குளிக்கும் போது அங்குலம் அங்குலமாகத் தன் உடலை ஆராய்ந்து பார்ப்பது அனாமிகாவின் வழக்கம். அவளது குளியலறையை கண்ணாடி அறை என்றே சொல்லலாம். அங்கு அத்தனை கண்ணாடிகளை மாட்டி வைத்திருந்தாள். இந்த வீட்டிற்கு வந்த புதிதில் ஒரு கண்ணாடிதான் இருந்தது ,அதுவும் சிறியது. அதை எடுத்து விட்டு ஆளுயரக் கண்ணாடி ஒன்றைப் பொருத்தினாள். பின் அதில் உடம்பின் முன் பக்கம் மட்டுமே தெரியும் என்பதால், நேரெதிராக இன்னொன்றையும் பொருத்தினாள். அந்த இரண்டாவது கண்ணாடியை மாட்ட வந்த இளைஞன் அவளைப் பார்த்த இளக்காரமான பார்வை அவளுக்கு இன்றும் நினைவில் இருந்தது. பின் மற்ற கண்ணாடிகள் ஒவ்வொன்றாக வந்தன. இப்போது எதற்கும் இருக்கட்டு மென்று, விதானத்தில் கூட ஒன்றை மாட்டிவைத்திருக்கிறாள்.
இந்த நாற்பது வயதுக்குள் தன் உடலால் வீட்டிலும் வெளியிலும் பெருத்த அவமானங்களை சந்தித்திருந்தாள். வெளியில் பட்ட அவமானங்கள் நாளடைவில் மறைந்துவிட்டன. வெளியில் எப்படித் திருப்பியடிப்பது என்பதை வாழ்வு கற்றுக் கொடுத்திருந்தது. ஒரு சொல் வரும் முன்னரே தற்காப்பாக உடல்மொழியும், பார்வையும் தேவைப்பட்டால் கச்சிதமான சொற்பிரயோகங்களும் அவளுக்குத் தன்னிச்சையாக வந்து விழுந்தன. வீட்டினுள் நெருக்கமானவர்களிடமிருந்து, கேலிப் பேச்சுகள் என்ற பெயரில் வரும் அம்புகளுக்கு அவளிடம் பதிலில்லை. அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே தனியாக வீடெடுத்து தங்கியிருந்தாள்.
குளிப்பதென்பது அவளுக்கு வழமையான ஒன்றல்ல. அது அவளது காலைச் சடங்குகளில் தலையாய ஒன்று.பல சடங்குகளை வரிசைக் கிரமமாக கொண்டது அவளது காலை. எல்லாமுமே தன் உடம்பைப் பேணுவதாக இருந்தது. காலையின் சூரிய வெளிச்சம் உடம்பில் படும்படி சிறிது நேரம் நிற்பாள். அப்படி நின்றபடியே தனது டீயைக் குடிப்பாள். பின் எண்ணெய்க் குளியல். சில நாட்கள் ஆலிவ் எண்ணெய், சில நாட்கள் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் என்று அவளது மனநிலையை பொருத்து மாறுபடும்.
பின்பு அவளுக்கு பிடித்தப் அறையான குளியலறைக்குச் செல்வாள்.
பாதுகாப்பாக மூடியிருக்கும் உடலைத் தோலுரித்து அதன் அத்தனைக் குறைபாடுகளுடன் கண்ணாடியில் பார்ப்பதென்பது பல வருடங்களுக்கு முடியாத ஒன்றாகவே இருந்தது அவளுக்கு. அதற்கென்று பிரத்யேகமான மனதைரியம் தேவைபட்டது. அது எவ்வளவு குறைபாடுள்ளதாக இருந்தாலும் ஒருவித அழகு எல்லா உடம்பின் உள்ளிருந்தும் உடைத்து வெளிவரும். அந்த தருணத்தைக் கடந்து வந்தவள் என்பதால் இப்போதெல்லாம் அனாமிகா தன் உடலை ஆராதித்தாள். அவளது உருவமற்ற முகத்தை, சதையால் மறைந்திருக்கும் கழுத்தை, பெருத்து வயிறு வரைதொங்கும் மார்புகளை, உரசி உரசி சிவந்த தொடைகளை, இவ்வளவு எடையையும் தாங்குவதற்கு வலுவற்ற சிறிய பாதங்கள் அனைத்தையும் கொண்டாடினாள். பார்த்துப் பார்த்துப் பூரித்தாள்.
அவளுக்கு வயதாக வயதாகத் தான் அவளது உடல் பிடித்துப்போகத் தொடங்கியது. இல்லை இப்படி வைத்துக் கொள்ளலாம். வயதானபின்தான் அவளது உடல் தன் சுய ரூபத்தை அவளிடம் வெளிக்காட்டியது. அது வரை, எல்லோரது உடலைப் போல வெறும் உடலாக மட்டுமே இருந்தது. பின் ஒரு நல்ல நாளில் தன் பொக்கிஷப் பெட்டியின் பூட்டுகளை எல்லாம் திறக்கும் சாவியை அவளிடம் கையளித்தது. அந்தச் சாவி ஒரு புள்ளியின் வடிவில் இருந்தது.
ஆனால் இந்தக் கட்டத்திற்கு வருவதற்கெல்லாம் அவளுக்குப் பலப்பல வருடங்கள் ஆனது.
இளம் வயதிலிருந்தே குண்டச்சி, குண்டோதரி, குட்டி யானை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டவள். பள்ளி நாட்களில் அவள் வகுப்பு பையன்கள் இப்படி வெளிப்படையாக்க் கேலி செய்தார்கள் என்றால் வகுப்பு சிறுமிகள் மிக நுணுக்கமாக அவளைப் புறக்கணித்தார்கள். சிறுமிகள் அசாதரண அரசியல் நிரம்பியவர்கள். அவர்கள் சக மாணவர்கள் முன் ஒரு மாதிரியும் , ஆசிரியர்கள் முன் ஒன்றுமே அறியாதவர்கள் போலவும், வீட்டில் வேறு விதமாகவும் இருப்பவர்கள். தோழிகள் மத்தியில் மட்டும்தான் தங்கள் சுயரூபத்தைக் காண்பிப்பார்கள். அவர்களுடைய கோரைப் பற்களும், நீள் நகங்களும் வெளியில் தெரிய எல்லோரையும், எல்லாவற்றைப் பற்றியும் இரக்கமின்றித் தீர்ப்பெழுதுவார்கள். பள்ளியில் அவளை ஒரு நாள் விடாமல் தினமும் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள்,அழவைத்திருக்கிறார்கள். மறக்கவே முடியாத நச்சு வார்த்தைகளால் அவள் உடம்பை வர்ணித்திருக்கிறார்கள். அவள், தோழி என்று முன்பு நினைத்திருந்தவள், தன்னை எவ்வளவு குரூரமாக நடத்தி தன் அகத்தை உடைத்திருக்கிறாள் என்று, வளர்ந்த பின்புதான் புரிந்து கொண்டாள். அதுவும் பல கௌன்சலிங்குகளுக்குச் சென்ற பின்பு தான் புரிந்தது. சிறுமிகளைப் போலக் குரூரமானவர்கள் உலகத்திலேயே இல்லை என்று நம்பினாள்.
ஒவ்வொரு நாளும் அவள் வெறுப்பவைகளைப் பற்றி தேதியிட்டு வரிசைக் கிரமமாகத் தன்னுடைய 20 ஆவது பிறந்த நாளில் தொடங்கி எழுதிக் கொண்டு வந்தாள். இது அவளது இரவுச் சடங்குகளில் ஒன்றாக இருந்தது . தூங்கும் முன் படுக்கையறையிலோ அல்லது வெளியில் நிலாவின் குறைந்த வெளிச்சத்திலோ, உடம்பும் மனதும் தளர்வாக உட்கார்ந்து கொள்வாள். அந்நாளைய காயங்களைத் தானே ஆற்றிக் கொள்ளும் விதமாக எழுதி வந்தாள்.தினம் எழுதும் நோட்டையும் , அவளுக்குப் பிடித்த பச்சை மை நிரப்பிய ஃபௌன்டன் பேனாவையும் எடுத்துக்கொண்டு சாய்ந்து உட்காருவாள். பின் காலையிலிருந்து தன் உடலால் அவளுக்கு நேர்ந்த துயரங்களை ஒன்றுவிடாமல் பட்டியலிடத் தொடங்குவாள்.
அன்றைக்கான பக்கத்தின் நடுவில் ஒரு கோடு கிழித்து இரண்டாகப் பிரிப்பாள். முதல் பாகத்தில் தானே தன்னைப் பார்த்து அசிங்கப்பட்டது அல்லது சங்கடமாக உணர்ந்தது ,இரண்டாம் பாகத்தில் மற்றவர்கள் அவளை அவமானப்படுத்தியது என்று பிரித்து வைத்துக் கொள்வாள். ஒரு நொடிப் பொழுதின் பார்வையைக் கூட அவள் மிகச் சரியாகப் படித்துவிடுவாள். இதைப்போல வழக்கத்திற்கு மாறான மின்னல் பார்வைகள், பதில் சொல்வதற்கு முன்னான நூற்றின் ஒரு நொடி தயக்கங்கள், பத்தின் ஒரு நொடிப்பொழுது மட்டுமே சற்று விரியும் கண்கள், அவளிடம் பேசும் குரலின் தொணி (அது மற்றவர்களிடம் பேசும் தொணியிலிருந்து எப்படி மாறுபடுகிறது.) அவளது உருவமற்றுப் பெருத்திருக்கும் முகத்தைப் பார்க்கும் பார்வைகள், ஒரு காட்சிப்பொருள் போல உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் பார்க்கும் பார்வைகள், அவளிடம் மட்டுமே கேட்கப்படும் சில கேள்விகள், அந்தக் கேள்விகளுக்குப் பின் தொக்கி நிற்கும் கேலிகள், விமர்சனங்கள், போலி மரியாதைகள், எதைப் பற்றிப் பேசினாலும் அவளது உடலைப் பார்த்து வந்த அறுவருப்பு மட்டுமே அப்பியிருக்கும் கண்கள்… இப்படி ஒவ்வொரு நாளும் தாளின் இந்த பாகம் மட்டும் நிரம்பி வழியும். சில நாட்கள் மூன்று நான்கு பக்கங்களுக்கு நீளும். அவள் ஒவ்வொரு நாளையும் கடப்பதற்கு இந்தப் பட்டியல் உதவியது . மனதில் இருக்கும் வேதனைகள் ஓரளவிற்கு குறைவது போலிருக்கும் . அதற்காகவே எவ்வளவு உடல் உபாதை மன உபாதை இருந்தாலும் நாள் தவறாமல் இதை செய்து வந்தாள். அவள் அகராதியில் பாதி பக்கத்துடனே முடிந்துவிடும் நாட்கள் மகிழ்வானவை. வெற்றுத் தாளாக முடியும் நாட்களை அப்போதெல்லாம் அவள் கடந்தேயில்லை. வெளியிலேயே சொல்லாமல் யாரையுமே பார்க்காத நாட்களில் சுயவெறுப்பு மிகுதியாக இருக்குமென்பதால் தாளின் முதல் பாகம் நிறைந்து வழியும். இப்படிப் பல வருடங்களாக எழுதிய புத்தகங்கள் மட்டுமே ஒரு பீரோ நிறையப் பூட்டி வைத்திருந்தாள்.ஒவ்வொரு நாளும் இரவில் நடக்கும் இந்த துக்க நாடகம் போதாதென்று சில நாட்களில் பகலிலும் தன் பழைய டையரிகளை எடுத்துப் படிப்பதுண்டு. அது பழைய மறந்த நினைவுகளை, அவமானங்களை மிகத் துல்லியமாக கிளர்த்தி விடும். கூடுதல் வேதனையை வலிந்து தருவித்துக் கொள்வாள் (இப்போதெல்லாம் அந்தப் பழைய ட்ராஜெடி க்வீனை நினைத்து வாய் விட்டுச் சிரித்துக் கொள்கிறாள்)
அவளுக்குத் தன் உடம்பில் பிடிக்காதவைகள் என்ற பட்டியிலின் ஒரு சிறு பகுதி..
அவளுக்கு அவளுடைய முடி பிடிக்காது, அதன் தன்மை, நிறம் பிடிக்காது, கண்கள் பிடிக்காது (கொஞ்சம் விசாலமாக இருந்தால் ,தன் பரந்து விரிந்த முகத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று எண்ணினாள்.) மூக்கு பெரிதாகத்தான் இருந்தது, ஆனால் அது கூர்மையாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பாள். நேர்மாறாக உதடுகள் மிகவும் சிறியதாக ஒரு கோடு போல இருப்பது பிடிக்கவில்லை. கழுத்தென்று ஒன்று இருப்பதே தெரியாமல், கன்னத்து தசைகளை மேலிழுத்து தேட வேண்டியிருந்தது. மார்புகள் வயிறு வரை தொங்கிக் கொண்டு இருந்தன. அது பெரிய துக்கத்தைத் தந்தது என்றால் ,அவளது வயிற்றின் சுற்றளவு இளம்வயதில் பல முறை தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறது. அப்படியே வயிற்றை வெட்டியெறிந்து விட வேண்டும் என்ற கோபம், வெறியாக அவளைப் பல நாட்கள் பீடித்திருந்ததுண்டு. தன் வயிற்றை, தொங்கும் மார்புகளை, பெருத்த பின்புறத்தை அவள் தன்னுடைய இளமைக் காலத்தில் வெறுத்தாள். தான் வாழ்வதற்கு லாயக்கற்ற உடலுடன் இருப்பதாக நொந்து கொள்வாள்.
எல்லாவற்றையும் ஒத்திப்போடக்கூடிய குணம் மட்டுமே இன்று வரை அவள் உயிரோடிருப்பதற்கான காரணம். கூடுதலாக கொஞ்சம் சோம்பலும், பயமும் சேர்ந்து அவளை உயிரோடு வைத்திருந்தது.இல்லையென்றால் அவள் இதற்குள், பல்லாயிரம் முறைகள் தற்கொலை செய்து இறந்திருக்க வேண்டியவள்.
ஏன் காயப்படுத்தப்படுகிறோம் என்று சரியாகப் புரியவில்லை என்றாலும், காயப்பட்டுக் கொண்டே இருப்பது வலித்தது. அதற்கு அவளது உடம்பு தான் காரணம் என்று தன் மேலேயே பழியைப் போட்டுக் கொள்ள குடும்பம் அவளுக்குக் கற்றுத் தந்திருந்தது. இப்படி என்ன தவறு செய்தோம் என்று தெரியாமலேயே ஒரு கலங்கலான புகை மூட்டமாக அவளது இளமைக் காலம் முழுவதுமாக கழிந்தது.ஒரு 3டி படத்தின் மூன்றாவது கோணத்தை உணர அதை மூக்கின் மிக அருகில் வைத்து குவிப்பின்றி பார்க்கத் தொடங்கி பின் மெதுவாக பின்னே நகர்த்திக் கொண்டே இருக்க ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அற்புத கணம் – ஒரு யுரேகா மொமண்ட்- அது போல அரிதாக ஒரு தருணம் வாய்த்தது. தன் உடலை அவமானமின்றிப் பார்த்ததும், அதன் அதிஅற்புதத்தை உணர்ந்ததும் அந்தத் தருணத்தில்தான் நிகழ்ந்தது.
தலையை சிலுப்பி அவளது பின்நோக்கிய சிந்தனைச் சங்கிலியை அறுத்தாள். நினைத்தாலே மறுபடியும் அந்தக் கொடிய வருடங்களுக்கு மனதும் உடலும் சென்று கண்கள் இருண்டு கொண்டு வந்தன. வேண்டாம். அதெல்லாம் பழைய அவள். இப்போதெல்லாம் அப்படியில்லை. அவளது அழகு அங்குலம் அங்குலமாக மிளிர்வதைப் பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை. அந்த அற்புத கணம் ஒரு புள்ளியில்தான் தொடங்கியது. இடது பக்கம் கீழ் கழுத்தில் ஒரு புள்ளி பழுப்பு நிறத்தில், மரு போன்றுதான் முதலில் தோன்றியது. அவளுக்கு அந்தப் புள்ளியை பார்த்ததும் ஏதோ ஒரு மகிழ்ச்சி உடம்பெங்கும் பரவியது. இத்தனை நாள் தன்னை வாழ அனுமதிக்காத உடல் அவளிடம் மன்னிப்பு கேட்பது போல, இருட்டு மட்டுமே நிறம்பிய தன்னுடைய தொடுவானத்தில், சூரியன் உதிப்பது போல, உடைந்து, மறந்து போன ஒரு பால்யநட்பை புதுப்பிப்பது போல இருந்தது.
ஒரு வாரத்தில் அந்தப் புள்ளி ஒரு மிளகளவு வளர்ந்திருந்தது.ஆனால் வட்டமாக ஒரே பழுப்பில் இல்லாமல் ஒரு பார்டர் வரைந்ததைப் போல ஒரு அடர்த்தியான பழுப்பு வட்டத்திற்குள் ஒரு லேசான பழுப்பு என்று இரு நிறங்களில் இருந்தது. மிளகை விட ஒரு சுற்று பெரியதாக வளர்ந்து அப்படியே தங்கிவிட்டது.பிறகு அதன் நடுவில் ஒரு வெள்ளைப் புள்ளி தோன்றியது. ஆக, அடர் பழுப்பு வளையம், அதற்குள் லேசான பழுப்பு, நடுவில் வெள்ளை என்றிருந்தது.
அடுத்த புள்ளி மார்புகளிக்கிடையில் வந்தது. வலது மார்பின் மேலேயே வந்திருந்தால் பெரிதாக மகிழ்ந்திருப்பாள். இடது மார்பாக இருந்தாலும் புகார் கூறியிருக்க மாட்டாள் .ஆனால் அது அவளது பிரபஞ்சம் அவளுக்கு அளித்துள்ள பதக்கம் என்று நம்பினாள். மேலும் அவள் புகார் கூறும் நிலையில் இல்லை. கொடுக்கப்பட்டவைகளை நன்றியுடன் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தாள். நமக்கு கிடைக்கும் பதக்கங்களை உரசிப் பார்ப்பது நியாயமாகாது என்பதால் அதன் வளர்ச்சியைத் தினமும் பார்த்து ரசித்து வந்தாள். வந்த புள்ளிகளை வரவேற்று உபசரித்தாள், வரப்போகும் புள்ளிகளுக்காக சிகப்பு கம்பளம் விரித்து காத்திருந்தாள். அவள் ஆசைப்பட்டது போலவே சில நாட்களில் வலது மார்பிலும் ஒரு புள்ளி தோன்றி வளர்ந்து மிளிர்ந்தது. அந்நாட்களில்தான் தன் உடலின் அழகு அவளுக்குப் புலப்பட்டது. தன்னுடைய ஒப்பற்ற உடலை அதன் சகல சௌந்தர்யங்களுடன் ஆராதிக்கத் தொடங்கினாள். அவள் அனுமானித்ததைப் போலவே இந்தப் பதக்கங்கள் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை . அழகான அவள் உடம்பிற்கு அது மேலும் அழகு சேர்க்கும் ஆபரணங்களாகத் திகழ்ந்தன. கண்ணாடி முன் நின்று, கண் கண்ணாடியை மாட்டிக்கொண்டு குனிந்து, நிமிர்ந்து, வளைந்து தன் உடலின் எல்லா பாகங்களையும், எல்லா புள்ளிகளையும் பார்த்துக் கொண்டாள்.
பல கண்ணாடிகளில், பல கோணங்களில் அவளது அழகான புள்ளிகளை நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்
டிருப்பாள்.அந்தக் கண்ணாடிகளில் சில, உருவத்தைப் பெரிதாக்கிக்காண்பிப்பவை. இப்பொழுது அவளது உடம்பில் கண்களுக்கு தெரியாத இடம் என்று ஒன்றுமே இல்லை .அது போலவே அவளது குளியல் அறையிலும் ,ஒரு துளி இடம் கூட மிச்சமில்லாமல், எல்லா இடத்திலும் சிறிதும் பெரிதுமாக கண்ணாடிகள் நிறைந்திருந்தன.
தினமும் புள்ளிகள் தோன்றுவதற்குக் காத்திருந்தாள், இவளை ஏமாற்றாது உடலில் வெவ்வேறு பாகங்களில் அவை தோன்றி, மூவர்ணமாக வளர்ந்து வந்தன. சில புள்ளிகள் குறைபிரசவத்துப் பிள்ளைகளைப் போல கடுகினும் சிறிதாக நின்று விட்டன. சில மிளகை விட சற்றுப் பெரிதாக வளர்ந்து முழுமையாகத் திகழ்ந்தன.ஒரு புள்ளி சுண்டைக்காயளவிற்கு வளர்ந்தது அவளது தொப்புளூக்குப் பக்கத்தில், கேட்காமல் கொடுக்கப்பட்ட வரத்தைப் போல ஜோலித்துக் கொண்டிருந்தது. நாளுக்கு நாள் ஒரு மயிலைப் போல இல்லை, புள்ளிகள் என்றாலே மான் தானே, தன்னை ஒரு புள்ளிமானைப் போல உணர்ந்தாள். துள்ளித் திரியத் தொடங்கினாள். அவளது கண்கள் கூட மானின் கண்களைப் போல பெரிதாக ஆனது போலிருந்தது. மாடிப்படிகளில் குதித்துக் குதித்து இறங்கினாள். சாலைகளில் நடக்கும் போது ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குப் பாய்ந்தாள். பைத்தியம், மண்டைக் கோளாறு என்று பலவாறாக ஏசியவர்களை தலையை சிலுப்பிக் கொண்டு தன் கிளைத்த கொம்புகளால் குத்தப் போனாள். அவள் ஒரு காட்டு மானாகவே மாறினாள்.
இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி நான்கு கால் பாய்ச்சலில் ஓட வேண்டும் என்று உள்ளிருந்து ஏதோ ஒன்று உந்தித் தள்ளியது. இவ்வளவு நாள் தனக்குத் தீங்கிழைத்த பிரபஞ்சம் ஒரு வழியாக தன் தவறை உணர்ந்து திருந்தி விட்டதில் மகிழ்ச்சியடைந்தாள்.
ஒவ்வொரு புள்ளியும் வருவதற்கு முன்னும் அது நிகழவிருப்பதற்கான சமிக்ஞைகள் தென்பட்டன. எந்நாளும் உற்சாகமானவள் அந்நாட்களில் அடக்க முடியாத களிப்புடன் காலையில் எழுவாள். ஒரு வித சிலிர்ப்பு தோன்றித் தோன்றி மறையும். அலையலையாக உள்ளிருந்து மூச்சை முட்டுவது போல ஏதோ ஒன்று தொண்டை வழி பொங்கிப் பொங்கி, பின் அடங்கும். அவளால் ஒரு இடத்தில் உட்கார முடியாது. ஒரு பெரிய
பசிய காடே இவள் வருகைக்காக செழித்துக் காத்திருப்பது போலிருக்கும். நன்கு பரிச்சயமான அந்தக் காட்டின் நீள அகலங்கள் மனதுள் விரியும். அதன் புல் வெளிகளும் அடர் மரங்களும், மரத்தின் பொந்துகளும், ஒரு விடியோ கேமின் திரையில் தோன்றுவதைப் போல அப்படியே பல்கி பெருகி அவள் மனதுள் ஓடும்.
எல்லாமுமே கூடுதல் பிரகாசமாகத் தோன்றும். அவள் சாலையில் நடக்கும் போது மூவர்ண ஜிகினாக்கள் மழையாகப் பொழியும். தான் இவ்வுலகத்தை உய்விக்க வந்தவள் என்ற எண்ணத்துடன் அந்நாள் கழியும்.பின் அடுத்த நாள் காலை தன் உடம்பில் மிகச் சிறிய புள்ளி ஒன்றைக் கண்டடைவாள். இப்படி கொண்டாட்டமாகத்தான் ஒவ்வொரு புள்ளியும் பிறந்து வளர்ந்து அவளது உடலின் பாகமாக மாறும்.
தான் தனித்துவமானவள் என்று புரிந்துகொள்ளத் தொடங்கினாள்.
பாழடைந்த நூலகத்தில் நூல்களின் மேலுள்ள தூசியைத் துடைத்த உடன் துலங்கும் அட்டைகளும் எழுத்துகளும் போல பளிச்சென்று, சட்டென்று எல்லாமே துலக்கமாக விளங்கியது.. அந்த அறிவு இவ்வளவு நாள் எங்கிருந்ததென்று கேட்காதீர்கள்- மன இருள் விலகி ஞானம் துலங்குவதைப் போல ஒன்று. இதைப் பற்றி இரவில் எழுதும்போது வார்த்தைகளின் போதாமையை உணர்ந்தாள். இப்போதெல்லாம் பக்கங்களைக் கோடு கிழித்து இரண்டாகப் பிரிப்பதில்லை. தன் மன எழுச்சிகளை பட்டியலிட முயன்றாள். பேனாவை ஒரு நிலையில் பிடிக்க முடியாமல் கைகள் துடிக்கும் அளவு மகிழ்ச்சியை எப்படி எழுதுவது. வார்த்தைகளெல்லாம் தாளில் அமைதியாக உட்காராமல் ஏதோ அனிமேஷன் படம் போல எழுந்து நடமாடினால் எப்படி எழுத முடியும். மகிழ்ச்சி சந்தோஷம் இதையெல்லாம விட மேலான ஒன்று, பன்மடங்காக மனிதில் பல்கி, பெருகி, பொங்கும் போது எந்த வார்த்தையைக் கொண்டு விவரிக்க முடியும்.
எழுதுவதை நிறுத்தினாள்.
புள்ளிகளைப் பார்த்துப் பார்த்து எந்த ஒரு கட்டத்திலும் அவள் சலித்துவிடவில்லை. நம் கைகளைப் போல கால்களைப் போல,கண்களைப் போல இயல்பானதுதானே ,அதில் என்ன இருக்கிறது என்று ஒரு நாள் கூட அவளுக்குத் தோன்றியதல்லை.ஒவ்வோரு நாளும் புதிதாக பூத்த பூவைப் பார்ப்பது போல, அவற்றைப் பார்த்து ரசித்து வந்தாள். குளித்து முடித்து அதன் மேல் க்ரீம் தடவியதும் அந்த வண்ணங்கள் மேலும் மெருகேறி ஒவ்வொரு வண்ணமும் துல்லியமாக மிளிர்வதைப் பார்த்துப் பூரிப்பாள்.
உடைகளைத்தாண்டி வெளியில் தெரியும் இடங்களில் பல புள்ளிகள் இருந்தன என்றாலும் ஒருவர் கூட அதைக் கவனிக்கவில்லை. அவள் வேலை செய்யும் அலுவலகத்தில் கூட இந்தப் புள்ளிகளை யாரும் கவனிக்கவில்லை. இவள் ஒரு குண்டுப் பெண் அவ்வளவுதான். இவளிடம் உற்றுப் பார்க்க என்ன இருக்கிறது என்று நினைத்து விட்டார்கள் போல. மனிதர்கள் கண்களால் பார்ப்பதில்லை, மனதால், முன்முடிவுகளால், தங்களது விருப்பு வெறுப்புகளால் மட்டுமே பார்க்கிறார்கள் என்று அவளுக்குப் புரிந்தது. தன்னுடைய பக்கத்து க்யூபிகல் ப்ரஸில்லாவிடம் மட்டும் தன் முழங்கையில் உள்ள ஒரு புள்ளியைக் காண்பித்தாள்.
அவள் முகத்தில் ஒரு அருவறுப்புடன்,
“ஐயோ என்னதிது” என்றாள்.
பின் தோல் வியாதியில் தொடங்கி புற்றுநோய் வரை அது என்னவாகவெல்லாம் இருக்கக் கூடும் என்று பட்டியலிடத் தொடங்கினாள், இது தனக்குப் பிரபஞ்சம் அளித்துள்ள பதக்கம் என்பதை எவ்வளவு விளக்கியும் புரியாமல் இவளைப் பைத்தியம் போல பார்த்தாள்.
அவசரமாக டாக்டரைப் பார்க்கப் பரிந்துரைத்தாள். பின் எப்போதும் இவளிடம் நின்று பேசும் தூரத்தை அதிகரித்தாள். பேச்சைக் குறைத்தாள். விலகிச் சென்றாள்.
சாதாரண மனிதர்களால் அனாமிகாவின் தோலில் தோன்றும் புள்ளிகளைப் புரிந்துகொள்ள முடியாது என்று தீர்மானமாக நம்பினாள். அவள் இப்போதெல்லாம் ‘நான்’, ‘என்னை’, ‘எனக்கு’ என்று தன்னைப் பற்றி நினைப்பதில்லை, ஒரு சிறு பிள்ளையைப் போல தன் பெயரைக் குறிப்பிட்டே தன்னைச் சுட்டிக் கொள்கிறாள். புள்ளிகள் தோன்றுவதற்கு முன் இப்படி இல்லை.
கோகுலை அவள் வழக்கமாகப் போகும் ஜிம்மில் தான் பார்த்தாள். முதல் பார்வையில் இவளைப் போல ஒருவனாகத்தான் தெரிந்தான், என்றாலும் கண்களில் தன்னம்பிக்கையும் கொஞ்சமே கொஞ்சம் அலட்சியமும் தெரிந்தது. அவன் அவளை சில மாதங்களாகக் கவனித்து வருகிறான் என்று அவன் சொல்லித்தான் அவளுக்குத் தெரியும். சாதாரணமாக ஒரு சிரிப்பில், பேச்சில் தொடங்கிய நட்பு ஒரு மாதத்திற்குள் காபி ஷாப் வரை அழைத்துப் போனது. ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தான். விடாமல் பேசிக் கொண்டேயிருந்தான்.தானே தன் குரலைக் கேட்பதில் பெருவிருப்பம் கொண்டவன் போல என்று நினைத்தாள்.
சிமோன் டி பூவ்வா என்றான், முதல் அலை, இரண்டாம் அல்ல பெண்ணியம் என்றெல்லாம் பேசினான். அவன் பேச்சு எப்போதுமே இவளுக்கு கொஞ்சமும் பரிச்சயம் இல்லாதவைகளைப் பற்றியே இருந்தது.
சார்தர் மற்றும் சிமோன் டி பூவ்வாவின் காதல் கதையை சொன்னான். அவர்களின் நிபந்தனையற்ற காதலை விதந்தோதினான். சார்தர் தன் காதலி பூவ்வாவின் ஒப்புதல் இல்லாத எந்தப் படைப்பையும் வெளியிடுவதில்லை என்று சொல்லியிருக்கிறார், அப்படிப்பட்ட அமர காதல் என்றான். ஆனால் அதுவும் கூட கடைசியில் கசந்து விட்டது என்று உச்சுக் கொட்டி வருத்தப்பட்டான். அன்று ,தான் அந்த சரித்திர மேதை சார்தரை விட ஒரு புள்ளி அதிகமாக உளவியலை அறிந்தவன் என்று தொணிக்கும்படி எதுவோ ஒன்று சொன்னான்.
அது என்னவென்று இப்போது அவளுக்கு நினைவில் இல்லை என்றாலும், சட்டென்று வெடித்து சிரித்து விட்டாள். அவன் அவளைக் கவர நினைப்பது ‘க்யூட்’ ஆக இருந்தது.
இதுவரை அப்படியான ஒரு கவனிப்பு அவளுக்குக் கிடைத்ததில்லை. அந்த உணர்வு புதிதாக இருந்தது. மிகவும் பிடித்திருந்தது.
அவள் இதுவரை புத்தகங்கள் ஏதும் பெரிதாகப் படித்ததில்லை. இப்போது அவனுக்காகப் படிக்க தொடங்கும் எந்த எண்ணமுமில்லை. ஆனால் அவன் சொல்லும் எல்லாவற்றையும் வியப்புடன் கேட்டுக் கொண்டாள்.
அவளது மனதை அல்லது அவன் வார்த்தையிலேயே சொல்வதென்றால் அவளது ‘ஸ்பிரிட்டை’ காதலிப்பதாக சொன்னான். அவள் ஜிம்மிற்குள் நுழையும் போது அவளுடன் சேர்ந்து ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்து உள்ளே வருகின்றன என்றான் . இதை மட்டும் முழுவதாக நம்பினாள். ஏனென்றால் இவன் சொல்வதற்கு முன்னாலேயே அவளுக்கு அப்படித்தான் இருந்தது. அவள் தினமும் ஆயிரம் பட்டாம்பூச்சிகளுடன் பறந்து கொண்டிருந்தாள்.
அவனும் தன்னைப் போல எப்போதுமே உடல் இடையுடன் போராடுபவனா என்பதை அறியும் ஆர்வத்தில், கோகுலிடம் அவனுடைய பள்ளி, கல்லூரி காலம் பற்றி கேட்டாள்.
“ நான் ரொம்ப பாப்புலர் பர்ஸன் எங்க ஸ்கூல்ல. நான்தான் ஸ்போர்ட்ஸ் காப்டன். ஷாட்புட்ல என்னை அடிச்சுக்க ஆளே கிடையாது. நிறைய நண்பர்கள்…..”
என்று இவளது கதைக்கு நேர் எதிராக ஒன்றைச் சொன்னான். அனாமிகாவால் நம்பவே முடியவில்லை. ஒரே பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இருவருக்கு எப்படி நேரெதிரான இருவேறு அனுபவங்கள் இருக்கும் என்று எண்ணினாள். அவன் தன்னுடைய எடையை, தோற்றத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்று புரிந்தது. இவளுடைய தோற்றத்தையும் கூட ….
யாருடைய வெளித்தோற்றத்தைப் பற்றியும் இந்த இரண்டு மாதத்தில் அவன் பேசியதில்லை . அதுவே அவளை வெகுவாக ஈர்த்தது. இவளைப் போல அவன் பிறரால் சீண்டப்படவில்லையோ என்ற சந்தேகம் இருந்தாலும் அப்படி சீண்டினாலும் அவன் அதைக் கண்டுகொள்ளமாட்டான் என்று புரிந்தது. அனாமிகா கோகுலைக் காதலிக்கத் தொடங்கினாள். அது காதல் தான் என்று நம்பினாள்.
தன் காலைச் சடங்குகளைவிட ஒன்று தனக்கு முக்கியமாகிப் போகும் என்று இதுநாள் வரை அவள் நினைத்ததில்லை. காலையும் மாலையும் பேசிக் கொண்டார்கள். சினிமா பார்த்தார்கள், புத்தகக் கடைக்குச் சென்றார்கள். கோகுலிற்கு எல்லாவற்றைப் பற்றியும் ஒரு அபிப்பிராயம் இருந்தது. உலகத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் அவனிடம் ஒரு தீர்வு இருந்தது.
இந்த உலகத்தை முழுதாக அவனிடம் கொடுத்துவிட்டால், தலைமையேற்று, எல்லாவற்றையும் தனியாளாக சரிசெய்து வழிநடத்திக் கொண்டுபோகும் திறமை தன்னிடம் உள்ளது என்று தீர்மானமாக நம்பினான். அதை எந்தக் கூச்சமுமில்லாமல் அப்படியே அவளிடம் சொன்னான். இதையெல்லாம் அவள் நம்பவில்லை என்றாலும் அவனது தன்னம்பிக்கை வசீகரித்தது.
அவன் அவளது கையில் தெரிந்த புள்ளியைப் பற்றி ஏதாவது கேட்பான் என்று தினமும் காத்துக் கொண்டிருந்தாள். அவன் அதைக் கவனித்திருக்கிறான் என்று நிச்சயமாகத் தெரிந்தது.ஆனால் எதுவும் கேட்கவில்லை . அவளே ஒரு நாள் அதைப் பற்றி அவனிடம் பேசத் தொடங்கினாள்.
வார்த்தைகளுக்காகத் திணறினாள், பக்கத்து க்யுபிகல் ப்ரஸில்லாவிடம் சொல்வதைப் போல சுலபமாக அவனிடம் சொல்ல முடியவில்லை. என்ன சொல்வது என்று பல முறை ஒத்திகைப் பார்த்திருந்தாள் என்றாலும் தயங்கித் தயங்கிதான் தனது அற்புதப் புள்ளிகளைப் பற்றி கோகுலிடம் சொல்ல முடிந்தது. முதல் முறையாக இவள் பேச அவன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய கண்களை கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். எந்த தீர்ப்பும் எழுதவில்லை . வியப்புடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். பேசிமுடித்தவுடனும் அவன் கண்விரிய அவளையே பார்த்தான்.
“ நீ என்ன க்லாஸட் எழுத்தாளரா ? நீ மட்டுமே ரகசியமாகப் படிக்க, எழுதி வைத்துக்கொள்வியா?” என்றான்.
“ஜார்னல் எழுதுவேன்” என்றாள் குழப்பத்துடன் ‘‘எதுக்குக் கேக்கற”
இவள் கேள்வி கேட்டால் ஒன்று கடந்து செல்வான் அல்லது எதிர் கேள்வி கேட்பான் பெரும்பாலும் பதில் சொல்ல மாட்டான்
“கால்ல கூட பார்த்தேன், நிறைய புள்ளிகள் இருக்கா?” என்றான்
“ம்ம்…”
“ நான் பார்க்கலாமா? எல்லா புள்ளியையும்…” என்றான் .
அவன் முகத்தில் புன்னகையின் பின் ஒரு சிறு பயமும், கெஞ்சலும் தெரிந்தது. இவளைக் காதலிக்கிறான் என்று சர்வநிச்சயமாக உணர்ந்தாள்.
கொஞ்சமும் தயங்காமல் அவனை வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
மறுநாள் அவளது காலைச் சடங்குகளில் மூழ்கியிருந்தாள். ஏதோ ஒன்று நெருடலாக இருந்தது. அவள் மனம் எதையோ நெம்பிக் கொண்டேயிருந்தது பல்லில் சிக்கிய நாரை நெம்பிக் கொண்டேயிருக்கும் நாக்கைப் போல . தன் வாழ்நாளின் மிக அற்புதமானதொரு இரவைக் கழித்த மகிழ்ச்சி இருந்தது உண்மைதான். ஆனால் நெருடலான ஒன்றைச் சொல்லிவிட்டுச் சென்றான். அதிகாலையில் அவன் கிளம்பும் முன் விளையாட்டாக.
“இதெல்லாமே கலர் டாட்டூதானே” என்றான்.
தன்னை மீட்டெடுத்த புள்ளிகளைப் பற்றி, தான் இன்னும் உயிரோடிருப்பதற்கான காரணம் பற்றி பெரிதாக விளக்கம் கொடுக்கத் தொடங்கினாள், ஆனால் ஏதோ ஒன்று தடுக்க…
“இல்லை” என்று மட்டும் சொன்னாள்.
அவன் இயல்பாக கிளம்பிவிட்டான்.
அவள் வகுப்புக்குள் நுழையும்போது
“கு..ண்…ட..ச்…சி , கு..ண்..ட…ம்…மா,’’ என்று மேசையைத் தட்டிக் கொண்டு இசைமையான கோஷம் போட்டு வகுப்பே அலறிக் கொண்டிருக்க, தலை கவிழ்ந்து, மனது வெடித்து, கடைசி பெஞ்சில் உட்கார்ந்து, முகம் பொத்தி அழுதது மனதில் வந்து போனது.
அவளது வயிற்றில் ஒரு சிறு உருட்டல் முடிச்சாக இறுகியது .
அவன் அழைத்த போது பேசலாமா வேண்டாமா என்று நினைக்கும் போதே கை அநிச்சையாக போனை அழுத்தியிருந்தது. பேசும் போது அவனது உற்சாகம் அவளைத் தொற்றிக் கொண்டது. எப்போதும் போல பேச, இருக்க முடிவு செய்தாள். அன்று இரவு ஒருவர் மீது ஒருவர் திளைத்திருந்தது, இருவரிடமும் இருந்த வியக்கத்தக்க ஒத்திசைவு இதெல்லாம் உண்மை என்றால் எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை வந்தது. ஆனாலும் பக்கத்து க்யூபிகல் ப்ரஸில்லா கூட இவளை நம்பினாள், டாக்டரைப் பார்க்கச் சொன்னாள். இவன்…. என்று மனம் ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு தான் இருந்தது. வயிற்றின் முடிச்சு அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டது .
பின் ஒரு சந்திப்பின் போது “உனக்கு அபாரமான கற்பனை வளம்” என்றான்.
ஏனோ அதில் எள்முனை அளவு விமர்சனம் இருப்பது போல, தன்னை ஏற்றுக்கொள்ளாதது போல தொனித்தது. எதுவும் பேசாமல் அதையும் முழுங்கிவிட்டாள். ஒவ்வொரு சந்திப்பிலும் தன் புள்ளிகளைப் பற்றி ஏதாவது ஒன்று சிறிதாக சொல்லத் தொடங்கினான்.
வீட்டிற்கு வரும் நேரங்களில், உறவு கொள்ளும் நேரங்களில் விளையாட்டாக அவளது புள்ளியை அழுந்தத் தேய்த்துப் பார்ப்பான், அது அழிகிறதா என்று பார்ப்பது போல.
ஒரு முறை “என்னை நம்பலயா? இது டாட்டூ என்றா சந்தேகப்படற?” என்றாள்
“டாட்டூ இல்லையா?” என்றான்.
எப்போதும் போல இவளது கேள்வியை மற்றொரு கேள்வியால் எதிர்கொண்டான்.
அவள் இரவில் தன் புத்தகத்தின் நடுவில் கோடு கிழித்து எழுதத் தொடங்கினாள்.
ஒரு நாள் தன் காலைக் குளியலுக்கு முன் எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்த போது தான் கையில் உள்ள புள்ளி மங்கியிருப்பதைப் பார்த்தாள். அந்த அழகான அழுத்தமான பழுப்பு நிறமும் உள்ளே உள்ள மங்கலான நிறமும் வேறுபாடு இல்லாமல் ஒரே நிறமாகத் தெரிந்தது. நடுவில் உள்ள வெள்ளைப் புள்ளி கூட சாயம் இழந்து கிட்டத்தட்ட அவளது தோலின் நிறத்திற்கு மாறியிருந்தது. மற்ற புள்ளிகளும் சற்று மங்கலாகத் தொடங்கியது போல இருந்தது .தொண்டையில் ஏதோ ஒன்று அடைத்தது, சிறு குழந்தையைப்போல வாய்விட்டு சத்தம் போட்டு அழுதாள்.
கோகுலிடம் இதைப் பற்றிப் பேசப் பிடிக்கிவில்லை. ஒரு வகையில் அவன்தான் இதற்கு காரணம் என்று அவனைக் குற்றவாளியாக்கினாள். ஆனால் அவனிடம் இயல்பாக இருக்க முயன்றாள். வாரம் ஒரு முறையாவது அவன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்ததைத் தடுக்கவில்லை.
புள்ளிகள் மங்கிக் கொண்டு வந்தன. சில மறைந்தே போயின. இதைப் பார்க்க சகிக்காமல் தன் குளியலறையிலிருந்து சில கண்ணாடிகளை அகற்றினாள். விரும்பிச் செய்யும் காலைச் சடங்குகளை கடனே என்று விரைந்து முடித்துக் கொண்டாள். ஒரு வானவில்லைப் போல சுவடே இல்லாமல் மறைந்து போன ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு முறையாவது அழுதாள்.
நிலவொளியில் உட்கார்ந்து தன் இரவுப் புத்தகத்தில் பக்கம் பக்கமாக எழுதினாள்
நிலாவிடம் தன் ஆவலாதிகளைச் சொல்லி அழுவது என்பது சிறுவயது பழக்கம். உள்ளொடிங்கியவர்களுக்கு இரவையும் , நிலவையும் போன்ற தோழர்கள் கிடையாது. இரவின் சன்னமான ஒளி, வாகனங்களின் தூரத்து இரைச்சல், பூச்சிகளின் ஒலி, இவளது ஏழாவது மாடியில் தெளிவாகக் கேட்கும் இரவுப் பறவைகளின் படபடக்கும் இறக்கைகள், அவற்றின் சண்டைகள், சமாதானங்கள், கலவிகள்.. இவை எல்லாவற்றின் மத்தியில் நிலா இவளிடம் பேசியது. நிலவிற்கு அடர்த்தியான ஆண் குரல் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும். அதைவிட நிலவிற்குப் பெரிய காதொன்று உண்டு. எப்போதுமே காதை நம்பக்கம் திருப்பி வைத்து நம்மை எதிர்கொள்ளும் வழக்கம் கொண்டது, நம்மைப் பேசவிட்டுக் கேட்கும் நிலவு அவளுக்கு என்றுமே மாறாத தோழன்.
ஆனால் பௌர்ணமி நிலவை மட்டும் அவளுக்குப் பிடிக்காது… அதீத பகட்டான எது ஒன்றையும் அவளால் சகித்துக் கொள்ள முடியாது . அன்றைக்கு மட்டும் குணங்கெட்டு,பித்தேறி, வேஷம் கட்டி, அரிதாரம் பூசி வேறு ஒன்றாக பாவனை காட்டும் நிலாவை அந்த ஒரு நாளைக்கு மட்டும் புறக்கணித்தாள். மற்ற நாட்களின் நெருக்கத்தைக் கருத்தில் கொண்டு அன்று மட்டும் அதை விட்டுத் தள்ளிப் போவாள். பௌர்ணமி இரவுகளில் அவள் வெளியிலேயே தலை காட்ட மாட்டாள். ஜன்னல் திரைகளை நன்றாக இழுத்து விட்டுப் படுக்கையறையில் அவளது இரவின் புத்தகத்துடன் அமர்ந்துவிடுவாள்.
ஏனோ புரியவில்லை, கோகுலின் முகம் ஒரு பௌர்ணமி நிலவைப் போல வந்து போனது. நாளை அவனை சந்திக்கும் போது அவனிடம் தன் புள்ளிகளைப் பற்றிப் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
“ என்னது? முக்கியமான விஷயம்னு சொன்னியே” என்றான்.
கடந்த வாரம் முதல் எவ்வளவு துக்கமாக கழிகிறது, எப்படி அவளது நடையின் துள்ளல் மறந்து உடம்பின் ஒவ்வொரு கிலோ கணமும் அவளைப் பிடித்து,விசையோடு கீழே இழுக்கிறது, எப்படித் தன் கருப்பு வெள்ளை வாழ்க்கையில் வண்ணம் சேர்த்த புள்ளிகள் தன்னை விட்டுப் போனது, எப்படி ஒவ்வொரு காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும்போதும், கேடயமற்று போர்க்களத்தில் தனித்து நிற்கும் படைவீரனைப் போல நிர்வாணமாக உணர்கிறாள், எப்படி அவன் இதைப் பற்றியெல்லாம் எந்த ப்ரக்ஞையும் அற்று , சார்தர் ,காம்யூ இருவருக்கும் இடையில் இருந்த போட்டியைப் பற்றியும், இருத்தலியல் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறான், இதிலெல்லாம் தனக்கு முன்னால் அமர்ந்திருப்பவளுக்குக் கொஞ்சம் கூட ஆர்வமில்லை என்று எப்படிப் புரியாமல் இருக்கிறான், எல்லாவற்றையும் விட முக்கியமாக இதுவரை தன் வாழ்வில் நடந்த உன்னதமான ஒன்றையே எப்படி நம்பாமல் இருக்கிறான், ஒவ்வோரு முறை அதை டாட்டூ என்று அவன் சொன்னபோதும் எப்படி வயிற்றின் முடிச்சு இறுகி துக்கப்பட்டாள் என்றெல்லாம் சொல்ல நினைத்தாள்.
ஆனால் வாயிலிருந்து வந்ததென்னவோ “ நாம பிரிஞ்சிடலாம். இது சரியா வரலை” என்பதுதான். சங்கிலிகள் அறுபட்டது போல ஒரு விடுதலை உணர்வு வந்தது.
அதற்குப் பிறகு அவன் பேசியது எதுவும் கேட்கவில்லை . தலையிலும் ஏறவில்லை . “ட்ராமா க்வீன்”, ஓவர் இமோஷனல், இப்படி ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும் அவள் காதில் விழுந்தன.
வயிற்றின் முடிச்சு தளர ஆரம்பித்தது. அவளது வானில் வானவில் தோன்றவில்லை என்றாலும், தெளிவாகவும் நிர்மலமாகவும் இருந்தது.
எவ்வளவு சிரித்தாலும், ஏளனமாக நினைத்தாலும் இதை மட்டும் ப்ரஸில்லாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது.
“உலகத்திலேயே மிகச் சிறிய காதல் கதை இது” என்று சிரித்தாள் ப்ரஸில்லா. ஆனால் அந்தச் சிரிப்பில் ஏளனமில்லை… லேசாக அனாமிகாவின் தோளைத் தட்டிக் கொடுத்தாள். முதல் முறையாக அவளைத் தொடுகிறாள். முதல் முறையாக அவளது கண்களைப் பார்த்துச் புன்னகைத்தாள்.. சிரிக்கவில்லை புன்னகைத்தாள். அனாமிகாவிற்கு குழப்பமாக இருந்தது. அவள் பழைய ப்ரஸில்லாவாக சற்று குரூரமாக இருப்பதே நல்லது எனப்பட்டது.
கோகுல் ஜிம்மில் அவளிடம் மன்னிப்பு கேட்டான். திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தான்.
“நம்ம இரண்டு பேர்க்கும் நடுவில ஏதோ ஒரு விசேஷமான கனெக்ஷன் இருக்கு” என்று.
அவனிடம் மிகவும் தன்மையான குரலில் சொன்னாள் அனாமிகா:
“உனக்கு நீதான் முக்கியமானவன்.. அதில் ஒன்றும் தப்பில்லை. நானும் அப்படித்தான். எனக்கு நான் தான் முக்கியமானவள். நீ அறிவின்பால் ஈர்கப்படுகிறவன். உன் அறிவின் மேல் பெருமிதம் கொள்பவன். ஆனால் எனக்கு அறிவைப் பற்றிய அக்கறையே கிடையாது. அதை நான் பெரிதாக மதிப்பதில்லை.”
அவனுக்குத் தன் விளக்கங்கள் போதுமா, புரிந்ததா என்றெல்லாம் கவலைப்படாமல் அவனுடைய தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டாள்.
நமக்குப் பிடித்த ஒன்று நின்றுபோனால் அது ஒரு குறுகிய காலம் வாய்த்த வரம் என்றும் பிடிக்காத ஒன்று தடைப்பட்டுப் போனால் அதை ஒரு விபத்து என்றும் நினைத்துக் கொள்ள வேண்டும் . இது யார் சொன்னது என்று எவ்வளவு யோசித்தாலும் அவளுக்கு நியாபகத்தில் இல்லை. கண்டிப்பாக புத்தகத்தில் படித்ததாக இருக்காது, அவள்தான் படிப்பதேயில்லையே. அதிலும் சுய முன்னேற்றப் புத்தகங்களைப் பார்த்தாலே அவளுக்கு குமட்டிக் கொண்டு வரும். இது தொலைக்காட்சியில் ஏதோ சீரீஸில் கேட்டதாகத்தான் இருக்க வேண்டும்.
சட்டென்று ஒரு துள்ளல் அவளது நடையில் தொற்றிக் கொண்டது. வயிற்றிலிருந்த முடிச்சு முழுவதுமாக காணாமல் போனது. வெளியில் மழைத்தூறல் விழுந்துகொண்டிருந்தது. தன் வாழ்க்கை எவ்வளவு சினிமாத்தனமாக உள்ளது என்பதை நினைத்து அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. முதல் வேலையாக மறுபடியும் எல்லா கண்ணாடிகளையும் எடுத்துக் குளியலறையில் மாட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
மறு நாள் காலையில் தன்னுடைய கைகளில்தான் அதைக் கண்டாள். வலது முழங்கைக்கு அடியில் அக்குளுக்குப் பக்கத்தில் மெல்லியதாக ஒரு கோடு தொடங்கி கைகளை ஒரு சுற்றுச்சுற்றி மணிக்கட்டிற்கு மேலே, அவள் வாச்சின் டயல் இருக்கும் வெயில் படாது சற்று வெளித்திருக்கும் வட்டத்திற்கு பக்கத்தில் வந்து முடிந்திருந்தது. லேசான ஆரஞ்சு நிறத்தில் ,மிகவும் மொல்லியதான கோடு.. உற்றுப்பார்த்தால் கூட தெரியாத ,அங்கு ஒரு கோடு இருக்கவேண்டுமே என்று நினைத்து தேடினால் மட்டுமே கண்களுக்குப் புலப்படும் வண்ணம் மிக லேசாக ஒரு பழுப்பும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் இருந்தது.
அவளுக்குத் தன்னுடைய புள்ளிகலெல்லாம் மறைந்து கோடுகளாவது புரிந்தது. இந்தக் கோடுகளைப் உடம்பில் பெற தன்னைவிட தகுதியுடையவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று உறுதியாக நம்பினாள்.
தன் கைகளையும் கால்களையும் ஒரே பக்கமாக நீட்டிப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவள், மெதுவாக கண்விழித்து தலையை மட்டும் தூக்கினாள். சிறிது நேரம் இலக்கற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த ப்ரபஞ்சத்தின் அமைதி முழுவதும் அவளை ஆட்கொண்டது. இதைவிட அமைதியான ஒத்திசைவான உலகம் யாருக்கு சித்திக்கும் என்று தோன்றியது.அசையாமல் வெகு நேரம் இந்த அமைதியில் அப்படியே திளைத்திருந்தாள் . க்ளிக் என்ற சத்தத்துடன் தன் நகங்களை விரலுக்குள்ளிருந்து வெளியே எடுத்தாள். நிதானமாக ஒவ்வொரு நகமாக நக்கி சுத்தம் செய்யத் தொடங்கினாள். பின் விரல்களுக்கு இடையிலும், உள்ளங்கையையும் ஒரு இடம் விடாமல் சுத்தப்படுத்தினாள். தன் கைகளில் உள்ள ஆரஞ்சுக் கோடுகளை நாக்கால் ஒரே இழுப்பாக இழுத்து நக்கினாள். கால்களில் உள்ள கோடுகளையும்… இழுத்த இழுப்பில் கோடுகளின் மேலுள்ள பூனை முடிகள் படுத்து பின் மெதுவாக எழுந்தன.
பனித்துளிகள் மின்னும் காலைப் புற்களைப் போல ஆடின. தன் கைகளையும் கால்களையும் தரையில் ஊன்றி முதுகைக் குவித்து சில நொடிகள் ,முதுகைக் குழித்து சில நொடிகள் என்று நன்றாக உடம்பை இழுத்துவிட்டுக் கொண்டாள். சாவகாசமாக ஒரு பெரிய மூச்சை உள்ளிழுத்து ஏழாவது மாடியில் இருந்து நான்கு கால் பாய்ச்சலில் படியிறங்கி, ஒரே பாய்ச்சலில் சாலையைக் கடந்து முக்கில் திரும்பி மறைந்து போனது அனாமிகா என்ற பெரும்பூனை.
anuradha69anand@gmail.com