தமிழக பா.ஜ.க. அண்ணாமலையின் தலைமையில் வேகமாக வளர்ந்து வருகிறது என்ற கட்டுக்கதையை ஊடகங்களில் பலரும் பரப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தக் கட்டுக்கதை ஒரு மாயத்தோற்றம் மட்டுமே. தமிழக பா.ஜ.க. என்பது உதிரி லும்பன்களின் கூட்டமைப்பு மட்டுமே என்பதை அவர்களுடைய தொடர் செயல்பாடுகள் நிரூபித்துவந்திருக்கின்றன. ஊடகங்களில் கூச்சமே இல்லாமல் பொய் சொல்வது, ஆதாரமற்ற புகார்களை அள்ளி வீசுவது, எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாமல் அவதூறுகளைப் பரப்புவது, சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள் மூலம் மாற்றுச் சிந்தனை கொண்டவர்களை ஆபாசமாகத் தாக்குவது என்பன போன்றவைத்தான் தமிழக பா.ஜ.க.தலைவர் மற்றும் அவரது காலாட் படைகளின் போர் முறையாக இருந்திருக்கிறது.
கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அண்ணாமலை கூறிய கருத்துகள் கடும் கண்டனங்களை சந்தித்தன. பாதுகாப்புத் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினையில் அண்ணாமலையின் பொறுப்பற்ற கருத்துகள் அவரது கீழ்மையான அரசியல் நோக்கங்களை வெளிப்படுத்தின. இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்ப முயன்ற போது அவர்களை குரங்கு என்று சாடியது ஊடகவியலாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், சிறு முணுமுணுப்புகளுக்கு மேல் பத்திரிகையாளர்கள் அண்ணாமலைக்கு எந்த அழுத்தமும் கொடுக்க முடியவில்லை. காரணம், இன்று தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் பா.ஜ.க. வின் அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டே செயல்படுகின்றன அல்லது அவை பா.ஜ.க.வால் மறைமுகமாக நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் புற்றீசல் போல முளைத்திருக்கும் நூற்றுக்கணக்கான யூ ட்யூப் சேனல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தவொன்று. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கான ஒரு ஊடகவெளியை முழுமையாக கட்டமைப்பதற்காக பா.ஜ.க.பெரும் முதலீட்டைத் தமிழகத்தில் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் பா.ஜ.க.வின் குரல்கள் ஒலித்தவண்ணம் இருக்கின்றன. ஆனால், இதையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு கட்சி அரசியல் களத்தில் வெல்ல முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி.
பா.ஜ.க. வின் கூட்டங்களுக்குப் பணம் கொடுத்து ஆட்களை வரவைப்பதும், ஊடகங்களில் பெரும் கூச்சலிட்டும்தான் ஒரு வளரும் கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அத்தோடு காசி தமிழ்ச் சங்கமம் போன்ற கேளிக்கூத்தான நிகழ்வுகளை நடத்தி தமிழ்நாட்டில் தமிழால் வளர்ந்துவிடலாம் என்று கோட்டைக் கட்டுகிறார்கள். தமிழுணர்வு என்பது பல்வேறு ஆதிக்கங்களுக்கெதிராக தமிழகம் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தில் அவர்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த ஒன்று. அந்த உணர்வை எப்போதும் தமிழர் நலனுக்கு எதிராகவே அரசியல் செய்திருக்கும் பா.ஜ.க. திடீரென ஒரு ஆபரணம் போல அணிந்துகொண்டு அரசியல் செய்யலாம் என நினைப்பது வேடிக்கையானது. அவர்கள் தமிழ் உணர்வையும் புரிந்துகொள்ளவில்லை, தமிழ் நிலத்தையும் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் உணர்வென்பது சமூக நீதியோடும் மாநில சுயாட்சியோடும் மதசார்பின்மையோடும் பின்னிப்பிணைந்தது. பா.ஜ.க. இதற்கெல்லாம் எதிரானது.
ஒருபுறம் அரசியல் பண்பாட்டு வெளியில் பல்வேறு வக்கிரமான கோமாளித்தனங்களை தமிழக பா.ஜ.க. அரங்கேற்றிக் கொண்டிருக்கிறதென்றால், அவர்களுடைய உட்கட்சிப் பிரச்சினைகளை அவர்கள் கையாளுகிற விதம் குரூரமானது மட்டுமல்ல, இதுவரை இந்திய அரசியலில் எங்கும் நடந்திராத கேளிக்கூத்தாகும். சமீபத்தில் தமிழக பா.ஜ.க.வில் நடந்துகொண்டிருக்கும் இந்த அரசியல் கேளிக்கைகள் எந்த ஒழுங்கும், அரசியல் நெறிகளும் அற்ற பிளாக்மெயிலர்களின் கூடாரமாக அந்தக் கட்சி உள்ளது என்பதைப் பச்சையாக வெளிப்படுத்தியிருக்கிறது.
அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராகப் பதவியேற்றதிலிருந்தே அதற்குமுன் முக்கிய பொறுப்பில் இருந்த பலரையும் ஓரம்கட்டும் முயற்சியில் இறங்கினார். பொன்.ராதாகிருஷ்ணன், வானதி போன்றவர்கள் அண்ணாமலையின் ஏதேச்சதிகாரத்தை சகிக்க முடியாமல் மௌனமாகி மனம் புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம், அண்ணாமலைக்கும் பா.ஜ.க.வில் நீண்டகாலமாக செல்வாக்கு செலுத்திவந்திருக்கும் பிராமணர் லாபிக்கும் இடையே முரண்களும், மோதல்களும் எழத் தொடங்கின. இது அண்ணாமலையின் தனிப்பட்ட ஒரு முடிவு என்று தோன்றவில்லை, இதற்குப் பின்னால் தேசிய பா.ஜ.க. தலைமையின் திட்டம் ஒன்றும் இருக்கிறது.
நீண்ட காலமாகவே பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இல் உள்ள பிராமணர்களால் வழிநடத்தப்படும் கட்சியாகவே இருந்தது. மண்டல் கமிஷனுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் அதைத்தான் காட்டின. மண்டலால் எழுந்த அலைகளைத் திசைமாற்ற அத்வானி ரத யாத்திரைப் போனார். ஆனால், பிராமண ஆதரவு நிலைப்பாட்டை மட்டும் வைத்துகொண்டு இந்தியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பதைப் புரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தனது உத்தியை மற்றிக்கொண்டது. நாடு முழுக்க பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், பழங்குடியினர் வாக்கு வங்கிகளைத் தங்களை நோக்கி ஈர்ப்பதற்காக பல்வேறு உத்திகளைக் கையாளத் தொடங்கியது. வடகிழக்கு மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராகப் பழங்குடியினர் தூண்டிவிடப்பட்டனர். வேறுசில இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும், தலித்துகளுக்கும் இடையே மோதல்கள் உருவாக்கப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் வாக்குகளைப் பிளந்து சந்தர்ப்பவாத தலைமைகளைத் தம் பக்கம் ஈர்த்து, பா.ஜ.க. ஒரு உயர் சாதியினரின் கட்சி என்ற முகத்தை மாற்றியமைத்தனர். பா.ஜ.க. வின் உயர் சாதியினர் நலன் என்ற அடிப்படை சித்தாந்தம் மாறாதபோதும் அதன் அரசியல் உத்திகள் மாறின. அந்த செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மோடியும் அமித்ஷாவும் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களுக்குக் கொண்டு வரப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல் திட்டத்தின் வழியே பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடியின சமூகத்தின் ஒரு பகுதியினர் பா.ஜ.க. விடம் இருந்து தங்கள் உரிமைகளைப் பெறாமலேயே சாதி மற்றும் மதவாத அடிப்படையிலேயே இந்த அரசியலுக்குப் பலியாகினர்.
வட மாநிலங்களில் பா.ஜ.க.வின் இந்த செயல் திட்டம் சுலபமாக வெற்றி பெற்றது போல தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் வெற்றிபெற முடியவில்லை. காரணம், தென்னிந்தியாவின் கல்வி வளர்ச்சியும், சமூக நீதி அரசியலும் பெரும் தடைக்கல்லாக இருந்தன. முக்கியமாக, தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் வெகுகாலமாக மிகுந்த வலிமையுடன் இருப்பதனால், பிராமணர்களின் கட்சியாக இங்கு அடையாளம் பெற்றிருக்கும் பா.ஜ.க.வினால் வளர முடியவேயில்லை. தமிழிசை சௌந்தரராஜன் போன்றவர்கள் தலைவர்களாக வந்தபோதிலும், இங்குள்ள உயர்சாதி லாபிதான் பா.ஜ.க.வின் முகமாக இருந்தது. இந்த லாபி வலுவாக இருக்கும்வரை தமிழகத்தில் பா.ஜ.க. வளரவே முடியாது என்பதை டெல்லியில் இருக்கும் பா.ஜ.க. தலைமை புரிந்துகொண்ட பிறகுதான் எந்தக் குறுக்குவழிக்கும் தயங்காத அண்ணாமலை, தமிழக பா.ஜ.க. தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவரப்படுகிறார்.
கே.டி.ராகவனை ஒரு பாலியல் வீடியோவைப் பயன்படுத்தி எப்படி வீழ்த்தினார்கள் என்பதைப் பார்த்தோம். பா.ஜ.க.வைச் சேர்ந்த மதன் ரவிசந்திரன் என்ற பிளாக்மெயிலரே இதனைச் செய்தார். அவர் எல்லாம் அண்ணாமலைக்குத் தெரியும் என்றார். இது தொடர்பான ஒரு விசாரணைக் கமிட்டியையும் ஒப்புக்கு அண்ணாமலை அமைத்தார். அது என்னவாயிற்று என்று யாருக்குமே தெரியாது. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் அண்ணாமலையால் படிப்படியாக ஓரம் கட்டப்பட்டனர். காயத்ரி ரகுராம் பா.ஜ.க.வின் வெளிமாநில மற்றும் அயலக தமிழ் வளர்ச்சி அணிக்குப் பொறுப்பாளராக இருந்தும், காசி தமிழ்ச் சங்கம் விழாவில் கலந்துகொள்ள அண்ணாமலை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில்தான் திருச்சி சூர்யா என்ற பா.ஜ.க. ஊடக அடியாள் ஒருவர் பா.ஜ.கவின் சிறுபான்மைப்பிரிவுப் பொறுப்பாளர் டெய்சி என்பவரை மிக ஆபாசமாகத் தொலைபேசியில் திட்டும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்காக அந்த ஆபாசப் பேச்சு நிகழ்ந்தது என யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த ஆடியோவை இருவரில் ஒருவர் தான் பதிவு செய்திருக்கவேண்டும். அது காயத்ரி ரகுராமின் கைக்குச் சென்று அவர் அதை வெளியிட்டுக் கண்டனம் தெரிவிக்கிறார். அதற்குப் பிறகு அது வைரலாகிறது. உடனே, காயத்ரி ரகுராமைக் கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார் என்று அண்ணாமலை ஆறு மாதத்திற்கு கட்சியைவிட்டு இடை நீக்கம் செய்கிறார். ஆபாச பேச்சு பேசிய திருச்சி சூர்யாவுக்கு நோட்டீஸ் மட்டும் கொடுக்கிறார். இதற்குள் தமிழக பா.ஜ.க.வின் பொறுப்பாளராக இருக்கும் கேசவ விநாயகத்தின் பெயர் அந்த ஆடியோவில் பாலியல் முறைகேடு சார்ந்து இழுக்கப்படுகிறது. இதற்கிடையில் ஒரு பிரபல நாளிதல் ‘அண்ணாமலை மீது ஐந்து பெண்களை வைத்துப் பாலியல் குற்றச்சாட்டை சுமத்த சதி நடக்கிறதென்று முன் ஜாமீன் வாங்குவது போல ஒரு செய்தியை வெளியிடுகிறது.’ ஆபாச ஆடியோ வெளிவந்த இரண்டு நாளில் சூர்யா, டெய்சி இருவருமே ‘நாங்கள் அக்கா, தம்பியைப் போன்றவர்கள்; எங்களுக்குள் பேசி சமரசம் செய்து கொண்டோம், என கூட்டாகப் பேட்டி கொடுக்கிறார்கள்.’ என்ன நடக்கிறதென யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால், ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் மூலம் ஒரு மிகப்பெரிய பிளாக்மெயில் அரசியல் பா.ஜ.க விற்குள் நடப்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது. சூர்யா-டெய்சி ஆடியோ விவகாரத்தில் தனிப்பட்ட உரையாடல் பதிவு செய்யப்பட்டு, காயத்ரி ரகுராமிற்கு அனுப்பப்படுகிறது. அண்ணாமலைக்கு இதை வைத்து நெருக்கடி கொடுக்கலாம் என்று காயத்ரி ரகுராம் நினைத்தார். ஆனால், அண்ணாமலையோ இதையே பயன்படுத்தி காயத்ரி ரகுராமை வெளியே அனுப்பிவிட்டார். பிரச்சினை பெரிதானதும் திருச்சி சூர்யாவையும் ஆறுமாதத்திற்கு இடை நீக்கம் செய்கிறார்.
உண்மையில் இதெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடா அல்லது ஒரு மாபியா கும்பலுக்குள் நடக்கும் கேங் வாரா என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், இந்தப் போராட்டத்தில் அமித்ஷாவின் ஆதரவு பெற்ற அண்ணாமலையின் தரப்புதான் வெல்லும் என்று தோன்றுகிறது. எந்தத் தரப்பு வென்றாலும் தமிழ் மக்களின் இதயங்களை இவர்கள் வெல்வது கடினம்.