தில் குடிச்சுக்கிட வேண்டியதுதானே’ என்று செல்வி சொன்னாள்.

நிஜமாகவே மலர் அக்கா அப்படிக் கேட்டது அவளுக்குப் பிடித்திருந்தது. அம்மாவை அப்படி அன்றைக்கு அடுப்படியில் சோதனை பண்ணி, அவள்
பயந்த மாதிரி எல்லாம் ஒன்றும் இல்லை என்று உறுதியான பிறகு, அம்மா செல்வியிடமும் அம்மாவிடம் செல்வியும் கூடுதல் பிரியமாக இருப்பதாக செல்விக்குத் தோன்றியது. அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

அம்மாவை அப்படிப் பார்த்ததை நினைத்துக் கொண்டு செல்வி தனியாக ஒரு நாள் அழக் கூடச் செய்திருக்கிறாள். எதற்கு அழவேண்டும் என்று தெரியவில்லை. மலர் அக்கா சொல்லியிருக்கிறாள். செல்வி பெரிய மனுஷி ஆகித் தலைக்குத் தண்ணீர் ஊற்றின அன்றைக்கு தேவராஜ் தனியாக உட்கார்ந்து மூசு மூசு என்று அழுதுகொண்டு இருந்தானாம். ‘கிறுக்குப் பயலா இருக்கான்’ என்று இதைப் பின்னால் ஒருநாள் அக்கா சொல்லும் போது தம்பியும் இருந்தான். அவன் தலையைக் குனிந்து சிரித்துக்கொண்டே எழுந்திருந்து வெளியே போய்விட்டான்.

செல்விக்கு எதைச் சொல்வதில் இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஆனால் எல்லாம் சொல்ல வேண்டும் போல இருந்தது. ஐந்து பேர் தவிர அவ்வப்போது வந்து தங்கியிருக்கும் ஹிலால் சார் உட்பட அந்த வீட்டில் எல்லோர்க்கும் சமைத்துப் போடுகிற கருப்பையா பற்றியும் அவர் வளர்த்த கிளிகள் பற்றியும் முதலில் சொன்னாள். இவளும் இவளுக்கு முன்பே தனியாக இந்த அறையில் இருந்து வருகிறவளுமான பத்மா கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பத்துப் பதினைந்து நாட்களில் சொன்னதில் இருந்தும் செல்வி நேரில் பார்த்ததில் இருந்தும் கருப்பையாவைப் பற்றி அவளால் சொல்ல முடிந்தது.

கருப்பையாவுக்குப் பொன்னமராவதிக்குப் பக்கம். அங்கேயும் சமையல் தொழில் தான் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். வீட்டோடு தையல் கடையும் நைட்டி தைத்து சின்ன அளவில் ஊருக்குள் விற்பனை செய்துகொண்டும் இருந்த அவர் சம்சாரம், லைனுக்கு, வந்து போன பழக்கத்தில் யாருடனோ, அதுவும் இரண்டு பேருக்கும் ஐம்பது வயதும் நாற்பத்தைந்து வயதுமாக இருக்கிற போது, போய்விட்டார் போல. அப்போது கலர் கலராகக் கருப்பையா கையில் கட்ட ஆரம்பித்த சாமி கயிறுதான் இப்போது வரைக்கும்.

இங்கே அழகர் மெஸ்ஸில் வேலைக்கு நின்றவரைத் தான் செல்வி வேலைக்குச் சேர்ந்திருக்கும் பேங்க்கில் உள்ளவர்கள் பேசி இந்த வீட்டு சமையல் வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டிருக்கிறார்கள். இவளும் பத்மாவும் பெண்கள். மீதி மூன்று பேர் ஆண்கள். இந்த ஐந்து பேரும் பேங்கில் வேலைபார்ப்பவர்கள். எல்லோர்க்கும் வயதில் சற்று மூத்த ஹிலால் சார் சர்க்கார் அலுவலர், வேளாண்மை அதிகாரி.

கருப்பையாவுக்கு இந்தக் காலத்துப் பாட்டு எல்லாம் பாட வராது. சொல்லப் போனால் அவர் பாடும் டி.ஆர். மகாலிங்கம் பாட்டே அவர் காலத்துக்கு முந்தியவைதான். எப்படியோ அது மட்டும் அவருக்கு ஒன்று விடாமல் தெரிந்திருந்தது.

செல்வி முதல் முதலில் கேட்டது ‘நானன்றி யார் வருவார்?’ என்கிற பாட்டுதான். ‘இள நங்கை உனை இங்கு யார் தொடுவார்?’ என்ற இடத்தில் ஒரு மாதிரி தலையை அசைத்தார். வாயில் இடது பக்கம் சின்னக் கோணல் இருந்தது. ஒருவேளை டி.ஆர். மகாலிங்கம் பாடும்போது அந்தப் படத்தில் அப்படித்தான் அவர் முகம் இருந்திருக்குமோ என்னவோ..

“செந்தமிழ்த் தேன் மொழியாள்’ பாடுங்க மாஸ்டர்’’ என்பார்கள். ஹிலால் முஸ்தஃபா ‘இசைத் தமிழ் நீ செய்த பாடுங்க கருப்பையா’ என்பார். உடனே பாட மாட்டார். அவருக்கு என்று ஒரு வரிசை வைத்திருப்பார். ‘கோடி கோடி இன்பம் பெறவே தேடி வந்த செல்வம்’ என்று நகர்வார். ‘பாட்டு வேணுமா, ஒரு பாட்டு வேணுமா’ என்று எதிரே இருப்பவர்கள் முகத்தில் ஒன்றைப் பார்த்துப் புருவம் தூக்கிக் கேள்வி கேட்பார். ‘ஆடைகட்டி வந்த நிலவோ’ என்று பாட ஆரம்பிப்பவர் இடையில் எழுந்திருந்து கையை வீசியபடி ‘அந்திவெயில் பெற்ற மகளோ, குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ?’ என்று அவர் வளர்க்கும் கிளிக்கூண்டின் பக்கத்தில் போய் நின்றுகொள்வார்.

கருப்பையா வளர்த்த இரண்டுகிளிகளில் ஒன்றை, செல்வி இந்த வீட்டுக்கு வந்த மூன்றாவது நாள் பின் பக்கத்து வக்கீல் வீட்டுப் பூனை பிடித்துத் தின்றுவிட்டிருந்தது. ராத்திரி கூண்டைச் சரியாகப் பூட்டவில்லை. வெளிப்புறம் இருக்கும் ஒரு கழிப்பறைப் பக்கம் உதிரி உதிரியாகவும், கிட்டத்தட்ட ஒரு பக்கத்துச் சிறகு அதிகம் சேதாரம் இல்லாமலும் கிடந்திருக்கிறது.

செல்வி பார்க்கும் போது கருப்பையா அந்த உதிரிச் சிறகுகளைத் தோளில் கிடக்கும் மேல் துண்டில் பொறுக்கி சிறு தொட்டில் போல ஏந்தியவராக பெரியசாமி சாரிடம் காட்டிக் கொண்டு இருந்தார். பேசிக்கொண்டு இருக்கும் போதே, பேச்சை நிறுத்திவிட்டு ஒரு இறகில் மொய்த்துக் கொண்டிருந்த எறும்புகளைப் ஃபூ ஃப்பூ என்று எச்சில் தெறிக்க ஊதினார். மேற்கொண்டு அவரால் பேசமுடியவில்லை. அழுகையில் தொண்டை கம்மிவிட்டது.

‘என்ன அம்மை உன்னை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்லியிருப்பாளே, புலி மார்க்கா? அருணகிரி
விலாஸா? எதை வாங்கச் சொன்னா?’ என்று மலர் அக்கா கேட்டாள். மலர் அக்காவுக்குச் சுருட்டை முடி. நல்ல
அடர்த்தியும். குளித்துத் தலையை விரித்துக் காயப் போட்டபடி அக்கா நிற்பதை அவளால் பார்க்க முடிந்தது. இது மாதிரி ஒரு நாள், சாய்வான வெயிலில் உள்ளாடை எதுவும் போடாமல், இருப்பதிலேயே ஒருபழைய நைட்டியை அணிந்தபடி அவள் கொடியில் ஈரத் துணியைக் காயப் போடுவதைப் பார்த்துவிட்டு அம்மா, ‘நீ காயப் போட்டது போதும். நான் போட்டுக்கிடுதேன். நீ உள்ளே போ’ என்று சத்தம் போட்டதைச் செல்வி கேட்டிருக்கிறாள் .

‘அக்கா நான் இன்னைக்கு ஷவரில் குளித்தேன்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள். இதை முதலில் சொல்லாமல் கருப்பையா பற்றி ஏன் முதலில் சொன்னோம் என்றிருந்தது செல்விக்கு. ‘அதுக்கு என்ன இளிப்பு? நீ அங்கே ஈ ண்ணு பல்லைக் காட்டுதது இங்கே வரைக்கும் தெரியுது’ – மலர் வாயில் எதையோ போட்டு மென்று கொண்டே பேசுகிறாள் போல. அவள் பேசுவதையும் சேர்த்து நாக்குத் துளாவிக்கொண்டு இருந்தது. ‘என்ன சாப்பிடுதே? எனக்கு..’ என்று செல்வி இங்கிருந்து கொண்டே அக்காவைக் கொடுக்கச் சொல்லிக்கேட்டாள். அம்மாவுக்கு உப்புக் கடலை பிடிக்கும் என்று தேவராஜ் வேலைக்குப் போய்விட்டு வரும் போது வாங்கிவருவான். செல்விக்கு அதன் உப்பு ருசியையும் விட பொருபொருவென்ற மஞ்சள் பொடியின் ருசி பிடிக்கும்.

இன்னும் சிரிப்பை அடக்காமல்தான் செல்வி சொன்னாள், ‘ஷவர் இருக்கிறதையே இன்னைக்குத் தான் பார்த்தேன்.. கண்ணை மூடிக்கிட்டு அப்படியே நின்னுட்டேன். தூத்தல்ல நனையுத மாதிரி இருந்துது’ என்றாள். எல்லாவற்றையும் ஒன்று விடாமல் களைந்து போட்டுவிட்டு அப்படிக் குளித்ததையும் சொல்லிவிடலாமா என்று நினைத்தாள். ஆனால் சொல்லவில்லை.

அறையில் கூட இருக்கும் பத்மா ஊருக்குப் போயிருக்கிறாள். தான் மட்டும் இருப்பதால் ரொம்ப நேரம் தூங்கி எழுந்திருந்து சற்று முன்புதான் குளித்ததைச் சொன்னாள். மலர் அக்கா கொஞ்சம் குரலைத் தணித்துக்கொண்டு ‘ஜெண்ட்ஸ் இருக்கிற இடம்.. பார்த்து’ என்றாள். ‘யாரும் இல்லை. மூணு பேரும் மதுரைக்குப் போயிருக்காங்க. சினிமா பார்த்துட்டு சாப்பாட்டை அங்கேயே முடிச்சுட்டு வர ராத்திரி ஆயிரும்’ என்றாள்.

மலர் அக்காவுடன் படித்த சினேகிதியின் கணவர் ஏற்பாட்டில் தான், பேங்க் பத்து நிமிஷத்தில் குறுக்கே நடந்து போகிற தூரம், பஸ் ஸ்டாண்டிற்கு ரொம்பப் பக்கம் என்பதை எல்லாம் யோசித்து, இத்தனைபேரோடு அந்த வீட்டில் தங்குவதாக முடிவாயிற்று. அம்மாவிடம் பெண்கள் ஹாஸ்டலில் இருப்பதாகத்தான் சொல்லியிருக்கிறாள். தேவராஜீக்குத் தெரியும். அவன் சரிதான் என்று சம்மதித்து விட்டான். ஆனால் சொல்ல முடியாது. என்றைக்காவது ஒருநாள் திடீரென்று செக் பண்ண வருவது போல வந்தாலும் வருவான்.

‘எது என்றாலும் கருப்பையாவிடம் சொன்னால் உடனே வாங்கிக்கொண்டு வந்து தந்திருவார்’க்கா’ என்று போனதடவை சொல்லியிருந்தாள். மலருக்குக் கருப்பையாவைப் பிடிக்கவில்லை. ‘வேண்டாம். ரொம்ப வச்சுக்கிடாதே. கூடுமானவரை நீயே கடைக்குப் போய்ப் பழகு.. ஒருவேளை உனக்கு அந்த ஊர்தான்னு ஆகிப் போச்சுன்னா, அந்த ஊரை உனக்குத் தெரியணும், அந்த ஊருக்கு உன்னைத் தெரியணும். ஆள்ப் பழக்கம் மாதிரிதான் ஊர்ப் பழக்கமும். எல்லாம் நாம நடந்துக்கிடுததைப் பொருத்ததுதான்’ என்றாள். பேசிக்கொண்டு இருக்கும் போதே சட்டென்று மலர் அக்கா புத்தி சொல்கிறது போலப் பேச ஆரம்பித்தது என்னவோ போல இருந்தது. ஷவரில் குளித்ததைப்பற்றி அவளிடம் சொன்னபோது உண்டான சந்தோஷம் இப்போது சுத்தமாக இல்லை.

அம்மாவிடம் கேட்டதையே மலர் அக்காவிடமும் ‘தம்பி என்ன பண்ணுதான்?’ என்று கேட்டாள். அம்மா பதில் சொல்லாதது போல அக்கா இருக்கவில்லை. உடனே சொல்ல ஆரம்பித்தாள்.. மலர் அக்கா தேவராஜைத் தேவா என்றுதான் சொல்வாள். அதிலும் சிலசமயம் ‘நம்ம தேவா’ என்று சொல்லும் போது நன்றாக இருக்கும். அந்தச் சமயம் அம்மாவும் செல்வியும் அவர்களை அறியாமல் ஒருத்தரை ஒருத்தர் நிறைவாகவும் ஆதரவாகவும் பார்த்துக்கொள்வது உண்டு.

செல்விக்கு வேலை கிடைத்து இங்கே வருவதற்கு முன்பே தேவராஜும் வேல்முருகனும் சேர்ந்து சின்னச் சின்ன வேலைகளை எடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் வைத்தே செய்துகொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். இப்போது மேலச் செவலில் ஒரு வீட்டுக்கு தலை வாசல் கதவு செய்திருக்கிறார்களாம். வழக்கமான அளவு இல்லையாம். மூன்றரை அடிக்கு ஏழு அடியாம். நிலையும் கதவும் அப்படி நிலைக் கண்ணாடி மாதிரி வாய்த்திருக்கிறதாம்..

கதவின் ஓரத்தில் கீழேயிருந்து மேலே ஒரு கொடி படர்ந்து வளைந்து கிடக்கிறதை அப்படிச் செதுக்கி இழைத்திருக்கிறார்களாம். கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தால் கொடி இன்னும் ஒரு பிடி சரசரவெண்று வளர்ந்துகொண்டு போகிற மாதிரி தோணுகிறதாம்.. கதவை வாசலில் பூட்டித் தைத்த பிறகு, காற்றுக் காலத்தில் ஒவ்வொரு மரச் செதுக்கல் இலையும் அசைந்தாலும் அசையுமாம். அப்படி சச்ரூபமாக இருக்கிறதாம்.

மலரும் அம்மாவும் வேல் முருகன் வீட்டில் அதைப் போய்ப் பார்த்துவிட்டு வந்த அன்றைக்கு அம்மா பரணில் இருக்கிற சாக்குப் பொட்டலத்தைத் தேவராஜை இறக்கி வைக்கச் சொல்லி, அப்பா அவருடைய தொழிலுக்கு உபயோகித்த சைஸ் வாரி உளிகள், சிறிய, பெரிய இழைப்புளி, கொட்டாப்புளி எல்லாவற்றையும் தொட்டுத் தொட்டு அம்மா அழுது கொண்டே கும்பிட்டிருக்கிறாள்… அதில் ஒரு புழுக்கட்டைப் பென்சிலும் கிடந்திருக்கிறது.

அம்மா சொன்னாள் ‘ தங்கமணி ஆசாரிண்ணா வாயில வெத்தலச் சிவப்பும், காதில சொருகின மஞ்சக் கலர் யானை மார்க் பென்சிலும் தான்’.. முடிஞ்சு தூக்கிக்கிட்டுப் போகிற அன்னைக்கு மரக்கடை சாய்புமார் அம்புட்டு பேரும் வாசல்ல வந்து நிக்காங்க. காலைத் தொட்டுக் கும்பிடாத குறைதான். அதில ஒருத்தர் ஒரு ரெண்டு சாணுக்கு ஒரு சந்தனக் கட்டையைக் கொண்டாந்து கொடுத்துட்டு, கட்டத் தலத்துல ஆசாரி நெஞ்சுல வச்சிரணும். மேலே சொர்க்கத்துக்கு வரைக்கும் அவரு கூடவே வாசம் போகணும் என்று கண்ணைத் துடைச்சாரு…’

மலர் அக்கா இதை ஒரு கதைப் புத்தகத்திலிருந்து வாசிப்பது போல் சரியான உச்சரிப்போடும் இடைவெளியோடும் சொன்னாள். செல்விக்கு அந்தக் கதவைப் பார்க்க முடிந்தது. அப்படி வளைந்து மேலே ஏறும் ஒரு கல் கொடிக்குப் பக்கத்தில் இடுப்பு வளைய காலைப் பின்னிக்கொண்டு ஒரு இளம் பெண் நிற்கிற சிற்பத்தைப் படங்கள் ஒன்றில் பார்த்திருக்கிறாள். தன்னையோ மலர் அக்காவையோ அந்தக் கதவில் அப்படி நிறுத்திப் பார்த்தாள். தன்னைவிட அக்காவுக்குத்தான் அதற்கான புடைப்புகள் இருப்பதாகத் தோன்றியது. மறுபடியும் தான் ஷவரில் அப்படிக் குளித்ததை செல்விக்கு நினைக்காமல் இருக்க முடியவில்லை..

மலர் அக்கா பேசிக்கொண்டு இருக்கும் போதே கட் ஆகிவிட்டது. செல்வி ‘ஹலோ, ஹலோ’ என்று உரக்கக் கூப்பிட்டாள். அந்தப் பக்கத்தில் இருந்து பதில் சத்தமே இல்லை. தன்னுடைய போன் அணையாமல் இருக்கிறதா என்று முன் பக்கத்தைப் பார்த்துவிட்டு, மறுபடியும் ‘ஹலோ, ஹலோ’ என்றாள். மலர் அக்கா என்று பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் கேட்டுவிடும் என்பது போல், ‘மலர்க்கா, மலர்க்கா’ என்றாள்.. அறையில் வேறு ஒரு இடத்திற்குப் போய், அங்கேயிருந்து கூப்பிட்டுப் பார்த்தாள். ரிங் போய்க்கொண்டே இருந்தது. எடுக்கவில்லை.

செல்வி அறைக் கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தாள். கதவைச் சாத்துவது, உடனுக்குடன் மறக்காமல் லைட்டை அணைப்பது, சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை எழுந்திருக்கும் போதே தட்டை வைத்து மூடுவது எல்லாம் அம்மாவிடம் இருந்து வந்த பழக்கம். மற்ற மூன்று அறைகளும் திறந்தே கிடந்தன. ஒரு பதினோரு மணி பகலுக்கு என்ன வெளிச்சம் உண்டோ அது முன் வாசலில் இருந்தும் பின் வாசலிலும்
இருந்து வந்து ஒரு இடத்தில் சாம்பல் நிறத்தில் ஒன்றோடு ஒன்றாக, தண்ணீரால் கழுவி விட்டது போல் பரவியிருந்தது..

சீக்கிரமே சமையல் முடிந்துவிட்டதால் கருப்பையா அடுப்படி நடையில் தலை வைத்துத் தூங்குகிறார். இங்கே இருந்து பார்க்க அவருடைய கரண்டைக் கால்களும் பாதங்களும் மட்டும் தெரிகிறது. ஒரு சிறு கோழிக்குஞ்சின் கால் போல, கரண்டை எலும்பு புடைத்தும் நரம்பு தென்னியும் இருக்கும் அவை ஒரு பெரிய ஆளுக்கு உடையவை என்று சொல்லவே முடியவில்லை.

கொஞ்சம் அதிகம் இருட்டாக இருக்கிற, அந்தப் பக்கத்து ஜன்னல் கதவுகள் எப்போதும் அடைத்தே இருப்பதால் செல்வி வீட்டின் ஏதோ ஒரு இடத்தை ஞாபகப் படுத்தும் மூலைக்குப் போய்க் குனிந்து பார்த்தாள். அப்படி அவள் குனியும் போதே அழுகின ஈர வைக்கோலின் வாடை அடித்தது.

ஹிலால் சார் வளர்க்கும் காளான்கள் தட்டுத் தட்டாக அந்த இடத்தில் முளைத்து நின்றன. மிகக் குறைந்த வெளிச்சத்தில் அப்படி ஒரே சீராக வளர்ந்திருக்கும், இன்னும் முதல் அறுவடை ஆகாத காளான்கள் ஒருவித மாய வெளிச்சத்தை அந்த இடத்தில் உண்டாக்கியிருப்பதாக செல்வி நினைத்தாள்.

பியூலாக்கா அம்மாவுக்காகப் பிரார்த்தித்தது போல அவளுக்கு அதன் முன் முழந்தாளிட்டுப் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று தோன்றியது. தொடுவது போல செல்வி தரையில் முட்டி போட்டு உட்கார்ந்து கொண்டு காளான் தட்டுக்குச் சற்று உயரத்தில் கையை நீட்டினாள். அவற்றின் அத்தனை குடைகளின் நிழலையும் பெற்றுக் கொண்டது போலக் கையைக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்..

போன் அழைப்பு மணி வந்தது. கையிலேயே தான் வைத்திருக்கிறாள். மறந்து அறையில் வைத்துவிட்டு வந்திருப்பது போல அவசரமாக எழுந்து நின்றாள். கைக்குள் வெளிச்சமும் ஒலியும் அதிர்கிறது. ஒரு பதற்றத்தில் வலது காதில் வைத்து, உடனே இடது காதுக்கு மாற்றிப் பேசுகிறாள். ‘ஹலோ, ஹலோ’ என்கிறாள்.

‘நான்தான் புள்ளே’ – மலர் அக்கா சொல்கிறாள்.

‘பேசிக்கிட்டு இருக்கும் போதே கட் ஆயிட்டுது’ – செல்வி சொன்னதை மலர் அக்கா கேட்காமலேயே ‘இந்தா உன்கிட்டே ஒருத்தர் பேசணுமாம். ரொம்ப அர்ஜெண்ட்டாம்’ என்கிறாள். ஒருத்தர் அல்ல இரண்டு பேர் சிரிக்கிற சத்தம் வருகிறது.

‘ஹலோ பேங்க் மேடம்’ என்கிறார்கள். மறுபடியும் ‘ நல்லா இருக்கீங்களா பேங்க் மேடம்’ என்கிறார்கள். ‘சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே’ என்று பாட ஆரம்பித்து நிறுத்துகிற அந்த ஆண் குரல் கேடது போல இருக்கிறது. யாருடையது என்று செல்விக்குப் பிடிபடவில்லை. அக்கா அவரிடம் இங்கு நடப்பது, கருப்பையா பாடுவது உட்பட, எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறாள். மொட்டையாக ‘நல்லா இருக்கேன்’ என்றாள். ஒரு மரியாதைக்கு அவரிடம் ‘ நீங்க நல்லா இருக்கீங்களா?’ என்று திருப்பிக் கேட்டாள்’

மறுபடியும் இரண்டு பேரும் சிரித்தார்கள்.. மலர் அக்கா ரொம்பச் சந்தோஷமாக இருக்கும் போது செல்வி தோளையோ தேவராஜ் தோளையோ அறைந்து விட்டுச் சிரிப்பாள். அந்த இடத்தை விட்டு வேறொரு இடத்துக்கு லேசாகக் கூன் போட்டபடி வாயைப் பொத்திக்கொண்டு போய், அந்த இடத்தின் சுவரையோ எதையாவது ஒன்றைப் பிடித்து நிமிர்ந்து மறுபடி வாயைத் திறந்து சிரிப்பாள். ‘யாருன்னு தெரியலையா, பாஸ்கர் குட்டி’ என்றாள். பாஸ்கரனையே அக்கா பாஸ்கர் என்று குறிப்பிட்டாள்.

’ஐயோ, பாஸ்கரன் சாரா?’ செல்விக்கு ஆச்சரியம்.. அவள் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 படிக்கையில் பாஸ்கரன் சார் தான் கணக்கு எடுத்தார். செல்வி 194 மார்க் எடுத்திருந்தாள். அப்போது தான் அவர் வேலைக்குச் சேர்ந்திருந்தார். மலர் அக்காவை லேப் டெக்னீஷியன் டிப்ளமாவுக்குப் படிக்கச் சொன்னது அவர்தான். மதுரம் ஆஸ்பத்திரி வேலை கிடைத்ததற்கும் ஒரு வகையில் அவர் தான் காரணம்.

‘அக்கா அவர்கிட்டே கொடுங்க. நான் எக்ஸ்கியூஸ் கேக்கணும்’ என்று மலரிடம் சொன்னாள். ‘உங்ககிட்டே எக்ஸ்கியூஸ் கேட்கணுமாம்’ என்று சொல்லிக்கொண்டே மலர் அக்கா அவரிடம் போனைக் கொடுப்பது தெரிந்தது.

பாஸ்கரன் சார் குரலில் சிரிப்பும் கிண்டலும் இருந்தது. செல்வியைப் பேசவிடவில்லை. ‘இது என்ன அநியாயமா இருக்கு. பேங்க் மேடத்தைப் பொண்ணு கேட்டு வந்தால், உங்க அம்மாவும் தேவராஜும் ‘அதெல்லாம் முடியாது. மலரை வேணும்னா தாரோம்கிறாங்க’. என்று சொல்லிவிட்டு ‘நீயே சொல்லு. இது எல்லாம் ரொம்ப அநியாயமா இல்லையா?’ என்று சிரிக்கிறார். கரகரவென்ற அந்தச் சிரிப்பு செல்வி உடல் முழுவதும் ஒரு கொடி போலப் படர ஆரம்பித்தது. பொசு பொசுவென்று மேலே தூறல் விழுவது போலவும்.

செல்வி தேவராஜும் வேல் முருகனும் செய்த அந்தக் கதவை நினைத்துக் கொண்டாள்.

முதலில் அவள் மலர் அக்கா மட்டும் நிற்பதாக நினைத்ததற்குச் சற்று மாறுதலாக. அந்தக் கொடியின் கீழ் மலர் அக்காவும் பாஸ்கரன் சாரும் இப்போது நின்றுகொண்டு இருந்தார்கள்..

செல்வி அந்த இடத்திலேயே கண்களை மூடியபடி மறுபடியும் ஷவரின் கீழ் நிற்பது போல் அவளை வைத்துக் கொண்டாள். தன்னை அறியாமல் அவள் கைகள் குவிந்து அவளுடைய மார்புகளின் மேல் இருந்தன.

vannadasan@gmail.com