சிரிப்பே வர்ல சார்
நடிகர் சதிஷ். நகைச்சுவை நடிகர் என்கிறார்கள். ஆனால், அவருடைய நகைச்சுவையைக் கண்டு சிரித்தவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாமென்றும் அவர்களே சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்கள் !
மறு ஒளிபரப்பில் வந்த தூர்தர்ஷன் பழைய நாடகத்திலேயே இவரைப் பார்த்திருக்கிறேன். இது நகைச்சுவை பதிவு என்று தலைப்பிட்டு எழுதிய பின்னும் ஜெயமோகன் கட்டுரையில் எப்படி சிரிக்க ஏதுமிருக்காதோ, இவர் நகைச்சுவை பாத்திரத்தில் மட்டுமே நடிப்பார் என எவரேனும் உறுதிமொழி கொடுத்தாலும், இவர் நடிப்பைக் கண்டபின்னால் நம்முடைய இயல்பான புன்னகை கூட ஒளிந்துகொண்டு முகம் இறுகிவிடும் !
ஆனால், இந்த நடிகர் மேடைகளில் பேச வந்தால், அவையோரை எப்படியாகிலும் சிரிக்க வைப்பேன் என உறுதிமொழி பூண்டிருப்பார் போல ? அதற்கென ஒருமுறையைக் கையாளுகிறார். அது சக பெண் தொகுப்பாளர்கள், பெண் நடிகர்களின் உடைகளைக் கிண்டல் செய்வது அல்லது பாடிஷேமிங் எனப்படும் அவர்களுடைய உயரக்குறைவு, எடை, நிறம், முடி அலங்காரம் இதை வைத்து இழிவுபடுத்துவது.
இவருடைய இத்தகைய செயல்கள் பலரையும் சிரிக்க வைப்பதற்குப் பதிலாக, கடும் எரிச்சலூட்டும். இருந்தாலும் ஒரு சிலர் சிரிப்பார்கள். அந்த ஒரு சிலருக்காக இவர் தொடர்ந்து அத்தகைய அநாகரீகச் செயல்களில் ஈடுபடுகிறார் !
அவர் நடித்த படமொன்று இந்த மாதத்தில் வெளியாகவிருக்கிறது. அதற்கான விளம்பர நோக்கில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்திருக்கிறது. இவருடன் நடித்த சக நடிகர்களான சன்னி லியோனும், தர்ஷாவும் உடன் பங்கேற்றிருந்திருக்கிறார்கள்.
கவர்ச்சி நடிகர் என அறியப்பட்ட சன்னி லியோன் சென்னையில் விழா என்பதால் சேலையில் வந்திருக்கிறார். இளம் பெண்ணான தர்ஷா, நவீன ஆடையணிந்து வந்திருக்கிறார்.
வழக்கம் போல நகைச்சுவை செய்கிறேன் பேர்வழியென்று, மும்பையிலிருந்து வந்திருக்கும் சன்னியே சேலை கட்டி அடக்கவொடுக்கமா, நம்ம கலாச்சாரம், பண்பாட்டைக் காக்கிறாப்பல வந்திருக்காங்க. ஆனா கோயம்புத்தூர்ல இருந்து வந்த நம்ம பொண்ணு, என்ன ட்ரஸ்ல வந்திருக்காங்கன்னு பாருங்க என்று தர்ஷாவைக் குறிப்பிட்டு இழிவு செய்திருக்கிறார் !
பொதுவாக இது போன்ற நகைச்சுவைகளை மேலோட்டமாக அணுகி, குலுங்கிக் கைதட்டிச் சிரிக்கும் சாமானியர்கள்தான் இவர்களுடைய இலக்கு.
கரெக்டாத்தானே பேசுறான் ? இவளுங்களும் அப்படித்தானே ட்ரஸ் பண்ணிட்டு வராளுங்க ? என்றபடி அந்தக் காட்சித்துண்டுகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து, தன் பண்பாட்டைக் பேணிக் காத்ததாக அவர்களும் தோள் கொட்டிக் கொள்வார்கள் !
ஆனால், அந்த நகைச்சுவை(!) நடிகரின் பேச்சை சற்றே பகுத்தாய்ந்தால் அதிலிருக்கும் குத்தல், நக்கல் நிச்சயம் எரிச்சலூட்டும் !
கோவையைத் தூக்குகிறேன் என்று மும்பையை இழிப்பது. சன்னி லியோன்களெல்லாம் எப்போதுமே கவர்ச்சியான குட்டை ஆடைகளில்தான் வருவார்கள், தமிழ்நாட்டில் பெண்கள் சேலையை மட்டுமே பொதுநிகழ்ச்சிகளில் அணிந்து வந்து கலாச்சாரம் காப்பார்கள் … இது இப்படியே நீளும்.
இந்த நிகழ்ச்சி முடிந்து ஒரு சில நாட்களுக்கு பின்னரே இந்தக் காணொலித் துண்டுகள் வலைத்தளங்களில் பகிரப்பட்டன. உடனடியாக அவருக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது !
பொதுவாக இத்தகைய எதிர்ப்புகள் கிளறுமென்று தெரிந்தேதான் இவர்கள் இப்படி வீம்பாகப் பேசுகிறார்கள், அது படத்துக்கு விலையில்லா விளம்பரமாகிப் போகிறது என்று சிலர் நைச்சியமாக இதுபோன்ற பேச்சுக்களை எதிர்க்காமல் கடந்து போவதுமுண்டு !
யாமிருக்கப் பயமேன் ?
இங்குதான் நுழைந்தார் உலகின் ஒரே ஒரு பெண்ணியக் காவலராகத் தன்னைத்தானே நம்பிக் கொள்ளும் சின்மயி. அதாவது தமிழ்நாட்டுக் கிளைக்கு அவர் மட்டுமே பொறுப்பு. ஈரேழு உலகில் எந்த மூலையிலும் பெண்ணுக்கெதிராக ஒரு தீங்கு நேர்ந்தாலும், உடனடியாக அதைப் பகிர்ந்து ஏ கோமானியே, ஏ புடினே, ஏ பைடனே என்று ஆரம்பித்து, இங்க ஒரு கவிஞர் இருக்கிறார் அவரைப் போல் ஆகிடாதீங்க என்று முடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் !
இந்தாளையெல்லாம் கலாய்த்து முக்கியத்துவம் தர வேண்டுமா என்கிற லைட் மோடில் சென்று கொண்டிருந்த சூழல், சின்மயி மெனக்கிட்டு நடிகருக்காக வக்காலத்து வாங்கியதும் காட்டுத்தீயானது !
“சதிஷ் என்னுடன் பேசினார். தர்ஷாவை இழிவு செய்வது அவருடைய நோக்கமில்லையாம். இப்படிப் பேசப்போவதாய் முன்னரே தர்ஷாவிடம் சொல்லி, அவருடைய அனுமதியை வாங்கி விட்டுத்தான் பேசினாராம், எனவே அமைதி கொள்வோம்.”
பஞ்சாயத்து முடிஞ்சது, ஏ கூட்டத்தைக் கலை, கலைஞ்சி போன்னு ஆடு திருட்டுப் பஞ்சாயத்தொன்றில் வடிவேலு தன் துண்டால் கூட்டத்தை விரட்டுவது போல ஒரு ட்வீட் போட்டார் சின்மயி, முடிஞ்சது.
“அக்கா, இதை தர்ஷாவுக்குல்ல நீங்க போன் போட்டுக் கேட்டிருக்கணும் ? அதென்ன அக்யூஸ்ட் ஸ்டேட்மென்ட்லயே திருப்தியடைஞ்சிட்டீங்க ?” என்று பலர் அவரிடம் கேட்க ஆரம்பித்தார்கள் !
இன்னும் பலர், சதிஷிடம் நூலாயுதம் இருப்பதால் அவர் நல்லவர்தான் என்று சின்மயி இதை நீர்த்துப் போகச் செய்யத் துடிக்கிறார். ஆனா பாருங்க, அவர் கரிச்சிக் கொட்டுற கவிஞரிடம் அது இல்லை !
சமூகவலைத்தளங்களில் பல லட்சக்கணக்கான மக்கள் பல்லாயிர தினுசில்தான் இருப்பார்கள். அவர்களுடைய சிந்தனையுமே பல நூறு தினுசில்தான் இருக்கும். இப்படி யாரோ ஒருவர் எழுதிவிட்டாலும், அதையே பெரும்பாலோரின் கருத்தாக்கி, ஆ, என்னைச் சாதி பாக்கிற ஆளாக்கிட்டாங்க, திமுககாரய்ங்கதான் இப்படி செய்யறது, சாதி, மதம் பார்த்தெல்லாம் தான் பேசுவதில்லை என்று பொத்தாம் பொதுவாக்க் குற்றம் சாட்ட ஆரம்பித்துவிடுவார் சின்மயி. வஜ்ராயுதமாக என்ன வீசுவாரென்றால் என்னை இழிப்பவர்கள் அனைவருமே கவிஞரின் ஆதரவாளர்கள், உண்மையில் அவர்கள் பாலியல் வக்கிரங்களின் ஆதரவாளர்களாகும் என்று புலம்பி, பரிதாப வாக்குகளை அறுவடை செய்வார் !
முதல் கோணல்
இன்றோ, நேற்றோ இதை இவர் தொடங்கவில்லை.
பின் எப்போது ? ஆண்டாள் – வைரமுத்து தகராறின்போதா ?
இல்லை. 2011 -இல், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர்.
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து இன்னல்களுக்குள்ளாகிக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இழிவு செய்து போட்ட ஒரு பதிவு / பின்னூட்டங்களினால் பெரிய பிரச்சினைகளுக்குள்ளானார். நான்கு முனைகளிலிருந்தும் அவர்மீது வலைத்தள தாக்குதல் நிகழ்ந்தன !
அதில் உணர்ச்சிவேகத்தில் இரு இளைஞர்கள் எழுதியிருந்ததைக் கொண்டு, அவர்களிருவர்மீதும் சைபர் போலீசில் புகாரளித்தார் சின்மயி.
வழக்கம்போல, திமுக ஆட்களிடம் தனியாகச் சிக்கிக் கொண்ட அப்பாவி பெண் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். பரிதாபங்களை அறுவடை செய்தார். சைபர் காவல்துறை உடனடியாக அவ்விருவரையும் கைது செய்தது. அதுவரை சமூகவலைத்தளப் பதிவுகளுக்காகக் கைது வரையெல்லாம் சென்றதில்லை. அவதூறுக்கெல்லாம் கைது செய்வார்களா?
ஆனால், சின்மயி அதைப் பாலியல் மிரட்டல், பாலியல் துன்புறுத்தல் என்று கொண்டுபோனார். விளைவு கைது, குற்றவழக்கு என்றானதால் இரு இளைஞர்களுடைய வேலையும் பறிபோனது. குடும்பச் சகிதமாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கை சில மாதங்களுக்குக் குலைந்தது. வழக்கு இன்னும் முடியாததால் இங்கு இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம், சின்மயியை அறிந்து கொள்ள மட்டுமே இதைச் சொல்ல வேண்டியதாயிற்று !
இப்பேர்பட்ட பெண்ணியப் போராளி, பாதிப்புக்குள்ளான பெண்ணிடம் எதுவுமே பேசாமல், பாதிப்புக்குள்ளாக்கியவர் சொல்லை அப்படியே ஏற்றுக் கொண்டதுதான் பலரையும் துணுக்குறச் செய்தது. எனவேதான் சிலர் அதற்கான காரணம் நூலாக இருக்கலாம் என்றார்கள் !
அப்பத்தான் ஒரு ட்விஸ்ட். தான் அப்படியெல்லாம் சதிஷிடம் பேசச் சொல்லவே இல்லை. யாராவது தன்னைத்தானே பழிக்கச் சொல்லிக் கேட்பார்களா ? உங்களால் இழிவு செய்யப்பட்ட காயமே இன்னும் ஆறவில்லை, இதில் என்னையே வேறு காரணமாக்குவீர்களா சதிஷ் ? இது நல்லதிற்கில்லை என்று காட்டமாக ஒரு ட்வீட் செய்திருந்தார் தர்ஷா !
பின்னரே இந்தச் சேதி அனைத்து ஊடகங்களுக்கும் பரவியது. அச்சு ஊடகங்களிலும் மறுநாள் வந்தது.
அது இன்னமும் சின்மயியை எரிச்சலூட்டியது.
நுண்பகடி புரியாத நுளம்புகளே…
“அதான் நானே அவர் மீது தப்பில்லைன்னுட்டேனே, எதுக்குப் பழைய கதைகளையெல்லாம் அப்பவே சொல்லாம, இப்ப இழுத்து எங்க பப்லுவை நோகடிக்கிறீங்க ?”
சதிஷ் இப்படிப்பட்ட லீலைகளை வழக்கமாகச் செய்வார் என்றிருந்தோம் அல்லவா ? சில வருடங்களுக்கு முன் இன்னொரு தொகுப்பாளரின் உடையையும், அதில் வெளிப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் உடலையும் சுட்டிக்காட்டி அவர் இழிவு செய்திருப்பது தெரியவந்தது. அதை அந்த ஊடகம் இட்டுக்காட்டியிருந்ததால் கடும் வெறுப்புடன் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார் சின்மயி !
என்னக்கா எங்கேயோ கேட்ட குரல் போலல்ல ? என்று கமெண்ட் செக்ஷனில் அவருடைய நண்பர்களே அதைக் கேலி செய்ய ஆரம்பித்தனர்.
எங்க கேட்டீங்க, எப்ப கேட்டீங்க, என்னத்தக் கேட்டீங்க என்று அவர்களிடமும் எரிந்து விழுந்தார் சின்மயி. இதுபோன்ற எதிர்வினைகளின் போது அவர் சர்வசாதாரணமாக பொறுக்கிகள், ரேப்பிஸ்ட்கள் என்று அவர்களுக்கு அடைமொழிகளையும் பரிசளிப்பார்.
இல்லக்கா, கவிஞர்மீது நீங்க புகார் சொன்னபோதும் நாங்க ஏன் நீங்க அப்பவே சொல்லலைன்னு இப்படித்தான் கேட்டோம், நீங்க திட்டினீங்க.
“ஆங் அது வேற … நீங்கல்லாம் கவிஞரோட அல்லக்கை அப்படித்தான கேப்பீங்க. ஆங் நான் நீங்கல்லாம் இப்படி கேப்பீங்கன்னு தெரிஞ்சேத்தான் வேணும்னே அப்பவேன்னு போட்டேனாக்கும், இது சர்க்கசம்டா அம்பி” என்கிற ரேஞ்சில் உருட்டினார்.
சின்மயி கலகம் இப்படியாக பிள்ளையார் புடிக்க அனுமாரானது. அனுமார்னா சின்ன சைஸ் இல்ல, சஞ்சீவி மலையையே ஒத்த கையால தூக்கிக்கிட்டு வந்த அனுமார் சைஸ் !
முகமூடிகள்
இந்தச் சின்மயிகள், கஸ்தூரிகள், ஷாலின்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?
என்ன நோக்கத்துக்காக உருவானார்கள் / உருவாக்கப்பட்டனர் ?
உற்று நுண்ணோக்கினால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.
ஒரு பெரிய பிரச்சினையைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும்போது அதை திசை திருப்ப ‘யாரோ சிலருக்கு’ இவர்கள் உதவ, இப்படி எதையாவது இழுத்து எழுதி சாதிப்பார்கள். எவராகிலும் அவர்களுடைய ஒட்டுமொத்த நன்னடத்தையை உடனடியாகச் சிதைக்க முனைவார்கள். பல முனைத் தாக்குதல்களாக இவை நிகழும். குறிப்பிட்ட நேரம் வரை அந்த ஒன்று மட்டுமே சமூக வலைத்தளங்களில் விவாத மையப் பொருளாக இருக்கும். நாட்டிலேயே அந்தப் பலிகடா செய்ததுதான் பெரும்பிழை, அவர் மரண தண்டனைக்குரியவர் என்பது போல கட்டமைக்கப்படும் !
அதற்கு இந்தப் பெண்ணியப் போராளி வேடம் இவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது. இவர்களையும் நம்பி, ஏராளமான பெண்கள், சிறுமிகள் தங்களுக்கு நிகழ்ந்த அனைத்துக் கொடுமைகளையும் கொட்டுகிறார்கள். அதையெல்லாம் இவர்கள் எப்படி உபயோகித்துக் கொள்வார்கள் என்று எந்தவித உத்தரவாதமுமில்லை. சமூகவலைத்தளங்களால் ஏகப்பட்ட நன்மைகள் உருவானாலும், சில தீமைகளும், யாரை நம்புவது என்கிற புரிதலின்மையையும் பரவலாக்கியிருக்கிறது. சைபர் குற்றங்கள், சட்டம், சட்ட உதவி, காவல்துறை, ஆன்லைன் புகார் என்று பல்லாயிரம் விழிப்புணர்வு சேதிகளை நாம் தொடர்ந்து மக்களிடையே கொண்டு போனாலும், காவல்துறையின்பால் கொண்ட இயல்பான அச்சத்தால் விட்டில் பூச்சிகளென பலர் இவர்களிடம் போய் வீழ்கிறார்கள். இத்தகைய பெண்ணியவாதிகளால் ஒரே ஒரு தீர்வையாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியிருக்க முடியுமா ? அதற்கான எந்தத் தரவுகளையும் கண்டறிய முடியவில்லை !
சான்றுக்கு, தாம்ப்ராஸ் தலைவர் நாராயணன்மீதும், பின்னணி பாடகர் கார்த்திக்மீதும் சின்மயியை நம்பி சில பெண்கள் மீ டு அடிப்படையில் தங்களுக்கு நிகழ்ந்த சில பாலியல் துன்பங்கள் பற்றிச் சொல்ல, அதை ஜஸ்ட் அப்படியே பாதிக்கப்பட்டவர்களுடையப் பெயர்களில்லாமல் பகிர மட்டுமே செய்தார் சின்மயி. ஆனால் அதன்பின்னான நடவடிக்கை பற்றியோ, அதை எப்படி கொண்டு செல்ல வேண்டுமென்ற அக்கறையையோ, இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்கிற அறிவுரைகளையோ அவர் எங்கும் சொல்லவில்லை. சின்மயி, கவிஞர்மீது அடுக்கடுக்காக அவதூறுகளை வைத்த போதெல்லாம் துணுக்குறாத சாணக்யாவின் ரங்கராஜ், நம்மவா தாம்ப்ராஸ் நாராயணனையும் சந்திக்கிழுத்துவிட்டாரே என உடனே சின்மயியை அழைத்துப் பேட்டி கண்டார்.
அதிலொரு நாசூக்கான கேள்வி. கவிஞருடனான உங்கள் பிரச்சினை நேரடியானது, அதில் உண்மை இருக்கலாம். ஆனால் நாராயணன், கார்த்திக், கடம் வித்வான் மீதெல்லாம் புகார், அதன்மீதான உண்மைத்தன்மை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அதை எப்படி நீங்கள் பகிரப் போச்சு ? நாளை அதெல்லாம் வீண் பழிகள் என்று நிரூபணமானால் உங்களுக்கு அது பின்னடைவு ஆகாதா ?
சாத்தான் வேதம் ஓதியதைப் போல என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றுதான் நேரடியாக அதைப் பார்த்து அனுபவித்தேன் !
இவர்களெல்லாமே ஒரே குட்டையின் மட்டைகள். அதாவது குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து என்னென்ன செய்ய வேண்டும், இன்று யாரைத் தாக்கினால் என்ன எதிர்வினைகள் நிகழும், அதனால் என்ன பயன் என்று கூடிப் பேசி செய்வதுதான். இதற்குமொரு சான்றைத் தருகிறேன்.
திராவிடியா vs தேசிடியா
பழைய நடிகர் கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிடுபவர். அவருக்கு திராவிடர்கள், திராவிடக் கட்சிகள், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற சொற்கள் அறவே பிடிக்காது. அவர்களை வெறுப்பேற்ற சங்கிகள் உருவாக்கிய திராவிடியா என்கிற இழிச்சொல்லை அவைகளுக்கு மாற்றாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்.
தேவரடியார் என்கிற அழகான வார்த்தைதான் தேவடியா என்கிற கடும்வசைச் சொல்லாக மருவியது என்பது அனைவருக்கும் தெரியும். தேவரடியார் என்றால் அது ஆண்பாலுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும். ஆனால் அந்தக் கலாச்சாரம் பெண்களுக்குப் பொட்டுக்கட்டுதல் என்கிற இழி நிலைக்குப் போன பின், தேவரடியாவாகி, தேவடியா என்று பெண்ணுக்குரியதாக மட்டும் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட இதற்கு ஈடாக இழிவுபடுத்தும் சொல்லாகவே திராவிடியா பசங்க என்று எழுத ஆரம்பித்தார் கஸ்தூரி.
பெண், பெண்ணியர்களில் ஒருவர் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும், அந்த வார்த்தையைப் பயன்படுத்த அவருக்குத் துளியும் நெருடலில்லை !
செய்தித் தொலைக்காட்சி விவாதங்களில் வலதுசாரி முகமூடியில் வரும் பத்ரி, சுமந்த் ஸ்ரீராம் போன்றோரும் இந்த வார்த்தையைத் தொடர்ந்து பகிர்ந்தோ, எழுதியோ வந்தார்கள்.கிட்டத்தட்ட பல மாதங்களாகவே இச்சொல் சமூகவலைத்தளங்களில் திராவிட எதிர்ப்பாளர்களால் சரளமாக, சகஜமாகப் பயன்படுத்தப்பட்ட வண்ணமிருந்தது !
மாநிலங்களவை உறுப்பினரான திரு. அப்துல்லா அவர்கள் ஒரு பதிவு போட்டார்.
“திராவிடியா என்று இழிவு செய்பவர்களின் கொட்டத்தை அடக்க நாமும் தேசிடியா என்று பதிலுக்கு அவர்களை அழைப்போம். திராவிடர்கள் என்றுதானே நக்கலடிக்கிறார்கள் ? அவர்கள் தேசியப் பிரியர்கள், தேசியக்கட்சி ஆதரவாளர்கள் என்பதால் அதைக்குறிக்கும் வரையில் தேசிடியா என்போம்.”
அவ்வளவுதான். பெண்ணியவாதிகள் ஒட்டுமொத்தமாகப் பொங்கிவிட்டார்கள்.
எழுதியவர் அப்துல்லா. மாநிலங்களவை உறுப்பினர், அதிலும் திமுகவைச் சேர்ந்தவர். இவை போதாதா ?
பெண்களை இழிவு செய்யும் வார்த்தையை எழுதிய நீங்கள் மன்னிப்பு கேட்டு, உடனடியாக உங்களுடைய பதவியையும் ராஜினாமா செய்யுங்கள் என்று தீர்ப்பெழுதினார்கள்.
அப்துல்லா அவர்கள் அனைவருக்கும் சேர்த்து எளிமையான ஒரு பதிவின் மூலம் நங்கென்று கொட்டு வைத்து முடித்தார்.
“நிதானமாகச் சிந்தித்தே அந்த வார்த்தையை எழுதினேன். அதில் பெண்களை இழிவு செய்ய எதுவுமில்லை. எனவே மன்னிப்பு கேட்க முடியாது, ராஜினாமாவும் செய்ய முடியாது. ரகசிய குழுமங்களில் ஒன்றுகூடிப் பேசிவிட்டு இப்படி அலை அலையாக வந்து முறையிடுவதை நிறுத்துங்கள்.”
அந்தக் கடைசி வார்த்தைகள்தான் அர்த்தமுள்ளது. சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு வேண்டாதவர்களை முடக்க, இதுபோன்று ரகசியக் குழுமங்களில் கூடிப் பேசி பழி தீர்ப்பதை வாடிக்கையாகச் செய்கிறார்கள் இவர்கள். பெண்ணியர்கள், சங்கிகள், தமிழ் தேசியர்கள், மத்யமர்கள் என்பதெல்லாம் இவர்களுடைய முகமூடிகள் மட்டுமே. மூடியை நீக்கினால் வதனம் முழுக்கப் புலப்படும் அவர்களுடைய திமுக வெறுப்பு !
இப்படி இவர்களுடைய செலக்டிவ்வான அறச்சீற்றங்கள் பலரையும் அதிரச் செய்துள்ளன. இவர்கள் யாருக்கானவர்கள், இவர்களுடைய உண்மையான நோக்கம் என்ன என்பதும் படிப்படியாக அம்பலப்பட ஆரம்பித்துள்ளது !
அப்துல்லாவிடம் பெண்களை இழிவு செய்து விட்டீர்களே என பொங்கல் வைத்த பெண்மணி, ஒரே ஒரு தடவை கூட திராவிடியா என்கிற சொல்லுக்கெதிராகவோ, அது பெண்களையே குறிக்கிறது என்பதாகவோ எங்கும் பதியவில்லை. அட, இந்தப் பத்தியின் நாயகியும், பெண்ணியத்தின் தமிழக கிளையின் ஒரே தலைவியுமான சின்மயிக்குக் கூட திராவிடியா அல்லது திராவிடியா பசங்க என்கிற சொல் உறுத்தியது போல் தெரியவில்லை. அதற்காக அவர் பக்கத்தில் போய் தேசிடியா என்று எழுதிவிடப் போகிறீர்கள், அதற்கு நிச்சயம் தொகுறு தொகுறு என்று தொகுறி உங்களைக் குமுறி எடுத்துவிடுவார் !