நீங்கள் உற்றுக் கவனித்தால் மட்டுமே அவள் இருப்பின் பொருந்தா பிசிறுகள் புலப்படும்.
வலசை காலத்தை தவற விட்டுப் பின்தங்கிய தனித்த குருவிக்குக் கூடடைதல் உண்டா?
இரண்டாவது முறையாக அவளை காபி ஷாப்பில் பார்த்தேன்.
அன்று போலவே இன்றும் அவளுடைய உலகத்தில் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை.
அனுமதித்தாலும் பின் நோக்கி ஓடும் காலக் கோட்டில் எப்புள்ளியில் நுழைவது?
கவ்வியிருந்த முதலைக் கிளிப்பிற்கு அடங்காமல் சில முடிக்கற்றைகள் முகத்தில் விழுந்தன.
மனதில் பல முறை ஒத்திகை பார்த்துப் பார்த்து வீர்யம் நீர்த்த வார்த்தைகளைப் போல…
அடர்நிற உதட்டு சாயத்தை டிஷ்யு தாளால் ஒற்றி ஒற்றி உறுத்தாத
மங்கிய நிறமாக்கியிருந்தாள்.
இவர்களுக்காய் என்ன சாயம் பூசி மாற்ற முயன்றாலும் மயிர் கால்களில் பிடிவாதமாய் துளிர்க்கும்,
வெள்ளையைப் போல தன்னியல்பு வெளிப்பட்டு விடுகிறது.
சாயம் பூசப் பூச
புதிது புதிதாய் வேறு முளைத்துக்கொண்டே இருக்கிறது.
இடத்துக்குப் பொருத்தமான கால் சட்டையும் அதற்குக் கொஞ்சமும் பொருத்தமில்லா மேல் சட்டையிலும் அவள் சஞ்சரிக்கும் உலகங்களின் பேதம் தெரிந்தது.
காபி கோப்பையைச் சுற்றிப் பிணைந்த கைகள் வெப்பம் அருந்திக் கொண்டிருந்தன.
மேசையில் பச்சைப் பீங்கான் தட்டில் உள்ள இஞ்சி கேக் மட்டும் பிரிக்காத புத்தகமாய் முள் கரண்டிக்காகக் காத்திருந்தது.
படிக்கத் தவறிய பக்கங்களைப் பிற முகங்களைக் கடந்த பிரதேசங்களில் படிக்க முயன்றாள்.
*
கழுத்தில் நவரத்தின சங்கிலியில் தொங்கிய கண்ணாடியில் அவள் போக விரும்பிய அத்தனை ஊர்களும்…
பெற விரும்பிய அத்தனை பட்டங்களும் அதைக் கொடுக்கும் கலாசாலைகளும்…
இறந்த காலத்தின் மணிக்கற்களாக மாறி மாறி மின்னின.
ஒரே வரியைப் புரியாமல் திரும்பத் திரும்ப வாசிப்பது போல
அலை பாயும் கண்கள் மட்டும் வேகமாய் நகரும் வாகனங்களுடன் சேர்ந்து
இட வலம்
வல – இடம்
இட – வலம்
வல – இடமாய் நகர்ந்தன.
கழுத்தில் கிடந்த கண்ணாடியைக் கண்களுக்கு உயர்த்தாமல்
அடிக்கடி தொடு திரையைத் தேய்த்து தேய்த்து கண்களை இடுக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள்
எத்தனை இடுக்கினாலும் அவள் பேசாமல் விட்ட ‘எனக்கு வேண்டும்’ களும் ‘என்னால் முடியாது’ களும் இனங்காண முடியாது.
…குளமாய்த் தேங்கிக் கிடந்தன.
கீழே போட்டு உடைத்த கண்ணாடி குடுவை போல குழந்தை பெரும் சத்தத்துடன் அழத்தொடங்கியது.
பிரபஞ்சம் ஸ்தம்பித்தது.
அழுகையைத் தவிர எல்லாமும் ஊமையாயின.
சில நொடிகள் அவளும் இயங்க மறந்து சும்மாயிருந்தாள்.
கண்களால் தீர்ப்பெழுதத் திரும்பிய தலைகளை
தன் கண்களாலேயே கொய்து வீசினாள்.
தள்ளு வண்டியைப் பக்கத்தில் இழுத்து முயல் போல் மெத்தென்று மூடியிருந்த குழந்தையைத் தூக்கி
தோளில் இட்டு சின்னஞ்சிறு முதுகை நீவி விட்டாள்.
எதை கொடுத்தும் பெற முடியாத இந்த முவ்விரல் நீவலில்,
மனச்சுருக்கங்கள்
சில நேராக வாய்ப்பிருந்தது.
அழுகை குறைந்து ஏங்கி ஏங்கி விம்மி விம்மி மறுபடி
தூங்கியது.
வழுவழுப்பான மேல்சட்டையின் மீது
தலையை மேலும் கீழும் நகர்த்தி வசதியாய் வைத்துக் கொண்டது.
சுகமாக கண் மூடி சிரித்தது.
பொருத்தமான மேல் சட்டையில் பிஞ்சுக் கன்னத்தை உறுத்தும் பூ வேலைப்பாடுகள்
இருக்கக்கூடும்.
இதை – இதே நிச்சயமற்ற நாட்களை இரண்டாம் சுற்றாக
மூதாயாகவும் கடத்தக் கூடிய திண்ணம் தன் புருவ மத்தியில் இரண்டு கோடுகளாக வரைந்திருந்தாள்.
காபியின் வாழ்நாள் முடிந்து விட்டது.
கேக் மட்டும் இஞ்சி சுவையுடனும் நம்பிக்கை யுடனும் காத்திருந்தது.
வாயில் வைக்கும் முன்பே திகட்டிவிட்டதோ என்னவோ?
அவளுக்கு சிறிது கசப்போ துவர்ப்போ தேவைப்பட்டதோ என்னவோ?
பச்சை பீங்கானைத் தூரமாகத் தள்ளி வைத்தாள்.
பிரியமான காயத்தின் தழும்பைப் போல
தன் தோளிலிருந்து தூக்கி அலுங்காமல் கவனமாக வண்டியில் வைத்தாள்.
எழுந்து வண்டியை முன் தள்ளி நடந்தாள்.
முள் கரண்டி படாத அந்தக் கேக்கின் இஞ்சி சுவை ஒரு முடிச்சையாவது அவிழ்க்கக்கூடும்தான்.
ஆனால் அதைக் கொள்வாருமில்லை அவிழ்ப்பாருமில்லை.
அவள் முதுகுக்குப் பின் மெதுவாக இரு பக்க கண்ணாடிக் கதவுகள் இணைந்து மூடிய கணம்
அந்த காபி ஷாப் தன் முகத்தை வெடுக்கென்று எதிர்திசையில் திருப்பிக் கொண்டது.