மரணித்தல்

அது மரணமல்ல, ஏனெனில் நான் நின்றிருந்தேன்
இறந்தவர் அனைவரும் படுத்திருப்பார்கள்.
அது இரவல்ல, ஏனெனில் அனைத்து மணிகளும்
மதியத்தில் அடிப்பது போல் நாக்குகளை நீட்டிக் கொண்டிருந்தன.
அது உறைபனி அல்ல, ஏனெனில் நான் என் தசையில்
சிர்ரோகோஸ் காற்றின் வெப்பத்தை உணர்ந்தேன்.
அது நெருப்பல்ல, ஏனெனில் ஆலயத்தின் வழிபாட்டு மேடையைக்
குளிர்ச்சியாக வைத்திருக்கும் அளவு என் கால்கள்
சில்லிட்ட பளிங்காகி இருந்தன
இவை யாவும் அப்படி இல்லையென்ற போதிலும்
அவையெல்லாம் அப்படித்தான் தோன்றின எனக்கு _
என்னைப் புதைப்பதற்காக ஒழுங்கு படுத்தி வைத்தவை போல் _
என் உயிரின் ரோமங்களை மழித்து,
ஒரு சட்டகத்தில் வைத்தது போல் _
சாவியை வைத்துத் திறக்காமல் மூச்சு விட முடியாதது போல்.
அது நேரத்தின் துடிப்புகள் அனைத்தும் நின்று போயிருந்த,
என்னைச் சுற்றியிருந்த வெளி விறைத்து நோக்கும்
ஒரு நள்ளிரவு போலிருந்தது,
அல்லது, இலையுதிர் காலத்தின் முதல் பனிப்பொழிவு
பூமியின் இதயத் துடிப்பை நிறுத்தியது போலிருந்தது.
எப்போதும் தீராத, தப்பிக்க முடியாத பெரும் குழப்பம் போலிருந்தது.
அல்லது கரையைக் காண முடியாத கப்பலில் இருப்பது போல் விரக்தியாக இருந்தது
மரணம் நிகழ்ந்த வீட்டின்
மறுநாள் காலை இரைச்சல்கள்தாம்
இப்புவியிலேயே மிகவும் பவித்திரமானவை.
இதயத்தை வாரியெடுத்து
நாம் மீண்டும் பயன்படுத்தத் தேவையில்லாத காதலைக்
காலவரையின்றி ஒதுக்கி வைத்து…
சூரியன் மறைந்து கொண்டிருந்தது,
மறைந்துகொண்டே இருக்கிறது;
நான் கண்ட கிராமத்தில்
மதியத்தின் வண்ணம் இல்லை _
ஒவ்வொரு வீட்டிலும் மதியம்தான்.
அந்தி சாய்ந்து கொண்டே இருந்தது,
சாய்ந்து கொண்டுதான் இருக்கிறது;
புல்லின் மேல் பனி இல்லை,
என் நெற்றியின் மீது அது நின்று
என் முகத்தில் அலைகிறது.
என் கால்கள் தூங்கி வழிந்தன,
இன்னும் தூங்கி வழிந்து கொண்டிருக்கின்றன;
என் விரல்கள் விழித்திருந்தன.
ஆனால் ஏன் என்னிடம் சப்தமே இல்லை
நானே சப்தம் எழுப்புவது போல் தோன்றும் வரை.
இதற்கு முன்பிருந்த ஒளியை
எவ்வளவு நன்றாக நான் அறிந்திருந்தேன்!
அதனை நான் இப்போது காண முடியவில்லை.
அது இறந்து கொண்டிருக்கிறது, நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் எனக்கு அதைத் தெரிந்துகொள்வதில் அச்சமில்லை.
குளிர்காலப் பிற்பகல்களில்
சற்றுச் சாய்வாய் விழும் ஒளிக்கீற்று
மதாலயத்து மணியோசை போல
அழுத்துகிறது,
அது ஒரு தெய்வீக வேதனையைத் தருகிறது.
அதன் தழும்பை நாம் காண முடியாது.
அதன் அர்த்தங்கள் உள்ளுக்குள்ளே தரும்
மாற்றத்தை மட்டுமே காண முடியும்.
அதற்கு யாரும் கற்பிக்க முடியாது.
அதுதான் விரக்தியின் முத்திரை
காற்றிலே வரும் ராஜ நோய்.
அது வரும் போது
நிலப்பரப்பு கவனித்துக் கேட்கும்.
நிழல்கள் தம் மூச்சைப் பிடித்து நிற்கும்.
அது போகும் போது
தூரத்திலிருக்கும் மரணம் போலிருக்கும்
இதயம் இன்பத்தை முதலில் வேண்டும்,
பின்னர், வலியிலிருந்து தப்பித்தலை,
பின்னர், துக்கத்தை மறைக்கும்
வலி நிவாரணிகளை.
பின்னர், உறக்கத்தில் வீழ்வதை,
அதற்குப் பின்னர்,
இறுதி விசாரணையாளரின்
விருப்பமாய் இருந்தால்,
மரணிக்கும் சுதந்திரத்தை.
தமிழில்: ஆர். விஜயசங்கர்
◊◊◊

வெற்றி

இதுவரை வெற்றியுறாதவனுக்குப் புரியும்
மிக இனிப்பான வெற்றியின் சுவை.
அமுதத்தைப் புரிந்துகொள்ள
கடுந்தாகம் அவசியம்.
இன்று கொடியைக் கைப்பற்றிய
ஒருவராலும்
வெற்றியின் தெளிவான வரையறையைக்
கொடுக்க முடியாது
தூரத்தில் வெடித்துக் கிளம்பும் வெற்றி முழக்கம்
தோற்றுப்போய் செத்துக் கொண்டிருப்பவனுக்கு
வேதனையுடன் தெளிவாய்க் கேட்கும்
பகுத்தறியும் கண்ணுக்கு
அதீதப்பித்து ஒரு தெய்வீக உணர்வு,
பலரும் அப்பட்டமான பித்து நிலையை
மட்டும் உணர்வர்.
அனைத்தையும் போல்
இதிலும் பெரும்பான்மையே செல்லும்
ஒப்புக்கொள் – நீ புத்தியுள்ளவன்
ஆட்சேபி – நீ ஆபத்தானவன்
எனவே விலங்கு பூட்டப்படுவாய்
◊◊◊

விடியல்

ஏறத்தாழ இரவு முடிந்த பிறகு
சூரியோதயம் மிக அருகில் வளர்ந்து
நம்மால் வெளிகளைத் தொட முடிந்து
கூந்தலை சரி செய்துகொள்ளும் நேரம்
கன்னக்குழிகளைத் தயார் செய்து கொள்ளும் நேரம்
மங்கிப்போன அந்தப் பழைய நடுஇரவை-
பயமுறுத்திய அந்த ஒரு மணி நேரத்தை-
எண்ணிப்பார்க்கலாமாவென யோசிக்கும் நேரம்

◊◊◊

வலியெனும் புதிர்

வெற்றிடத்தின் தன்மையுண்டு வலியிடம்
எப்போது தொடங்கியதென்றோ
அது இல்லாத நாட்கள் இருந்தனவாவென்றோ
அதனால் நினைவுபடுத்திக்கொள்ள முடியாது
அதற்கு அதைத் தவிர எதிர்காலம் ஏதுமில்லை
அதன் முடிவிலி மண்டலத்தினுள்
வலியின் புதுக்காலங்களை உணரும் அறிவொளியுடன் கூடிய
அதன் கடந்தகாலம் அடங்கியுள்ளது
தமிழில்: கணேஷ் வெங்கட்ராமன்
◊◊◊