என் முப்பத்து மூன்று வருட வாழ்வனுபவத்தில் இதுவரை இரண்டுமுறை மட்டுமே போலீஸ் ஸ்டேஷன் படியேறியிருக்கிறேன். அது தீபாவளிக்கு முந்தைய நாள். அப்போது பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். நண்பர்களுடன் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். வெளியில் பேய் மழை. மழை விட்டதும் ஹோட்டலைவிட்டு வெளியே வந்தால் கொண்டு வந்திருந்த அப்பாவின் டி.வி.எஸ்.50 வண்டியைக் காணவில்லை. ஹோட்டலிலிருந்து நடக்கும் தொலைவில் போலீஸ் ஸ்டேஷன். அசட்டுத் தைரியத்தில் போய் விசயத்தைச் சொன்னோம். வண்டி தொலைந்ததே பரவாயில்லை என்று ஆறுதல் படும்படியாக வரிசையாக கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள். திருடியவனிடம் இத்தனை கேள்விகள் கேட்பார்களெனில் ஒருவேளை அவன் திருந்திவிடுவானாயிருக்கும். அடுத்தமுறை பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக வரச் சொல்லியிருந்தார்கள். பாஸ்போர்ட்டைச் சரிபார்த்தலுக்கும் ஸ்டேஷனுக்கு எதிரேயிருந்த கடையிலிருந்து வாங்கித் தரப்பட்ட பேப்பர் கட்டுகளுக்குமான தொடர்பு புரிய ஆரம்பித்தபோது கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன்.

இதோ, இப்போது மூன்றாவது முறையாக போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன். இந்த முறை இன்னும் சற்று விசேஷம். இந்த முறை சொந்த ஊரோ ஏன் நாடோகூட இல்லை. தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரிலிருக்கும் ரோஸ்பேங்க் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். அடுத்த வாரம் ஊர் திரும்ப வேண்டும். இரண்டு மாத வேலை. சிறிய பயணம். தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய வங்கியொன்றின் மென்பொருள் வடிவமைப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் கணித்ததைவிட வேலை விரைவாக முடிந்துவிட்டது. அதில் டெலிவரி மானேஜர் ஓட்டாஸூக்கு ரொம்பவும் திருப்தி. அதை வெளிப்படுத்தும்விதமாக கறுப்பு டயல்கொண்ட அழகான ‘டேனியல் வெல்லிங்டன்’ வாட்சை எனக்குப் பரிசாகக் கொடுத்தார். நேரம் பின் மதியத்தைக் கடந்துகொண்டிருந்தது.

“நான் இதுவரை பார்த்த சிறந்த மூளைகளுள் ஒன்றுக்கு என் எளிய பரிசு” என்று சொல்லி அத்தனை பேர் முன்னிலையில் அவர் இதை எனக்குக் கட்டிவிட்டபோது அவ்வளவு பெருமையாக இருந்தது. நீண்ட கால விசாவில் என்னை அங்கே வந்துவிடுமாறு திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

சென்னையிலிருந்து கிளம்பும்போதே சொல்லித்தான் அனுப்பியிருந்தார்கள். நானும் மிகுந்த கவனத்துடனே இருந்தேன். பொது இடங்களில் பர்ஸை வெளியே எடுப்பதில்லை. சிக்னல்களில் கார் கண்ணாடிகளைத் திறப்பதில்லை. எப்படியோ சிறு பிசகு நேர்ந்துவிட்டது. நடந்து முடிந்த சம்பவம் குறித்தோ அல்லது அடுத்து செய்ய வேண்டிய காரியங்கள் பற்றியோ எந்தப் பதற்றமும் இல்லாதவனாக பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் ஹேம். நான் அவனைப் பார்ப்பதைக் கண்டதும் என் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்து,

“சரி விடு பாத்துக்கலாம்.” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டினான்.

“அப்போ கிடைச்சுடுங்கிறியா?” என்றேன்.

“சத்தியமா கிடைக்காது.”

“என்னாடா மச்சி. இப்படி சொல்ற.”

“மூணு வருசமா இங்கதான் குப்ப கொட்டிட்டு இருக்கேன். எனக்குத் தெரியாதா இந்த ஊரைப் பத்தி? எல்லாம் கூட்டுக் களவாணிக. மொபைல், லேப்டாப்ன்னாகூட பரவால்ல. பேரம் பேசி வாங்கித் தந்துடுவானுக. துட்டுலாம் வாய்ப்பே இல்ல.”

“அப்புறம் என்ன மயித்துக்கு இப்போ நாம ஸ்டேஷனுக்குப் போகணும். நேரா ஹூட்டனுக்கே போயிருக்கலாம்.”, நம் மொழி மற்றவர்களுக்குப் புரியாத இடங்களில் வார்த்தை தடிப்பது சுலபமாகிறது. இதே பணத்தை நம்மூரில் வைத்து இழந்திருந்தால் இத்தனை பதற்றமாகியிருக்க மாட்டேன். இவ்வளவு தூரம் வந்து ஏமாற்றப்பட்டதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

“டேய், அதில்லடா. உன்னோடது ஃபோரக்ஸ் கார்ட். அதுக்குத் தனியா இன்ஸூரன்ஸ் உண்டு. போயி ஒரு எஃப்.ஐ.ஆர். போட்டு வந்து அதோட காப்பி கொடுத்தோம்ன்னா பாதிக்குப் பாதியாவது கிடைக்கும்.”

“பி.ஓ.எஸ்.ல தானே போட்டு பணத்தை எடுத்திருக்கானுங்க. அதுக்குள்ள எப்படி பொருளா வாங்கிருப்பானுங்க? சனியனுங்க. எல்லா பி.ஓ.எஸ். மிசினுக்கும் தனி ஐ.பி. உண்டே. அதை வச்சு அது என்ன கடை, எப்போ வாங்குனாங்கன்னு பார்த்து, ஒருவேளை எங்கயாவது சிசிடிவி இருந்தா ஆளைப் பிடிச்சுடலாம்ல.”

“மச்சான், நாம இருக்கிறது அமெரிக்கா இல்ல. ஆப்பிரிக்கா.”

“அதுக்கு?”

“டேய், அவ்ளோலாம் வேண்டாம். இவனுங்களுக்கே அது யாருன்னு நல்லாத் தெரியும். தனி கட்டிங்கூட வருமாயிருக்கும். அதுனால திரும்பக் கிடைக்கும்ன்னு கனவுகூட காணாத. அமைதியா இரு. மறுபடியும் சொல்றேன், இதுவே பொருள்ன்னா பரவாயில்ல. அன்னிக்கு மரோபெங்ல என்ன நடந்தது தெரியும்ல. நீயும் கூடதானே இருந்த.” என்றான்.

அவன் சொல்லிய எல்லாமும் எனக்கும் தெரிந்துதான் இருந்தது. எதையாவது மறுத்து, மாற்று வழி சொல்லமாட்டானா என்ற நப்பாசையில்தான் அப்படிக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

O

ஜோஹன்னஸ்பர்க்குக்கு வட மேற்கில் சுமார் ஐம்பது கி.மீ. தொலைவிலிருக்கிறது மரோபெங். என்னைப் போல குறுகிய காலப் பயணத்திட்டத்தில் வருபவர்களையெல்லாம் அழைத்துப் போகவென்றே இவர்கள் சில இடங்கள் வைத்திருக்கிறார்கள். ஜோஹன்னஸ்பர்க் மிருகக் காட்சி சாலை, மான்ட் காசினோ, மண்டேலா வீடு என்று வரும் இந்த வரிசையில் மரோபெங்கும் ஒன்று.

இரண்டு கார்களை எடுத்துக்கொண்டு காலையிலேயே ஹூட்டனிலிருந்து கிளம்பிவிட்டோம். அகண்டு விரிந்த சாலையில் ஒரு மணி நேரப் பயணம். அந்தப் பகுதி முழுவதும் பொட்டல் வெளி. சுற்றிலும் காய்ந்த புற்கள். முதலில் நாங்கள் போய் நின்றது தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரத்துக்குப் பாடுபட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களின் ஆளுயுர வெங்கலச் சிலைகள் நிறுவப்பட்ட இடத்துக்கு. மண்டேலா, ஆலிவர் டம்போ போன்ற தலைவர்களுக்கிடையே காந்திக்கும் ஒரு சிலை வைக்கப்பட்டிருந்தது. வரிசைக் கிரமமாக நின்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.

அதன் பின் எங்களுடன் வழிகாட்டியாக லெத்தாபோ இணைந்துகொண்டார். உற்சாகமான மனிதர். ஆப்பிரிக்கர் என்றாலும் அட்சரம் பிசகாத பிரிட்டிஷ் ஆங்கில உச்சரிப்பு.

“இந்த இடத்தைப் பற்றி கூகுள் செய்துவிட்டுதான் வந்திருப்பீர்கள். அது காட்டும் ஒற்றைப் பரிமாணத்தை அகற்றி புதிய பரிமாணங்களைச் சேர்ப்பதன் வழியே உங்களுடைய இப்பயணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவேன். ஆதியிலிருந்து தொடங்க வேண்டியது என் கடமை. இந்த இடத்தின் பெயரே அதைத்தானே சொல்கிறது. ஆமாம், ‘மரோபெங்’ என்பது செட்ஸ்வானா வார்த்தை. அப்படியென்றால், ‘உங்கள் பூர்வீகத்துக்குத் திரும்புங்கள்’ என்று அர்த்தம். மனிதன் மனிதனாகப் பரிணாமம் பெற்ற இடம் இதுதான். இங்குதான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்கு மனிதர்கள் என்றழைக்கப்படும் மனித முன்னோடிகளின் தொல் புதைபடிமங்கள் கிடைத்துள்ளன. அதனால் இப்பூமியை ‘மனித இனத்தின் தொட்டில்’ என்றழைக்கிறோம்.”  என்று வரிசையாகச் சொல்லிக்கொண்டு போனார்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சிறு இடைவெளி விட்டார். எல்லோரும் போட்டோக்கள் எடுக்க, இயற்கை அழைப்புகளை நிவர்த்திசெய்யவென்று அங்கிருந்து கலைந்து போயினர். நான் மட்டும் அப்பொட்டல் வெளியில் தனித்து நின்றுகொண்டிருந்தேன். அவர் சொன்னதே மனத்துள் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு முன்னே நின்றுகொண்டு இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தவருக்கும் கேட்டுக்கொண்டிருந்த மற்றவர்களுக்குமிடையில் பெளதீக ரீதியாக ஓராயிரம் வேறுபாடுகள் உண்டு என்றாலும் அனைவரும் புறப்பட்டுக் கிளம்பிய இடம் இதுதானே? அந்த வழிகாட்டியின் மூதாதையர் இங்கேயே தங்கிவிட்டார்கள். எங்களவர்கள் ஆயிரமாயிரம் மைல்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கிறார்கள். அப்படித்தான் இருக்க முடியும்? ஒரு மரத்தின் எல்லா கிளைகளுமா வானம் நோக்கி வளர்கிறன? சில பூமி பார்த்தும் தாழ்கின்றனதானே? எப்படிப் போனாலும் அவற்றின் ஆதி வேர் ஒன்றுதானே. இப்படி நானே எதை எதையோ ஒன்றோடு ஒன்றைப் முடிச்சிட்டுப் பிணைத்துப் பார்த்துக்கொண்டேன். அந்த இளங்காலைப் பொழுதின் ஏகாந்தமும் மென்குளிரும் பரந்து விரிந்து கிடந்த அவ்விடத்தின் பிரமாண்டமும் என்னை உணர்வுக் கொந்தளிப்பில் தள்ளின.

ஹேம், லெத்தாபோவின் தோள் மீது கைபோட்டு சிரித்தபடி எதையோ பேசிக்கொண்டிருந்தான். அவன் இயல்பே அப்படித்தான். எல்லாவற்றையும் பெரிதாக யோசிப்பான். சிறிய விசயங்களைக் கொண்டாடுவான். பிறர் ரத்தினங்களின் ஜொலிப்பில் லயித்திருக்கும்போது அவன் கூழாங்கற்களின் வழவழப்புக்கு மயங்குவான். எல்லா விசயத்திலும் அவனுக்கென்று தனித்த பார்வையிருக்கும். அது வலிந்து கவன ஈர்ப்புக்காகச் செய்யாமல் இயல்பாக உள்ளெழுந்து வந்ததாக இருக்கும்.

மிஸஸ் பிளஸ் என்று பெயரிடப்பட்ட ஆதிக்கிழவி ஒருத்தியின் மண்டை ஓட்டைப் பற்றி, அதிலும் லட்சம் வருடத்துக்கு முந்தைய மண்டை ஓட்டின் மூக்கெலும்பையும் தாடை வளைவையும் வைத்து அது எப்படிப் பெண்ணுடையது என்பதைக் கண்டுகொண்டார்கள் என்பதை ஒரு இயற்பியல் பேராசிரியர் சார்பியல் கோட்பாட்டை விளக்கும் பாவனையில் விளக்கிச் சொன்னார் லெத்தாபோ. இப்படியாக, அவர் ஒரு புதிய விசயத்தைச் சொல்லிவிட்டு ஒவ்வொருமுறையும் எங்களனைவரையும் பார்த்துப் பெருமிதம் பொங்கப் புன்னகைப்பார். தினம் தினம் வரும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு அதே கதையை வரி மாறாமல் ஒப்பிக்க வேண்டிய சோர்வளிக்கும் வேலையை எப்படி இத்தனை திருப்தியுடன் செய்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

காமிராவை காரில் வைத்துவிட்டு மதிய உணவை முடித்துத் திரும்புபோது எந்தக் கண்ணாடியும் உடைக்கப்படாமல் காரின் கதவு திறக்கப்பட்டு உள்ளேயிருந்த காமிரா திருடு போயிருந்தது. இத்தனைக்கும் காமிரா வைக்கப்பட்டதற்கும் மதிய உணவை முடித்துத் திரும்புவதற்கும் அரை மணி நேர இடைவெளிகூட இருந்திருக்காது. ஒரு சின்னக் கவனக் குறைவு. அவ்வளவுதான். இந்திய மதிப்பில் லட்ச ரூபாய்க்கு குறையாமலிருக்கும் அதன் விலை. அன்றைய நாளின் உற்சாகத்தை வடியச் செய்ய அந்த ஒரு சம்பவம் போதுமாயிருந்தது.

எங்கள் சீனியர் ராஜேஷ். எட்டு வருடங்களாக ஜோஹன்னஸ்பர்க்கில் இருக்கிறார். அவருக்கு அதை மீட்பதற்கு யாரைப் பிடிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று எல்லாம் தெரிந்திருந்தது. யார் யாரிடமோ பேசினார். திருடுபோன மூன்றாவது நாள் சாண்டனில் வைத்து ஒருவரைச் சந்தித்தார். காமிராவின் விலையில் மூன்றில் ஒரு பங்கை ராண்டாகக் கொடுத்து அதே காமிராவை அவர்களிடமிருந்து வாங்கி வந்துவிட்டார்.

அதற்குப் பின்பு, மெக்டொனால்டில் பர்கர் பார்சல் வாங்கித் திரும்பும் முன்னே டிக்கியிலிருந்த லேப்டாப் தொலைந்து போனது. ஜிம்மிலிருந்து காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, சிக்னல் மாறும் இடைவெளியில் துப்பாக்கி முனையில் கைப் பை பறிக்கப்பட்டது, இவையெல்லாம் நான் இங்கே தங்கியிருந்த இந்த இரண்டு மாத காலத்தில் என்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு மட்டும் நடந்தேறிய சம்பவங்கள்.

தென் ஆப்பிரிக்காவை அதன் கிரிக்கெட் அணியின் வழியாக மட்டும் அறிந்து வைத்திருந்த எனக்கு இங்கே வந்து இறங்கிய நாளிலிருந்து காணக் கிடைத்தது எல்லாம் ஆச்சரியங்களே. இங்கே உள்ள மக்களில் வெறும் எட்டு சதவீதத்தினர் மட்டுமே வெள்ளையர்கள். பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் கிடைத்துவிட்டாலும் நாட்டின் முக்கியமான துறைகளில் அவர்களின் ஆதிக்கமே அதிகமாயிருந்தது.

என்னுடைய விசயத்தில் பரத் சொன்னதைத்தான் ராஜேஷும் சொன்னார்.

இந்தியாவிலிருக்கும் என்னுடைய மானேஜருக்கு விரிவாக நடந்த விசயத்தைப் பற்றி மெயில் எழுதச் சொன்னார்கள். நிறுவனம் ஏதாவது செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்றார்கள். மேனனிடமிருந்து அடுத்த அரைமணி நேரத்தில், வருத்தங்களைத் தெரிவித்துவிட்டு கவனமாக இருக்கும்படி அறிவுரை செய்து பதில் வந்தது.

O

மறு வாரம் ஊருக்குத் திரும்ப வேண்டியிருந்ததால், போகும்போது வீட்டுக்கு ஏதாவது வாங்கிப் போகலாம் என்றுதான் ரோஸ்பேங்க் மால் வரை வந்திருந்தோம். இது வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. பாதுகாப்புக்குப் பிரச்சினையில்லை. தென் ஆப்பிரிக்காவில் தவறவிடாமல் வாங்க வேண்டிய பொருட்கள் இரண்டு. ஒன்று வைரம். மற்றொன்று மது. முன்னதை விடுத்து பின்னதை வாங்கி வைத்துக்கொண்டேன். அதுபோக ப்ரீத்திக்கு ஒரு வாட்ச். அம்மாவுக்கு கம்பளி ஆடையும் ஆதவுக்கு பொம்மைகளும் வாங்கிக்கொண்டேன். அப்பாவிடமிருந்த வாக்கிங் ஷூவின் முன் பக்கம் லேசாக கிழிய ஆரம்பித்துவிட்டது. மாற்றச் சொன்னாலும் கேட்பதில்லை. அவருக்கு ஷூ வாங்கும்போதுதான் பிரச்சினை தொடங்கியது.

அந்தக் கடையில் கார்ட் மிசின் வேலை செய்யவில்லை. இங்கே யாரும் பணமாக சில பத்து ராண்ட்களுக்கு மேலே வைத்துக்கொள்வதில்லை. குறிப்பாக இந்தியர்கள். ஹேம், தான் வரிசையில் நிற்பதாகவும் என்னை மாலில் இருக்கும் ஏ.டி.எம்,மில் பணம் எடுத்து வருமாறும் சொன்னான். என்னை வரிசையில் நிறுத்திவிட்டு அவன் போயிருந்தால் ஒருவேளை இந்தப் பிரச்சினையே வராமல் போயிருக்கலாம்.

நான் வேலைக்கு வந்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.மே இருந்தது. அங்கிருந்த வரிசையில் நின்றுகொண்டேன். எனக்கு முன்னால் வயதானவர் ஒருவர் பணம் எடுத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து மெதுவாக டைப் செய்து என் பொறுமையைச் சோதித்தார். அதற்குள் எனக்குப் பின்னால் வரிசை சேர்ந்துவிட்டிருந்தது. திரும்பிப் பார்த்தேன். எனக்கு அடுத்து ஆறரை அடி உயரத்தில் ஆப்பிரிக்க தேசத்தவன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். என் பொறுமையின்மை அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்து இசைவாகப் புன்னகைத்தான்.

உயரத்துக்கு ஏற்ற ஆஜானுபாகுவான உடற்கட்டு. தேன்கூட்டுச் சுருள் முடி. அவன் வலது புருவத்தில் பழைய வெட்டுக்குத் தையலிடப்பட்டிருந்த தழும்பு ஒன்றிருந்தது. பத்து பதினைந்து தையலாவது போட்டிருப்பார்கள் போல. அவன் சிரித்தபோது அது ஒரு கறுப்பு ரயில் புழுப் போல சுருண்டுகொண்டது.

அடுத்துச் சில நிமிடங்களுக்குப் பிறகே அந்தப் பெரியவர் அங்கிருந்து நகர்ந்தார். கடைசி வரை அவர் பணம் எடுத்ததைப் போலத் தெரியவில்லை.

ஏ.டி.எம். மிசினின் முன்னால் நின்றபோதுதான் எனக்கு அது நினைவுக்கு வந்தது. என்னிடமிருந்தது ஃபோரக்ஸ் கார்ட். சாதாரண ஏ.டி.எம். கார்ட் கிடையாது. வெளிநாட்டில் செலவு செய்துகொள்வதற்காக இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சத்தை அமெரிக்க டாலராக மாற்றி இந்தக் கார்டில் ஏற்றிக் கொடுத்திருந்தார்கள். இதை ஏ.டி.எம்.மில் போட்டு பணம் எடுத்துக்கொள்ளலாம்தான். ஒவ்வொரு முறைக்கும் தண்டமாக தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே அதை ஜோஹன்னஸ்பர்க் வந்த நாளிலிருந்து உபயோகப்படுத்தவேயில்லை. செலவுகளை நண்பர்கள் பார்த்துக்கொண்டார்கள். மொத்தச் செலவை, இறுதியாக திருப்பிக்கொடுத்துவிட வேண்டும். ஆனால், அப்போதைக்கு வேறு வழியில்லை. கார்டை மிசினுக்குள் விட்டேன். கடவு எண்ணை அழுத்தினேன். எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்று கேட்டது. அதையும் கொடுத்தேன். அடுத்தடுத்து சென்று, கடைசியாகப் பணம் மட்டும் வரவில்லை.

எனக்குப் பதற்றமாகிவிட்டது. ஒருவேளை அந்த மிசினிலேயே ஏதாவது பிரச்சினையோ, அதனால்தான் அந்தப் பெரியவரும் திணறிப்போனாரோ என்று யோசித்தேன். கார்டை எடுத்துக்கொண்டு ஹேமை அனுப்புவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்து கேன்சல் பட்டனை அழுத்தினேன்.

அதற்குள் பின்னாலிருந்தவன் ‘கமான்!’ என்று சலித்துக்கொண்டான்.

கேன்சலை அழுத்தியும் கார்ட் திரும்பி வரவில்லை. மொத்தமாக அந்தப் பரிவர்த்தனையிலிருந்து வெளியேறியும் வந்துவிட்டேன் ஆனால் கார்டோ பணமோ வெளியே வரவேவில்லை. கேன்சல் பட்டனைத் திரும்பத் திரும்ப தட்டினேன். பயன் ஒன்றும் இல்லை.

பின்னாலிருந்தவன், “என்னவாயிற்று?” என்றான்.

நடந்ததைச் சொன்னேன்.

அவன் எனக்கு முன்னால் வந்து ஏ.டி.எம். கீபோர்டில் எதையோ படபடவென்று அழுத்தினான். மறுபடியும் கடவு எண்ணைக் கேட்டது. அது எப்படி வந்தது என்று யோசிக்கும் முன்னர், “ம்ம்.. சீக்கிரம் கொடுங்கள்” என்று அவசரப்படுத்தினான். கொடுத்தேன். அந்த முறையும் வரிசையாக உள்ளே போய் அதே போலத் திரும்பி வந்தது. கார்டோ பணமோ வெளியே வரவில்லை.

“கார்ட் ஏ.டி.எம்.முக்குள் சிக்கியிருக்க வேண்டும். பின்னால்தான் இந்த வங்கியிருக்கிறது. போய்க் கேளுங்கள். அவர்களுடைய ஆள் வந்து திறந்து எடுத்துக்கொடுப்பார்கள்.” என்றான்.

அவன் சொல்வது சரியாகத்தான் தெரிந்தது. அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு பின்புறம் இருந்த பேங்கில் போய் கேட்டேன். அன்று சனிக்கிழமை. ஏ.டி.எம். திறக்கும் ஆட்கள் திங்களன்றுதான் வருவார்கள் என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

கடையில் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஹேமிடம் விசயத்தைச் சொன்னதும், “பைத்தியக்காரா!” என்று திட்டினான்.

“கார்ட் உள்ள போயி எவ்ளோ நேரம் ஆச்சு?”

“பத்து பதினைஞ்சு நிமிசம் ஆகியிருக்கும்.”

“அது போதும். இந்நேரத்துக்குத் தூக்கிருப்பானுங்க. சட்டுன்னு அந்த கார்ட் கொடுத்த பேங்குக்கு கால் பண்ணி, கார்டை பிளாக் பண்ணு.”

“கார்ட், மிசின்குள்ளதானே இருக்கு. எதுக்கு பிளாக் பண்ணனும்.”

“மயிரு.. மூடிட்டு சொன்னத மட்டும் செய்டா.”

கார்டை பிளாக் செய்வதற்கான வழிமுறைகளை அறிந்து அதைச் செய்யச் சொல்லும் முன் அதற்கான தேவையே இல்லாமல் போயிருந்தது. அதிலிருந்த மொத்த டாலரையும் எடுத்துவிட்டிருந்தார்கள். எனக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே விளங்கவில்லை. ஏ.டி.எம். கார்ட் வெளியே வரவேயில்லை. கார்டே இல்லாமல் அதிலிருந்து அத்தனை பணத்தையும் எப்படி எடுக்க முடியும்? அதுவும் அரைமணி நேரத்தில்!

“உனக்குப் பின்னாடி ஒருத்தன் நின்னான் சொன்னியே. அவன்தான் எல்லாத்தையும் பண்ணிருப்பான்.” என்று சொல்லி இது போன்ற சம்பவங்கள் இங்கே இதற்கு முன்பு எப்படி நடந்திருக்கிறன என்பதை விளக்கினான்.

எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தவனின் சிரித்த முகமும் சுருங்கி நெளிந்த அவனுடைய புருவத் தழும்பும் நினைவுக்கு வந்தன.

O

நாங்கள் இருவரும் ரோஸ்பேங்க் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தபோது பொழுது பின் மதியத்தைத் தாண்டியிருந்தது. ஆடையை மீறி குளிர் மெதுவாகத் துளைத்தது. அது, பார்ப்பதற்கு நம் நாட்டின் சிறு நகரத்து போலீஸ் ஸ்டேஷனை நினைவுபடுத்தியது.

அந்த ஸ்டேஷனில், நன்கு பெருத்து, தான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு வெளியே பிதுங்கி வழியும் பிருஷ்டத்தைக் கொண்ட ஒரே ஒரு பெண் போலீஸ் மட்டும் அமர்ந்திருந்தாள். அந்த மொத்த ஸ்டேஷனையும் நிறைவாய் உணரச் செய்யும் உருவம். அப்போதுதான் தூங்கி விழித்ததைப் போல அவள் கண்கள் கலங்கியிருந்தன. கறுப்பு முகத்தில் கலங்கியிருந்த விழிகள் பார்ப்பதற்கு அச்சம் தருவனவாக இருந்தன.

ஹேம் நடந்த சம்பவத்தைச் சொல்லி, “முதல் தகவல் அறிக்கை  வேண்டும்” என்றான்.

“இன்சூரன்ஸூக்குத் தானே?” என்றாள்.

என்னைப் பார்த்துவிட்டு, “ஆமாம்” என்பதாகத் தலையாட்டினான்.

ஹேம் அவளிடம் சொல்லிய சம்பவத்தை அப்படியே ஒரு வெள்ளைத்தாளில் எழுதித் தரச் சொல்லிக் கேட்டாள்.

“கவனம்! அடுத்தமுறை கேட்கும்போது இடம், நேரம், சம்பவம் என எதுவும் மாறக்கூடாது.” என்றாள். அவளுடைய ஆங்கில உச்சரிப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. மொட்டை நாக்கு.

வரிசைக் கிரமமாக எழுதிக்கொடுத்தோம். திங்கட்கிழமை வந்து எஃப்.ஐ.ஆர். காப்பியை வாங்கிக்கொள்ளச் சொன்னாள்.

“ஆளைப் பிடித்துவிட முடியுமா? நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், என்னால் அவனை அடையாளம் காட்ட முடியும். எனக்கு அவன் முகம் நன்றாக நினைவிருக்கிறது. வலது கண் பட்டையில் ஒரு பெரிய தழும்பு உண்டு.” என்றேன். ஹேம் என் முதுகில் கிள்ளினான்.

அவள் நான் சொன்னதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாத பாவனையில் நாங்கள் எழுதிக்கொடுத்த தாளை வாசித்துக்கொண்டிருந்தாள்.

என்னால் அந்த இழப்போடு ஊருக்குப் போக முடியாது. கார்டிலிருந்த மூன்று லட்சம் போய்விட்டது. அது போக, இங்கே அதுவரை ஆன செலவு மொத்தமும் நண்பர்கள்தான் பார்த்துக்கொண்டனர். ஊருக்குப் போய் திருப்பித்தர வேண்டும். அதற்கு என் கையிலிருந்து காசு போட வேண்டும். ஆதவுக்கு வாங்கிய பொம்மைகூட கடனில்தான் வாங்கப்பட்டிருக்கிறது. நினைக்கவே எரிச்சலாக வந்தது. இரண்டு மாதங்கள், நாளுக்கு பன்னிரண்டு மணி நேரம் உழைத்திருக்கிறேன். கிடைக்கப்போகும் அந்த மூன்று லட்சத்துக்கும் திட்டங்கள் தீட்டி வைத்திருந்தோம் நானும் ப்ரீத்தியும். எல்லாவற்றுக்கும் மேல், ‘பணத்தைத் தொலைத்துவிட்டேன்!’ என்று எந்த முகத்தைக்கொண்டு போய் அவளிடம் நிற்பேன்? அவமானமாக இருந்தது.

“அவன் முகம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.” என்று திரும்பச் சொன்னேன்.

அந்தத் தாளிலிருந்து கண்களை உயர்த்தி என்னைப் பார்த்தவள், ஹேம் பக்கமாகத் திரும்பி, “உன் நண்பன் எப்போது ஊருக்குத் திரும்ப வேண்டும்?” என்றாள்.

“அடுத்த வாரம்.”

“சில நேரங்களில் எஃப்.ஐ.ஆர். தயார் செய்து காப்பி கொடுக்க பத்து நாட்கள்கூட ஆகும். உனக்குத் தெரியுமில்லையா?” என்றாள்.

“இல்லையில்லை. மன்னிக்கவும். நாங்கள், எஃப்.ஐ.ஆர். காப்பியை திங்கட்கிழமை வந்து வாங்கிக்கொள்கிறோம். இப்போது வருகிறோம்.” என்று சொல்லி அங்கிருந்து என்னைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தான்.

“ஒரு நிமிடம், இங்கே வாருங்கள்!” என்றாள் அவள். அவள் மேசைப்பக்கமாக நாங்கள் போனதும், “இரவுணவுக்கு ஏதாவது கவனித்துவிட்டுப் போங்கள்.” என்றாள்.

ஹேம் தன் பர்சிலிருந்து இருபது ராண்டுகளை எடுத்து அவள் மேசை மீது வைத்தான். நாங்கள் ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்தபோது நன்றாக இருட்ட ஆரம்பித்திருந்தது.

O

நாங்கள் ஸ்டேஷனுக்கு வெளியே வந்ததும் அங்கே ஒரு பழைய மாடல் டோயாட்டா கார் நின்றுகொண்டிருந்தது. நாங்கள் ஸ்டேஷனுக்கு உள்ளே வரும்போது அந்தக் கார் அங்கேயில்லை. அதில் ஓட்டுனர் இருக்கையில் இருந்தவனைப் பார்த்ததும் எனக்குத் தெரிந்துவிட்டது. ஏ.டி.எம். வாசலில் எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தவனேதான்.

வேகமாக ஹேமை அழைத்து அந்தக் காரைக் கை காட்டினேன். அவன் அதைப் பார்த்த மறு நிமிடம் அங்கிருந்து அந்தக் கார் கிளம்பிப் போய்விட்டது.

“ஹேம், அது அவன்தான். அவனேதான்.”

“எப்படிச் சொல்ற?”

“எனக்குத் தெரியும்டா. அதே ஆள்தான். அதே உயரம், பருமன். அந்த புருவத் தழும்பைக்கூட நான் பாத்தேன்.”

“இங்கேயிருந்தேவா?”

“ஆமா, ஏன்? நீ பாக்கலியா?”

“முகத்தைப் பார்த்தேன். ஆனா அவ்ளோ டீட்டைலா இல்ல.”

“சரி வா, உள்ளே போய் சொல்லலாம்.”

“என்னன்னு?”

“அவனைப் பார்த்தத, அதுவும் இங்க வச்சு.”

“பைசா பிரயோசனம் இல்ல. அது அவனாவே இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது.”

“ஏன் முடியாது? அந்தக் கார் நம்பரை நோட் பண்ணி வச்சிருக்கேன். இது போதாதா?” என்றேன்.

“இங்க அது போதாது. முதல்ல அது அவனா இருக்காதுடா.”

“எப்படி சொல்ற?”

“அவன் ஏன் இப்போ உன் பின்னாடி வரணும்? அதுவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு.”

“ஒருவேளை என்னை ஏதாவது ரிவெஞ்ச் எடுக்கணும்ன்னு நினைச்சிருந்தா?”

“கிறுக்கா! அவன் அப்படி நினைச்சிருந்தா இதோ இப்படி இங்க நின்னு நீ பேசிட்டு இருக்க மாட்டே. துப்பாக்கியத் தூக்கி பொட்டுன்னு போட்டு போயிட்டே இருந்திருப்பான். நீ கொஞ்ச நேரம் பேசாம என்கூட அமைதியா வர்றியா?”

ஹேம் சொல்ல வந்தது புரிந்தது. அதிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. இங்கே அநேகம்பேரிடத்தில் வெடிக்கும் ஆறாவது விரல் உண்டு. அதே நேரத்தில் நான் பார்த்தது அவனைத்தான் என்பதை எப்படி இவனுக்குப் புரியவைப்பது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.

O

அதே ரோஸ்பேங்க் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வைத்து அவன் என்னைச் சுட்டான். இரண்டு குண்டுகள். இரண்டுமே மிகச் சரியாக என் இதயத்தைக் குறி பார்த்துப் பாய்ந்து வந்தன. அவனுடைய பிரத்யேகப் புன்னகையுடன் நெளிந்த புருவப்புழுவைச் சுமந்தபடியே அவன் என்னைச் சுட்டான். அவனுக்குப் பின்னால் அந்த போலீஸ்காரி முன் பற்களால் பர்கரைக் கவ்வியபடி என்னைப் பார்த்துச் சிரித்தாள். அவனுக்குப் பின்னால் அத்தனை கனத்த உருவத்தை எப்படி மறைத்துக்கொண்டு நின்றாள்? யாருமற்ற வெளியில் நான் அந்தப் பெருமரத்தின் வேரை இறுகப் பற்றிக்கொண்டேன். மூன்றாவது குண்டு என் நெற்றியைத் துளைத்தபோது வேரைவிட்டுவிட்டு கீழே விழ ஆரம்பித்தேன். பதறி எழுந்து விழித்துக்கொண்டேன். நினைவைப் போலவே அத்தனை துல்லியமாக இருந்தது. கனவோடு தூக்கமும் கலைந்துவிட்டது. சம்பவம் நடைபெற்ற அன்றும் அடுத்து வந்த நாட்களும் சரியாகத் தூக்கம் பிடிக்கவில்லை. என்னை எப்போதும் யாரோ கண்காணித்துக்கொண்டிருப்பதான பிரமை என்னைத் துரத்தியது. உயரமாக யாரைப் பார்த்தாலும் அவர்களை முந்திப் போய் முகத்தைப் பார்ப்பது பழக்கமானது.

நடுவில் ஒரு நாள் பர்கர் கிங் கடைவாசலில் மண்டியிட்டுப் பிச்சை கேட்டு நின்றவனைப் பார்த்து அலறி ஓடினேன்.

அன்று கட்டங்கின் ஆண்டர்சன் தெருவிலிருக்கும் எங்கள் தலைமை அலுவலகத்தில் வேலை. அந்த அலுவலகத்துக்கு எதிர்ச் சாரியில் ஒரு வட இந்திய உணவகம் உண்டு. சாயங்கால வேளைகளில் அங்கே கிடைக்கும் சமோசா பிரமாதமாகவும் டீ சுமாராகவும் இருக்கும். நானும் ஹேமும் ஆளுக்கொரு சமோசாவும் டீயும் சொல்லிவிட்டுக் காத்திருந்தோம்.

“மச்சி, உனக்கு ஒரு குட் நியூஸ்.”

வருவோர் போவோரைக் கவனித்தபடியே, “என்னவாம்?” என்றேன்.

“இன்ஸூரன்ஸ் கிளைம் கிடைச்சது போக மிச்சப் பணத்த, நம்ம மேனேஜ்மண்ட்ல இருந்து உனக்கு காம்பன்ஸேட் பண்றதா சொல்லியிருக்காங்க.”

நான் அதை எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. மேனன் ஒரு கஞ்சன். அணியினருக்குச் செய்வதற்கு ஏதோ தன் சொந்தக் கை காசைப் போட்டு செய்வதைப் போல சலித்துக்கொள்வான். ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் இதை ஏற்றுக்கொண்டால் நன்றியுணர்ச்சிக்கு ஆட்பட வேண்டுமே என்று யோசித்தேன். அதை வைத்து இன்னும் நாலு வேலையைத் தள்ளிவிடுவார்கள். மறுக்க முடியாது. ஏனெனில், இந்த நிகழ்வில் கம்பெனியுடைய தவறு எதுவுமில்லை. முழுக்க முழுக்க இது என்னுடைய கவனக்குறைவால் நிகழ்ந்த ஒன்று. குழப்பமாக இருந்தது.

“ஓட்டாஸ் பேசியிருப்பார் போல.”

என் திறமை மீதான அவர் நம்பிக்கை குறித்து உள்ளே ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரே ஊரில் எட்டு வருடமாக குப்பை கொட்டியவனுக்குத் தோணாதது ஓட்டாஸுக்குத் தோணியிருக்கிறது.

“என்னடா, மூஞ்சுல சந்தோசமே இல்ல.”

“இல்ல மச்சி, இதுல நம்ம கம்பெனி தப்பு எதுவுமேயில்ல. அவங்க ஏன் திருப்பித் தரணும். அதையும்கூட கிளையண்ட் ஒருத்தன் சொல்லித்தர வேண்டியிருக்கு. பேசாம, வேணாம்ன்னு சொல்லிரவா.”

“டேய், உன் நியாய மயிரெல்லாம் இங்க பேசாத. இந்த ஊர்ல யாருக்காக வேலைக்கு வந்த? சும்மா எதாவது உளறாம கொடுத்தா வாங்கிட்டு கம்ன்னு இரு.” என்றான்.

அப்போதுதான் சிக்னலில் நின்றுகொண்டிருந்த அவனைக் கவனித்தேன். டீக்கு காசு கொடுத்துக்கொண்டிருந்த ஹேமைப் பிடித்து உலுக்கியபடி, சிக்னல் அருகே எங்களை முறைத்துக்கொண்டிருந்தவன் பக்கம் கைகாட்டினேன்.

“அவன் தான்.” என்றேன்.

நான் சுட்டிக்காட்டிய பக்கம் நாசூக்காய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, பொறுமையாக மிச்சப் பணத்தை வாங்கி பையில் போட்டுக்கொண்டான்.

“உனக்கு வேற எதுவும் வேணுமா?” என்றான்.

“டேய் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன பண்ற.?”

“அது அவன் இல்லை.” என்றான் அலட்டிக்கொள்ளாத குரலில்.

“எப்படி.. எப்படி சொல்ற? நீ அவனைப் பார்த்திருக்கியா முன்ன? தெரிஞ்ச மாதிரி பேசுற?”

“டேய், நான் அவனைப் பார்த்தது இல்ல. ஆனா, அன்னிக்கு போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில ஒருத்தனைக் காட்டி அவன்தான் உனக்குப் பின்னாடி நின்னவன்னு சொன்னியே, அவனை நான் நல்லாப் பாத்தேன். இவன் அவன் கிடையாது.”

“ஆர் யூ ஷ்யூர்?”

“டூ ஹன்ட்ரட் பர்சன்ட்.”

மறுபடியும் சிக்னல் இருந்த பக்கம் பார்த்தேன். இப்போது அவன் அங்கு இல்லை. எனக்கே சற்று குழப்பமாக இருந்தது. உண்மையில், ஏதோ ஒருவகையில் உழைத்த காசு கிடைத்தவரை நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், என்னால் அப்படி இருக்க முடியவில்லை. ஏதோ ஒன்று உள்ளே கிடந்து உழற்றியது. இழந்த பணத்தைவிட ஏமாற்றப்பட்டதே என்னை அதிகமாக அலைக்கழித்தது.

O

ஓட்டாஸுனுடைய அறை நன்கு விசாலமானது. ஆண்டர்சன் தெருவிலிருக்கும் அந்த பில்டிங் முழுவதும் நாங்கள் வேலை பார்க்கும் வங்கியினுடையது. அதன் அனைத்து மென்பொருள் சம்பந்தமான பணிகளையும் கவனிக்கும் எங்களுக்கு பதினாறாவது தளம் ஒதுக்கப்பட்டிருந்தது. தெரு முழுவதும் தெரியும்படியான பெரிய கண்ணாடி ஜன்னல் அந்த அறையிலிருந்தது. சொந்த நாடாக இருந்தபோதும் வெகு சில தென் ஆப்பிரிக்கர்களே இங்கே உயர் பதவியிலிருந்தார்கள். ஓட்டாஸ் அவர்களில் ஒருவர். புத்திசாலி. நல்ல நிர்வாகி.

அவரேகூட தனக்குக் கீழ் வேலை பார்க்கும் வெள்ளையர்களைத் தேவைக்கு அதிகமான மரியாதையுடன் நடத்துவதைப் பார்த்து அது அவருடைய பண்பா பழக்கமா என்று குழம்பியுமிருக்கிறேன். அதே நேரத்தில் அவருக்குக் கீழிருக்கும் வெள்ளை மானேஜர்கள் சிலர் அவரை நடத்தும் விதத்தில் நுட்பமான கேலியிருப்பதையும் கவனித்திருக்கிறேன்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, பக்கத்தில் அமர்ந்திருந்த ஹேமைப் பார்த்தேன். அவனும் தன் பங்குக்கு நன்றி சொன்னான்.

ஓட்டாஸ் இதெல்லாம் பெரிய விசயம் இல்லை என்பதுபோல பார்த்தார். கால் சட்டையில் பர்ஸும் போனும் இருக்கிறதா என்று ஒருமுறை தடவிப் பார்த்துக்கொண்டேன். என்னையறியாமல் அதீத ஜாக்கிரதை உணர்வு வந்துவிட்டது.

“பரத், நீங்கள் இன்னும் நீங்கள் அந்த நிகழ்விலிருந்து மீளவில்லை போலவே?” என்றார்.

நான் மெலிதாய்ச் சிரித்தேன்.

“முதல்முறை இல்லையா? இரண்டு நாட்கள் அப்படித்தான் இருக்கும். இதை வைத்து நீங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் எடைபோட்டுவிட வேண்டாம். இதெல்லாம் பெரும்பாலும் மொசாம்பிக், ஜிம்பாவே போன்ற பக்கத்து நாடுகளிலிருந்து ஊடுருவி வந்தவர்கள் செய்யும் காரியங்கள். அவர்களுக்கு இங்கே வேலை கிடைக்காது. கிடைத்தாலும் எதையும் ஒழுங்காகச் செய்ய வராது. படிப்பறிவற்றவர்கள். மண்டுகள். ஒன்று, பிச்சை எடுப்பார்கள், இல்லை இப்படி திருட்டு, வழிப்பறி என்று இறங்கிவிடுவார்கள். உங்களைப் போல வெளியிலிருந்து வந்தவர்கள் எங்களையும் அவர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறீர்கள். அவர்களை அவரவர் நாடுகளுக்கு அடித்துத் துரத்திவிட்டால் இங்கே பாதிப் பிரச்சினைகள் ஒழிந்துவிடும். ஆனால், செய்யமாட்டார்கள். இங்கே நிலவும் அரசியல் அப்படி. அதை விடுங்கள். இந்தியாவுக்குச் சென்றதும் விரைவில் நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பியுங்கள். மேனனிடம் பேசியிருக்கிறேன். நீங்கள் அங்கே போனதும் அவரே உங்களிடம் வந்து பேசுவார்.” என்றார்.

அந்த அறையிலிருந்து வெளியே வந்ததும், ஹேம் என்னைப் பார்த்து அர்த்தமாகப் புன்னகைத்தான்.

“என்ன?”

“எல்லாப் பரிவுக்கும் பச்சாதாபத்துக்கும் பின்னாடி கொஞ்சம் சுயநலம் ஒட்டிட்டுத்தான் இருக்கு இல்ல.” என்று கேட்டுச் சிரித்தான்.

“தெரியல!” என்றேன்.

அவனுக்குள் திரும்பச் சிரித்துக்கொண்டான்.

“என்னடா?”

“அது ஒண்ணுமில்ல விடு.”

“அட சொல்லு.”

“அன்னிக்கு லெத்தாபோ சொன்னது ஞாபகமிருக்கா? அதான்டா அந்த மராபெங்ல வந்த டூரிஸ்ட் கைட்.”

“ஆமா, கிராடில் ஆஃப் ஹுமன்கைண்ட்”

“ஓட்டாஸ் பேசினதை கவனிச்சியா? இப்போ, அந்தத் தொட்டில் குழந்தை பக்கத்துக் குழந்தைய எட்டி உதைக்குது. கற்பனை பண்ணிப் பார்த்தேன். சிரிப்பு வந்துடுச்சு.” என்றான்.

ஓட்டாஸ் தொட்டிலில் கிடப்பதுபோல கற்பனை செய்து பார்த்தேன். எனக்கும் சிரிப்பு வந்தது.

O

ஊருக்குக் கிளம்பும் பரபரப்பில் கடைசி இரண்டு நாட்கள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஆனாலும் அது முற்றிலும் மறைந்துவிடாமல் உள்ளே கனன்றுகொண்டு வெளியே சாம்பல் பூத்துக் கிடந்தது என்பதையும் நான் அறிந்தே இருந்தேன். நின்று நிதானித்து அலசினால் மனத் தொந்தரவுக்கான காரணம் பிடிபடக்கூடும். அதற்கான சரியான அவகாசம்தான் வாய்க்கவில்லை.

‘டாம்போ சர்வதேச விமான நிலையம்’ என்ற பெயர் தட்டி, உள்பக்கமிருந்து பார்க்க அதன் எழுத்துக்கள் கண்ணாடிப் பிம்பம் போலத் தெரிந்தன. லக்கேஜைப் போட்டுவிட்டு, பாதுகாப்புச் சோதனை முடித்து விமானத்தில் ஏறுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.

இங்கிருந்து துபாய். அங்கே மூன்று மணி நேர இடைவெளி. பின்னர், அங்கிருந்து சென்னை. இதுதான் பயணத்திட்டம்.

அப்போதுதான் அங்கே வந்து இறங்கியதைப் போல இருந்தது. அதற்குள் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. இதில், சின்னதும் பெரியதுமாய் ஏராளமான அனுபவங்கள். பல்வேறு குழப்பங்கள்.

எனக்கு எதிரே போடப்பட்டிருந்த நாற்காலி வரிசைக்குப் பக்கத்திலிருந்த பிளக்கில் சார்ஜரை மாட்டிக்கொண்டிருந்தவனைப் பின்னாலிருந்து பார்த்தால் அவனைப் போலவேயிருந்தான். அதே ஜாடை. நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டது. அவன் திரும்புவதற்காகக் காத்திருந்தேன். அதே உயரம், எடை. அவனைப் போலவே தேன்கூட்டுச் சுருள் முடி. பிளக்கில் ஏதோ பிரச்சினை போல. தடவிக்கொண்டிருந்தான். அவனாக இருந்தால் நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. கனவு பலித்துவிடுமோ என்ற அச்சம் வேறு.

ஒரு வழியாக அதைச் சரிசெய்துவிட்டுத் திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். அதே போன்ற வாஞ்சையான புன்னகை. ஆனால், அவன் இல்லை. இவன் வேறு. சற்று ஆசுவாசமாக இருந்தது. பாட்டிலிலிருந்து தண்ணீரை எடுத்து மண்டினேன். அவ்வளவுதான். இன்னும் சற்று நேரத்தில், இந்தத் தொல்லையிலிருந்து வெளியேறிப் பறந்துவிடலாம். இனி இப்படித் தேடிப் பதற வேண்டிய தேவையிருக்காது.

எதிரேயிருந்தவன் தன் லேப்டாப்பைத் திறந்து வைத்து கீ போர்டைத் தட்டினான். என்னுடைய கார்ட் மிசினில் மாட்டிக்கொண்டபோது அவனும் இப்படித்தான் என் கண் முன்னால் எதையோ தட்டினான். பதற்றத்தில் அது என்ன என்பதைக்கூடப் பார்க்கவில்லை. அப்போதுதான் அது எனக்கு நினைவுக்கு வந்தது. அடுத்த நொடிகளில் என்னுடைய கடவு எண்ணைக் கேட்கும் பக்கம் வந்து நின்றது. அது எப்படி வர முடியும்? ஒருமுறை பரிவர்த்தனை ஒன்றிலிருந்து வெளியேறிவிட்டால், மறுபடியும் கார்டை திரும்பச் செலுத்தாமல் கடவு எண்ணைக் கேட்கும் பக்கம் வர வாய்ப்பேயில்லை. நானும் அதைப் பற்றி யோசிக்காமல் பதற்றத்தில் கடவு எண்ணை அளித்திருக்கிறேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. அவன் எப்படியோ அந்த மிசினை ஹேக் செய்திருந்தாலே தவிர அந்தப் பக்கத்தைத் திரும்பிக் கொண்டு வந்திருக்க முடியாது. எப்படி அவன் அதை ஹேக் செய்தான்? என்னால் அதை யோசித்தே பார்க்க முடியவில்லை. எனக்குத் தெரியும், அதற்குப்பின் இருக்கும் பாதுகாப்பைத் தகர்க்க அசாத்தியமான அறிவும் புத்திக்கூர்மையும் தேவைப்படும். அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஏனெனில், எங்கள் வங்கியின் ஏ.டி.எம். மிசின்களின் மென்பொருளைக் கட்டமைத்த அணியில் நானும் ஒருவன்.

அதுவரையில் ஏதேதோ நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்ட மனம் முற்றிலும் வெறுமையானதைப் போலிருந்தது. எதையும் யோசிக்கப் பிடிக்கவில்லை. எவ்வளவு நேரம் அப்படிப் போனது என்று தெரியவில்லை. என் பெயர் எங்கோ தொலைவில் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருப்பது மட்டும் சற்று மங்கிய ஒலியாகக் கேட்டது. சற்று நேரத்தில் எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண் ஒருத்தி வந்து, என் பெயரைச் சொல்லி அது நான்தானா என்ற கேட்டபோதுதான் அந்தக் கதவுவழிக்கான காத்திருப்புப் பகுதியில் நான் மட்டும் அமர்ந்திருந்தை உணர்ந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் அத்தனை பேரும் ஏறிவிட்டனர். விமானம், எனக்காக காத்துக்கொண்டிருந்தது. அதன்பொருட்டே ஒலிபெருக்கியில் என் பெயரைச் சொல்லி அழைத்துக்கொண்டிருந்தனர்.

என் லேப்டாப் பையை எடுத்துக்கொண்டு, அவளிடம் மன்னிப்புக் கோரிவிட்டு விமானத்துள் பதறியடித்துக்கொண்டு ஏறினேன். ஓடி வந்ததில் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. அடுத்த சில நிமிடங்களில் விமானம் கிளம்பி, மேலெழுந்து பறந்தது. ஜன்னலோர இருக்கை. மொத்த ஜோஹன்னஸ்பர்க் நகரமும் தெரிந்தது. மிக மிக அழகான ஊர். ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டேன். அனிச்சையாக என் கை வலது புருவத்தில் ஊர்ந்து எதையோ தேடிக்கொண்டிருந்தது.