மிக அதிகமான பணிச்சுமை, சிரிக்கவே மறந்த, சிரிக்கவே முடியாத ஊழியர்கள், வேலையைத் தவிர வேறு எதையுமே நினைக்க முடியாத ஊழியர்கள் இருக்கும் ஒரே துறை அஞ்சல் துறைதான்.  அங்கு எவருக்குமே பெயர் கிடையாது. பி1, ஏ2, ஈ3 என்றுதான் எழுத்தர்களை அழைப்பார்கள். தபால்காரர்களை ஒன் பீட், டூ பீட், த்ரீ பீட் என்று அவர்கள் தபால் பட்டுவாடா செய்யும் பீட்டுகளின் எண்ணால் அழைப்பார்கள். அப்படியான துறையிலும்,  நினைத்தே பார்க்க முடியாதபடிக்கு வித்தியாசமாக வாசிப்பும், எழுத்துமாக இருந்தவர்கள் எனக்குத் தெரிந்து கவிஞர். நா.விச்வநாதன், தோழர். ச.தமிழ்ச்செல்வன், தோழர்.வேல.ராமமூர்த்தி. முன்னவர் பணிஓய்வு பெற்றுவிட, மற்ற இருவரும் ஒரு கட்டத்தில் வேலையை உதறிவிட்டு வெளியேறிவிட, ஒற்றைப் படைப்பாளி கூட இல்லாத ஒரே அரசுத் துறை என்ற பெருமையோடு இயங்குகிறது அஞ்சல்துறை ! அந்தத் துறையைச் சேர்ந்த வின்சென்ட் வைகோஃப் தபால்காரராக தனது அனுபவங்களைப் பதிவு செய்திருக்கும்  Beware of Cat and other encounters of a letter carrier என்ற நூலைப் பார்த்ததும் இயல்பாகவே ஆசையாக இருந்தது. சின்ன புத்தகம்தான் . ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.  எல்லா வேலைகளிலும் இனிய அனுபவங்கள் உண்டு, புதுமைகள் உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை நிறுவிய புத்தகம். வின்சென்ட்டின் அனுபவங்கள் சில நம்மூர் தபால்காரர்களின் அனுபவங்கள். சில அமெரிக்காவிற்கே உரிய அனுபவங்கள். மொத்தத்தில் நல்ல அனுபவப் பகிர்வு.

அமெரிக்காவில் தபால்காரர் போஸ்ட்மேன் அல்ல. லெட்டர் கேரியர். நம்மூர் போஸ்ட்மேன் போல் முன்பு சைக்கிளில், இப்போது இருசக்கர வாகனத்தில் வருவதில்லை. காலம் காலமாக அவர்களுக்கு ஜீப் வழங்கப்பட்டிருக்கிறது. கடினமான உழைப்பைக் கோரும் வேலை.  வின்சென்ட் இந்தப் புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட புதிதாக 5 இளைஞர்கள் பணியில் சேர்கிறார்கள்.  90 நாட்கள் தகுதிகாண் காலம் முடிவதற்குள்ளாகவே மூவர் முடியவில்லை என்று ஓடிவிடுகிறார்கள். இருவர் விரைவாகப் பணிசெய்யவில்லை என்று நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறது.  பருவநிலை எப்படி இருந்தாலும், தபால்கள் அனைத்தையும் தந்தே ஆகவேண்டும் என்றால் சும்மாவா? அதுவும் வின்சென்ட் வேலை பார்க்கும் தென் மினியாபொலிஸில் கடுமையாகப் பனிப் பொழிவு இருக்கும். ஆண்டில் பெரும்பகுதி மைனஸ் இருபத்தைந்து டிகிரி குளிர்.  சமயங்களில் தெருக்களில் மூன்றடி உயரத்திற்கும் மேலாகப் பனி படிந்திருக்கும். அப்போது துணைக்கு மற்றொரு தபால்காரரை அனுப்புவார்கள். மாற்றி மாற்றி ஜீப் ஓட்டிக்கொண்டும், பனியை அகற்றி, ஜீப்பைத் தள்ளிக் கொண்டும் தபாலைத் தந்துவிட்டு வரவேண்டும்.

இங்கு அஞ்சல் அலுவலகம் பக்கமே போகாமல், நாம் எல்லோருமே கிட்டத்தட்ட கொரியருக்கு மாறிவிட்டோம். அவர்களும் தபால் தொழிலை விட்டுவிட்டு, கங்கா ஜலம் விற்க ஆரம்பித்து விட்டார்கள்.  அமெரிக்காவில் அப்படியல்ல. இன்னும் மக்கள் அரசு அஞ்சல் துறையைத்தான் பயன்படுத்துகிறார்கள். விளம்பரங்கள், புத்தகங்கள், தனிப்பட்ட கடிதங்கள் என்று ஒவ்வொரு வீட்டிற்கும் தினமும் பத்து தபாலாவது வருகிறது. இங்குள்ளது போல் மெயில் வேனில் , ரயிலில் தபாலை அனுப்புவதில்லை. இதற்காகவே தனி விமானங்கள் பறக்கின்றன. திங்கட்கிழமை நம்மூர் போஸ்டாபீஸ் போலவே இரு மடங்கு தபால்கள் குவிந்து கிடக்கின்றன. மற்றொரு வியப்பான விஷயம், இன்ன பொருள்தான் என்றில்லாமல், கண்டதையும் தபாலில் அனுப்புகிறார்கள் அமெரிக்கர்கள்.  இளநீரைத் தபாலில் அனுப்புகிறார்கள்.  எந்த பேக்கிங்கும் இல்லாமல், அப்படியே இளநீரின் முதுகில் மார்க்கர் பேனாவால், அனுப்புநர் பெறுநர் முகவரிகளை எழுதி, கிடைத்த இடத்தில் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புகிறார்கள். வின்சென்ட் போன்ற கடமை வீரர்கள் அதை உடைத்துக் குடித்து விடாமல் உரியவரிடம் பத்திரமாகச் சேர்க்கிறார்கள். இளநீர் ஹவாய் தீவிலிருந்து தென் மினியாபொலிஸிற்குப் பத்திரமாக வந்து சேர்கிறது! ஒரு முறை ஒரு அட்டை டப்பா நிறைய புறாக்கள் அனுப்பப்படுகின்றன.  புறாக்களின் சுவாசத்திற்காக எல்லாப் பக்கங்களிலும் சின்னச் சின்னதாய் ஓட்டைகள். போதைப்பொருளைத் தபாலில் அனுப்புவோரும் உண்டு. ஒரு குறிப்பிட்ட பார்சலில் போதைப் பொருள் இருப்பதாக விமான நிலையத்தின் மோப்ப நாய் சந்தேகப்பட, அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு போலீசார், ‘நம்ம ராமு என்னவோ சொல்கிறான்‘ என்று உஷாராகிறார்கள். ஒரு போலீஸ் அதிகாரி நம் வின்சென்ட்டுடன் அந்த பார்சல் பட்டுவாடாவிற்கு வருகிறார்.  குறிப்பிட்ட வீடு வந்ததும், வின்சென்ட்டிற்குப் பதிலாக அவர் சார் போஸ்ட் என்று அழைக்கிறார். முகவரிதாரர் பார்சலை வாங்க வெளியே வந்ததும் மறைந்திருந்த அவரது சகாக்களோடு சேர்ந்து வளைத்துப் பிடிக்கிறார். வின்சென்ட்டின் வழக்கமான பணியில், மாறுதலாக ஒரு சாகச தினம்.

அமெரிக்காவில் இன்றும் வெளிநாடுகளுக்குச் செல்வோர் அங்கிருந்து தம் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு புகைப்படங்கள் போட்ட வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் இருக்கிறது. தினமும் ஏராளமாக இப்படி அட்டைகள் வரும்.  கடற்கரைகளில் அரைகுறை ஆடையில் இருக்கும் பெண்களின் படங்கள் போட்ட வாழ்த்து அட்டைகளைத்தான் நிறைய அனுப்புவார்கள். வின்சென்ட் போன்ற தபால்காரர்கள் இந்த மாதிரி அட்டைகளை மட்டும் பார்த்து ரசிப்பதுண்டு. எங்கோ ஒரு தீவிற்கு விடுமுறைக்குச் சென்றிருந்து, வின்சென்டின் பகுதியில் இருக்கும் ஒரு கவர்ச்சிக் கிழவி இது போன்ற அட்டை ஒன்றைத் தன் பக்கத்து வீட்டின் மற்றொரு கவர்ச்சிக் கிழவிக்கு  அனுப்புகிறாள். தன் சிநேகிதியின் பெயர் போட்டு, அன்புடன் என்று கையெழுத்திட்டுள்ள அந்தக் குறும்புக்காரக் கிழவி, பின்குறிப்பு ஒன்றும் எழுதியிருக்கிறாள். இந்தப் படத்தை பார்த்து ரசித்து விட்டு டெலிவரி செய்யப் போகும் வின்சென்ட்டிற்கும் என் அன்பு முத்தம் என்று எழுதியிருக்கிறது.  வின்சென்ட் வெட்கத்தோடு அதை டெலிவரி செய்கிறார். ஊர் திரும்பிய கிழவி வின்சென்ட்டைப் பார்க்கும் போது “படம் எப்படி?“ என்கிறாள். திரும்பவும் வெட்கம்.

வண்ணதாசனின் கூறல் கதையில் நாவிதரிடம் அன்பாகப் பேசும் தாத்தா வருவாரே, அது போல அமெரிக்க தாத்தா, பாட்டிகள் போஸ்ட்மேனிடம் அன்பாகப் பேசுகிறார்கள். அவர்களிடம் பேசும் ஒரே ஜீவன் தபால்காரர் மட்டுமே.  “நான் வளர்த்த கிளி ஒன்று பறந்து போய்விட்டது. விசில் அடித்தால் பறந்து வந்து தோளில் உட்கார்ந்து விடும். எங்காவது மரங்களில் கிளிகளைப் பார்த்தால் விசில் அடி. என் கிளி உன்னிடம் வந்தால், அதை என்னிடம் ஒப்படை “, என்று தினமும் ஒரு கிழவர் சொல்வார். வின்சென்ட்டும் மரங்கள் அடர்ந்த பகுதிகளில் செல்லும் போதெல்லாம் விசில் அடித்தபடியே செல்வார். ஒரு கிளியும் வந்து தோளில் உட்காராது. ஒரு நாள் கிழவரின் மனைவிக் கிழவி வீட்டில் இருக்க, வின்சென்ட் அவளிடம் தான் கிழவரின் கிளியைத் தேடிக் கொண்டே இருப்பதாகவும், என்றேனும் ஒருநாள் கண்டுபிடித்துவிடலாம் என்று நம்புவதாகவும் சொல்ல, கிழவி “வேண்டாம்ப்பா, அது பறந்து போய் இருபத்தி அஞ்சு வருஷம் ஆச்சு“ என்பாள்.  மற்றொரு தனிமைக் கிழவர் மரத்தின் கிளைகளை வெட்டிவிடலாம் என்று மரத்தில் ஏறிவிட்டு, இறங்கத் தெரியாமல், வின்சென்ட் வரும் வரை காத்திருப்பார். இரண்டு மணி நேரம் கழித்து வின்சென்ட் வரும்போது மரத்திலிருந்து தன்னை இறக்கி விடுமாறு குரல் தருவார்.

தபால்காரர் – நாய்கள் உறவு பற்றிய ஜோக்குகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. அவை உண்மையும் கூட. வின்சென்ட்டின் ஏரியா முழுவதும் நாய்கள். எல்லா நாய்களையும் அவருக்குத் தெரியும். எல்லா நாய்களுக்கும் அவரைத் தெரியும். பெரும்பாலானவை ‘நம்ம ஆளுதான்‘ என்று வாலாட்டும். ”எனக்கு எதுவும் தபால் இல்லையா?” என்று  இங்கிலீஷில் கேட்காதது மட்டுமே குறை. இன்னும் சில ‘என்றேனும் ஒரு நாள் நீ என்னிடம் மாட்டத்தான் போகிறாய்‘  என்ற முகபாவனையோடு காத்திருக்கும்.  ஒரு வீட்டின் கதவில் ஒரு முரட்டு டாபர்மேனின் படம் போட்டு, அதன் கீழ் “நான் நினைத்தால், இந்த காம்பௌண்ட் சுவரை, கதவை, 1.3 விநாடியில் தாண்டி விடுவேன். உன்னால், அதற்குள் ஓடிப்போய்விட முடியுமா?“  என்ற வாசகத்தோடு, ஒரு பெரிய எச்சரிக்கைப் பலகை இருக்கும். வின்சென்ட்டின் தபால்பையில் எப்போதும் நாய் பிஸ்கெட்டுகள் இருக்கும்.  சில முரட்டு தாதா நாய்களின் ஏரியா வழியே செல்லவேண்டும் என்றால், மாமூலாக அந்த பிஸ்கெட்டைப் போட்டுவிட்டுத் தான் போக முடியும். அது போக, நாய்களை மயக்கமுறச் செய்யும் ஸ்ப்ரேயும் இருக்கும். பணிக்காலத்தில் ஒரே ஒரு முறை அதைப் பயன்படுத்தும் ஆபத்தும் ஏற்படுகிறது. நாய், பூனை என்று நாம் சிறுவயதிலிருந்து பார்த்த,  வீட்டு விலங்குகள் என்றால் பரவாயில்லை.  வெள்ளைக்காரர்கள் நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத பிராணிகளை எல்லாம் வளர்க்கக் கூடியவர்கள் என்பதை நாம்  டிஸ்கவரி சேனல் வழியாக அறிவோமல்லவா? ஒரு வீட்டில் ஒரு பதிவுத் தபாலைத் தந்து கையெழுத்து வாங்க வேண்டியதாகிறது. “சாரா மேடம், ஒரு பதிவுத் தபால்“ என்று குரல் தருகிறார்.  கதவைத் திறக்கும் சாராவின்  இரு தோள்களிலிருந்தும்  திருப்பதி பெருமாளுக்கு சாத்திய மாலை போல்  பத்தடி நீள மலைப்பாம்பு தொங்குகிறது. அது தபாலை என்னிடம்தான் தரவேண்டும் என்று அடம் பிடிக்கிறது.  “சும்மா தொட்டுப் பாருங்க, அவனுக்கு விஷம் எல்லாம் கிடையாது“ என்கிறாள் சாரா. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, கையெழுத்து வாங்கிக் கொண்டு, தபாலைத் தருகிறார். வெளியே வரத் திரும்பும் போது, “இன்று வெயில் சற்று இதமாக இருக்கிறதே, தம்பியை வராண்டாவில் சற்று வாக்கிங் செய்ய விடலாம் போலிருக்கிறதே“ என்று பாம்பைத் தோளிலிருந்து இறக்கிவிடப் போகிறாள் சாரா. “அம்மா, தாயே, நான் அடுத்த தெருவிற்குப் போனதற்குப் பிறகு, உன் தம்பியை வாக்கிங் அனுப்பு“ என்று சிட்டாகப் பறக்கிறார் வின்சென்ட்.  தினமும், வேலைக்குச் செல்லும்போது அந்த வீட்டுக்குப் பதிவுத் தபால் எதுவும் வராமல் இருக்க வேண்டுமே என்று ஆண்டவரைத் துதித்துக் கொண்டே போகிறார் அவர்.

ஒரு வீட்டின் மனிதர்களைப் பற்றி அறிய அந்த வீட்டிற்கு வரும் தபால்களே போதும் என்கிறார் வின்சென்ட்.  வில்லங்கம் வீராச்சாமிகள் வீட்டிற்கு எப்போது பார்த்தாலும் வக்கீல் நோட்டீஸ்களும், நீதிமன்ற சம்மன்களும் வந்துகொண்டே இருக்கும். எம் போன்ற எழுத்தாளர் பைரவன்களுக்கு புத்தகங்களும், சிறு பத்திரிகைகளும் வந்துகொண்டே இருக்கும். வியட்நாம் போர், ஆப்கன் போர், ஈராக் போர் என்று போர் முனைகளிலிருந்து கடிதங்கள் வந்தால் அவையெல்லாம் ராணுவக் குடும்பங்கள். இன்னும் முதியோர் பென்ஷன், ஆதரவற்றோர் பென்ஷன் பெறும் குடும்பங்கள் என்று ஒவ்வொரு தபாலும் அந்தக் குடும்பத்தின் கதையை உணர்த்தும். பாக்கிக் கதையை அந்தந்தக் குடும்பத்தினரே ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்வார்கள். கிறிஸ்துமஸ் சமயங்களில் வின்சென்ட் சாண்டா கிளாஸ் தொப்பியும், பொய்த்தாடியும் அணிந்து தபால் பட்டுவாடா செய்வார். அப்போது எல்லாக் குடும்பங்களின் சந்தோஷ, சோகக் கதையும் தெரியும்.  கிறிஸ்துமஸ் பலகாரம் தருவது, பையன் கல்யாணத்திற்குப் பத்திரிகை தருவது,  “சிகாகோவிலிருந்து என் சித்தப்பா ஒருத்தரு அடிக்கடி வருவாருல்ல, அவர் போன வாரம் தவறிப் போய்ட்டாரு, ஹார்ட் அட்டாக்“ என்று தகவல் சொல்வது என்று வின்சென்ட் தன் பகுதி மக்களின் குடும்ப உறுப்பினராகவே மாறிவிட்ட அந்த நீண்ட அனுபவப் பகிர்வுதான் இந்தப் புத்தகம்.

ஒரு காலத்தில் இங்கும் அப்படித்தானே இருந்தது. என் சிறுவயதில் எங்கள் பகுதிக்கு இருந்த போஸ்ட்மேனை, அவர் அய்யரல்லர் என்றாலும் கூட,  ஏனோ ‘அய்யர் போஸ்ட்மேன்‘ என்பார்கள். அவரது லீவ் நாளில் அவரது தம்பி சுப்ரமணியம் வருவார். அய்யர் போஸ்ட்மேன் எங்கள் சேதுபதி பள்ளியில் ரிசல்ட் போட்ட அன்று பிரமோட்டட் கார்டு கொண்டு வரும் போது, தெருவின் மொத்த சிறுவர்களும் அவர் பின்னால் ஓடுவோம்.  தபாலைப் பிரிக்காமலேயே உள்ளே இருப்பதை உற்றறியும் ஏழாம் அறிவு பெற்றவர் அவர்.  1986 மார்ச் மாதத்தின் ஒரு காலை வேளையில் நான் தாமதமாக காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, “அம்மா, தம்பிக்கு எல்ஐசில வேல கெடச்சிருச்சு“ என்று சொல்லி, என் பணி நியமனக் கடிதத்தைத் தந்தவர்.  பின்னாளில் ஒரு நாள் என் முதல் கதை செம்மலரில் வந்து,  அதற்கான சன்மானமாக 100 ரூபாய் மணியார்டர் வந்தபோது, ( இன்றும் செம்மலர் தன் சக்திக்கு மீறி சன்மானம் தருகிறது, அதையும் மணியார்டர் செய்கிறது என்பது வியப்பான விஷயம் !) என்னை “தோழர், செம்மலர்லேர்ந்து சன்மானம் வந்திருக்கு“ என்று அழைத்துத் தந்தார். தம்பி தோழரானதில் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி….  கால வெள்ளத்தில், இன்று எல்லாம் கொரியர் மயமாகிவிட்டது. போன் செய்து “உங்க வீட்ட கண்டுபிடிக்க முடியல, மெயின் ரோட்டுக்கு வந்து நில்லுங்க“ என்று சொல்லித்தான் மாதாமாதம் உயிர்மையைத் தருகிறார் எஸ்டி கொரியர்காரர். மாதா மாதம் ஒரு புது பையன்.. அல்லது பையர்…  எல்லாம் உலக மயத்தின் கோரம் !

ஆனால், உலகமயத்தை நமக்கு போதித்த சர்வதேசப் போலீஸ்காரன் இப்போதும் வின்சென்ட் போன்றோரை வைத்துத்தான் தன் அஞ்சல் துறையை நடத்துகிறான் என்பது பெரும் முரண்தான் என்றாலும்,  அதை அறிய சந்தோஷமாகத்தான் இருக்கிறது !

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Beware Of Cat And Other Encounters Of A Letter Carrier – Vincent Wyckoff.