தம்பிரானுக்கு ஒருவகையில் தூரத்துச் சொந்தம் புவனேஸ்வரி.
தம்பிரான் தான் சுவாமிநாதனிடம் சொல்லியிருந்தார்“புவனேஸ்வரி இங்கே ஊரோடு வந்து விடப் போவதாகவும் பாரதி நகர் மூன்றாவது தெருவில் ஒரு வீட்டை வாங்கி , தம்பிரான் வார்த்தையில் சொன்னால் ‘ரீ மாடல்’ பண்ணிக் கொண்டு இருப்பதாகவும். ”
‘கூடிய சீக்கிரம் வந்திருவா. வந்ததும் தகவல் சொல்லுதேன் சுவாமி’ என்று சொல்லி போனை வைக்கப் போகிறார் என்று நினைக்கும் போது, ‘பென்ஷன் அக்கவுண்ட் எல்லாம் இங்கே டவுn பிராஞ்சுக்கு மாத்தி வந்தாச்சு. நான் லைஃப் சர்ட்டிஃபிகேட் கொடுக்கப் போயிருக்கும் போது தெரிஞ்சுக்கிட்டேன்’ என்று தம்பிரான் மேற்கொண்டு சொன்னார்.
தம்பிரானுக்கு போன் பேசினாலும் சரி, உழவர் சந்தையில் நேரில் பார்க்கும் போது என்றாலும் சரி, முதலில் பேசிக்கொண்டு இருந்ததற்கு எல்லாம் அப்புறம் இப்படி மறுபடி சொல்வதற்கு ஏதாவது இருக்கும். அதுதான் முக்கியமான விஷயமாகக் கூட சுவாமிநாதனுக்குப் படும். ஒருவேளை அந்தக் கடைசி இரண்டு நிமிடப் பேச்சுக்காகத்தான் தம்பிரான் அவ்வளவு நேரம் பேசுகிறானோ என்று தோன்றும்.
சுவாமிநாதனுக்கு வேலையில் இருக்கிற வரை நீ நான் என்று தம்பிரானைப் பேசிவிட்டு ரிட்டையர் ஆன பிறகு பார்க்கும்போது சில சமயம் நீ என்றும் சில சமயம் நீங்க என்றும் வருவது வேடிக்கையாகவும் கூச்சமாகவும் இருக்கும். ஆனால் எல்லா வேடிக்கையும் கூச்சமும் ஒரு கட்டத்தில் அதன் வேடிக்கையை, கூச்சத்தை இழந்து ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறது.
தம்பிரானுக்கு அந்தச் சங்கடம் எல்லாம் இல்லை, ‘உமக்கு என்னவே பண்ணையாரு,’ ‘நீரு சொல்லவே இல்லையே’, ‘இது என்ன புதுக்கதையா
இருக்கு வே’ என்று தான் முதலில் இருந்தே பேசுகிற பழக்கம் இப்போது வரை அப்படியே இருக்கிறது. சுவாமிநாதனை மட்டும் அல்ல, அவருக்குப் பிடித்தமான, நண்பர்களை எல்லாம் இப்படிப் ‘பண்ணையாரே’ என்று சொல்லிப் பேசுகிறtது உண்டு. அது ஒரு மாதிரி தோளில் கையைப் போட்டுக் கொள்கிற, கட்டி அணைத்துக் கொள்கிற விதம்.
தம்பிரான் தான் ஒரு வருஷத்துக்கு முன்னால் சுவாமிநாதனை போனில் கூப்பிட்டு,, முன்னால் பின்னால் எதுவும் சொல்லாமல், ‘ஏம் வே , அந்தப் பிள்ளைக்கு இப்படி ஒண்ணுக்கு மேல் ஒண்ணா இடி விழுந்துக்கிட்டே இருக்கு?’’ என்று சொல்ல ஆரம்பித்தான். அந்தப் பிள்ளை என்று சொன்னது புவனேஸ்வரியை.
புவனேஸ்வரியை புவனேஸ்வரி என்று பெயரைச் சொல்லி ஒரு தடவை கூட சுவாமிநாதனிடம் பேசியதில்லை. தம்பிரான் அப்படி ஆரம்பித்துக் கடைசியாகச் சொல்லி முடித்தது கோரமங்கலாவில் வேலைபார்த்துக்கொண்டு இருந்த புவனேஸ்வரியின் பையன் ஒரு பைக் விபத்தில் முடிந்து போனதை. இதைச் சொல்லிவிட்டு, ‘கண்ட்றாவி, கண்ட்றாவி’ என்று தனக்குத் தானே சொல்லி அவர் அழுவது தெரிந்தது.
புவனேஸ்வரியின் கணவர் மாரடைப்பில் இறந்துபோய்விட, கருணையின் அடிப்படையில் யூனியன் வாங்கிக் கொடுத்த வேலையில் புவனேஸ்வரி சேர்வதற்கு முன்னாலேயே தம்பிரான் பாளையங்கோட்டை பிராஞ்சில் இருந்து டவுன் பிராஞ்சில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த சுவாமிநாதனிடம், ‘வே நம்ம பிள்ளை ஒண்ணு ஜாயின் பண்ணுது. பார்த்துக்கிடும். நல்ல கெட்டிக்காரப் பிள்ளை. இங்க்லீஷ் அப்படிப் பேசும். என்ன பேசி என்ன பிரயோசனம்? இங்கிலீஷ்லதான் தும்பம் வந்தது. ‘மேஸிவ் ஹார்ட் அட்டாக்’ என்று டாக்டர் சொல்லிக் கையை விரிச்சுட்டாரு. விதி’.என்று சொன்னாரே தவிர பெயரைச் சொல்லவில்லை.
யூனியன் பிராஞ்ச் செக்ரட்டரி ஒவ்வொருத்தரிடமும் அறிமுகம் செய்தது போல, சுவாமிநாதனிடமும் ‘ புவனேஸ்வரி’ என்று பெயரைச் சொன்னார். புவனேஸ்வரியிடம் அவனைப் பற்றிச் சொல்லும் போது, ‘ சுவாமிநாதன் சின்சியர் ஒர்க்கர். சின்சியர் யூனியனிஸ்ட். கவிதை எல்லாம் எழுதுவாரு. ஸோனல் கான்ஃபரன்ஸில் அவர் கவிதை வாசிக்கிறதைக் கேட்கிறதுக்காகவே டெலிகேட்ஸ் உட்கார்ந்திருப்பாங்க’ என்று அவன் தோளில் கையை வைத்தார், புவனேஸ்வரி சுவாமிநாதனை மறுபடியும் கை கூப்பி வணங்கினார். அவர் கை குலுக்குவார் என எதிர்பார்க்கவில்லை. கை குலுக்கினார்..
அந்தக் கைகுலுக்கலுக்குள்ளான வெதுவெதுப்பில் சுவாமிநாதனுக்குச் சொல்லத் தோன்றியது. புவனேஸ்வரியின் கைகளை விலக்காமலே சொன்னான், தி.ஜானகிராமன் செம்பருத்தி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அதில் ஒரு புவனேஸ்வரி வருவாள்’ ’ என்றான். கண்ணாடிக்குள் சற்று அகல்கிற கண்களுடன் புவனேஸ்வரி ‘படித்திருக்கிறேன்’ என்று சொல்வதை பிராஞ்ச் செக்ரட்டரி அடுத்த நாற்காலித் தோழரிடம் அறிமுகப்படுத்துவதற்கான நகர்வில் நின்று கேட்டுக்கொண்டிருந்தார்.
சுவாமிநாதனால் அதிகம் சிரமப்படாமல் புவனேஸ்வரியும் அவருடைய ஆறு வயதுப் பையனும் சற்றுப் பத்திரமாக இருக்கிற மாதிரி ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்ய முடிந்தது. தற்செயலாக சுவாமிநாதனின் பூர்வீக வீடு இருந்த தெருவுக்கு இரண்டு தெரு தள்ளி மெய்ன் ரோட்டில் இருந்த பெருமாள் கம்பவுண்டர் வளவில் அந்த வீடு காலியாகப் போவதைக் கேள்விப்பட்டதும் சுவாமிநாதன் நேரே பெருமாள் கம்பவுண்டாரைப் பார்த்தார்.
பெருமாள் கம்பவுண்டர் அவருடைய சைக்கிளை அவர் மருத்துவம் பார்க்கிற ரோட்டை ஒட்டின காடியானாவை அடுத்த முடுக்கில் சுவரோடு சார்த்தி வைத்திருப்பார். ஒரு நாளும் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திப் பார்த்ததே இல்லை. பெருமாள் கம்பவுண்டர் பார்ப்பது மருத்துவம்தான். ஆனால் அடிக்கடி சவம் சவம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். ‘சவம், சைக்கிளை விட்டு இறங்கின உடனே செவரோடா சாய்ச்சா அது பாட்டில நின்னுட்டுப் போகுது. இதுக்கு எதுக்கு ஸ்டாண்டைப் போட்டு சீட்டைப் பிடிச்சு வண்டியை இழுத்துக்கிட்டு ஆவியைத் தொலைக்கணும்’ என்பார்.
இதைச் சொல்லும் போது சற்றுக் கட்டை ஆளாகவும் கரண்டைக்கு மேல் வேட்டி கட்டி வெள்ளைச் சட்டை போட்டிருக்கிறவராகவும் இருக்கிற பெருமாள் கம்பவுண்டர், அவருக்கு முன்னால் இருக்கிற ஒரு மாயமான சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி, அப்படி நிறுத்திய பின் சைக்கிள் சீட்டை குதிரை முதுகைத் தட்டிக் கொடுப்பது போலவுமான ஒரு காட்சியைக் காற்றில் நிகழ்த்திக் காட்டிவிடுவார்.
சுவாமிநாதன் போய்க் கேட்டதும், ‘ நீங்க வந்து சொன்ன பிறகு நான் சொல்லுததுக்கு என்ன இருக்கு? இந்தா வச்சுக்கிடுங்க ன்னு இப்பமே வீட்டுத் தொறவலை உங்க கையில கொடுத்திருவேன். சவம், வெள்ளையடிப்பு வேலை நடந்துக்கிட்டு இருக்கு., அது முடியட்டும்.’ என்று சொன்னார். ஆனால் வாடகைக்கு வருவது யார், வாடகை எவ்வளவு, எத்தனை மாத அட்வான்ஸ்,, லைட்டு பில், தண்ணித் தீர்வை என்பதை எல்லாம் விவரம் கேட்டும் சொல்லிவிட்டும்தான் அனுப்பினார்.
இவ்வளவு தூரம் பெருமாள் கம்பவுண்டர் ஞாபகம் சுவாமிநாதனுக்கு வருவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பெருமாள் கம்பவுண்டரும் அவருடைய வீட்டம்மாளும் அவர்களுக்குச் சொந்தமான அந்த வளவில் எந்த வீட்டுக்கு யார் குடிவந்தாலும் முதல் நாள் இரண்டு பேருமாக வந்து நின்று அந்த வீட்டுப் பட்டாசலில் அல்லது முதல் அறையில் இரண்டு கைகளையும் உயர்த்திக் கிழக்கே பார்த்து நின்று கும்பிடுவார்கள். பெருமாள் கம்பவுண்டர் அந்த வீட்டுப் பெண்களில் ஒருவரைப் பார்த்து ‘ஒரு மடக்குத் தண்ணீர் கொண்டாம்மா’ என்று கேட்டு வாங்கி, அதை அண்ணாந்து குடிப்பார். வாசல் நிலைப்படிக்கு மேல் வெளியே அதற்கென்று ஏற்கனவே அடிக்கப்பட்ட ஆணியில் கம்பளிரோமத்தில் கட்டப்பட்ட ஒரு படிக்காரக் கல்லையும் அவர் வீட்டம்மாள் கையால் கட்டிவிட்டுப் போவார். வாடகைக்கு வந்தவர்கள் காலி பண்ணிப் போகிறவரை அது அப்படியே இருக்கும்.’
புவனேஸ்வரியும் மகனும் தனியாக இருப்பதைப் பார்த்து பெருமாள் கம்பவுண்டருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை. புவனேஸ்வரி எல்லோரிடமும் தயக்கம் இல்லாமல் பேசுவார், சிரிக்க வேண்டிய இடங்களில் தாராளமாகச் சிரிப்பார். நல்ல சுருட்டை முடி என்பதைத் தவிர புவனேஸ்வரி மிகவும் ஒல்லி, கண்ணாடி போட்டிருக்கிற முகம். .உலர்ந்து போனது போல இருப்பார். பெருமாள் கம்பவுண்டருக்கு புவனேஸ்வரியிடம் இருக்கிற கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத ஏதோ ஒன்று பிடித்துப் போய்விட்டது. வீட்டில் இருக்கிற நேரங்களில் வந்து அநாவசியமாகப் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்.
வேறு என்ன தப்புத் தண்டா செய்தார் என்று தெரியவில்லை. புவனேஸ்வரி அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல், அவருடைய வீட்டிற்கு சுவாமிநாதன் போயிருந்த ஒரு விடுமுறை தினத்தில் ஆங்கிலத்தில் கேட்டாள். ‘ ஏன் சுவாமி? உலர்ந்த சுள்ளியில் சீக்கிரம் தீப்பற்ற வைக்கலாம் என்று வயதான ஆண்களுக்குத் தோன்றுமோ?’ என்று கேட்டாள். அப்படிக் கேட்கும்போது அவள் முகத்தில் இருந்தது சிரிப்புதான். ஆனால் சிரிப்பும் அல்ல.
தரையில் பக்கத்தில் உட்கார்ந்து, வெளியே விழுந்து கிடந்த தென்னங் குரும்பைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்த அருணையே பார்த்து அசையாமல் இருந்தாள். ‘ சுவாமி, உங்களுக்குத் தென்னங்குரும்பைகளில் சவ்வு மிட்டாய் விற்கிறவர்கள் கையில் வைத்துக் கிறுகிறு என்று சத்தம் வரும்படி சுற்றுவார்களே, அதைச் செய்யத் தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு மகனின் சிகையையே அளைந்து கொண்டிருந்தாள். மறுபடியும், சுவாமிநாதனிடம் ‘அருணின் அப்பா செய்வார்’ என்றாள்.
‘கொஞ்சம் வாருங்கள் சுவாமி’ என்று வீட்டின் வாசல் நிலைக்கு வெளியே போய் நின்று கையை நீட்டி ‘ இனி காற்றுக் கருப்பு எல்லாம் வராது’ என்று காட்டினாள். அங்கே தொங்கிக் கொண்டு இருந்த கம்பளிக் கயிறும் படிக்காரமும் இப்போது இல்லை. ‘ பிடுங்கித் தூர எறிந்துவிட்டேன் சுவாமி’ என்று நகர்ந்து வந்து சுவாமிநாதன் இடது கையைத் தோள்வரை படும்படி பிடித்தவளாக வீட்டுக்குள் போனாள். நடையைத் தாண்டி வீட்டிற்குள் போனதும் வீடு முழுவதையும் திரவம் போன்ற ஒன்றால் நிரப்பியிருப்பது போல அடர்த்தியாக இருந்தது. புவனேஸ்வரி சுவாமிநாதன் தோள்மேல் அப்படியே சாய்ந்துகொண்டாள்.
சுவாமிநாதன் அடிக்கடி வீட்டுக்கு வருவது, ரொம்ப நேரம் ராத்திரி வெளியில் நாற்காலிகளைப் போட்டுப் பேசிக்கொண்டு இருப்பது, சில சமயங்களில் தன்னுடைய பைக்கிலேயே புவனேஸ்வரியைக் கொண்டு வந்து வீட்டில் விட்டு விட்டுப் போவது எல்லாம் பெருமாள் கம்பவுண்டருக்குப் பிடிக்கவில்லை. அதே சமயம் அதைக் கண்டித்தும் அவருக்கு சுவாமிநாதனிடம் சொல்ல முடியவில்லை.
சுவாமிநாதன் ரொம்ப காலமாக ‘ மென் ஸ்டைல்ஸ்’ கடையில் தான் முடிவெட்டிக்கொள்கிற ஒருவன் என்பதை பெருமாள் கம்பவுண்டர் அறிந்திருந்தார். அதில் ஒளிவு மறைவு எல்லாம் ஒன்றும் இல்லை. டவுனில் எல்லோருக்குமே தெரியும். மென் ஸ்டைல்ஸ் கடையை அந்தப் பையன் சேகருக்கு வைத்துக்கொடுத்திருப்பதே பெருமாள் கம்பவுண்டர் என்பதும், பழனி தெருவில் வைத்து இருக்கும் அவருடைய இன்னொரு குடும்பத்துப் பையன் அவன் என்றும்.
அதற்குப் பிறகு சுவாமிநாதனிடம் பேச்சுக் கொடுப்பதை ரொம்பச் சுருக்கிக் கொண்டார். ரொம்பக் கோபம் வந்தால், அடக்க முடியாமல், பைக்கை நிறுத்துகிற சுவாமிநாதனைப் பார்த்து, ‘வண்டியை அப்படிக் கொஞ்சம் தள்ளி நிறுத்துனா என்ன? இது நாலு பேர் போற வாற இடம்’ என்று சொல்வார்.
தம்பிரானுக்கு ஓரளவு எல்லாம் தெரியும். சுவாமி நாதனும் புவனேசுவரியும் வர வர ரொம்ப நெருக்கம், அடிக்கடி அங்கே போய் வந்து இருக்கிறான் என்பதில் முதலில் தம்பிரானுக்குக் கொஞ்சம் கஷ்டமாகக் கூட இருந்தது. தனக்கும் புவனேஸ்வரியைப் பிடித்திருக்கிறது என்பது தம்பிரானுக்கே அப்போதுதான் புரிந்தது. ஒரு வித தவிப்பில் சுவாமிநாதனிடம் சொல்லியிருக்கிறான், ‘வே, நான் சொல்லுதனேன்னு தப்பா எடுத்துக்கிடாதேயும். உம்ம நன்மைக்குதான் சொல்லுதேன். உமக்கும் குடும்பம் இருக்கு. ஒண்ணுக்கு ரெண்டு சின்னப் பிள்ளைகள் இருக்கு. இப்போதைக்கு உம்ம மனசுலேயும் ஒன்ணும் இருக்காது. அந்தப் புள்ள மனசுலேயும் ஒண்ணும் இருக்காது. ஆனால் போகப் போக இப்படியே இருக்கும்னு சொல்ல முடியாது. எப்போ குடை வண்டி அடிக்கும் எப்போ குப்புற விழுவோம்னு இந்த விஷயத்தில சொல்லுததுக்கு இல்லை, எனக்கு மட்டும் இல்லை, உமக்கு மட்டும் இல்லை. அந்தப் பிள்ளையைப் பார்க்கிற எல்லாத்துக்கும் பிடிக்கும். அந்தப் பிள்ளையும் ஒரு வகையில பாவம் தான். எல்லாரும் உன்னைப் பிடிக்கும்னு சொன்னா அது என்னதான் பண்ணும்.’’
தம்பிரான் இப்படிச் சொல்லச் சொல்ல, சுவாமிநாதனுக்கு அவனை ரொம்பப் பிடித்திருந்தது. முதலில் சுவாமிநாதன், ‘ நீ சொல்லுதது புரியுது. என் நல்லதுக்குத் தானே சொல்லுதே’ என்று தம்பிரான் கையைப் பிடித்தான். எனக்கும் புவனேஸ்வரியைப் பிடிக்கும் என்று தம்பிரான் சொன்னதை நினைத்து அழுகை வந்தது. ‘ நீ சாமி . நீ எங்க அப்பன்’ என்று ஏதேதோ சொல்லிப் புலம்புவதும் கண்ணைத் துடைப்பதுமாக இருந்தான்.
இது எல்லாம் நடந்து எத்தனையோ வருஷம் இருக்கும். தம்பிரான் சொன்னது போல சுவாமிநாதன் வீட்டில் கொஞ்சம் பிரச்சினையும் ஆயிற்று. சுவாமிநாதனுக்குத் தெரியாமல் சுவாமிநாதனின் மனைவி சரசு புவனேஸ்வரியை போனில் கூப்பிட்டு ‘ நீ எல்லாம் வேலைக்கு வந்திருக்கியா? ஊர் மேயதுக்கு வந்திருக்கியா?’, அப்படி இப்படி என்று அசிங்க அசிங்கமாகப் பேசியிருப்பாள் போல.
புவனேஸ்வரியே சொன்னாள். ‘எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிகிறது சுவாமி. பல காலங்களில் பலதடவை பல மனைவிகளால் பேசப்பட்ட வசனம் தான் இது. ஆனால் சரசு கண்ணியத்தின் கோட்டைத் தாண்டி விட்டார். இப்படி நீ அலைந்தால் உன்னைக் கட்டினவனுக்கு ஏன் ஹார்ட் அட்டாக் வராது என்று அவள் கேட்டிருக்கக் கூடாது. உன் மேல் எனக்குக் கோபம் இல்லை, வருத்தம் இல்லை. பாவம் சுவாமி நீ. உன் மேல் இரக்கப்படுகிறேன்” இந்த டெலிபோனுடன் சரி. அதற்கு அப்புறம் அவள் பேசவே இல்லை.
சுவாமிநாதனும் தம்பிரானும் புரமோஷன், லொட்டு லொசுக்கு, மண்டையிடி எதுவும் வேண்டாம் என்று இந்த ஊர் விட்டால் அந்த ஊர், டவுனை விட்டால் பாளையங்கோட்டை பிராஞ்ச் என்று இருந்துவிட்டார்கள். புவனேஸ்வரி அப்படி இல்லை. பரீட்சை எழுதினாள். மட மட என்று மேலே போனாள். ஒரு கட்டத்தில் சென்னை மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற விதியின்படி கல்கத்தா பக்கம் மூன்று நான்கு வருடங்கள் இருந்தாள்.
எல்லாவற்றையும் அவ்வப்போது தம்பிரான்தான் ஒரு செய்தி வாசிப்பது போல, அவள் இப்போது எங்கே இருக்கிறாள், அருண் என்ன படிக்கிறான், கொரோனா காலத்தில் அவள் ரொம்பக் கஷ்டப்பட்டாள். பிழைத்ததே கடினம் என்றார்கள். அருண் நல்ல வேலைக்கு பெங்களூர் போய்விட்டான்’ என்று எல்லாம் சொல்வார். ஒரு தடவை ‘ பேசுதீரா வே. நம்பர் வாங்கித் தரட்டுமா?’ என்று கேட்டதுண்டு.
சுவாமிநாதன் ஓய்வு பெற்ற தினத்தின் பிரிவு உபச்சாரத்தின் இறுதியில் சுவாமிநாதன் ஒரு நீண்ட கவிதையை வாசித்த சமயம் ஒரு இடத்தில் குரல் இறுகியது. அப்போது சுவாமிநாதன் புவனேஸ்வரி தன்னை நினைப்பதாக எண்ணி பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்துக் கொண்டார். சற்றுப் பதற்றமாக அந்தத் திசையில் பார்த்தபடி இருந்த சுவாமிநாதனுடைய மனைவி கழுத்தில் அணிந்திருந்த ரோஜாப் பூ மாலையின் இதழ்களை மடியில் இருந்த பேத்தி இழுத்து இழுத்துப் பிய்த்துக்கொண்டு இருந்தது.
இந்த முறை போன் பண்ணியதும் தம்பிரான்தான். சுவாமிநாதனுக்கு புவனேஸ்வரி ஊருக்கு வந்துவிட்டாளா என்று கேட்கவேண்டும் என்று இரண்டு மூன்று முறை தோன்றியிருக்கிறது. சுவாமிநாதனின் வீட்டம்மாள், மகன் வீட்டுக்குப் போய் நாளாகிவிட்டது. அவர்களுடைய பேரனைத் தேடுகிறது, ‘ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டு வந்து விடலாம்’ என்று சொன்னபோது, ‘இன்னும் ரெண்டு வாரம் கழித்துப் போகலாம். டெபாசிட் ரசீது ஒண்ணு ரெண்டைப் புதுப்பிக்கணும் அஞ்சாறு நாளில்’ என்று சொல்லிவைத்திருக்கிறார்.
அது உண்மைதான் என்றாலும், அதற்கு இடையில் புவனேஸ்வரியை ஒரு தடவை பார்த்துவிட்டால் நல்லது என்று தோன்றியது, அப்படி வெளியூர் போக வேண்டும் என்று ஆசைப்பட்ட சரசுவைச் சமாதனப்படுத்துவது போல் புதிதாக வந்திருக்கிற மல்ட்டி ப்ளெக்ஸில் சினிமாவுக்கும் சரசுவின் அம்மா ஊர்ப் பக்கத்தில் இருக்கிற திருப்புடை மருதூர்க் கோவிலுக்கும் போய்விட்டு வந்தார். சினிமாவுக்குப் போய்விட்டு வந்த அன்றைக்கு சரசு தலை நிறைய பூ வைத்திருந்தது மட்டும் இல்லாமல் சுவாமிநாதன் பக்கத்தில் வந்துவேறு நெருங்கிப் படுத்துக்கொண்டது நன்றாகத்தான் இருந்தது.
தம்பிரான் எப்போதும் போல, ‘அந்தப் புள்ள வந்துட்டுது வே. என்னைக்குப் போகலாம்னு சொல்லும். ரெண்டு பேரும் ஒண்ணாப் போயிட்டு வந்திருவோம். அந்தப் பயலையும் தூக்கிக் கொடுத்திட்டு வந்து நிக்கி. ஒத்தையில என்னால அது முகத்தைப் பார்த்துப் பேச முடியாது’ என்று கேட்டுக்கொண்டார்..
சுவாமிநாதனுக்குத் தனியாகப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றிவிட்டது. நாளைக்குச் சாயந்தரமே போய்விடுவது என்று தீர்மானித்துவிட்டார். புவனேஸ்வரி குடி வந்திருக்கிறதாகச் சொல்லும் பாரதி நகர் எல்லாம் ஒரு காலத்தில் சுவாமிநாதன் காலையிலும் சாயங்காலமும் வாக்கிங் போய்க் கொண்டு இருந்த இடம்தான். வீட்டில் இருந்து நீச்சல் குளம் தெரு வழியாகப் போய் மைதானம் தாண்டி தென்றல் நகர் வழியாகப் போனால் வலது பக்கம் திரும்ப வேண்டும். பாரதி நகர் மூன்றாவது தெரு வந்துவிடும்.
தெரு திரும்புகிற முக்கு வீட்டில் மருதாணி பூத்துச் சரிந்து கிடக்கும். வாசம் சொல்லி முடியாது, நடுவில் ஒரு வீட்டில் நடுவில் நிற்கிற ஒற்றைப் பனை மரத்திற்குச் சேதாரம் இல்லாமல் அதை அப்படியே விட்டுவைத்து மாடிப் பகுதியைக் கட்டி இருப்பார்கள். இந்த ஏரியாவிலேயே மிக அதிகமாகப் பூத்து தெரு முழுவதையும் அந்த இடத்தில் மஞ்சளாகும்படி உதிர்ந்து கிடக்கும் பெருங்கொன்றை மரம் ஒன்று நிற்கும்.
தபால் துறையினர் எல்லா இடத்திலிருந்தும் அகற்றிவிட்ட பழைய சிவப்புத் தபால் பெட்டி ஒன்று தொங்குகிற ஒரு சிறு வேப்பமரம் ஒன்று வரும். தவறாமல் வாசலில் நைட்டியுடன் நின்றபடி மீன்களைக் கீழே தரையில் உட்கார்ந்திருக்கிற வியாபாரி அரிவாள்மணையில் அரிந்து தர, ஒரு பெரிய ஈயச் சட்டியுடன் நிற்கிற பெண்ணின் பருத்த முன்பின் பாகங்கள் என்று அந்த அகலமும் நீளமுமான தெருவை இப்போது புவனேஸ்வரியையும் சேர்த்து வரைவது அவருக்குச் சுலபமாக இருந்தது.. ’எஸ் ட்டி சி ரோட்டில இருந்து பாரதி நகர் பஸ் ஸ்டாப்பில் ரைட்டில திரும்பினால் கரெக்டா மூணாவது வீடாம் வே. கண்ணை மூடிக்கிட்டுப் போய் கதவைத் தட்டீரலாம். . மீனாச்சிபுரம் பிராஞ்சில எங் கூட வேலை பார்த்த லெங்காமணி , அவள உமக்குத் தெரிஞ்சிருக்காது, பெட்ரோல் பங்க்கில பார்த்தாளாம். ஸ்விஃப்ட் டிஸையர் வச்சிருக்காளாம் நம்ம ஆளு’ – இதுவும் தம்பிரான் மேற்கொண்டு சொல்லியிருந்த தகவல்தான்.
சுவாமிநாதன் பாரதி நகர் மூன்றாவது தெருவில் நுழையும் சமயம் அவருக்கு முன்னால் ஒரு இருபதடி தூரத்தில் ஒரு யானை போய்க்கொண்டு இருந்தது. மேலே ஒரு பாகனும், அதனுடன் நடந்து போனபடி ஒருவருமாக யானை அசைந்து அசைந்து போய்க் கொண்டு இருந்தது. பெரிய யானையும் இல்லை, குட்டியானையும் இல்லை. இந்தத் தெருவின் அகலத்தைக் கணக்கு எடுத்து அதற்குப் பொருந்துவது போன்ற ஒரு அளவில் அது கச்சிதமாகப் போய்க்கொண்டே இருந்தது.. சற்று இறக்கமான இந்தத் தெருவில் மழைத் தண்ணீர் ஓடுவதை சுவாமிநாதன் பார்த்திருக்கிறார். ஒரு கூடுதல் ரம்மியத்திற்காக இந்தத் தெருவை ஒரு அகலமான காட்டு நதி போலவும், பெரிதும் சிறிதுமான கூழாங்கற்களில் மோதிச் சிலிர்த்துத் தண்ணீர் இறங்கி ஓடுவதாகவும் நினைத்துக் கொண்டார்.
ஒரு குறிப்பிட்ட தூரத்தைச் சரியாக இவரும் யானையும் இதுவரையில் இடையே இருக்கும்படி நடந்து போன விதம் சட்டென்று மாறி யானை அதிக தூரம் முன்னேயும் தான் அதிக தூரம் பின்னேயும் போனதால், இந்தத் தெருவை அவர் மறுபடியும் வரைய வேண்டியதாகிவிட்டதாக சுவாமிநாதன் வேறு கித்தான்களை விரித்தார். ஒரு கால் பந்து போல அவரிடம் வந்து சேர்கிற மணிச்சத்தத்தை மேல் பாதத்தில் வாங்கி மறுபடி யானையை நோக்கி உதைப்பது சுவாமிநாதனுக்குப் பிடித்திருந்தது.
அவர் கால்களுக்குக் கீழ் பாளம் போல தெரு உருவப்படுவது போலவும், பெரிய பெரிய வடக் கயிறுகள் கட்டப் பட்ட இந்தத் தெருவை தும்பிக்கையைச் சுழற்றி அந்த யானை இழுத்துக்கொண்டு போவதாகவும். இழுக்கக் கஷ்டப் பட்டு அது திணறும் நிலையில் பாகன் குத்துகிற அங்குசத்தால் யானை பிளிறுகிற சத்தத்தில் அந்த ஒற்றைப் பனை மரப் பொந்தில் இருந்து இரண்டு மூன்று கிளிகள் பதறி, அவருக்குக் குறுக்கே பறந்து போவது போலவும் இருந்தது.
காலையில் பாரதி நகருக்கு நடந்து போய் புவனேஸ்வரியைப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் நேற்றிரவு அவ்வளவு சரியாகத் தூங்காததுவே விடிந்து ஏழு ஏழரை மணிக்கு இப்படி எல்லாம் தோன்றும் காரணம் என்று சுவாமிநாதன் நினைத்தார். தன்னைத் தேடி தம்பிரான் ஒரு வேளை தன் வீட்டிற்குப் போயிருப்பானோ என்று நினைத்தார். முன்னால் போகிற யானை ஒரு வேளை நேராக மூன்றாவது வீட்டிற்குள் போய் அப்படியே புவனேஸ்வரியைத் தூக்கிக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்ற படபடப்பில் அவர் வேகவேகமாக நடக்க ஆரம்பித்தார்.
அங்கிருந்து வருகையில் வலது பக்கம் மூன்றாவது வீடு என்றால், இங்கிருந்து போகிற தனக்கு அது இடது பக்கம் மூன்றாவது வீடுதானே என்று சுவாமிநாதன் நிதானித்த போது, ஒரு பிரும்மாண்டமான நிலைக்கண்ணாடியில் இந்தத் தெருவின் நெளியும் பிம்பத்தில் இடவல மாற்றக் குழப்பங்களுடன் நீந்திப் போகிறவராக அவர் இருந்தார்.
அந்த வீட்டில் தன்னுடைய ஆக்டிவா வாகனத்தை நிறுத்திக் காலைப் பரப்பி அந்தத் தாடிக்காரர் ஊன்றியிருந்தார், முன்னால் ஒரு பெரிய எவர் சில்வர் தூக்குப் போணியும் பின் பக்கம் தொங்கும் இரண்டு தூக்குப் போணிகளுமாக அந்த பாய் என்ன விற்கிறார் என்று பிடிபடாத உச்சரிப்பில், ஆனால் அவரது வாடிக்கையாளர்கள் எல்லோரும் அதைக் கேட்டு வாசலில் வந்து நிற்கும் ஒரு அகவலுடன், இடியாப்பம் விற்று வருகிற அவரை சுவாமிநாதன் நிறையச் சந்தர்ப்பங்களில் காலை நடையில் பார்த்திருக்கிறார்.
அவர் முன் பக்கப் பாத்திரத்தில் இருந்து எடுத்து எடுத்து வைக்க, அதைத் தன் கையில் இருக்கிற ஒரு சூடு ஆறாத உலோக மினுமினுப்புள்ள பாத்திரத்தில் வாங்கிக் கொண்டு நிற்கிறவர்தான் புவனேஸ்வரியா? அந்த வீட்டில் ஒரு இவ்வளவு பெரிய லெச்சைகெட்ட மரம் இருக்கும் என்று தம்பிரான் அடையாளம் சொல்லியிருக்கலாம். அந்த மிக அடர்த்தியான பச்சை இலைகளுக்குக் கீழ், ஒரு வித மண் நிறத்தில் உள்ள ஒரு நூல் சேலையில் மிகக் கவனமாகக் குனிந்து இடியாப்பங்கள் வைக்கப் படும் அந்தப் பாத்திரத்தை மூடுவதற்காகத் தயாராக அதன் மூடியை வைத்தபடி இருந்தார். சுவாமிநாதன் மிக அருகில் செல்கிறவரை புவனேஸ்வரி அவரைக் கவனிக்கவே இல்லை.
புவனேஸ்வரியின் தலை அதிகம் நரைத்திருந்தது. ஒருபோதும் சாயம் இட்டிராத சுருள் சுருளான நரை. இப்போதும் கண்ணாடி இருந்தது. ஆனால் அது ஒரு பட்டுக் கருப்புக் கயிற்றில் இணைக்கப்பட்டு நெஞ்சின் மேல் தொங்கிக் கொண்டு இருந்தது. சுவாமிநாதன் சற்று அதிக நேரம் கண்ணாடி கவிழ்ந்திருந்த அவருடைய நெஞ்சையே பார்த்தார். எப்போதுமே அதிகப் புடைப்புகள் அற்ற அவரின் அந்த இடத்திலிருந்து மீண்டும் புவனேஸ்வரியைப் பார்க்கும்போது அவருக்குப் பெரும் நிறைவும் கிளர்ச்சியும் உண்டாயிற்று. தன் மகனை இழந்து வந்து நிற்கிற ஒருவராக புவனேஸ்வரியை அந்தச் சமயம் அவர் பார்க்கவே இல்லை. புவனேஸ்வரியிடம் தேறுதல் சொல்வதற்கு என அவர் சேகரித்து வைத்திருந்த எல்லாச் சொல்லும் காணாமல் போயிருந்தது.
புவனேஸ்வரி அவரைப் பார்த்துவிட்டார். அடுத்த, அடுத்த என்று எல்லாம் உலகத்தில் அந்தச் சமயம் எதுவுமே கிடையாது. அதே நொடியில் ‘சுவாமி’ என்று வலது கையில் இருக்கிற பாத்திரத்தை இடது கையில் மாற்றிக்கொண்டு அப்படியே சுவாமி நாதனை அணைத்துக் கொண்டார். முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் இன்னொரு முறை தன்னை அவரோடு சேர்த்துக் கொண்டார். சுவாமிநாதன் அப்படியே நின்றார். அவரை புவனேஸ்வரி முகர்ந்து பார்ப்பதாக நினைத்துக்கொண்டார்.
புவனேஸ்வரி சுவாமிநாதனைப் பார்த்து, ‘இதைப் பிடி’ என்று அந்தப் பாத்திரத்தைக் கொடுத்தார். இதற்கு முன் சுவாமிநாதனை இப்படி ஒருமையில் கூப்பிட்டதில்லை. இரும்புக் கதவில் தொங்கிய பையில் இருந்து பால் பாக்கெட்டுகளை முயல் குட்டி தூக்குவது போல தூக்கிக் கொண்டு ‘வா’ என்று சொன்னார். இடுப்பைச் சுற்றிக் கைகளை வளையம் இட்டுக் கொண்டார்.
பெரிய வீடாக இருந்தது. சுவாமி நாதனுக்கு எப்போதுமே இது போன்ற பெரிய வீடுகளின் தரையில் விழுகிற வெளிச்சத்தைப் பிடிக்கும். எப்போது அப்படி ஒரு வெளிச்சத்தைப் பார்க்கும் போதும், சின்ன வயதில் தரையில் கிடக்கிற மழைத் தண்ணீரைக் காலால் துளாவிப் பாளமாக எத்துவது போல அந்த வெளிச்சத்தை எத்தவேண்டும், அது தெறித்து மடங்கி மறுபடியும் அங்கேயே விழுந்து பரவுவதைப் பார்க்கவேண்டும் எனவும் நினைப்பார். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தரையைப் பார்க்கும் போது அப்படித் தோன்றும். புவனேஸ்வரி வீட்டுத் தரையில் இன்னும் அந்தக் கோணம் அவருக்குப் பிடிபடவில்லை.
புவனேஸ்வரி இடியாப்பம் வாங்கின பாத்திரத்தை அந்தப் பெரிய சாப்பாட்டு மேஜையில் வைத்தார். பால் பாக்கெட்டுகளை ஃப்ரீஸரில் நேற்றைய பாக்கெட்டை முன்னுக்குத் தள்ளி அதன் பின் இன்றைய பாக்கெட்டுகளை அடுக்கினார்.
‘காபி அப்புறம் சாப்பிடலாம்’ என்றார். அவர் எந்த நிமிடத்திலும் அழப் போகிறவராக இதுவரை இல்லை. சாதாரணமாக நடமாடிக்கொண்டு இருந்தார். கையில் சிறிது சிறிதாக இரண்டு டர்க்கித் துண்டுகளை எடுத்துவைத்தபடி, சுவாமிநாதனின் கையைப் பிடித்தபடி ‘போவோம்’ என்றார்.,
மூன்று படுக்கை அறைகள் உள்ள அந்த வீட்டின் ஆகப் பெரிய படுக்கை அறை அதுவாக இருக்கும். எந்தப்பக்கமும் உருண்டு விழாதபடி உலோக மடக்குத் தடுப்புகள் உள்ள அந்தக் கட்டிலில், மிக வெள்ளையான விரிப்புகளின் நடுவில் ஒரு பழுத்த இலை போல அந்த மனிதர் படுத்திருந்தார். இந்த உலகத்தின் முதல் மரத்தில் துளிர்த்த முதல் இலையின் பழுப்பு. எல்லாப் பச்சையமும் வற்றி எல்லா நரம்புகளும் புடைத்து, இது வரை அசைத்த காற்றை எல்லாம் தாண்டி இனிமேல் வீச இருக்கும் ஒரு காற்றுக்காகக் காத்திருக்கும் இலை.
புவனேஸ்வரி எந்த உடையாலும் போர்த்தப்படாத அவரிடம் போகும் போதே, ’மாமா, சுவாமி வந்திருக்கான்’ என்றார். தொய்ந்து கிடந்த இடது கையை எடுத்து விரல்களைப் பிரித்து ஒரு நடனத்திற்கு அழைப்பது போல நுனிவிரல்களைப் பிடித்துக் கொண்டு முத்தமிட்டார். புருவம், கண் ரெப்பை மயிர், தலை முடி எல்லாம் நரைத்திருந்த முகத்தை வருடிக் கொடுத்து, அவருடைய நெற்றியில் குனிந்து முத்தினார்.
‘யார் தெரிகிறதா சுவாமி உனக்கு? அருணின் அப்பாவின் அப்பா.’ என்றார்.
சுவாமிநாதன் எதுவும் சொல்லாமல் அப்படியே நின்றார்.
‘சுவாமி வந்திருக்கான்னு சொன்னேன் இல்லையா. அது எல்லாம் அவருக்குக் கேட்காது, ஆனால் யார் வந்தாலும் நான் சொல்லிவிடுவேன். “இதைச் சொல்லிவிட்டுக் கையில் இருந்த இரண்டு டவல்களையும் அந்தக் கட்டிலின் பக்கவாட்டு மடங்கலில் தொங்கவிட்டுவிட்டு, ஹீட்டரைப் போட்டார். புவனேஸ்வரி சுவாமிநாதன் பக்கம் வந்து அவருடைய கைகளைப் பிடித்துக் கொண்டார்.
‘நீ வந்திருக்கேன் னு சொன்னது மாதிரி., அருண் போயிட்டான்னும் அவர்கிட்டே சொல்லீட்டேன். அதுவும் அவருக்குக் கேட்காது சுவாமி. ஆனால் சொல்லீட்டேன்.’ – புவனேஸ்வரி சுவாமிநாதன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு அழ ஆரம்பித்தார்.
‘தம்பிரான் வந்தாலும் தம்பிரான் வந்திருக்கான்னு சொல்வேன்’ இதைச் சொல்லும்போது சுவாமிநாதன் நெஞ்சிலிருந்து முகத்தை நிமிர்த்தி அசையாமல் அவரைப் பார்த்தவள். “ஏன் உன் வீட்டிலிருந்து சரசு வந்தாலும் சரசு வந்திருக்காள்னு கண்டிப்பாக சொல்வேன்’’ என்று சொல்லி மிக உரக்க புவனேஸ்வரி உடைந்து அழ ஆரம்பித்தாள்.
சுவாமிநாதன் கட்டிலையே பார்த்துக் கொண்டிருந்தார். சிறு நீர் பிரிகிற தொட்டில் குழந்தைகளின் முகத்தில் உண்டாகும் சிரிப்பு போன்ற ஒரு நெளிவுடன் அந்த முகத்தின் மேல் வெளிச்சம் உண்டாயிற்று.
முதலில் வந்து நின்ற அறையின் தரையில் இப்போது மழைத் தண்ணீர் போல வெளிச்சம் சரியான கோணத்தில் பரவியிருக்கும் என்று சுவாமிநாதன் புவனேஸ்வரியிடம் சொல்ல விரும்பினார்.