நம் ஊர்களில் என்றேனும் ஒரு நாள் பந்த் வருகிறது. கலவரம் வந்து ஓரிரு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு வருகிறது. இரண்டு மூன்று நாட்கள் புயலடித்து ஓய்கிறது. இது போன்றவை பெரும்பாலும் நமக்கு முன்கூட்டியே தெரிந்து விடுகின்றன. பால், காய்கறி, இட்லிமாவு, பிரட், நூடுல்ஸ், ஸ்நாக்ஸ், மருந்து எல்லாம் வாங்கிக் கொண்டு, எப்படியோ ஓரளவிற்கு சமாளித்துக் கொள்கிறோம். இப்படி முன்னேற்பாடுகள் எதுவும் செய்யமுடியாது போனாலும் கூட, பத்திரமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்து நம்மைக் காத்துக் கொள்கிறோம். ஆனால் சில நாடுகளில் காலம் காலமாக இப்படிப்பட்ட இடர்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அது போக, போர்கள், உள்நாட்டுக் கலவரங்கள், ராணுவக் கிளர்ச்சிகள் என்ற துயரங்கள். இப்படியான இடங்களுக்குச் சென்று அந்த மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து தரும் மக்கள் மருத்துவர் டேமியன் பிரவுனின் Band-Aid For A Broken Leg என்ற அனுபவத்தொகுப்பைப் படித்தேன். ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று நம்மில் பலரும் வாய்ச்சவடால் விடலாம். ஆனால் தினமும் ரிஸ்க் எடுத்து ரஸ்க் மட்டுமே சாப்பிடும் டேமியனின் அனுபவங்களைப் பார்த்தால் நாமெல்லாம் வாழ்வதே வீண் என்று படுகிறது. தன் வசதிகளைப் பொருட்படுத்தாது, வீட்டை விட்டு, நாட்டை விட்டு பல்லாயிரம் மைல் தாண்டி மொழியறியாத தேசங்களில் போய் சேவை செய்யும் அந்த மனது எப்படி சிலருக்கு மட்டும் வாய்க்கிறது? என்ற கேள்வி மனதில் திரும்பத்க் திரும்ப கேட்டுக் கொண்டே வாசித்தேன்.
மருத்துவரான டேமியன் பிரவுன் தென்னாப்பிரிக்காவில் பிறந்து பள்ளி நாட்களிலேயே தம் பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர். உயர் நடுத்தரவர்க்கக் குடும்பம். டாக்டருக்குப் படிக்கிறார். விடுமுறை நாட்களில் உலகம் முழுக்க சுற்றுகிறார். இமயமலைக்கு வருகிறார். நேபாளத்தில் குஷ்டரோகம் வந்தவர்கள், கள்ளிப்பெட்டி பலகையில், சின்ன சக்கரத்தை மாட்டி, உருவாக்கிய வண்டியில் உட்கார்ந்து பிச்சை எடுப்பதைப் பார்க்கிறார். தென்னாப்பிரிக்காவின் பல நாடுகளில், குழந்தைகளும், முதியவர்களும், பெண்களும், உடல் நலம் இன்றி, மருத்துவ வசதி இன்றி, பிச்சை எடுப்பதைப் பார்க்கிறார். ஓரிடத்தில், ஒரு குழந்தை கீழே கிடந்து எடுத்த ஒரு ஆப்பிளைத் தந்து ஏதாவது காசு கொடு என்று கேட்கிறது. பயணங்கள் சே குவேராவிற்கு மட்டுமா மனமாற்றத்தை ஏற்படுத்தும்? டேமியனிடமும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர் Medicines San Frontiers – MSF என்ற தொண்டு நிறுவனத்தில் இணைகிறார். எல்லைகள் இல்லா மருத்துவம் என்பது இந்தப் பெயரின் பொருள். 1971இல் பாரீசில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இது. இப்போது இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ளது. இந்த அமைப்பில் சுமார் 65000 ஊழியர்கள் இருக்கிறார்கள். உலகெங்கும் சுமார் 71 நாடுகளில் மருத்துவ சேவை ஆற்றிவருகிறது. இந்தியாவில் மிசோரம், பிஹார், ஆந்திரா, தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் கூட அதன் மருத்துவர்கள் சேவை செய்துள்ளனர். 1999இல் சமாதானத்திற்கான நோபல் பரிசும் இந்த அமைப்பு பெற்றுள்ளது. இப்போதும் உக்ரைனில் போருக்கு நடுவே பணியாற்றிக் கொண்டிருக்கிறது. டேமியன் இந்த அமைப்பின் மருத்துவராக ஆப்பிரிக்காவில் ஆறுமாதம் பணிசெய்த அனுபவங்களின் தொகுப்புதான் மேற்கூறிய நூல்.
டேமியன் ஆப்பிரிக்காவின் அங்கோலாவிற்குச் செல்வதிலிருந்து தான் புத்தகம் ஆரம்பிக்கிறது. அதற்கு முன் அவர் பெருவில் தொற்று நோய்கள் பற்றிய ஒரு சிறப்புப் படிப்பை முடித்துவிட்டு, தாய்லாந்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கோலாவில் சுமார் 27 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர். ஒருபுறம் சோவியத், கியூபா ஆதரவு பெற்ற தீவிரவாதிகள். மறுபுறம் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா ஆசி பெற்ற தீவிரவாதிகள். நடுவில் அங்கோலா ராணுவம் என நாடு சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. சுமார் பத்து லட்சம் பேர் மரணம். நான்கு லட்சம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாகத் திரிய, நாட்டின் ஆயிரக்கணக்கான சதுர கிமீ சாலைகள், விவசாய நிலங்கள் முழுக்க கண்ணிவெடிகள். ஆஸ்திரேலியா போய் ஏண்டா, இப்படி உனக்கு புத்தி போகுது? என்று கண்ணீர் விடும் அம்மா, அப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு, எட்டு விமானங்கள் மாறி, மூன்று கண்டங்கள் தாண்டி, இந்த ரத்த பூமிக்கு வருகிறார் டேமியன். இவரோடு ஆன்ட்ரியா என்ற ஜெர்மன் பிரசவத் தாதி, பாஸ்கல் என்ற இத்தாலியர், இஸபெல்லா என்ற இத்தாலிய நர்ஸ், சோஃபியா என்ற ஜெர்மன் மருத்துவர், டிம் என்ற சுவிஸ் -பிரெஞ்சு ஒருங்கிணைப்பாளர் என்று ஒரு சேவைக்குழு.
அங்கோலாவில் சராசரி ஆயுட்காலம் 39 வயதுதான். அதற்குள் பெண்கள் சராசரியாக ஆறு குழந்தைகள் பெறுவார்கள். அதில் இரண்டு ஐந்து வயதுக்குள் இறந்து விடும். சராசரி வயது குறைவு என்பதால் மிக இளவயதிலேயே திருமணம் நடந்துவிடும். நோயாளிக் குழந்தையின் அக்கா என்று நினைத்துப் பேசினால் அது குழந்தையின் அம்மாவாக இருக்கும். வயதைக் கேட்டால் 15 என்று சொல்லும். முகம் முழுக்க சுருக்கம் விழுந்து தளர்ந்து போன கிழவியிடம் உங்க பேரனுக்கு என்ன செய்யுது? என்று கேட்டால் என் மகன் என்பாள் அவள். உங்கள் வயது என்ன என்றால் 30 என்பாள். 15 ஆண்டுகளில் 50 வருட முதுமை வந்துவிடும்! மருத்துவமனையை விட்டு வெளியே செல்வது மிக ஆபத்தானது. எந்த இடத்திலும் கண்ணிவெடி வெடிக்கலாம். மருத்துவமனை முழுக்க, கண்ணிவெடியில் கைகால் சிதைந்தால், நாமே எப்படி அதை வெட்டிப் போட்டு விட்டு கட்டுப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் போஸ்டர்கள் ஆங்காங்கு இருக்கும்! இதற்கு நடுவில் தான் டேமியன் குழு வேலை பார்த்தது. படிக்கும்போதே எனக்கு என் சிறுவயதில் மருத்துவம் பார்த்த ராமன் டாக்டர் நினைவிற்கு வந்தார். ஊசி போட்டுக்க பயப்படுவானா? என்று என் அம்மாவிடம் ஒவ்வொரு முறையும் கேட்பார். உண்மையில் ஊசி போட அவருக்கு பயம் என்பது பிறகுதான் தெரிந்தது. அங்கோலாவில் குழந்தைகள் மருத்துவமனைக்கு வராத நாட்களில் பள்ளி செல்வார்கள். பள்ளிகள் bring- your – own – furniture ரக பள்ளிகள். குழந்தைகள் பாடப்புத்தகங்களோடு உட்காருவதற்கு பிளாஸ்டிக் நாற்காலியையும் சுமந்து செல்வார்களாம்.
டேமியனின் மருத்துவமனையில் உள்ளூர் ஊழியர்களும் உண்டு. அவர்களுக்கு முறையான மருத்துவப் படிப்பு கிடையாது. ராணுவ சேவை, தீவிரவாத கோஷ்டிகளில் கற்றுத் தந்த மருத்துவம், போர்க்களத்தில் செய்த மருத்துவ அனுபவம்தான். டேமியன் பணிக்குச் சேர்ந்த முதல்மாதம் 2800 நோயாளிகள் வந்தார்கள். அதில் 800 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். 200 மலேரியா. 26 பிரசவம். 2 இறந்தே பிறந்த குழந்தைகள். 4 கருச்சிதைவுகள். மருத்துவமனை மருந்தகத்திலிருந்து 6000 அமாக்சிலின் மாத்திரைகள், 15000 பேராசிட்டமால் மாத்திரைகள், 1000 பூச்சி மருந்து மாத்திரைகள், 1500 மலேரியா மருந்து செட் தரப்பட்டன. ஆய்வகத்தில் பரிசோதனைகள் நடந்து கொண்டே இருக்கும். 291 உள்நோயாளிகள். இதில் மூன்றில் இரண்டு பங்கு மலேரியாவிற்காக. ஆறு பேர் மரணமடைகிறார்கள். இதில் மூவர் மலேரியாவால்.
ஆனால், மருத்துவம் பார்ப்பது என்னவோ 19ஆம் நூற்றாண்டில் பார்ப்பது போன்றுதான் பார்க்க முடியும். ஹீமோகுளோபின் அளவைப் பார்க்க பரிசோதனை வசதி கிடையாது. அந்தக் காலம் போல் கண் கீழ்இரப்பையை இழுத்து நிறம் பார்ப்பதுதான். கருவில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பை பரிசோதிக்க வயிற்றில் பெரிய கூம்பை வைத்துக் காது கொடுத்துக் குவா குவா சத்தம் கேட்பாள் ஆன்ட்ரியா. ஆயிரக்கணக்கான விதவிதமான நோய்களுடன் நோயாளிகள் வந்தாலும், ஹெச்ஐவி, மலேரியா, சிஃபிலிஸ். ஹெபடிடிஸ் ஆகியவற்றிற்குப் பரிசோதனை செய்யும் வசதி மட்டுமே இருந்தது. எல்லாம் ஒரு குத்துமதிப்பான மருத்துவம்தான் செய்ய முடியும். எலும்பு முறிவிற்கு பேண்ட் எய்ட் போடுவது என்பதுதான் புத்தகத்தின் தலைப்பே !
டேமியன் அறுவை சிகிச்சை நிபுணர் அல்ல என்பதால் அறுவை சிகிச்சை செய்யமாட்டார். அறுவை சிகிச்சை தேவைப்படுவோரை விமானம் மூலம் பக்கத்து பெரிய ஊருக்கு அனுப்ப வேண்டும். விமானம் வந்து அழைத்துச் செல்வதற்குள் நோயாளி சுவர்க்கம் போய்ச் சேர்ந்துவிடுவார். எனவே, அவசரத்திற்கு உள்ளூர் உதவியாளர் ஒருவரே அறுவை சிகிச்சை செய்வார். அவர் ராணுவத்தில் அறுவை சிகிச்சை மருத்துவரின் உதவியாளராக இருந்து அனுபவப்பட்டவர். அங்கு பல அறுவை சிகிச்சைகளைச் செய்தவர். நோயாளியின் உறவினரை வைத்துக் கொண்டுதான் செய்ய வேண்டும். வயிற்றிலிருந்து நீக்க வேண்டிய உறுப்பை எடுத்துக் காட்டி, இந்தா பார், எப்படி அழுகிப் போயிருக்குன்னு, வெட்டி எடுத்துடுவோமா? என்று கேட்டு அவர் சரி என்றதும் வெட்டி எடுப்பார்கள். அந்த நோயாளி வீடு திரும்பும் வரை டேமியனுக்கு மரண வேதனை. தான் செய்வது சரிதானா? ஒரு மருத்துவராக இதையெல்லாம் அனுமதிக்கலாமா? என்று பல கேள்விகள் அவரை வாட்டி வதைக்கும். ஆனால் காலையில் மருத்துவமனை முன் நிற்கும் நோயாளிகளின் வரிசையில் இந்தக் கேள்விகள் மறைந்து போகும்.
மொத்தத்தில் அதிகமான மக்களுக்கு அதிகமான நன்மை என்ற எண்ணத்தில் ஆறுதல் கொள்வார் டேமியன். இந்த அளவில் குறைந்தபட்ச மருத்துவ வசதி தருவதற்கே ஏராளமாக செலவானது. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலருக்கு மேல் செலவு. நோயாளிகளுக்கு ஏராளமான செலவில் நல்ல குடிநீர் கொடுத்தே பல நோய்களைக் குறைத்தார்கள், தடுத்தார்கள். அடிப்படை வசதிகள், கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து, பிறந்த குழந்தைகளுக்கான கவனிப்பு இருந்திருந்தாலே அங்கு பல பிரச்சனைகளைத் தீர்த்திருக்க முடியும். போதாததற்கு தீவிரவாதம் வேறு. ஒரே நாளில் விதவிதமாய் நோயாளிகள் வருவார்கள். விளையாடும் இடத்தில் எடுத்த கைக்குண்டை நோண்டி, அது வெடித்ததால் அடிபட்டு வந்த சிறுவர்களுக்கு கை, காலை வெட்டி உயிரைக் காப்பாற்ற நேரிடும். ஒரு பெண்ணுக்கு சிசேரியன் செய்து இரு உயிர்களைக் காப்பாற்றுவார். ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு, உடல் முழுக்க காயத்தோடு வரும் பெண்ணுக்கு மருத்துவம். கடும் தொற்று நோயோடு வரும் கிழவர் ஒருவரின் நோயின் கடுமை குறைக்கப்படும். வேலை எல்லாம் முடிந்து, வீட்டிற்கு போன் செய்யும் போது, அம்மா, நம்ம டாமி ரெண்டு நாளா ஆக்டிவாவே இல்ல. டாக்டர்ட போனோம். அவனுக்கு என்னமோ anxiety disorderனு மருந்து தந்து மத்தியானத்துக்கு மேல கொஞ்சம் விளையாடறான் என்பாள். இதைப் பார்க்கும் போது இன்று நான் எத்தனையோ நல்ல காரியம் செய்து விட்டேன் என்று நினைத்துக் கொள்வார் டேமியன்.
கலாச்சார வேற்றுமைகள், மொழிப் பிரச்சனைகளில் வேலை பார்ப்பதும் ஒரு சுவாரஸ்யம்தான். அப்பகுதியின் குழந்தைகள் வெள்ளைக்காரர்களையே பார்க்காதவர்கள். மருத்துவத்திற்கு வரும் குட்டிக் குழந்தைகள் டேமியனின் கையை வேகமாகத் தேய்த்துப் பார்ப்பார்கள். சில தைரியமான சிறுவர்கள் எச்சில் தொட்டு வைத்து தேய்த்துப் பார்ப்பார்கள். இவர் தன் தோல் மேல் ஏதோ ஒரு வெள்ளை மாவைப் பூசிக் கொண்டு இருக்கிறார் என்று நினைத்து அந்த மாவைத் தேய்த்து எடுக்க முயற்சி செய்வார்கள். நோயாளிகளிடம் பேசி மொழிபெயர்த்துச் சொல்ல ஒரு உதவியாளர் இருப்பார். அவர் நோயாளியிடம் பத்து நிமிடம் பேசி விட்டு, இவரிடம் ஒரு வரியில் முழங்கால் வலி என்பார். பத்து நிமிடம் என்ன பேசினார் என்பதை சொல்லவே மாட்டார். இவர் மருந்து தந்ததும், மீண்டும் பத்து நிமிடம் உரையாடல். என்ன என்றால், நீங்கள் சரியாகப் பார்க்கவில்லை.. அவள் முழங்கால் சொல்வதைக் கேட்கவில்லை என்று குறை கூறுகிறாள் கிழவி என்பார் உதவியாளர். பின்னர் சிரிப்பை அடக்கிக் கொண்டு, அவளது முழங்காலில் ஸ்டெதாஸ்கோப்பை வைத்து அது சொல்வதைக் கேட்க வேண்டும் !
ஆனாலும் நிறைய நோயாளிகளைக் காப்பாற்றுகிறார்கள். மருத்துவமனைக்கு வந்து இறப்பவர் விகிதம் குறைவு. நாம் நன்றாக சேவை செய்கிறோம் போலும் என்று நினைக்கிறார் டேமியன். இல்லை என்கிறாள் மெரீனா என்ற உள்ளூர் உதவியாளப் பெண். சீரியஸ் நோயாளிகள் மூன்று நான்கு நாட்கள் மருத்துவமனைக்கு நடந்து வரும் வழியிலேயே இறந்து விடுவார்கள். மூன்று நான்கு நாட்கள் நடந்து மருத்துவமனைக்கு வருமளவு நோய் குறைவாக இருப்பவர்கள்தான் இங்கு வருகிறார்கள். இயல்பாகவே அவர்களுக்கு நாம் தரும் மருந்தால் சீக்கிரம் குணமாகிவிடுகிறது என்கிறாள் அவள். என்ன கொடுமை ! என்று மீண்டும் வேதனை…
எந்த நேரமும் தீவிரவாத குழுக்களின் மோதல் மோசமாகலாம். ராணுவப் புரட்சி வரலாம். எப்போது வேண்டுமானாலும் இருப்பிடத்தை விட்டு எங்கேனும் ஓட நேரலாம். எனவே எப்போதும் கைக்கு எட்டும் தூரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ள ஒரு பை தயாராக இருக்கும். நான்கு – ஐந்து கிலோ எடையில். பாஸ்போர்ட், வாக்கிடாக்கி, லைட்டர், திசைகாட்டி, கத்தி, வெப்பப் போர்வை, குடிநீர் சுத்திகரிப்பு மாத்திரைகள், என்ன காரணத்திற்காகவோ ஆணுறைகள், இப்படி பல பொருட்கள் உள்ள சிறுமூட்டை. தூங்கும் போதும் தலைக்கருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அங்கோலாவிலிருந்து சோமாலியாவிற்குப் பணிமாறுதல். பிறகு அங்கிருந்து தெற்கு சூடான். எல்லா இடங்களிலும் இதே கதைதான். நவீன மருத்துவத்தை ஏற்க மறுக்கும் பிடிவாதம். என் மனைவிக்கு இந்த மருத்துவம் வேண்டாம் என்று சொல்லும் ஆணாதிக்கம். ஒவ்வொரு நாள் ஏண்டா இந்த வேலையில் சேர்ந்தோம் என்று வெறுப்பாக இருக்கும். பேசாமல் சொந்த ஊர் போய் பெரிய மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டு, அப்படியே தனியாக பிராக்டீசும் செய்தால் என்ன என்று தோன்றும். ஆனால் ஜிம்பாப்வேயில் காலரா பெரிதாய் பரவும். காங்கோவில் இனப்படுகொலை நடக்கும். காஸாவில் பிரச்சனை. சாடில் மூளைக் காய்ச்சல்… எனப் பல இடங்களிலும் இவர் போன்றோரின் தேவை இன்னும் அதிகம்தான் என்பது தெரிய மனம் மாறுவார். மூளை இது தேவையில்லாத வேலை என்றாலும், மனம் வேறுவிதமாய்ச் சொல்லும். மீண்டும் களப்பணி…
புத்தகத்தைப் படித்து முடித்த போது எனக்கு நிம்மதி, ஆச்சரியம் என இரண்டு உணர்வுகள். எத்தனையோ குறைகள் இருந்தாலும். நம் நாடு எவ்வளவோ பரவாயில்லை என்ற நிம்மதி. டேமியன் போன்ற எல்லைகள் இல்லா மருத்துவர்கள் பற்றி தமிழ் இலக்கியத்தில் கடற்காகம் என்ற நாவலில் மிக விரிவாகவே பதிவு செய்திருக்கும் அருமைத் தம்பி முகமது யூசுப் பற்றி ஆச்சரியம்.
ஆர்வமுள்ளோர் வாசிக்க:
band-Aid for a Broken Leg – Damien Brown
subbarao7@gmail.com