“முருகா, தயவு பண்ணுடா முருகா! கொஞ்சம் நேரம் அவிங்களெ சத்தம் போடாம இருக்கச் சொல்லுடா.”

முடை நாற்றத்தையோ அல்லது முன் எப்போதோ கோழிக்கறியை வெட்டிக் கழுவாமல் வைத்துவிட்ட கத்தியின் நாற்றத்தையோ தனக்குள் தக்க வைத்திருந்த வீட்டினுள்ளிருந்து ஆண்மையான குரல் ஒன்று வெளியே இருக்கும் தன் மகனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தது.

வீட்டின் கதவு உள்ப்புறமாகத் தாழிடப்பட்டிருக்க, அதை எட்டி உதைக்கலாமா என்றுகூட நினைத்தபடி திண்ணையில் குந்த வைத்து அமர்ந்திருந்தான் முருகன். அவனுக்கு வீட்டினுள் என்ன நடக்கிறது என்று ஓரளவுக்குத் தெரியும் வயதுதான். அதுவும் இவனையொத்த சிறுவர்கள் விளையாட்டாய் பேசிச் சிரித்துக் கொள்கையில், எந்த நேரமும் மூக்கில் வெள்ளை நிற ஜெல்லை ஒழுக்குபவனான இவனும் சேர்ந்து சிரித்து வைத்திருக்கிறான்.

”உங்கொம்மாவைத்தான் காட்டுக்குத் தூக்கிட்டுப் போயி வக்கிப்புல்லு, எருவாமுட்டி போட்டுப் போன வருசமே எரிச்சிட்டாங்களேடா முருகா, அப்புறம் உங்கப்பா எப்பிடி கஞ்சி காச்சுவாரு? கஞ்சி காச்சுறதுக்கு ஒரு பொம்பளப்பிள்ளை வேணும் தெரியுமா?” எல்லாம் தெரிந்தவன் போல இவனது வகுப்புக்காரன் ஆனந்தன் பேசுகையில் முருகன் தடுமாறுவான்.

முருகனின் நாக்கை அப்போது தான் பூச்சியொன்று கடித்துவிட்டுப் பறந்து போனது மாதிரியும், உடனேயே நாக்கு தடித்துப்போய் வாய்நிரம்ப நாக்கு வீங்கி அடைத்துக் கொண்டது போலவும் ஆகிவிடும்.

கணக்கு வாத்தியார், `ரெண்டும் ரெண்டும் எவ்ளோடா?’ என்று இவனை எழுந்து நின்று சொல்லச் சொல்கையில் விடை தெரியாவிட்டாலும் இவனுக்குப் பிடித்தமான எதாவது ஒரு எண்ணைச் சொல்லிக் குட்டு வாங்குவான். இப்போது என்ன சொல்வதெனத் தெரியாமல் முற்றிலுமாக எந்தக்கேள்விகளுக்குமே பதிலறியாதவனாகவும் வெறுமையடைந்த சிறுவனாகவும் நின்றிருந்தான்.

“முருகா, டே மவனே! சித்த நேரம் சத்தம் போடாம இருக்கச்சொல்லுடா அவிங்க கிட்ட!” வீட்டினுள்ளிருந்து அப்பா குரல் கொடுத்தார்.

முருகனுக்கு அடிவயிற்றிலிருந்த குடல்களில் சிலவற்றை இப்போதே வாசலில் துப்பிவிடப் போகிறேன் என்பது மாதிரி இருமல் வந்தது. முருகன் இருமத் துவங்கப்போகிறான் என்றால் அவனைப் பார்ப்பவர்கள் ’நாசமாய்ப் போக!இப்போது என்ன நடந்து விட்டதென்று இந்தப்பயல் அழத்துவங்குகிறான்?’ என்றே நினைப்பார்கள்.

முருகனுக்கு சளித்தொந்தரவு பிறந்ததிலிருந்தே இருக்கிறது. மூன்று மாதமோ நான்கு மாதமோ நன்றாக இருப்பவன் பின்பாக நான்கைந்து மாதம் மூக்கொழுக்கியாக மேலப்பாளையத்தில் சுற்றுவான்.

ஆயிரத்திப்பத்துக்காலனியில் இருக்கும் இவனது மாமா எப்போதாவது மேலப்பாளையம் வந்தால் இவனிடம், ”எங்கக்காளும் இப்பிடித்தான்டா மருமகனே, சின்ன வயசுல இருந்தே இருமிட்டே இருப்பா! கல்யாணம் ஆகிற வரைக்கிம் கொளத்துப்பாளையத்துல அவ எச்சி துப்பாத இடமே கிடையாது! உங்கொப்பனைக் கட்டின பொறவு இங்க மேலப்பாளையத்துல வந்து பன்னெண்டு வருசம் இருமித் துப்பியிருக்கா! ஆனா இங்க வந்துதான்டா ரத்தமா துப்பினா அவ! இனி மேலோகத்துல எங்க போயி துப்பீட்டு இருக்காளோ? அதனாலதான் வடக்கெ காட்டுல கொண்டி எரிச்சோம்! பொதச்சி வச்சிருந்தோம்னு வச்சிக்கடா.. மண்ணை நோண்டி தலையை மட்டும் மண்ணுக்கு மேல நீட்டி சுடுகாட்டுல துப்பிட்டு மறுபடியும் மண்ணை மூடி மூடிப் படுத்துட்டே இருப்பா அவ! இப்ப அவளாட்டமே நீயும் மேலப்பாளையத்துக்குள்ள துப்ப ஆரம்பிச்சிட்டே! ஒட்டுவாரொட்டி நோவுங்கறது செரியாத்தானிருக்கு! உங்கொப்பன் எப்பிடியோ தப்பிச்சுட்டான்! உனக்கு ஒட்ட வச்சுட்டு அவ போயிட்டா!” என்பார்.

“முருகா! நீயி இருக்கியா இல்லியாடா திண்ணையில? பதில் சொல்லுடா அப்பனுக்கு! அவிங்கள சித்த நேரம் சத்தம் போடாம இருக்கச் சொல்லுடா!”

இவன் வீட்டெதிர்க்கே காங்க்ரீட் சாலையில் கிரிக்கெட் ஆடும் இவனையொத்த சிறுவர்களை வெறித்துப் பார்த்தபடி குந்த வைத்திருந்தான். அவர்கள் பந்தை அடிப்பதும், குய்யா முய்யாவென சப்தமெழுப்புவதுமாய் இருந்தார்கள். இவனால் அவர்களோடு சேர்ந்து விளையாட முடிவதில்லை.

பந்தைத் துரத்திக் கொண்டு ஓடினால் அதை எடுத்து வீசக்கூட முடியாத அளவு மூச்சு வாங்குகிறது! திடீரெனக் கண்கள் இருண்டு கொண்டு ‘இப்ப செத்துடுவேன்போல!’ என்பது போல இருக்கிறது. இந்தச் சிரமத்திற்காகவே அவர்களோடு ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெறுமனே திண்ணையில் குந்த வைத்திருந்தான் முருகன்.

கிழக்குப்பார்த்த வீடென்பதால் மாலை நேரத்தில் வீட்டின் நிழல் வாசலெங்கும் படுத்துக்கிடந்தது. அப்பனின் மூன்று சக்கர சைக்கிள் வடக்குப்பக்கமாக பாத்ரூம் சுவற்றருகே நின்றிருந்தது. இங்கிருந்து பார்க்க இவன் பார்வைக்குப் பின் சக்கரத்தில் ஒன்று செத்த தவளையொன்று கால்விரித்துக் கிடப்பது போன்று தெரிந்தது.

அப்பனுக்கு அது பஞ்சரென்றாலும் வருத்தமிருக்காது. வீதியின் தெற்கே போனால் ஊத்துக்குளி ரோடு வருகிறது. அந்த முக்கில் பஞ்சர் கடை வைத்திருக்கிறது. `சென்னிமலையாண்டவர் பஞ்சர் கடை’ என்று கடைக்கூரை மேல் தகரப்பலகை வைத்திருக்கிறது.

முன்னெப்போதோ எழுதி வைத்த தகரப்பலகையாகையால் அது மழைநீரில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருவேறி நின்றிருந்தது. பஞ்சர்கடையில் ‘ர்’ எழுத்து காணாமல் போய் ’பஞ்ச’ கடையாக அறிவித்தது.

அப்பனுக்கு ஒரு கால் சூப்பை. பிறக்கும்போதே அப்பா அம்மாயியின் அனுமதியில்லாமல் சீக்கிரமாய் வயிற்றிலிருந்து முட்டிக்கொண்டு வெளிவந்து உலகைப்பார்த்த அவசரக்காரனாம். அதனால்தான் அப்படியாயிற்றென சொல்கிறார். நல்லவேளை, தனக்கு அப்படி சூப்பையில்லை என கால்களை இவன் பார்த்துக் கொள்வான் அடிக்கடி. ஆனால் அம்மா இவனிடம் வேறுமாதிரி சொல்லியிருந்தது.

“சென்னிமலைக்குள்ள கண்டபக்கம் சுத்துறான்ல அந்த தாடிக்கார பஞ்சப்பனாதி பாடுவாசிச் சாத்தான்.. அவன் பண்ண வேலையிது! உங்கொப்பன் பொறந்தப்ப இந்த வீதியிலதான் சோத்துக்காவ சுத்திட்டு இருந்திருக்கான். பாக்க பால் ஐஸ் மாதிரி இருந்த உங்கொப்பனோட வலது கால்ல ஒன்னை சூப்பிச் சப்பீட்டு போயிட்டான். அதனால அவனை வீதியில எங்க கண்டாலும் தூரமா ஓடிப்போயிரு! உன் மண்டையைக்கூட ஒரு சப்பு சப்பீட்டான்னா, உன் மண்டை கூமாச்சி மண்டையாயிடும்! ”என்று மிரட்டியிருந்தாள் முருகனை.

கூமாச்சி மண்டையோடு தான் இருந்தால் எப்படியிருக்குமென நினைத்துப் பார்த்தான் முருகன். அது அசிங்கமாய் இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை முருகன் சாத்தானை வீதியில் எங்கு கண்டாலும் ஒதுங்கி வந்து சென்னிமலை முருகனைக் காப்பாற்றச்சொல்லி வேண்டத் துவங்கி விடுவான்.

நாலுவிரல் கணேசன் இவன் வாசலுக்கு வந்து விட்ட பந்தை எடுப்பதற்காக ஓடி வந்தான். அவனுக்கும் இவனுக்கும் ஒருவாரகாலமாக `கா.’ இருவரும் பேசிக்கொள்வதில்லை. வந்தவன் தன் நான்கு விரல் கையால் பந்தை எடுத்து ‘தூய்ய்ய்ய்!’ என்று சப்தமாய் குரல்கொடுத்து வீசினான்.

அந்தச் சப்தம் இவனை மிரட்டுவதற்காக மட்டுமே. கணேசன் தன் பெருவிரலைக் குழந்தையாய் இருக்கையிலிருந்தே சூப்பிப்பழக்கமானதால் ஒரு கட்டத்தில் விரலானது சப்பிச்சப்பி தீர்ந்துபோய் விட்டதாகச் சொல்லியிருந்தான்.

அடுத்து ஆள்காட்டி விரலையும் பழக்க தோசத்தில் சப்பத்துவங்கியவனை அவன் அம்மா தடுக்கும் முயற்சியில் இறங்கி பன்றிவிட்டையை இரவில் படுக்கையில் அவன் விரலில் தடவி விட ஆரம்பித்தாள்.

கணேசன் இதனால் அசிங்கப்பட்டும் துக்கப்பட்டும் வேதனைப்பட்டும் விரல் சூப்பும் வழக்கத்தை விடவேண்டியதாயிற்று. பிடித்தமான செயலைச் செய்யவியலாமல் கணேசன் ஒருவார காலம் அழுது வீங்கிய ஆந்தை முகவடிவிலும், வாய்பேசாத ஆட்டுக்குட்டி போல பற்களை மட்டும் கிஞ்சித்துக் காட்டியபடி சுற்றினான்.

“முருகா! சித்த நேரம் அவிங்ககிட்ட சத்தம் போடாம பந்தாடச் சொல்லேன்டா! சாமி சாமியாயிருப்பேடா!” அப்பனின் குரல் வீட்டினுள்ளிருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

வீட்டினுள் பூசனம் பிடித்துக் கொண்டிருந்த சுவற்றோரமாய் கோரைப்பாயைப் பல்லுப்பக்கம் விரித்துப் படுத்திருந்தார்கள் முருகனின் அப்பன் வெள்ளையனும், சந்தைக்கடை சரசாவும். சரஸா கரிபடிந்திருந்த வீட்டின் கூரையை உற்றுப்பார்த்தவளுக்கு ஜெமினி சர்க்கஸில் யானையொன்று சைக்கிள் ஓட்டுவதாகத் தெரியவே ரசித்துப் பார்த்தபடி படுத்திருந்தாள். அவளது சேலையும் மற்ற உடுப்புகளும் இலவசமாய் ஆட்சியாளர்கள் முன்னெப்போதோ கொடுத்திருந்த தொலைக்கட்சிப்பெட்டி மீது கிடந்தன.

“நீ ஏன் என்னைப் பார்க்காம கூரையோட்டைப் பார்த்துட்டு இருக்கேடி?”

“உன் மூஞ்சியப் பாக்க முடியல வெள்ளை.. அது சிங்கமூஞ்சியாட்டம் தெரியுது எனக்கு!” என்றாள் சரஸா.

வெள்ளையனுக்கு செத்துப்போன தன் பொண்டாட்டியின் நினைவு அப்போது வந்தது. அவளும் இவளைப்போலத்தான் சொல்வாள். ‘இஞ்ஜி மென்று தின்ற சென்னிமலைக் கொரங்காட்டமே உன் மூஞ்சி மாறிப்போச்சு மாமா!’ என்று. எல்லோருமே படுக்கையில் மனைவியோடு இருக்கையில் ஏதோவொரு விலங்கு ரூபத்தில் மாறிவிடுகிறார்களோவென அச்சமாய் நினைத்தான் வெள்ளையன் அப்போது.

“ஏன் இன்னிக்கி தாமசம் பண்ணுறே? சீக்கிரம் காரியத்தைப் பாரு வெள்ளை.. நான் போவணும்!” என்றாள். அப்போது வெளியே பந்தாடும் சிறுவர்களின் ‘கிளீன்போல்டு!” என்ற கோரஸான குரல் கேட்டது.

“முருகா! சாமி நீ வெளிய இருக்கியாடா? அவிங்களை சித்த நேரம் சத்தம் போடாமெ இருக்கச் சொல்லேன்டா! அப்பனுக்காவ அதுகூடச் செய்ய மாட்டியா?” சுவற்றுக்கு அந்தப்பக்கம் திண்ணையில் மகன் உட்கார்ந்திருப்பான் என்ற நம்பிக்கையில் அழுது விடுபவன் போல வெள்ளையன் குரல் கொடுத்தான். ‘சரிப்பா, நான் போய் அவிங்ககிட்ட சொல்றேன்!’ என்று மகன் திருப்பிக் குரல் கொடுப்பானென்ற நம்பிக்கையை சுவற்றின்மீது அவன் வைத்திருந்தான்.

“அவிங்க அவிங்கபாட்டுக்கு விளையாடிட்டு போச்சாறாங்க என் கோபக்காரச் சிங்கமே! நீ ஏன் அதைக் காது குடுத்துக் கேட்டுட்டு தாமசம் பண்ணிட்டே இருக்கே? நீ காரியத்தைப் பாரு! வேணும்னா பஞ்சிருந்தா ரெண்டு காதுலயும் வெச்சு திணிச்சு அடைச்சிக்கோயேன்!” என்றவள் அவனைத் தூண்டும் விதமாய் எம்பினாள்.

வெள்ளையனால் சிறுவர்களின் சப்தத்திலிருந்து விடுபட முடியவில்லை. நினைத்தவுடன் எழுந்து போய்விடவும் முடியாமல் இந்தப்புறமாய் பாயில் கிடந்த தன் சூம்பிப்போன காலைப் பார்த்தான். அது காய்ந்துபோன முருங்கைக்குச்சி மாதிரி பாயில் திரும்பிக்கிடந்தது. இடது காலை சம்மணம் போட்டபடி மடித்து அமர்ந்திருந்தான் வெள்ளையன். அவனது இரு கைகளும் அவளது நெஞ்சாங்கூட்டுக்கு இருபுறத்திலும் ஊன்றி நின்றிருந்தது.

”எம்மேல தவக்காயாட்டம் சாஞ்சிக்கோ சிங்கமே! உன்னோட காதுங்களை நான் விரல் விட்டு அடச்சிக்கறேன்!” என்று இயங்காமல் இவளை வெறித்தபடி அமர்ந்திருந்த வெள்ளையனைப் பார்த்துக் கூறினாள்.

சிறுவர்களின் சப்தம் அடங்குவதாய் இல்லை. இனி அவர்கள் ஆட்டத்தை முடித்துக் கொண்டு அவரவர் வீடு போய்விட்டாலுமே இவன் காதில் அவர்களின் குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும் போல நினைத்தான். அவனுக்குள் வெறுப்பென்ற உருவம் சிவந்த நிற உடலோடு புகைவடிவில் அவன் வாய் வழியே நுழைந்து வயிற்றில் நிரம்பியது.

கோபத்தில் அவளது மார்பை இவனது வலது கையால் பற்றி அவளது நெஞ்சுக்கூட்டுக்குள் திணித்தேவிடுவது போல அழுத்தி முயற்சித்தான். அவளுக்கு சிங்கமானது பிடறியை சிலுப்பிக் கொண்டு இரையைக் கவ்வ முயற்சிப்பது போன்றிருக்கவே மிரட்சியானாள்.

“அதை என்னான்னு நினைச்சே நீ? பசங்க விளையாண்டுட்டு இருக்குற பந்துன்னா? சொல்லச் சொல்லப்பாரேன் இவனை! வெள்ளை கையை எடுடா!” என்று பலம் கொண்ட மட்டும் தன் கைகளால் அவன் கையை நகர்த்தினாள்.

திடீரென வெள்ளையன் கண்களில் ஈரம் சுரந்துவிட்டது. பாவமான காரியத்தை செய்யத்துணிந்து விட்டதற்காய் அவனது உதடுகள் பிதுங்கியது. அடிபட்ட குழந்தையைத் தடவிச் சமாதானப்படுத்துவது போல அவளது சிவந்திருந்த மார்பைத் தடவி விட்டான்.

தூங்கும் பிள்ளையைக் கிள்ளி வைத்து அழச்செய்து விட்டு தொட்டிலை ஆட்டியபடி தாலாட்டுப்பாடி தூங்க வைக்கும் அப்பனைப்போன்று தெரிந்தான் வெள்ளையன் சரஸாவின் பார்வைக்கு. தன் வெற்றிலைக்கறை படிந்த பற்களை அவனுக்கு சிரித்தபடி காட்டினாள்.

சும்மா எழுப்பி அனுப்பிவிட்டான் என்றால் பணம் தரமாட்டானோ என்ற சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு. வெள்ளிக்கிழமைதான் வாரச்சந்தை சென்னிமலையில். இன்று திங்கள்கிழமை. வயதாகிப் போனதால் காய்கறி மார்க்கெட் பக்கமாய் பெருந்துறைக்காரிகள் சிலர் வந்து சேர்ந்துவிட்டார்கள். வெளியூர் பண்டத்திற்கு என்றுமே உள்ளூருக்குள் மவுசுதான். பின்பாக உள்ளூர்ப்பண்டத்தை யார் சீந்துவார்கள்?

பஸ்ஸ்டேண்டில் காலையிலிருந்து மதியம் வரை கிடந்தும் ஒருவரும் சீண்டவில்லை. இவளாகத்தான் தேர்வீதி வழியாக டீத்தண்ணிக்குக் கூட வழியில்லாமல் நடந்து வந்திருந்தாள். மேலப்பாளையம் டாஸ்மாக் பக்கமாக வேப்பைமர நிழலில் குடிகாரர்கள் சிலர் அரைக்கட்டிங்கிற்கு இருபது முப்பது பற்றாமல் பத்துப் பத்தாகப் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பதைபதைப்புடன் ஒரு கிடையில் நிற்காத நாய்கள் போன்று மரத்தைச் சுற்றிக் கொண்டேயிருந்தார்கள். ஊத்துக்குளி வழியே இப்போது உறுமிக்கொண்டு வந்து நிற்கப்போகும் பேருந்திலிருந்து மிருகம் ஒன்று இறங்கி கட்டிங் போடாதவர்களை வரிசையில் நிற்கவைத்து கடித்துக்குதறி விடப்போகிறதென்ற பீதிதான் அவர்கள் கண்களில் இருந்ததாய் நினைத்தாள் சரஸா.

இவள் வேப்பைமர நிழலில் சித்தநேரம் நின்றிருந்தாள். இவளை ஓரக்கண்ணால் கூட எவனும் பார்க்கவில்லை. அவனவனுக்கு அவனவன் பிரச்சனை. மரத்தின் நிழலில் வடப்பக்கமாய் ஒருவன் வேட்டி ஒருபக்கம் கிடக்க, விரைகளோடு ஊறுகாய் போட உப்பு சேர்த்த வத்தலை மொட்டைமாடியில் காயவைப்பது போல கிடந்தான்.

அவன் இப்பொழுதான் விழுந்தானா இல்லை, நெடுங்காலமாகவே இதேயிடத்தில் வீழ்ந்து கிடக்கிறானா என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் அவன் ஒரு கருவாட்டு மொடாவில் கைவிட்டுத்தான் அவனுக்கான தொகையை எடுத்து வந்து குடித்திருக்க வேண்டுமெனவும் நினைத்தாள்.

அவன் செத்துவிட்டானோ? என்று கூட ஒருகணம் நினைத்தாள் சரஸா. ஈக்கள் அவனை மொய்த்தபடி பறந்து கொண்டிருந்தன. எந்த உணர்வுமின்றி போதையில் அவன் சொர்க்கலோகம் பயணித்து ஊர்வசிக்குக் காதல் கடிதம் நீட்டிக் கொண்டிருக்கலாமெனவும் நினைத்தாள்.

சென்னிமலையில் தறியில் நெய்த பெட்சீட்டை லுங்கியாய் கட்டியிருந்த நடுத்தர வயதுடையவன் மண்டையைச் சொறிந்துகொண்டே இவளிடம் வந்து நின்றான். சவஊர்வலத்திலிருந்து பிரிந்து வந்தவனான அவன், ‘என்ன? போலாமா?’ என்று கேட்கப்போகிறான் என நினைத்து அவனைப்பார்த்துப் புன்னகைத்தாள்.. திடீரென அவளது மண்டையில் கிரீடம் வந்து அமர்ந்திருந்தது. சென்னிமலையின் இன்றைய இளவரசிக்கு ஒப்பானவளானாள்.

வந்து நின்றதிலிருந்தே தன்னைச்சுற்றிலும் அவள் ஒரு ஒளி வட்டத்தையும், நறுமணத்தையும் பீய்ச்சியிருந்தாள் முன்பே. ‘கேள் மகனே! கடவுளிடம் வரம் கேட்பதற்கு ஏன் தடுமாற்றம்? உனக்காகத்தானே நான் நிறுத்தத்திலிருந்து இந்தப் போதாத வெயிலில் பொடி நடையாய் ஆடியசைந்து வந்து சேர்ந்திருக்கிறேன்! எங்கு அழைத்துப் போகப்போகிறாய்? உன் இல்லத்திற்கா? இல்லை, ஊஞ்சை மரங்களடர்ந்த மலைக்கரட்டுக்குள்ளா?’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

”சில்றெ பத்து ரூவா இருக்குமாக்கா! கட்டிங்குக்கு பத்தலை!’’ என்றதும், இத்தனை நேரம் இறக்கையில்லாத பருந்தாய் அவ்விடத்தில் நின்றிருந்தவளுக்குத் திடீரென இறக்கைகள் முதுகில் வளர ஆரம்பித்து விட்டது. அதைப் பயன்படுத்தும் நுணுக்கம் அறிந்தவளாகையால் மேற்கே ஊத்துக்குளி சாலையில் திடீரெனப் பறக்கத்துவங்கினாள்.

திடீரெனத் தன் கண்முன் சிறகடித்துப் பறப்பவளை அதிர்ச்சியாய் பார்த்தவன், ‘இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு பதிலே சொல்லாம பறந்து போறா அக்கா?’ என்று நினைத்தபடி அவன் வேப்பைமரத்தில் முதுகை முட்டுக் கொடுத்து அமர்ந்தான். நேராகப் பறந்து வந்தவள் கோவிலையும், வங்கியையும் தாண்டி புளியமரத்தடியில் வந்து இறங்கினாள். சிறகுகளை மடித்து முதுகோடு ஒட்டவைத்துக் கொண்டவள், சைக்கிள் கடையில் வீல் ஒன்றை பெண்டு எடுத்தபடி கையில் சின்னச்சுத்தியலோடு அமர்ந்திருந்த வெள்ளையனைப் பார்த்து மீண்டும் புன்னகை அரசியானாள். அந்தப் புன்னகை ஆடவரை இதுநாள் வரை தொட்டேயறியாத வயதுப்பிள்ளையின் புன்னகையாய் இருந்தது.

“யாரு? சரஸாவா.. வாடியம்மா! எங்க வராத மகாதேவி வருகை புரிஞ்சிருக்கீங்க மேலப்பாளையம் பக்கம்? அதும் நம்ம கடைக்கி? இப்பிடி சேர்ல பதனமா பார்த்து உக்கோரு! ஒரு காலு கொஞ்சம் மடங்கியிருக்குது எனக்காட்டமே அதுக்கும்!” என்றான். சரஸா அவன் சொன்னது போன்றே பதனமாய் அமர்ந்தாள்.

ஒருகால் குனிந்த வாக்கில் மடங்கி கூன் போட்டபடி அமர்ந்தாள். சிரமமாயிருந்தது! எழுந்தே நின்றுகொள்ளலாம் போலிருந்தது. கடையைத்தாண்டி பூனையொன்று இவளைப்பார்த்து ‘மியாவ்’ என்று ஒலி கொடுத்துச் சென்றது. அது கூட இவள் காதுக்குக் கேவலமான மியாவாகத்தான் கேட்டது. கத்திரிக்கா சொத்தையானா சந்தைக்கி வந்துதானே ஆவணும்? என்பது போல வெள்ளையனும் நினைப்பானென்றே யோசித்தாள்.

“டீ குடிக்கிறியா?” என்றான் இவளிடம் வெள்ளையன். வீலின் கம்பிகளை வித்தியாசமான வளையத்தால் முறுக்கி இறுக்கிக் கொண்டே, ஒவ்வொரு முறுக்கலுக்கும் ஒரு சுற்று வீலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். கடைக்குள் வெள்ளையனின் காமத்தால் ஆற்று நீரானது பெருக்கெடுத்து ஓடச்செய்ய அவளுக்கு சில வித்தைகள் தெரிந்திருந்தன.

“வெள்ளை! என்னைக் கூட்டிப் போய் பெண்டெடுக்காம சைக்கிள் வீலை பெண்டெடுத்துட்டு இருக்கியே இது நியாயமா? சென்னிமலை முருகனுக்கே அடுக்காது தெரியுமா?” என்றாள்.

“அதுக்கு ஏன் சரஸா முருகனை எல்லாம் இழுக்குறே? அவுரு பாவம் மலைமேல வள்ளி தெய்வானையோட சேர்த்தி உட்கார்ந்துட்டு இருக்காரு ஒரே கல்லுல! உன்னை பெண்டெடுக்கணும்னா ஒரு நேரம் காலம் இல்லையா? ஓவராயலுக்கு வண்டியை விட இன்னிக்கி என் கடைதான் கிடைச்சுதா சென்னிமலைக்குள்ள? எத்தனை பஞ்சர் கடைக வீதிக்கு வீதி இருக்குதுல்ல! உன் வண்டீல எங்காச்சிம் கிழிஞ்சிருந்தாக்கூட டியூப்ல ஒரைப்புக்கட்டை போட்டுத் தேய்ச்சு, சொல்யூசன் பிதுக்கி ஊதி ஒட்ட வச்சு தாட்டீருவானுங்களே!”

“சைக்கிள் கடைக்காரன் பேச்சைப் பாரு! எந்த நேரமும் சொல்யூசன், ஒரப்புக்கட்டை, கிணிமணியின்னுட்டு! ஆமா வெள்ளை, உன் கடை மணி நல்லா காது கிழிய சத்தம் போடுமா?”

“இப்பத்தான் ஐஸ்பொட்டிக்காரன் பொவ்வாத் அடிக்கிறாப்ல பேப்பை வந்துருச்சே! மணிய யாரு அடிக்கிறா? முன்ன மாதிரி ஓவராயலுக்கு வண்டிக வருதா ஒன்னா? எல்லாரும் டிவிஎஸ்ல போறாங்க வர்றாங்க! எனக்கு அதை வேலை பாக்கத் தெரியாது. எதோ டிவிஎஸ்சுக்குப் பஞ்சர் ஒட்டி தாட்டியுட முடியங்காட்டி எம் பொழப்பு ஓடுது! உம்பொழப்பு அப்பிடியா? நோகாம படுத்து எந்திரிச்சுட்டு பணத்தை வாங்கி ஜாக்கெட்ல சொருவீட்டுக் கிளம்பிடறே!”

“எனக்குப் பசிக்குது வெள்ளை! பன்னிக்கறி வாங்கிக் குடுக்குறியா? மேக்கெ போனம்னா கடை இருக்குமே!”

“கடை இன்னேரத்துல இருக்காது சரஸா. ரெண்டு மணிக்காட்டமே சாத்தீட்டுப் போயிருப்பாங்க!”

“அடக்கடவுளே! (மொழிபெயர்ப்பு கதை படிச்ச பாதிப்பு) ஊட்டுல என்ன ஆக்கி வச்சிருக்கே? மிச்சமிருக்கா, இல்ல உன்னோட பானை வயித்துக்குள்ள கொட்டிக்கிட்டியா?”

“நேரங்கெட்ட நேரத்துல எல்லாம் சாப்பிடாதே சரஸா. இனி என்ன ரெண்டு மணி நேரத்துல இருட்டு கட்டீரும்! அப்ப ஹோட்டல்ல எதாச்சிம் சூடா சாப்டுக்க! வீட்டுல வெறுஞ்சட்டி தான் கமுத்தி வெச்சிருக்கேன். ஸ்கூல் போன பையனும் வந்திருப்பான். எங்க ரெண்டு பேருக்கும் ராத்திரி சாப்பாட்டுக்குக் கடையில நாலு புரோட்டா வாங்கிட்டா கூடப் போதும். கேஸ் அடுப்பை பத்த வைக்க வேண்டியதில்ல!”

“அடக்கடவுளே! அப்ப எனக்கு எதும் வாங்கித்தர மாட்டியா வெள்ளை?”

“மாட்டன்னு நான் சொன்னனா? நேரம் செரியில்லைன்னு தான் சொல்றேன். வேணும்னா போயி டீக்கடையில பன்னும் டீயும் சாப்பிடு!” என்றவன் பாக்கெட்டிலிருந்து முப்பது ரூபாயை எடுத்து நீட்டினான். இவள் வாங்கிக்கொண்டு மேற்கே நடையிட்டாள். போனவள் திரும்பி வந்தபோது அவள் முகத்தில் சந்தோசக்குருவி சிறகசைத்தபடி உட்கார்ந்திருந்தது.

“அப்ப என்கிட்ட இருந்து எதும் வேண்டாமா இன்னிக்கி? விரதமா? பூனைக எல்லாம் பாலை வெறுத்துட்டா என்னோட பால் யேவாரமே படுத்துக்குமே!” என்றாள். அவனுக்கும் இவள் டீசாப்பிடக் கிளம்பிச் செல்கையில் கிளியொன்று அவனின் மண்டைக்குள் ஒரு கொத்து கொத்தியிருந்தது. ‘தேடி வந்ததை வெறுங்கையோடு அனுப்பிட்டு ராத்திரி தூங்குறப்ப கவலைப்படாதே!’ என்று சொல்லியது.

கடையின் ஷட்டரைப் பாதி வரை இறக்கி நிறுத்திவிட்டு தன் மூணு சக்கர சைக்கிளை எடுத்தான். சரஸாவுக்கு இவன் வீடு தெரியுமாகையால் வடக்கே காங்கரீட் சாலையில் நடக்கத் துவங்கியிருந்தாள். இவன் கைகளால் இயக்கிக் கொண்டே சைக்கிளை முன்நகர்த்திச் சென்றான்.

வீட்டினுள் இவன் பையன் முருகன் டிவி பார்த்துக் கொண்டு சேரில் அமர்ந்திருந்தான். எலியைப்பிடிக்க ஓடிய பூனை சுவற்றில் மோதி அப்பிக்கொண்டதைப் பார்த்து அவனும் சேரிலிருந்து குனிந்து குனிந்து சிரித்தபடியிருந்தான். கிச்சுக்குள் நிற்கும் தாங்கு குச்சியோடு அப்பன் வீட்டுக்குள் வர அவன் சிரிப்பை நிப்பாட்டிக் கொண்டு பார்த்தான். கூடவே வந்த அம்மாளையும் பார்த்தான். அந்தம்மாள் கஞ்சி காய்ச்ச வந்திருக்கிறாள் என்று தெரிந்துகொண்டு டிவியை அணைத்து விட்டு வீட்டின் வெளியே வாசலுக்கு வந்து நின்றான். ஏனோ அவனுக்கு அப்பனை அவளோடு பார்க்கப் பிடிக்கவேயில்லை.

“இங்கியே உக்கோந்திரு மகனே! ஊருக்குள்ள எங்காச்சிம் விளையாட ஓடீடாதே! கடையை வேற திறந்து போட்டுட்டு வந்திருக்கேன்! அப்பன் இப்ப இப்பிடீங்கறக்குள்ள கடைக்கிப் போயிருவேன்! சரியா?” என்றவன், மகனிடம் பதிலை எதிர்பாராமலேயே கதவை சாத்தி உள்பக்கமாகத் தாழிட்டான்.

”முருகா! அவிங்களை சித்தநேரம் சத்தம் போடாம விளையாடத்தான் சொல்லேன்டா! வாயில என்னத்தான் வச்சிருக்கியோ? சும்மா நாள்ல அப்பிடி காதுவரைக்கிம் வாயைத் தொறந்துட்டுப் பேசுவியேடா முருகா! இப்ப அந்த வாயிக்கி என்னதான் ஆச்சு? அப்பன் சொல்றதைக் கேளுடா!”

அப்பனின் குரலை இவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. தன் காதுகளை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு அமர்ந்திருந்தான். எதையாவது தூக்கிக் கொண்டு வீட்டின் கதவை முட்டி மோதித்தள்ளி விட்டுப் போய் ஒரே போடாக அந்தம்மாளை முதலில் தாக்க வேண்டும்! அப்புறம் அப்பனையும் தாக்க வேண்டும்! பையன்கள் அன்று மட்டும் ஏனோ அதிகமாய் சப்தமிட்டு விளையாடுவதாய் அவனுக்கும் தெரிந்தது. ஆட்டத்தில் இன்று அதிக சுவாரஸ்யம் இருக்கிறது போல.

“முருகா! அப்பன் இன்னிக்கி உனக்குப்பிடிச்ச முட்டை புரோட்டா வாங்கித் தர்றேன்டா! அவிங்க கிட்ட போயி நீயி சொல்லு! இந்த மாதிரி எங்கப்பன் சத்தம் போடறாருன்னு போயி சொல்லு! அவிங்க கம்முன்னு விளையாடுவாங்க! நீ போயிச் சொல்லு!”

முருகனுக்கு முட்டை புரோட்டா என்றதும் நாவில் எச்சில் ஊறியது. எட்டு மணிக்கி பசிக்கும் வயிறு இப்போதே பசிக்கிற மாதிரி தோன்றியது. ஆனாலும் அதற்காக அப்பனுக்கு உதவி செய்யும் மனம் அவனுக்கு வருவேனா என்றேயிருந்தது. நாலு விரல் கணேசன் ஓடி வந்த பந்தை சப்தமிட்டபடி விரட்டிக் கொண்டே இவன் வாசலுக்கு வந்து பிடித்தான். ‘நாலு ரன் நாலு ரன்!’ என்று கத்தினார்கள்.

“முருகா! இருக்கியா செத்துட்டியாடா! நாசமாப்போக! அப்பன் நான் சொல்றதை என்னிக்கித்தான் நீ சரீன்னு சொல்லிக் கேப்பியோ? ஒரே ஒருவாட்டி போயிச் சொல்லுடா மகனே! அவிங்க கிட்டத்தாண்டி போயே நீ சொல்லு! சித்த நேரம் வாயைப் பொத்தீட்டு விளையாடச் சொல்லுடா முருகா!”

இவனுக்கு அப்பன் கெஞ்சுவது வேடிக்கையாய் இருந்தது. கஞ்சி காய்ச்சுவதை விட்டு விட்டு இவர் ஏன் என்னிடம் கெஞ்சிக்கொண்டேயிருக்கிறார்? இதில் ஏதோ இருக்கிறது! இவன் போய் சொன்னால் மட்டும் அவர்கள் சத்தமிடாமலா விளையாடப் போகிறார்கள்? சொன்னால் எச்சாகக் கத்துவார்கள்.

‘நீ என்ன பெரிய கெஜட்டாடா? உங்கப்பன் என்ன ஜில்லா கலெக்டராடா? வீதியில பந்தாடினா உனக்கெங்கடா கொடையுது?’ என்பார்கள். எங்கியோ தன் பாட்டுக்கு நடை போட்டுப் போற மாரியாத்தாவைக் கூப்பிட்டு எம்மேல வந்து ஏறாத்தான்னு சொன்னாப்ல ஆகிடும். அதற்கு முருகன் தயாரில்லை.

அப்போது கதவின் தாழ்ப்பாளை நீக்கிக்கொண்டு சரஸா வெளிவந்தாள். திண்ணையில் அமர்ந்திருந்த இவனைப்பார்த்துக் காவிப்பற்கள் தெரிய ஒரு சிரிப்பை சிரித்தாள். பின்னாலேயே தாங்குக் கோலுடன் குதித்தவாறு படியிறங்கினார் அப்பா. எதிரியோடு சண்டைகட்டி தோற்றுப்போன முகத்துடன் இவனருகில் வந்தார்.

“எருமை மேக்கி! இங்கியேதான் காது கேக்காதவனாட்டம் இன்ன வரைக்கிம் உக்கோந்துட்டு இருந்தியா? என்னா ஒரு ஏத்தமிருக்கணும் உனக்கு?” தாங்குக் கோலால் இவன் மண்டையில் திடீரென ஒன்று வைக்கவும்தான் முருகன் மிரண்டு போய் ஊளையிட்டபடி வாசலுக்கு ஓடினான். இவன் எழுந்து ஓடின வேகத்தில் அவன் தடுமாறிக் கீழே விழுந்தான்.

“இதே! அந்தப்பையனை ஏம் போட்டு அடிக்கே? அது என்னா பண்டுச்சு உன்னை?” என்று சரஸா ஓடி வந்து வெள்ளையனைத் தூக்கிவிட முயற்சித்தாள்.

“நிக்காதடா எங்கண்ணு முன்னாடி எருமெமேக்கி! வெளையாடற பசக கிட்ட ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்க இவிங்க.. எசமாங்க!” என்றான் வாசலில் ஊளையிட்டபடி நின்றிருந்த முருகனைப்பார்த்து.

“ஆமா! நீ கஞ்சி காச்சுறதுக்கு நானு காக்கா முடுக்கணுமா? நீயி வெச்ச ஆளுக்காரன் பாரு நானு? ஆளைப்பாரு சோளக்காட்டுல!” என்றான் அழுகையினூடே முருகன்.

000