ஒரு தடவை

ஒரு தடவைக்குமேல்
ஒரு இலை
மரத்திலிருந்து
உதிர்வதில்லை
ஒரு தடவைக்கு மேல்
அதைக் குனிந்து
எடுக்க முடிவதில்லை
இந்த
ஒருதடவைப்பிரபஞ்சத்தின்
விளிம்பில்
அமர்ந்திருக்கிறேன்
ஒரு தடவையாவது அவளின்
கண்கள் என்மேல்
படவேண்டுமென்று
ஒருதடவை கூட
அரசர்களின் கண்கள் என்மேல்
பட்டுவிடக்கூடாதென்று

லிப்ட்

லிப்டில்
அருகில் நின்றவளை
ஒரு விநாடி பார்த்தேன்
சாலையில்
மரண ஊர்தியில்
செல்பவரை ஒரு விநாடி பார்த்தேன்
இரும்படிக்கும் லேத் பட்டறையில்
ஓங்கிய கையை ஒரே ஒரு விநாடி பார்த்தேன்
ஒரு விநாடி என்னும் எரி
நட்சத்திரங்கள்  வெடிக்கும் இருளில்
நின்று கொண்டிருக்கிறேன்
வருத்தமாக இருக்கிறது

தலைகீழ் மலர்

பூங்காவிலிருந்து,
நீலநிற ஆடை போர்த்திய
கைக்குழந்தையோடு
வெளியே வருகிறாள்
இளந்தாய்
விரியத்திறந்து கிடக்கும்
இரும்பு கேட்டைக் கடக்கையில்
தாழக்குனிந்து
குழந்தையின் கன்னத்தில் ப்ச்
என்று முத்தமிடுகிறாள்
சாலையில் நின்று கொண்டிருந்த என்னுள்
ஒரு தலைகீழ் மலர் அசைந்து
உதிர்ந்தது
பூமிக்கு வந்த மலர்கள்
இப்படி வந்தவைதான் போலும்