1938 ஆம் ஆண்டு  சார்லஸ் சாமுவேல் ஆடம்ஸ் (Charles Samuel Addams) என்னும் வியாபாரி பேய்வீடு போன்ற ஒரு மேன்சனில் தங்குகிறார். அவர் வியாபாரி மட்டுமில்லை, Freelance கார்ட்டூனிஸ்டும்கூட. பேய்வீடு போன்ற அந்த மேன்சன் அவருக்கு ஒரு கேலிச்சித்திரத்தை வரையத் தூண்டுகிறது. திகிலான வீட்டுக்குள் இறுக்கமான முகத்தோடு இருக்கும் தம்பதிகளிடம் பணியாள் ஒருவர், “Vibration less, noiseless and a great time and back saver, No well- appointed home should be without it” என்று Vacuum Cleaner பற்றிக் கூறுவதுபோன்ற கேலிச்சித்திரத்தை வரைந்து The New Yorker பத்திரிகைக்கு அனுப்புகிறார். பிற்காலத்தில் The Addams Family தொலைக்காட்சித் தொடர்களும், காமிக்ஸ் புத்தகங்களும், வீடியோ கேம்ஸ்களும் தோன்றுவதற்கு இந்தக் கேலிச்சித்திரம்தான் அடிப்படையாக அமைந்தது.

ஆடம்ஸ் Charles ‘Chaos’ Addams என்ற புனைபெயரில் தன் வாழ்நாளெல்லாம் கேலிச்சித்திரங்கள் வரைந்துள்ளார். இயல்பாகவே Dark Humor உணர்வு கொண்டவர். மனிதர்களை, உணர்வுகளை, இறப்புகளை, கேளிக்கைகளை உணர்வற்ற முகத்தோற்றம் கொண்ட படங்களை வைத்துக் கிண்டலாக இவர் வரைந்த கேலிச்சித்திரங்கள் பரவலாகப் புகழப்பெற்றன. இவர் வரைந்த சில படங்களைத் தொகுத்து ஒரு கதையாக்கலாம் என முடிவு செய்தார்கள். கேலிச்சித்திரங்களிலிருந்து கதாபாத்திரக் குணநலன்களை  உருவாக்கினார்கள். கணவன் Gomez மனைவி Morticia, மகள் Wednesday, மகன் Pugsley  ஆகியோர் குடும்ப உறுப்பினர்கள். இவர்களைத் தவிர Uncle Fester, Lurch, Grandmama போன்றவர்களும் கதையில் வருவார்கள்.

கதையின் மையக் கரு இதுதான், இடியே விழுந்தாலும் ஆடம்ஸ் குடும்பத்தினர் அமைதியாக இருப்பார்கள். எவ்வளவு நகைச்சுவை என்றாலும் சிரிக்கமாட்டார்கள். ஊரே அழுகும்போது சிரித்து வைப்பார்கள். சாதாரண மனிதர்களைப்போல் இல்லாமல் கரடுமுரடான உணர்வோடு வாழ்வார்கள். சுருக்கமாக ஆடம்ஸ் குடும்பத்தை மூன்று வார்த்தைகளில் விளக்குகிறார்கள் Kooky Spooky Ooky ( பைத்திய நிலை, பேய் நிலை, மகிழ்வற்ற நிலை) இதை வைத்து 1964-65 இல் ABC Original TV முதன்முதலில் The Addams Family என்ற தொலைக்காட்சித் தொடரைத் தயாரித்தது.  1977இல் Halloween with the New Addams Family என்ற படத்தை எடுத்தனர். 1991 மீண்டும் The Addams Family என்ற படத்தை எடுத்தனர். இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதில் Wednesday என்ற கதாபாத்திரத்தில் நடித்த Christiana Ricci இன்றும் நினைவுகூரப்படுகிறார்.

தொடர்ந்து இந்தக் கதை மேலும் ஆறு முறை தொலைக்காட்சித் தொடராகவோ அல்லது திரைப்படமாகவோ எடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர ஆடம்ஸ் குடும்பத்தினரை மையமாக வைத்து இசைத்தொகுப்புகளும் வீடியோகேம்ஸ்களும் பல வந்திருக்கின்றன. அந்த வகையில் தி ஆடம்ஸ் ஃபேமிலியின் நீட்சியாக சென்ற  ஆண்டு (2022) நவம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் வெளிவந்த வெப் சீரீஸ்தான் Wednesday. இந்த வெப் சீரீஸில் ஆடம்ஸ் குடும்ப உறுப்பினர்கள் சிறிது நேரம் வந்தாலும், அந்தக் குடும்பத்தில் இருக்கும் வென்னெஸ்டே என்பவளை மட்டுமே மையப்படுத்திய கதை என்பதால் இதனை  The Addams Family-யின் Spin off என்கிறார்கள்.

ஹாரி பாட்டர், தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ், எக்ஸ் மேன், அயர்ன் மேன், ஸ்பைடர் மேன் போன்ற  சக்தி வாய்ந்த மனிதர்களின் கதைகள் பல வந்துள்ளன. இணைய தளத்தைத் திறந்தால் ஹாரர் படங்கள்தான் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றிற்கிடையில் Wednesday (The Addams Family) புகழ்பெறுவதற்கான காரணம் என்ன? சென்ற நவம்பரில் நெட்பிளிக்ஸில் வெளிவந்த இந்தத் தொடர் மிக அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். ‘அப்படி என்னதான் இந்தத் தொடரில் இருக்கிறது?’ என்று நினைத்துக்கொண்டு இந்தத் தொடரைப் பார்த்தேன். சாதாரணத் தொடரிலிருந்து இது வேறுபட்டிருக்கிறது என்று தோன்றியது. என்றாலும் முழுமையாகப் புரிந்துகொள்ள இதன் பூர்வீகத்தைப் படித்துப் புரிந்துகொண்டேன். மீண்டும் Wednesday வெப் சீரீஸைப் பார்த்த போதுதான் ஏன் இந்தத் தொடர் இவ்வளவு புகழ்பெற்றிருக்கிறது என்பது விளங்கியது.

Wednesday அல்லது The Addams Family கதைகளைப் புரிந்துகொள்வதற்கு நாம் அடிப்படையான சில தர்க்கக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். டெல்லியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் நாடே பேசுகிறது. விழுப்புரத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் நாம் யாருமே வாய்திறப்பதில்லை! சுவாதி கொலைக்காகத் தமிழ்நாடே பதறியது! ஆனால் விஷ்ணுப்பிரியாவின் கொலைக்காக நாம் எத்தனைபேர் பதறினோம்? இங்கு கொலை செய்யப்படுவது பிரச்சனையில்லை. யார் கொலைசெய்யப்பட்டார் என்பதுதான் முக்கியம். இந்த மனித உளவியலைத்தான் எட்கர் ஆலன் போ, “The death, then, of a beautiful woman is, unquestionably, the most poetic topic in the world” என்று கூறுகிறார். எட்கர் ஆலன்போவின் psychoanalysis பார்வைதான் Wednesday வெப் சீரீஸ் முழுவதும் நிறைந்திருப்பதாகக் கூறுகிறார்கள். குறிப்பாக வென்னெஸ்டே பேசும் வசனங்கள் எல்லாம் Poe-etic என்கிறார்கள். Poe-etic  என்றால் Edkar Allan Poe text என்று பொருள். பிற ஹாரர் படங்களைவிட, சூப்பர் பவர் மனிதர்களின் படங்களைவிட Wednesday இந்த இடத்தில்தான் classical-லாக மாறுகிறது.

Wednesday வெப் சீரீஸின் கதை இதுதான்: The Addams Family-யைச் சேர்ந்த வென்னெஸ்டே (மகள்) பக்ஸ்லீ (மகன்) ஒரு பள்ளியில் படிக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு கனவைத் தொலைத்தவர்கள்தான் அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துகிறார்கள். அந்தப் பள்ளிக்கூடத்தைப் பிடிக்கவில்லை. ஆனால் அந்த sadism பிடித்திருப்பதாக வென்னெஸ்டே சொல்கிறாள். அந்தப் பள்ளியில் வென்னெஸ்டேயின் தம்பி பக்ஸ்லியைக் கட்டிவைத்திருக்கிறார்கள். அவனை மீட்கும்போதுதான் வென்னெஸ்டே முதன் முதலில் உள சக்தியை (Psychic Ability) உணர்கிறாள். அந்த உள சக்தியின்மூலம் தம்பிகளைக் கட்டிவைத்தவர்கள் யார் என்பதை அறிகிறாள். அவர்கள் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும்போது, கடித்துக் கொல்லும் மீன்களை அதில் போடுகிறாள். இதனால் ஒருவன் இறந்துபோகிறான். இன்னொருவன் படுகாயமடைகிறான்.

வென்னெஸ்டேயைப் பள்ளியிலிருந்து நீக்கிவிடுகிறார்கள். ஐந்து வருடத்தில் எட்டுமுறை பள்ளிக்கூடங்களை மாற்றியிருக்கிறாள். ஆடம்ஸ் குடும்பம் தன் மகளுக்கான பள்ளியாக நெவர்மோர்தான் (Nevermore) இருக்கமுடியும் என நினைக்கிறார்கள். அவர்களும் அங்கு படித்துப் பட்டம் பெற்றவர்கள்தான். அதனால் வென்னெஸ்டயை நெவர்மோர் கல்வி நிறுவனத்தில் சேர்க்கிறார்கள். வென்னெஸ்டேவுக்கு வண்ணங்கள் பிடிக்காது; கொண்டாட்டங்கள் பிடிக்காது; சிரிக்கப் பிடிக்காது; கட்டிப்பிடித்தல் பிடிக்காது. சமூக வலைதளங்கள் எல்லாம் ஆத்மாவை உறிஞ்சி விடுகின்றன என்பது அவளது கொள்கை. கூடவே அவள் மனநிலை மாறுபட்டவளும்கூட (Psychic). நெவர்மோர் கல்வி நிறுவனம் Outcaste, Freaks, Monster ஆகியோருக்காக உருவாக்கப்பட்டது. அந்தக் கல்வி நிறுவனம் வென்னெஸ்டேவுக்கும் ஏற்றதுதான் என நினைக்கிறார்கள்.

பழங்கால கிரீஸ் நாட்டில் ஒருவர் தவறு செய்துவிட்டால் அவரை வைத்துக்கொள்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து அங்குள்ள மக்கள்
களிமண் ஓட்டில் எழுதி வைப்பார்கள். அதிகமானவர்கள் வாக்களித்துவிட்டால் தவறு செய்தவர்களைக் கூட்டத்தை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். இப்படிச் செய்வதை Ostracism என்று அழைப்பார்கள். அதிலிருந்து வந்ததுதான் Outcaste. இப்போதும் சேட்டை செய்யும் மாணவரை வகுப்பைவிட்டு வெளியே நிற்க வைத்துவிடுகிறார்கள் இல்லையா! ஐரோப்பிய புராணங்களிலும், நாட்டுப்புறக் கதைகளிலும் சொல்லப்படும் Werewolves (ஓரு முழு நிலவு நாளில் ஓநாயாக மாறிவிட்டு மீண்டும் மனிதர்களாக மாறுபவர்கள்), Vampires (ரத்தக்காட்டேரிகள்), Siren (பாதிப் பறவை பாதிப் பெண் உருவங்கொண்டு சத்தம்போட்டு பாடுபவர்கள்), Gargone (கல்லாக மாறுபவர்கள்) Psychic (மனநிலை மாறுபட்டவர்கள்) ஒதுக்கப்பட்டவர்கள் ஆகிய அனைவரும்  நெவர்மோர் கல்வி நிறுவனத்தில் மாணவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இயல்பான மக்களை normie என்று அழைப்பார்கள். ஓர் normie ஆசிரியையும் அந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறாள்.

நெவர்மோர் கல்வி நிறுவனம் 1791-இல் ஆரம்பிக்கப்பட்டது (நெவர்மோர் என்ற கற்பனை கல்வி நிறுவனம் எட்கர் ஆலன்போவின் கதையிலிருந்து எடுக்கப்பட்டது) 1625-இல் Goody Addams என்பவள் Crackstone என்பவரைக் கொன்றிருப்பாள். அந்தக் கிராக்ஸ்டோன் என்பவரின் நிலத்தில்தான் நெவர்மோர் கல்வி நிறுவனம் கட்டப்பட்டுள்ளது. கூடி ஆடம்ஸ் என்பவள் வென்னெஸ்டே என்பவளின் முன்னோர் தலைமுறை.

அவளுடைய Psychic ability மூலம் அடிக்கடி கூடி ஆடம்ஸைப் பார்க்கிறாள். ஆரம்பத்தில், வென்னெஸ்டே நெவர்மோர் கல்வி நிறுவனத்தை விட்டு ஓடிவிட வேண்டும் என்று நினைக்கிறாள். அப்படித் தப்பிக்க நினைக்கும் ஒருநாளில் அவளோடு படிக்கும் ரோவன் என்பவனை மான்ஸ்டர் ஒன்று கடித்துச் சாகடிப்பதைப் பார்க்கிறாள். நெவர்மோரை உருவாக்கிய நாதெல்னிய ஃபால்க்னரை Hyde என்ற இனத்தைச் சேர்ந்தவன் கொன்றிருப்பான். அதனால் நெவர்மோரில் அவனுக்கு மட்டும் இடமில்லை எனச் சொல்லியிருப்பார்கள். அந்த ஹைடுதான் இன்று மான்ஸ்டராக மாறி பலரைக் கொன்று குவித்து வருகிறான். இவன் யார் என்பதைக் கதையின் முடிவில் சொல்கிறார்கள்.

ரோவன் இறந்த விசயத்தை, வென்னெஸ்டே நெவர்மோர் கல்வி நிறுவன முதல்வர் வீம்ஸிடம் சொல்கிறாள். வீம்சாலும் நடக்கும் விசயங்களைப் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் நெவர்மோரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு வாழ்கிறாள். அந்தக் காட்டில் அடிக்கடி நடக்கும் கொலைகளுக்கு நெவர்மோரில் இருப்பவர்கள்தான் காரணம் என்ற கதை ஜெரிக்கோ நகரத்தில் இருக்கும் மக்களிடையே பரவியிருக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷெரிஃப் என்பவரும், நெவர்மோர் கல்வி நிறுவனம் அமைந்திருக்கும் ஜெரிக்கோ என்ற நகரத்தின் மேயரும், அந்தக் காட்டில் கரடிதான் எல்லோரையும் கடித்துக்கொள்கிறது என்று சொல்லிவருகிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது என்று அவர்களுக்கும் தெரியாது. ஆனால் மக்கள் நெவர்மோரை எதிர்த்துக் கலகக் குரல் கொடுத்துவிடக்கூடாது என நினைத்து அப்படிச் சொல்கிறார்கள்.

எதிர்பாராத திருப்பமாக, இறந்துபோனதாகச் சொல்லப்படும் ரோவன் அடுத்தநாள் கல்வி நிறுவனத்தில் உயிரோடு வந்து நிற்கிறான். அதனால் வென்னெஸ்டே சொன்னதெல்லாம் பொய்யாகிவிடுகின்றன. யார் என்ன சொன்னாலும் வென்னெஸ்டே நம்புவதற்குத் தயாராக இல்லை. நெவர்மோர் அமைந்திருக்கும் அந்தக் காட்டுக்குள் ஒரு மான்ஸ்டர் இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என நினைக்கிறாள். அதனால் நெவர்மோரை விட்டுப் போகும் எண்ணத்தைக் கைவிடுகிறாள். நான்ஸி ட்ரீவ் என்பவர் இளைஞர்களின் மனம்கவர்ந்த இளம் புலனாய்வாளர். ஷெர்லாக் ஹோம்ஸ் போல. வென்னெஸ்டேயின் விருப்பமும் நான்ஸி ட்ரீவைப் போல இளம் வயது புலனாய்வாளராகவும், எழுத்தாளராகவும் ஆக வேண்டும் என்பதுதான். அதனால் அவள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையே புலனாய்வு செய்து, அதைக் கதையாகவும் எழுதத் தொடங்குகிறாள்.

அவளுடைய புலனாய்வுக்கான முதல் க்ளூ outreach நாளுக்காக சென்ற இடத்தில் கிடைக்கிறது. அங்கு ஒரு இடத்தைத் தொடுகிறாள், தொட்டதும் ஷாக் அடித்ததுபோல மயக்கமாகிறாள். அந்த நேரத்தில் அவளுடைய உள சக்தி (Psychic ability) வெளிப்படுகிறது.  அவளுடைய உள சக்தியினால் கூடி ஆடம்ஸைப் பார்க்கிறாள். கூடி ஆடம்ஸ் மூலம் வென்னெஸ்டே தன்னுடைய பூர்வீகக் கதையை அறிகிறாள். அந்த பூர்வீக வாழ்க்கையில், கிராக்ஸ்டோன் என்பவன் ஒரு வந்தேறி, அவன் அங்குள்ள பூர்வ குடி மக்களை எல்லாம் விரட்டியடிக்கிறான். கூடி ஆடம்ஸ் கிராமத்தைச் சார்ந்தவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் கட்டிவைத்து அவர்கள்மேல் சாத்தான் இறங்கியிருக்கிறது என்கிறான். ஒரு குடிசையில் அவர்களை எல்லாம் அடைத்துத் தீவைத்துக் கொளுத்திவிடுகிறான். அந்த இடத்திலிருந்து கூடி ஆடம்ஸ் மட்டும் தப்பி ஓடுகிறாள்.  1625இல் கூடி ஆடம்ஸ் கிராக்ஸ்டோனைக் கொன்றுவிடுகிறாள். கொன்றாலும் கிராக்ஸ்டோனை அவனுடைய ஆட்கள் சவப்பெட்டியில் வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள். என்றாவது ஒருநாள் அவன் உயிர்பெற்றுவருவான்.  அப்படி வந்தான் என்றால் கிராக்ஸ்டோனுக்கு எதிராக இருக்கும் ஒதுக்கப்பட்டவர்களை எல்லாம் அழித்து ஒழிப்பான் எனக் காத்திருப்பார்கள்.

வென்னெஸ்டே ஒரே நேரத்தில் மூன்று காலங்களைப் பற்றிச் சிந்திக்கிறாள். அவளைப் பற்றியும் கிராக்ஸ்டோன் பற்றியும் ரோகன் என்பவன் வரைந்த ஓவியம் எதிர்காலத்தில் நிச்சயமாக நடக்கப்போகிறது என நினைக்கிறாள். கூடி ஆடம்ஸ் கிராக்ஸ்டோனை எச்சரித்த விசயங்கள் எல்லாம் கடந்த காலத்தில் நடந்தவை. ஒரு மான்ஸ்டர் அவளைச் சுற்றி அலைவது நிகழ்காலத்தில் நடக்கிறது. மூன்றும் தற்செயலானதா? வென்னெஸ்டேவுக்கு தற்செயல் என்பதில் எல்லாம் நம்பிக்கை இருக்காது. அப்படியென்றால் மூன்று காலத்திற்கும் ஏதோ பிணைப்பு இருக்கிறது என நம்புகிறாள். எதிர்பார்த்தபடியே கிராக்ஸ்டோன் மீண்டும் உயிர்பெற்று வருகிறான். அவனை வென்னெஸ்டே எப்படி அழிக்கிறாள் என்பதையும்; காட்டில் ஒரு மான்ஸ்டர் இருக்கிறதே அது யார்? ஏன் எல்லோரையும் கொல்கிறது. அதை வென்னெஸ்டே எப்படிக் கண்டறிகிறாள் என்பதையும்; வென்னெஸ்டே வாழ்விற்கும் நடக்கும் சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு என்பதையும் மிஸ்ட்ரி, ஹாரர், பிளாக் ஹ்யூமர் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

இதுபோன்ற மந்திர தந்திரக் கதைகள் ஆயிரம் ஆயிரம் வந்துவிட்டன என்றாலும் திகிலும், கிண்டலான நகைச்சுவையும் கலந்த கதாபாத்திரங்களை உலவவிடுவது
தான் Wednesday, The Addams Family ஆகிய படங்களின் புதுமையான கதைக்கூறு (motif). எளிய விசயங்களைக் கொண்டாடும் மனிதர்களை: எளிய விசயங்களுக்காக வருந்தும் மனிதர்களை; வெற்றிக்காக மகிழும் மனிதர்களை: தோல்விக்காக அழும் மனிதர்களை The Addams Family உறுப்பினர்கள் அமைதியாகக் கடக்கிறார்கள். அவர்களுடைய பார்வை, மௌனம், செயல் சாதாரண மனிதர்களைவிட வெகுதொலைவில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். மற்றவர்கள்தான் போலியாக வாழ்கிறார்கள் என்று நினைக்க வைக்கிறார்கள். அப்போது சாவுக்களை நிறைந்த முகத்தோடு அவர்கள் நம்மைப் பார்க்கிறார்கள். நமக்கு பயம் ஒருபக்கம் இருந்தாலும் அதை மறந்து குபீர் என்று சிரிக்கிறோம். இதுதான் Wednesday, The Addams Family தொடர்களின் வெற்றி.

இதுபோன்ற தொடர்களை எடுப்பதற்கு Tim Burton மிகப் பொருத்தமானவர். அவர் எட்டு எபிசோட்கள் கொண்ட இந்த வெப் சீரீஸின் முதல் நான்கு எபிசோட்களை இயக்கியுள்ளர். பேட்மேன், சார்லீ அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி, Big Fish போன்று அவர் இயக்கிய படங்கள் சிலவற்றை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். எனக்கு அவருடைய படங்களில் Big Fish மிகவும் பிடிக்கும். கனவுக்கும் நனவுக்கும், உண்மைக்கும் கட்டுக்கதைகளுக்கும் இடையில் உள்ள கோட்டை அவர் அழித்துவிடுவார். எது உண்மை எது பொய் எனக் குழம்பி நிற்கும் மயக்கம்தான் அவருடைய படங்களின் தனித்தன்மையாக இருக்கும். அதேபோல அவருடைய படங்களில் இடம்பெறும் நகைச்சுவை கலந்த வசனங்கள் நம்மை அசரவைக்கும்.

Wednesday என்ற இந்த வெப் சீரீஸின் வசனங்கள் எல்லாம் எட்கர் ஆலன் போவின் sarcasm-த்தை உள்வாங்கியிருப்பதால், அவை நம்மை அதிபயங்கரமாக ஈர்க்கின்றன. சான்றாக சில,

எமோசன்றது ஒரு கதவு மாதிரி, அது உணர்வுகளைத் தாண்டி கண்ணீரை வரவழைக்கும். எனக்கு அழப் பிடிக்காது.

மத்தவங்க என்னை வெறுக்குறத நான் கண்டுக்கமாட்டேன். ஏன்னா அதுல நான் மகிழ்ச்சிய அனுபவிக்கிறேன்.

இத மட்டும் என்னைக்கும் விட்டுறாத, மத்தவங்க எத சொன்னாலும் அதைக் கண்டுக்காம இருக்குறத.

வித்தியாசமான செடிகள் எல்லாம் நிழல்லதான் வளரும்.

பிடிக்காதவங்கள பழிவாங்குறதுல இருக்குற சுகமே தனி.

ரகசியங்கள் Zombies மாதிரி அது எப்பவுமே அழிஞ்சு போகாது.

குற்றத்தைவிட அதை சமாளிக்கிறதுதான் ரொம்ப மோசமா இருக்கும்.

எனக்கு சொர்க்கம் நரகம் என்பதில் நம்பிக்கை இல்லை. ஆனால் பழிவாங்கப் பிடிக்கும்.

உண்மையை மறைக்கிறவர்கள் எல்லாம் பொய்யான சரித்திரத்திற்குத் துணைபோவார்கள்.

சரித்திரத்தை ஒண்ணு நாம எழுதணும், இல்ல அவங்க எழுதணும். ஒரே கதைய ரெண்டுபேரும் எழுதமுடியாது.

வற்புறுத்தி உதவி செய்யச் சொல்றது எனக்கு சுத்தமா பிடிக்காது. மறைக்கப்பட்ட சரித்திரமா இருக்கட்டும், நல்ல முடிவுகளா இருக்கட்டும், எதுவும் பிடிக்காது. எல்லாத்தையும்விடதற்செயல்ன்றத நான் நம்பமாட்டேன்.

அகதா கிறிஸ்டி சொன்னத நான் கொஞ்சம் மாத்தி சொல்றேன். தற்செயலா ஒரு விசயம் ஒரு தடவ வேணா நடக்கலாம். ரெண்டாவது தடவ அது நடந்தா க்ளூ. மூணாவது தடவ அது நடந்தா ஆதாரமா ஆயிரும்.

ஒருசில நேரத்துல நாம எதிர்பார்க்காததுதான் ஆபத்தா முடியும்.

நீயும் நானும் சொந்தமா யோசிக்கணும். இந்தப் பெரியவங்க சொல்ற பொய்வலைல சிக்கி விழுந்துறக்கூடாது. நாம் யார் என்னன்னு அவங்க சொல்லித்தான் புரியணும்னு அவசியம் இல்ல.

காட்டாற யாராலும் தடுக்க முடியாது. மூழ்கிப் போகாம அதை திசைதிருப்பப் பாரு!

யாரும் கெட்டத கெட்டதா நினைச்சு செய்ய
மாட்டாங்க. அதுல இருக்குற நல்லத நினைச்சுத்தான் செய்வாங்க.

சிறந்த எழுத்தாளர்களிடமும், சீரியல் கொலைகாரர்களிடமும் சமூகத்திலிருந்து அந்நியப்பட்ட மனநிலை இருக்கத்தான் செய்யும்.

இதுபோல ஏறத்தாழ இருநூறு முந்நூறு வசனங்களைச் சொல்லமுடியும். பெரும்பாலான வசனங்களை வென்னெஸ்டேதான் சொல்கிறாள்.  அந்த வசனங்களின் அடி ஆழத்தில் மறுக்கமுடியாத உண்மை இருப்பதால் அவை நம்மை ஈர்த்துவிடுகின்றன.

“இதுபோன்ற வெப் சீரீஸில் குறைகள் இருக்காதா?” என்றால், நிச்சயமாக இருக்கும். சான்றாக, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வாழ்பவர்கள், நெவர்மோர் போன்ற கல்வி நிறுவனங்களோடு சட்டென்று connect ஆவது கடினம். அதுவும் நெவர்மோர்
ஒதுக்கப்பட்டவர்களுக்கான கல்வி நிறுவனம் என்கிறார்கள். அதைப் பார்த்தால் ஐந்து நட்சத்திர விடுதிபோல் காட்சியளிக்கிறது. ஓர் இந்திய மனநிலையில் ஒதுக்கப்பட்ட என்ற சொல் கொடுக்கும் வலி மிகப் பெரியது. அந்த சொல்லை வைத்துக்கொண்டு இந்த வெப் சீரீஸுக்குள் நுழைவது மிகக் கடினமாக இருக்கிறது. நெவர்மோரில் படிப்பவர்கள் வித்தியாசமானவர்கள் என்கிறார்கள். அவர்களைப் பைத்தியங்கள், மான்ஸ்டர், சைக்கிக் என்று சொல்கிறார்கள். பாவம், இந்தப் படத்தை எடுத்தவர்கள் இந்தியக் கல்வி நிறுவனங்களைப் பார்த்தே இருக்கமாட்டார்கள் போல! இங்கே நார்மலாக இருப்பவர்களே இவர்களைவிடக் கொடூரமாக இருப்பார்கள்.

இந்திய மனநிலையிலிருந்து மாறி, அமெரிக்க ஐரோப்பிய மனநிலைக்குச் சென்று இந்த வெப் சீரீஸைப் பார்த்தால் சுவையாக இருக்கும். இந்த வெப்சீரீஸ் Comedic and Macabre தன்மைகள் கலந்த புதுவையான படைப்புக்கூறு (Genre).  நெவர்மோர் என்பதே Poe- etic name என்கிறார்கள். மந்திர தந்திர மாயாஜாலம் நிறைந்தவர்கள் எல்லாம் படிக்கும் ஒரு கனவுலகப் பள்ளிக்கூடம். அங்கு சார்லஸ் ஆடம்ஸின் சாவுக்களை கொண்ட கதாமாந்தர்களைக் கலந்து ஒரு புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். சமூக மனநிலையிலிருந்து மாறுபட்ட, எதிர் மனநிலை கொண்ட ஆடம்ஸ் குடும்பத்தினர் வித்தியாசமான ரசனைகளைத் தருகிறார்கள். அதுபோல  Thing என்ற அந்தக் கை (மணிக்கட்டு வரை மட்டுமே இருக்கும் அந்த கை) மனித உணர்வுகளைக் கடத்தும் கற்பனைகள் சுவையாக இருக்கும். ப்ளாக் ஹ்யூமர் தமிழுக்குப் புதியது இல்லை என்றாலும், இதுபோன்ற கற்பனைச் செயலாக்கத்தைத் தமிழ்ப்படைப்புகளில் பார்ப்பது கடினம். அதற்காகவேணும் இந்த வெப் சீரீஸைப் பார்க்கலாம்.

அமெரிக்க ஐரோப்பிய படங்களில் இருக்கும் இடதுசாரிப் பார்வை அவர்களுடைய படைப்புகளை ஆராதிக்க வைக்கும். இந்திய வெப் தொடர்கள் பெரும்பாலும் இதுபோன்ற மனிதர்களைக் கண்டுகொள்ளாததோடு, எதிர்நிலையிலும் கதையாடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். வென்னெஸ்டேயில் மாயாஜாலத்தை அடிப்படையாகக் கொண்ட கதையை வைத்திருந்தாலும் பூர்வகுடி மக்களின் நில உரிமைகள் குறித்துப் பேசுகிறார்கள். வென்னெஸ்டே என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜென்னா ஓர்டெகா அந்தக் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறாள். அவளைப் போலவே எனித் கதாபாத்திரத்தில் நடித்த எம்மா மையர்ஸும் ஈர்க்கிறாள். கதையில் முரண்பட்ட இந்த இரண்டு கதாபாத்திரங்களின் நட்பு டீன் ஏஜ் குழந்தைகளை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதனால் உலகெங்கும் வென்னெஸ்டே, எனித் கதாப்பாத்திரங்களின் கார்ட்டூன்கள், அனிமேசன் படங்கள் அதிபயங்கரமாகப் புகழ்பெற்றிருக்கின்றன.

நீங்கள் இந்த வெப் சீரீஸை முடிந்தால் பாருங்கள். இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட தகவல்களோடு, The Addams Family பற்றி வந்திருக்கும் படங்கள் தொடர்கள் பற்றியும், ஐரோப்பிய புராண நாட்டுப்புறக் கூறுகள் பற்றியும் தெரிந்துகொண்டு பிறகு Wednesday வெப் சீரீஸைப் பார்த்தால் புதுவகையான சுவையை அனுபவிப்பீர்கள். அதோடு லாஜிக் என்பதை மறந்துவிட வேண்டும். இருபது வயதுக்கும் கீழ் உங்கள் மனத்தைக் கொண்டு செல்ல வேண்டும்.  சக மாணவர்களிடமிருந்தும், ஆசிரியர்களிடமிருந்தும், பெற்றோரிடமிருந்தும் அந்நியப்பட்ட வென்னெஸ்டேயின் பேச்சுக்களை நீங்கள் வெகுவாக ரசிப்பீர்கள்.

பிரின்ஸிபல்: இதுவரைக்கும் உன்னோட கல்விப் பயணத்தைப் பார்த்தால் ரொம்ப interesting-ஆ இருக்கு! அஞ்சு வருஷத்துல எட்டு ஸ்கூல்?

வென்னெஸ்டே: என்னைக் கட்டிவைக்கிற அளவுக்கு அந்த பள்ளிகள் வலிமையா இல்ல!

பிரின்ஸிபல்: உனக்கு உன்னோட அம்மா இருந்த ஓஃபிலியா ஹால ஒதுக்கியிருக்கேன்.

வென்னெஸ்டே: ஓஃபிலியான்றவ தன் குடும்பத்தால பைத்தியம் பிடிச்சு தற்கொலை செஞ்சவ(ள்).

பிரின்ஸிபல்: நானும் உன் அம்மாவும் ‘ரூம்மேட்’ன்றத சொன்னாங்களா?

வென்னெஸ்டே: அவங்க படிச்சு கிராஜுவேட் ஆனதே பெரிய விஷயம்!

நகைச்சுவையற்ற morbid மனநிலையில், சமூக நிலைபாட்டிற்கு எதிரான பண்புகளோடு வாழும் இளம் மங்கை பேசும் பேச்சுகளில் இருக்கும் உண்மைகள் நம்மை வெகுவாகக் கவர்வதற்கான காரணம் என்னவாக இருக்கும்? காரணம் இதுதான்… அது குழந்தையின் பேச்சுகள் அல்ல. அடி ஆழத்தில் புதைந்திருக்கும் நம்முடைய வார்த்தைகள்!

 

sankarthirukkural@gmail.com