சில வருடங்களுக்கு முன் விளையாட்டாக நான் முகநூலில் எழுதியது. பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக எடுத்தால் அந்தத் திரைப்படத்தின் வசனங்கள் எப்படி இருக்கும் என கற்பனை செய்து எழுதியது.
“ஆதித்த கரிகாலன்?”
“செத்துட்டார்.”
“ஏன்?”
“கொன்னுட்டாங்க!”
“யாரு?”
“தெரில!”
“நந்தினியா?”
“இருக்கலாம்”- இப்படி நகைச்சுவைக்காக எழுதியது. அப்படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியதால் அவ்வாறு நடக்கவில்லை. ஆனால் மூளையின் ஒரு சில பகுதிகளில் பாதிப்புகள் இருந்தால் இப்படித்தான் மணிரத்னம் திரைப்பட வசனங்கள் போல் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்கள்.
அது என்ன பாதிப்பு எனத் தெரிந்து கொள்வதற்கு முன் மொழிபற்றிக் கொஞ்சம் பார்ப்போம். மொழி என்பது அர்த்தமுள்ள ஒலிகளின் தொகுப்பு!. அடுத்து வரும் ஒலிகளைக் கவனியுங்கள் – ஒஹாயோ! பான்ஜுர்!! குட்டன் மார்கன், ப்யூனோஸ் தியாஸ்!! இவை எல்லாமே நமக்குக் கேட்கும்போது வெறும் ஒலிகளாக இருக்கின்றன. ஆனால் இவை எல்லாமே முறையே ஜப்பானிய, பிரெஞ்சு. ஜெர்மன், ஸ்பானிஷ் மொழிகளில் காலை வணக்கம் என்று சொல்வதற்கான வார்த்தைகள். அந்த மொழி தெரியாத நமக்கு அவை வெறும் ஒலிகள்தான்!
ஒரு மொழியை மூன்று உறுப்புகளாகப் பிரிக்கலாம்
1.சொற்கள் –(Lexicon)
2.இலக்கணம்- (Syntax)
3.அர்த்தம்- (Semantics) .
எந்த மொழியாக இருந்தாலும் அதன் கட்டுமானம் இதுதான். முதலில் அந்த மொழியின் சொற்களை அறிந்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்தச் சொற்களை வாக்கியங்களாக எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கணம் (grammar) . அதன் பிறகு நாம் பேசும் வாக்கியங்கள் உருவாக்கும் அர்த்தம். இந்த அர்த்தம் என்பதில் வாக்கியங்களுக்கான நேரடியான பொருள் மட்டுமல்ல, மேலதிக மொழிச் செயல்பாடுகளான சிலேடை, உருவகம், ஆகுபெயர், உவமை போன்றவைகளும் (Pragmatics) அடங்கும். உதாரணமாக, வயிறு எரிந்தது என்றால் நிஜமாகவே வயிற்றில் தீப்பிடித்தது என நினைக்க மாட்டோம். பொறாமை என புரிந்துகொள்வோம். அதே போல் ஊரே திரண்டது என்றால் ஊரில் உள்ள மக்கள் வந்தனர் எனப் புரிந்து கொள்கிறோம். இவையும் மூளையின் செயல்பாடுகளே.
மொழி அறிவு மூளையின் சில குறிப்பிட்ட பகுதிகளின் செயல்பாடாக இருக்கிறது. சில பகுதிகள் சொற்களின் பொருளுக்கும் சில பகுதிகள் இலக்கணத்துக்கும் தேவையாக இருக்கின்றன. அவை எந்த இடங்கள் எனத் தெரிந்து கொள்வதற்கு முன் ஒருவரது மூளை வலது,இடது என இரண்டு பகுதிகளாக இருக்கின்றன என்றும் அதில் ஒரு பகுதி வலிமைமிகுந்த பகுதியாக விளங்குகிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதை ஆங்கிலத்தில் Cerebral Dominance என்கிறார்கள், தொன்னூறு விழுக்காடு மக்களுக்கு மூளையின் இடதுபக்கம் வலிமையானதாகவும் சற்றுப் பெரிதாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். இதனால்தான் நாம் பெரும்பாலும் வலதுகைப் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம் (மூளையின் இடது பகுதிதான் நம் உடலின் வலது பகுதி நரம்பு, தசைகளை இயக்குகின்றது).
மொழி அறிவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் மிக முக்கியமான தொடர்பு இருக்கிறது. மொழி அறிவு தொடர்பான பகுதி மூளையில் இடதுபக்கம்தான் இருக்கிறது. அதாவது மூளையின் வலிமையான பகுதியில்தான் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் மொழி அறிவுக்கான பகுதி எந்தப் பக்கம் இருக்கிறதோ அந்தப் பகுதியைத்தான் வலுவான பக்கம் என அழைக்கிறோம். இதை எப்படிக் கண்டறிந்தனர்? மூளையின் இடதுபக்கத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி செயலிழந்தால் அந்த நபருக்கு மொழியைப் புரிந்துகொள்வதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதை அஃபேஸியா (aphasia) என்கின்றனர். இன்னும் பெரிய பாதிப்பாக இருந்தால் கூடவே உடலின் வலதுபுறப் பகுதிகள் செயலிழப்பும் ஏற்பட்டுப் பக்கவாதமும் ஏற்படக்கூடும்,
அவ்வாறு ஏற்பட்ட பாதிப்புகளை வைத்துக் கண்டறிந்ததில் மொழிக்காக இடதுபுற மூளையில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன எனக் கண்டறிந்தனர். ஒன்று, வெர்னிக் என்ற அறிஞர் பெயரால் வெர்னிக் பகுதி (Wernicke’s area) என்றழைக்கப்படுகிறது. இன்னொன்று ப்ரோக்கா என்பவரின் பெயரால் ப்ரோக்கா பகுதி (Broca’s area) என அழைக்கப்படுகிறது.
இந்த வெர்னிக் பகுதிதான் வார்த்தைகளுக்குப் பொருளை உணர வைக்கிறது. சிறு வயதில் ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளும்போது வெர்னிக் பகுதியில்தான் மாற்றங்கள் ஏற்பட்டு ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பொருளை அறிய முடிகிறது. மேலே பல்வேறு மொழிகளில் காலை வணக்கம் என்று சொல்லும் போது நமது மூளையில் அந்த ஒலிகளைக் கேட்டு உணர்வதோடு நின்று விடுகிறது. அதுவே தமிழில் காலை வணக்கம் என்று சொல்லும்போது வெர்னிக் பகுதிதான் அதன் பொருளை நமக்கு உணரவைக்கிறது. புதிதாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளும்போதும் இந்தப் பகுதிதான் செயல்பட்டு பொருளைப் புரிந்து கொள்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் பகுதி செயல்படாதவர்களுக்கு அடுத்தவர் பேசும் மொழி புரியாமலேயே போய்விடும். அதுமட்டுமல்ல, அவர்களுக்கே தாங்கள் பேசுவது என்னவென்று புரியாமல் போய்விடும். இதுபோன்ற பாதிப்பு இருப்பவர்களிடம் நீங்கள் எதாவது கேட்டால் அதற்கு அவர்கள் சம்பந்தம் இல்லாமல் வேறு ஏதோ பதிலளிப்பார்கள். இவர்களை மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தவறாகப் புரிந்துகொண்டு மனநோய் மருத்துவர்களிடம் அழைத்து வருவது அடிக்கடி நடக்கும்.
சுருக்கமாகச் சொன்னால் மனதின் இயக்கமே இங்குதான் நடக்கிறது. இந்த வெர்னிக் பகுதி பாதிக்கப்பட்டால் ஒழுங்காகச் சிந்திக்கக்கூட முடியாது.
அடுத்த பகுதியான ப்ரோக்கா பகுதி வார்த்தைகளை எப்படி இலக்கணப்படி அடுக்கிப் பேசலாம் என்பதற்கு உதவுகிறது. இந்தப் பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்குச் சொற்களும் அதன் பொருளும் புரியும். இங்கே வா, கண்ணைத் திற என்றெல்லாம் சொன்னால் புரிந்து அதன்படி நடந்து கொள்வார்கள். ஆனால் சொற்களைத் தொகுத்துப் பேசத் தெரியாமல் ஓரிரு வார்த்தைகளில் பதிலளிப்பார்கள். கடந்த காலம், நிகழ்காலம்,எதிர்காலம், செய்வினை,செயப்பாட்டுவினை போன்ற பல்வேறு இலக்கண அடிப்படைகளில் சொற்களை மாற்றி இணைத்துப் பேசும் திறமை போய்விடும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு மொழியின் அகராதி மட்டுமே நம்மிடம் இருக்கிறது. ஆனால் இலக்கண நூல் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஆகிவிடும். அப்படிப் ப்ரோக்கா பகுதி பாதிக்கப்பட்டவர்கள்தான் ஆரம்பத்தில் சொன்னது போல் ஓரிரு வார்த்தைகளில் மணிரத்தினச் சுருக்கமாகப் பேசுவார்கள்.
மொழி என்பது வெறும் பேச்சு மட்டும்தானா? ஒலி மட்டும்தான் மொழியோடு தொடர்புடையதா? காட்சிப் புலன் தேவை இல்லையா? எப்படி வாசிக்கிறோம்? தொடுதிறன் தேவையில்லையா? கண்ணை மூடிக் கொண்டு ஒரு பொருளைத் தொட்டாலே அதன் பெயர் நமக்குள் ஓடுகிறதே?
இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை அடுத்தடுத்த கட்டுரைகளில்..
-தொடரும் ….
ramsych2@gmail.com