இரவைப் போலொரு நதி

1
வருகிறேன் என்று போகிறாய்
ஒரு எழுத்தின் மீது
ஒரு எழுத்து
ஒரு கொடியின் மீது
ஒரு கொடி படருகிறது
எல்லாவற்றிற்கும் மேல்
இந்த நாக்கை
எவ்வளவு துழாவியும்
சிக்கவில்லை
போகாதே என்பதற்கான
எந்த ஒரு சொல்லும்.

2
இருப்பில் எத்தனை கணமோ
இன்மையில் அத்தனை கனம்
இருக்கிறாய் நீ

3
நிரம்ப நிரம்ப
அடி உடைந்த கோப்பைகள்
சேகரிக்கிறேன்
நீ
கீறல் விழாத ஒற்றைக்
கோப்பை
போதுமென்கிறாய்
அதையே எனக்கும்
பருகத் தருகிறாய்
இதற்குமேல்
என்னிடமிருக்கும்
கோப்பைகளை
முழுமையாக உடைப்பதுதான்
ஒரே வழி

4
எதன் பொருட்டோ காதலித்தாய்
எதன் பொருட்டோ விடைபெற்றாய்
எதன் பொருட்டோ
திரும்பி வந்திருக்கிறாய்
கண்ணா
நீ வாழ்
நானும் வாழ வேண்டும்
சமாதானம்.

5
ஒரு காதல்
நட்பென்று
சொல்லப்படுகிறது
ஒரு காதல்
அன்பென்று
பெயரிடப்படுகிறது
ஒரு காதல்
ஏதுமின்றிக்
கடந்து செல்கிறது
ஒரு காதலைக்
காதலாக்க
பிரம்பால் அடித்துத்
திருத்தப்பட்ட
பிழையின் கருவில்
ஒரு குழந்தை
ஒரு மொழி
ஒரு காதல்
ஊனமுற்றிருந்தது.

6
இரவைப் போலொரு நதி
அங்கு எப்போதும் மிதந்து கொண்டிருக்கிறது
ஒரு பிரியத்தின் உருவம்
படகாகவும்
சமயங்களில்
பிணமாகவும்

7
நான் இப்போதுதான்
கேட்டு முடித்த பாடலின்
முதல் வரியை
நீ முணுமுணுக்கிறாய்
இப்போமியா
மலரத் துவங்குகிறது.

8
தூரம் சென்றாய்
மேகம் சிறகானது
நிலவு
பறவையானது
நான் நிலவின் மேலேறி
நட்சத்திரங்களைப்
பறிக்கச் சென்றேன்
அங்கு வானம் இருந்தது
மரம் இல்லை.

9
அழத் தோணும்போது ஒரு கவிதை தேவைப்படுகிறது
அழ வைப்பதற்கு ஒரு கவிதை
தேவைப்படுகிறது
என்றேன்
இந்த உளறல்தான் கவிதை என்றாய்
இந்த உரையாடலும்தானே

10
உன்னை மறத்தலென்பது உனக்குப்
பிடித்த நிறத்தைத்
தவிர்த்தல்
அவ்வளவே