இன்று மூன்று சிநேகிதிகள்
தாங்கள் காதல் வயப்பட்டிருப்பதைச் சொன்னார்கள்
இது ஒரு வினோதமான
நாளாக இருக்கிறது
எனது மூன்று
நெருங்கிய சிநேகிதிகள்
இன்று காலையிலிருந்து
ஒருவர் பின் ஒருவராக
தாங்கள் ஒரு காதலில்
ஈடுபட்டிருப்பதைச் சொன்னார்கள்
மூன்று பேருமே
‘இதை உன்னிடம்தான்
முதலில் சொல்கிறேன்’ என்றார்கள்
ஏன் அதை முதலில்
என்னிடம் சொல்கிறார்கள்
என்றெனக்குத் தெரியவில்லை
அது ஒரு கருணையற்ற செயலாக இருந்தது
மூன்றுபேருமே
தங்கள் காதலர்கள்
என்னைப்போல கலாரசனை
உள்ளவர்கள் அல்ல என்றும்
ஆனால் மிகுந்த அன்புகொண்டவர்கள்
என்றும் தெரிவித்தார்கள்
நான் புன்னகையுடன்
தலையை ஆட்டிக்கொண்டேன்
மூன்று பேருமே
“இந்தக் காதல் பற்றி
இன்னும் குழப்பமாக இருக்கிறது
நான் அவசரப்படுகிறேனோ என
பயமாக இருக்கிறது” என்றார்கள்
அவர்கள் இந்தக் காதலில்
மகிழ்ந்திருக்கிறார்கள் என்பதை
நான் அறிந்துகொள்ளக்கூடாது என்று
அதைச் சொல்கிறார்கள் என்பதை
என்னால் புரிந்துகொள்ள முடிந்தது
நான் அப்படியெல்லாம்
மனமுடைந்துபோக மாட்டேன்
மேலும் ஒரே நாளில்
மூன்று முறை மனமுடைவது
நடைமுறையில் சாத்தியமல்ல
மூன்று பேருமே
தங்கள் காதலர்கள் பற்றி
இனிமையான ஒன்றை
என்னிடம் சொல்ல வந்து
பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள்
நான் கொஞ்சம் பொறாமை உள்ளவன்தான்
ஆனால்
எல்லோரிடமும் அல்ல
மூவருமே என்னிடம்
விடை பெற்றுக்கொள்ளும்போது
லேசாக அணைத்துக்கொண்டார்கள்
அது இறுதி விடை போலிருந்தது
பதிலுக்கு நான் அவர்களை
அணைத்துக்கொள்ளவில்லை
ஒரு பதுமையைப்போல
சலனமற்று நின்றிருந்தேன்
மூவருமே இறுதில்
ஒரே வாக்கியத்தைத்தான் சொன்னார்கள்
” நான் ‘ கமிட்’ ஆகிவிட்டேன் என்பதற்காக
என்னைப் புறக்கணித்துவிடாதே
உன் இடம் என் வாழ்வில்
நிரந்தரமானது” என்றார்கள்
நோய்ப் படுக்கையிலிருக்கும்
நோயாளிக்குச் சொல்லும்
ஆறுதல் வார்த்தைகள்போலவே இருந்தன
ஒரே நாளில்
மூன்று சிநேகிதிகள்
தங்கள் புதிய காதல்களைச்
சொல்வதென்பது
கடவுள் என் நன்னடத்தையைக்
கடுமையாகச் சோதிக்கிறார்
என்றெனக்குப் புரிந்தது
“வாழ்த்துகள்” என்றேன்
“அவ்வளவுதானா?” என
மூவருமே
ஏமாற்றத்துடன் கேட்கிறார்கள்
ஒருவேளை
அவர்கள் நான் மனமுடைய வேண்டும் என
விரும்பினார்கள் போலும்
“அவ்வளவுதான்” எனக்கூறிவிட்டு
தெருவில் இறங்கி
இளவெயிலில் அமைதியாகச் சென்றேன்
பல நாட்களுக்குப் பிறகு
மூடுபனி விலகி
எங்கும் வெளிச்சமாக இருந்தது
ஏனோ மிகவும் தனிமையாக இருந்தது
இதுகூட இல்லாவிட்டால்
நான் உயிரோடிருக்கிறேன் என்பதற்கு
அர்த்தமே இல்லை
‘நாளை சந்திக்க வரட்டுமா
எத்தனை மணிக்கு வரட்டும்?’
என்று கேட்டாள்
வரவேண்டிய நேரத்தை
சொன்னதோடு நிறுத்தியிருக்கலாம்
‘எனக்கு உன்னிடம்
எவ்வளவு நேரம் தேவைப்படும்?’
என்று கேட்டுவிட்டேன்
என் வேலைகளின் பிசாசு
என்னை வெவ்வேறு குரல்களில்
பேச வைக்கிறது
மறுமுனையில்
சற்று நேரம் மெளனமாக இருந்தாள்
மனம் வாடிவிட்டாள் போலும்
‘உனக்கு என் மேல் இருப்பது
சின்னஞ் சிறிய அன்புதானே
எவ்வளவு சிறிய அன்போ
அவ்வளவு சிறிய நேரம் போதும்’ என்றாள்
எப்படிச் சொல்வேன் அவளிடம்
என் வாழ்வில் எனக்கிருப்பதே
அவ்வளவு சிறிய நேரம்தான் என்று
உன் பெயரை
அவ்வப்போது
எந்தக் காரணமும் இன்றி
அழைத்துவிட்டு
மெளனமாகி விடுவேன்
‘ஏன் அழைத்தாய்?’
என்று நீ கேட்டால்
என்னிடம் பதில் இல்லை
உன் பெயர் என்பது
ஒரு விசும்பல்
காயம்பட்ட மான் ஒன்றின்
சிறு முனகல்
நீர் வளையங்களை உருவாக்க
நான் என் தனிமையின்
கரையிலிருந்து வீசும்
ஒரு கூழாங்கல்
நல்லதென்று ஒன்றுமில்லை
‘எல்லாம் நல்லதுக்குத்தான்’ என
என் வாழ்வில்
ஒவ்வொன்றும் முடிவுக்கு வரும்போது
இப்படித்தான் சமாதானம் செய்கிறீர்கள்
ஒரு நல்லதும் நடப்பதில்லை
இதோ இந்தக் குளிரில்
நான் தேம்புவதை
என்னால் நிறுத்தவே முடியவில்லை
சொல்லவேண்டும் என்பதில்லை
ஒரே துரோகத்தை
எப்படி மறைப்பது என
யாரும் என்னிடம் தடுமாற வேண்டாம்
அதன் வாசனை எனக்கு
ஏற்கனவே தெரியும்
ஒரு பிரிவை எப்படிச் சொல்வது என
யாரும் தடுமாற வேண்டாம்
அதன் கால்த் தடங்களை
என் கண்கள்
ஏற்கனவே காண்கின்றன
என் இதயத்தில்
குருதி பெருகச் செய்யும்
ஒரு முடிவை என்னிடம்
எப்படித் தெரிவிப்பது என
குழம்ப வேண்டாம்
அவை என் மனத்திரையில்
ஏற்கனவே காட்சியாக விரிந்துவிட்டன
நான் உங்களிடம்
முன்கூட்டியே
பேச்சை நிறுத்திக்கொள்வேன்
பிறகு
நீங்கள் விரும்பினாலும்
தொட முடியாத தூரங்களுக்கு
சென்றுவிடுவேன்
manushyaputhiran@gmail.com