“என் வாட்ச் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது. உலகில் இந்த வகை வாட்ச் 500 மட்டும் தான் உள்ளது. என் உடம்பில் உயிர் உள்ளவரை இந்த வாட்ச் என்னிடம் இருக்கும். நம்முடைய நாட்டிற்காக இந்த வாட்ச்சைக் கட்டியுள்ளேன். ஏனென்றால் நான் தேசியவாதி.”
–பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை
எங்கள் காலத்தில் இந்தியத் தயாரிப்பான “எச். எம். டி.” வாட்ச் அணிவதுதான் தேசபக்தியின் இலக்கணமாகக் கருதப்பட்டது. இது என்னடா, தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை? பிரான்ஸ் கம்பெனி கைக்கடிகாரத்திற்கு எதற்குத் தாமரை முத்திரை குத்துகிறார் அண்ணாமலை? இணையச் சுரங்கத்தில் தகவல்களைத் தோண்டினால்.. ஆஹா.. கிணறு வெட்டப் பாசிச பூதம்!
தனது போர் விமானத் தயாரிப்பின் 50ஆம் ஆண்டின் நிறைவைப் பிரான்ஸ் நிறுவனமான டஸ்ஸால்ட் 2013இல் கொண்டாடியது. அதன் நினைவாக ‘பெல் அண்டு ராஸ்’ என்ற பிரான்ஸ் கடிகார நிறுவனத்துடன் இணைந்து 500 கடிகாரங்களை (லிமிடெட் எடிஷன்) தயாரிக்க அது முடிவு செய்தது. அன்றைய அதன் முதன்மைத் தயாரிப்பான ரஃபேல் விமானத்தின் மூலப் பொருட்களை வாட்ச்சில் பயன்படுத்தப் போவதாக அது அறிவித்தது.
கைக்கடிகாரம் டஸ்ஸால்ட்டின் பொன்விழா நிறைவின் நினைவு மட்டுமே! மற்றபடி ரஃபேல் கழிவுப் பொருளால் தயாரிக்கப்பட்டது அல்ல. ரஃபேல் போர் விமானம் இந்தியாவிற்கு சப்ளை செய்யப்பட்டது பற்றிய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியும் அல்ல.
‘பெல் அண்டு ராஸ் பிஆர் 03-94’ என்று பெயரிடப்பட்ட ரஃபேல் வாட்ச் சதுர வடிவில் 4.2 செ.மீ. நீள-அகலத்தில் உள்ளே ரஃபேல் விமானத்தின் படத்துடன் கருப்பு நிறத்தில் தயாரிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு வாக்கிலேயே பெல் அண்டு ராஸ் என்ற நிறுவனத்தில் விற்பனைக்கு வந்து விட்டது. 2016 வாக்கில் பா. ஜ. தலைவர்களில் சிலருக்கு அன்பளிப்பாகவும் தரப்பட்டு இருக்கலாம். அப்போது அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி மட்டுமே!
அப்படி என்ன “ரஃபேல் வாட்ச்சின் சிறப்பு”
ரஃபேல் விமானத் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட செரமிக்(பீங்கான்) எஃகு பொருட்களைக் கொண்டு கடிகாரத்தின் ‘கேஸ்’ அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் உள்ள “காக்பிட்” (விமானிகள் அறை) போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டது. வாட்ச்சின் மேல் கண்ணாடி சிறப்புப் பூச்சு செய்யப்பட்டுள்ளது. இந்த வகை கண்ணாடி விமான அறையில் முன் பக்கம் பொருத்தப்பட்டு இருக்கும். வழக்கமான கடிகாரங்களைவிடப் பல மடங்கு எடை குறைவு.
வெறும் 500 கைக்கடிகாரங்கள்தான் தயாரிக்கப்படும் என்றும் ஒன்றின் விலை 5200 யூரோ என்றும் கூறப்பட்டது. 20/07/2015இல் பதிவேற்றம் செய்யப்பட்ட https://monochrome-watches.com என்ற வலைதளப் பக்கத்தில் இது பற்றிய தகவல்கள் படிக்கக் கிடக்கின்றன.
இதே ரஃபேல் வாட்ச் பிராண்டை டஸ்ஸால்ட் இணையம் விற்பனையும் (https://www.thestore-dassault-aviation.com) செய்கிறது. விலை 135 யூரோ (ரூ.12,000). ஆனால் அண்ணாமலை கட்டியுள்ள ரஃபேல் லிமிடெட் எடிஷன் வாட்ச்சின் “சிறப்புகள்” எல்லாம் கிடையாது. தனது வாட்ச்சின் விலை 3.5 லட்சம் என்று அண்ணாமலையே சொல்கிறார். 2021 அரவக்குறிச்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அதை அவர் வாங்கி இருந்தால் வேட்பாளரின் சொத்துக் கணக்கில் காட்டப்பட்டு இருக்க வேண்டும்.
ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு நடந்தபோது அவரது கைக்கடிக்காரங்களும் கணக்கில் காட்டப்பட்டன. அவற்றில் பல அவர் நடிப்புத் தொழிலில் இருந்தபோது வாங்கப்பட்டவை. ஆனாலும் அவற்றுக்கும் ஒரு மதிப்புப் போட்டது பெங்களூரூ நீதிமன்றம்.
அண்ணாமலை கூறுகிற ரஃபேல் விமானத்தின் படம் பொறிக்கப்பட்ட லிமிடெட் எடிஷன் கைக்கடிகாரம் (Bell & Ross Men’s Limited Edition Rafale French Fighter Jet Watch BR0394-RAFALE) இப்போது அபூர்வப் பொருள் சேகரிப்பாளர்களுக்குக் கிடைக்கிறது. ஏற்கனவே வாங்கியவர்கள் அதை விற்க விரும்பினால் இணையத்தில் “விலை”குறிப்பிட்டுக் காத்திருப்போர் பட்டியலில் நாம் சேர வேண்டும். எனவே 2015 க்குப் பிறகு அதன் விலை மிக அதிகமாக ஏறி இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ரஃபேல் லிமிடெட் எடிஷன் வாட்சை அண்ணாமலை வாங்கியதாகச் சொல்லும் காலகட்டத்தில் (2021 மே)அவர் ஐபிஎஸ் விருப்ப ஓய்வு பெற்று விட்டார். 8 சூலை, 2021 தான் தமிழக பா. ஜ.க. தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால் டஸ்ஸால்ட் பொன்விழா கொண்டாடியது 2013இல்! ரஃபேல் லிமிடெட் எடிஷன் வெளியிடப்பட்டது 2015.
அதன் பின்னர் அண்ணாமலை தன் பணிக்காலத்தில் வாங்கியிருந்தால் ஐபிஎஸ் நிர்வாக விதிகள் மற்றும் அரசு ஊழியர் நன்னடத்தை விதிகள் கடைப்பிடிக்கப்பட்டனவா என்பது கேள்விக்குறி. அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின்படி கர்நாடக அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். அபூர்வப்பொருள் சேகரிப்பாளர்களிடமிருந்து 2021 மே மாதம் வாங்கியதாக வைத்துக் கொண்டாலும் விலை மிக அதிகமாக இருக்கும். அந்த ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கில் சேர்க்கப்பட்டு உரிய வரிகள் செலுத்தப்பட்டனவா என்பது தெரியவில்லை.
இவ்வளவு விலை உயர்ந்த வாட்ச் அணிந்திருக்கும் அண்ணாமலை அதை “தேசபக்தி” என்று எளிமைப்படுத்த முடியாது. அவர் கூறுவது போல அது ரஃபேல் விமான உதிரி (கழிவு) பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது இல்லை. 2021 மே மாதம் வாங்கப்பட்ட வாட்ச்சா? அல்லது அவர் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியில் இருந்தபோது வாங்கப்பட்டதா என்று முதலில் அவர் தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் அண்ணாமலை கர்நாடகக் காவல்துறை அதிகாரியாக இருந்தபோதே ரஃபேல் வாட்ச் கட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது. அது உண்மை என்றால் அவருக்கு அதை யார் கொடுத்தார்கள்? எதற்காகக் கொடுத்தார்கள்?
அண்ணாமலை அரவக்குறிச்சியில் எம்எல்ஏ வேட்புமனுத் தாக்கலுக்கு முன் வாங்கியிருக்கிறார் அல்லது அன்பளிப்பாகப் பெற்று இருக்கிறார் என்றால் வேட்பாளரின் சொத்துக் கணக்கில் காட்டப்பட்டதா என்ற கேள்வி எழும். ஏன் என்றால் வேட்புமனுவின் பிரமாண வாக்குமூலத்தில் தகவல்களை மறைப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்! எனவே தேர்தல் குற்றமாகப் புகார் தரப்பட்டுத் “தேர்தலில் போட்டியிடத் தடை” கோரலாம்!
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் பிரான்சிடம் இருந்து ரஃபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் ஊழல் நடந்துள்ளதாக அன்றைய எதிர்க்கட்சியான பாஜக குற்றச்சாட்டு கூறியது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் அதே ரஃபேல் விமானங்களை எண்ணிக்கையில் கூடுதலாக வாங்கியது. அதுவும் அப்போது பெரிய அரசியல் சர்ச்சை ஆனது. எனவே ரஃபேல் வாட்ச் எப்படி தேசபக்தியின் அடையாளமாகும்?
பொன் விழா ஆண்டின் நினைவாக உற்பத்தி செய்யப்பட்ட 500 கடிகாரங்களும் பெல் அண்டு ராஸ் கடிகார நிறுவனம் மூலமாக விற்பனைதான் செய்யப்பட்டன. விற்பனைக்கு வந்த 2013-2015 ஆண்டுகளில் 6,200 அமெரிக்க டாலர் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 2015இல் ஒரு டாலரின் இந்திய மதிப்பு 62.97 ரூ. அதனால் அப்போதைய இந்திய மதிப்பு 3 லட்சத்து 90 ஆயிரம். வரிகள் எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் இறக்குமதி வரி உண்டு. அதனால் ரஃபேல் கடிகாரத்தின் அப்போதைய இந்திய மதிப்பு குறைந்தது 5 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும். சில சமயங்களில் மதிப்பீட்டாளர்கள் கடிகாரத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ள பொருட்களின் மதிப்பையும் கணக்கீடு செய்வார்கள்.
ரஃபேல் வாட்ச் தேசபக்தியின் அடையாளம் என்றால் மகாத்மா காந்தி கட்டியிருந்த “இடுப்பு கைக்கடிகாரம்” (Ingersoll ‘Turnip’ pocket watch ) எதன் அடையாளம்? இன்றைக்கும் அவரது நினைவுப் பொருட்களில் ஒரு பகுதியாக அது போற்றப்படுகிறது. அந்த கடிகாரம் பண்டித நேருவால் அவருக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டது. அதன் “செயின்” காணாமல் போய் விட்டது. எனவே ஒரு கயிற்றில் கட்டி இடுப்பு வேட்டிக்கு மேல் அணிந்திருந்தார் மகாத்மா. இந்தியாவில் எனக்குத் தெரிந்து தேசபக்தியின் அடையாளம் அந்த ஒரு கடிகாரம் மட்டும்தான்!
பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் பற்றிக் கேள்வி கேட்க வைத்து அதைப் பற்றிப் பெருமையாகக் கூறியதுதான் பிரச்னையின் பிள்ளையார் சுழி.
இந்த இடத்தில் “நுணல்” பற்றிய பழமொழி உங்களுக்கு நினைவு வந்தால் நான் பொறுப்பு அல்ல.
shyamtv@gmail.com