1. முள்

நல்ல வெயில் காலம் இல்லையா அது ?

ஆலப்புழையின் காயலில்

ஒரு பொரித்த கரிமீனிற்காக

நாம் சுற்றித் திரிந்த போது

முச்சந்திகள் நாற்கர சாலைகள் என

நீரின் பாதைகளை அவ்வளவு

எளிதில்  வரையறுக்க முடிவதில்லை

நாமிருவர் பயணித்த படகில்

நான் மட்டும் துடுப்புகளிட்டு

வெகு நேரம் புலனழிந்து சுழன்றது

ஒரு துரோகத்தின் நீர்சுழியில் தானே!

காயல் நீரின் மேலே தெரிவதற்காக

கானல் நீரில் ஈரம் இருக்கிறதா என்ன?!

அதற்கப்புறம் எத்தனை

வெயில் காலங்களைக் கடந்தாயிற்று!

குரல்வளையில் சிக்கிய

அந்த கரிமீனின் சிறிய முற்களை

இன்னும் அகற்ற முடியவே இல்லை.

 

  1. ஆழ்

முற்றிலும் காலி செய்து

புறக்கணிக்கப்பட்ட ஒரு சிற்றூரின்

புறத்தே ஓடும்

செம்பழுப்பு நதி போல

வெளியேறிக் கொண்டிருக்கிறது

என் உடலில் இருந்து

ஒரு முதிராத கனவின் முடிவு

குளியலறை எங்கும்

இரும்பின் வாசம் – வியாபித்து

இருப்பதாய் சொல்கிறாய்

அடர்ந்த இருளின் கதகதப்பில்

கண்கள் மூடி உறங்கிப் போகலாம்

ஓர் ஆக்டோபஸாய் மாறி

பிறவாத என் குழந்தைகளை

பிறந்தும் உடனிலாத என் சிசுக்களை

எட்டு கரங்கள் நீட்டி

விரித்து வளைத்து அணைத்தபடி

நேற்று – விடிந்து விட்டது

என்று எழுப்பியது போல்

நாளையும் செய்து விடாதே

இப்போதெலாம் முடிவின்றித் தொடர்ந்தபடி

இருக்கும் கனவுகளில் எல்லாம்

கரையில் துள்ளும் குஞ்சு மீன்களைக்

கடலில் சேர்த்தபடி இருக்கிறேன்.

 

  1. தனி

சேற்று வயலில் இரையெடுத்துக் கொண்டு

அந்தி வானில் மறையும்

வெண்கொக்கு கூட – ஏனோ

உன்னைத் தான் நினைவு படுத்துகிறது

இதோ இந்த மனோரஞ்சித மரத்தடியில்

தனியே நிற்கும் எனக்கு

மாறிக் கொண்டேயிருக்கும்

இம்மலர்களின் வாசத்தை தவிர

வேறு துணை இல்லை

கவியும் இவ்விரவு

வெறுமையான நத்தைக் கூடென

அவ்வளவு துயர் மிகுந்ததாக இருக்கிறது

பற்பல வலசைப் பருவங்களுக்கு

முன் நிகழ்ந்த ஒரு கலவியை

எத்தனை காலத்திற்குத் தான்

துணை கொள்ள முடியும்

நள்ளிரவில் பசியோடு அலறும்

அடர்வனத்துக் கொற்றவைக்கும்

குருதிப்பலியிட்டு வெகு நாட்களாயிற்று.