இருபதாம் நூற்றாண்டு இந்திய அறிவுலகில் ராகுல் சாங்கிருத்யாயனுக்கு பிறகு மிகப்பெரும் தத்துவ தரிசன உருவகமாக திகழ்ந்தவர் மார்க்சிய தத்துவவாதியும், வரலாற்றாசிரியருமான தேவி பிரசாத் சட்டோபாத்யாயா. அவரின் நூற்றாண்டை தற்போது இந்திய அறிவுலகம் அனுசரிக்கிறது. இந்தியா கொண்டாட வேண்டிய ஆளுமையும் கூட. இவரின் நூல்கள் அனைத்துமே மிக முக்கியமானவை. அறிவின் உச்சபட்ச எல்லையைத் தொட்டவை. அவை இதுவரை அறியப்படாத உலகம் பற்றியதாக இருந்தன.
இந்திய மறுமலர்ச்சி யுகத்தின் , அறிவொளியின் பிறப்பிடமான கொல்கத்தாவில் 1918 நவம்பர் 19இல் எளிய குடும்பத்தில் பிறந்தார் சட்டோபாத்யாயா. அவரின் தந்தை சுதந்திர போராட்ட வீரர். அவரின் இந்த அரசியல் பிரக்ஞைதான் இளம் வயது சட்டோபாத்யாவை அதிகம் பாதித்த ஒன்றாக இருந்தது. குறிப்பாக, இளம் வயதில் இருந்தே சட்டோபாத்யாயா அரசியல் மற்றும் தத்துவம் குறித்த தேடலைத் தொடங்கி விட்டார். இதன் தொடர்ச்சியானது, அவருக்குள் அறிவார்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி அன்றைய காலத்தில் மேற்கு வங்கத்தில் எழுச்சி பெற்ற இடதுசாரி அமைப்புகளோடு அவருக்குத் தொடர்பை உருவாக்கியது. இந்நிலையில் 1936இல் உருவான முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டார் சட்டோபாத்யாயா.
சட்டோபாத்யாயாவின் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு அனைத்தும் கொல்கத்தாவில் நிகழ்ந்தது. குறிப்பாக தத்துவத்தில் உயர்கல்வியை முடித்தார். அது கொல்கத்தா பல்கலைக்கழகமாக இருந்தது. இந்திய புகழ்பெற்ற தத்துவவாதிகளான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், எஸ்.என். குப்தா போன்றவர்களிடம் தத்துவப் பயிற்சி பெற்றார் தேவி பிரசாத். தன் தத்துவப் படிப்பை நிறைவு செய்த தேவி பிரசாத் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக இருபதாண்டுகள் பணிபுரிந்தார். அதன் பிறகு பல்கலைக்கழக மானியக்குழு சார்ந்த வருகைதரு பேராசிரியராக ஆந்திரா, பூனா போன்ற இடங்களில் பணியாற்றினார். இதன் பின்னர் இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில், இந்திய தத்துவ ஆய்வு கவுன்சில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையம் போன்ற உயர் அமைப்புகளில் பணியாற்றினார்.
தேவி பிரசாத்தின் ஆய்வுகளின் மையம் என்பது இந்திய உலகாயதம் அல்லது பொருள்முதல் வாதம் குறித்த ஒன்றாக இருந்தது. மேலும் இது குறித்து உலக அளவில் விஞ்ஞானிகள், தத்துவவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் இந்தியவியலாளர்களுடன் விவாதித்தார். மேலும் உலக புகழ்பெற்ற ஆய்வாளர்களான ஜார்ஜ் தாம்சன், ஜோசப் நீதாம், போன்கார்ட் லெவின் மற்றும் வால்டர் ரூபன் போன்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தினார். அவர்களுடன் அதிக அளவில் தத்துவ உரையாடல்களை நிகழ்த்தினார்.
இந்திய உலகாயதம்- பண்டைய இந்திய பொருள்முதல்வாத ஆய்வு என்ற அவரின் நூல் அது பற்றிய மிக விரிவான ஆய்வுகளை நிகழ்த்தியது. மேலும் லோகேஷ் ஆய்த்தா என்பதன் திரிபுதான் லோகாயதம் அதாவது உலகாயதம் என்பதாக மாறியது என்கிறார் தேவி பிரசாத். அதாவது லோகாயதம் என்பது மக்கள் மத்தியில் நிலவுவது, வழக்கில் இருப்பது என்று அர்த்தம். மேலும் 14 ஆம் நூற்றாண்டு இந்திய அறிவுலகிலேயே இந்த சொல்லாடல் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. அது தான் தொடர்ச்சியாக இந்திய தத்துவ உலகில் அறிமுகமானது என்கிறார் தேவி பிரசாத். இந்த நூலில் தேவி பிரசாத் பண்டைய இந்தியாவில் அறிவியல் மற்றும் பொருள்முதல் வாதத்தின் வேர்களைக் கண்டறிய முயற்சிப்பதுடன் அவற்றின் பரிணாம வளர்ச்சியையும் ஆராய்கிறார். இதனைக் குறித்து ஜெர்மனியின் பிரபல இந்தியவியல் ஆய்வாளரான வால்டர் ரூபன் வியந்ததுடன், தேவி பிரசாத்தை சிந்தனை- சீர்திருத்தவாதி (Thought- Reformer) என்றார். மேலும் அவரின் பெரும் பொறுப்பு என்பது தேசிய எழுச்சிக்கான மக்களின் போராட்ட உணர்வைத் தூண்டுவதுடன், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பொருளாயத சக்திகள், முற்போக்காளர்கள் மற்றும் மனிதவாதிகள் ஆகியோர்களின் உணர்வை தட்டி எழுப்புவதுமாகும். அது ஒருவகையில் தார்மீக கடமையும் கூட. மேலும் தேவி பிரசாத்தின் உலகாயதம் அது வரை இந்திய அறிவுலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரம்மம் என்ற கருத்துருவைத் தகர்த்தது. அது பண்டைய இந்திய அறிவுலகில் ஆதிக்கம் செலுத்தி வந்ததுடன் பண்டைய பொருள்முதல்வாத பள்ளிகள் அனைத்திற்கும் எதிராக இருந்தது. மேலும் பண்டைய இந்தியாவில் பரவலாக வழக்கில் இருந்த உலகாயத கோட்பாட்டை மறு கட்டமைப்பு செய்ததுடன், அதுவரை நிலவிய அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியது. மேலும் தேவி பிரசாத் இந்த இடத்தில் பிரத்யக்சம் என்ற சொல்லாடலை முன்வைத்தார். அதாவது புறப்பார்வை. இந்த பிரத்யக்சம்தான் அறிவின் வழியாகவும், மூலமாகவும் இருக்கிறது என்றார் தேவி பிரசாத். மேலும் கூட்டிணைவு குறித்த விளக்கம் இந்தியாவில் அத்வைத கோட்பாட்டிற்கான ஏணியை உருவாக்குகிறது என்றார். இதன் தொடர்ச்சியில் அத்வைத கோட்பாட்டிற்கு எதிராக பண்டைய உலகாயத மரபை முன்வைத்தார். மேலும் மார்க்சியர் என்ற வகையில் உலகாயதத்தை வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தோடு அணுகினார். அது பண்டைய தேக வாத மரபோடும், மக்களின் தொல் சடங்குகளோடும் இயைந்திருக்கிறது என்றார்.
உலகாயத ஆய்வுகளை தொடர்ந்து இவரின் முக்கிய நூல் என்பது இந்திய தத்துவத்தின் தொடக்க நிலை குறித்ததாகும். இது இந்திய தத்துவம் பற்றிய புதிய பார்வையையும், தேடலையும் அளித்தது. மேலும் இந்திய தத்துவத்தை மானுடவியல், பொருளாதாரம், சமூகவியல் நோக்கில் அணுகினார். மேலும் இது இந்திய தத்துவத்தின் வளர்ச்சியை ஆராய்கிறது. அதாவது வேத காலம் தொட்டு பிந்தைய பௌத்தம் வரை அது நீள்கிறது. மேலும் இந்திய தத்துவத்தில் அதுவரை நிலவிய சாஸ்திரார்த்தா அதாவது பிரதிசார் விளக்கத்தை கேள்விக்குட்படுத்தினார். மேலும் இந்திய தத்துவங்களின் வளர்ச்சி என்பதே கருத்துகளின் மோதல் சார்ந்த தொடர்ச்சியே என்றார். இது இந்திய தத்துவ உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஒடுக்கும், ஒடுக்கப்படும் ஆகிய இரு வர்க்கங்களின் மோதலாகவும் இது இருக்கிறது என்றார்.
தேவி பிரசாத்தின் தத்துவ தேடல்களில் நாத்திகம் குறித்த ஆய்வு முக்கியமானது. மேலும் ரிக்வேதம் பற்றிய அவரின் ஆய்வானது அன்றைய இந்தியாவில் மதங்கள் எதுவுமற்ற பிரக்ஞை எவ்வாறு இயங்கியது என்பதைக் கண்டறிந்தது. மேலும் ஆரம்ப கால வேதங்கள் எவ்வாறு சமூக மனத்தைப் பிரதிபலித்தன என்பதையும் ஆராய்ந்தது. மேலும் வேதகால சடங்குகளில் எவ்வாறு பொருள்முதல்வாத கூறுகள் இருந்தன என்பதையும் ஆராய்ந்தார். அதன் கூறுகள் சடங்குகளில் பிரதிபலிக்கும் தன்மை இருப்பதையும் தேவிபிரசாத் அவதானித்தார். இவ்வாறாக வேதகாலம் என்பது பெரும்பகுதி உலகாயத கூறுகளை உள்ளடக்கிதான் இருந்தது என்கிறார் தேவி பிரசாத்.
உலகாயதம் பற்றிய ஆய்விற்கு அடுத்த நிலையில் தேவிபிரசாத்தின் தத்துவங்கள் குறித்த ஆய்வுகள் முக்கியமானவை. அதற்காக தத்துவமும் எதிர்காலமும், தத்துவத்தின் தொடக்கங்கள், இந்திய தத்துவத்தில் அழிந்தனவும், எஞ்சி யிருப்பனவும் போன்ற நூல்களை எழுதினார். இந்திய தத்துவத்தைப் பொறுத்தவரை பாரம்பரிய தத்துவ முறைகளிலிருந்து சம காலம் வரை இந்தியாவில் எஞ்சியிருக்கும் அல்லது உடனடி தேவை சார்ந்த தத்துவ மரபுகளை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றார். அது மதசார்பின்மை, பகுத்தறிவுவாதம் மற்றும் அறிவியல் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் பண்டைய இந்தியாவில் தத்துவங்களிடையேயான மோதல்கள், உரையாடல்கள் போன்றவற்றை தேவிபிரசாத் வெளிக்கொணர்ந்ததுடன் அது எவ்வாறு வர்க்க போராட்டத்துடன் இயைந்திருந்தது என்பதையும் குறிப்பிட்டார். மார்க்சிய அடிப்படையில் வர்க்கம் பற்றிய பார்வையை தன் தத்துவ ஆசானான ஜார்ஜ் தாம்சனிடமிருந்து மேற்கோள் காட்டினார். ஜார்ஜ் தாம்சன் வர்க்கத்தை மூன்று கட்டங்களாகப் பார்த்தார். அதாவது வர்க்கமற்ற முந்தைய சமூகம், வர்க்க சமூகம், வர்க்கமற்ற எதிர்கால சமூகம். இந்த மூன்றையும் இந்திய தத்துவ மரபின் அடிப்படையில் தேவி பிரசாத் அணுகினார். மேலும் ஆதிகால சடங்குகளும், மரபுகளும் எவ்வாறு அறிவியல் தன்மையிலிருந்து மூட நம்பிக்கைகளாக மாறின என்பதைக் குறிப்பிட்ட தேவி பிரசாத் இந்தியாவில் காலங்காலமாக வழக்கில் இருந்த மூடநம்பிக்கைகள், சடங்கு சம்பிராதயங்கள் அனைத்துமே பண்டைய இந்திய அறிவியல் மரபின் அதன் சடங்கின் மாறுதல் கட்டமே என்றார். மேலும் அது ஒடுக்குமுறையாளர்களின் கையில் சிக்கி சமூகத்திற்குள் வர்க்க பிரிவினையை ஏற்படுத்தியது என்றார். மேலும் இந்தியாவின் பொருள்முதல்வாத மரபின் சிதைவைக் குறிப்பிடுகிறார். குறிப்பாக, நியாய, வைசேடிக மரபின் அழிவை இந்திய தத்துவத்தின் பெரும் சறுக்கல் என்கிறார் தேவி பிரசாத்.
வரலாறு மற்றும் தத்துவம் குறித்த ஆய்வுகளில் தொல்லியலின் பங்கை குறித்து தேவிபிரசாத் தன் தத்துவமும் எதிர்காலமும் நூலில் விரிவாக விளக்குகிறார். தொல்லியல் என்பது ஓர் ஆய்வுக் கலையாக மார்க்ஸ்- ஏங்கல்ஸ் காலத்திற்குப் பிறகுதான் அறிமுகமானது என்கிறார். 1822இல் சாம்போலியனின் எழுத்துகளிலிருந்து எகிப்தியர்களையும், 1870 களில் ஸ்லீமனின் ஆய்வின் மூலம் டிராய், மைசீனேவில் கிரேக்க நாகரீகத்தின் மூலம் ஆகியவை கண்டறியப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நைனவே, நிமத், நிப்பூர், லகாஷ் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வை “தொல்லியல் கொள்கைக்கான நேர்மையற்ற போட்டி” என சரியாகக் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியில் ‘தொல்லியலுக்கான வழிமுறைகளும் நோக்கங்களும், என்ற பெட்ரேயின் நூல் 1904 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மேலும் 1906 ஆம் ஆண்டு எகிப்தின் பண்டைய ஆவணங்கள் என்ற அவரது நூல் வெளியிடப்பட்டது. ஊர் என்னுமிடத்தில் அரசப் பரம்பரையினரின் நினைவிடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுமேரிய அகழ்வாய்வு குறித்த நூல் 1926ஆம் ஆண்டு லியோனார்டு வூலியினால் வெளியிடப்பட்டது. ஹரப்பாவை பற்றி தயாராம்ஷானியும், மொகஞ்சதாரோவைப் பற்றி பானர்ஜியும் எழுதிய நூலை அடிப்படையாகக்கொண்டு பண்டைய சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டதாக 1924ஆம் ஆண்டு ஜான் மார்ஷல் குறிப்பிட்டார். இது 18 ஆம் நூற்றாண்டில் கீழைத்தேய ஆய்வுகளுக்காக பிரிட்டிஷார் கொல்கத்தாவில் தொடங்கிய வங்காள ஆசியவியல் சமூகம் என்பதன் தொடர்ச்சியாக இருந்தது. அதுவரை இந்திய வரலாறு என்பது வெறும் 600 வருடங்களை மட்டுமே உள்ளடக்கியது என்பதாக மேற்கத்திய சமூகம் நம்பிக்கொண்டிருந்தது. இந்தியா குறித்த இந்த நம்பிக்கையை தொல்லியல் குறித்த ஆய்வுகள் தகர்த்தன.
அதிகம் அறியப்படாத இந்திய தத்துவ மரபுகளை, அறிவியல் பாரம்பரியத்தை இந்திய அறிவுலகிற்கு தன் ஆய்வுகளின் மூலமும், தேடலின் மூலமும் வெளிப்படுத்தினார் தேவி பிரசாத். இவரின் தத்துவங்கள் குறித்த நூல்கள் ராகுல் சாங்கிருத்யாயனின் சிந்து முதல் கங்கை வரை, வால்கா முதல் கங்கை வரை போன்ற புகழ்பெற்ற நூல்களுக்கு இணையான தன்மை கொண்டவை. மேலும் 90 களின் தொடக்கத்தில் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும் தேவி பிரசாத் இந்திய சமூகத்தில் தத்துவங்கள் தேவைப்படும் இந்த தருணத்தில் முன்னெப்போதையும் விட இப்போது அவை மிகுந்த உதாசீனத்திற்கு உள்ளாகி இருக்கிறது என்கிறார். அந்த இடத்தை வன்முறைகளும், கொலைகளும் நிரப்பி இருக்கின்றன. மனிதாபிமான நோக்கத்திலோ அல்லது பகுத்தறிவு நோக்கத்திலோ செய்யப்படும் எந்தவொரு ஆய்வையும் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுப்பது அதற்கு உதாரணமாகும் என்கிறார் தேவி பிரசாத். குறிப்பாக 1992இல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு நிகழ்வின் பின்னரான வன்முறை சம்பவங்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் தேவி பிரசாத்.
தேவி பிரசாத் தன் வாழ்நாளில் இருபதுக்கும் மேற்பட்ட முக்கிய நூல்களை எழுதி இருக்கிறார். அதில் உலகாயதம், பண்டைய இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மதமும் சமூகமும், இந்திய தத்துவத்தில் இரு போக்குகள் ஆகியவை முக்கிய நூல்களாகும். தேவி பிரசாத்தின் நூல்கள் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழில் இவரின் பெரும்பாலான நூல்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் பாரதி புத்தகாலயம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இந்திய அறிவுலகில் தவிர்க்க முடியாத ஆளுமை தேவி பிரசாத். அவர்தான் கிரேக்க பொருள் முதல்வாத மரபு இந்தியாவில் உலகாயதமாக முன்னரே வழக்கில் இருந்தது என்றார். இவரின் மனைவி மஜும்தாரும் இவரின் தத்துவத் தேடலுக்குப் பெரும் பின்புலமாக இருந்தார். அது அவருக்கு மிகப்பெரும் பலமாக இருந்தது. உலகின் பெரும் ஜனநாயகப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் இந்தியா எப்போதும் கொண்டாட வேண்டிய ஆளுமை தேவி பிரசாத். 1993 மே 8இல் தன் 74ஆம் வயதில் மரணமடைந்த தேவி பிரசாத் நூற்றாண்டை இந்திய இடதுசாரிகளும், பிற அறிவுலகினரும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.