சமூக வலைத்தள யுகத்தில் அரசியலின் அனைத்துப் பரிமாணங்களும் மாறிவிட்டன. அரசியல் சார்ந்த எந்த நிலைப்பாடுகளுக்கும் எதிர்வாதங்களுக்கும் இங்கு இடமற்ற காலம் ஒன்று உருவாகிவிட்டது. பொய்களுக்கும் அவதூறுகளுக்கும் விளக்கமளிப்பதே இங்கு முழு நேர அரசியல் செயல்பாடாகிவிட்டது. சில அரசியல் கட்சிகள் ஊடகங்கள் துணையுடன் இந்த பொய்களின் தொழிற்சாலையை நடத்தி வருகின்றன. இதன் மொத்த உற்பத்தியாளராக பா.ஜ.கவும் அதனால் கைவசப்படுத்தப்பட்ட ஊடகங்களும் திகழ்கின்றன. அவர்களின் ஊடக யுத்தத்தின், பொய்ப்பரப்புகளின் முதன்மை இலக்காக இன்று தமிழகமே திகழ்கிறது.
தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை என்ற முன்னாள் காவல்துறை அதிகாரி நியமிக்கப்பட்டபோதே அரசியலுக்கு சம்பம்பந்தமே இல்லாத ஒருவர் ஏன் ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவரப்படுகிறார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. பா.ஜ.கவிற்குள்ளேயே நீண்ட நாள் அந்தப் பதவிக்கு காத்திருந்தவர்களிடமிருந்தும் முணுமுணுப்புகள் எழுந்தன. ஆனால் பா.ஜ.க தமிழக அரசியலை மரபான அரசியல் வழிமுறைகளால் எதிர்கொள்ள முடியாது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருந்தது. மாறாக வதந்திகள், பொய்கள்மேல் கட்டப்படும் ஒரு அரசியலுக்கு எந்தக்கூச்சமும் அற்ற ஒரு அடியாள் தேவைப்பட்டார். அந்த அடியாள்தான் அண்ணாமலை. அடியாள்களின் இயல்பு தன் எஜமானர்களின் கட்டளையை அவர்கள் மனம் மகிழும்படி நிறைவேற்றுவது மட்டுமல்ல, தனது சகாக்கள், தனது அதிகாரத்திற்குப் போட்டியாக இருக்கக்கூடியவர்களை முதலில் ஒழித்துக்கட்டுவதும்தான். இரண்டையுமே அவர் வெற்றிகரமாக செய்தார். அவர் முதலில் தமிழக பா.ஜ.கவில் தனக்குப் போட்டியாக இருக்கக்கூடியவர்களை பல்வேறு வழிகளில் முடக்கினார். அல்லது தனக்கு அடிபணிந்து செல்லும் நிழல்களாக மாற்றினார். பா.ஜ.கவில் அனைத்துக் குரல்களும் ஒடுங்கிப்போய் முழுக்க முழுக்க அண்ணாமலை மட்டுமே தமிழக பா.ஜ.க என்ற பிம்பம் உருவாக்கபட்டிருக்கிறது. பா,ஜ,கவின் செய்தித் தொடர்பாளர்களாக இருந்தவர்கள்கூட ஊடக வெளியில் இருந்து அகற்றப்பட்டு விட்டார்கள். அவர்களது சட்ட மன்ற உறுப்பினர்களின் குரல்கூட பெரும்பாலும் எங்கும் ஒலிப்பதில்லை. அண்ணாமலை ஒரு நாள்தவறாமல் ஊடகங்கள் முன் பேசுகிறார். இடைவிடாமல் பேசுகிறார். அவருக்குத் தெரிந்தது, தெரியாது அனைத்தையும் பற்றிப் பேசுகிறார். தான் பேசுகிற கூட்டங்களுக்கு பணம் கொடுத்து மக்களை வரவழைக்கிறார். அவர் போகிற இடத்திற்கு எல்லாம் ஊடகங்கள் செல்கின்றன. அந்த ஊடகவியலாளலர்களையே அவர் சிலசமயம் அவமானப்படுத்துகிறார். ஆனால் ஊடகங்கள் அவரைச் சலிப்பின்றி பின்தொடர்கின்றன. அவர் சொன்ன பொய்களைத் திரும்பத் திரும்ப சொல்கிறார். அல்லது புதிய பொய்களைச் சொல்கிறார். யாரும் அவரிடம் பெரிதாக எதிர்க் கேள்விகள் கேட்பதில்லை. ஹெர்.ராஜாவிடம் கேட்கும் கேள்விகளைக்கூட கேட்பதில்லை. அவர் ஒரு மலைப்பிரசங்கம் நிகழ்த்துவதுபோல பொய்பிரசங்கங்களை நிகழ்த்துகிறார். அவற்றை தம் தலையில் தாங்கி எடுத்துச் செல்லும் பணியை ஊடகங்கள் செய்கின்றன. தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், இணைய இதழ்கள், யூ ட்யூப் சேனல்கள், பா.ஜ.கவின் வாட்ஸப்-ட்விட்டர்-ஃபேஸ்புக் ராணுவங்கள் என அவரது பொய்களின் விஷக் கிருமிகள் எங்கெங்கும் கொண்டு செல்லப்படுகிறது. இதனுடைய இந்தத் தீவிரமான பரவல் காரணமாக எந்த ஆதாரமும் இன்றிப் பேசும் ஒரு நபரின் அவதூறுகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. பா.ஜ.வின் அதிகாரத்திற்கும் பணத்திற்கும் அடிபணிந்த ஊடகங்கள், பா.ஜ.கவின் பினாமிகளால் உருவாக்கபட்ட பல யூ ட்யூப் சேனல்கள் இந்தப்பணியை முழு வீச்சில் செய்கின்றன.
அண்ணாமலையின் ஒவ்வொரு பொய்யும் அவதூறும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. கொஞ்சம்கூட கூச்சப்படுவதில்லை. ஒரு பரபரப்பு ஊடக நிறுவனம் எப்படிச் செயல்படுமோ , ஒரு ப்ளாக் மெயிலர் எப்படிச் செயல்படுவாரோ அப்படித்தான் அண்ணாமலை செயல்படுகிறார். அவருக்குத் தான் சொல்கிற எந்தப் பொய்குறித்தும் பொறுப்புணர்வோ கூச்சமோ இல்லை. இவருக்கு தமிழகத்தில் சீமான் என்ற முன்னோடி இருக்கிறார். ஆனால் சீமானுக்கு இல்லாத அதிகார பலம் அண்ணாமலையிடம் இருக்கிறது. பா.ஜ.கவிற்கு தமிழகத்தில் ஒரு அரசியல் தலைவர் தேவையில்லை. ஏனெனில் பா.ஜ.கவின் கொள்கைகள் தமிழகத்தில் எடுபடாது என்று அவர்களுக்குத் தெரியும். மாறாக திராவிடத்திற்கு எதிராகவும் திமுகவிற்கு எதிராகவும் அவதூறுகளின் வழியே ‘ ட்ரால்’ செய்யக்கூடிய ஒரு ஊழியர்தான் அவர்களுகுத் தேவைப்பட்டார். அந்த ஊழியத்தை அவர் திறம்பட செய்து வருகிறார்.
அண்ணாமலையைபோலவே காவல்துறை அதிகாரியாக இருந்து அரசியலுக்குக்கொண்டுவரப்பட்டவர் இப்போதைய தமிழக ஆளுநர் ஆர். என். ரவி. நாகாலாந்து ஆளுநராக இவரது மோசமான செயல்பாடுகள் கடும் விமர்சனத்தை சந்தித்தன. இரண்டு முன்னாள் காவல்துறை அதிகாரிகளை, ஒருவரை ஆளுநராககவும் ஒருவரை தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவராகவும் பா,ஜ,க அனுப்பியதன் காரணம் எந்த அரசியல் நெறிமுறைக்கும் உட்படாத ஒரு அரசியலை தமிழகத்தில் செய்யவேண்டும் என்பதுதான். ஆளுநர் ரவி முழுக்க முழுக்க ஒரு சட்டவிரோத அதிகாரத்தை செலுத்தி வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்க மறுத்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை செயல்பவிடாமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள் இருக்கிறதோ அனைத்தையும் செய்து வருகிறார். அதுமட்டுமல்ல உலகப்பொதுமறையாம் திருக்குறளை சனாதானத்துடன் இணைத்துபேசுவது, திராவிடம் குறித்த அபத்தமான கருத்துகளை முன்வைப்பது என ஒரு சித்தாந்தப் போரையும் நடத்த முற்படுகிறார். பட்டிலியலினத்தவரை ‘ஹரிஜன்‘ என்கிறார். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் மாநில அரசோடு மோதல் போக்கை மேற்கொள்கிறார். இதே யுத்தத்தை கேரளத்தில் ஆளும் இடது சாரி அரசோடு அந்த மாநில ஆளுநரும் நடத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் அண்ணாமலையும் ஆளுநர் ரவியும் தொடர்ந்து போலியான சச்சரவுகளையும் மாநில அரசை செயல்படவிடாமல் தடுக்கும் வேலையையும் செய்து வருகின்றனர். அண்ணாமலை தமிழ அரசின் மீதும் வைத்த எல்லா குற்ற்சாட்டுகளும் பொய் என்பது அவ்வப்போது ஆதாரத்துடன் மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆனால் அண்ணாமலையின் பொய்கள் சென்று சேரும் அளவு இந்த மறுப்புகள் போய்ச்சேருவதில்லை. ஒரு பகுதி மக்களிடம் அவை ஐய்யத்தையும் குழப்பதையும் ஏற்படுத்துகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. அந்தக் குழம்பிய குட்டையில்தான் அவர்கள் மீன் பிடிக்க விரும்புகின்றனர்.
சமீபத்தில் கோவையில் ஒரு காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் இறந்ததை அண்ணாமலை உடனடியாக ஒரு மதவாத பயங்கரவாத தாக்குதலாக சித்தரிக்கத் துவங்கினார். இது ஐ. எஸ். ஐ.எஸ்.ஐ வேலை என்றார். காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் இருப்பதால் விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை என்றார். 2019ல் இருந்தே தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆகிவிட்டதென்றார். சமூகங்களிடையே அச்சத்தையும் விரோதத்தையும் பரப்பும் விதமாக மிக ஆபத்தான கருத்துகளை எந்தப்பொறுப்பும் இன்றிப் பேசினார்.
இத்தனைக்கும் இந்தபிரச்சினையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டது. இறந்த நபரோடு சம்பந்தப்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். எல்லா தகவல்களையும் வெளிப்படைத்தன்மையுடன் ஊடகங்கள் முன்னால் வைத்து வருகிறது. ஆனால் எந்த முகாந்திரமும் இன்றி அடுக்கடுக்கான பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசிற்கு நெருக்கடி கொடுக்க முயன்றார்.
தமிழ்நாட்டில் எப்படியாவது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கி இந்த அரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் திமுக பதவியேற்ற முதல்நாளிலிருந்தே பல்வேறு சக்திகளுக்க இருக்கின்றன. பா.ஜ.கவும் அதிமுகவும் முதன்மையாக போலி சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பி கூச்சலிட்டு வருகின்றன. இந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுக அரசு இந்தச் சதிகளை வெற்றிகரமாக எதிர்கொண்டுவருகிறது. இது இந்துகளுக்கு எதிரான அரசு என பா.ஜ.க கட்டமைக்க முயலும் பொய்யை முறியடித்து அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசு என்ற என்ற நிலையை வலுவாக நிலைநாட்டி வருகிறது. இந்த அரசு மக்களோடு இருக்கிறது என்பதையும் மக்கள் இந்த அரசோடு இருக்கிறார்கள் என்பதையும் தெட்டத்தெளிவாக உணர்ந்திருக்கும் அரசின் எதிரிகள் கற்பனை பூதங்களை உலவவிடுகின்றனர். கட்டுக் கதைகளை உருவாக்குகின்றனர். மத மாச்சரியங்களை வளர்க்க முற்படுகின்றனர். பெரும்பாலான ஊடகங்கள் தங்கள் வசம் இருக்கின்றன என்ற தைரியத்தில் எந்தப் பொய்யையும் இட்டுகட்டி நம்பவைத்துவிடலாம் என நினைக்கின்றனர்.
தலைமையில்லாமல் தடுமாறும் அதிமுகவோடும் சில்லரை சாதியக் கட்சிகளோடும் சேர்ந்துகொண்டு தமிழகத்தில் தனக்கு ஒரு அஸ்திவாரத்தை அமைத்துக்கொள்ளலாம் எனும் பா.ஜ.கவின் கனவுக்கு பெரும் முட்டுகட்டையாக திமுகவும் திராவிடக் கருத்தியலும் இருக்கிறது. பா.ஜ.கவை அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் மிக உறுதியாக திமுக எதிர்கொண்டு வருகிறது. திமுக தலைவர் பா.ஜ.கவுக்கு எதிரான ஒரு தேசிய அணியை கட்டுவதில் முன்ணனி தலைவராகச் செயல்பட்டு வருகிறார். மாநில சுயாட்சிக்கும் சமூக நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராக ஒன்றிய அரசு மேற்கொண்டுவரும் ஒவ்வொரு செயலையும் திமுக சமரசமற்று எதிர்த்து வருகிறது. தென்னகத்தில் தனது மிக வலுவான அரசியல்-சித்தாந்த எதிரியாக திமுகவைக்காணும் பா.ஜ.க இந்தக் கோட்டையை எப்படியாவது உடைத்துவிட்டால் தனது சாம்ராஜ்ஜியத்தை முழுமையாக சிதைத்துவிடலாம் என கனவு காண்கிறது.
அந்தக் கனவிற்கு பெரும் இடையூறாக இருக்கும் திமுக அரசை வீழ்த்தவேண்டும் என்பதற்காக அவர்கள் முழுவீச்சில் களம் இறங்கியிருக்கின்றனர். ஆனால் அது ஜனநாயத்தின்பாற்பட்ட அரசியல் போர் அல்ல. சதிகளும் பொய்களும் நிறைந்த சூதின்பாற்பட்ட போர். இந்த வழி முறைகளைப் பயன்படுத்தித்தான் அவர்கள் எளிதாக இந்தியா முழுக்க வென்றார்கள். ஆனால் தமிழகத்தில் அவர்கள் எதிர்கொள்வது ஒரு நூற்றாண்ட வரலாறும் வலிமையும் கொண்ட திராவிடம் எனும் மாபெரும் சித்தாந்த எதிரி. அதனால் ஒவ்வொருமுறையும் அவர்கள் உத்திகள் இங்கு தோற்கின்றன. அவர்கள் நாடகங்கள் அம்பலமாகிகின்றன.
அண்ணாமலை என்பவரும் ஆர்,என் ரவி என்பவரும் தனிநபர்களல்ல. அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் அடியாட்கள். சலசலப்புகளும் சச்சரவுகளும் பிரித்தாளும் சூழ்ச்சிகளும் தமிழகத்தில் வெற்றிபெறாது என்பதை இந்த இரண்டு நச்சுக் கோமாளிகளுக்கு தமிழகம் புரியவைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அவர்கள் கால்வைத்திருக்கும் தமிழநிலத்தின் தன்மை புரியாமல் அவர்கள் இந்த ஆபத்தான ஆட்டத்தில் இறங்கியுள்ளனர்.
uyirmmai@gmail.com