1

 

முதலில் அவனுக்கு அந்த சந்தேகம் தொடங்கிய முதல் கணம்  நன்றாகவே நினைவிருக்கிறது. அவளின் இரண்டாவது காதலன், அவனைத் தற்செயலாக ஒரு பரோட்டாக் கடையில் சந்தித்து அவனது பாம்பே சிகப்பு விளக்குப் பகுதி அனுபவங்கள் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தான்.அவன் ஒரே நேரத்தில் ஐந்து முதல் ஆறு பெண்கள் வரைப் புணர்வானாம்.வருடா வருடம் தீர்த்த யாத்திரை போல் அங்கு செல்லும் பழக்கம் உண்டாம்.அவனது ஆண்மையைப் பற்றி அவளும் கொஞ்ச காலத்துக்கு முன்புதான் இவனிடம் சொல்லியிருந்தாள். ஒரே நேரத்தில் மூன்றுமுறை பண்ணினோம். “இவன் முதலில் இவனை துன்புறுத்தும் நோக்கமாகவே அவள் அதைச் சொன்னாள் என்று நினைத்தான்..ஃபேஸ்புக்கில் ஒரு பிரபலமான பெண் இவன் ஊருக்கு வந்திருந்தபோது அவளது வேண்டுகோளின்படி அவன் ஊரின் பிரபலமான கோவில் ஒன்றுக்கு அவளை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினான்.பிறகு அங்கிருந்த வரலாற்று முக்கியம் உள்ள சில கோட்டைகளுக்கும் அழைத்துப்போனான்.அவள் இவனுடன் அங்கு மாலைப்பொழுதில் நிழலுருவங்களாய் எடுத்த சில போட்டோக்களைப் பகிர்ந்திருந்தாள்.அதை அவள் பார்த்த மறு நொடி இவளிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.”ஓஹோ.”இவன் கொடுத்த விளக்கங்கள் எதுவும் அவள் காதில் ஏறவில்லை.சில நாட்கள் கழித்து அவளே பேசினாள்.அவளது புதிய காதலனுடன் ஓட்டலறையில் மூன்றுமுறை ஒரே சமயத்தில் புணர்ந்த கதையைச் சொல்வதற்காக.அப்போது அவள் குரலில் இருந்த திருப்தி இவனால் தாங்க முடியாததாய் இருந்தது.இவ்வளவுக்கும் அந்தப் பெண் பிரபலத்துடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டதைத் தவிர எதுவும் செய்யவில்லை.ஓரிருமுறை அந்தப் பிரபலம் இருட்டில் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு தன் இச்சையைத் தெரிவித்திருந்தாலும் கூட.இவன் அடுத்தவாரமே அவள் ஊருக்குப் போனான்.அவன் முதலில் எடுத்த விடுதியில் பெண்களை அறைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்.மறு நாள் வேறொரு அறை எடுத்துக்கொண்டு அவளை அழைத்தான்.அவளது கணவன் வீட்டில் இருப்பான், வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.அவளது திருப்தியின்மையை ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் அவள் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தாள்.அவன் ஊர் திரும்பிவிட்டு அடுத்தவாரம் போனான்.இம்முறை அவளே ஒரு விடுதியைச் சொன்னாள்.வேறொரு நண்பரை அந்த விடுதியில் சந்தித்திருப்பதாகவும் அப்போது அங்கு பெரிய கெடுபிடிகள் எதுவும் நிகழவில்லை என்றும் சொன்னாள்.அவர்களுக்குள் எதுவும் நிகழவில்லை என்றும் சொன்னாள்.அவள் சொன்னது போலவே அவர்கள் எந்தப் பிரச்சினையும் செய்யவில்லை.சொன்ன நேரத்துக்கு மிகத் தாமதமாக அவள் வந்து சேர்ந்தாள்.குடும்பத்தோடு கோயில் போகிறோம், சீக்கிரம் திரும்பவேண்டும் என்றும் சொன்னாள்.அவ்வளவு குறுகிய நேரத்தில் அவனால் பழைய ஊடலுக்கான சமாதானம் ,புதிய கூடல் எதையுமே சரியாகச் செய்யமுடியவில்லை.கோழிப்புணர்ச்சி போலதான்  முடிந்தது.விடுதிக் கதவை யாரும் தட்டி விடுவார்களோ என்கிற பயம் வேறு.அவனுடைய சுக்கிலம் அவளது யோனிக்குள்ளேயே சரியாகப் போனதுபோல் தெரியவில்லை.அவன்  கண் முன்பே வெளியே எருக்களித்து வழிந்ததைப் பார்த்தான்.அவன் தான் ரொம்பவும் பதற்றமாய் இருந்ததாய்ச் சொன்னான்.அவள் முதல் முறையும் அவன் அப்படித்தான் இருந்ததை  நினைவுபடுத்தினாள்.அவனுக்கு எதையுமே சரியாகப் பண்ணவரவில்லை என்று அவள் ஒருமுறை சொன்னாள்.மறுமுறை தன்னிடம் மட்டுமே அப்படி நடந்துகொள்வதாகச் சொன்னாள்.அந்தப் பேஸ்புக் பிரபலத்துடன் எத்தனை முறை பண்ணினான் என்று கேட்டாள்.இன்னொருபுறம் அவளது புதிய காதலன் அவனது உடலை ஜிம் எல்லாம் போய்க் கட்டுக்கோப்பாய் வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டினாள்.அவனுக்கு ஒரு சரியான விடுதியறையைக் கண்டுபிடிப்பது  முதல் ஒரு பெண்ணுடன் எத்தனை முறை, எவ்வளவு நேரம் அவள் திருப்தியடைவது வரை உறவுகொள்ளவேண்டும் என்பதுவரை தெரிந்திருக்கிறது.இவனுக்கோ எதுவும் வரவில்லை.அது கூடப் பரவாயில்லை.அவனை நம்பி வந்த ஒரு பெண்ணுக்கு விசுவாசமாக இருக்கவும் தெரியவில்லை.இவனுக்கு மெல்ல அவள் பிரச்சினையின் வேர் புரிந்தது.அவளது கணவனுக்கு வேறொரு தொடர்பு இருந்தது.அதற்கொரு பழிவாங்கல் போலதான் அவள் இவனைத் தேடி வந்தாள்.இவன் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாவது போல் சந்தேகம் வந்ததும் இவனைப் பழிவாங்க புதிய ஒருவனிடம் போகிறாள்.ஆனால் இதன் நியாயம் என்ன என்று அவனுக்குப் புரியவில்லை.இந்த மாதிரி விவகாரங்களில் எப்போதுமே ஒரு நம்பிக்கை குறைவு இருக்கும் என்று நண்பன் சொன்னான்,இவை முதலிலேயே ஒரு ஏமாற்றுடன் ஆரம்பிக்கிற உறவுகள்.இவற்றில் ஒரு விசுவாசத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?அதன்பிறகு ஊருக்கு வந்ததும் இருவரிடையே நிகழ்ந்த உரையாடல்களில் சந்தேகமும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளும் அதிகரித்துக்கொண்டே வந்து ஓரு கட்டத்தில் அந்த உறவே முடிந்துவிட்டது.இருவரும் ஒருவர் எண்ணை ஒருவர் அலைபேசியிலிருந்து அழித்துக்கொண்டார்கள்.ஃபேஸ்புக்கில் ப்ளாக் செய்துகொண்டார்கள்.இருப்பினும் ஒருவரை ஒருவர் கண்காணிக்க ஃபேக் ஐடி ஒன்றையும் உருவாக்கிக்கொண்டார்கள்.அவன் எல்லாவற்றையும் மறக்க முயற்சித்தான்.அவர்கள் இருவருக்குமே சொந்த வாழ்க்கையில் பல துயர்கள் இருந்தன.காதலை விட காமத்தை விட இந்தத் துயர்களே அவர்கள் ஒருவரை ஒருவர் நெருங்கிவரக் காரணமாக இருந்தது.ஆனால் துயரிலிருந்து இன்பம் எப்படிப் பிறக்கமுடியும்?இருளில் ஒளி தோன்றமுடியுமே தவிர இருளால் ஒளியைத் தோற்றுவிக்கமுடியாது என்றான் நண்பன்.இவனுடைய எல்லா விஷயங்களையும் அறிந்த ஒரே நண்பன்.அவன் மட்டும் இல்லாவிடில் இவன் என்ன ஆயிருப்பானோ தெரியாது என்று இவன் அடிக்கடி நினைத்துக் கொள்வான்.ஆனால் அந்த நண்பன் ஒரு நாள் இவனது கடைக்கு மிகுந்த பதற்றத்துடன் வந்தான்.அவனை இவன் அப்படிப் பார்த்ததே இல்லை.டீ சாப்பிடலாமா என்று கேட்டு இவனை அழைத்துப் போனான்.போகிறவழியிலேயே அழுதுவிட்டான்.இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.பிறகு மெல்ல அவன் அதைச் சொன்னான்.ஒரு ஆறுமாதம் முன்பு இதே போல் ஒரு நாள் மாலை அவன் மிகுந்த சந்தோஷமாக வந்தான்.நினைவிருக்கிறதா என்று கேட்டான்.இவனுக்கு லேசாக நினைவிலிருந்தது.பேருந்தில் தற்செயலாகப் பார்த்த பெண் ஒருவள் இவனைப் பார்த்துச் சிரித்து அவள் பின்னாலேயே அவள் வீட்டுக்குப் போய்விட்டதாகவும் அவள் ஒரு விதவை தனியாக வசித்து வந்ததாகவும் அன்றிரவு அவளுடன் அவன் உறவு கொண்டதாகவும் மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்தான்.இவனுக்கு இப்படியும் நிகழுமா என்று அப்போது வியப்பாக இருந்தது.நண்பன் பொய் சொல்கிறான் என்றுகூட சில சமயங்களில் நினைத்தான்.ஆனால் ஃபேஸ்புக்கில் இவளுடன் தொடர்பு ஏற்பட்டு உடலுறவு வரை போன பொழுது  அவனால் அதை நம்ப முடிந்தது.ஃபேஸ்புக்கில் இப்படி ஒரு உறவு ஏற்பட முடியும் என்றால் பேருந்தில் கண்ட பெண்ணுடன் உறவு ஏற்படமுடியாதா?நண்பன் அந்தப் பெண் இறந்துவிட்டதாகக் கூறினான்.செய்தி அறிந்து  அவளுடைய தகனத்திற்காக  சென்றிருந்ததாகவும் அங்கு வந்திருந்தவர்கள் அவளுக்கு ஆட்கொல்லி நோய் வந்திருந்ததாகவும் சொன்னார்கள் என்று சொன்னான்.சொல்லும்போதே அவன் குரல் தளர்ந்துவிட்டது.அங்கு அவனைப் போலவே அதிர்ச்சி முகத்துடன் வேறு சிலர் வந்து நின்றிருந்ததாகவும் சொன்னான்.அன்று காலை அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனைக்குக் கொடுத்திருப்பதாகவும்  முடிவு வர மூன்று நாளாகும் என்றும் சொன்னான்.’ஆனால் எனக்குத் தெரிகிறது.எனக்கும்  நிச்சயமாய் அது இருக்கிறது,நான் கூடிய சீக்கிரம் இறந்துவிடுவேன்’என்றான்.இவன் அவனைத் தேற்றினான்.தெரிந்த மருத்துவர் ஒருவர் ஒரே நாள் உறவில் தொற்றும் வாய்ப்பு குறைவு என்றும் பெண்ணிடமிருந்து ஆணுக்குத் தொற்றும் வாய்ப்பு ஒப்பிடக் குறைவு என்றும் சொன்னார்.இருந்தாலும் வாய்ப்பு இல்லாமல் இல்லை என்றும் சொன்னார்.அந்த ரிசல்ட் நெகடிவ் என்றே வந்தது.ஆனால் அந்த மூன்று நாட்களுக்குள் நண்பன் ஆறு கிலோ குறைந்துவிட்டான்.அதன்பிறகு அவனுக்கு மன ரீதியான சில கோளாறுகளும் ஏற்பட்டுவிட்டன.

அவன் தெருவில் செல்கிற பெண்கள் எல்லார்மீதும் கல்லெடுத்து எறிகிறான் என்று இவன் கேள்விப்பட்டான்.ஆனால் அப்போதும் இவனுக்கு சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை.புதரில் ஒரு புலி போல் அது இவனுக்காய்ப் பதுங்கியிருந்தது போல என்று இவன் பின்னால் நினைத்துக்கொண்டிருக்கிறான்.ஒரு நாள் இரவு கதவைப்  பூட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.குழந்தையோடு மனைவி அவளது அம்மா வீட்டுக்குப் போயிருந்தாள்.ஓரிடத்தில் சிகரெட் வாங்குவதற்காக நின்றான்.வாங்கி ஓரமாகச் சென்று புகைத்துக்கொண்டிருந்த போது அந்தச் சிறிய கோவிலைப் பார்த்தான்.கோயிலின் கிராதி பூட்டப்பட்டு உள்ளிருந்த பெண் தெய்வம் விடிவிளக்கு ஒளியில் மங்கலாய்த் தெரிந்தது.சிகப்புப் புடவை,குங்குமம்,நீட்டிய நாக்கு,வீங்கிய தனங்கள்,அடிப்பது போல் ஓங்கி நிற்கும் கை,விரிந்த விழிகள் என்று துடித்துக்கொண்டிருக்கும் ஒரு ரத்தப்பிண்டம் போல ஒரு சிறுதெய்வம்.அவன் அதையே ஒருகணம் கூர்ந்து பார்த்தான்.ஒருவித அச்சம் ஏற்பட்டது.சிகரெட்டைத் தூர எறிந்துவட்டு வண்டியில் ஏறி வீட்டுக்குப் போனான்.ஆனால் போகும் வழியிலேயே உடல் தூக்கித் தூக்கிப் போட ஆரம்பித்துவிட்டது.வீட்டுக்குள் நுழைந்து கதவைத் திறந்துகொண்டு பொத்தென்று விழுந்தான்.உடல் ஜன்னி வந்து துள்ளித் துள்ளி விழுந்தது.தன் நாக்கைத் தானே கடிப்பதை வலிப்பின் தீவிரத்தில் தடுக்க முடியாமல் பார்த்துக்கொண்டே ரத்தமொழுகக் கீழே விழுந்துகிடந்தான்.எப்போது யார் தூக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள் என்று தெரியாது.விழிக்கும்போதெல்லாம் காதில் ங்கீ ங்க்கீ என்று ஒரு ஒலி மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.ஒரு நாள் நள்ளிரவில் விழித்தான்.கீழே ஒரு பாய்விரித்து அவனது மனைவியும் குழந்தையும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் முகத்தில் களைப்பு தெரிந்தது.அவர்கள் தலைமாட்டில் அந்த ரத்தச் சாமுண்டித் தெய்வம் தலைவிரிகோலமாக உட்கார்ந்திருந்தது.

 

2

 

அவனுக்கு மூளையைத் தாக்கும் மலேரியாவோ வேறு எதுவும் மர்மக் காய்ச்சலோ வந்திருக்கலாம் என்று டாக்டர்கள் சொன்னார்கள்,ஆனால் மலேரியாவை ரத்தத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் நர்ஸ்கள் சொன்னார்கள்.பிறகேன் மலேரியா என்று சொன்னார்கள் என்றுதான் தெரியவில்லை.அவன் எங்காவது கடல் சார்ந்த பிரதேசங்களுக்குச் சமீபத்தில் சென்றிருந்தானா என்று கேட்டார்கள்.அவன் இல்லை என்று சொல்லிவிட்டான்.ஆனால் அதன்பிறகுதான் அவள் இருப்பது கடல் இருக்கும் ஊர்தான் என்பது நினைவுக்கு வந்தது.அப்போதுதான் அவனுக்கு முதல் முதலாய்  அந்தச் சந்தேகம் வந்தது.டாக்டர் வேறு எதுவும் சொல்லவில்லையா என்று திரும்பித் திரும்பி மனைவியைக் கேட்டான்.அவள் சொல்லவில்லையே ஏன்?என்று சந்தேகத்துடன் கேட்டான்.எல்லோரும் எதையோ மறைப்பது போலவே பட்டது.கொஞ்சம் எழுந்து உட்கார முடிந்ததும் அவனது மெடிக்கல் ரிக்கார்டுகளை எடுத்துப் படிக்க முயன்றான்.கொஞ்சம் படித்தாலும் தலை வலித்தது.குறிப்பாக, ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் படிக்க முயன்றான்.அவனுக்கு நினைவு வந்துவிட்டாலும் ராத்திரி ராத்திரி காய்ச்சல் வந்துகொண்டே இருந்தது.மருத்துவர்கள் அவ்விதம் வருவதால் மலேரியாவை ரத்தத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் மலேரியாவுக்கான மருந்தையே பயன்படுத்துவது என்று தீர்மானித்தார்கள்.அதற்குப் பிறகு அவனது காய்ச்சல் ஓரளவு கட்டுப்பட்டது.ஆனால் உடல் ரொம்பப் பலவீனமாகிவிட்டது.எழுந்து படுக்கையில் உட்கார்ந்தாலே தலை சுற்றிச் சாய்ந்து விழப்போனான்.மெதுவாகத்தான் தேறுவார்,சத்துள்ள ஆதாரங்கள்,பழங்கள் கொடுங்கள் என்று மூன்று லட்சம் ரூபாய்க்கும் மேல் பிடுங்கிக்கொண்டு ஆஸ்பத்திரியிலிருந்து அனுப்பிவிட்டார்கள்.பிறகு ஏகப்பட்ட மாத்திரைகள்.வீட்டுக்குத் திரும்புகையில் மாமியார் திருஷ்டி எல்லாம் கழிய ஆரத்தி எடுக்க வேண்டும் என்றார்.அதற்குக் கூட நிற்கமுடியவில்லை.பாத் ரூமுக்கு மனைவியைப் பிடித்துக்கொண்டுதான் போகமுடிந்தது.அங்கு உட்கார முடியவில்லை.மூச்சிரைத்தது.ஒரு நாள் அவ்வாறு போய்விட்டுத் திரும்பும்போது கண்ணாடியில் பார்க்கையில் அதிர்ந்துபோனான்.முகத்தில் சதையெல்லாம் வற்றி மண்டை ஓட்டைப் போல அவன் முகம் கண்ணாடியில் இளித்தது.ஒரு கணம் மன நிலை தவறிப்போன நண்பனின் முகம் அதில் வந்துபோகவே திடுக்கிட்டான்.அவன் ஓரளவு தேறிவர ஒரு மாதத்துக்கும் மேலானது.அப்போதெல்லாம் அவன் மனதில் ஒன்றே ஒன்றுதான் இருந்தது.ஒரு நாள் போனில் அவனது ஃபேக் ஐடி மூலம் அவளது ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தான்.அதைக் காணவில்லை.அவன் பதற்றம் அதிகரித்தது.ஒரு மாதத்துக்குப் பிறகு எப்படியோ கடைக்குப் போய் அதைத் திறந்துவிட்டான்.பக்கத்துக் கடைக்காரர்கள் எல்லாம் ஒரு சம்பிரதாய விசாரிப்பிற்குப் பிறகு விலகி நிற்பது போலத் தோன்றியது.அவன் கண் முன்னாலேயே அவனது வாடிக்கையாளர்கள் அவன் கடையைத் தாண்டி மற்ற கடைகளுக்குப் போவதைப் பார்த்தான்.மதியம் வரைக்கும் வெறுமனே கடையில் சாலையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.மதியத்துக்குப் பிறகு பூட்டிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அவளது ஒரே தடவையில் ஐந்து முறை புணரும் கலாபக் காதலன் வேலை செய்யும் வங்கிக்குப் போனான்.அவன் கம்பிக் கவுண்டருக்குப்  பின்னால் அமர்ந்துகொண்டு யாரோ ஒரு பெண்ணுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.அங்கிருந்தே அரசு ஆஸ்பத்திரிக்குப் போனான்,அங்கு எல்லோரும் போய்விட்டிருந்தார்கள்.இந்த மாதிரி பரிசோதனைகள் எல்லாம் காலையில்தான் செய்வார்களாம்.ஒருவர் அவனைக் கூர்ந்து பார்த்து “எந்த ஏரியா?”என்று கேட்டார்.இவன் பதில் சொல்லாமல் வந்துவிட்டான்.அன்று இரவு தூங்காமல் அருகே தூங்கும் மனைவியையும் குழந்தையையுமே பார்த்துக்கொண்டிருந்தான்.கண்களில் தன்னிச்சையாக நீர் வழிந்தது.மறு நாள் காலையிலேயே எழுந்து ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டான்.ஆஸ்பத்திரி வளாகத்திலிருந்த கோவில் முன்பு ஒருகணம் தயங்கினான்.ஒரு கோட் அணிந்த பெண் வந்து ரத்தம் நீண்ட சிரிஞ்ஜில் எடுத்தாள்.கண்ணாடிக் குழாய்களில் நிரப்பி பெயர் எழுதி ஒட்டினாள்,முந்தின நாள் எந்த ஏரியா என்று கேட்டவன் ஒரு படிவத்தில் ஊர்,பெயர்,விலாசம்,போன் நம்பர் எல்லாம் கேட்டு நிரப்பினான்.இவன் எல்லாவற்றையுமே தவறாகக் கொடுத்தான்.அவன் கொஞ்சம் சந்தேகமாகப் பார்த்தான்.போன் நம்பர் ஒன்பது நம்பர்தான் வருகிறது?என்று கேட்டான்.இவன் சமாளித்தான்.ரிசல்ட் மூன்றாம் நாள் கிடைக்கும் என்று சொன்னான்.தனியார் பரிசோதனை மையங்களில் அன்றே கிடைக்கிறதே என்று கேட்டதற்கு அடிக்கடி போவீர்களோ என்று நக்கலாகச் சிரித்தான்.இங்கு நிறைய சாம்பிள்கள் வருகின்றன.ஆட்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.முடிவு மூன்றாம் நாள் கிடைக்கும் என்று சொன்னான்.இடைப்பட்ட இரண்டு நாட்களையும் அவன் ஒரு சவக்குழிக்குள் உயிரோடு புதைக்கப்பட்டவன் போலவே கழித்தான்.இடையில் ஒரு முறை நினைவிலிருந்து அவளது எண்ணுக்குஅழைத்துப் பார்த்தான்.வேறொரு ஆண் குரல் எடுத்து ‘யாருங்க?’என்று அதட்டியது.வைத்துவிட்டது.அவனது நினைவு பிழையாகிவிட்டதா அல்லது அவளுக்கு வேறு எதுவும் நிகழ்ந்துவிட்ட்டதா தெரியவில்லை.அவனுக்கும் அவளுக்கும் பொதுவான நண்பர்களின் முக நூல் பக்கங்களில் எல்லாம் போய்ப் பார்த்தான்.அவர்களிடம் அவளைப் பற்றி விசாரிக்கலாமா என்று நினைத்துத் தயங்கி அதைக் கைவிட்டுவிட்டான்.இதைப் பற்றி நினைக்காவிடில் விதம் விதமாய்த் தற்கொலை செய்துகொள்வது பற்றிய எண்ணங்களில் அவன் மனம் திரும்பத் திரும்பப் போய் நின்றது.இரு நாட்களும் அறியாத எண்களிலிருந்து போன் வரும்போதெல்லாம் அவன் மனம் அதிர்ந்தது.பிறகுதான் அவனது எண்ணைத் தவறாகக் கொடுத்திருப்பது நினைவுக்கு வந்து மனம் சற்று ஆசுவாசம் அடைந்தது.மறுகணமே அவர்கள் அந்த எண் போலி என்று இந்நேரம் கண்டுபிடித்திருந்தால்?என்று பதற்றம் ஏற்பட்டது.அவ்வாறு கண்டுபிடிக்கப் பட்டிருந்தால் அந்தக் கடுத்த மர நாய் மூஞ்சிக் காரனை எப்படி எதிர்கொள்வது?மூன்றாம் நாள் காலையிலேயே எழுந்து வெளியே கிளம்பிவிட்டான்.மனைவி ‘இவ்வளவு காலையிலேயே எங்கே போறீங்க.முடியலைன்னா கடைக்கு லீவ் போட்டுடுங்க.பார்த்துக்கலாம்.உடம்புதான் முக்கியம்’என்றாள்.ஒரு கணம் அவனது எல்லா சந்தேகங்களும் பதற்றங்களும் விலகி வாழ்க்கை மேகமே இல்லாத தூய நீல வானம் போல் தோன்றியது.’ஒரு ஆளைப் பார்க்கணும்.வந்துடறேன்’என்று கிளம்பிவிட்டான்.கிளம்பும்போது அவன் மகள் நெஞ்சாலேயே தவழ்ந்து தவழ்ந்து அவனை நோக்கி வந்தாள்.மனைவி ‘அட.அப்பா வருவாருட்டீ.’என்று எடுத்து முத்தினாள்.திரளும் கண்ணீரை மறைத்தபடி வீட்டைத் திரும்பியே பார்க்காமல் அவன் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டான்.வழக்கத்தை விட அதிகக் கூட்டம்.ஏதோ முகாம் என்று சொன்னார்கள்,அந்தச் சிடுமூஞ்சி ஆளைக் காணவில்லை.அதுவே ஒரு நல்ல சகுனம் போல் பட்டது.ரத்தம் எடுக்கும் பெண் ரொம்பப் பிசியாய் இருந்தாள்,அவளது வெள்ளைக் கோட்டில் ஒரு ரத்தப்பொட்டு கிடந்தது.அவள் ரிசல்ட்டைக் கவுன்சிலர் சொல்வார் என்று ஒரு அறையைக் காண்பித்தாள்.அந்த அறைக்குள்  முப்பதுகளுக்கு மேல் மதிக்கத்தக்க ஒல்லியான பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள்.அவளுக்கு ஒரு கண் இல்லை.கண் இருக்கும் இடம் குழியாய் இருந்தது.மறு கண்ணும் சிறுத்துக் காணப்பட்டது.அவள் அவன் பெயரைக் கேட்டுவிட்டு அமரச் சொன்னாள்.பிறகு ஒரு பதிவேட்டை எடுத்து அவள் இடது கண்ணுக்கு அருகே வைத்துப் பார்த்துவிட்டு கீழே வைத்தாள்.அவன் சந்தேகப்படுகிற  உறவு எப்போது நிகழ்ந்தது என்று கேட்டாள்.அவன் ஏழு மாதங்களுக்கு முன்பு என்று சொன்னான்.பிறகு அவள் ஒருவர் பாலியல் ஒழுக்கத்தோடு இருப்பது பற்றியும் பாதுகாப்பான உறவு கொள்வது பற்றியும் பேச ஆரம்பித்தாள்.அவனுக்கு ஆணுறை அணிவது எப்படி தெரியுமா கேட்டாள்.ஆட்கொல்லி நோய்க்கு இப்போது  நல்ல மருந்துகள் இருக்கின்றன என்றாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று சொன்னாள்.அவன் ஓர் பால் இச்சை கொண்டவனா, போதை ஊசிப் பழக்கம் உள்ளவனா என்றெல்லாம் கேட்டாள்.ஓர்பால் உறவு கொள்பவனாக இருந்தால் அதில் இவன் ஆணா பெண்ணா என்று கேட்டாள்.இவன் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து என் ரிசல்ட் என்ன? என்று கத்தினான்.அவள் முகம் சுருங்கியது.’ரிசல்ட் நெகடிவ்தான்,ஆனால் அவன் இனி வரும் உறவுகளில்  பாதுகாப்பாய் இருக்கவேண்டும்’என்றாள் .non reactive  என்று சீல் அடித்த ஒரு துண்டுச் சீட்டை அவனிடம் கொடுத்தாள்.அவன்  நன்றி கூட சொல்லாமல் அதைப் பிடுங்கிக்கொண்டு வெளியே ஓடிவந்தான்.வந்து சிகரெட்டும் ஒரு டீயும் குடித்தான்.மனைவிக்குப் போன் செய்து தான் நன்றாக இருப்பதாகவும் அப்படியே கடைக்குச் செல்வதாகவும் சொன்னான்.பிள்ளை அதுவும் பெண் பிள்ளை தவழ ஆரம்பித்துவிட்டாள்.

இனி வியாபாரத்தைக் கவனிக்கவேண்டும் என்று சொன்னான்.கிளம்பும்போது ஏதோ தோன்றி ஆஸ்பத்திரியில் இருந்த கோவிலுக்குப் போனான்.தொழுதுவிட்டுக் கடைக்குப் போனான்.மனம் தெளிவாக இருந்தது.மதியத்துக்கு மேல் ஒரு பழைய வாடிக்கையாளர் வந்தார்.அவருக்கு இவன் இடையில் கடை அடைத்திருந்ததெல்லாம் தெரியவில்லை.கிட்னியில் கல்லடைத்து ரொம்பக் கஷ்டப்பட்டதாகவும் ஒரு ஆஸ்பத்திரியில் வலது பக்கத்துக்குப் பதிலாக இடது பக்கம் ஸ்டெண்ட் வைத்துவிட்டதாகவும் புலம்பினார்.அவர் போன பின்பு இவனது தெளிந்த மனம் மறுபடி கலங்கத் தொடங்கியது.இப்படி மாற்றி ஸ்டெண்ட் வைத்த ஆஸ்பத்திரி எதுவென்று கேட்டுக்கொள்ளவில்லை.ஆனால் இதேபோல் அவனது ரிசல்ட்டும் மாறி இருந்தால்!அவன் உடல் மறுபடி முறுகி பற்கள் கிட்டத் துவங்கின.கடையை அவன் பூட்டிக்கொண்டு போகும் வேகத்தைப் பார்த்து பக்கத்துக் கடைக்காரர்கள் கிசுகிசுத்துக்கொண்டார்கள்,’’இவனுக்கு என்னாச்சு.ஏன் கவட்டைக்கு நடுவில  வெடி வைச்ச  நாய் மாதிரி திரியுதான்!”என்றார் ஒரு பாட்டா.அவன் வண்டி தானாகவே அரசாங்க ஆஸ்பத்திரியின் பழுப்புக் கட்டிடத்துக்கு முன்பு போய் நின்றது.ஆனால் கிட்டே போனதும் அவனது வேகம் குறைந்துவிட்டது.இப்போது அந்த சிடுமூஞ்சிக்காரன் இருப்பானா.பொட்டைக்கண்ணி இருப்பாளா.காலையில் அவளிடம் வேறு சரியாக நடந்துகொள்ளவில்லை.அவன் கால்களை மாற்றி மாற்றித் தேய்த்தவாறு அங்கேயே நின்றான்.இப்போது காலையில் தொழுதுவிட்டுப் போன கோவிலை வெறுப்பாகப் பார்த்தான்.உள்ளே புகுந்து அங்கிருக்கும் சிலையை எட்டி உதைத்து உடைத்துப் போடவேண்டும் போல தோன்றியது.பிறகு ஒரு அச்சம் தோன்றி ‘தெரியாம யோசிச்சிட்டேன்.என்னை இன்னும்  தண்டிச்சிடாதே!நான் தாங்க மாட்டேன்’ என்று அதனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.அந்த நேரம் பார்த்து சில பெண்கள் வெளியே வந்தார்கள்.அந்தப் பெண்ணும் அதில் இருந்தாள்.’பார்த்துப்

போடி”என்று அவளது தோழிகள் சொன்னார்கள்.வளையல்கள் குலுங்குவது போன்ற சிறிய மென் சிரிப்புகளோடு அவர்கள் பிரிந்தார்கள்.அவள் மருத்துவ மனை வளாகத்தை விட்டு வெளியேறி புறநகர்ப் பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.இவன் சிறிய தயக்கத்துக்குப் பிறகு வண்டியில் மெதுவாகப் பின் தொடர்ந்தான்.அவள் இப்போது ஒரு கறுப்புக் கண்ணாடியை அணிந்திருந்தாள்.அதை அணியும்போது அவள் அழகாகவே தோன்றினாள்.அவனது முக நூல் காதலியின் சாயல் கூட லேசாக அவளில் இருப்பது போல்  பட்டது.ஆனால் சற்று மெதுவாகவே கவனத்துடன் நடப்பது போல பட்டது.வண்டியில் பின் தொடர்வது சிரமமாக இருந்தது.அவள் மெல்ல நடந்து சாலைகளை மெல்லக் கடந்து வீடுகள் நெருக்கமாக இருந்த பகுதியைத் தாண்டி நடக்க ஆரம்பித்தாள்.அவன் ஒரு முடிவை எடுத்தவனாக வண்டியை நிறுத்திவிட்டு அவள் பின்னால் வேகமாய் நடந்து  போய் “மேடம்!ஒரு நிமிஷம்!”என்றான்.அவள் சரேலென்று திரும்பி “பாண்டியன் !எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது!”என்றாள்.பாண்டியன் யாரென்று தெரியவில்லை.இவன் “பாண்டியன் இல்லே மேடம்.நான் காலைல டெஸ்ட்டுக்கு வந்தேம்லா?”என்றான்.”ஒரு டவுட்டு கேட்க வந்தேன் மேடம்.நீங்க சொன்ன ரிசல்ட் அது சரியா இருக்கும்லா?”என்றான்.அவள் பயந்துவிட்டாள் போலத் தெரிந்தது.”அதெல்லாம் ஆபீஸ்ல கேட்கணும்ங்க.இங்கெல்லாம்  இப்படிப் பின்னாலே வரக்கூடாது!”என்றாள்,”நீங்க போங்க.இல்லேன்னா நான்போலீஸைக் கூப்பிடுவேன்”என்று கைப்பையிலிருந்து   தடுமாறியபடி  போனை எடுத்தாள்.அது கீழே விழுந்தது.இவன் எடுத்து அதை அவள் கையில் கொடுத்தான்.”தொந்தரவு பண்ண வரலை மேடம்.ஒரு பயத்தில வாரேன்”அவள் முகம் சிவந்தது.”இவ்வளவு பயம் இருக்கிறவரு உம்ம சுன்னியைக் கட்டிப்போட்டிருக்கணும்” என்றாள். லேசாக மூச்சிரைத்தது.இவன் “தப்பா நினைச்சிக்காதீங்க.ஆஸ்பத்திரிங்கள்ல என்னென்னவோல்லாம் நடக்குது.இடது பக்கம் பண்ண வேண்டிய ஆபரேஷனை வலது பக்கம் பண்ணிடறாங்க.உங்க ஆஸ்பத்திரில ஏற்கனவே ஆளு கூட்டம்.”என்றவன் சற்றுத் தயங்கி “உங்களுக்குக் கண்ணு வேற சரியாத் தெரியாது போலிருக்கு.நீங்க காலைல என் ரிப்போர்ட்டைத்தான் பார்த்துச் சொன்னீங்களா?”அந்தப் பெண் அவ்வளவுதான் கத்த ஆரம்பித்துவிட்டாள்.”அய்யோ யாராவது வாங்களேன்..இங்கே ஒர்த்தன் என்னை விட மாட்டேங்கிறானே!”இவன் பதறி எட்டி அவள் வாயைப் பொத்தினான்.அவள் அவன் கையைக் கடித்தாள்,எரிச்சல் தாங்காமல் இவன் சட்டென்று அவளை ஓங்கி அறைந்தான்.அவள் தடுமாறிக் கீழே விழுந்தாள்.விழுந்தவள் ஒரு கூர்மையான கல்லில் நெற்றியை இடித்துக்கொண்டாள் போல.ரத்தம் பொங்கி வழிந்து மண்ணில் சொட்டியது.இவன் “அய்யோ” என்றபடி அவளைத் தூக்க முயன்றான்.அவள் தலை தொய்ந்து சரிந்தது.

 

boganath@gmail.com