இந்தக் கதையின் மிக முக்கியமான கட்டமே ஒரு காற்பந்தாட்டதை மையமாகக் கொண்டது. அதற்காக அது ஒரு சர்வதேச போட்டியென்றோ அல்லது இரு முக்கியமான குழுக்களுக்கு இடையே நடந்த போட்டியென்றோ நினைத்துக் கொள்ள வேண்டாம். இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் உலகையே ஆட்டிப் படைத்த ஜெர்மானிய ராணுவ வீரர்கள் இடையே நடந்த ஒரு சாதாரண போட்டிதான் அது. ஆனால், அதன் முக்கியத்துவம் இந்தக் கதையைப் படித்தால்தான் புரியும்.
கதை: சல்வா ரூபியோ
ஓவியம்: பெட்ரொ கொலம்போ & அய்ன்ட்ஸென் லன்டா
பதிப்பகம்: யுரப் காமிக்ஸ்
வெளியீடு: நவம்பர் 2020
அமைப்பு: 110 முழுவண்ணப் பக்கங்கள்
இரண்டாம் உலகப் போரின்போது சித்திரவதை முகாம்கள் எப்படியெல்லாம் கொடூரமான அழிவுப் பணிகளைக் செய்தன என்பதை நாம் வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருப்போம். ஆனால், அந்த முகாம்களில் இருந்தவர்களுக்கு மட்டும்தான் அதன் வழியும் வேதனையும் தெரியும். என்னதான் அதைப் பற்றி புத்தகங்கள் எழுதினாலோ அல்லது திரைப்படங்கள் எடுத்தாலோகூட அதன் வீரியத்தை மக்கள் முழுமையாக உணர்வார்களா என்பது சந்தேகமே. அப்படிப்பட்ட ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தக் கதை
பிரான்சுவா புவா என்ற இளைஞனை ஆஸ்திரியாவில் இருக்கும் மௌதாசென் என்ற சித்திரவதை முகாமில் அடைக்கும் காட்சியில் இருந்துதான் கதை ஆரம்பிக்கிறது. பிரான்சுவா ஒரு ஸ்பானிஷ் நாட்டு கம்யூனிஸக் கோட்பாடுகளை ஆதரிக்கும் இளைஞன். பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்படும் இவரை பல முகாம்களுக்கு அனுப்பி அங்கிருந்து ஒவ்வொரு முகாமாக இடப்பெயர்ச்சி செய்து கடைசியில் ஆஸ்திரியாவின் மௌதாசென்னில் அடைக்கிறார்கள்.
ஆவணங்களின்படி மொத்தம் 9,328 ஸ்பானிஷ் நாட்டுக்காரர்கள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டார்கள் என்றும் அதில் 7,532 பேர் இந்த மௌதாசென் முகாமில் இருந்தார்கள் என்றும் அதில் 4,816 பேர் கொல்லப்பட்டார்கள் என்றும் தெரிந்துக் கொள்ளலாம். ஆனால், இவை எல்லாம் அதிகாரபூர்வமாக சொல்லப்பட்ட தகவல்களே. உண்மை நிலவரம் என்ன என்பதை நாம் எல்லோருமே அறிவோம்தானே?
மரணத்திற்கான பாதை – 186 படிக்கட்டுகள்
பிரான்சுவா புவா அடைக்கப்பட்ட அந்த சித்திரவதை முகாம் ஒரு விஷயத்திற்காக இன்னமும் நினைவு கூரப்படுகிறது என்றால் அது 186 படிக்கட்டுகளைக் கொண்ட ஒரு மரண வாயில் காரணமாகத்தான். இந்த முகாமில் இருக்கும் எண்களை (ஆமாம், அங்கே அடைக்கப்படுபவர்கள் அதன் பிறகு மனிதர்களாக இல்லாமல் வெறும் எண்களாக மட்டும்தான் பார்க்கப்படுவார்கள்) எல்லாம் மிகவும் பாரமான கற்களைத் தூக்கிச் செல்லப் பழக்குவார்கள். 186 படிகளில் பாறைகளைத் தூக்கிக் செல்வது உடல் வலுவைச் சோதிக்கும் ஒரு செயல் என்றால், அந்தப் பயணத்தின் முடிவில் காத்திருக்கும் கோரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்றாகும்.
186 படிக்கட்டுகளில் பாறைகளைச் சுமந்து வரும் எண்களை அந்த உச்சியில் இருந்து தள்ளி விட்டு அவர்கள் அலறியபடியே கீழே விழுந்து இறப்பதை ரசித்தனர் ஜெர்மானிய அதிகாரிகள். இறப்பதற்குப் பல வழிகள் இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்ற சூழலில் கடுமையான வேலைகளைச் செய்து திடீரென்று கொல்லப்படுவது இதுவரையில் நாம் கேள்விப்பட்ட எந்த ஒரு சித்திரவதை முகாமிலும் இல்லாத ஒன்று.
பிரான்சுவா கதையின் ஆரம்பத்திலேயே ஒரு சிறுவனைக் காப்பாற்றுகிறான். பின்னர் சிறைச்சாலையில் ஒரு வித்தியாசமான மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுகிறான். வேலை செய்யும் எண்களை ஜெர்மானிய ராணுவ அதிகாரிகள் கடுமையாகத் திட்டுவார்கள். அவர்கள் ஜெர்மன் மொழியில் திட்டுவதை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்து அந்தக் கைதிகளுக்கு சொல்ல வேண்டியதுதான் இவனது வேலை. நமது அரசியல்வாதிகள் செய்யும் மொழிபெயர்ப்பு போல இல்லாமல், ஜெர்மானிய அதிகாரிகள் திட்டுவதை மிகவும் நகைச்சுவையோடு ஸ்பானிஷ் மொழியில் மாற்றி அந்தக் கைதிகளை ஊக்கமூட்டி வந்தான் பிரான்சுவா. இதனால் அந்த முகாமில் இருந்த ஜெர்மானிய அதிகாரிகளும் சரி, கைதிகளும் சரி, பிரான்சுவாவை மதித்தனர். சிறுவயதில் பத்திரிகையில் பணியாற்றிப் புகைப்படம் எடுத்துக் பழகி முழு நேரப் புகைப்படக்காரனாக பணியாற்றிய பிரான்சுவா மறுபடியும் புகைப்படக்காரனாக மாறியதுதான் இந்தக் கதையின் மிக முக்கியமான கட்டம்.
மரணத்தின் பல முகங்கள்
ஜெர்மானிய ராணுவ வீரர்கள் அந்த முகாமில் இருக்கும் கைதிகளை சித்திரவதை செய்கிறார்கள், ஒரு கட்டத்தில் கொல்கிறார்கள். ஆனால், அதைவிடக் கொடுரமான செயல் ஒன்றையும் அவர்கள் செய்து வந்தார்கள். மரணத்தைவிடப் பாதகமான செயல் என்னவாக இருக்கக் கூடும் என்றுதானே யோசிக்கிறீர்கள்? இங்குதான் ஜெர்மானியர்கள் குரூரமான சிந்தனை வெளிப்படுகிறது. கொல்லப்படுபவர்களை நேர்த்தியாகப் புகைப்படம் எடுத்து அவர்கள் உயிர் பிரியும் நேரத்தில், இறந்த பிறகு என்று மரணத்தை ஒரு கலையாக மாற்ற முயற்சித்து வந்தார்கள்.
இந்த முகாமின் முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு இப்படி ஒரு குருரமான சிந்தனை இருந்தது. பிரான்சுவா ஒரு தொழில்முறைப் புகைப்படக்காரர் என்பதைத் தெரிந்து கொண்ட அந்த அதிகாரி பிரான்சுவாவைத் தனக்கு உதவியாளராக நியமித்து ஒவ்வொரு மரணத்தையும் புகைப்படமாக எடுத்து அதை டெவலப் செய்து ஆவணப்படுத்தும் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
ஓர் எண் மனிதனாக மாறும் கட்டம் இங்கேதான் ஆரம்பிக்கிறது. ஜெர்மானியர்களின் இந்தக் கீழ்த்தரமான செயல்களை உலகுக்குத் தெரிவிக்க முடிவெடுக்கிறார் பிரான்சுவா. ஒவ்வொரு படம் எடுத்த பிறகு தெளிவாக அதன் நெகட்டிவ்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார். அந்த நெகட்டிவ்களை எங்கே ஒளித்து வைப்பது என்பதும் அப்படி ஒளித்து வைத்த நெகட்டிவ்களை எப்படி வெளியே எடுத்துக் சென்றார்கள் என்பதும்தான் இந்தக் கிராஃபிக் நாவலின் உச்சகட்டக் காட்சிகள்.
மரணத்தோடு ஒரு போட்டி
இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் ஜெர்மானியர்கள் செய்த இந்த அவலச் செயலை ஆவணப்படுத்தும் முயற்சியில் பிரான்சுவா எதிர்கொண்ட சிக்கல்கள் ஒன்றா, இரண்டா? முதலில் பிரான்சுவாவுக்கு உதவி செய்ய யாருமே முன்வரவில்லை. மரண பயம் ஒரு காரணம் என்றால், இப்படி செய்தால் என்ன ஆகிவிடும் என்ற இன்னொரு கேள்விக்கு யாருக்குமே பதில் தெரியவில்லை என்பது இன்னொரு காரணம். உதவ வந்த ஒரே நண்பரும் கொல்லப்பட, கிட்டத்தட்ட தனித்து இயங்க வேண்டிய கடடாயத்துக்கு ஆளாகிறார் பிரான்சுவா.
ஜெர்மானிய வீரர்கள் இடையே நடக்கும் ஒரு காற்பந்தாட்ட போட்டியின்போது இந்த நெகட்டிவ்களைக் கடத்தி வெளியே கொண்டுபோகலாம் என்று முடிவெடுத்து அதன்படி திட்டமிடத் துவங்குகிறார். திரைப்படத்தில் வரும் காட்சிகளை விட மிகவும் விறுவிறுப்பாக நகரும் இக்காட்சிகள்தான் இந்தக் கதையை ஒரு நெட்ப்ளிக்ஸ் திரைப்படமாக மாற்றியது என்றால் அது மிகையல்ல.
நெட்ப்ளிக்ஸ் திரைப்படம்
மௌதாசென்னின் புகைப்படக்காரர் என்ற பெயரிலேயே 3 ஆண்டுகளுக்கு முன்பாக வந்துள்ள இத்திரைப்படத்தை இந்த கிராபிக் நாவலைப் படித்து விட்டுப் பார்த்தால் இன்னமும் சிறப்பாக ரசிக்க முடியும். இந்த கிராபிக் நாவலுமேகூட நான் லீனியர் பாணியில் ஆரம்பித்து கதாசிரியர் தன்னை முன்னிலைப்படுத்தி கதை சொல்லும் பாணியில், ஓர் அழகான செண்டிமெண்டைப் பின்னணியில் வைத்து மிக வேகமாக நகரும் திரைக்கதை யுத்தியைக் கையாண்டு உருவாக்கப்பட்டது.
ஓவியங்களும் வண்ணக் கோர்வையும்: பிரெஞ்சு கிராஃபிக் நாவல் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த கிராஃபிக் நாவலின் சிறப்பு அம்சமே இதன் அழகியல் சார்ந்த ஓவியங்கள்தான். நேர்த்தியாக, ரசனையோடு வரையப்பட்ட ஓவியங்கள் பல இடங்களில் நமது பார்வையை நிறுத்தி ஒரு குறிப்பிட்ட ஓவியத்தை மட்டுமே கவனிக்க வைப்பதிலேயே ஓவியர் ஜெயித்து விடுகிறார்.
பல முக்கியமான கட்டங்களில் முழு வண்ணக் கோர்வையைப் பயன்படுத்தாமல் ஸேபியாடோனில், வண்ணங்கள் இல்லாமல் ஓவியங்களை முழுமைப் படுத்துகிறார் அய்ன்ட்ஸென் லன்டா. ஓவியர் பெட்ரொ கொலம்போ எந்த அளவுக்குப் பாராட்டப்பட வேண்டியவரோ அந்த அளவுக்கு வண்ணக் கலவையை சிறப்பாக செய்த அய்ன்ட்ஸென் லன்டாவையும் பாராட்ட வேண்டும்.
சோக முடிவு
பிரான்சுவா பூவா மிகவும் சிரமம் மேற்கொண்டு, தனது உயிரைப் பணயம் வைத்து கொண்டு வந்த அந்த நெகட்டீவ்களை உலகம் எல்லாம் கொண்டாடி அவரை ஒரு நாயகனாக மதித்து இருப்பார்கள் என்றுதானே நினைத்து இருப்பீர்கள்? அதுதான் நடக்கவில்லை. உலகப் பொதுக்குழுவில் இவர் சொன்னதைப் பெரிதாக யாருமே பொருட்படுத்தவில்லை. அந்த ஜெர்மானிய அதிகாரி தூக்கில் இடப்பட்டார். மற்றபடி அந்த சித்திரவதை முகாம்களை அதன்பிறகு ரஷ்யர்கள் நடத்த ஆரம்பித்தனர் என்பது உலகத்துக்கான நகைமுரண்.
கதையின் நடுவே கம்யூனிச சித்தாந்தங்கள் உடைவதை, பொதுவான பல கற்பிதங்கள் நொறுங்குவதை உணர
லாம். மிகுந்த வலியை உருவாக்கும் இந்த கிராஃபிக் நாவல் சாதாரணமான வாசிப்பைக் கோருபவர்களுக்கு அல்ல.
வலியை, சோகத்தை உங்களால் தாங்க முடியும் என்றால், வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை புரட்டிப் பார்க்கும் ஆர்வம் உண்டு என்றால், நிச்சய மாக மிஸ் செய்யாமல் படிக்க வேண்டிய கிராஃபிக் நாவல் இது.
prince.viswa@gmail.com