இந்தியாவானது, பிெரஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, அண்மையில் நடந்த ஈரானியப் புரட்சி போன்ற எழுச்சிகள், புரட்சிகள் இல்லாமலேயே நகரமயமாகி வருகிறது. இங்கே பழமையும், நம்பிக்கைகளும் முழுமையாகத் தகர்க்கப்படவில்லை. எனவே ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து வந்த கார், பஸ் முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தினாலும் சாதி, மதம் மூடநம்பிக்கைகள், பாரம்பரிய மருத்துவம், ஆன்மீகம் போன்றவற்றின் மீதான பற்று அப்படியே இருக்கிறது.
அந்தக்காலத்தில் மக்கள் நோயின்றி இருந்தனர், கவலையின்றி இருந்தனர், பாசத்துடன் இருந்தனர், ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர், அந்தக் காலத்தில் மருத்துவர்கள் தங்கள் அற்புதமான திறனைக்கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தினர். உணவே மருந்தாக இருந்தது என்றெல்லாம் கண்ணில் காணாத பழைய காலத்தை ஏக்கத்துடன் நினைவு கூர்வது இயல்பாக இருப்பதை இப்போதும் பார்க்கலாம்.
அதுவும் நகரத்தில் வந்து குவியும் மக்கள் அங்கே நிலவும் சமூகப் பாதுகாப்பின்மையையும், ஓட்டத்தையும், ஒட்டுதலில்லாத உறவுகளையும் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். இந்த மாபெரும் மனிதக் கடலில் அவர்கள் போராடி வாழ்ந்தே தீர வேண்டும். கிராமத் தொழில்களும், விவசாயமும் அழிக்கப்பட்டு விட்டன. திரும்பிப் போக கிராமங்கள் இல்லை. இதனால்தான் புகழ் பெற்ற பள்ளிகளின் வாயில்களில் விண்ணப்பம் பெற பெற்றோர்கள் அதிகாலை மூன்று மணிக்குச் சென்று வரிசையில் நிற்கின்றனர். நகர வாழ்க்கையின் செலவுகள் தங்களை உறிஞ்சி எடுப்பதால் இரைக்க இரைக்க ஓட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இந்த நெருக்கடியில் தான் யோகா, தியான குருக்கள் நுழைகின்றனர். தாங்கள் நம்பிக்கை அளிப்பதாகவும், உள நெருக்கடிக்கும், உடல் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் அளிப்பதாகவும், தொழில்களில் முன்னேறிச் செல்ல மனோபலம் அளிப்பதாகவும், ஆலோசனைகள் வழங்குவதாகவும் கூறுகின்றனர். இவையனைத்துக்குமான தீர்வுகள் இந்துப் பாரம்பரியத்தில் உள்ளதாகவும் கூறுகின்றனர். அடுத்ததாக நகரத்து உயர்குடியினருக்கு மட்டுமே உரியதாக இருந்த யோகா, தியான ஆன்மீக முறைகளை தாங்கள் அனைவருக்குமானதாக மாற்றுவதாகக் கூறுகின்றனர். இவையனைத்தும் அறிவியல் பூர்வமானவை என்று சாதிக்கின்றனர். பிராய்டையும் ஐன்ஸ்டீனையும் சர்வ சாதாரணமாகக் குறிப்பிட்டு வேதகால அறிவியலைப் பேசுகின்றனர்.
அதே நேரம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட தெய்வீகத் திறன் வாய்ந்த இந்து பாரம்பரிய மருந்துகள், உணவு முறைகள், யோகா, தியானம் போன்றவை அற்புத சக்தி வாய்ந்தவை, தங்கள் பிரச்சினைகள் ஏதோ எளிய வழியில் தீர்த்துவிடும் என்ற இந்த வர்க்கங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த நவீன ஆசிரமங்கள் காஸ்மோபாலிட்டன் தன்மை கொண்டவை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு கற்றுத் தரப்படும் ஆன்மீகம் நம்பிக்கை தேடி வருபவர்களுக்கு மட்டுமல்ல, உயர்குடித் தன்மையை நாடிவருபவர்களுக்கும், ஒருவிதமான நவீன, அறிவியல் பூர்வமான ஆன்மீகத்தை விரும்புபவர்களுக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர இந்த நவீன மடங்கள் தங்களை பழைய பாணி சாதிய அடிப்படையிலான மடங்களான காஞ்சி, சிருங்கேரி மடங்கள், ஆதீனங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலக அமைதிக்கான பிரச்சாரம் போன்ற பொது விஷயங்களில் ஈடுபடுகின்றன. யோகப் பயிற்சிகள், புதுப்புது தியான முறைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்கின்றன. இதன் மூலம் தங்களை நவீனமானவர்களாக, சமூக அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக் கொள்கின்றன.
பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு மீடியா மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பாபா ராம்தேவ் போன்றவர்கள் டிவி ஸ்டார்கள் ஆனார்கள். இந்தியாவில் உயர் நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி, நகர வளர்ச்சி ஆகியவற்றுடன் இந்த குருக்களின் வளர்ச்சியும் இணைந்து உள்ளது.
ஜக்கி ஆனந்த விகடனில் அத்தனைக்கும் ஆசைப்படு என்ற கட்டுரைத் தொடரை எழுதினார். அதன் பின்பு மீடியாவின் பலத்தைப் புரிந்து கொண்டார். 2008 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் சேனல் அத்தனைக்கும் ஆசைப்படு என்ற ஷோவைத் தொடங்கியது. இதில் ஆர் பார்த்திபன், கிரேசி மோகன், சுதா ரகுநாதன், தொல்.திருமாவளவன் போன்றோர் பங்கு கொண்டனர். இவர்கள் ஜக்கியுடன் உரையாடினர். அண்ணா பல்கலையில் ஒரு மரம் நடும் விழாவில் கலைஞர் கருணாநிதியுடன் ஜக்கி கலந்து கொண்டார்.
2010 ஆம் ஆண்டு ஈஷா ஒருபடி முன்னேறி இன் கான்வர்சேஷன் வித் எ மிஸ்டிக் என்ற ஷோவை நடத்தியது. இதில் ஜூஹி சாவ்லா, அனுபம் கெர், கிரண் பேடி, பர்கா தத், அர்னாப் கோஸ்வாமி, சேகர் கபூர், கிரன் மஜூம்தார் ஷா போன்றோர் கலந்து கொண்டனர்.
இவர்களைக் கொண்டே ஜக்கி தனது செல்வாக்கு மண்டலத்தைக் கட்டியமைத்தார். இப்போது ஈஷாவில் 4,600 முழு நேர தன்னார்வலர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நவீன குருக்கள் சமூகத்தில் பெரும் செல்வாக்கு மண்டலமாக வளர்ந்ததில் மீடியாவின் பங்கு மிகவும் முக்கியமானது. மீடியாக்களின் நுகர்வோராக இருக்கும் படித்த நடுத்தர வர்க்கத்துக்கு தேவையானவற்றை இந்த குருக்கள் வழங்கினர். சமையல் செய்வது எப்படி என்பதைப் போல மன அமைதியடைவது எப்படி, உறவுகளை நிர்வகிப்பது எப்படி, கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி, முன்னேறும் ஆசையை எந்த விதத்தில் செயல்படுத்தினால் சமூகம் ஏற்றுக் கொள்ளும் போன்ற ஆலோசனைகளை இந்த குருக்கள் வழங்கினர். இந்த மடங்கள் அளிக்கும் விளம்பரப் பணம் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தை கவர்ந்திழுக்கும் இந்த ஆலோசனைகளும் ஊடகங்களுக்குத் தேவையாக இருந்தன. இந்த குருக்களின் வசீகரம் மீடியாவின் பார்வையாளர்களை அதிகரிக்கப் பெரிய அளவில் உதவியது.
இந்த மடங்களில் என்ன கற்றுத் தரப்படுகிறது?
ஈஷாவில் ஈஷா கிரியா, சித் சக்தி போன்ற தியான முறைகள் கற்றுத் தரப்படுகின்றன. ஸ்ரீ ஸ்ரீ யின் வாழும் கலை பயிற்சியில் சுதர்சன கிரியா என்ற தியான முறை முதன்மையாகக் கற்றுத் தரப்படுகிறது. மகேஷ் யோகி டிரான்செண்டெண்டல் மெடிடேஷன் என்ற தியான முறையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினார். ஓஷோ ஆசிரமம் ஓஷோ விபாசனா என்ற தியானத்தை பிரச்சாரம் செய்கிறது. சுவாமி சச்சிதானந்த ஆசிரமத்தில் இண்டெகரல் யோகா என்ற தியானமுறை கற்றுத் தரப்படுகிறது. இது மனம், உடல் ஆன்மாவைப் பல உடற்பயிற்சிகள், தத்துவ பயிற்சிகள் மூலம் இண்டெகரேட் செய்கிறதாம். இன்னும் பல தியான முறைகள் உள்ளன.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாபா தனது தியான முறையான சுதர்சன கிரியாவுக்கு பேடண்ட் உரிமை பெற்றுள்ளார். ஜக்கி ஆசிரமம் கற்றுத் தரும் தியான முறைகளைப் பற்றி வெளியே பேச வேண்டாம் என்று சீடர்களிடம் அறிவுறுத்தப்படுகிறது.
இவை பயிற்சி செய்பவர்களுக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கின்றன என்கிறார்கள். மூன்று நாள், ஐந்து நாள், ஏழு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த தியானங்கள் பெரும்பாலும் பல்வேறு விதமான மூச்சுப் பயிற்சிகள், எளிய ஆசனங்கள், தொடர்ந்து மந்திரச் சொற்களை உச்சரிப்பது ஆகியவற்றைக் கொண்டுள்ளன. தொடர்ந்த பயிற்சிகள், உரைகள், அமைதியான சூழல் மூலம் பயிற்சியாளர்களைத் தாங்கள் மன அமைதியடைவதாக உணரச் செய்கின்றன. தொடர்ந்து ஒரே மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் மனம் வேறு விஷயங்களை சிந்திப்பதை நிறுத்துகிறது. இது மனம் அமைதியடைவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது, இது தன்னைத் தானே ஹிப்னாட்டைஸ் செய்து கொள்வது என்று டிரான்செண்டெண்டல் தியானத்தைப் பற்றி ஓஷோ கூறினார்.
சில பகுத்தறிவாளர்கள் இந்த மூச்சுப் பயிற்சிகள் சுவாஸம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர். இந்த குருக்களின் சீடர்கள் இந்த தியானத்தால் தாங்கள் வாழ்வின் பொருளை உணர்ந்து கொண்டதாகவும், ஆத்ம திருப்தி அடைந்ததாகவும் கூறுகின்றனர்.
இது ஆராய்வது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல என்பதால் இந்த ஆசிரமங்களின் சமூக செயல்படுகள், அரசியல் தொடர்புகள், கார்ப்பரேட்டுகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவு, உலகமய சமூகத்துக்கு இவர்கள் ஏன் தேவை என்பது குறித்துப் பார்ப்போம்.
நவீன ஆசிரமங்களும் செல்வமும்:
ஈஷா பவுண்டேஷன், ஆர்ட் ஆஃப் லிவிங் பவுண்டேஷன், பாபா ராம்தேவ் நிறுவனங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அவை வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன, பெரும் செல்வத்தை குவித்து வைத்துள்ளன என்பதாகும்.
முதலில் இந்த வரி ஏய்ப்பு குற்றச்சாட்டைப் பார்ப்போம். நமக்குத் திட்டவட்டமாகத் தெரிந்த இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளன.
நாகப்பன் கவுதம் என்பவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த இயற்கை விவசாயி. 2017ஆம் ஆண்டு மதுரை ஈஷா மையத்தில் 14,000 ரூபாய்க்கு மரக் கன்றுகள் வாங்கினார். நான்கைந்து மாதங்கள் கழித்து தான் ஈஷா மையத்திற்கு ரூ.1242 நன்கொடை அளித்ததாக ரசீது வந்து சேர்ந்ததாகக் கூறுகிறார். ‘‘எனக்கு வழங்கப்பட்ட ரசீதில் ஈஷா அவுட்ரீச்சுக்கு நான் வழங்கிய நன்கொடையானது வருமான வரிச் சட்டம் பிரிவு 80 ஜி படி வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது மோசடி ஆகும்” என்கிறார் நாகப்பன் கௌதம். அதாவது மரக்கன்றுகளுக்கு அவர் கொடுத்த விலை நன்கொடை என்று கணக்கு காட்டப்பட்டிருந்தது என்று கூறுகிறார்.
இதே போன்ற இன்னொரு சம்பவத்தையும் Trick of the Trade : How sadhguru’s Isha foundation evades paying taxes by Prathik goyal என்ற கட்டுரை குறிப்பிடுகிறது. 2014 ஆம் ஆண்டு ஸ்வீடன் தேசத்தை சேர்ந்த இந்தியப் பெண்ணான ஜெயா பாலு என்பவர் யோகா பயிற்சி வகுப்புக்கும், யந்த்ரா விழாவுக்கும் கட்டணமாக (ceremony – அது என்ன விழா என்று தெரியவில்லை) 4,50,000 ரூபாய் செலுத்தியிருந்தார். இந்தப் பணத்தை அவர் நன்கொடையாகக் கொடுத்ததாகக் கணக்குக் காட்டி அவருக்கு ரசீது கொடுக்கப்பட்டது. அவர் ஈஷா இருக்கும் ஆலாந்துறை காவல் நிலையத்தில் இது மோசடி என்று புகார் கொடுத்தார், “நன்கொடை என்பது மனதில் இருந்து வர வேண்டும். யாரோ ஒருவர் தீர்மானிப்பது அல்ல” என்கிறார் ஜெயா பாலு. ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காகச் செலுத்தப்பட்ட கட்டணம் நன்கொடை அல்ல என்றார் அவர்.கோவை வழக்குரைஞரான சாக்ரடீஸ் இந்த வழக்கில் தலையிட்ட பின்பு ஜெயா பாலுவின் பணம் திருப்பித் தரப்பட்டது.
2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஈஷா ஃபவுண்டேஷனின் மொத்த வருமானம் 56.43 கோடி ரூபாய். இதில் 35.81 கோடி ரூபாய் நன்கொடைகளின் மூலமே கிடைத்துள்ளது என்கிறது ஈஷா. இந்தியாவில் ஈஷாவின் வருமானம் தொடர்பான ஆவணங்கள் பொதுவெளியில் கிடைப்பதில்லை. ஆனால் யோகா பயிற்சி வகுப்புகள், ஆன்மீக வகுப்புகள் ஆகியவற்றுக்கு பயிற்சிக் கட்டணமோ, விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு விலையோ பெற்றுக் கொள்வதாகக் கூறாமல் வசூலிக்கப்படும் பணம் நன்கொடையாகவே கணக்குக் காட்டப்படுகிறது என்று மேலே குறிப்பிட்ட கட்டுரை கூறுகிறது.
ஈஷா ஒரு பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட். எனவே வருமான வரி சட்டத்தின்கீழ் வரி செலுத்துவதிலிருந்து விலக்குப் பெற்றுள்ளது. அதே நேரம் பொது அறக்கட்டளை மதம் தொடர்பான பணிகளில் ஈடுபடக்கூடாது. ஈஷா மகாசிவராத்திரி போன்ற அப்பட்டமான இந்து சமய நிகழ்வுகளை நடத்துகிறது. லிங்க பைரவி கோவில் ஆசிரமத்தின் உள்ளே உள்ளது. இவற்றை எல்லா மதத்துக்கும் பொதுவானவை என்று சொல்லிவிட முடியாது. இருந்த போதிலும் ஈஷா பவுண்டேஷன் ஒரு பொது அறக்கட்டளையாகவே தொடர்கிறது.
இந்திய சட்டப்படி திருப்பதி தேவஸ்தானம் போன்ற மத அறக்கட்டளை என்பது மத சம்பந்தமான விஷயங்களுக்கே பிரதானமாகப் பயன்படுத்தப்படும், அதை சுற்றுச்சூழல், விழிப்புணர்வு போன்றவற்றுக்கு, பயன்படுத்த முடியாது. சாரிட்டபுள் டிரஸ்ட் என்பது பொதுநலனுக்கானது. ஈஷா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்றவர்கள் தங்கள் அமைப்புகளை இந்த பப்ளிக் சாரிட்டபுள் டிரஸ்ட்டாகவே பதிவு செய்துள்ளார்கள். இதன் மேல் அரசு கண்காணிப்பு குறைவு. ஆனால் வரிவிலக்கு உண்டு. தவிர, இந்து மதம் சார்ந்தது என்றால் வெளிநாடுகளுக்கு விரிவாக்கம் செய்வதில் சிக்கல் இருக்கிறது. வெளிநாடுகளில் இவர்கள் தாங்கள் இந்து மதத்தைப் பிரச்சாரம் செய்வதாகக் கூறாமல், இந்தியாவின் மர்மமான ஆதிகால யோகா, தியானமுறைகளைப் பயன்படுத்தி பரபரப்பான வாழ்க்கையால் ஏற்படும் அமைதியின்மை, பதட்டம், விரக்தி, வெறுமை ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதாகவே கூறுகின்றனர். எனவே இவர்கள் சட்டத்துக்காகவும், வரி வசதிகளுக்காகவும், அன்னிய நாட்டவரைக் கவரவும் இந்த பப்ளிக் சாரிட்டபுள் டிரஸ்ட்டை விரும்புகிறார்கள்.
யெஹோவா விட்னஸ் பிரச்சாரகர்கள் தாங்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவர்கள் என்று காட்டிக் கொள்வது போல இந்த குருக்களும் முதலில் தாங்கள் சாதி, மதம் கடந்தவர்களாக, துறந்தவர்களாகக் காட்டிக் கொண்டார்கள். அதிலும் சொல் சிந்தனை கடந்து மனமற்ற நிலையை அடைவதே உன்னத லட்சியம் என்ற யோக தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்றார்கள்.
பப்ளிக் சாரிட்டபுள் டிரஸ்ட் மதம் தொடர்பான செயல்களில் ஈடுபடக் கூடாது. ஆனால் யோகா தொடர்பான விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம், யோகா மதங்களுக்கு அப்பாற்பட்டது என்று சட்டம் கூறுகிறது. அரசானது இது போன்ற அறக்கட்டளைகளை ஊக்குவிக்கிறது.
மதம் தொடர்பான அல்லது மதம் அல்லாத அறக்கட்டளைகள் அரசியலில் நேரடியாகப் பங்கு கொள்ளாமல் சமூக சேவை, பள்ளிகள் அமைப்பது, மருத்துவமனைகள் கட்டுவது, அன்னதானம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது என்பது மறைமுகமாக அரசை வலுப்படுத்துவது ஆகும். அரசு இயங்க முடியாத இடங்களில் இந்த அறக்கட்டளைகள் அரசைக் கொண்டு சென்று சேர்க்கின்றன.
எனவே விலை என்பதற்குப் பதில் நன்கொடை என்று வாங்குவது டிரஸ்ட்களுக்கு நன்மை அளிக்கும். இதற்கான வாய்ப்பை அரசே ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதை எல்லா டிரஸ்ட்களும் செய்கின்றனவா என்பதை நாம் அறிய முடியாது. ஆனால் இப்படி ஒரு சட்டம் இருப்பதை அறிந்து கொள்வது அரசுக்கும் இந்த அறக்கட்டளைகளுக்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ள உதவும்.
சரி. இந்த நவீன மடங்கள் மிகப் பெரும் செல்வத்தை ஈட்டுகின்றன என்று சொல்லப்படுவது உண்மையா? அப்படியானால் அவ்வாறு ஈட்டப்படும் பணம் எங்கே செல்கிறது? குருக்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு மட்டுமே இவ்வளவு பணம் தேவையா என்ற கேள்வி எழுகிறது.
யோகா மற்றும் ஆன்மீக வகுப்புகளை கட்டணத்துக்காக நடத்தும் அதே நேரத்தில் ஈஷா புட்ஸ் அண்ட் ஸ்பைசஸ், ஈஷா கிராஃப்ட்ஸ், ஈஷா நேச்சுரோ ஆர்கானிக் சொல்யூஷன்ஸ், திரிசூல் பவுண்டேஷன்ஸ், உழவன் அக்ரோ சொல்யூஷன்ஸ், க்ரிஷி லேண்ட் பார்ம்ஸ், ஈஷா ஆரோக்கியா, ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சைன்ஸஸ், ஈஷா லைஃப் ஃபிட்னெஸ் பவுண்டேஷன், ஈஷா கெபிடல், ஈஷா பியூட்டி புராடக்ட்ஸ் அண்ட் வெல்னெஸ் ஆகிய வணிக நிறுவனங்களை ஈஷா நடத்தி வருகிறது.
இந்தக் கம்பெனிகளின் இயக்குநர்களாகப் புகழ்பெற்ற சேலை வடிவமைப்பாளரான சத்ய பாலின் மகன் புனித் நந்தா, மௌமிதா சென் சர்மா,வினோத் ஹரி,கோபால் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளனர். ஜக்கி வாசுதேவின் மகள் தாதே ஜக்கியும் ஒரு இயக்குநராக உள்ளார்.
2019-2020 ஆம் ஆண்டில் ஈஷா 117 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது என்று ஒன்றிய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் கூறியுள்ளது. இது தவிர ஈஷா கைலாஷ் மானசரோவர் பயணங்களையும் நடத்துகிறது. இதற்குக் கட்டணமாக ஒரு நபருக்கு2,75,000 முதல் 50,00,000 லட்சம் ரூபாய் வரை பெறுகிறது. மேலும் மகா சிவராத்திரி விழா, ஜக்கியுடன் பைக் பயணம் செய்ய கட்டணம் என்று பல கட்டணங்கள் வசூலிக்கிறது.
இப்படி சேகரிக்கப்படும் பணம் ஜக்கி வாசுதேவை மாபெரும் குரு என்று மக்களிடம் பரந்த அளவில் பிரச்சாரம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. மிகப் பெரிய தொகைகளை ஈஷா விளம்பரத்துக்கு செலவிடுகிறது. நாட்டின் பல இடங்களில் ஆசிரமங்களின் கிளைகள், பயிற்சி மையங்கள்நடத்தப்படுகின்றன. பிரம்மாண்டமான ஆசிரமம் மேலும் மேலும் விரிவாக்கப்படுகிறது. பெரும் தொகை செலுத்தி அங்கே தங்குபவர்களுக்கு நட்சத்திர வசதிகள் செய்து தரப்படுகிறது. இதற்கெல்லாம் பெரும் பணம் வேண்டும். பணம் இல்லையெனில் இந்த நெட்வொர்க்கை தொடர்ந்து நடத்த முடியாது.
ஈஷா பவுண்டேஷன் முகநூல் விளம்பரங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 1.35 லட்ச ரூபாய் செலவிடுகிறது என்று கூறப்படுகிறது. மெடா கூற்றுப்படி ஈஷா 90 நாட்களில் 1.20 கோடி ரூபாய் விளம்பரங்களுக்கு செலவிட்டுள்ளது. ஈஷா அவுட் ரீச் தான் இந்தியாவில் மிகப் பெரிய விளம்பரதாரர்கள் என்று pyrite technologies கூறுகிறது. (amp.indiaherald.com. Ish sadguru ; Rs 1.20 crore spent in 90 days? Reason? – Sowmiya sriram). சத்குருவை இன்ஸ்டாகிராமில் 8.5 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். முகநூலில் 5.2 மில்லியன் நபர்கள் பின் தொடர்பவர்களாக உள்ளனர். ஈஷா மிகச் சிறந்த ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுகிறது, தொழில் முனைவோருக்கு வழிகாட்டுகிறது, சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறது என்று தன்னை பின்தொடர்பவர்களை நம்ப வைக்க இந்த விளம்பர செலவு அவசியமானதாக உள்ளது. இது தவிர எல்லா ஊடகங்களிலும் ஈஷாவின் விளம்பரங்கள் வருகின்றன. பிரம்மாண்டமான டிஜிடல் பேனர்கள் விமானநிலையம் போன்ற நகரங்களின் முக்கிய இடங்களை அலங்கரிக்கின்றன.
எனவே விளம்பரத்துக்காகவும், பெரும் ஆசிரம நெட்வொர்க்கை நடத்த வேண்டிய தேவைக்காகவும் ஆசிரமங்கள் பணம் ஈட்டியே தீர வேண்டும். மக்கள் முன்னால் தோன்றிக் கொண்டே இருந்தால் மட்டுமே புதிய ஆதரவாளர்களையும், சீடர்களையும் உருவாக்க முடியும். இந்த நவீன மடங்கள் விரிவடையத் தவறினால் அவற்றின் மீதான ஈர்ப்பு பொதுமக்கள், அரசியல் வாதிகள், கார்ப்பரேட்டுகள் நடுவே குறைந்து விடும். அதிகார மட்டத்தில் தனது செல்வாக்கை இழக்க நேரிடும். எனவே புலிவால் பிடித்தது போல இந்த மடங்கள் பணம் ஈட்டியே தீர வேண்டிய நிலையில் உள்ளன.
இந்த மடங்கள் பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டாலும் இவை இந்திய பாரம்பரியத்தின் அடிப்படையில் ஆன்மீக நலனை வணிகத்துடன் இணைத்து அளிப்பதாகப் பிரச்சாரம் செய்கின்றன. வணிகம் என்பது லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டது அல்ல. மேல் நாட்டு முதலாளித்துவம் இரக்கமற்றது. அதனால் ஆன்ம திருப்தியை அளிக்க முடியாது. இந்திய பாரம்பரியத்தின் அடிப்படையிலான வணிகம் என்பது ஆன்ம பலத்தை அதிகரிக்கிறது என்ற விளக்கம் அளிக்கப்படுகிறது. இதுதான் தர்மா கேபிடலிசம். இது இந்திய பெருமுதலாளிகளுக்கு மிகவும் உவப்பானதாகும். அவர்கள் இந்த நவீன மடங்களுடன் நெருக்கமான தொடர்பு கொள்வதற்கு இந்த மடங்கள் பிரச்சாரம் செய்யும் ஆன்மீக, முதலாளித்துவ இணைப்பு முக்கிய காரணமாக உள்ளது.
ஜக்கி சுற்றுச்சூழலில் அதீத ஆர்வம் காட்டுகிறார். ஜக்கி ஆசிரமம் பெரிய அளவில் நடத்திய திட்டம் 2004 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புராஜெக்ட் கிரீன்
ஹேண்ட்ஸ் ஆகும். 114 மில்லியன் மரங்களை தமிழ்நாடு முழுவதும் நடுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது. தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிப்பதே குறிக்கோள் என்றும் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் The Yves Rocher Group, Suzlon, EADS, HPCL, Standard Chartered ஆகிய நிறுவனங்கள் இதில் பங்கு கொண்டன. சுஸ்லான் என்ற நிறுவனம் காற்றாலைகளுக்கான டர்பைகளைத் தயாரிக்கிறது. கிளீன் எனர்ஜியில் ஆர்வம் காட்டுவதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகவும் கூறிக் கொள்கிறது.
பத்து ஆண்டுகளில் 3 கோடி மரங்கள் நடப்பட்டதாக ஈஷா கூறுகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றித் தெரியவில்லை. இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை மரங்களால் நிறைக்கும் தேசிய வனத் திட்டம் 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்பு இது தொடர்ந்து பேசப்பட்டு கிரீன் இந்தியா மிஷன் திட்டம் மன்மோகன் அரசில் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷால் உருவாக்கப்பட்டது. நாட்டின் மொத்த நிலப்பரப்பில் முப்பது சதவீதத்தை காடுகளால் நிறைப்பது என்பது உணவு உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் காடுகளில் இருந்து மக்களை வெளியேற்றும் நிகழ்வுகள் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால் மன்மோகன் அரசு இந்த விமர்சனங்களைக் கண்டுகொள்ளவில்லை. காடுகளின் பரப்பை அதிகரிப்பது என்பது சுற்றுச் சூழல் பிரச்சனைகளால் அதிர்ச்சியடைந்திருக்கும் மேல் நாட்டு அரசுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனக்களின் ஆதரவைப் பெறும் என்பதாலும், காடுகள் கார்பன் வெளியேற்றத்தை தடுக்கும் என்பதாலும் பெரும் நிதிகளைப் பெற வாய்ப்பிருந்ததால் கிரீன் இந்தியா மிஷன் திட்டத்தை தொடர்ந்து எடுத்துச் சென்றது. அது வெற்றியடையவில்லை என்பது வேறு கதை.
தமிழகத்தில் விவசாயக் காடுகள் என்று ஜக்கி கூறினாலும் விவசாய நிலங்களில், நகரங்களில் மட்டும் மரம் நட்டு நிலப்பரப்பில் 33 சதவீதத்தை வனமாக மாற்ற வாய்ப்பு இல்லை. 3 கோடி மரங்கள் நடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் வனவளம், இயற்கை வளம் அதிகரித்ததாகத் தெரியவில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட திருப்பூர், திருச்சி நகரங்களிலும் பசுமைப் பரப்பு அதிகரித்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்தத் திட்டத்தால் மூன்றில் ஒருபகுதியை காடாக மாற்ற வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நீண்டகாலத் திட்டத்தை மக்கள் நடுவே பெரிய அளவுக்கு பிரச்சாரம் செய்ய வாய்ப்பிருந்தது. அப்படி மக்களைத் தொடும் அளவுக்கு அந்தப் பிரச்சாரமும் நடக்கவில்லை. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் ஈஷாவின் திட்டங்களுக்கும் அரசு திட்டத்துக்கும் உள்ள ஒற்றுமை, பசுமை வளையங்கள் அமைத்து சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விவசாயிகளையும், பொதுமக்களையும் அணி திரட்டுவது இதன் வேலை. இதற்காகவே ஈஷாவுக்கு இந்திரா காந்தி பர்யாவரன் புரஸ்கார் பரிசு அளிக்கப்பட்டது.
பின்பு 2017 ஆம் ஆண்டு ஈஷா, காவேரி காலிங் அதாவது காவேரி அழைக்கிறது என்று ஒரு திட்டத்தை செயல்படுத்தப்போவதாக பிரம்மாண்டமான விளம்பரங்கள் செய்தது. 242 கோடி மரங்களை காவிரி பேசினில் நடப்போவதாகக் கூறியது. Mass tree planting along Inida’s Cauvery River has scientists worried என்ற கட்டுரையில் (Mongabay.com) நந்திதா சந்திர பிரகாஷ் இந்த மரம் நடும் திட்டத்தை சில சூழலியல் வாதிகளும் அறிவியலாளர்களும் எதிர்க்கிறார்கள் என்று கூறுகிறார். இந்தத் திட்டம் என்ன மாதிரி மரங்கள் நடப்பட உள்ளன, எந்தெந்த இட்த்தில் மரங்கஆள் நடப்படுகின்றன, தேவையான நிதி எவ்வளவு ஆகியவை குறித்து துல்லியமான விவரங்களுடன் இல்லை என்று அறிவியலாளர்கள் கூறுவதாக நந்திதா கூறுகிறார். ஆறுகளில் நீர் வரத்து குறைவதற்கு காடுகள் அழிக்கப்படுவது, அணைகள், சுரங்கங்கள் அமைக்கப்படுவது, அதீத நகரமயமாக்கம், நிலத்தடி நீர் ஒட்டச் சுரண்டப்படுவது என்று பல காரணங்கள் இருக்க அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் மரம் நடுவது ஒன்றை மட்டுமே தீர்வாகக் கூறுவதை இக்கட்டுரை விமர்சித்து இருந்தது.
ஈஷா எதைப் பற்றியும் கவலைப்படாமல் தான் அனைத்தையும் கருத்தில் கொண்டே இயங்குவதாகக் கூறி செயலில் இறங்கியது. எடியூரப்பா இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அரசு நிர்வாகம் இத்திட்டத்துக்கு ஆதரவாக இருப்பதாக சிக்னல்கள் காட்டப்பட்டன. ஆனால் கொஞ்சமும் எதிர்பாராத வேறு இடத்திலிருந்து வந்த சிக்கலில் ஈஷா மாட்டிக் கொண்டது.
ஈஷா ஒரு மரத்துக்கு 42 ரூபாய் என்று விலை நிர்ணயித்து மரம் நடுவோருக்கு விற்பனை செய்தது. பெங்களூருவைச் சேர்ந்த அமர்நாத் என்ற வழக்குரைஞர் அரசு நிலங்களில் மரம் நட எப்படி ஒரு தனியார் நிறுவனத்தை அனுமதிக்கலாம் என்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நிதி ஆயோக்கின் விதிமுறைகளின்படி மத்திய மாநில அரசுகளே இந்த நதிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிகைகளில் ஈடுபடலாம். தனியார் நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் உதவ மட்டுமே செய்யலாம். அவை அரசு அனுமதியின்றி பணம் வசூலிக்கக் கூடாது என்பதைக் காட்டி ஈஷா பணம் வசூலிக்கக் கூடாது என்று வழக்கில் அமர்நாத் கூறியிருந்தார். அப்போது காவேரி காலிங் அமைப்பு பதிவு செய்யப்படவில்லை என்பது உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது. பணம் வசூலிக்க முறையான அனுமதியும் பெறப்படவில்லை.
இதற்கு பதிலாக காவேரி காலிங் அமைப்பு ஈஷா அவுட் ரீச் என்ற அமைப்பாலேயே நடத்தப்படுகிறது. பணமும் ஈஷா அவுட் ரீச் அமைப்பே வசூலிக்கிறது. இந்த அமைப்பின் இயக்குநர் குழுவில் முன்னாள் சுப்ரீம் கோர் ஜட்ஜ் அர்ஜித் பஸாயத், தொழிலதிபர் கிரன் மஜூம்தார் ஷா, முன்னாள் ஒன்றிய நீர்வளத்துறை செயலர் சஷி சேகர், முன்னாள் கான்பெடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் சந்தஜித் பான்ரஜி, முன்னாள் டாடா ஸ்டீல் இயக்குநர் பி. முத்துராமன், முன்னாள் இஸ்ரோ அதிகாரி கிரண் குமார் ஆகியோர் உள்ளனர் என்று ஈஷா குறிப்பிட்டது.
கர்நாடக அரசு தான் காவேரி காலிங் திட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.ஈஷாவுக்கு கிரிஷி அரன்ய புரோத்சஹ யோஜ்னா திட்டத்தின்கீழ் இரணடு கோடி மரக்கன்றுகளை அரசு அளித்து உள்ளது என்றது கர்நாடக அரசு. இது விவசாயிகளிடம் மரம் வழங்கி நடச்செய்யும் அரசு திட்டமாகும். இதன்படி ஈஷா தானே மரம் நடக்கூடாது. விவசாயிகளை மரம் நடச் செய்ய ஊக்குவிக்க மட்டுமே வேண்டும். இறுதியில் அரசு 73.44 லட்சம் மரங்களை மட்டுமே ஈஷாவிடம் கொடுத்ததாகவும், இரண்டு கோடி மரங்கன்றுகளை கொடுக்க வாய்ப்பில்லை என்றும் ஒப்புக் கொண்டது. அதுவும் வனத்துறை இரண்டு கோடி மரக்கன்றுகளை வளர்த்து வழங்க சாத்தியமே இல்லை என்று கூறியதால் இவ்வாறு எடியூரப்பா அரசு பல்டி அடித்தது.
வனத்துறை பின்பு ஈஷாவின் காவேரி காலிங் நடவடிக்கைக்கு நிலமோ, பணமோ தரவில்லை என்று ஒரு பொது அறிவிப்பு வெளியிட்டது.
இது ஏறக்குறைய காவேரி அழைக்கிறது திட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய அடி. ஆனாலும் ஜக்கியும் பின்வாங்கவில்லை. அவரது அரசியல் ஆதரவாளர்களும் பின்வாங்கவில்லை. ஜக்கி தனது அடுத்த நடவடிக்கையாக மண்ணைக் காப்போம் என்று ஐரோப்பிய பயணம் மேற்கொண்டார். பிரதமர் கோவை வந்து ஆதியோகி சிலை திறப்பில் கலந்து கொள்வதையோ, ஜனாதிபதி மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதையோ இந்த காவேரி அழைக்கிறது திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி தடுக்கவில்லை. டாட்டாவும், நாராயண மூர்த்தியும் ஈஷா வந்து கார்ப்பரேட் பயிற்சி வகுப்புகள் எடுப்பதையும் இந்த சிக்கல் தடுக்கவில்லை.
நடுத்தர வர்க்கம் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அதீத ஆர்வம் கொண்டுள்ளது. அந்த இளைஞர்களுக்கு கார்ப்பரேட் கொள்ளையால் மலைகளும், கடற்கரைகளும், சமவெளிகளும் நாசமாக்கப்படுகின்றன என்ற உண்மையைக் கூறாமல் மரம் நடுவதால் மட்டும் உலகைக் காப்பாற்றிவிட முடியும் என்று அடித்துப் பேசுவது நம்பிக்கையளிக்கிறது. உருப்படியாக ஏதோ செய்கிறோம் என்ற எண்ணத்தை வளர்க்கிறது.
இந்த வலிக்காத அரசியல் நடுத்தர வர்க்கத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய அம்சமாகும். ரவிசங்கரும் தன் பங்குக்கு உலக அமைதிக்காக பாடுபடுகிறார். விவசாயிகள் மகோற்சவம் நட்த்துகிறார். சர்க்கரை நோய்க்கு எதிரான பிரச்சாரம் இயக்கம் நடத்துகிறார். புராஜெக்ட் பாரத் என்ற திட்டத்தின் கீழ் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள சமூகங்களை தயார் செய்கிறார், கர்மயோக் என்ற திட்டத்தின் கீழ் கீழ்மட்டத்திலிருந்து நாட்டைக் கட்டியமைக்க செயல்படுகிறார்.
பாபா ராம்தேவ் அனைத்து நோய்களுக்கும் பாரம்பரிய முறையில் உணவுகள், மருந்துகள், யோகப் பயிற்சிகள் மூலம் தீர்வு கொடுப்பதாகக் கூறுகிறார்.
இவையெல்லாம் அரசு ஆதரவு பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவன பாணியிலான திட்டங்கள். தவிர இந்த குருக்கள் அனைவருமே யோகாவையும், தியானத்தையும் இவற்றுடன் இணைக்கிறார்கள்.
உலகமய பொருளாதார சீர்திருத்தங்களில் தீவிரமாக இருக்கும் அரசு சுற்றுச் சூழல், பொதுநலன் ஆகியவற்றைக் காப்பது தனது வேலை அல்ல என்று கருதுகிறது. சுற்றுச்சூழலிலிருந்து பொதுநலன் வரை அனைத்தையும் சந்தையே தீர்மானிக்கும் எனப்படும் மார்க்கெட் என்விரான்மெண்டலிசம் தீவிரமடைந்து வருகிறது. எனவே அரசால் புறக்கணிக்கப்படும் இந்தப் பகுதிகளை,இந்த இடைவெளியை இந்த நிறுவனங்கள் நிரப்புகின்றன. இநதப் பணிகள், படித்த நடுத்தர, பணக்கார வர்க்கங்களுக்கு சுற்றுச்சூழல், சமூக சேவை குறித்து இருக்கும் ரொமாண்டிக் எண்ணங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன.
காவேரி அழைக்கிறது திட்டம் நெருக்கடியைச் சந்தித்தாலும் கார்ப்பரேட்டுகளும், அரசும் ஏன் இதை ஆதரிக்கின்றனர் என்ற கேள்விக்கான பதிலை இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.
காவிரியில் நீர் வரத்து குறைந்து போனதற்குப் பல காரணங்கள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மழை நீரைத் தேக்கி வைத்து ஓடைகளாக மாற்றும் சோலைக்காடுகள் அழிக்கப்பட்டதால் 5000 ஓடைகள் வற்றிப் போனதாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர். இந்த ஓடைகள் உயிர்வாழக் காரணமான சதுப்பு நிலங்கள், காடுகள், புல்வெளிகள் அழிக்கப்பட்டு அங்கே தேயிலை, காபி, ரப்பர், யூக்கலிப்டஸ் காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த காரணம் கர்நாடகா நமது பங்கு நீரையும் பிடித்துக் கொள்வது. கர்நாடகாவில் பெங்களூர் நகரம் மிகப் பெரும் வளர்ச்சி அடைந்து விவசாயிகளுக்குத் தேவையான நீரையும்குடித்து வருகிறது. தமிழகத்திலும் நகர வளர்ச்சி காவிரியின் நீரை ஒட்டச் சுரண்டுகிறது.
இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் மரம் நட்டால் நீர் பெருகும் என்பது வழக்கமான ஜக்கி பாணி அடித்துவிடுவதாகும். இது டாட்டா போன்ற பெருமுதலாளிகளுக்கும் அரசுக்கும் உகந்தது. மலைகளில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் டாட்டா, பிர்லா, வாடியா போன்ற முதலாளிகளுக்கு சொந்தமானவை. இதைப் பற்றிப் பேசாமல் கோவிந்தசாமி தனது நாலு ஏக்கர் தோட்டத்தில் மரம் வளர்த்தால் காவிரி புத்துயிர் பெறும் என்றால் முதலாளிகளுக்கு மகிழ்ச்சிதானே? மலைகளில் உள்ள சுரங்கங்கள், பெருநகரங்களுக்காக கட்டப்படும் அணைகள், நகரமயமாக்கம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மரம் நடுவதன் மூலம் மட்டுமே சூழலைக் காத்துவிட முடியும் என்று பேசுவது அரசுக்கு மகிழ்ச்சி அல்லவா?
இது போன விஷயங்களை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்படுத்திவிடும். ஆனால் ஈஷா அளவுக்குப் பெரும் நிதியை அதனால் திரட்ட முடியாது. மக்களைத் திரட்ட முடியாது. அரசு ஆதரவைப் பெற முடியாது. எனவே ஈஷா இந்த மாதிரி விஷயங்களில் இறங்குவதை அரசு அதரிக்கிறது. அரசு ஆதரவைப் பெற முடியும் என்பதால் ஈஷா இவற்றில் இறங்குகிறது.
காவிரியில் நீர் வரத்து குறைவதற்குக் காரணமான தேயிலை காபி ரப்பர் தோட்ட முதலாளிகளும், சுரங்க அதிபர்களும், மலைகளில் காடுகளை மூழ்கடித்து நகரங்களுக்காக நீரும் மின்சாரமும் பெற அணைகள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் கார்ப்பரேட்டுகளும் ஜக்கியின் திட்டத்தால் தங்களுக்கு ஆபத்தில்லை என்று உணர்கிறார்கள். காவிரி அழிவதற்கு தாங்கள் தான் காரணம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்று குதூகலம் அடைகிறார்கள்.
இந்த இடம் அரசு, ஈஷா பெருமுதலாளிகள் கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கல்லில் பல மாங்காய்கள் அடிப்பது என்பது இதுதான். பணம், அரசு மட்டங்களில் செல்வாக்கு, மக்களிடையே நல்ல பெயர் என்று அனைத்துக்கும் ஆசைப்பட்டும் பெரும்பாலும் அனைத்தையும் அடைகின்றனர் இந்த குருக்கள்.
பிஜேபிக்கு ஏன் இந்த நவீன சாமியார்கள் தேவைப்படுகின்றனர்?
வரைமுறையற்ற கார்ப்பரேட் கொள்ளை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொரு புறம் இந்திய பாரம்பரியமான மனிதாபிமானமிக்க வணிகமும் வளர்கின்றது என்று சாதிக்க இவர்கள் பயன்படுகின்றனர். இந்திய ஆன்மீகமும் இந்துமதமும் அறிவியல் பூர்வமானவை, தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், நகர்ப்புறமயமாக்கல் அனைத்தும் கொடுக்கும் வேதனைகளை யோகா, தியானம், பாரம்பரிய மருத்துவம் கொண்டு கடந்துவிட முடியும் என்று இந்த நவீன குருக்கள் சொல்வது வேறு அரசியல் பார்வைகளோ, மாற்று இயக்கங்களோ இல்லாத வெற்றிடத்தில் நன்றாக செல்லுபடியாகிறது.
யோகா, பசுவின் புனிதம், கங்கையின் புனிதம், ரிஷிகேஷ் யாத்திரை, என்று ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ, ராம்தேவ் போன்றவர்கள் இந்துமதத்தின் அடிப்படை விஷயங்களை அங்கீகரிக்கின்றனர். மக்களை அதை நோக்கித் திரட்டுகின்றனர். இதுவே சங் பரிவார் வேண்டுவது.
பூரி சங்கராச்சாரியார் வேதகாலத்தில் கம்ப்யூட்டர்கள் இருந்தன என்று சொன்னால் படித்த நடுத்தர வர்க்கம் கண்டுகொள்வதில்லை. ஆனால் காஸ்மோபாலிட்டன் பின்னணியில் வந்த ஜக்கி, அமெரிக்காவிலும் படித்த நடுத்தர வர்க்கத்திலும் சீடர்களைக் கொண்ட ஜக்கி கிரகணத்தின் போது சாப்பிட வேண்டாம் என்றால் அதற்கு மரியாதை இருக்கிறது. இந்த படித்தவர்கள் ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ போன்றவர்களின் போலி அறிவியலுக்கு மரியாதை கொடுக்கின்றனர்.
மதத்தையும் அறிவியலையும் இணைப்பது நகர நடுத்தர வர்க்கத்திடம் எடுபடுகிறது. இது சங்க பரிவாரின் முறை என்கிறது (Beware of rass and gurus mixing hindutva with science gautam benegal daily O article). எல்லா அறிவியலும் எங்களுக்கே சொந்தம் என்று ஆர்.எஸ்.எஸ். சொல்வதையே இந்த குருக்கள் சொல்கின்றனர்.
காலஞ்சென்ற ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் தான் அராஜகத்தில் ஊறிய சமூகப் பாதுகாப்பு இல்லாத இந்திய, தமிழக நகரங்கள் ஆன்மீக இயக்கங்களுக்கு ஏற்ற செழிப்பான நிலமாக இருக்கும் என்பதை முதலில் புரிந்து கொண்டவர். அவர்தான் ஜன கல்யாண் என்ற பொதுமக்களுக்கான இயக்கத்தை தொடங்கினார். தலித் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய நிதியுதவி செய்யத் தொடங்கினார்.
ஆனால் அவர் இயக்கத்தின் பெயரும், அது இருக்கும், மொழியும் தமிழ் அறிவாளி வர்க்கத்துக்குப் பிடிக்கவேயில்லை. தவிர தொடக்கூடாது, உட்காரக் கூடாது என்று பாரம்பரிய மடத்தின் கட்டுப்பாடுகள் வேறு. ஜெயேந்திரர் தனது உரைகளில் புதிதாக எதையும் கொடுக்க முடியவில்லை. எனவே அவரது இயக்கம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதன் காரணமாகவே பாப்ரி மஸ்ஜித் பிரச்சினையில் இந்து மடாதிபதிகளுக்கு முன்னிலை வகிக்க அவர் செய்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
ஆனால் ஸ்ரீ ஸ்ரீயின் வாழும் கலை என்ற பெயரைப் பாருங்கள், ஜக்கியின் காவேரி அழைக்கிறது, இந்துமதத்தின் தெய்வீக பரம்பரியமாகிய பதஞ்சலியின் பெயரால் இயங்கும் பதஞ்சலி புராடக்ட்ஸ் போன்ற பெயர்களைப் பாருங்கள்.
ஜக்கி டுகாட்டி பைக்கில் ஸ்டைலாக வந்து நின்று, பக்கத்தில் நித்யா மேனனை வைத்துக் கொண்டு கார்பன் புட்பிரிண்ட், கார்பன் ஸிங்க், குளோபல் வார்மிங், மரம் நடுவோம் என்று ஆங்கிலத்தில் போட்டுத் தாக்கினார். இதெல்லாம் பழைய இந்து சாஸ்திரங்கள் சொன்ன வாழ்க்கை முறைதான், ஆன்மீகத்தின் பகுதிதான் என்று அடித்துப் பேசினார்.
ஜாதியாவது மதமாவது எல்லாம் நாங்கள் தான் என்று இந்த குருக்கள் பேசுகிறார்கள். பணமிருந்தால் தகுந்த டிரீட்மெண்ட் கிடைக்கும். அவ்வளவுதான். நகர்ப்புற படித்த அறிவாளி வர்க்கத்துக்கு இதுதான் தேவை. பற்றிக் கொண்டது. இதைவிட பிஜேபிக்கு என்ன வேண்டும்?
நரேந்திர மோடியின் யோகா பிரச்சாரம் இவர்களுக்கு உதவுகிறது. மோடியும் பிஜேபியும் யோகாவை உடற்பயிற்சியாக மட்டும் பார்க்கவில்லை. அதை இந்து மதத்தின் நீட்சியாகவே பிரச்சாரம் செய்கிறார்கள். அதே நேரம் அது இந்தியப் பாரம்பரியம், எல்லோருக்கும் பொதுவானது என்று சாதிக்கவும் செய்கிறார்கள். இதற்கான சூழலை இந்த குருக்கள் ஏற்படுத்து கிறார்கள். இது இருதரப்பினருக்கும் பலனளிக்க்க் கூடியதாகும். யோகாவையும், தியானத்தையும் அடிப்படையாகக் கொண்டு தங்கள் சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பியவர்களுக்கு நாட்டின் பிரதமர் யோகாவை பிரச்சாரம் செய்ய முன்வந்தால் எவ்வளவு சாதகமாக இருக்கும்?
அர்பன் மிடில் கிளாஸை போலி விஞ்ஞானத்தைக் கொண்டு கவரச் செய்கிறார்கள் இவர்கள். பாபா ராம்தேவ் தனக்கு வந்த பணத்தை மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு பதில் தானே பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். இப்போது இதை எல்லா மடங்களும் தொடர்கின்றன.
சத்குரு ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாபா ஆகியோர் அரசின் ஆன்மீக ஆதரவாளர்களாக இருக்கின்றனர் என்கிறது தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் வெளியிட்ட Sadhguru- BJP’S spiritual henchman என்ற சஞ்சய் குமார் எழுதிய கட்டுரை.ஆதிகாலத்தில் மன்னர்கள் குருக்களின் ஆலோசனையைக் கேட்டதாக கதைகள் உள்ளன. அது இன்றும் தொடர்கிறது. பிஜேபி ஆளும் இந்தியாவில் குருக்கள் அரசு ஆதரவால் சட்டபூர்வ அந்தஸ்து பெறுகின்றனர். பதிலாக அவர்கள் அரசின் கொள்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கின்றனர். அரசின் கொள்கைகள் சமூக நலனுக்கானவை, ஆன்மீகப் புரிதல் கொண்டவை என்கின்றனர். இந்த ஒருங்கிணைவானது நரேந்திர மோடி அரசின் முத்திரை ஆகும்.
குடிமக்கள் திருத்தச் சட்டம் வந்தபோது ஜக்கி அதை ஆதரித்து 22 நிமிட வீடியோ வெளியிட்டார். அவரது சொற்கள் கேட்பவர்களுக்கு மத உணர்வை அளிக்கின்றன. ஆன்ம ஒளியை அளிப்பதில்லை. பிஜேபி அரசு 370 சட்டப் பிரிவை நீக்கியபோது அதையும் ஆதரித்தார். இதை ஆங்கில மொழியில், போலி அறிவியலைக் கலந்து மக்களிடம் விற்கும் கலையில் வல்லவர் என்பதால் அரசுக்கு அவர் வேண்டியவராக இருக்கிறார். ஜக்கி ஆன்மீகம் என்ற பெயரில் பெரும்பான்மை வாதத்தை பிரச்சாரம் செய்கிறார்.
ஆன்மீகத்தையும் வரலாற்றையும் கலந்து நவீன அரசியலின் தேவைக்களுக்கு ஏற்ப வழங்குகிறார். அரசுடனும், இந்துத்துவவாதிகளுடனும் இந்தக் குருக்கள் இணைந்து பெரும்பான்மை மத அரசை உருவாக்க உழைக்கின்றனர் என்கின்றது மேற்கண்ட கட்டுரை.
இந்துத்துவ கடுங்கோட்பாட்டுவாதிகளின் பண்பாட்டு தேசியவாதம் ஒரு இந்து மைய சமூகத்தை உருவாக்க விரும்புகிறது. இதற்கு சத்குரு போன்றவர்கள் பேருதவியாக இருப்பார்கள்.
அரசு தனியார் பார்ட்னர்ஷிப் என்பது இந்த குருக்களுக்கு பெரிய அளவில் உதவியுள்ளது. அரசு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமம் கட்ட நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியது. இன்போசிஸ் மற்றும் பல மென்பொருள் நிறுவன்ங்கள் இந்த ஆர்ட் ஆஃப் லிவிங் ஆசிரமத்தை ஆதரிக்கின்றன. ஒரிஸ்ஸா அரசு 200 எக்கர் நிலத்தை வேத பாடசாலை அமைக்க கொடுத்துள்ளது. அரசு இந்த ஆசிரமங்களின் செல்வாக்கை அதிகரிப்பதில் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது.
இந்தக் கூட்டு முன்பே இருந்தது. சத்ய சாய்பாபா போன்றாவர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை. எல்லோருக்கும் நண்பர்களாக இருந்தனர். ஏனெனில் அப்போதைய அரசு வெளிப்படையான இந்து அரசாக இல்லை.
இப்போதைய குருக்கள் நேரடியாக இந்து அரசு அமைந்ததும் அரசை ஆதரிக்கின்றனர்.
உலகம் முழுவதும் கோவில்கள் பெரும் செல்வத்துக்கு உடமையாளர்களாக இருந்துள்ளனர். டெம்ளார் நைட்ஸ் தான் வங்கி முறையையே உருவாக்கினார். சோமநதர் ஆலயம் குதிரை வணிகத்தில் ஈடுபட்டது என்கிறார் ரொமீலா தாப்பர். தஞ்சை பெரிய கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான அடிமைகளும், நிலங்களும், செல்வமும் இருந்தன. குலோத்துங்க சோழனுக்கு அங்கீகாரம் அளிக்கும் பணியில் சிதம்பரம் கோவிலும், தில்லை வாழ் அந்தணர்களும் பெரும் பங்கு வகித்தனர்.
அன்றும் இன்றும் மடங்கள் பெரும் செல்வங்களை சேகரித்து வைக்கும் இடங்களாக இருந்தன.அரசுக்கும், வணிகர்களுக்கும், பெருநிலக்கிழார்களுக்கும், மக்களுக்கும் இணைப்பு மையங்களாக இருந்தன. இப்போதும் அதுவே நடக்கிறது.
iramurugavel@gmail.com