பிரபல யுட்யூபரும், சமூக வலைத்தளங்களில் தன் அதிரடியான கருத்துகள், கட்டுரைகள் மூலம் பலரையும் கவர்ந்திருந்த சவுக்கு சங்கர் அவர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது!
சவுக்கு சங்கரின் தரத்திலிருந்த மற்றொரு யுட்யூபரான மாரிதாஸ், அவதூறு வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் கருத்துரிமையைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்திருந்தார்.
இந்த விடுதலையைத்தான் மிகக் கடுமையான தொனியில் சவுக்கு சங்கர் தன்னுடைய தளத்தில் கட்டுரையாக எழுதி விமர்சித்திருந்தார். பல ட்வீட்களைப் பதிந்திருந்தார். போக, இதர யுட்யூப் சேனல்களிலும் நீதிபதியைத் தரக்குறைவாக விமர்சித்து பேட்டியளித்திருந்தார் என்பது புகார்!
புகாரை யார் அளித்தது ?
ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களே தாமாக முன்வந்து, தன்மீதான அவதூறுகளுக்கெல்லாம் சவுக்கு சங்கர் உரிய பதிலை நீதிமன்றத்திற்கு வந்து தர வேண்டுமென பதிவாளருக்கு இந்தப் புகாரைப் பதியுமாறு உத்தரவிட்டார்!
மாரிதாஸ் விடுதலைக்காக அழகர் கோயிலில் வைத்து யாரோ சிலர் ரகசியமாக நீதிபதியைச் சந்தித்தனர் என்றும் அதனால்தான் அவர், மாரிதாஸை விடுதலை செய்தார் என்று மேலும் பகிரங்கமாக நீதிபதியின் போட்டோவையே போட்டு ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் சவுக்கு சங்கர். இது போன்ற சூனா பானா ரக பீற்றல்களையெல்லாம் வடசென்னையில் சீன் போடறது என்போம். ஆனால், சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற ஆட்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். வெட்டி உதார்களையெல்லாம் வீரமாக எண்ணிக் கொள்வார்கள். இந்த வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பு வரக் காரணமே இத்தகைய சீன்களுக்காகத்தான்!
நாளை, பிணைக்காக சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றமே போனாலும், இத்தகைய பதிவுகளைக் கண்ணுறும் நீதிபதிகள், இதை வீரமாகப் பார்க்கமாட்டார்கள். முகச்சுளிப்புடன் அருவருப்பாகவே அணுகுவார்கள். ஆனால் இந்தப் பகுத்தறிவை சாமானியனிடம் எப்படி எதிர்பார்க்க முடியும் ?
அரசியலில் சீமான் எப்படித் தன் ரசிகர்களுக்கு அசராமல் பொய்க்கதைகள் சொல்லி ஏமாற்றிவருகிறாரோ அதற்குச் சற்றும் குறைவில்லாமல் தன் பங்குக்குத் தன்னைத் தேடி வந்து வாசிப்பவர்களை இப்படி சீன் போடுவதன் மூலம் ஏமாற்றிவருகிறார் சவுக்கு சங்கர்!
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில், தற்கொலை புரிந்து இறந்து போன பெண்மீதும், அவர்களுடைய பெற்றோர் மீதும் தொடர்ந்து அவதூறுகளைச் செய்து குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார் சங்கர்!
சோர்ஸ் இருக்கு, புலனாய்வுத்துறைல இருக்கிற என் நண்பர் சொன்னாரு என்றும் இடையிடையே மானே தேனே போட்டுக் கொள்வார். சத்யம் தொலைக்காட்சியின் முக்தார் ஒருமுறை சவுக்கு சங்கரிடம் இதுகுறித்து சில கேள்விகளைக் கேட்டார். அப்போதுதான் அது காலி டப்பா என்று உலகுக்கே தெரிந்தது! சோர்ஸ் இருக்கு சோர்ஸ் இருக்குன்னு நொடிக்கு நாலு தடவ சொல்வியே சங்கரு, எதுனா ஒரு தரவை இப்ப என்கிட்ட காட்டேன் என்றார் முக்தார். கையில் எதுவும் இப்ப இல்லை. ஆனா இருக்க வேண்டிய எடத்துல பத்திரமா இருக்கு என்று மழுப்பினார் சவுக்கு சங்கர்!
முக்தார் பகிரங்கமாக நீங்க ஒரு ஃப்ராடு, போலியானவர், பொய்யர் உங்களை நம்பவே முடியாது என்றார்.
பரவாயில்ல. நம்பாதீங்க. So what ? இப்ப என்ன குடியா மூழ்கிப் போச்சு என்றபடி அதைக் கடந்து சென்றார் சவுக்கு சங்கர். இதுதான் சவுக்கு சங்கர். இதைப் புரிந்துகொண்ட அடுத்த நொடி யாரும், எவரும் அவருடன் இருக்கும் பிணைப்பை அறுத்தெறிந்து விட்டு விலகிப் போவார்கள். புரியாதவர்கள், அரைகுறைகள் மட்டுமே அவருடன் நிற்பவர்கள்.
நிற்பவர்களுக்காகத்தான் இந்தப் பத்தி!
சவுக்கு சங்கர் கைது அதீதமானது. எச்சரித்து விட்டிருக்கலாம். Sue Motu போட்ட ஒருவரே அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பது தவறான முன்னுதாரணம் என்று பலரும் கொதித்திருந்தார்கள். இதில் பலர் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், நடுநிலையாளர்கள்.
ஓர் எழுத்தாளருக்காக அல்லது ஊடகவியலாளருக்காக இத்தகைய அறச்சீற்றம் சரியானதுதான். ஆனால், அதே ஊடகவியலாளரான சாவித்திரி கண்ணன், சைபர் பிரிவில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட போது, அதைக் கைது என்று கருதி, அந்த நடவடிக்கையை முழு மனதாக வரவேற்றிருந்தார் சவுக்கு சங்கர். பத்திரிகையாளர் என்கிற பிச்சைத் தட்டை ஏந்தி வருவார்கள், பத்தி விடுங்க என்று ட்வீட் போட்டிருந்தார்!
ஆம். இதுதான் சவுக்கு சங்கரின் தரம். அரசியல் தலைவர்கள் எவராக இருந்தாலும் சரி, ஒருமையில் பேசுவது, அடா புடா என்று தரம் தாழ்ந்து எழுதுவது, பாடி ஷேமிங் எனப்படும் உடல் குறையைப் பிரதானப்படுத்தி இகழ்வது; உடற்பருமனான ஒரு திரைப்பட இயக்குனரை முட்டை போண்டா போடா என்று இழிவு செய்திருந்தார். அதையும் அவர்கள் அறியுமாறு வலைத்தளங்களில் அதை டேக் செய்தே வேறு எழுதுவார். அதைத்தான் அரைவேக்காடுகள் தீரம் என்கின்றன!
சக ஊடகவியலாளர்களை அவர் எந்த நிலைக்கும் கீழிறங்கி இழிவு செய்தவர். குறிப்பாகப் பல பெண்களை நேரடியாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, அவர்களின் அனுமதியின்றி விரசமாக எழுதியிருக்கிறார். ஒரு டிவியின் செய்தி வாசிப்பாளர் பற்றி அவர் எழுதியது அருவருப்பான ஒன்று. இதுபோன்ற சமயங்களில் தனக்கெதிராக விமர்சனங்களை முன்வைக்கும் பெண்ணியர்கள், பெண் ஊடகவியலாளர்களை கொச்சையாக, பச்சையாக எழுதுவது இவருடைய வழக்கம். தொட்டில் பழக்கம்!
ஆனால், இவருடைய தனிப்பட்ட வாழ்வு இன்னமும் அவலமானது. இவருடைய முன்னாள் வாழ்க்கைத்துணையே அதை அம்பலப்படுத்துகிறார். தனக்கிழைத்த சொல்லொண்ணாக் கொடுமைகள், அவருடைய குழந்தைக்காக இதுவரை ஒரு ரூபாயைக் கூட செலவழித்ததில்லை என்கிற குற்றச்சாட்டு …..
இதெதுவும் ரகசியமில்லை. இருந்தாலும் இங்கு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை மேலும் பேசுவது அறமில்லை என நமக்குப் படுகிறது. அப்படி ஒருபோதும் சவுக்கு சங்கருக்குப் பட்டதில்லை!
தனக்கும், எங்களின் குழந்தைக்கும் அவர் எதுவுமே செய்யக் கூட வேண்டாம். ஆனால், இன்றுவரை எங்களை நிம்மதியாக வாழவிடாமல் பல்வேறு வழிகளில் மன உளைச்சலுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு நபர், எப்படி அரசியலிலோ, நீதிமன்றத்திலோ, காவல்துறையிலோ தர்மத்தை நிலைநாட்டுகிறேன், சுத்தம் செய்கிறேன், அதற்காகப் பாடுபடுகிறேன் எனக் கூசாமல் பொய் பேச முடிகிறது என்று கேட்கிறார் அவருடைய முன்னாள் மனைவி. இதுவும் அவருடைய திறந்த பதிவில்தான் காணக்கிடைத்தது!
சரி. இவ்வளவுதானா குறைகள் ? இல்லை அதுக்கும் மேல ஒண்ணு இவரிடமுண்டு. அது ஆபத்தான ஆயுதம். ப்ளாக்மெய்ல்.
முன்னாள் உளவுத்துறை ஆள் என்பதால் இன்றளவும் தமிழ்நாட்டுக் காவல்துறையில் இவருக்கு சில நண்பர்கள் உண்டு. அவர்களிடமிருந்து பெறும் சில ரகசியத் தகவல்களைக் கொண்டு சார்ந்தோர்களை மிரட்டிப் பணம் கேட்கிறார் என்கிற குற்றச்சாட்டுகளும் இவரின் மீதுண்டு. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னிஅரசு இதுபோன்றதொரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை, தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியுடன் கூட்டணி வைக்க, வன்னி அரசு மூலமாக திருமாவளவனுக்கு அதிக அழுத்தம் கொடுத்திருக்கிறார் சவுக்கு சங்கர். ஒரு கட்டத்தில், திமுகவுடன்தான் எங்கள் கூட்டணி என்று உறுதிபடச் சொன்ன பின்னர், சவுக்கு சங்கர் ஏதேதோ மிரட்டல் தொனியுடன் பேசியதாக வருத்தப்பட்டிருந்தார் வன்னி அரசு!
இங்கே ஒரு முக்கியக் கேள்வி. ஒருவர் குற்றப் பின்னணி உள்ள ஆள் என்பதற்காக அவருக்கு கருத்துரிமை இருக்கக் கூடாதா ? வரம்பு மீறி தண்டித்த நீதிமன்றத்தை, நீதிபதியை விமர்சிக்கக் கூடாதா ?
சரியான கேள்விகள். அது கருத்துரிமையா – அவதூறா என்பதையும் அலசிப் பார்க்க நீதிமன்றத்துக்கும் உரிமை உண்டு அல்லவா ?
இந்தியாவில் எத்தனையோ கருத்துரிமை போராளிகளை துச்சமாக மதித்து, மோடி, அமித்ஷாவின் ஒன்றிய அரசு அத்துமீறியபோது, நீதிமன்றங்களை பகடைக்காயாக வைத்து அவர்களுக்கு நீண்டகால கடுங்காவல் தண்டனைகளைப் பெற்றுத் தந்தபோது, அவர்களுக்கு பிணைக்கான அனைத்து வாய்ப்புகளையும் மனிதாபிமானமில்லாது தடுத்தபோது, தமிழ்நாட்டில் இத்தகைய கூக்குரல்கள் எழவே இல்லை. அதாவது சமூகவலைத்தளங்களில் இத்தகையை கொதிநிலை உண்டாகவில்லை. சவுக்கு சங்கருக்கு மட்டும் ஏன் இவ்வளவு அலறல் சத்தம்? குறிப்பாக, திமுக வெறுப்பாளர்கள் இதில் ஆளுங்கட்சியின் தலையீடு இருக்கிறதோ என புலம்பியதுதான் அவல நகைச்சுவை!
திமுகவைக் குறைசொல்ல ஏதேனும் கொஞ்சம் நமுத்துப் போன அவலாவது கிட்டாதா என இவர்கள் ஏங்கிக் கிடப்பது இதிலிருந்தே புலனாகும். 2 G யில் இமாலய ஊழல் என்று உலகமே பொங்கிக் கிடந்த வேளையில், ஆம், ஊழல் நடந்தது உண்மை, பல்லாயிரம் கோடி ரூபாய் டாலர்களாக ராசாவின் சுவிஸ் வங்கி கணக்குக்குப் போனதாக சோர்ஸ் சொல்கிறது என்றேழுதியவர் சவுக்கு சங்கர். அதையும் விஞ்சி, ஆண்டிமுத்து அன்றிரவு இரவுக் காட்சிக்கு சென்றிருந்தால், உலக அரங்கில் இந்தியாவுக்கு இத்தகைய தலைக்குனிவு ஏற்பட்டிருக்காது என்று கொச்சையாகவும் எழுதியிருந்தார். ஆனால் இவர் இப்படி எழுதியதை, தொடர்ந்து திமுக தலைவர்களை இழிவாகப் பேசி வருவதையெல்லாம் மறந்து, கைது செய்யப்பட்ட அன்று அவருக்காக சமூகவலைத்தளங்களில் அவருடைய கருத்துரிமைக்காக வாதாடிய திமுகவினர்தான் அதிகம்!
திணை விதைத்தவன் திணை அறுப்பான். வினை விதைத்தவன் வினையைத்தான் அறுப்பான். கெடுவான்கேடு நினைப்பான். இத்தகைய நம் முதுமொழிகளுக்கு முற்றிலும் பொருத்தமானவராக நான் சவுக்கு சங்கரைப் பார்க்கிறேன். அவருடைய தரம் குறைவான அநாகரீகமான எழுத்துகளுக்கு இந்தச் சிறைத்தண்டனை முடிவுரை எழுதினால் மகிழ்ச்சி. இதன் பின்னரும் இப்படியே தொடர்வாரெனில், அவருடைய எஞ்சிய வாழ்க்கை நரகமாகவே நகரும்!!!
rashraja1969@gmail.com