1950-வரையிலான தமிழ் பேசும்,பேசாப் படங்களில் தப்பிப் பிழைத்து நம்மிடையே எஞ்சியிருப்பவை மிகவும் சொற்ப எண்ணிக்கையிலானவை. அழிந்துபோன மற்றும் இதுவரை கிடைக்காத படங்களில் காந்தி பற்றிய ஆவணப்படம் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. காந்தியடிகள் நேரடியாக இடம்பெற்ற மற்றும் தொடர்புடைய செய்திப்படங்களை தொகுத்து 1940-இல் வெளியான ஆவணப்படம் ‘மகாத்மா காந்தி-அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்’ என்ற தலைப்பிலானது. இதன் முழுமுதல் பெருமைக்குரியவர் ஏ.கே.செட்டியார்.
‘மகாத்மா காந்தி-அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்’ என்ற படம் காந்தி வாழும் காலத்திலேயே 1940-இல் வெளியானதால் அதுவரையிலான பதிவுகளையே கொண்டமைந்தது. காந்தி இடம்பெற்ற 1912 முதல் 1940 வரையிலான செய்திப்படங்கள் தேடித் தொகுக்கப்பட்ட படம் என்பது அன்றுவரையிலான முதன்முயற்சி. மௌனப்படம், பேசும்படம் இரண்டையும் உள்ளடக்கியவை. அவற்றில் தேவையான இடங்களில் பின்னணி இசையும், பாடல்களும், விவரணைக் குறிப்புகளும் சேர்க்கப்பட்டு திரையிடப்பட்டன. 1940இல் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில் படம் பறிமுதல் செய்யப்படக்கூடிய வாய்ப்பிருந்ததால் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. இந்தியா விடுதலையை எட்டியவுடன் 14.8.1947 அன்று டெல்லியில் காந்தி படத்தை செட்டியார் திரையிட்டுக் காட்டினார். அதன்பிறகு 1948-இல் இந்தி மொழியில் வெளியிட்டிருக்கிறார். முதலிலிருந்தே ஆங்கில மொழியிலும் உருவாக்கும் எண்ணம் செட்டியாருக்கு இருந்தபோதிலும், போதிய பணமின்மையால் முயற்சி தள்ளிக் கொண்டே போனது.
பின்னர் மலேயா, சிலோன்,ஆஸ்திரேலியா, ஃபிஜி ஆகிய நாடுகளில் திரையிட முயற்சி செய்திருக்கிறார். ஃபிஜியில் கிடைத்த பணத்தைக் கொண்டுதான் 1952-இல் அமெரிக்கா சென்றிருக்கிறார். அமெரிக்காவில் படம் முடிவடைய ஓராண்டுக்கும் மேலானது. பின்னர், 10.2.1953 அன்று அமெரிக்க குடியரசுத் தலைவர் முன்னிலையில் பல நாட்டுத் தூதுவர்கள் உட்பட்ட வாஷிங்டன் நகரில் காந்தி படத்தை திரையிட்டிருக்கிறார் (காந்தி படம் பற்றி அதன் பிறகான அவருடைய பதிவுகள் எதும் கிடைக்கவில்லை). அந்தப் படத்தின் பெயர் ‘20 ஆம் நூற்றாண்டின் மாமனிதர்’ (20th Century Prophet). காந்தியின் இறுதிக்காலம் வரை கொண்ட இந்தப் படத்தில், 1940இல் திரையிட்ட படத்தின் பகுதிக் காட்சிகளும், பின்னர் சேர்க்கப்பட்டவைகளும் கொண்டது. 81 நிமிடம் ஓடத்தக்க நீளம் கொண்டது. நல்வாய்ப்பாக இந்தப் படம் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. மேற்காணும் தகவல்களை உள்ளடக்கியதாகவும், காந்தி பட உருவாக்கம் பற்றிய பயணம், நிகழ்வுகள், படத்தின் விவரங்கள் போன்ற பலவற்றையும் பின்னர் ஏ.கே.செட்டியார் அண்ணல் அடிச்சுவட்டில் என்ற தலைப்பில் குமரிமலரில் எழுதினார்.
1978-79 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது அண்ணல் அடிச்சுவட்டில். 1937 முதல் 1940 வரையிலும் அலைந்து திரிந்து தேடிய சம்பவங்களைக் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து நினைவு கூர்ந்து எழுதியிருக்கிறார். 1940க்குப் பின்னரான சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. குமரி மலரில் தொடராக வந்த கட்டு ரைகளையும், மற்ற தொடர்புடைய பகுதிகளையும் இணைத்து ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுப்பு நூலாகப் பதிப்பித்திருக்கிறார். ஆய்ந்து விரிவான ஒரு முன்னுரையும் அளித்துள்ளார். வாழ்க நீ எம்மான்! இதன் முதல் பதிப்பு 2003. இந்த நூலின் உதவியால் ‘20 ஆம் நூற்றாண்டின் மாமனிதர்’(20th Century Prophet) படம் 2005-இல்தான் அடையாளம் காணப்பட்டுள்ளது. இரண்டாவது விரிவாக்கம் செய்யப்பட்ட பதிப்பு 2016.
காந்தி ஆவணப்படத்தோடு சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய நூல் ‘அண்ணல் அடிச்சுவட்டில்’. ஆவணப்
படம் மற்றும் நூல் ஆகிய இரண்டினைப் பற்றியும் ஆ.இரா.வேங்கடாசலபதி மிக விரிவாக எழுதியிருக்கிறார்.
ஏ.கே.செட்டியாரின் 1940ஆம் ஆண்டு வெளியீடான படத்தைப் பற்றிய குறிப்புகளையும், ஒரு படக்காட்சியுடன் 1981 ஆம் ஆண்டிலேயே எழுதி பதிவு செய்தவர் தியடோர் பாஸ்கரன். செட்டியாரை நேரில் பேட்டி கண்டு எழுதினார். (The Messege Bearers –The Nationalist Politics and the Entertainment Media in South India 1880-1945). ஏ.கே.செட்டியார் உலகெங்கும் ஒலிக்கும் ஒரு பெயர்- காந்தி. இதை உலகெங்கும் சுற்றி, கேட்டுணர்ந்து சொன்னவர்
ஏ.கே.செட்டியார்.
உலகம் சுற்றிய தமிழரான செட்டியாருக்கு மேலும் அடையாளங்களும், சிறப்புகளும் உண்டு. பத்திரிகையாளர், பதிப்பாளர். பயணக்கட்டுரைகள் எழுதுவதிலும் மற்றும் ஆவணப்படம் எடுத்ததிலும் முன்னோடி. காந்தி பற்றிய ஆவணப்படத் தொகுப்பை முதன்முதலாக செய்தவர். காந்தியின்மீது பெரும்பற்று கொண்டு காந்தியவாதியாகவே வாழ்ந்தவர். எனவே, பல நற்குணங்களுக்குச் சொந்தக்காரர். காந்திப் பைத்தியங்களுள் ஒருவர். போலவே சினிமாப் பைத்தியமும் கொண்டவர்.
04.11.1911-இல் செட்டிநாட்டு கோட்டையூரில் பிறந்தவர் ஏ.கே.செட்டியார். வெள்ளிக்கிழமையில் பிறந்தவர் என்ற ஒரு குறிப்பு எழுத்தாளர் விட்டல்ராவ் மூலம் கிடைக்கிறது. 03.11.1911 அன்றுதான் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை இரவில், அதிலும் பின்னிரவில் பிறந்திருக்கலாம்.
அ.ராம.அ.கருப்பன் செட்டியார் என்பது முழு நீளப் பெயர். பெயருக்கேற்றாற்போல நல்ல கருப்பு நிறமானவர். திருவண்ணாமலையில் 8 ஆண்டுகள் படித்தார். விக்டோரியா இந்து நடுநிலைப் பள்ளியில் என்பதாக எங்கோ பார்த்த நினைவு. இந்தப் பள்ளிக்கூடம் கிழக்கு கோபுரத்துக்கு அருகில் இன்றும் செயல்படுகிறது.
பர்மாவின் தலைநகரமான ரங்கூனிலிருந்து வெளியிடப்பட்ட தனவணிகன், 1932 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளில் துவக்கப்பட இருந்த தகவல் கிடைத்துள்ளது. அதே நாளில் துவக்கப்பட்டதாகவும் தெரிகிறது. பர்மாவில் செயல்பட்ட நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சங்கத்தின் சார்பாக அதன் செயலாளர் (காரியதரிசி) சா.அ.அ.கதிரேசன் செட்டியார் என்பவரால் நடத்தப்பட்டது. அதன் ஆசிரியராக சில ஆண்டுகள் ஏ.கே.செட்டியார் இருந்துள்ளார். அதன்பின்னர், 1936-இல் ஜப்பானில் டோக்கியோவிலுள்ள கந்தா எனும் பகுதியில் தங்கி, இம்பீரியல் கலைக் கல்லூரியிலும், 1937-இல் நியூயார்க்கில் சலனப்படப்பிடிப்பு (Motion Picture Photography) துறையிலும் பயின்று பட்டம் பெற்றவர். புகைப்படம், திரைப்படம் சம்பந்தமாக உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளிகளுள் அது ஒன்று என்கிறார் செட்டியார்.
1937-இல் பெர்லின், லண்டன், ஹாலிவுட், நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள படப்பிடிப்பு அரங்குகளுக்கு நேரில் சென்று செய்திப் படமெடுக்கும் கலையில் நன்கு தேர்ச்சி பெற்று இந்தியா திரும்பினார். நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் பயணத்தின்போதுதான் காந்தி பிறந்த நாளில், காந்தியைப் பற்றிய செய்திப் படம் எடுக்கும் எண்ணம் செட்டியார் மனத்தில் உதித்தது. அவருடன் பயணித்தவர் ராம்பிரசாத் கோலி. அவர் ஒளிப்பதிவுடன் ஒலிப்பதிவும் கற்ற பொறியாளர். இருவரும் நியூயார்க்கில் படித்தவர்கள்.
அங்கிருந்து புறப்படும் முன்னர், நியூயார்க்கிலிருந்து செயல்பட்ட ‘மோஷன் பிக்சர்ஸ் ஹெரால்டு’ என்ற வார இதழுக்கு அவர் பேட்டியளித்தார். 20.11.1937 தேதியிட்ட இதழில் (பின்னர் தாமதமாக) வெளியானது. “இந்தியாவைப் பற்றி எடுக்கப்படும் செய்திப்படங்கள் உண்மை இந்தியாவைக் காட்டவில்லை. எங்கள் நாட்டு யானைகளையும், குரங்குகளையும், பாம்பாட்டிகளையுமே இதுவரையும் பிரிட்டிஷார் செய்திப்படங்களாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். உண்மையில் எங்கள் இந்தியா என்பது அது மட்டுமல்ல. அதையும் தாண்டிய உண்மையான இந்தியாவை இனி நாங்களே படமெடுப்போம்” என அந்தப் பேட்டியில் சூளூரைத்து தாயகம் திரும்பியவர், செட்டியார். அதைச் செய்தும் காட்டினார். அதுதான் காந்தியின் ஆவணப்படம். ‘என்றோ நிகழ்ந்த ஒன்றை இன்று காண்பதற்கு உதவுவது டாக்குமெண்டரி படம்’ என்ற கச்சிதமான வரையறையை செட்டியார்தான் எழுதியுள்ளார்.
சலனப் படமெடுப்பதில் பிரிட்டிஷாரின் கட்டுப்பாடும் மிகுந்திருந்தது. எனவே, இந்தியர் தன்னிச்சையான செய்திப்படங்களை எடுக்க முடியாத நிலை. அமெரிக்காவில் படிப்பை முடித்து 1937-ஆம் ஆண்டில் திரும்பும்போது, பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவில் காங்கிரஸ் கட்சி சென்னை உட்பட பெரும்பான்மையான மாகாணங்களில் வென்று ஆட்சியில் அமர்ந்தது. அதன் விளைவாக, திரைப்படங்களைத் தணிக்கை செய்யும் பொறுப்பில் இந்தியர்களும் இடம் பெறலாயினர். அதற்கு முன்புவரை, ஆங்கிலேயர்களிடம் மட்டுமே அந்த ஆணை இருந்தது. அந்த அரசியல் மாற்றத்தையும் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டார் செட்டியார். காந்தி ஆவணப்படத்தை தணிக்கை செய்தவர்கள் இருவருமே இந்தியர்கள்தான். இனி எங்கள் விருப்பப்படியும், சொந்தமாகவும் நாங்களே செய்திப் படங்களை உருவாக்குவோம் என்றார். ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற இந்தியர்கள் 12 பேர் ஏற்கனவே ஒளிப்பதிவாளர்களாகி அணியமாயிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
வள்ளியப்பன் ராமநாதன்
முகநூலில் வள்ளியப்பன் ராமநாதன் என்பவர், ஏ.கே.செட்டியார் எழுதிய சில கடிதங்களையும், மேலும் சில ஆவணங்களையும் அப்படியே படியெடுத்து பதிவிட்டிருக்கிறார். வாழ்க நீ எம்மான்!
அவற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற சில சுருக்கமான தகவல்கள்…
காந்தி நினைவு நிதியின் சார்பாக 1950களின் தொடக்கத்தில் காந்தியைப் பற்றிய சலனப்படங்களையெல்லாம் தொகுத்த தேவதாஸ் காந்தி, ஏ.கே.செட்டியாரின் தயாரிப்பைப் பெற்றுப் பாதுகாக்க முயன்றதாகத் தெரியவில்லை/- ஆ.இரா.வேங்கடாசலபதி, அண்ணல் அடிச்சுவட்டில்…
படம் விஷயமாகத் தாங்கள் எழுதியிருப்பதைப் பார்க்க வருத்தமாயிருக்கிறது. நான் வெளி நாட்டிலிருப்பதைக் (ஃபிஜி) காரணம் கொண்டு, தாங்கள் தேவதாஸ் காந்தியிடம் நேரில் பேசி, கூடவோ அல்லது குறையவோ, காரியத்தை நல்ல விதமாக முடித்து விடுவீர்கள் என்று கருதினேன். நமக்கு அதிர்ஷ்டமில்லை. என்றுதான் நமக்கு இருந்தது / 16.1.1951 தேதியிட்ட கடிதத்தில் ஏ.கே.செட்டியார்…
இதன் மூலம் தேவதாஸ் காந்தி ஏ.கே.செட்டியாரின் படத்தை வாங்கவில்லை என்பதும், முயற்சி தோல்வியில் முடிந்ததையும் அறிய முடிகிறது. இந்தியா விடுதலை பெற்ற முன்நாளில் 14.8.1947 அன்று டெல்லியில் காந்தி படம் திரையிடப்பட்டபோது, பார்த்தவர்களில் தேவதாஸ் காந்தியும் ஒருவர்.
1940-ல் திரையிடப்பட்ட படத்தின் 35 மிமீ சுருள்கள் மொத்தம் 12. ஆனால், ஃபிஜி தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 2 பிரதிகளின் சுருள்கள் மொத்தம் 6. ஃபிஜிக்கு சென்றது 16 மிமீ என்பதால் நீளத்திலும், சுருள்களின் எண்ணிக்கையிலும் வேறுபட்டு குறைகிறது என எடுத்துக் கொள்ளலாம். அந்த 2 பிரதிகளில் ஒன்றைத்தான் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றதாகவும் புலனாகிறது. அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது 16மிமீ எனவும், 3 சுருள்கள் எனவும் செட்டியாரும் எழுதியிருக்கிறார். (அதன் தணிக்கைச் சான்றிதழ் எண் 47869. பம்பாய் தணிக்கைக் குழுவால் (மறு)தணிக்கை செய்யப்பட்ட நாள் 13.6.1950). ஒருவேளை ஃபிஜியில் காந்தி படத்தின் பிரதி கிடைக்கலாமோ என்ற நப்பாசையில் இந்த தகவல்கள் பகிரப்படுகிறது.
அண்ணல் அடிச்சுவட்டில்
காந்தியடிகள் வாழும்போதே வெளியான 1940ஆம் ஆண்டு படமும் சரி, 1953ஆம் ஆண்டு படமும் சரி, பார்த்தவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர் என்று செட்டியார் எழுதியிருக்கிறார். பொதுவாக என்னளவு கண்கலங்கும் ஒரு ஆண்மகனை நான் இதுவரை கண்டதில்லை. ஆனால், எனக்கு காந்தி படத்தைப் பார்த்தபோது அவ்வாறு நேரவில்லை. காரணம், படத்தில் உள்ள காட்சிகள், மனிதர்கள், நிகழ்வுகள் ஆகியவற்றின் அருமையை உணரமுடியாததே எனலாம். -சில ஆண்டுகளாவது அன்னிய ஆட்சியில் அவதியுற்று, நாட்டுக்காகச் சிறிதேனும் தியாகம் செய்தவர்கள்தாம் சுதந்திரத்தின் அருமையையும் பெருமையும் நன்கு உணர முடியும்- என்று எழுதியிருக்கிறார் செட்டியார்.
இன்றைய தலைமுறையினர்க்கும், வருங்காலத் தலைமுறையினர்க்கும் காந்தி படத்தின் அருமையையும், விளக்கங்களையும் அளிக்க வல்லதாக அண்ணல் அடிச்சுவட்டில் நூல் அமையும். பழைய சினிமா மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றை உலகளாவிய அளவில் உள்ளடக்கிய பெரிய ஆவணமாகவும் நூல் அமைந்துள்ளது. மேலும், நெகிழ்ச்சியான மற்றும் வாழ்வின்மீது நம்பிக்கையளிக்கும் ஏராளமான நிகழ்வுகளும் நூல் நெடுக உள்ளது. இந்தியா விடுதலை பெறும் நாளில் நமது மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது வானில் வானவில் தோன்றியது என்ற நிகழ்வு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.
‘மகாத்மா காந்தி 1942-இல், Quit India என்றார். ஆனால் ஆத்திரம் கொண்ட தமிழ் பத்திரிகைகாரர்கள் வெள்ளையனே வெளியேறு என்று தவறாக மொழிபெயர்த்தனர். ‘வெள்ளையனே’ என்று காந்தியடிகள் எக்காலத்துக்கும் சொல்லவே மாட்டார் என்கிறார் செட்டியார். இன்றுவரை நீடிக்கும் இந்தக் குறையைப் பாட நூல் குழுவினர் உள்ளிட்ட அனைவரும் கவனிப்பாராக.
காந்தியடிகள் பார்த்த படங்களாக Mission to Moscow, ராம ராஜ்யா (இந்தி) ஆகிய படங்களே இதுவரை குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயினும், நூலில் Woodrow wilson எனும் அமெரிக்கப் படத்தின் பகுதியையும் காந்தியடிகள் பம்பாயில் பார்த்திருக்கிறார் என்று செட்டியார் எழுதியிருக்கிறார். அது பற்றி அறிய முடியவில்லை.
நூலில் கிடைக்கும் விவரங்களிலிருந்து தேடியெடுத்த சில குறிப்புகள் மட்டும்…
1940-இல் வெளியான படம்
12,000 அடி நீளம் கொண்ட படம் 2 மணி நேரம் ஓடியது. அது நிச்சயம் 35மிமீ படம்தான். அதில் இடம்பெற்றவை என்ன? செட்டியார் ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்.
-இந்தக் காங்கிரஸ் மகாசபைப் படங்களும் மற்றும் காந்தியடிகளை மையமாகக் கொண்டு எடுத்த படங்களும், வெளி நாடுகளில் காந்தியடிகளைப் பற்றி எடுத்த படங்களும், நாங்கள் தனியே எங்களுக்காக எடுத்த 10,000 அடி படங்களும் கொண்டதுதான் இந்த டாக்குமெண்டரி பிலிம்.
ரோம் நகரில் சினிசிட்டாவில் கிடைத்தது சுமார் 300 அடி. பாசிஸ்ட் இயக்க சிறுவர்களும், இளைஞர்களும் அணிவகுத்து காந்திக்கு மரியாதை செய்யும் காட்சி.
தண்டி யாத்திரை, பம்பாயில் போர்பந்தரில் தடியடி நிகழ்வை உள்ளடக்கியது- 1000 முதல் 1200 அடி.
திலகர் இறுதி ஊர்வலம்-1920ஆம் ஆண்டு – ஃபால்கே எடுத்தது- 400 அடி.
1912-இல் கோகலேயின் தென்னாப்பிரிக்க வருகை – 200அடி
அமெரிக்காவின் பாதே(PATHE) செய்திப்பட நிறுவனம் அளித்த 1080 அடி. முழுதுமே பயன்படுத்தப்பட்டது.
1934- பம்பாய், காங்கிரஸ் மாநாடு- ரஞ்சிட் ஃபில்ம்ஸ்- 6000 அடி எடுத்தனர். 200 அடி மட்டும் பயன்படுத்தப்பட்டது.
2000 பெண்கள் ராட்டை சுற்றும் காட்சி – 400 அடி நீளம் (செட்டியாரால் எடுக்கப்பட்ட 10,000 அடிகளில் அடங்கும்)
இவையெல்லாம் அடங்கிய படம்தான் 1940-இல் காட்டப்பட்டது.
இதே படத்தைத்தான் விடுதலை நாளில் டெல்லியில் திரையிட்டிருக்கிறார். அப்போது மொத்தம் 12 சுருள்களில் 10 தமிழிலும், 2 சுருள்கள் தெலுங்கிலும் இருந்தன என்கிறார் செட்டியார்.
பின்னர் 1948-இல் ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.
1953-இல் வெளியானபடம்
’’இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எடுத்திருந்த செய்திப்படங்களில் காந்தியடிகளைப் பற்றிய பகுதிகளைச் சேகரித்தும், பிற்காலத்தில் காந்தியடிகள் கூடவே இருந்து நிகழ்ச்சிகளைப் படம்பிடித்துச் சேர்த்தும் தொகுக்கப் பெற்றது காந்தியடிகள் வாழ்க்கைப் படம்.
அப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி முதலிய மொழி
களில் விளக்க உரையுடன் தயாரிக்கப் பெற்றது. அதனை ஆதாரமாகக் கொண்டு ஆங்கில விளக்க உரையுடன் அமெரிக்காவில் படத்தயாரிப்பு தொடங்கியது’’ என்கிறார் செட்டியார்.
ஆசியக் கலாசாரப் பயிற்சிக்கான அமெரிக்கக் கழகம் (American Academy Of Asian Studies) சான்ஃப்ரான்சிஸ்கோவில் துவக்கப்பட்ட செய்தியை பிஜித் தீவில் இருந்தபொழுது ஓர் அமெரிக்க பத்திரிகையில் படித்தார் செட்டியார். அக் கழகத்தின் தலைவரான லூயி பி.கெயின்ஸ்பரோவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன்படி, காந்தி படம் ஆங்கிலத்தில் எடுக்க ஏற்பாடானது.
இது நடந்தது 1952-53 என்பதால், 1940க்குப் பிறகான காந்தியின் வாழ்க்கை சம்பவங்கள் , இறுதிச் சடங்கு,
சாம்பல் கரைப்பு, ஐ.நா. சபையினரின் அஞ்சலி உள்ளிட்ட நிறைய பிற்காலச் சேர்க்கைகள் கொண்டதாக 2 ஆவது படம் அமைந்துள்ளது. எனினும், முதல் படத்தின் சில காட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. 81 நிமிடங்கள் ஓடியது. 16மிமீ, 35மிமீ ஆகிய இரண்டு அளவுகளிலும் நகல்கள் எடுக்கப்பட்டன.
டி.கே.பட்டம்மாள் பாடிய ஆடுராட்டே , தெலுங்கு நடிகையும், பாடகியுமான பெஜவாடா சி.ராஜரத்தினம் என்கிறவர் பாடிய தெலுங்குப் பாடலின் ஒருசில வரிகள் மட்டும் இப்படத்தில் அசரீரியாக (Montage) ஒலிக்கிறது. 1940 படம் மேலும் சில பாடல்கள் முழுமையாகக் கொண்டது. ஆடுராட்டே பாடலும், சூர்யகுமாரி பாடிய பாடலும் இசைத்தட்டுகளிலிருந்து பெறப்பட்டு, சமூக வலைத்தளங்களில் கிடைக்கின்றன.
பட உருவாக்கப் பணிகள் முடிந்து 10.2.1953 அன்று, அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்பட பலரின் பார்வைக்கு வாஷிங்டன் நகரில் திரையிடப்பட்டது.அதன் பின்னர் நியூயார்க் நகரில் திரையிடப்பட்ட சான்று கிடைக்கிறது.
கல்லூரிகள், தேவாலயங்கள் போன்ற இடங்கள் மற்றும் சினிமா கொட்டகைகளிலும் திரையிடும்படி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. Ideal Pictures Inc. என்ற நிறுவனத்திற்கு உலகம் முழுக்க வினியோகிக்கும் உரிமை அளிக்கப்பட்டது. வருவாயில் பாதியை ஆசியக் கலாசாரப் பயிற்சிக்கான அமெரிக்கக் கழகத்திற்கும், மீதிப் பாதியை இந்தியாவில் காந்தியத்தை வளர்ப்பதற்கும் பயன்படுத்தவேண்டும் என்று ஒப்பந்தமானது. 20 ஆண்டுகள் கடந்த பின்னர் மீண்டும் இந்தியாவின் சொத்தாக இந்திய அரசாங்கத்திற்கே திருப்பியளிக்கப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, 1973ஆம் ஆண்டில் நடந்ததா எனத் தெரியவில்லை. 1982ஆம் ஆண்டில், ‘காந்தி ஆவணப்படத்தை டெல்லியிலுள்ள காந்தி அருங்காட்சியகத்திற்கு அளித்துவிடுவேன்’ என்று செட்டியார் சொன்னதாக, நேரில் கேட்ட விட்டல்ராவ் குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவில் திரையிடப்பட்ட 81 நிமிட நேரம் கொண்ட படம்தான் தற்போது காணக்கிடைக்கிறது(archive.org). முதல் படம் கிடைக்க
வேயில்லையென்றால் இவற்றைக் கொண்டும், அண்ணல் அடிச்சுவட்டில் நூலைக் கொண்டும் ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
1912 முதல் 1948 வரை காந்தியடிகளை உயிரோவியமாகக் காட்டும் இந்தப் படம், பிற்காலத்தில் காந்தியை ஒரு புதிய மதத் தலைவராகவோ, கடவுளாகவோ, கற்பனைப் பாத்திரமாகவோ மாற்றிவிடாமல் தடுக்க உதவும்.
காந்தியை நேரில் கண்டவர்கள் வாழும் காலமிது.காந்தி படத்தின் அருமை வருங்காலத்தில் ஆண்டுகள் செல்லச் செல்ல கூடிக்கொண்டே போகும்.
1940இல் வெளியிடப்பட்ட 2 மணி நேரம் ஓடக்கூடிய 12 ரீல் படம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் ஆ.இரா.வேங்கடாசலபதி, சு.தியடோர் பாஸ்கரன் போன்றோர்.
’’உலகம் முழுமையும் அதற்காக அலைவேன். ஒவ்வொரு செய்திப்படக் கம்பெனிக்கும் செல்வேன்.உலகத்தில் பல்வேறு பாகங்களிலுள்ள படக்குவியல்களில் தேடுவேன்.சினிமாப் பட லைப்ரரிகள் ஒன்று தவறாமல் பார்ப்பேன். எப்படியும் சேகரிப்பேன்.’’
காந்தி படத் தொகுப்புக்காக 1937-இல் ஏ.கே.செட்டியார் சொன்னவை இவை. செய்தும் காட்டினார். இப்போது நம்மிடையே ஏ.கே.செட்டியார் இல்லையே…
நன்றி
* திருவாளர்கள் – 1. ஆ.இரா.வேங்கடாசலபதி, 2.தியடோர் பாஸ்கரன், 3.விட்டல்ராவ்
* அண்ணல் அடிச்சுவட்டில் – ஏ.கே.செட்டியார் – பதிப்பாசிரியர் – ஆ.இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம்
* Archive.org.
muthuvelsa@gmail.com